மதமும் மூடநம்பிக்கையும்/இது தெரியாதாம் அது தெரியுமாம்

மூடநம்பிக்கை 7


இது தெரியாதாம் அது தெரியுமாம்!

நாம், வாழ்வின் ஓட்டத்தையும் எழுச்சியையும், சாவையும் பார்க்கிறோம்; அந்தப் பெரும் நாடகம் எப்பொழுதும் நடந்துகொண்டே யிருக்கிறது; அங்கே நடிகர்கள் தங்கள் தங்கள் பகுதிகளை நடித்துவிட்டு மறைந்து விடுகின்றனர்; அந்தப் பெரும் நாடகத்தில் எல்லோரும் நடித்தேயாக வேண்டும்; அறியாதவரானாலும், அறிந்தவரானாலும் முட்டாளானாலும்,பைத்தியமானாலும் நடித்தேயாகவேண்டும்; அதுவும் முன்கூட்டி ஒத்திகை யில்லாமல், ஏற்று நடிக்கவேண்டிய உறுப்பின் தன்மை தெரியாமல், கதையின் உட்பொருளை உணராமல், நாடகத்தின் நோக்கத்தை அறியாமல் நடித்தேயாக வேண்டும். திரை மாறுகிறது: சில நடிகர்கள் மறைகிறார்கள்; வேறு சிலர் வருகிறார்கள்; மீண்டும் திரை மாறுகிறது; எங்கனும் அதிசயம். நாம் விளக்கங் கொடுக்க முற்படுகிறோம்; ஒரு உண்மைக்குக் கொடுக்கும் விளக்கம் மற்றொரு உண்மைக்கு மாறாகக் காணப்படுகிறது. ஒரு மறைப்புப் படுதாவை நீக்கினால், வேறோர் படுதா வந்து நிற்கிறது. எல்லாப் பொருள்களும், சம அளவில் அதிசயிக்கத்தக்கனவாக இருக்கின்றன. எல்லாக் கடல்களையும் சேர்த்துப் பார்க்கும்போது ஏற்படும் வியப்பைப்போலவே, ஒரு துளித்தண்ணீரும் அதே அளவு வியப்பைத் தருகிறது; உலகம் முழுவதையும் போலவே, ஒரு தனி மணற்கல்லும் வியப்பைத் தருகிறது; எல்லா உயிரினங்களைப் போலவே, வண்ண இறக்கைகளைக் கொண்ட ஒரு விட்டில் பூச்சியும் வியப்பைத் தருகிறது. அகன்ற வானவெளியில் காணப்படும் எல்லா நட்சத்திரங்களைப் போலவே, ஒரு முட்டையும் வியப்பைத் தருகிறது; இருட்டில் வைக்கப்படும் முட்டையினுள் உள்ள உயிரணுவுக்குச், சூடு ஊட்டம் அளிக்கிறது. மூச்சுவிடும் உயிர்ப்பிண்டம் வளர்கிறது, தசைகள்– எலும்புகள்–நரம்புகள்–குருதி–மூளை எல்லாம் உருவாகின்றன. உணர்ச்சிகள் ஆசைகள்–எண்ணங்கள்–தேவைகள் வளர்கின்றன. இவையெல்லாம் வியப்புக்குரியவைகளாக இருக்கின்றன.

மண்ணிலே மறைந்து கிடக்கும் மிகச்சிறிய விதை, ஏப்ரல் மழைகளுக்காகக் கனவுகண்டு, ஜூன் வெயிலுக்காக் காத்திருந்து, அதனுடைய இரகசியங்களையெல்லாம், உலகிலுள்ள மிகச்சிறந்த அறிவாளிகளெல்லோராலும்கூட அறிந்து கொள்ளமுடியாத வகையில் மறைத்து வைத்து. வளர்த்து வருகிறது. உலகில் காணப்படும் மிகச்சிறந்த அறிவாளிகூட, காரணம் கூறமுடியாத அளவில் புல்லிதழ் ஒன்றின் தோற்றமும், மிகச்சிறிய இலையொன்றின் அசைவும் அமைந்திருக்கின்றன. மிகச்சிறிய பொருளின் வியப்பிற்கு முன்னால் மதவாதிகளும் -குருமார்களும்-பாதிரிமார்களும் போதகர்களும் வாய் திறக்கமுடியாதபடி நிற்கின்ற நிலைமையில் இருந்தும்கூட, அவர்கள் உலகங்களின் அடிப்படையை அறிந்திருப்பதாகக் கூறிக்கொள்கிறார்கள்; உலகங்கள் எப்பொழுது தோன்றின, எப்பொழுது அழியும் என்பதையும் அறிந்திருப்பதாகக் கூறிக்கொள்கிறார்கள்; கடவுளைப்பற்றிய எல்லாவற்றையும், அவர் எப்படிப்பட்ட விருப்பத்தோடு எல்லாவற்றையும் உண்டாக்கினார் என்பதையும் அறிந்திருப்பதாகவும் கூறிக்கொள்கிறார்கள்: அவர், எப்படிப்பட்ட திட்டத்தையும் நோக்கத்தையும் கொண்டிருக்கிறார், எந்த வழிகளைப் பயன்படுத்துகிறார், எந்த முடிவை எதிர்பார்க்கிறார் என்பதையெல்லாம் அறிந்திருப்பதாகவும் கூறிக்கொள்கிறார்கள். அவர்களுக்குக் கண்ணுக்குப் புலனாகாத அதிசயங்களெல்லாம் புலனாகின்றன; ஆனால் ஒரே ஒரு அதிசயம் மட்டும் புலப்படுவதில்லை; அதுதான், உயிருள்ள மனிதன் வாழ்வில், அவனுடைய உணர்ச்சிகளோடு நேரடித் தொடர்பு கொண்டிருக்கிற பொருள்களைப்பற்றிய அதிசயமாகும்!

ஆனால், நாணயமான மனிதர்கள், தாங்கள் எல்லாம் அறிந்திருப்பதாகப் பாசாங்கு செய்வதில்லை; அவர்கள் உண்மையாகவும், வெளிப்படையாகவும் பேசக்கூடியவர்கள் அவர்கள் உண்மையை விரும்புகிறவர்கள்; அவர்கள் தங்கள் அறியாமையை நாணயத்தோடு ஒப்புக்கொள்கிறவர்கள்: "நாங்கள் அதனை அறியமாட்டோம்" என்று சொல்லிவிடக்கூடியவர்கள்.

இவை எல்லாவற்றையும் கூர்ந்து பாருங்கள்; நாம் ஏன் அறியாமையை வணங்கவேண்டும்? 'அறியமுடியாத ஒன்று'க்கு நாம் ஏன் முழங்காற்படியிட்டுக் கிடக்கவேண்டும்? ஊகித்துக்கொண்ட ஒரு பொருளின் முன்னால் நாம் ஏன் வீழ்ந்து கிடக்கவேண்டும்?

கடவுள் இருக்கிறார் என்றால், அவர் நல்லவர் என்றும், அவர் நமக்காகக் கவலை கொள்கிறார் என்றும் நாம் எப்படி அறிவது? கடவுள் அறிவாளியாகவும் நல்லவராகவும். எல்லையற்ற காலந்தொட்டு இருந்து வருகிறார் என்றும், அவர் எப்பொழுதும் இருக்கிறார் என்றும், அவர் இனியும் எல்லையற்ற காலம் வரையில் இருப்பார் என்றும் கிருத்தவர்கள் கூறுகிறார்கள். இந்தக் கடவுள் தம் கடவுள் தன்மையை அகற்றிவிட்டு வாழக்கூடியவரா ? அவர், தம்முடைய நல்ல தன்மையை அகற்றிவிட்டு வாழக்கூடியவரா? அவர், தம்முடைய விருப்பமோ, குறிக்கோளோ அற்ற தன்மையில், அறிவாளியாகவும், நல்லவராகவும் வாழக் கூடியவரா?

எல்லையற்ற காலந்தொட்டு அவர் உண்டாக்கப்பட்ட தேயில்லை. அவர் காரணங்களுக்கெல்லாம் பின்னால் நின்றவர். அவர் மாற்றம் அடையாதவராக, மாற்றம் அடையப்படாதவராக இருந்தார்; இருக்கிறார்; இருப்பார். அவர் அவருடைய பண்பை உண்டாக்கவோ அல்லது வளர்க்கவோ வேண்டிய அவசியமில்லை; அதுபோலவே அவருடைய உள்ளத்தை வளர்க்கவேண்டிய அவசியமும் அவருக்கு இல்லை. அவர் முன்பு எப்படி இருந்தாரோ அப்படித்தான் இப்பொழுதும் இருக்கிறார்; அவர் முன்னேற்றம் எதனையும் காட்டவில்லை. அவர் இப்பொழுது எப்படியிருக்கிறாரோ, அப்படித்தான் இனியும் இருப்பார்; மாற்றம் எதனையும் அவர் காணப் போவதில்லை. பின் ஏன் அவரைப் புகழவேண்டும் என்று, நான் கேட்கிறேன்? முன்பு எப்படி இருந்தாரோ, இப்பொழுது எப்படியிருக்கிறாரோ அவற்றினின்றும் அவர் வேறுபாடுடையவராக இருக்க முடியாது. அவர் மாறப்போவதில்லை; நாம் ஏன், அவரை, வழிபாட்டுரை கூறி வணங்கவேண்டும்?

அப்படியெல்லாம் இருந்தும், கடவுள் தவறு செய்ய மாட்டார் என்று கிருத்தவர்கள் கூறிக்கொள்கிறார்கள் !

சாத்தான்மீது சுமத்தப்படும் மிகச் சாதாரணமான குற்றச்சாட்டு என்னவென்றால். அவன் மக்களாகிய குழந்தைகளுக்கு ஆசைவார்த்தை காட்டி அழைத்துச் சென்றான் என்பதாகும். அப்படியிருந்தும், கடவுளின் வழிபாட்டுரையில், கடவுள் பிசாசுகளின் அரசன் போல் நடந்துகொள்ளக்கூடாது என்று அவமானப்படும் முறையில் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

"ஆசைகளில் எம்மை இழுத்துச் செல்லாதீர்" என்று வழிபாட்டுரையில், கேட்டுக் கொள்ளப்படுகிறது!

புகழ்ச்சியைக் கடவுள் ஏன் விரும்பவேண்டும்? அவர் ஒரு பொழுதும் ஒன்றையும் கற்றுக்கொண்டதில்லை; தன்னலத்தை மறந்துவாழும் தன்மையை அவர் ஒருபொழுதும் பழக்கப்படுத்திக் கொண்டதில்லை; அவர் ஆசைக்கு அகப் பட்டதில்லை; அச்சத்தாலோ அல்லது விருப்பத்தாலோ அவர் தொடப்பட்டதில்லை; அவருக்குத் தேவை எப்பொழுதும் ஏற்பட்டதில்லை ! பின்னர், ஏன் அவர் நமது புகழ்ச்சியை விரும்பவேண்டும், கேட்க வேண்டும் ?

இந்தக் கடவுள் இருக்கிறார் என்பதையோ, வழிபாட்டுரையைக் கேட்டார், அதற்குப் பதிலிறுத்தார். என்பதையோ எவனொருவனாவது அறிவானா ? அவர் இந்த உலகத்தைக் கட்டி ஆளுகிறார். மக்களின் நடவடிக்கைகளில் அவர் தலையிடுகிறார், அவர் நல்லவர்களைக் காப்பாற்றுகிறார், அவர் கெட்டவர்களைத் தண்டிக்கிறார் என்பதெல்லாம், மக்களால் அறியப்பட்டவைகளா? இதற்கான சான்று மனித சமுதாய வரலாற்றில் காண முடியுமா? கடவுள் இவ்வுலகத்தை ஆளுகிறார் என்றால், நல்லதுக்கெல்லாம் நாம் அவரைக் காரணமாக்குவானேன்; இதே நேரத்தில் தீதுக்கெல்லாம் அவரைக் குற்றஞ்சாட்டாமலிருப்பானேன்? இந்தக் கடவுளை ஒப்புக்கொள்வதற்காக, நாம் நல்லதை நல்லது என்று சொல்லவேண்டும், தீதையும் நல்லது என்று சொல்லவேண்டும்! எல்லாம் கடவுளாலேயே இயங்குகின்றன என்றால், அவருடைய செயல்களுக்குள்ளே நாம் வேற்றுமைகளைக் கற்பிக்கக்கூடாது; எல்லையற்ற பேரறிவு படைத்த, எல்லாம் வல்ல, நல்ல தன்மை கொண்ட கடவுளின் செயல்களுக்குள்ளே நாம் வேற்றுமைகளைக் கற்பிக்கக்கூடாது! கதிரவனின் ஒளியையும் அறுவடையும் கொடுப்பதற்காக நாம் அவருக்கு நன்றி செலுத்துகிறோம் என்றால், பிளேக்கையும் பஞ்சத்தையும் கொடுப்பதற்காகவும் நாம் நன்றி செலுத்தத்தானே வேண்டும்! அவர் அளிக்கும் விடுதலைக்காக அவருக்கு நன்றி செலுத்துகிறோம் என்றால், அடிமை, தன்னுடைய விலங்கு பூட்டப்பட்ட கைகளை உயர்த்திக், கடவுளை வணங்கித், தன்னுடைய உழைப்பிற்குக் கூலி கொடுக்காததற்காகவும், சாட்டையடியால் முதுகில் தழும்புகள் ஏற்றுக்கொண்டதற்காகவும், கடவுளுக்கு நன்றி செலுத்தத்தானே வேண்டும் ! நாம் வெற்றிக்காக அவருக்கு நன்றி செலுத்துகிறோம் என்றால், தோல்விக்காகவும் நாம் நன்றி செலுத்தத்தானே வேண்டும்!

இப்பொழுதுதான் சில நாட்களுக்கு முன்பு, நமது குடியரசுத் தலைவர், சாண்டியாகோ என்ற இடத்தில் நமக்கு வெற்றி கிடைத்ததற்காக, ஒரு பிரகடனத்தின்மூலம், கடவுளுக்கு நன்றி செலுத்திக்கொண்டார். மஞ்சள் காய்ச்சல் என்ற நோயை அனுப்பி வைத்ததற்காக, அவர் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்ளவில்லை. பொருத்தமான முறையில் பார்க்கப்போனால், நமது குடியரசுத் தலைவர், இரண்டு செயல்களுக்காகவும் சமமான அளவில், கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருக்க வேண்டாமா!

உண்மை என்னவென்றால், நல்ல-தீய ஆவிகளும், கடவுள்களும் பூதங்களும், மனித அனுபவத்திற்கு மிக அப்பாற்பட்டவைகளாகும்; நமது எண்ணங்களின் எல்லைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவையாகும்; நமது சிந்தனைக்கு மிக அப்பாற்பட்டவையாகும்.

மனிதன் சிந்திக்கவேண்டும்; அவன் அவனுடைய புலனுணர்ச்சிகளை யெல்லாம் பயன்படுத்தவேண்டும்; அவன் ஆராய்ச்சி செய்யவேண்டும்; அவன் பகுத்தறிந்து பார்க்க வேண்டும். சிந்திக்கத் தெரியாத மனிதன், மனிதனைவிட மிகத் தாழ்ந்தவனாகிறான்; சிந்திக்க மறுப்பவன், அவனுக்குத் தானே துரோகியாகிறான்; சிந்திக்க அஞ்சுபவன், மூட நம்பிக்கையின் அடிமையாகிறான்!