மதமும் மூடநம்பிக்கையும்/அந்தக் காலமும் இந்தக் காலமும்

மூடநம்பிக்கை 6


அந்தக் காலமும் இந்தக் காலமும்

மத நம்பிக்கை மிகுந்திருந்த மிகப் பழங்காலத்தில் இந்த உலகமானது தட்டை வடிவினது என்றும், ஏறத்தாழ ஒரு தட்டுப்போன்றது என்றும், அதற்குச் சற்று மேல் ஜெஹாவாவின் வீடு இருந்தது என்றும். அதற்குச் சற்று கீழே சாத்தான் வாழ்ந்தான் என்றும் நம்பப்பட்டு வந்தன! கடவுளும் அவரைச் சேர்ந்த தேவதைகளும் மூன்றாவது தட்டில் வாழ்ந்தார்கள் என்றும், சாத்தானும் பிசாசுகளும் அடித்தட்டில் வாழ்ந்தார்கள் என்றும், மக்கட் சமுதாயம் இரண்டாவது தட்டில் வாழ்ந்தது என்றும் கருதப்பட்டு வந்தன!

அப்பொழுது, அவர்கள், எங்கே மேல் உலகம் இருந்தது என்பதை அறிந்திருந்தார்கள்! அவர்கள் மேலுலகத்திலிருந்து எழுப்பப்பட்ட வீணையின் ஒலியையும், பாட்டின் இசையையும் கேட்டறிந்தார்கள்! அவர்கள் எங்கே நரகம் இருந்தது என்பதை அறிந்தனர்; அங்கே எழுப்பப்படும் வேதனைக் குரல்களைக் கேட்டனர்; நெருப்பிலிருந்து எழும்பிய கந்தகப்புகைகளை நுகர்ந்தனர்! அவர்கள் எரி மலைகளை நரகத்திலிருந்து வெளிப்படும் புகைபோக்கி என்று கருதினர்! அவர்கள் வானுலகத்தோடும், பூவுலகத் தோடும், நரக உலகத்தோடும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர்! அவர்கள், தங்கத்தெருக்களையும், முத்து வாயில்களையும் கொண்டிருந்த புதிய ஜெருஸலம் நகரோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தனர்! அந்தக்காலங்களில் ஈனக்கின் மாற்றம் அறிவுக்கு ஒத்ததாகவே கொள்ளப்பட்டது; பெருவெள்ளம் ஏற்படுவதற்கு முன்பு, கடவுளின் பிள்ளைகள் பூவுலகத்திற்கு வந்து மனிதர்களின் பெண்களோடு காதல் புரிந்தார்கள் என்பதைப்பற்றியாரும் ஐயப்பாடு கொண்டதில்லை! வானுலகை எட்டிப்பிடிக்கப் பேபல் கோபுரம் கட்டத் தொடங்கியபோது, கடவுள் வந்து அவர்களுடைய மொழிகள், அவர்களில் ஒருவர்க்கொருவர் புரியாத வண்ணம் செய்த காரணத்தினால்தான் அதனைக் கட்டி முடிக்க முடியாமற்போயிற்றே யொழிய, இல்லையானால் அதனைக் கட்டத்தொடங்கியவர்கள், கட்டியே முடித்திருப்பார்கள் என்றே, மதவாதிகள் நம்பினர்!

ஆண்டவனின் அருள் பாலிக்கப்பட்டதாகக் கருதப்படுகிற அதே நாட்களில், மதபோதகர்கள் மோட்ச உலகத்தைப்பற்றியும், நரக உலகத்தைப் பற்றியும் எல்லாம் அறிந்திருந்தார்கள்! கடவுள் ஆசையினாலும் அச்சத்தாலும் வாக்குறுதியினாலும் அச்சுறுத்தலாலும், வரமளிப்பதாலும், தண்டனை கொடுப்பதாலும் இவ்வுலகை ஆண்டு வந்தார் என்று, அவர்கள் அறிந்திருந்தனர்! கடவுள் அளிக்கும் வரம் எல்லையற்ற காலத்தது; அதுபோலவே தான் அவர் கொடுக்கும் தண்டனையும்! சரியையும் தவற்றையும் கண்டறிந்துகொள்ளும் அளவுக்கு, மனிதனுடைய மூளையை வளர்க்க வேண்டும் என்பது ஆண்டவனுடைய திட்டமாக இருந்ததில்லை! அவர் அறியாமையைக் கற்பித்தார்; அதுவும் கீழ்ப்படிதலைத்தவிர வேறெதையும் கற்பித்ததில்லை கீழ்ப்படிதலுக்கு அவர் கால எல்லையற்ற பேரின்பத்தை அளித்தார்! அவர் வணங்கிக் கொடுப்பவர்களையும், முழங்காற்படியிடுவர்களையும், குப்புறக் கவிழ்பவர்களையும் அவர் விரும்பினார்! அவர் ஐயங்கொள்வோர்களை ஆராய்ச்சிபுரிவோரை,சிந்தனையாளர்களை, தத்துவாசிரியர்களை வெறுத்தார்! அவர்களுக்காக, அவர் கால எல்லையற்ற பெருஞ் சிறையை உண்டாக்கினார்; அங்கு அவர் தம் வெறுப்பின் பசியைத் தீர்த்துக்கொள்ள வேண்டிய அளவு உணவைப் பெற்று வந்தார்! அவர் ஏமாற்றுக்காரர்களையும், சான்று ஏதும் எதிர்பார்க்காமல் நம்புபவர்களையும் மிகவும் விரும்பினார்; அவர்களுக்காக அழியாப் பேரொளி வீசும் இடத்தை இல்லமாக அவர் ஆக்கித்தந்தார் ! கேள்வி ஏதும் கேட்காதவர்களின் கூட்டத்திடையே அவர் மிகவும் மகிழ்ச்சியுற்றிருந்தார்!

ஆனால் இந்த மோட்ச உலகம் எங்கே இருக்கிறது; இந்த நரக உலகம் எங்கே இருக்கிறது? நாம் இப்பொழுது அறிவோம். இந்த மோட்ச உலகம். மேகமண்டலத்துக்கு மேலே இல்லை என்பதை. இந்த நரக உலகம் பூவுலகத்திற்கு அடியில் இல்லை என்பதை; தொலைநோக்கு ஆடி (தூர திருஷ்டிக்கண்ணாடி) மோட்ச உலகத்தை இல்லாமற் போக்கிவிட்டது; சுழலும் உலகம் பழைய நரகத்தின் தீச் சுழல்களை அவித்துவிட்டது, மதம் கூறிய நாடுகளும், மதம் கற்பனை செய்த உலகங்களும் மறைந்தொழிந்து விட்டன. மோட்ச உலகம் எங்கே இருக்கிறது என்பதை எவரும் அறியமாட்டார்கள்; அறிந்திருப்பதாக யாரும் பாசாங்கு செய்யமுடியாது. நரகம் இருக்கும் இடத்தை யாரும் அறியமாட்டார்கள்; அதனை அறிந்திருப்பதாக யாரும் பாசாங்கு செய்யமுடியாது இப்பொழுது பல மதவாதிகள், மோட்சம் என்பதும், நரகம் என்பதும் இடங்கள் அல்ல என்றும், அவை மன நிலைகளையே, நிலைமைகளையே குறிப்பனவாகும் என்றும் கூறுகின்றனர். கடவுள்களிடத்தும், பூதங்களிடத்தும் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை உலகம் முழுவதும் நிலவியிருக்கிறது மனிதன் நல்லதுக்குப் பின்னால் கடவுளை நிறுத்துகிறான்; தீதுக்குப் பின்னால் பூதத்தை நிறுத்துகிறான்; நலத்துக்குப் பின்னால் ஞாயிற்றின் ஒளியை வைக்கிறான்; நல்ல அறுவடைக்குப் பின்னால் நல்ல கடவுளை வைக்கிறான்; நோய்க்குப் பின்னால் தீய வாய்ப்பைப் பார்க்கிறான்; இறப்புக்குப் பின்னால் கொடிய பேயைப் பார்க்கிறான்.

கடவுள்களும் பூதங்களும் வாழ்கிறார்கள் என்பதற்கு ஏதேனும் நல்ல சான்று இருக்கிறதா? கடவுள் இருக்கிறார். என்பதற்கும், பூதம் உண்டு என்பதற்கும் ஒரேவிதமான காரணந்தான் கூறப்படுகின்றது. இந்த இரண்டு வணக்க பொருள்களும் கற்பித்துக் கொள்ளப் பட்டவைகளே; ஒவ்வொன்றும் இருக்கக்கூடும் என்று ஊகிக்கப்படுவதேயாகும். அவைகள் கண்ணால் பார்க்கப்பட்டதில்லை; அவைகள் ஐம்புல உணர்ச்சிகளின் எல்லைக்குள் தட்டுப்பட்டதில்லை. வயதான கிழவி, பூதம் இருந்து தீரவேண்டும், இல்லையானால் அதனைப்போலவே எப்படிப் படம் வரைந்து காட்டமுடியும் என்று கேட்கிறாள்; அவள் மதக் கருத்துக்களில் பயிற்சி பெற்றவள் போலவும், கடவுளைப் பற்றிய செய்திகளில் தேர்ச்சி அடைந்தவள் போலவும் கேட்கிறாள்!

பூதம் இருக்கிறது என்பதில் எந்த அறிவுள்ள மனிதனும் இப்பொழுது நம்பிக்கை வைப்பதில்லை; கொடுந்தோற்றமுடைய பேய்க்காக அவன் அஞ்சுவதுமில்லை; ஆராய்ந்து பார்க்கும் திறம்படைத்த பெரும்பாலான மக்கள், வழிபடும், சொந்தக் கடவுளாகிய, 'படைக்கும் கடவுளை'க் கைவிட்டு விட்டனர். அவர்கள். இப்பொழுது பெரும்பாலும் 'காண முடியாதது.' 'எல்லையற்ற பேராற்றலாவது' என்றெல்லாம் பேசத்தலைப்பட்டு விட்டனர். ஆனால், அவர்கள் 'ஜெஹோவா'வை, 'ஜூபிடருடன் சேர்த்துவைத்து எண்ண முற்பட்டு விட்டனர். அவர்கள், அவைகளைப் பழங் காலத்தில் கொண்டாடிய உடைந்த பொம்மைகள் என்றே கருதுகின்றனர்.

சான்று வேண்டி நிற்கிற-உண்மையை அறியவிரும்புகிற ஆண்களும், பெண்களும் தலையெழுத்துக்களைப் பற்றிக் கவலை கொள்வதில்லை. அதிசயங்கள் என்று சொல்லப்படுபவைகளைப் பற்றிக் கவலையுறுவதில்லை. அதிர்ஷ்ட துர் அதிர்ஷ்ட நகைகள், நாட்கள், எண்கள் ஆகியவைபற்றிக் கவலைப்படுவதில்லை; மந்திரங்களுக்காகவோ அல்லது தாயத்துக்களுக்காகவோ கவலைகொள்வதில்லை; வால் நட்சத்திரங்களுக்காகவோ அல்லது கிரகணங்களுக்காகவோ கவலைப்படுவதில்லை, நல்ல ஆவிகளிடத்தோ அல்லது தீய ஆவிகளிடத்தோ நம்பிக்கை கொள்வதில்லை; கடவுள்களிடத்தோ அல்லது பூதங்களிடத்தோ நம்பிக்கை வைப்பதில்லை. பொதுவான அல்லது தனியான நன்மை பயக்கும் என்று அவர்கள் எதன்மீதும் குருட்டு நம்பிக்கைவைப் பதில்லை, நல்லதை மீட்கிறது, காப்பாற்றுகிறது, ஆதரிக்கிறது என்பதற்காகவோ, அல்லது தீயதைக் கொடியதைத் தண்டிக்கிறது என்பதற்காகவோ எந்த ஆற்றலின் மீதும் அவர்கள் குருட்டு நம்பிக்கை கொள்வதில்லை. மனிதசமுதாய வரலாற்றுக் காலம் முழுவதிலும், வழிபாட்டுரைக்குப் பதிலுரை தரப்பட்டது என்பதை அவர்கள் ஒப்புக்கொள்வதில்லை இடப்பட்ட பலிகளெல்லாம் வீணாகிவிட்டன என்றும், எரிக்கப்பட்ட நறுமணப்புகைகளெல்லாம் பாழாகிப் போயின என்றும் அவர்கள் எண்ணுகிறார்கள். உலகமானது நச்சுப் பூச்சிகளுக்காக படைக்கப்பட்டு அவைகளுக்காகத் தயாராக்கப்பட்டது என்பதை, அவர்கள் எந்த அளவுக்கு நம்புவதில்லையோ, அதே அளவுக்கு அது மனிதர்களுக்காகப் படைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது என்பதையும் நம்புவதில்லை. எஸ்கிமோயர்களுக்குக் கொழுப்பை உணவாக அளிப்தற்காகவே, வேல்ஸ் என்ற ஒருவகை மீனினம் உண்டாக்கப்பட்டது என்பதையோ அல்லது விட்டில் பூச்சிகளைக் கவர்ந்து, அவைகளை அழிக்கவே தீச் சுழல்கள் உண்டாக்கப்பட்டன என்பதையோ, பொருந்தி வருபவை என்று அவர்கள் நினைப்பதேயில்லை. எல்லாப் பக்கங்களிலும் சான்றுக்கான விளக்கங்கள் தென்படுகின்றன; நல்லது நிகழ்வதற்கான காரண விளக்கங்களும் தீயது நிகழ்வதற்காள காரண விளக்கங்களும் தென்படுகின்றன: எல்லாப் பக்கங்களிலும் நன்மையும், கொடுமையும் இருக்கின்றன; சிறிது உழைப்பிற்குப் பிறகே நல்லது காக்கப்படுகிறது, சிறிது உழைப்பிற்குப் பிறகே தீயது அழிக்கப்படுகிறது. ஒவ்வொன்றும் நண்பர்களாலும் பகைவர்களாலும் சூழப்பட்டிருக்கின்றன. அவை அன்பால் காக்கப்படுகின்றன. வெறுப்பால் அழிக்கப்படுகின்றன. வளர்ச்சியின் அறிகுறி எவ்வளவு தெளிவாகத் தெரிகிறதோ அவ்வளவு தெளிவாக வீழ்ச்சியின் அறிகுறியும் தென்படுகிறது; வெற்றியின் அறிகுறியைப் போலவே தோல்வியின் அறிகுறியும் புலப்படுகிறது; இன்பத்தின் அறிகுறியைப் போலவே, துன்பத்தின் அறிகுறியும் விளங்குகிறது. இயற்கை கேடயமும் வாளும் ஏந்திக்கொண்டு ஒருகையால் கட்டி முடிக்கிறது மற்றொரு கையால் அழித்துத்தள்ளுகிறது. ஒரு கையால் காப்பு அளிக்கிறது. மற்றொரு கையால் கொன்று குவிக்கிறது; ஆனால் ஆக்கத்திற்காக அழிவு வேலை செய்கிறது, எல்லா வாழ்வும் சாவை நோக்கி நடக்கின்றன; எல்லாச் சாவும் வாழ்வை நோக்கித் திரும்புகின்றன. எங்கு பார்க்கினும் கழிவும் சேமிப்பும், அலட்சியமும் அக்கரையும் நிகழ்கின்றன!