மனத்தின் தோற்றம்/குற்றாலத்திற்கு ஒரு குறவஞ்சி

7. குற்றாலத்திற்கு ஒரு குறவஞ்சி



“குற்றாலக் குறவஞ்சி” என்னும் பெயரைக் கேட்கும் போதே குளிருகின்றது மனம். ஏன்? தன்னிடம் உள்ள நீர் வீழ்ச்சியால், தன்னை உலகத்தாருக்கு விளம்பரம் செய்து கொண்டிருக்கும் குற்றால மலையின் குளிர்ச்சியினை விரும்பாதவர் எவர்? உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறவஞ்சி நாடகத்தைக் கொள்ளாதவர் எவர்?

தென்பாண்டி நாட்டாராகிய திரிகூடராசப்பக் கவி ராயர் எழுதிய நாடகமே குற்றாலக் குறவஞ்சியாகும். குற்றாலத்திலமர்ந்து கூத்தாடும் சிவனைத் தலைவனாகக் கொண்ட தலைவிக்குக் குறத்தி குறி சொல்லுவதைப் பற்றியது ஆகையாலும், குறவன் - குறத்தியின் காதலை ஒவியப்படுத்துவது ஆகையாலும், இந்நாடக நூலுக்குக் 'குற்றாலக் குறவஞ்சி” என்னும் பெயர் கொடுக்கப் பட்டது. படிக்கப் படிக்கச் சுவைதருகின்ற இந்நூலுள், பழந்தமிழக் குடிகளின் பண்புகள் பல பகரப்பட்டிருப்பது உள்ளத்திற்கு மகிழ்ச்சி தருகின்றது. இனி நயம் மிகுந்த இந் நாடகத்துள் புகுவோம் நாம்.

குற்றாலத்துச் சிவன் தெருவில் உலா வந்து கொண் டிருக்கின்றார். அவரைக் காணக் கன்னியர் பலர் கடிதின் ஒடுகின்றனர். ஒரு பெண் ஒரு கையில் வளையல் போட்டுக்கொண்டிருந்தாள். இச் செய்தி தெரிந்ததும் மற்றொரு கைக்கு வளையல் போடுவதையும் மறந்து ஒடுகின்றாள். இன்னொரு பெண் ஆடையணிகளை இடம் மாற்றி அணிந்துகொண்டு இரைக்க இரைக்க ஓடுகின்றாள். மற்றொரு பெண் ஒரு கண்ணுக்கு மையிட்டுக்கொண்டு, மற்றொரு கண்ணுக்கு அங்கே போய் மையிட்டுக் கொள்ளலாம் என்று கையில் எடுத்துக்கொண்டு கடிய ஒடு கின்றாள். கூத்தலும் வளையலும் சோர்ந்த வேறொருத்தி, சடைதாங்கிய சிவனை நோக்கி,

“மைவளையும் குழல்சோரக்
கைவளை கொண்டான் இது என்ன
மாயமோ சடைதரித்த ஞாயமோ”

என்கின்றாள்.

இப் பெண்களை எல்லாம் அங்குள்ளார் பார்த்து நகைக்கின்றார்கள். என்ன செய்வது? ஆவலுக்கு அடிமைப் பட்டு விட்டால் இந்நிலைதானே!

இந்நிலையில், பந்தாடிக்கொண்டிருந்த வசந்த வல்லி என்னும் தலைவியும் ஓடினாள். அங்கே தோழிமார்களின் நிலையே இப்படி என்றால் தலைவியைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? அவ்வளவுதான்! எதிர்பார்த்திருந்த அந்தக் குற்றால நாதருடன் கூட்டியனுப்பிவிட்டாள் தன் உள்ளத்தை உள்ளம் அவள்பால் இல்லாததால் உணவிழந்தாள், உடை சோர்ந்தாள், உறக்கம் விட்டாள். உரை தடுமாறுகின்றது. சுருங்கக் கூறின் அவள் உடம்பைச் சுட்டெரிக்கின்றது காமத் தீ.

அவ்வெப்பத்தைப் போக்க எண்ணிய தோழிகள், வசந்தவல்லியை மேல்மாடியில் நிலா முற்றத்திற்குக் கொண்டு போனார்கள். வாழைக் குருத்தில் கிடத்தினார்கள். மேலே குளிர்ந்த மலர்களைக் கொட்டினார்கள். சந்தனக் குழம்பைப் பூசினார்கள். வெட்டிவேர் விசிறி கொண்டு விசிறினார்கள், இன்புக் கதைகள் பல எடுத்துரைத்தார்கள். ஆனால், கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டதைப்போல் குளிர்ச்சிக்காகச் செய்த முயற்சிகளெல்லாம் தவிடுபொடியாயின. ஒரே வெப்பம்! ஒரே வெப்பம்! சந்தனக் குழம்பு கொதிக்கின்றது. மலர்கள் கருகின. முத்துமாலைகள் பொரிந்தன. வெட்டிவேர் விசிறி வீசுகின்றது அனலை. வாழைக் குருத்து இருக்குமிடமே தெரியவில்லை. என்ன செய்வாள், ஐயோ! போதாக்குறைக்கு அந்தப் பொல்லாத நிலவோனும் (சந்திரனும்) பொசுக்குகின்றான். எல்லார்க்கும். இன்பம் தரும் நிலாக்காரன் வசந்தவல்லிக்கு மட்டும் வெப்பம் வீசுபவனாக வெளிப்படுகிறான். அந்தோ! இது. தான் காமத்தியின் இயற்கைபோலும்!

வெப்பம் தாங்கமுடியாத வசந்தவல்லி அந்த வெண்ணிலாவை நோக்கி வெந்து விளம்பத்தொடங்கு கின்றாள். "ஏ நிலவே கண்ணிலிருந்து நெருப்பைக் கக்கும் அந்தச் சிவன் முடியில் சேர்ந்து சேர்ந்து, நீயும் நெருப்பை வீசக் கற்றுக்கொண்டாயோ? தண்ணிய - குளிர்ந்த அமிழ்தமும் நிலவும் திருமகளும் திருப்பாற்கடலி லிருந்து தோன்றியதாகப் புராணங்கள் புகலுகின்றனவே! தண்ணிய அமிழ்தத்தொடு நீயும் பிறந்தாய் என்றால் நீ மட்டும் ஏன் அந்தத் தண்மையை மறந்தாய்? பெண்ணோடு பிறந்தவர்களுக்குப் பெண்டிர்மேல் இரக்கம் இருக்கும் என்று சொல்வார்களே! திருமகளோடு பிறந்த நீ மட்டும் ஒரு பெண்ணாகிய என் மேல் ஏன் இரக்கம் கொள்ளாமல் வெப்பத்தை வீசுகின்றாய்? அப்படி என்றால் அவையெல்லாம் புராணங்கள் புளுகிய பொய்தானோ?” என்று புலம்பு கின்றாள் வல்லி. இதனைப் பாடல் வடிவில் பார்ப்போம்.

“தண்ணமு துடன்பிறந்தாய் வெண்ணிலாவே - அந்தத்
தண்ணளியை ஏன் மறந்தாய் வெண்ணிலாவே
பெண்ணுடன் பிறந்ததுண்டே வெண்ணிலாவே - என்றன்
பெண்மை கண்டும் காயலாமோ வெண்ணிலாவுே.”

மேலும் அவள் மொழிகின்றாள்: “ஓகோ மதியமே! இப்போது புரிந்துகொண்டேன் நீ என்னை எரிப்பதற்கு என்ன காரணம் என்பதை! இதோ பார்! இது என்னுடைய கூந்தல். கறுத்துச் சுருண்டு வளைந்து நெளிந்து காணப்படுகின்றது. இதோ என்னுடைய பின்னல் சடை நீ இந்தச் சடையைப் பார்த்ததும் கிரகண காலத்தில் உன்னைப் பிடிக்கின்ற நாகப் பாம்பின் நடு உடல் என்றும், தலையைப் பார்த்ததும் பாம்பு படமெடுத்து நிற்கின்றது என்றும் எண்ணிக்கொண்டாய் போலும். உன் எதிரியாகிய பாம்பை நான் வைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற காரணத்தால் என்னை எரிக்கின்றாயா? அல்லது, வசந்தவல்லியின் முகமதியை அந்தப் பாம்பு விழுங்கப் பார்க்கின்றது; ஆதலின் அந்தப் பாம்பை இப்போதே சுட்டெரித்து விடவேண்டும் என்றெண்ணி அந்தப் பாம்பைச் சுடுகின்றாயா? ஐயோ, ஒன்றும் புரியவில்லையே! இது பாம்பன்று பின்னல் சடை! இனிமேலாயினும் எரிப்பதை நிறுத்து இந்த மோகினி தன்னுடைய மோகன் வரவில்லையே என்று வருந்து கின்றாள். உனக்கு ஏன் இந்த வேகம் வெண்ணிலாவே!”

“மோகன் வரக் காணேன் என்றால்
வெண்ணிலாவே - இந்த
வேகம் உனக் கானதென்ன
வெண்ணிலாவே
நாகம் என்றே எண்ணவேண்டாம்
வெண்ணிலாவே - இது
வாகு குழல் பின்னல் கண்டாய்
வெண்ணிலாவே...”

‘அது இருக்கட்டும் - பேடியைப்போல ஒரு பெண்ணின் மேல் வந்து காய்கின்றாயே! இதுதானா சூரத்தனம்? வெட்கத்துடன் வீரமும் இருக்குமானால் அந்தச் சிவன் முன்பு சென்று காயக்கூடாதா?” என்று வருந்திப் பேசினாள் வசந்தவல்லி.

பின்னர் அவள் மன்மதனை விளித்து, “ஏ மன்மதா! அந்தப் பாவி நிலா காய்கிறது போதாதென்று இந்தத் தென்றல் காற்று என்னும் புலியும் பாய்கிறது. ஒன்றுக்கு இரண்டு உபத்திரவத்துக்கு மூன்று என்ற முறையில், பற்றாக்குறைக்கு நீயும் ஏன் என்னை இவ்வாறு கொல்லாது கொல்கிறாய்? உன் கைவரிசையை அந்தக் குற்றால நாதரிடம் போய்க் காண்பி பார்க்கலாம்! ஏன்? அவர் நெற்றிக் கண்ணால் சுட்டெரித்து விடுவார் என்று அஞ்சுகின்றாயா? ஒரு பெண்ணிடம் போர்தொடுக்கும் நீயும் ஒர் ஆண் மகனா? பேடியே போதாய்!” என்று ஏசிப் பேசினாள்.

தலைவியின் துன்பத்தைக் கண்ட தோழி ஆறுதல் பல சொன்னாள். சொல்லியும் தேறுதல் உண்டாகவில்லை. பின்பு தோழியை நோக்கிச் சிவன் திருமுன்பு தூது சென்று வா என்று சொன்னாள் வல்லி.

“ஐயோ! நான் எப்படி அவர் முன்பு துது செல்வேன். அவர் என்னைப் பற்றி என்ன எண்ணிக் கொள்வாரோ” என்று வெட்கப்பட்டாள் தோழி.

அதற்கு வசந்தவல்லி, தூது சென்றால் சிவன் ஒன்றும் எண்ணிக்கொள்ள மாட்டார். அது அவருக்கு வழக்கமான வாடிக்கை, அவரிடம் துது அனுப்புவோர் மிகப் பலர். அவ்வளவு ஏன்? அவரே சுந்தரருக்காகப் பரவை நாச்சியாரிடம் ஒருமுறைக்கு இருமுறையாகத் தூது சென்றுள்ளாரே! ஆகையால் அவரைப் பொறுத்தமட்டில் வெட்கமே வேண்டியதில்லை” என்று கூறினாள்.

‘அப்படி என்றால் நான் என்ன சொல்லவேண்டும்’ என்று கேட்டாள் தோழி. என்ன சொல்லவேண்டுமா? என் நிலைமையை எல்லாம் அறிவித்து,

“வந்தால் இந்நேரம் வரச்சொல்லு வராதிருந்தால்
மாலையாகிலும் தரச்சொல்லு.”

என்று கூறி அனுப்பினாள் தலைவி. பின்பு குற்றாலநாதர் தன்னுடன் கூடுவாரோ? மாட்டாரோ? என்று குறியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்த நேரத்தில் ‘குறி கேட்கலையோ குறி குறி’ - ‘குறி கேட்கலையோ குறி குறி’ என்று கூவிக்கொண்டு குறப்பெண் ஒருத்தி குறுகினாள் அங்கே, அவள் இடையில் ஒரு குலுக்கும், நடையில் ஒரு தளுக்கும் விழியில் ஒரு சிமிட்டும், மொழியில் ஒரு பகட்டுமாய்க் காணப்பட்டாள். கையில் குறிசொல்லும் கோல்; கழுத்தில் பச்சை மணிபவளமணி, கருங்கூந்தலில் செச்சை மலர்; நெற்றியில் நீலநிறப் பொட்டு, இடுப்பில் கூடை - இவைகளின் தொகுப்பே அக்குறப்பெண்.

குறி சொல்வதாகக் குறத்தி கூவியதைக்கேட்ட வசந்தவல்லி, குற்றாலநாதரே கிடைத்துவிட்டதாக எண்ணி ஒடோடியும் வந்து உள்ளே அழைத்துக் கொண்டு சென்றாள். சென்றதும் குறத்தியை நோக்கி, "ஏ குறவஞ்சியே! உன் சொந்த மலை எந்த மலை? அந்த மலையின் வளத்தை அறிவிக்கக் கூடாதா” என்று ஆவலுடன் கேட்டாள். உடனே தொடங்கிவிட்டாள். குறப்பெண். "ஒ அம்மே! எங்கள் மலையின் வளப்பத்தைச் சொல்லுகிறேன் கேள்! எங்கள் மலையில்,

“வாணரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்”.

எங்கள் மலையிலே ஆண்குரங்குகள் பெண் குரங்கு களுக்குத் தாமாய்ப் பழங்கொடுத்துக் கொஞ்சும். பெண் குரங்குகள் சிந்துகின்ற பழங்களுக்கு ஆண் குரங்குகள் கையேந்திநிற்கும். ஊம் தெரிகிறதா?” என்றாள் குறவஞ்சி. இப்பாட்டில் ஆழம் மிகவும் உண்டு. என்ன அது?

இதைக்கேட்ட வசந்தவல்லி, ஆகா! விலங்காகிய பெண்குரங்கு செய்த நற்பேறுகூட நான் செய்யவில்லையே. பெண்துரங்கினிடம் ஆண்குரங்கு தானாகவே சென்று கொஞ்சுகிறதாமே கெஞ்சுகிறதாமே! நானாக விரும்பியும், குற்றாலநாதர் என்னை வந்து கூட மாட்டேன் என்கிறாரே! என்று ஏங்கும்படியாக, அவளைக் குத்திக்காட்டுவதுபோல இருக்கின்றதல்லவா இந்தப் பாட்டு?

மேலும் குறவஞ்சி கூறுகின்றாள்:

“கிழங்கு கிள்ளித் தேன் எடுத்து வளம்பாடி நடிப்போம்
கிம்புரியின் கொம்பொடித்து வெம்புதினை இடிப்போம்
செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப் பந்தடிக்கும்
தேனலர் சண்பகவாசம் வானுலகில் வெடிக்கும்”

தெரியுதா அம்மே!

வல்லி: ஊம் தெரிகிறது தெரிகிறது. சரி உன் மலையின் வளப்பத்தைப் பாடுகின்றாயே, அம்மலையின் பெயரைச் சொல்லமாட்டேன் என்கிறாயே!

குறத்தி: ஓகோ மலையின் பெயரா? இதோ சொல்லு கிறேன் அம்மே!

“கூணல்இளம் பிறைமுடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே”

எங்கள் மலை குற்றாலநாதர் எழுந்தருளியுள்ள திரிகூட மலை அம்மே என்று கூறினாள்.

ஒகோ அப்படியா என்று பெருமூச்சு விடுகிறாள் வல்லி, அல்வாவின்மேல் ஆவல் கொண்டிருக்கும் சிறுவனிடம், அல்வாவைப் பற்றியும், அது இருக்கும் இடத்தைப் பற்றியும் சொன்னால் எப்படி இருக்கும்? துடிக்காதா மனம்? அதே நிலைதான் இப்போது வசந்தவல்லிக்கும். “சரி உன் இருப்பிடம் குற்றாலமலை என்று கூறினாய். உன் சொந்தக்காரர் இருக்கும் மலைகள் எவை எவை என்று எடுத்துச்சொல் பார்ப்போம்” என்றாள் வல்லி.

பின் குறவஞ்சி தன் சொந்தக்காரர்களின் மலைகளை யெல்லாம் சொல்லத் தொடங்கிவிட்டாள்.

குற கேள் அம்மே சொல்கிறேன் - எனக்கு இளைய செல்லி மலை எது தெரியுமா?

“கொல்லிமலை எனக்கிளைய செல்லிமலை அம்மே”
வல்லி, அப்படியா! உன் கணவன் மலை?
குற: “கொமுகனுக்குக் காணிமலை பழகிமலைஅம்மே”
வல்வி: உன் தந்தை மலை? தமையன் மலை?
குற: எல்லுலவும் விந்தைமலை எங்தைமலை அம்மே!
இமயமலை என்னுடைய தமையன்மலைஅம்மே."
குற: எம் மாமி மலையும் தோழிமலையும் கேள்!
“சொல்லரிய சாமிமலை மாமிமலை அம்மே!
தோழிமலை நாஞ்சில்காட்டு வேள்விமலை அம்மே!”
வல்லி: ஓ அப்படியா உங்கள் கொள்வனை கொடுப் பனை எப்படி?
குற: கேளம்மே!
“ஒருகுலத்தில் பெண்கள் கொடோம் ஒரு குலத்தில் கொள்ளோம்
உறவுபிடித் தாலும்விடோம் குறவர்குலம் நாங்கள்”
வல்லி: அப்படியென்றால் உங்கள் மருவினருள் (சம்பந்தி களுள்) ஒருவரைக் கூறு கேட்போம்.
குற: “அருளிலஞ்சி வேலர் தமக்கு ஒரு பெண்ணைக் கொடுத்தோம்
ஆதீனத்து மலைகள் எல்லாம் சீதனமாக் கொடுத்தோம்”

முருகனுக்கு எங்கள் வள்ளியை மணஞ்செய்வித்து, எங்களைச் சேர்ந்த மலைகளெல்லாம் சீர் வரிசையாகக் கொடுத்துவிட்டோம். எப்படி எங்கள் குலப்பெருமை! என்று விளாசு விளாசு என்று விளாசுகின்றாள் குறவஞ்சி.

இங்குக் கூர்ந்து நோக்கவேண்டியது ஒன்றுண்டு. அஃதென்ன! தமிழ்நாட்டுக் குறப்பெண் ஒருத்தி இமய மலைமுதல் நாஞ்சில் நாட்டு வேள்விமலை வரையும் உள்ள பகுதிகளை எல்லாம், தங்களுடையதாகவும், தங்களைச் சேர்ந்தவர்களுடையதாகவும் காட்டியிருக்கும் தொடர்பு, எண்ணத்தைக் கிளறுகின்றதல்லவா? மற்றும் 'முருகனுக்கு உரியது மலை உலகம்’ என்னும் கருத்தில் உள்ள "சேயோன் மேய மைவரை உலகம்” என்னும் தொல்காப்பிய நூற்பா விற்கு ஏற்ப, குறப் பெண்ணாகிய வள்ளியை மணந்த முருகனுக்குச் சீர்வரிசையாக மலைகளையெல்லாம் கொடுத்துவிட்டதாகக் கூறியுள்ள குறத்தியின் கூற்று, கொள்ளை கொள்ளுகின்றதல்லவா உள்ளத்தை!

பின்பு வல்லி குறவஞ்சியை நோக்கி, ‘மலைவளங் கூறினாய்-நாட்டு வளத்தையும் கூறுக’ என்றாள். தொடங்கிவிட்டாள் குறத்தி:

“மாதம் மூன்று மழையுள்ள நாடு
வருடம் மூன்று விளைவுள்ள நாடு”

இன்னும் கேள். அந்நாட்டில்,

“நீங்கக் காண்பது சேர்ந்தவர் பாவம்
நெருங்கக் காண்பது கன்னலில் செந்நெல்
தூங்கக் காண்பது மாம்பழக் கொத்து
சுழலக் காண்பது தீந்தயிர் மத்து
ஒடக்காண்பது பூம்புனல் வெள்ளம்
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்
போடக்காண்பது பூமியில் வித்து
புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து”

தெரியுமா அம்மே என்றாள்.

ஒர் ஆண்டுக்கும் மூன்று மழை காணமுடியாத நமக்குத் திங்கள் மூன்றுமழை பெய்ததாக ஏட்டிலாயினும் கண்டு இன்புறும் வாய்ப்புக் கிடைத்ததே இந்நாடகத்தால்!

இந்த விதமாகக் குறவஞ்சி மலைவளம், நாட்டுவளம், ஊர்வளம் கூறிக் குற்றாலநாதரின் சிறப்பையும் சிறிது செப்பினாள். கேட்டுப் பதைபதைக்கும் வசந்தவல்லி, "ஏ நங்காய்! நீ நன்றாகக் குறி சொல்லுவாயா' என்றாள். உடனே குறவஞ்சி ஒ அம்மே! பாரம்மே! மதுரையில் மீனாட்சியின் மணத்திற்குக் குறி சொல்லியவர்களும்.எங்கள் குலத்தார்களே! நானும் அப்படித்தான்!

“வஞ்சி மலைநாடு கொச்சி கொங்கு
மக்க மராடங் துலுக்கான மெச்சி
செஞ்சி வடகாசி நீளம் சீனம்
சிங்களம் ஈழம் கொழும்பு வங்காளம்
தஞ்சை சிராப்பள்ளிக் கோட்டை தமிழ்ச்
சங்க மதுரைதென் மங்கலப் பேட்டை
மிஞ்சு குறி சொல்லிப் பேராய்த் திசை
வென்றுநான் பெற்ற..விருதுகள், பாராய்”

என்று தன் சுற்றுப்பயணத்தையும், குறி சொல்லித் தான் பெற்ற வெற்றி விருதுகளையும் வெளிப்படுத்தினாள்.

சுற்றுப் பயணத்தால் அறிவு வளர்ச்சியும் ஆற்றலும் உண்டாகும் என்பதற்கு இக்குறப்பெண் சான்று என்பதை எவரும் மறந்துவிட முடியாது. ‘பல ஊர்த் தண்ணிர் குடித்தவர்’ என்பது முதுமொழியாயிற்றே. பின்பு வல்லி தன் உள்ளக்கருத்தைக் குறியின் வாயிலாக விள்ளச் சொன்னாள். குறவஞ்சியோ வழக்கப்படி முதலில்,

“என்ன குறி யாகிலுகான் சொல்லுவே னம்மே சதுர்
ஏறுவே னெதிர்த்தபேரை வெல்லுவே னம்மே
மன்னவர்கள் மெச்சுகுற வஞ்சிநானம்மே யென்றன்
வயிற்றுக்கித் தனைபோதுங் கஞ்சிவாரம்மே
பின்னமின்றிக் கூழெனினுங் கொண்டுவா அம்மே வந்தால்
பெரிய குடுக்கை முட்ட மண்டுவேனம்மே
தின்னஇலை யும்பிளவு மள்ளித்தா அம்மே கப்பற்
சீனச்சரக்குத் துக்கிணி கிள்ளித்தா அம்மே”

என்று கேட்டு உணவும் வெற்றிலைபாக்கு புகையிலையும் வாங்கி உட்கொண்டாள். ஈண்டு கப்பல் சீனச்சரக்கு என்றால் புகையிலை. அன்றைய தமிழனுக்கும் சீனனுக்கும் நடந்த கப்பல் வாணிகப் பெருக்கை நோக்குங்கள். துக்கிணி புகையிலை என்பது உலக வழக்கை ஒட்டி உள்ளதன்றோ?

பின்பு குறத்தி குறி சொல்லத் தொடங்குகின்றாள். “ஏ அம்மே! எல்லா நிமித்தங்களும் (சகுனங்களும்) சரியாய் உள்ளன, ஆந்தையின் அலறலும் நன்று. தும்மலுடன் காகமும் இடம் செல்லுது. மூச்சும் நல்ல பக்கமே செல்லுது. பல்லியும் பல பலென்னப் பகருது. ஆகையாலே உனக்கு நல்ல மாப்பிள்ளை வருவான் அம்மே. அவன் கழுத்திலே கறுப்பு இருக்கும் அம்மே. சரி உன் கையைக் காட்டு.

(வசந்தவல்லி கையைக் காட்டுகிறாள்)

ஒகோ நல்ல கை யம்மே! என்னைப்போன்ற நாலு பேருக்கும் அள்ளிக்கொடுக்கும் கை அம்மே சரி, உதடும் நாக்கும் துடிக்கின்றன. குறி சொல்லுகிறேன் கேள். வல்லி: சொல்லு சொல்லு!

குற: ஒருநாள் தலைவன் தெருவில் வந்தான். பந்தாடிக் கொண்டிருந்த நீ அவனைப் பார்த்து அஞ்சியதாகத் தெரி கின்றது. சரிதானே அம்மா!

வல்லி என்னடி நீ குறி சொல்லுவது? எல்லாவற்றையும் என் வாயிலிருந்தே வரவழைக்கப் பார்க்கின்றாய். அச்சத் தினால் இந்தக் காய்ச்சலும் கிறுகிறுப்பும் வருமா?

குற:- இல்லம்மே உள்ளத்தைச் சொன்னால் சீற்றம் வருமென்று ஒளித்தேன். உங்கள் காய்ச்சல் காமக்காய்ச்சல் அம்மே கிறுகிறுப்பு மோகக் கிறுகிறுப்பு அம்மே! இப்போது சரிதானா?

வல்லி:- என்னடி நான் பிறந்த வடிவமாய் இருக்கிறேன். இந்தக் கன்னியின்மேல் என்னென்னவோ பழி போடுகிறாயே! சரி, நான் ஒருவனைக் காதலித்தது உண்மையானால் அவன் பெயரைச் சொல்லடி.

குற:- பேராம்மே! அவன் பேர் "பெண் சேர வல்லான்” என்பது. அவன் உனக்குக் கட்டாயம் கிடைப்பான். (சிரிக்கிறாள்.)

வல்லி:- என்னடி மதம் உனக்கு இவ்வளவு ஏளனமாகச் சொல்லுகிறாய். நாக்கை அடக்கிப் பேசு.

குற:- இல்லையம்மா! பெண் என்றால் ஸ்திரி, சேர என்றால் கூட, வல்லான் என்றால் நாதன். “பெண் சேர வல்லான்' என்றால் 'திரிகூடநாதன் அதுதான் குற்றால நாதர் பெயர். அவர் உனக்குக் கட்டாயம் கிடைப்பார். உறுதி உறுதி உறுதி. சரிதானா (சிரிக்கிறாள்).

கேட்டாள் வசந்தவல்லி. உண்மை அதுதானே! அப்படியே நாணித் தலை கவிழ்ந்தாள். குறத்திக்குத் தகுந்த பரிசு கொடுத்தனுப்பி, தான் இறைவனுடைய பேரின் பத்தில் ஈடுபடலானாள்.

வசந்தவல்லி ஒருபுறம் ஆறுதலடைய, மற்றொரு புறம் குறத்தியைத் தேடிக்கொண்டு அவள் கணவனாகிய குறவன் ஊர்ஊராய்த் திரிகின்றான். எங்கும்கிடைக்கவில்லை அவள். குறவன் தேடித் தேடிப் பஞ்ச பூத்த கண்ணனாகி, ஆகா ஆகா! அவளை இணைபிரியாதிருப்பதற்கு அவளுடைய ஆடை அணிகள் செய்த நல்வினைகூட நான் செய்ய வில்லையே!” என்று ஏங்குகிறான். அப்போது அவனுடைய தோழனாகிய நூவன் வந்தான். குறத்தியைத் தேடி அழைத்துக் கொண்டு வரும்படியாக நூவனைக் கேட்டுக் கொண்டான். அதற்கு என்ன கைம்மாறு செய்வாய்” என்றான் நூவன். "கைம்மாறா? எனக்குச் சில மந்திரங்கள் தெரியும். அதாவது, கூடியிருப்பவரைப் பிரிக்கும் மந்திரம், பிரிந்திருப்பவரைக் கூட்டும் மந்திரம், கண்கட்டி வித்தை முதலியனவும் கற்றுத் தருவேன்' என்றான் குறவன். அதற்கு நூவன், பலே கெட்டிக்காரனப்பா நீ உன்னை ஆற்றில் இருந்து அப்பால் கடத்திவிட்டு விட்டால், பின்பு விண்வெளி யில் பறப்பேன் என்பாய் போலிருக்கிறது. உனக்குத்தான் பிரிந்தவரைக் கூட்டும் மந்திரம் தெரியுமே - பிறகு ஏன் குறத்தியைத் தேடும்படி என்னைக் கெஞ்சுகிறாய்? நீயும் கெட்டாய். உன் மந்திரமும் கெட்டது. மந்திரக்காரர்கள் எல்லோருமே இப்படித்தான்போல் இருக்கிறது” என்று எள்ளி நகையாடினான்.

பின்பு குறச்சிங்கன் ஒன்றும் பதில் பேச முடியாமல் பேந்தப் பேந்த விழித்துத் தான் தனித்துத் தேடலானான். தற்செயலாகக் குறச்சிங்கனும் குறச்சிங்கியும் குற்றாலத்தில் ஒன்று கூடினார்கள் பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ? சிங்கன், சிங்கி என்று பெயரிட்டுக் கொண்டு ஒருவர்க்கொருவர் உரையாடலாயினர். குறச்சிங்கன் குறச்சிங்கியைக் கேட்கின்றான்:

“இத்தனை நாளாக என்னுடன் சொல்லாமல்
எங்கே நடந்தாய் நீ சிங்கி
எங்கே நடந்தாய் நீ சிங்கி”

சிங்கி சொல்லுகின்றாள்:

“கொத்தார் குழலார்க்கு வித்தாரமாகக்
குறிசொல்லப் போனேனடா சிங்கா
குறிசொல்லப் போனேனடா சிங்கா”

சிங்கன். அப்படியா! அது இருக்கட்டும். உன்

“காலுக்கு மேலே பெரிய விரியன்
கடித்துக் கிடப்பானேன் சிங்கி
கடித்துக் கிடப்பானேன் சிங்கி”

சிங்கி; இது விரியன் பாம்பல்ல

“சேலத்து காட்டிற் குறிசொல்லிப் பெற்ற
சிலம்பு கிடக்குதடா சிங்கா
சிலம்பு கிடக்குதடா சிங்கா”

பிறகு சிங்கன் சிங்கியின் இடுப்பைக் காட்டி

“மெல்லிய பூங்தொடை வாழைக்குருத்தை
விரித்து மடித்ததார் சிங்கி
விரித்து மடித்ததார் சிங்கி”

இங்கி; இது வாழைக் குருத்தல்ல—

“நெல்வேலியார் தந்த சல்லாச் சேலை
நெறிபிடித் துடுத்தினேன் சிங்கா
நெறிபிடித் துடுத்தினேன் சிங்கா”

சிங்கன்:- ஒகோ சேலையா? இவ்வளவு பேசுவதற்கு நீ எங்கே கற்றுக் கொண்டாயடி?

சிங்கி; பல ஊர்த் தண்ணீர் குடித்தால் பத்தெட்டும் தெரியும்' என்னும் பழமொழி உனக்குத் தெரியாதா சிங்கா? சரி! நீ இங்கே என்னை எப்படிக் கண்டுபிடித்தாய் சிங்கா?

சிங்கன் குற்றாலநாதரை வேண்டிக் கொண்டேன்; அவர் கூட்டி வைத்தாரடி சிங்கி.

சிங்கி அப்படியென்றால் அவரைக் குறித்து ஆடுவோமே -பள்ளு பாடுவோமே சிங்கா!

சிங்கன்:. ஆடுவது யார்? பாடுவது யார் சிங்கி?

சிங்கி:- நீ இறைவனைப் பற்றி இசையாகப் பாடு. நான் அதற்கேற்ப ஆடுகிறேன் சிங்கா.

சிங்கன் :- நீ ஆடுவதைப் பார்த்தால் எனக்கு நெஞ்சு பொறுக்காதடி சிங்கி.

சிங்கி:- ஏன் சிங்கா? எனக்கு உடம்பு நோகும் என்றா?

சிங்கன் :- இல்லை இல்லை: ஆட ஆட உன்மேல் ஆவல் பிறந்துவிடுமடி சிங்கி.

சிங்கி:- சே! சே! கடவுளைக் குறித்து நீ பாட அதற் கேற்ப நான் ஆடும் போது என்னைக் கடவுளாகவே எண்ண வேண்டும். பொருளறிந்து ஆட்ட பாட்டங்களைச் சுவைக்க வேண்டும். ஆடுபவரையும் பாடுபவரையும் பார்த்துச் சுவைக்கக் கூடாது. தெரிகிறதா? ஊம், பாடு. நான் ஆடுகிறேன்.

கணிர் கணிர் என்று சிங்கன் பாடினான். கலீர் கலீரென்று சிங்கி ஆடினாள். இருவரும் இறைவனின் இணையற்ற பேரின்பத்தில் மூழ்கித் தம்மை மறந்து திளைத்தார்கள்.

வசந்த வல்லியும் குறச்சிங்கனும் குறச்சிங்கியும் சிற்றின்பம் என்னும் கடலில், காதல் என்னும் அந்தக் கரையை அடைந்ததாக அமைந்துள்ள இக்குறவஞ்சி நாடகம் சிறந்த பொருள் பொதிந்ததாகக் காணப்படுகின்றதல்லவா? வெல்லக்கட்டியையே விரும்பும் குழந்தைக்கு, அதனுள் மருந்தை மறைத்து வைத்துக் கொடுப்பதைப் போல, நாடகத்தையும் உலகச் சிற்றின்பத்தையும் விரும்பும் மக்களுக்கு, அவற்றுடன் பேரின்பக் கருத்தையும் கலந்து தருவதே இந்நாடகம் என்றால் மிகையாகாது.

இந்நூலாசிரியர் உலக நிகழ்ச்சிகள் பலவற்றை அமைத்து மிக எளிமையாகவும் இனிமையாகவும் பாமரரும் விரும்பும் படிப் பாடியிருப்பது மிகவும் பாராட்டத் தக்கதாகும். மேலும், பழந்தமிழ்ச் சங்க இலக்கியங்களாகிய அகநானூறு, ஐங்குறுநூறு, நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை முதலிய அகப்பொருள் நூல்களாகிய மலைகளின் உச்சியில் ஏறுவதற்குரிய படிகளுள் இக் குற்றாலக் குறவஞ்சியும் ஒன்று என்று கூறினால் அது குற்றமாகாது.

சுருங்கக் கூற வேண்டுமானால், ஒருவர் பாலைவனத்தின் நடுவில் நின்று கொண்டு இக்குறவஞ்சி நாடகத்தைப் படிப் பாரேயானால், அது அவருக்குப் பாலைவனமாகத் தோன்றாமல் குளிர்ந்த சோலைவனமாகவே தோன்றும்.

அம்மம்மா குற்றாலக் குலவஞ்சி நூலின் இன்பம் எத்துணை சுவை மிக்கது!