மனத்தின் தோற்றம்/கம்பரின் தமிழ்ப் படலம்

4. கம்பரின் தமிழ்ப் படலம்



கம்பர் தமது இராமாயணக் காப்பியத்தில் தமிழ்ப் படலம் ஒன்று தந்துள்ளார். அதன் விவரமாவது:—

இராமன், சீதை, இலக்குவன் ஆகிய மூவரும் காட்டில் தம்மை வரவேற்ற சுதீக்கணன் என்பவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டபின், அகத்தியனது இருப்பிடம் நோக்கிச் சென்று நெருங்கினர்.

இவர்களின் வருகையை அறிந்த அகத்தியனின் மகிழ்ச்சி அளவு கடந்ததாய் ஏழுலகும் பரவிற்றாம். என்றும் உள. தென்தமிழ் இயம்பி இசை கொண்டவனும், நீண்ட தமிழால் உலகை அளந்தவனுமாகிய அகத்தியனின் திருவடிகளை இராமன் வணங்க அவன் வரவேற்றான். பாடல் (அகத்தியப் படலம்)

“ஆண்தகையர் அவ்வயின் அடைந்தமை அறிந்தான்
ஈண்டு உவகை வேலைதுணை ஏழுலகும் எய்த
மாண்ட வரதன் சரண் வணங்க எதிர் வந்தான் ...
நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்” (36)

ஆண் தகையர் = மற ஆண்மையுடைய இ ரா ம இலக்குமணர். அவர்கள் வந்தனர் எனில் சீதையும் உடன் வந்தமை சொல்லாமலே விளங்கும்.

இராமன் அகத்தியனிடம் படைக்கலம் பெற்று அரக்கரை வெல்லப் போகிறானாதலின் உவகை ஏழுலகும் பரவியது.

மாண்ட வரதன் = மாண்பு மிக்க இராமன். தன் திருவடிகளை இராமன் வணங்கும் அளவுக்கு அகத்தியன் உயர்ந்தவனாவான்.

அகத்தியன் நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான் என்பது ஆய்விற்கு உரியது. நேமி = ஆழிப்படை. இங்கே நேமி என்பது இடப்பொருள் (தானி) ஆகுபெயராய் நேமியை உடைய திருமாலைக் குறிக்கிறது. திருமால் மாவலியிடம் மூன்றடி மண் கேட்டு உலகம் முழுவதையும் அளந்தார். அல்லவா? அத் திருமாலைப் போல, அகத்தியன் தமிழால் உலகை அளந்தானாம்.

தமிழால் உலகை அளத்தலாவது, உலகம் முழுவதிலும் தமிழைப் பரவச் செய்தலும், உலகில் உள்ள கலைகளை யெல்லாம் தமிழில் உளவாகச் செய்தலுமாம். இதனால், பண்டு உலக அரங்கில் தமிழுக்கு இருந்த முதன்மையும் சிறப்பும் விளங்கும். -

நீண்ட தமிழ் என்பது, தமிழில் பல்வேறு கலைநூல்கள் நிரம்ப இருந்தமையையும், அது நீண்ட தொலைவில் உள்ள இடங்களில் எல்லாம் பரவியிருந்தது என்பதையும் அறிவிக்கும்.

இப்போது தமிழை உயர்த்தும் நோக்கத்துடன் தமிழின் சிறப்பைக் கூறினால், தமிழ் வெறியர் என்னும் பட்டம் கிடைக்கின்றது. கம்பர் இங்கே அறிவித்ததை விட இன்னும் உயர்வாக எந்தத் தமிழ் வெறியரும் தமிழின் மேன்மையைச் சொல்ல முடியாது. தமிழ் அறிஞர்களைத் தாழ்த்திப் பேசுபவரின் மொழியில் சொல்லப் போனால் கம்பர் மாபெருந் தமிழ் வெறியராவார்.

சேக்கிழார் பெரிய புராணத்தில் இதையே சுருக்கி

“ஞாலம் அளந்த மேன்மைத் தெய்வத் தமிழ்” (975) என்று சிறப்பித்துள்ளார். சுப்பிரமணிய பாரதியார்,
“வாழ்க கிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே!
வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி
இசை கொண்டு வாழியவே!' (23)


“பல்விதமாயின சாத்திரத்தின் - மணம்
பாரெங்கும் வீசும் தமிழ்நாடு
வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தத்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
சிங்களம் புட்பகம் சாவகம் - ஆதிய
தீவு பலவினும் சென்றேறி - அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு
விண்ணை இடிக்கும் தலைஇமயம் - எனும்
வெற்பை அடிக்கும் திறனுடையார் - சமர்
பண்ணிக் கலிங்கத்து இருள் கெடுத்தார் - தமிழ்ப்
பார்த்திவர் கின்ற தமிழ்நாடு
சீனம் மிசிரம் யவன ரகம் - இன்னும்
தேசம் பலவும் புகழ் வீசிக் - கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு
செந்தமிழ் நாடேனும் போதினிலே” (20)

என்று தமிழின் பரப்பை விரித்துக் காட்டியுள்ளார். சேக்கிழாரும் பாரதியாரும் தமிழ் வெறியர்களா?

ஞானப்பிரகாச அடிகளார் (Rev. S. Gnana Prakasar, 0. M. 1) என்னும் இலங்கைப் பேரறிஞர், ‘சொற்பிறப்பு - ஒப்பியல் தமிழ் அகராதி’ (An Etymological and comparative Lexicon of the Tamil Language) என்னும் தமது அகராதியின் முன்னுரையில் பின்வரும் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

“தமிழ்ச் சொற்கள் முதல் முதல் மக்களினத்தில் மொழி தோன்றத் தொடங்கிய காலத்தில் எழுந்த சொல்லொலிகளை அடிப்படையாகக் கொண்டவை. தமிழ்ச் சொற்களால் உணர்த்தப்படும் கருத்துகள் மக்களினத்தின் பொதுப் பண்பைக் குறிக்கும் அடிப்படையாகும். எனவே, கூர்ந்து ஆராயின், தமிழ்ச் சொற்களின் வேரிலிருந்தே உலகமொழிகளின் சொற்கள் தோன்றிப் பல்வேறு வடிவம் கொண்டன என்பது புலப்படும்”.

மேலே இது காறுங் கூறியவற்றால், “நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்” என்று கம்பர் கூறியுள்ளமை முற்றிலும் பொருந்தும் என்பது பெறப்படும்.

அகத்தியன் கடலை உண்டவன் - வாதவியை வயிற்றில் அடக்கிச் செரிக்கச் செய்தவன் - விந்த மலையைக் கீழே ஆழ்த்தியவன் - என்றெல்லாம் அறிவித்த பெருமை போதாது என்று, மீண்டும் தமிழ் வாயிலாக அகத்தியனுக்கு ஒரு சிறப்புக் கூறுகிறார் கம்பர். அதாவது:-

உயர் தமிழ்

உலக வழக்கு, செய்யுள் வழக்கு ஆகிய இரு வழக்கு களையும் ஒட்டித் தமிழ் இலக்கணம் அளித்தானாம் அகத்தியன். அந்தத் தமிழ் முதல் முதல் சிவனால் தனக்குக் (அகத்தியனுக்கு) கற்றுக் கொடுக்கப்பட்டதாம். மேலும் அந்தத் தமிழ், வலிந்து கற்கும் நான்கு வடமொழி வேதங்களினும் உயர்ந்ததாம்.

“உழக்கு மறைநாலினும் உயர்ந்து உலகம் ஓதும் வழக்கினும் மதிக் கவியினும் மரபின் நாடி நிழல்பொலி கணிச்சிமணி நெற்றி உமிழ் செங்கண் தழல்புரை சுடர்க்கடவுள் தந்த தமிழ் தந்தான்” (41)

வேதம் ஒலி வகையால் கற்பதற்குக் கடினமாதலால் ‘உழக்கு மறை’ என்றார். அதை நோக்க, தமிழ், இன்தமிழ்மென்தமிழ் - செந்தமிழ் - பைந்தமிழ் - தேன் தமிழ் - அமிழ்தத் தமிழ், - வண் தமிழ் - ஒண் தமிழ் முதலிய அடைமொழிகளைப் பெற்றிருப்பது பொருத்தமே போலும்!

சிவன் ஒளி பொருந்திய மழுப்படையையும் நெற்றிக் கண்ணையும் ஒளி வீசும் செம்மேனியையும் உடைய கடவுளாம்.

‘ஆண் தகையர்’ என்று தொடங்கும் பாடலால் தமிழின் பரப்பைக் கூறிய கம்பர், இந்தப் பாடலால் தமிழின் உயர்வைச் சொல்கிறார் ‘உழக்கு மறை நாவினும் உயர்ந்தது தமிழ்’ என்று கூறியுள்ளார். இதைச் சுப்பிரமணிய பாரதியார்

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்” (22-1)

என்ற வடிவத்தில் அறிவித்துள்ளார். சேக்கிழார் பெரிய புராணத்தில்,

“அசைவில் செழுந் தமிழ்வழக்கே
அயல் வழக்கின் துறைவெல்ல” (192)

என்று கூறித் தமிழ் அவாவவைத் தீர்த்துக் கொண்டு உள்ளார்,

பரஞ்சோதி முனிவர் தமது திருவிளையாடல் புராணம்நாட்டுப் படலத்தில்,

“கண்ணுதல் பெருங்கடவுளும் கழகமோடு அமர்ந்து
பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப்பசுங் தமிழ் ஏனை
மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணிடைப் படக் கிடந்ததா எண்ணவும் படுமோ” (57)
“தொண்டர் காதனைத் தூதிடை
விடுத்ததும் முதலை
உண்ட பாலனை அழைத்ததும்
எலும்பு பெண்ணுருவாக்
கண்டதும் மறைக் கதவினைத்
திறந்ததும் கன்னித்
தண்தமிழ்ச் சொலோ மறுபுலச்
சொற்களோ சாற்றீர்” (58)

என்று பாடித் தமது தமிழ் உணர்வுத் தின வைத் தீர்த்துக் கொண்டார். இப்படியே போனால் இந்தப் பட்டியல் மிகவும் நீளும்

சிவன் அகத்தியர்க்குத் தமிழ் தந்த செய்தி, காஞ்சிப் புராணத்தில்,

“வடமொழியைப் பாணினுக்கு வகுத்தருளி
அதற்கு இணையாத்
தொடர் புடைய தென்மொழியை
உலகமெலாம் தொழுதேத்தும்
குடமுனிக்கு வலியுறுத்தார்
கொல்லேற்றுப் பாகர்”

எனக் கூறப்பட்டுள்ளது. குடமுனியை உலகம் எல்லாம் தொழுது ஏத்துவது எதற்காக? நீண்ட தமிழை உலகம் முழுவதற்கும் தந்ததனால் என்க.

என்றும் உளது - இசை தருவது

தமிழால் அகத்தியன் புகழ் பெற்றுள்ளமையைக் கம்பர் மற்றொரு பாடலாலும் அறிவித்துள்ளார். அகத்தியனின் அடிகளை இராமன் வணங்கினானாம். அகத்தியன் மகிழ்ச்சிக் கண்ணிர் - உணர்ச்சிக் கண்ணிர் பெருக இராமனைத் தழுவிக் கொண்டு, நும்வரவு நல்வரவாகுக என்று பல நயமொழி புகன்றானாம். பாடல்:

“கின்றவனை வந்த நெடியோன் அடி பணிந்தான்
அன்று அவனும் அன்பொடு தழீஇ அழுதகண்ணால்
'கன்று வரவு' என்று பல நல்உரை பகர்ந்தான்
என்றும் உள தென்தமிழ் இயம்பிஇசை கொண்டான்” (47)

என்பது பாடல். நெடியோன் = இராமன். அகத்தியன் குறளன் அல்லவா? அழுத கண்ணும் வரவேற்றது போன்ற குறிப்பு பாடலில் மறைந்து கிடக்கிறது. இப்பொழுது நல் வரவாகுக - Welcome - என்றெல்லாம் போடுவதை அப்போதே கம்பர் தொடங்கி வைத்து விட்டார்.

இந்தப் பாடலின் இறுதி அடியில் தமிழின் இரண்டு சிறப்புகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. ஒன்று: என்றும் உள்ளது; மற்றொன்று இசை தருவது.

தமிழ், சமசுகிருதம், இலத்தீன் போன்ற பழம்பெரு மொழிகளுள் சமசுகிருதமும் இலத்தீனும் இப்போது வழக் கிழந்துள்ளன. தமிழ் என்றும் வழக்கு இழக்காமல் நிலையாய் உள்ளது. இது ஒரு சிறப்பு. இங்கே, மனோன் மணியத்தில் சுந்தரம் பிள்ளை பாடியுள்ள -

“ஆரியம்போல் உலகவழக்கு அழிந்து
ஒழிந்து சிதையா உன்
சீரிளமைத் திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே”

என்னும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பகுதி எண்ணத் தக்கது.

அடுத்தது: தமிழை இயம்பியதால் அகத்தியர் இசை (புகழ்) பெற்றாராம். இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இயம்பிய தமிழாசிரியர்கட்கு இது கிடைத்ததா? மற்ற பாடத்து ஆசிரியர்களின் பெயர்கட்குக் கடைசியில் தமிழாசிரியர்களின் பெயர்கள் எழுதப்பட்டனவே - அதாவது - தமிழாசிரியர்கட்கு ‘இறுதி மரியாதை’ செய்யப் பட்டதே. புதுவை மாநிலத்தில் தமிழாசிரியர்கள் போராடி, உயர் நிலைப் பள்ளிகட்கு அன்று - நடுநிலைப் பள்ளிகட்குத் தலைமையாசிரியர் பதவி அளிக்கச் செய்தனர். உடனே, மற்ற பாடத்து ஆசிரியர்கள் போராடியதால், தமிழாசிரியர் கள் தலைமையாசிரியர் பதவியிலிருந்து கீழே இறக்கப் பட்டனர். இப்போது புதுச்சேரி மாநிலத்தில் அரசுக் கல்வித் துறையில் உள்ள அலுவலர்களுள் யாரும் இதற்குப் பொறுப்பாளர் ஆகார். இது முன்பு எப்போதோ நடந்தது. ஆனால், அந்தக் காலத்தில் அகத்தியர் தமிழை இயம்பியதால் புகழ் பெற்றாராம். காலத்தின் கோலம் என்னே!

தமிழ் நாட்டின் வடக்கே இருந்து கொண்டு காட்டில் இராமனை வரவேற்ற அகத்தியர் எந்த மொழியில் பேசி யிருப்பார்? இராமனோடு எந்த மொழியில் உரையாடி யிருப்பார்? - என்பதை அறிஞர்கள் ஆய்க. மற்றும், தம்பராமாயணம் சுந்தர காண்டத்தில்,

“தென்சொல் கடந்தான் வடசொல்
கடற்கு எல்லை தேர்ந்தான்”

என இராமன் கம்பரால் சுட்டப்பட்டிருப்பதும் ஈண்டு நினைவுகூரத் தக்கது.

இதுகாறும் மேலே கூறப்பட்டுள்ள தமிழ் பற்றிய செய்திகள், கம்பராமாயணம் - ஆரணியகாண்டம் - அகத்தியப் படலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அந்த அகத்தியப் படலம் 'கம்பரின் தமிழ்ப் படலம்' என்று கூறப்படும் உரிமைக்கு ஏற்றதே. கம்பரின் தமிழ்ப் படலம் என்பது இந்த அகத்தியப் படலமே.