மனத்தின் தோற்றம்/தமிழ் வளர்ச்சிக்கு இலக்கணப் புலவர்களின் நன்கொடை

8. தமிழ் வளர்ச்சிக்கு இலக்கணப் புலவர்களின் கொடை



மற்ற மொழிகளைப் போலவே தமிழிலும் முதலில் இலக்கியங்கள் தோன்றின. பின்னர், இலக்கியம் கண்டதற்கு இலக்கண நூல்கள் தோன்றின.

ஆறு, கண்ட இடங்களில் பிய்த்துக்கொண்டு சிதறாமல் நேரிதின் செல்வதற்குக் கரைகள் துணைபுரிகின்றன. அவ்வாறே, மொழிகள் சிதையாமல் நேரிதின் இயங்குவதற்கு உதவும் கரைகளே இலக்கண நூல்கள்.

மொழிகள் சிதையாமல்-அழியாமல் வளர்வதற்குத் துணைபுரியும் காத்தல் கடவுளே இலக்கண நூல்கள்.

மொழிகளைத் தாறுமாறாகப் பயன்படுத்தாமல் இப்படி இப்படித்தான் கையாண்டு பயன்பெற வேண்டும் என்னும் சட்ட விதிகளை வகுத்துத் தந்துள்ள மொழிச் சட்ட நூல்களே இலக்கண நூல்களாகும்.

‘தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைநிற்கும் இத்தகைய இலக்கண நூல்கள் பலவற்றை இலக்கண ஆசிரியர்கள் பலர் தத்தம் கொடையாக அளித்துப் போந்துள்ளனர். விரிவஞ்சி, இலக்கண நூல்களின் பெயர் களையும் அவற்றின் ஆசிரியர் பெயர்களையும் மட்டும் ஒரளவு இங்கே காணலாம்.

“நீண்ட தமிழால் உலகை கேமியின் அளந்தான்”

எனவும், "என்றும் உள தென்தமிழ் இயம்பி இசை கொண்டான் எனவும் கம்பரால் போற்றிப் பாராட்டப் பெற்றுள்ள அகத்தியர் இயற்றிய அகத்தியம் என்னும் நூல், முதல் இலக்கண நூலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முழுநூலும் கிடைக்கவில்லை. இந்நூலின் சில பாக்கள் மட்டும் உரையாசிரியர்களின் உரைகளில் எடுத்தாளப் பட்டுள்ளன. அகத்தியமே முதல் நூலாக இருக்கும் என்று திட்டவட்டமாகச் சொல்வதற்கும் போதிய சான்று இல்லை.

அடுத்து நமக்கு முழுமையாகக் கிடைக்கும் முதல் இலக்கண நூல் தொல்காப்பியமாகும். எழுத்திலக்கணம், சொல் இலக்கணம், பொருள் இலக்கணம், யாப்பிலக் கணம், அணியிலக்கணம் என ஐந்து இலக்கணங்களும் அமைத்து இந்நூலைத் தொல்காப்பியர் இயற்றியுள்ளார். இதற்கு இணையான தமிழ் இலக்கண நூல் இன்றளவும் வேறு கிடையாது. தொல்காப்பியத்தைப் பின்பற்றிப் பின்னர் நூல்கள் பல எழுந்தன.

தொல்காப்பியர் காலத்தவராகக் கருதப்படும் அவிநயனார், காக்கை பாடினியார், செயிற்றியனார், பனம் பாரனார், நத்தத்தனார் முதலியோரும் இலக்கண நூல்கள் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. அவிநயனம், காக்கை பாடினியம், செயிற்றியம் முதலிய நூல்கள் இவர்களுள் சிலரின் படைப்புகளாகும், இந்தக் குறிப்பும், உரையாசிரியர் களின் உரைகளால் அறியப்படுகிறது.

தொல்காப்பியத்திற்குப் பின் பல நூல்கள் தோன்றினும், அதற்கு அடுத்தபடியாக இப்போது பயன்படுத்தப் படுவது, பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் என்னும் நல்ல நூலேயாம். அடுத்து, ஐந்திலக்கணங்களையும் அமைத்தோ அல்லது அவற்றுள் ஒன்றிரண்டைமட்டும் அமைத்தோ இயற்றப்பெற்ற நூல்களின் பெயர்களையும் அவற்றின் ஆசிரியர் பெயர்களையும் பொதுவாகக் காண்பாம்:

இறையனார் இயற்றிய இறையனார் அகப்பொருள் அல்லது இறையனர் களவியல் என்னும் இரு பெயர்களை யுடைய நூலும், நாற்கவிராச நம்பியின் நம்பி அகப் பொருளும், ஐயனாரிதனாரின் புறப்பொருள் வெண்பா மாலையும், பன்னிருவர் இயற்றிய பன்னிரு படலமும், அமித சாகரர் இயற்றிய யாப்பருங்கலம் - யாப்பருங்கலக் காரிகை என்னும் நூல்களும், தண்டி ஆசிரியரின் தண்டி அலங்காரமும், திருக்குருகைப் பெருமாள் கவிராயரின் மாறனலங்காரமும், விசாகப் பெருமாள் ஐயரின் ஐந்திலக்கண நூலும் அணியிலக்கண நூலும், புத்தமித்திரரின் வீரசோழியமும், வைத்தியநாத தேசிகரின் இலக்கண விளக்கமும், சிவஞான முனிவரின் இலக்கண விளக்கச் சூறாவளியும், முத்துவீரநாவலரின் முத்து வீரியமும், வீரமாமுனிவரின் தொன்னுரல் விளக்கமும், வீரமாமுனிவர் இலத்தீன் மொழியில் எழுதிய கொடுந்தமிழ் இலக்கணம் - செந்தமிழ் இலக்கணச் சுருக்கம் - செந்தமிழ் இலக்கணத் திறவுகோல் என்னும் நூல்களும், குணவீர பண்டிதரின் சின்னூல் என்னும் நேமிநாதமும், ஈசான தேசிகரின் இலக்கணக் கொத்தும், சுப்பிரமணிய தீட்சதரின் பிரயோக விவேகமும், பாம்பன் சுவாமிகளின் பல் சந்தப் பரிமளம் - வண்ண இயல் என்னும் நூல்களும், குமரகுருபரரின் சிதம்பர செய்யுட்கோவையும், பொய்கையார் - பரணர் முதலிய பன்னிருவர் எழுதிய பன்னிரு பாட்டியலும், மாமூலரின் மாமூலர் பாட்டியலும், நேமிநாதரின் வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியலும், நவநீத நடர் என்னும் அரிபத்தரின் நவநீதப் பாட்டியலும், பரஞ்சோதியாரின் சிதம்பரப் பாட்டியலும், சம்பந்தரின் சம்பந்தப் பாட்டியல் என்னும் வரையறுத்த பாட்டியலும், விருத்தப் பாவியல் முதலிய பிற்காலத்தார் இயற்றிய இன்னும் பல நூல்களும், தமிழ் வளர்ச்சிக்கு இலக்கணப் புலவர்கள் அளித்த அறிவுக் கொடைகளாகும்.

மேலும் பிற்காலத்தில் உரைநடையில் பல்வேறு தமிழ் அறிஞர்கள் எழுதியுள்ள இலக்கண நூல்களும் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிகின்றன. அவற்றுள், ஆறுமுகநாவலர் எழுதிய இலக்கணச் சுருக்கம் என்னும் நூல் குறிப்பிடத்தக்கது.

இலக்கணத்தின் நன்மை

இலக்கணத்தின் நன்மையை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவோமாயின், இலக்கணப் புலவர்கள் கொடை கொடுத்த நூல்களின் சிறப்பு விளங்கும்.

பெரும்பாலோர் தமிழைப் பிழையாகவே எழுதுகின் றனர். கடிதம், விளம்பரத் தாள், பெயர்ப் பலகை, குறிப்பிட்ட சில வெளியீடுகள் முதலியவற்றில் பிழைகள் மலிந்திருக்கக் காணலாம். இதற்குக் காரணம் இலக்கண அறிவு இன்மையே. இலக்கண விதி தெரியாமல் போனால் குறைவு என்ன? சிறு பிழையுடன் எழுதினால்தான் என்ன? ஏறக்குறையக் கருத்தைத் தெரிவித்தால் போதாதா? - என்ற வினாக்கள் எழலாம் - எழுகின்றன.

உலகில் எந்த மொழியினையும் பிழைபடப் பேசுவ தாலும் எழுதுவதாலும் உண்டாகும் கேடு சொல்லும் தரத்ததன்று. காட்டாக நம் தென்னிந்திய மொழிகளையே எடுத்துக் கொள்வோம்.

சில ஆயிரம் ஆண்டுகட்கு முன் தென்னிந்தியாவில் ஏதோ ஒரு மொழியே பேசப்பட்டிருக்கலாம். ஒரு மொழியைப் பேசிய மக்களே, ஒரு மூலைக்கு ஒரு மூலை அம்மொழியினைப் பலவிதமாக இழுத்தும், விழுங்கியும், நீட்டியும், குறுக்கியும், மாற்றியும், திருத்தியும் பேசி வந்தனர். இதனால் ஒரே மொழி பலவகை மாறுபாடு அடைய இடமுண்டல்லவா?

அது மட்டுமன்று; ஆங்காங்கு வந்து குடியேறிக் கூடி வாழ்ந்த பிற மொழியாளர்களின் வீதத்திற்கு ஏற்ப, கூடுதல் குறைச்சலாக, மூலைக்கு மூலை பிறமொழிக் கலப்பு ஏற்பட்டதாலும், ஒரே மொழி பல மாறுபாடு அடைய நேரிட்டது.

இங்கனம் நாளடைவில் ஒரு மொழியினர்க்குள்ளேயே, இம் மூலையில் வாழ்ந்தவர் பேசியது ஒரு விதமாகவும் அம் மூலையில் வாழ்ந்தவர் பேசியது வேறு விதமாகவும் இருந்ததால், இது ஒரு மொழியாகவும், அது வேறொரு மொழி போலவும் தோன்ற இடமுண்டாயிற்று.

இந்நிலையில், சூழ்நிலையின் காரணமாக, அவ்வொரு மொழி மக்களுக்குள்ளேயே மேலும் பல பிரிவினைகள் ஏற்பட்டுவிட, அவ்வவர் பேசிய பேச்சுகள் வெவ்வேறு பெயர்களுடன் வெவ்வேறு மொழிகளாகப் பிரிந்து விட்டன.

இவ்விதம் பிரிந்தவைகளே தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்னும் மொழிகள் எனலாம். இவற்றுள் ஒவ்வொன்றும் வடமொழிக் கலப்பின் விகிதத்தால் மாறுபடும். இவற்றுள் மிகவும் குறைந்த கலப்புடையது தமிழ்தான். கலக்காமலேயே எழுதவும் பேசவும் வேண்டிய சொற்கள் தமிழிலேயே உள்ளன. மற்ற மொழிகள் தம்மிடம் உள்ள வடமொழிச் சொற்களை நீக்கிக் கொள்ளு . மாயின், மீண்டும் ஒன்றுபட்ட மொழிகளாகத் தோன்றலாம். இக்கருத்தை மெய்ப்பிப்பதற்காக, நான்கிலும் ஒத்துள்ள சில சொற்கள் கீழே தரப்படுகின்றன. ஊன்றி நோக்கின் உண்மை புலனாகும்:

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம்
கால்(எண்) கால் கால் கால்
அரை(அரெ) அர அரெ அர
முக்கால் முக்க முக்கா முக்கால்
ஒன்று ஒக்கட்டி ஒந்து ஒந்து
இரண்டு ரெண்டு ரெடு ரண்டு
மூன்று மூடு முரு மூந்நு
நாலு-நான்கு நாலுகு நால்கு நாலு
அஞ்சு, ஐந்து ஜது ஐது அஞ்சு
ஆறு ஆரு ஆரு ஆறு
எட்டு எனிமிதி என்டு எட்டு
ஒன்பது தொம்மிதி ஒம்பத்து ஒன்பது
பத்து பதி ஹத்து பத்து
அண்ணன் அன்ன அண்ணா -
தம்பி தம்புடு தம்ம -
தாத்தா தாத தாத மூப்பன்
அது இது எது இதி இதி எதி அது இது எது அது இது எது
சிறிய-சின்ன சின்ன சிக்க சிறிய
நெருப்பு-தீ நிப்பு (பெங்கி) தீ
மழை-வான் வானெ மளெ மழ
கொடு-ஈ ஈய் கொடு கொடு
பகல் பகலு அகலு பகல்
யார்=எவர் எவரு யாரு யாரானு
ஊர் ஊரு ஊரு ஊரி
சோறு-ஊண் (அன்ன) ஊண்ட ஊணு
கண் கன்னு கண்ணு கண்ணு
மூக்கு முக்கு மூங்கி மூக்கி
காது-செவி செவ்வு கிமி செவி
வாய் (நோரு) பாயி வாயி
தலை தல தலெ தல
எருது-காளை எத்து எத்து காள

எந்த எந்த எழுத்துகள் இணைந்து வரும் என்ற மயக்க விதி அறிந்து எழுத வேண்டும். பயிற்ச்சி, சால்ப்பு என எழுதலாகாது. ற் என்பதன் பக்கத்திலும் 'ல்' என்பதன் பக்கத்திலும் மற்றொரு மெய்யெழுத்து மயங்கி வராது. இது போல் பல உள.

க், ச் முதலிய எழுத்துகள் தமிழில் ஒரு சொல்லுக்கு முதலிலும் வரமாட்டா-இறுதியிலும் வரமாட்டா. மொழிக்கு முதலிலும் இறுதியிலும் வராத எழுத்துக்களை அறிந்து அதற்கேற்ப எழுத வேண்டும். இந்த விவரங்களை இலக்கண நூல்கள் தெரிவித்துள்ளன.

தமிழ் இலக்கண நூல்களில் வடமொழியாக்கமும் சொல்லப்பட்டுள்ளது. கம்பர் இராமாயண நூல்முழுவதிலும் வடமொழிப் பெயர்களையெல்லாம் தமிழ் உ ரு வ ம் கொடுத்தே எழுதி உள்ளார். விபீஷணன் வீடணன் ஆக்கப் பட்டான். இப்படிப் பல. நாமும் இந்த விதியைப் பின்பற்ற வேண்டும். .

யாப்பிலக்கண நூல்கள் செய்யுள் இயற்றும் விதிமுறை கள்ைக் கூறியுள்ளன. அம்முறையில் செய்யுள் இயற்றலாம். புதுக்கவிதை எழுதுவோர் எழுதுவாராக.

அணியிலக்கண நூல்கள், செய்யுளில் உவமை, உருவகம் முதலிய அணிகள் வந்து, கருத்தைப் புரிந்துகொள்ளச் செய்வதோடு நயம் தந்து சுவைக்கவும் செய்கின்றன. உரை நடையிலும் இந்த அணிகளைப் பயன்படுத்தலாம்.

இதுகாறும் இயல் தமிழ் வளர்ச்சி பற்றிப் பேசப் பட்டது. இயல் தமிழை அடுத்து இசைத் தமிழும் சுத்துத் தமிழும் உள்ளன. தமிழ் முத்தமிழ் எனப்படும் அல்லவா?

பண்டு இசைத் தமிழ் இலக்கண நூல்களும் கூத்துத் தமிழ் இலக்கண நூல்களும் தமிழில் இருந்தன. பெரும் பாலும் அவை இப்போது மறைந்து விட்டன. இசை மரபு என்ற நூலை மறப்பதற்கில்லை. தொல்காப்பியம் - நூல் மரபு என்னும் இயலில் உள்ள —-

“அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடிலும்
உளவென மொழிய இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்” (33)

என்னும் நூற்பாவில் உள்ள இசையொடு சிவணிய நரம்பின் மறை என்னும் பகுதி தமிழில் இசை இலக்கண நூல்கள் நிரம்ப இருந்தன என்பதற்குச் சான்றாகும். என்று அறிஞர்கள் சொல்லுவார்கள் என்னும் பொருளில் ‘என்மனார் புலவர் என்று கூறியிருப்பதைக் கொண்டு, முன்பிருந்த பல இசை நூல்களை உள்ளத்தில் கொண்டு கூறியுள்ளார் என்பது புலனாகும். மற்றும் அவர், அகத் திணை இயலில் —

“நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்”

என்று கூறியிருப்பதிலிருந்து, அந்தக் காலத்திலேயே தமிழில் நாடக இலக்கண நூல்கள் - அதாவது - கூத்துத் தமிழ் இலக்கண நூல்கள் நிரம்ப இருந்தன என்பதை அறியலாம்.

இது காறும் கூறியவற்றால், முத்தமிழ் வளர்ச்சிக்கும் இலக்கணப் புலவர்கள் கொடுத்துள்ள கொடைமிகுதி என்பது தெள்ளிதின் புலனாகும்.