மனத்தின் தோற்றம்/மலர்களும் மனையறமும்

3. மலர்களும் மனையறமும்



மக்கள் மனையறம் - மனைவாழ்க்கை நடத்துவது போலவே மலர்களும் மனையறம் நடத்தி இன்ப வாழ்வு வாழ்கின்றன. மக்கள் ஆணும் பெண்ணுமா யிணைந்து இல்லறங் காத்து விருந்தோம்பி வேளாண்மை (உபகாரம்) செய்தல் போலவே, மலர்களும் செய்து வாழ்கின்றன. ஈண்டு மலர்கள் என்றால், சினையாகு பெயராகக்கொண்டு, மரஞ்செடி கொடிகளை யெல்லாம் குறித்துக்கொள்ள வேண்டும். இருப்பினும், குறிப்பிட்ட பயனாகிய மனையறப் பகுதி மலர்களின் வாயிலாகவே நடத்தவின் சிறப்பாக மலர்களைப் பற்றியே எடுத்துப் பேசி ஆராய்வோம்.

மனையறம் என்றால், கணவன், மனைவி, குழந்தைகள், விருந்தினர் முதலியோர் இருப்பர். 'இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு' என்ற வள்ளுவரின் வாய்மொழிப்படி, மனையறத் தால் பலர்க்கும் பலவகை நன்மைகளும் இருக்கும். அங்ஙனமெனின், மலர்களின் மனையற வாழ்க்கையில் கணவன் யார் - மனைவி யார் என முதலில் கண்டுபிடித்தாக வேண்டும். பிறகு பயன்களைப் பற்றிப் பார்க்கலாம்.

பொதுவில் புலவர்கள் சிலர் மலரை மனைவியாகவும், ஞாயிறு (சூரியன்) அல்லது திங்களை (சந்திரன்) கணவனா கவும் உருவகித்துப் பாடுவதுண்டு. காட்டாக, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, சூரியகாந்தி மலரை நோக்கி,

“ஆகாய வீதி உலாவிவரும் இந்த
ஆதித்தனோ உனது அன்பனடி!
வேகாமல் வெந்து வெயிலில் உலர்ந்து நீ
விண்ணிலே கண்ணாக நிற்ப தேனோ?
காயும் கதிரவன் மேனியை நோக்க - உன்
கண்களும் கூசிக் கலங்காவோ?
நேயம் மிகுந்தவர் காய வருத்தம்
நினைப்பதும் இல்லையோ? சொல் அடியே!
செங்கதிர் செல்லும் திசையது நோக்கி - உன்
செல்வ முகமும் திரும்புவ தேன்?
மங்கையே உன் மணவாள னாகில் - அவன்
வார்த்தை யொன்றும் சொல்லிப் போகானோ?
ஆசை கிறந்த உன் அண்ணலை நோக்கிட
ஆயிரம் கண்களும் வேண்டு மோடி?
பேசவும் நாவெழ வில்லையோடி! - கொஞ்சம்
பீத்தல் பெருமையும் வந்த தோடி?
மஞ்சள் குளித்து முகமினுக்கி - இந்த
மாயப்பொடி வீசி நிற்கும் நிலை
கஞ்ச மகள் வந்து காணிற் சிரிக்குமோ?
கண்ணிர் உகுக்குமோ? யாரறிவார்!”

என்று கேட்பதுபோல் மிக இனிமையாகவும் நயமாகவும் பாடியுள்ளார். இப்பாடல்தொடரில், சூரியகாந்தி மலரின் கணவனாகச் சூரியனைக் குறிப்பிடுகிறார். அம்மலர் தன் மணவாளனாகிய கதிரவனையே என்றும் பார்த்துக் கொண்டிருக்கிறதாம். நேயம் மிகுந்தவனாதலால் அவன் தன்மேல் காய்வதற்கும் வருந்தவில்லையாம். அவனை மேன்மேலும் மயக்குவதற்காக, மஞ்சள் குளித்து முகம் மினுக்கி மாயப் பொடியும் (மகரந்தத் தூள்) வீசுகிறதாம். இந்தப் போட்டிக் காட்சியைக் கதிரவனது மற்றொரு மனைவியாகிய தாமரை மலர் கண்டால் எள்ளி நகையாடிச் சிரித்தாலும் சிரிக்குமாம் - அல்லது கவலையால் கண்ணிர் சொரிந்தாலும் சொரியுமாம். எவ்வளவு கற்பனையான பாடல் இறுதிப் பாடல் இரு பொருள் (சிலேடை) நிறைந்தது. கண்ணிர் = கள் நீர் = தேன்.

சூரியகாந்திப் பூவுக்கும், தாமரை மலருக்கும் கதிரவ னைக் கணவனாகக் கூறும் மரபு உண்டென்பது மேற்கூறிய பாடல்களால் புலனாகும். மேலும், கச்சியப்ப முனிவர் கந்தபுராணத்தில்,

“சகட சக்கரத் தாமரை நாயகன்”

என்றும், சிவப்பிரகாச முனிவர் திருவெங்கை யுலாவில்,

“செந்தாமரை நாதன் தேரில் பதாகையோடு
நந்தா மதிற் கொடிகள் நட்பாட”

என்றும் கூறியிருப்பதிலிருந்து, கதிரவனுக்கு, ‘தாமரை நாயகன்’, ‘தாமரை நாதன்’ என்னும் பெயர்கள் உள வாதலும் அறியப்பெறும். நாயகன் - நாதன் என்றால் கணவன்தானே!

நம் புலவர்கள் திங்களை மட்டும் விட்டு வைத்தார்களா என்ன! குமுத (ஆம்பல்) மலரின் கணவனாக மதியத்தைக் கூறி வைத்தார்கள். இதனை,

"ஆம்பல் களிகூர வரும் வெண்ணிலாவே-உனக்கு
அம்புயம் செய் தீங் கெதுவோ வெண்ணிலாவே!”

என்னும் தேசிகவிநாயகம் பிள்ளையின் பாடலாலும்,

“காமக் கருத்தாக் குமுத நாதன்
கங்குல் வரக் கண்டும்”

என்னும் தனிப்பாடல் திரட்டுச் செய்யுளாலும் உணரலாம். திங்கள் குமுத நாதனாம் - ஆம்பலின் கணவனாம்!

ஆனால் உண்மையில் ஞாயிறும் திங்களும் மலர்களின் கணவன்மார்களாக முடியுமா? முடியாதே! கதிரொளி யாலும் நிலவொளியாலுமா மலர்கள் கருவுற்றுக் காய் காய்க்கின்றன? இல்லையே! கதிரவனும் மதியமும் புறப்படும் நேரத்தில் வழக்கமாக மலர்கள் மலர்வதால் அவற்றை அம் மலர்களின் கணவன்மார்களாகக் கூறியிருப்பது ஒருவகை இலக்கிய மரபேயாகும். காய் காய்க்கும் மலர்களின் கணவன்மார்கள் வேறே உளர். எனவே, கதிரவனையும் திங்களையும், மலர்களின் மலர்ச்சிக்கு உதவும் உதவியாள ராக - ஆதரவாளராக - நண்பராக வேண்டுமானால் ஒரு வகையில் கூறலாம். இத்னை நன்கு உணர்ந்ததனால் தானோ, பிங்கல முனிவர் தம் பிங்கல நிகண்டில் குமுத சகாயன் என்றும், மண்டல புருடர் தம் சூடாமணி நிகண்டில் குமுத நண்பன்' என்றும் திங்கட்குப் பெயர் கூறியுள்ளனரோ என்னவோ? சகாயன், நண்பன் என்னும் சொற்கள் கணவனைக் குறிக்கா அல்லவா?

ஆனால் ஒரு சிலர், மலர்களின் கணவராக வண்டுகளைக் கூறுவது வழக்கம். இதனை,

“காமர் செவ்விக் கடிமலர் அவிழ்ந்தது
உதய குமரன் எனும் ஒருவண்டு உணிஇய”

என்னும் மணிமேகலை யடிகளாலு முணரலாம். அதாவது, மாதவியின் மகளாகிய மணிமேகலை என்னும் மலரை, இளவரசன் உதயகுமரன் என்னும் வண்டு உண்ண விரும்புவதைப்பற்றிக் கூறுகிறது இப்பகுதி. இதிலிருந்து, மலரைப் பெண்ணாகவும் வண்டை ஆணாகவும் கூறும் ஒருவகை மரபு உண்டு என்பது புலனாகும். இத்தகைய இலக்கிய வழக்காற்றைச் சங்க நூல்களிலும் காணலாம். அப்படியெனில், வண்டுகள் மலர்களின் கணவராக முடியுமா? முடியாது. உண்மையை ஆராயின், காய் காய்க்கும் மலர்களுக்கும் அவற்றின் கணவன்மார்களுக்கும் இடையே தூது செல்லும் தூதுவர்களே வண்டுகள் என்பது புரியும், இந்த வேலை செய்வதற்காக வண்டுகள் பெறும் கூலி இல்லையில்லை பரிசு - இல்லையில்லை கைதும்" (இலஞ்சமே) அவை குடிக்கும் தேனாகும். இப்படிச் சொன்னால் ஒன்றும் புரியாதுதான்! இதனை கண்டு விளக்கமாகச் சொல்லவேண்டும். அதற்காக நாம் இங்கே பொதுவாகப் பூ காய் (கனி) ஆகியவற்றின் வரலாற்றை ஆராய்ந்து காணவேண்டும். இனி அவ்வாராய்ச்சியில் ஈடுபடுவோம்:

பூவின் வரலாறு

இங்கே விளக்கத்திற்காகப் பூவரசம் பூவினை எடுத்துக் கொள்வோம். நகரங்களிலுள்ள சிலர் அறியாவிடினும், சிற்றுரர்களில் உள்ள பலரும் பூவரசம் பூவினைப் பற்றி நன்கு அறிந்திருப்பர். சிறுவர் சிறுமியர் பூவரசம் பூவைப் பறித்துப் பாவாடை கட்டிய பெண்குழந்தைபோல் பொம்மை செய்தும், இதழ்களைக் களைந்தெறிந்துவிட்டு அடியிலிருக்கும் காய்ப் பகுதியைக் கம்மலாகவும் பம்பர மாகவும் பயன்படுத்தியும் விளையாடுவது வழக்கம். எனவே, சிறார்களும் நன்கறிந்த பூவரசம் பூவினை எடுத்துக் கொள்வது பொருத்தந்தானே. மேலும் அது பூக்களுக்குள்ளே அரசன் அல்லவா? ஆகவே, அதைப்பற்றித் தெரிந்து கொள்வது, மற்ற பூக்களைப்பற்றித் தெரிந்து கொள் வதற்குப் பெரிதும் துணை புரியும்.

பூவரசங் கிளையின் கணுச்சந்துகளிலிருந்து நீண்ட காம்புகளுடன் பூக்கள் தோன்றுகின்றன. காம்புக்கு ‘விருந்தம்’ (Pedicel) என்று பெயர் கூறுகின்றனர் மர (தாவர) நூலார். இதனை மலரின் தாள் என்றும் சொல்லலாம். விருந்தத்தின் நுனியில் ஒரு கிண்ணம் பூவின் மற்ற பகுதிகளை உள்ளடக்கி மூடிக்கொண்டிருக்கும். சிறிய அரும்பாயிருந்தபோது மூடிக்கொண்டிருக்கும் இக் கிண்ணம், பெரிய மொட்டானதும் மேற் புறத்து விரிகிறது. உடனே உள்ளிருக்கும் பாகங்கள் வெளிப்பட்டு வளருகின்றன. இப் பூக்கிண்ணத்தை புஷ்ப கோசம் (calyx) என்றழைக் கின்றனர்.

புஷ்ப கோசம் எனப்படும் பூக்கிண்ணம் பூவின் வெளிப்பாகமே. உட்புறத்தே அழகிய மஞ்சள் நிறங்கொண்ட ஐந்து தளங்கள் உண்டு. பூவின் நடுவில் நீளக் கம்பிபோன்ற ஒரு பாகம் உள்ளது. அதில், குழாய் போன்றும் ஊசி போன்றுமாக இரண்டு உட்பிரிவுகள் உண்டு. குழாய் போன்றது ஊசிபோன்றதைச் சுற்றிக்கொண்டிருக்கும். இந்தக் குழாயின் வெளிப்புறத்தைச் சுற்றியிருக்கிற நூல் போன்ற கம்பிகளின் நுனிகளில், மஞ்சள் நிறமுடைய சிறுசிறு உருண்டைகள் இருக்கும். இக்குழாய் 'கேசரக் குழாய்' (Staminal tube) என்றும், மஞ்சள் நிற உருண்டை 'மகரந்தப் பை' (Anther) என்றும் அழைக்கப்படும். கேசரக் குழாய்க்குள் உள்ள கம்பி 'கீலம்' (Style) எனப்படும். கிலத்தின் நுனிப்பகுதி 'கீலாக்ரம்' (Stigma) அல்லது கீல நுனி எனப்படும். கீலம் அடியில் பிஞ்சுடன் தொடர்புற்றிருக்கும். இந்தப் பிஞ்சு 'அண்டாசயம்' (Ovary) எனப்படும். இந்தக் கீலம், கீலாக்ரம், அண்டாசயம் ஆகிய மூன்றும் சேர்ந்து 'அண்டகோசம்’ (Gynaecium) என்றழைக்கப்படும். பூவில் காயாக மாறும் பகுதி இந்த அண்டகோசம்தான். எனவே, இதனைப் பூவின் பெண்பாகம் என்று கூறலா மன்றோ? கேசரப் பகுதியிலுள்ள மகரந்தப் பையில் இருக்கிற 'மகரந்தப்பொடி' (Pollen) என்னும் பூந்துள், அண்ட கோசத்துள் விழுந்து தொடர்பு கொண்டால்தான் காய் உண்டாகுமாதலால், அம் மகரந்தப் பொடி உள்ள கேசரப் பகுதியைப் பூவின் ஆண்பாகம் என்று சொல்லலா மன்றோ?

இணையினப் பூஞ்செடிகள்

பூவரசில் ஒரே பூவில் ஆண்பாகம், பெண்பாகம் இரண்டும் உள்ளன. சப்பாத்தி, அகத்தி முதலியவற்றிலும் இப்படியே. இத்தகையனவற்றை 'மிதுனச் செடி என்பர் நாம் இவற்றை இணையினப் பூஞ்செடி என அழகு தமிழில் அழைப்போம்.

ஈரினப் பூஞ்செடிகள்

எல்லாச் செடிகளிலுமே ஒரே பூவில் கேசரமாகிய ஆண்பாகமும் அண்ட கோசமாகிய பெண் பாகமும் இருப்பதில்லை. சில செடிகளில் ஒரு கிளையிலுள்ள ஒரு பூவில் ஆண்பாகமாகிய கேசரம் மட்டும் இருக்கும்; அதற்கு ஆண் பூ என்று பெயராம். அதே அல்லது வேறு கிளையிலுள்ள மற்றொரு பூவில் பெண்பாகமாகிய அண்டகோசம் மட்டும் இருக்கும்; இதற்குப் பெண் பூ என்று பெயராம். பூசணி, பாகல், குப்பை மேனி, ஆமணக்கு முதலியவை இவ்வகையைச் சேர்ந்தவை. இத்தகையன வற்றை துவிலிங்கச் செடிகள் என்பர். தமிழில் ஈரினப் பூஞ்செடிகள்’ என்று நாம் சொல்லலாம்.

ஓரினப் பூஞ்செடிகள்

வேறு சில வகைகளில், ஒரு செடியிலோ அல்லது கொடியிலோ ஏதாவது ஒரினப் பூ மட்டுந்தான் இருக்கும். அதாவது கோவைக் கொடியை எடுத்துக் கொள்வோம். ஒரு கோவைக் கொடியில் ஆண் பூக்கள் மட்டுமே இருக்கும். இன்னொரு கோவைக் கொடியில் பெண் பூக்கள் மட்டுமே இருக்கும். ஆண் பூ - பெண் பூ என்று சொல்வதற்குப் பதிலாக, ஆண் பனை பெண் பனை என்பதுபோல, ஆண்கோவை . பெண்கோவை என்றே சொல்லிவிடலாம். இத்தகையனவற்றை 'ஏகலிங்கச் செடிகள்' என்பர். தமிழில் 'ஓரினப் பூஞ்செடிகள் அல்லது கொடிகள் என்று' என்று சொல்லலாம்.

மகரந்தச் சேர்க்கை

ஒரே பூவில் ஆண் பாகமும் பெண் பாகமும் இருந்தால், ஆண் பாகத்திலுள்ள மகரந்தத் துணுக்குகள் பெண் பாகத்தோடு தொடர்புகொண்டு கருவுற்றுக் காய் காய்ப்பது தன்னில்தானே இயற்கையாக நிகழும். இதற்குத் தன் மகரந்தச் சேர்க்கை என்று பெயராம். ஆண் பூவும் பெண் பூவும் தனித்தனியாயிருக்குமானால், காற்று, வண்டு, தேனி, பறவை, விலங்கு முதலியவற்றின் வாயிலாக, ஆண் பூவிலுள்ள மகரந்தத் துணுக்குகள் பெண் பூவிற்கு வந்து தொடர்புறுவதால் கருவுற்றுக் காய் காய்க்கும். இதற்குப் ‘பிறமகரந்தச் சேர்க்கை’ என்று பெயராம்.

இனிமேல்தான் மலர்களின் காதல் வாழ்வை நாம் ஆழ்ந்து ஆராய வேண்டும். செகதீச சந்திரபோசு கூறி யுள்ளாங்கு, அவற்றிற்கும் எல்லாவகை உணர்வுகளு முண்டு.

பெரும்பாலும் மலர்கள் தன்மகரந்தச் சேர்க்கையை விரும்பாமல், பிறமகரந்தச் சேர்க்கையையே விரும்புகின்றன. உலகியலில்கூட மணமக்கள் சிலர், சொந்தக்காரப் பெண் அல்லது ஆணின்மேல் கவர்ச்சி கொள்ளாது புதியவரையே விரும்பி நாடுவதைக் காண்கிறோமே! விஞ்ஞான முறைப்படி நோக்கின், சொந்தக்கார மணமக்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அறிவிலோ உருவிலோ போதிய வளர்ச்சி பெறு வது ஐயமே. புதியோர்க்குப் பிறக்கும் பிள்ளைகள் போதிய வளர்ச்சிபெறுவது திண்ணம். அதேபோல, தன்மகரந்தச் சேர்க்கை உடைய மலர்கள் போதிய மணமோ, நிறமோ, தோற்றமோ, கவர்ச்சியோ உடையனவாக இருக்கமாட்டா. தாழம் பூவும், சில புல் செடிப் பூக்களும் இத்தகையனவே. காற்றின் உதவியால் மகரந்தப் பொடிகள் பெண்பாகத்தை அடைவதால் இவை கருவுறுகின்றன. மகரந்தப் பொடி கொஞ்சமாக இருந்தால் பெண்பாகத்தில் பட்டாலும் படும், படாமல் போனாலும் போகுமாதலின், தாழை போன்ற வற்றில் மகரந்தப் பொடிகள் மிகுதியாகவும், காற்றில் மிதப்பதற்கேற்றவாறு கனமற்று மெல்லியனவாகவுமுள்ளன. இவையும் பிற பூக்களிலிருந்து பிறமகரந்தச் சேர்க்கை ஏற்பட வழியில்லாது போவதனாலேயே, வேண்டா வெறுப்பாய்த் தம் பூவிலிருந்தே தன் மகரந்தச் சேர்க்கை பெற்றுக்கொள்கின்றன.

மலர்கள் தன் மகரந்தச் சேர்க்கையை விரும்பாமல் இருப்பதற்கு இயற்கையும் ஒத்துழைப்பதும் உண்டு. அதாவது, சில இணையினப் பூஞ்செடிகளில், ஒரே மலரிலுள்ள ஆண் பாகமும் பெண் பாகமும் ஒரே நேரத்தில் முற்றுதல் (பக்குவம்) பெறாமல், முன்பின்னாகவே பதப்படுகின்றன. இதனால் தன்மகரந்தச் சேர்க்கைக்கு வழியில்லாமல், பிற பூக்களை எதிர்பார்க்க வேண்டியுள்ளது. சிறு குழந்தையும் பெரியவரும் மணந்துகொள்ள முடியாததுதானே! பேரா முட்டி, கம்பு, சோளம் முதலியன இந்த வகையைச் சேர்ந்தவை.

எனவே, மலர்கள் பிறமகரந்தச் சேர்க்கையையே விரும்புகின்றன. ஒரு பூவின் பெண் பாகத்தில் வேறு மலரிலுள்ள ஆண் பாகமாகிய மகரந்தப் பொடியைக் கொண்டு வந்து சேர்க்கும் வேலையை வண்டு, தேனீ, வண்ணத்துப்பூச்சி முதலியவை செய்கின்றன. இவ்வாறு பிறமகரந்தச் சேர்க்கையால் கருவுறும் மலர்கள் மிக்க மணமும், நிறமும், தேனும், தோற்றக் கவர்ச்சியும் உடையனவாக இருக்கும். இவ்வகை மலர்கள் மணமும் நிறமும் கவர்ச்சியும் பெற்றிருப்பது வண்டு முதலியன வற்றைக் கவர்ந்து மயக்கித் தம்பால் இழுப்பதற்கேயாம். அதற்காகத் தேனும் கொடுக்கப்படுகிறது. வண்டு முதலியன ஒரு மலரில் தேன் குடிக்கும்போது அதிலுள்ள மகரந்தத் துணுக்குகளைத் தம்மேல் ஒட்டிக்கொண்டு, வேறொரு மலரில் சென்று அத்துணுக்குகளைத் தற்செயலாகச் சேர்க்கின்றன. மலர்களிடம் கவர்ச்சியில்லையென்றால் வண்டுகள் அவற்றை நோக்கிச் செல்லமாட்டா அல்லவா?

“மஞ்சள் குளித்து முகம்மினுக்கி - இந்த
மாயப்பொடி வீசி கிற்கும் நிலை”

என்று கவிமணியவர்கள் சூரியகாந்தியைப் பற்றிக் குறிப்பிட் டிருப்பது, உண்மையில் சூரியனை மயக்குவதற்கன்று; வண்டுகளை மயக்கி வரவேற்பதற்கேயாம். இதனை அவரே மற்றொரு பாடலில் மலர்களின் வாயில் வைத்து,

“வண்டின் வரவெதிர் பார்த்து கிற்போம் - நல்ல
வாசனை வீசி நிற்போம்”

என்று கூறியிருப்பதனாலும் உணரலாம். மற்றும் பொழுது சாயும் மாலை வேளையில் மலரும் முல்லை முதலிய மலர்கள் பளிச்சிட்ட வெண்ணிறமாயிருப்பதன் காரணமும் வண்டுகளை மயக்கி வரவேற்கும் நோக்கமேயாம். இருட்டு நேரத்தில் வெண்ணிறந்தானே பளிச்சிட்டுத் தெரிந்து பார்ப்பவரைக் கவரும் இதனை, பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய மனோன்மணியம் என்னும் காவியத்திலுள்ள,

'... ... ... ... கிசியலர் மலர்க்கு
வெண்மையும் நன்மணம் உண்மையும் இலவேல்
எவ்வணம் அவற்றின் இட்ட நாயகராம்
ஈயினம் அறிந்துவந் தெய்திடும்? அங்ங்னம்
மேவிடில் அன்றோ காய்தரும் கருவாம்?

என்னும் (மூன்றாம் அங்கம் - நான்காம் களம்) அடிகளால் அறியப் பெறலாம்.

இங்கே நுணுகி நோக்குவோர்க்கு ஓர் ஐயம் எழலாம். அதாவது, முல்லை மலர் ஒன்றில் தேன் அருந்தி மகரந்தப் பொடியும் ஒட்டிக்கொண்ட ஒரு வண்டு, அடுத்தாற் போல் மற்றொரு முல்லை மலருக்கே சென்று அம் மகரந்தப் பொடியைச் சேர்க்கும் என்று எப்படிச் சொல்ல முடியும்? ஏன், அந்த வண்டு அடுத்தாற்போல் ஒர் ஆம்பல் மலருக்கோ அல்லது வேறொரு மலருக்கோ செல்லக்கூடாதா? அங்ஙனம் செல்லின் ஒரு முல்லையின் மகரந்தம் மற்றொரு முல்லையில் சேர்ந்து கருவுறுவது எப்படி? இப்படி ஒர் ஐயம் எழலா மன்றோ? ஆனால் இந்த ஐயத்திற்கு இடமேயில்லை. இது உற்றாய்ந்து கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ஒரு முல்லை மலரில் தேன் குடித்த வண்டு, குறைந்தது அரை மணி அல்லது ஒரு மணிநேரம் வரையும் முல்லை மலர்களை மட்டுமே சூழ்ந்து கொண்டிருக்குமாம். அதே போல மந்தாரையில் தேன் குடித்த வண்டு தொடர்ந்து மந்தாரையை தேடித்திரிந்து தேன் குடிக்குமாம்? ஆகா இயற்கையின் வியத்தகு செயலை என்னென்பது மலர்களின் காதல் வாழ்க்கைக்கு இயற்கை எப்படி யெப்படி யெல்லாமோ உதவுகின்ற தல்லவா?

மேலும், பெண் மலர்கள் ஆண் மலர்களின் கூட்டுறவைத் தவங்கிடந்து பெற்றுக் கருவுற்று இன வளர்ச்சி செய்வதோடல்லாது, காயாகிக் கனியாகிப் பிற உயிரினங்கட்கும் உதவி ஒப்புரவு செய்து வாழும் மனையறத்தை எண்ணுங்கால் மயிர்க்கூச் செறிகின்றது. இங்கே, நாம் உண்ணும் நெல், கேழ்வரகு முதலியவற்றின் வாழ்க்கையைச் சிறிது நினைத்துப் பார்ப்போம். இவற்றின் பூக்கதிர்கள் தலைக்குமேல் மிக உயர்ந்து நீண்டிருப்பதற்குக் காரணம் என்ன? தாங்கள் அடர்த்தியாக நெருங்கி வாழ்வதால், பூக்கதிர்கள் அடியிலோ நடுவிலோ ஏற்படின், பிறமகரந்தச் சேர்க்கைக்குப் போதிய வசதியிராது, அதனாலேயே, பூக்கதிர்களைத் தலைக்கு மேல் மிக நீட்டிக் கொண்டு பிறமகரந்தச் சேர்க்கையை எதிர்நோக்கிக் காத்து நிற்கின்றன. என்னே இந்தச் செயல்!

மற்றும், தண்ணீருக்குள் வாழும் வேலம்பாசி என்னும் ஒருவகைச் செடியின் காதல் வாழ்வை ஆராய்ந்தோமாயின் வியப்பினும் வியப்பாயிருக்கும். இச்செடி தண்ணிருக் குள்ளேயே இருக்கும். மேல் மட்டத்தில் தெரியாது. மேலும் இஃது ஒரினப் பூஞ்செடி வகையைச் சேர்ந்ததாகும். அதாவது, சில செடிகளில் ஆண் பூக்கள் மட்டுமே இருக்கும்; சில செடிகளில் பெண் பூக்கள் மட்டுமே இருக்கும். இவற்றிற்குள் மகரந்தச் சேர்க்கை உண்டாக வேண்டுமே? அப்படி உண்டாக்குவதற்கு வண்டு முதலியனவும் தண்ணிருக்குள் முழுகி வரமுடியாதே. இந்நிலையில் மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டுக் கருவுறுவது எங்ஙணம்? இதற்காக இம் மலர்கள் கையாளும் வழி யாது?

தண்ணீருக்குள் இருக்கும் ஆண் வேலம்பாசிச் செடியிலிருந்து பருவம் முற்றிய ஆண் பூக்கள் பிரிந்து நீரின் மேல்மட்டத்திற்கு வந்து காதலியைத் தேடி மிதந்து திரிந்துகொண்டிருக்குமாம். அதேபோல நீருக்குள் இருக்கும் பெண் வேலம்பாசிச் செடியிலுள்ள பருவம் முதிர்ந்த பெண் பூக்கள் காதலர்களைத் தேடித் தாம்மட்டும் நீர் மட்டத்திற்கு மேலே வந்து தலையை நீட்டிக் கொண்டிருக்குமாம். இருக்கவே, ஏற்கெனவே மிதந்து கொண்டிருக்கிற ஆண் பூக்களிலிருந்து இப்பெண் பூக்களுக்கு மகரந்தச் சேர்க்கை கிடைக்கிறது. கிடைத்ததும் பெண் பூக்கள் தண்ணிருக்குள் இறங்கிக் கருவுற்று வளர்ச்சி பெறுமாம். என்னே இயற்கையின் விந்தை இக் காட்சியை அடுத்து வரும் ஒவியத்தில் கண்டு தெளியலாம்:

வேலம்பாசிச் செடிகள்

இந்த ஒவியத்தில் வலக்கைப் பக்கம் இருப்பது ஆண் செடி இடக்கைப் பக்கம் இருப்பது பெண் செடி ஆண் செடியிலிருந்து பூக்கள் பிரிந்து மேல் நோக்கிச் சென்று மிதந்து கொண்டிருப்பதையும், பெண் செடி தனது பூவை மட்டும் தண்ணீரின் மேல்மட்டத்திற்கு நீட்டி ஆண்பூவோடு தொடர்பு கொள்வதையும் காணலாம்.

எனவே, மக்கள் மட்டுமே மனையறம் ஒம்பிப் பிறர்க்கும் பயன்படுகிறார்கள் என்று எண்ணுவதற்கில்லை; அல் றிணையாகிய மரஞ் செடி கொடிகளின் மலர்களுங்கூட மனையறம் நடத்திப் பல்வகை உயிர்கட்கும் பயன் தருகின்றன என்பது புலனாகும். இதனைப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தமது மனோன்மணியம் என்னும் நாடகக் காவியத்தில் மிக அழகாகச் சொல்லோவியப்படுத்தியுள்ளார். அவர் கூற்றுப்படி:- ஒரு சிறு புல் உட்பட எல்லா உயிர்களுமே குறிக்கோளுடன் வாழ்கின்றன. எனவே எதையும் தாழ்வாக எண்ணுவதற்கில்லை. ஒரு சிறு புல்லானது தன் சிறு பூக்குலையை மேலே உயர்த்தி, தேன் துளியினையும் தாங்கி, ஈக்களை அழைத்துத் தேன் அருத்தி மகரந்தச் சேர்க்கை உண்டாகச் செய்து கருவுற்றுக் காய் கனிகளை ஆக்கிப் பலர்க்கும் பயனளிக்கிறது. இக்கருத்தை அவர் பாடியுள்ள

“இதோஒ! இக்கரை முளைத்த இச் சிறுபுல்
சதாதன் குறிப்பொடு சாருதல் காண்டி
அதன்சிறு பூக்குலை அடியொன் றுயர்த்தி
இதமுறத் தேன்துளி தாங்கி ஈக்களை
நலமுற அழைத்து கல்லூண் அருத்திப்
பலமுறத் தனது பூம்பராகம் பரப்பித்து
ஆசிலாச் சிறுகாய் ஆக்கி இதோ......?”

என்னும் மனோன்மணிய (மூன்றாம் அங்கம் - இரண்டாம் களம்) அடிகளால் அறியலாம்.

ஆகவே, அஃறிணைப் பொருளாகிய மலர்களே இவ்வாறு மனையறங் காத்து மாநிலத்திற்குப் பயன் பட்டுக்கொண்டிருக்க, அதே நேரத்தில், உயர்திணையாகிய மக்களுள் சிலர், நன்முறையில் மனைவாழ்க்கை நடத்தாமலும் பிறர்க்குப் பயன்படாமலும் வறிது கழிவதை எண்ணுங்கால், அம்மக்களினத்தைச் சேர்ந்த அனைவரும் வெட்கப்பட வேண்டுமன்றோ?