மனத்தின் தோற்றம்/திருவயிந்திர புரம்

6. திருவயிந்திரபுரம்




கெடிலக்கரையை ஒட்டியுள்ள ஒரே ஒரு வைணவத் திருப்பதியான திருவயிந்திரபுரம், கடலூர்த் தலைநகரப் பகுதிக்கு மேற்கே 7 கி.மீ. தொலைவில் - கடலூர்த் திருப்பாதிரிப்புலியூருக்கு மேற்கே 5 கி.மீ. தொலைவில், கடலூர் - திருக்கோவிலூர் மாவட்ட நெடும்பாதையில், கெடிலத்தின் கிழக்குக் கரையில் அமைந்திருக்கிறது. ஊரின் வடக்கு எல்லையில் - அணையின் கீழ்பால் நெடும்பாதை ஆற்றைக் கடந்து செல்கிறது. இங்கே ஆற்றில் பாலம் இல்லை. நெடும்பாதையில் பேருந்து வண்டி போக்குவரவு உண்டு. வெள்ளக் காலத்தில் மட்டும் பேருந்து வண்டிகள் இவ்வழியே செல்லாமல் மஞ்சக்குப்பம் வழியாகச் செல்லும், கடலூருக்கும் - திருவயிந்திரபுரத்திற்குமாக உள் நகர்ப் பேருந்து வண்டி (டவுன் பஸ்) போக்கு வரவு உண்டு. புகைவண்டியில் வருபவர்கள், திருப்பாதிரிப்புலியூர்ப் புகை வண்டி நிலையத்தில் இறங்கி மேற்கே 5 கி.மீ. செல்ல வேண்டும். இங்கிருந்து பேருந்து வண்டி வசதியிருப்பதன்றி, மிகுதியாகக் குதிரை வண்டி வசதியும் உண்டு. திருப்பாதிரிப் புலியூர்ப் புகைவண்டி நிலையத்தை விட, அதனையடுத்து மேற்கேயுள்ள வரகால்பட்டுப் புகைவண்டி நிலையம் திருவயிந்திரபுரத்திற்கு மிகவும் அணித்தாகும். இந்த நிலையத்திற்கும் திருவயிந்திரபுரத்திற்கும் இடையே கெடிலம் ஆறு வடக்கும் - கிழக்குமாக வளைந்து செல்கிறது. இந்த நிலையத்திலிருந்து ஒன்று அல்லது ஒன்றரை கி.மீ. தொலைவு தெற்கு நோக்கி நடந்து ஆற்றின் வளைவைக் கடந்து திருவயிந்திர புரத்தை அடையவேண்டும். நடக்க முடியாதவர்கள் திருப்பாதிரிப் புலியூர்ப் புகைவண்டி நிலையத்தில் இறங்கி வண்டி பிடித்துக்கொள்ள வேண்டும். இந்த நிலையம் விழுப்புரம் - கூடலூர்ப் பாதையில் இருக்கிறது.

திருமாணிகுழிப் பக்கத்திலிருந்து கேப்பர் மலைத் தொடர்ச்சியின் அடிவாரத்தையொட்டிக் கிழக்கு நோக்கி வந்து கொண்டிருக்கும் கெடிலம் ஆறு, திருவயிந்திரபுரம் வந்ததும் ட செங்கோணத்தில் நேர் வ ட க் கா க வளைந்து திரும்புகிறது. இந்த இடத்தில், மேற்கும் கிழக்குமாக நீண்டு கிடக்கும் கேப்பர் மலையிலிருந்து ஒரு குன்று வடக்கு நோக்கிப் பிதுங்கிக் கைகாட்டிபோல் நீட்டிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு கேப்பர் மலையில் வடக்கு நோக்கி ஒரு பிதுக்கம் வளைந்து நீட்டிக்கொண்டி டிருப்பதாலேயே அம்மலையின் அடிவாரத்தைத் தொடர்ந்து ஒடி வந்து கொண்டிருக்கும் கெடிலம் ஆறும் இவ்விடத்தில் வடக்கு நோக்கி வளைந்து செல்கிறது. இவ்வாறு வடக்கு நோக்கி ஒரு கி.மீ. தொலைவு ஓடி மீண்டும் கிழக்கு நோக்கி வளைந்து விடுகிறது.

கிழக்கு நோக்கி ஓடிவரும் கெடிலம் வடக்கு நோக்கித் திரும்புகிற முனையில் ஆற்றின் கிழக்குக் கரையில் திருவயிந்திரபுரம் உள்ளது. இங்கே ஆறு தெற்கு வடக்காக ஒடுகிறது. வடக்கு நோக்கியோடும் ஆற்றிற்கும் வடக்கு நோக்கியுள்ள மலைப் பிதுக்கத்திற்கும் நடுவே திருவயிந்திரபுரம் பெருமாள் கோயில் உள்ளது. கோயிலின் கிழக்குவாயிலிலிருந்து மலைக்குப் படிக்கட்டு மேல்நோக்கிச் செல்கிறது; கோயிலின் மேற்கு வாயிலிலிருந்து ஆற்றிற்குப் படிக்கட்டு கீழ் நோக்கிச் செல்கிறது. இதிலிருந்து, ஆற்றிற்கும் மலைக் குன்றுக்கும் நடுவே கோயில் நெருக் குண்டு கிடத்தல் புலனாகும். ஆறு கோயிலின் மேற்கு வாயிலை முட்டி மோதிக்கொண்டு செல்கிறது எனலாம். கோயிலின் கோபுரம், மதில் முதலியவற்றின் தோற்றம் தலைகீழாய்த் தண்ணீரில் தெரிவதைக் காணலாம். திருவயிந்திரபுரத்தில் வடக்கு நோக்கிப் பிதுங்கியுள்ள குன்றின் படத்தையும், வடக்கு நோக்கித் திரும்பி ஓடும் ஆற்றின் படத்தையும், தண்ணீரில் கோயிலின் தோற்றம் தெரியும் படத்தையும். கெடிலக் கரை நாகரிகம் என்னும் நூலில் காணலாம். மற்றும், கோயிலின் மிக அண்மையில் வடபுறம் இருக்கும் அணை பற்றியும், அந்த இடத்தின் இயற்கைக் காட்சிச் சிறப்புப் பற்றியுங்கூட அந்த நூலில் விரிவாகக் காணலாம்.

திருவயிந்திரபுரம் கோயில் தேவநாதசாமி கோயில் எனவும் தெய்வநாயகப் பெருமாள் கோயில் எனவும் அழைக்கப்படும். பெருமாள் பெயர்: தேவநாதர், தெய்வ நாயகப் பெருமாள்: தாயார் பெயர்: வைகுந்த நாயகி, செங்கமலத் தாயார். ஊரின் பெயர் நாலாயிரப் பிரபந் தத்தில் திருவயிந்திரபுரம் எனக் கூறப்பட்டுள்ளது. இப் பெயர் இன்று திருவந்திபுரம் எனச் சுருங்கி விட்டது. இதனையே மக்கள் தமது திருந்தாத கொச்சை வழக்கில் 'திருந்திபுரம் எனக் கூறுகின்றனர். இவ்வூர்ப் புராணங்களில் 'திருவுகீந்திரபுரம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அயிந்திரன்-அகீந்திரன் என்றால் ஆதிசேடன் என்று பொருளாம்; ஆதிசேடன் வழிபட்ட ஊராதலின் அயிந்திரபுரம் - அகீந்திரபுரம் என அழைக்கப்பட்டதாம். அயிந்திரபுரம் என்னும் பெயர் சுருங்கி மருவி அபிந்தை' என இலக்கியங்களில் வழங்கப்பட்டுள்ளது. சில கல்வெட்டு களில் திருவேந்திபுரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேதாந்த தேசிகர் முதலிய வைணவப் பெருமக்கள், திருவயிந்திரபுரத்தருகில் ஒடும் கெடிலத்திற்கு ஒரு பெருமை கற்பித்துள்ளனர். தமிழ் நாட்டில் ஆறுகள் மேற்கு - கிழக்காக ஒடுகின்றன; இவ்வாறே மேற்கு - கிழக்காக ஓடி வரும் கெடிலம் திருவயிந்திரபுரத்தில் வடக்கு நோக்கித் திரும்பித் தெற்கு வடக்காக ஓடுகிறது. இவ்வாறு வடக்கு நோக்கி ஒடுவது ஒரு புதுமையாம். - அற்புதமாம். இங்கே வடக்கு நோக்கி ஓடுவதால் கெடிலத்திற்கு உத்தர வாகினி என்னும் சிறப்புப் பெயர் ஈந்து போற்றியுள்ளனர் பெரு மக்கள். உத்தரம் என்றால் வடக்கு. வடக்கு நோக்கி ஓடும் ஓர் ஆற்றோட்டத்தின் கரையில் ஒரு தெய்வத் திருப்பதி அமைந்திருப்பது மிகவும் சிறப்பாம். இந்தச் சிறப்பு திருவயிந்திரபுரத்திற்குக் கிடைத்திருக்கிறது. வடக்கு நோக்கி ஒடும் உத்தர வாகினியாகிய கெடிலத்தின் கிழக்குக் கரையில் திருவயிந்திரபுரம் அமைந்திருப்பதால், இவ்வூர் மிகவும் பெருமைக்கு உரியதெனப் பெருமக்களால் போற்றப் படுகிறது.

இந்த அடிப்படையில் திருவயிந்திரபுரம் என்னும் பெயர் வந்ததற்கு ஒரு புதுக் காரணம் கற்பித்துக் கூற விரும்புகிறேன் அடியேன். அயித்திரம் என்னும் சொல் லுக்குக் கிழக்கு என்னும் பொருளும் உண்டு. கெடிலத்தின் கிழக்குக் கரையில் இருக்கும் ஊர் ஆதவின் அயிந்திரபுரம்' என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது அடியேன் கற்பித்துக் கூறும் காரணம். தமிழகத்தில் மற்ற ஆறுகள் மேற்கு-கிழக்காக ஓடுவதால், ஆற்றங்கரைத் திருப்பதிகள் ஆற்றின் வடகரையிலோ அல்லது தென்கரையிலோதான் இருக்கும். ஆற்றின் கிழக்குக் கரையில் திருப்பதிகள் அமைவதற்குப் பெரும்பாலும் வாய்ப்பில்லை. இந்த நிலையில் திருவயிந்திரபுரம் கெடிலத்தின் கிழக்குக் கரையில் அமைந்திருப்பது ஒரு புதுமை அற்புதம்! எனவே, அயித்திரக் (கிழக்குக்) கரையில் அமைந்திருக்கும் இவ்வூரை அயிந்திர புரம் என அக்காலத்தில் பெரியவர்கள் அழைத்திருக்கலாம் என்பது அடியேனது புதிய கற்பனை. ஆறு வடக்கு நோக்கி ஒடுவது அற்புதம் என்றால், ஆற்றின் கிழக்குக் கரையில் தெய்வத் திருப்பதி அமைந்திருப்பதும் அற்புதம் என்பது சொல்லாமலே விளங்குமே! இந்தக் கருத்தை அனைவரும் ஏற்றுக் கொள்வர் . ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற முறையில் முடிந்த முடியாக இங்கே அடியேன் கூறவில்லை - கூறவும் முடியாது; சிந்தனையைக் கிளறித் தூண்டும் முறையிலேயே ஆராய்ச்சியாளர் முன் இந்தக் கருத்தை அடியேன் வைத்துள்ளேன். சிறப்பு கருதித் திசையின் பெயரால் கெடிலம் உத்தர வாகினி' என அழைக்கப் படுவதைப் போல, ஊரும் சிறப்பு கருதித் திசையின் பெயரால் அயிந்திரபுரம் என அழைக்கப் படலா மல்லவா?

கோயிலின் கிழக்கு வாயிலின்மேல் கோபுரம் இல்லை. மேற்கு வாயிலின்மேல் கோபுரம் இருக்கிறது; ஆற்றுப் பக்கமாக இருக்கும் மேற்குக் கோபுரவாயில் தான் கோயிலின் சிறப்பு (முக்கிய) வாயிலாகக் கருதப்படுகிறது. இறையுருவங்கள் விழாக்காலங்களில் வெளியில் செல்வது . வருவது எல்லாம் இந்த மேற்குக்கோபுர வாயிலால் தான். மேற்குவாயிலே சிறப்பிடம் பெற்றிருப்பினும், கருவறையில் திருமால் நின்ற கோலத்தில் எழுந்தருளியிருப்பது கிழக்கு நோக்கியேயாம். கோயிலின் நடுவிலும் ஒரு சிறுகோபுரம் உள்ளது. கோயிலின் கிழக்கு வாயிலுக்கு எதிரே மலையிருக் சிறது; இம்மலையின் மேலும் கோயில் உண்டு;

இந்த மலைக் கோயிலும் கிழக்குநோக்கியே அமைந் துள்ளது. அயக்கிரீவன் கோயில் என்பது இதன் பெயர். அயக்கிரீவன் என்பது திருமாலின் பெயர்களுள் ஒன்று. திருமாலின் தோற்றங்களுள் அயக்கிரீவத் தோற்றமும் ஒன்று. அயம் (ஹயம்) என்றால் குதிரை; கிரீவம் என்றால் கழுத்து; அயக்கிரீவன் என்றால் குதிரைக் கழுத்து உடையவன் என்பது பொருளாம்; திருமாலின் அயக்கிரீவத் தோற்றத்தில் ஒரு புராணக் கதை அடங்கியுள்ளது. அயக்கிரீவன் கோயில் முகப்பில் இருக்கும் மண்டபத்தின் மேல் உள்ள விமானம் காணத்தக்கது. மலை மேலும் ஒரு கிணறு உண்டு.

அயக்கிரீவன் கோயில் உள்ள மலைக்கு ஒளி ஷத கிரி என்னும் பெயர் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஒளஷதம் = மருந்து; கிரி = மலை; ஒளஷதகிரி = மருந்து மலை. இந்த மலையில் மருத்துவ மூலிகைகள் பல உள்ளன; இந்த மலைக் காற்றும் மலையடிவாரத் தண்ணிரும் நோய் தீர்க்கும் மருந்துகளாம்; அதனால் இம்மலை மருத்துவமலை என அழைக்கப்படுகிறது.

“முன்னொரு காலம் விண்வழியே உலாச் சென்ற திருமால் மருத்துவ மலையில் தங்கி இளைப்பாறினார். அப்போது அவர்க்குத் தாகவிடாய் தோன்ற, ஆதிசேடனும் கருடனும் நீர்கொண்டுவரச் சென்றனர். ஆதிசேடன் மலையின்கீழ்த் தரையை வாலால் அடித்துப் பிளந்து கிணறு உண்டாக்கி நீர் கொணர்ந்து தந்தார். அந்தக் கிணற்றுக்குச் சேஷ தீர்த்தம் என்பது பெயர். கருடன் தன் அலகால் தரையைக் கிழித்து நீர் ஆறாகப் பெருகச் செய்து அதிலிருந்து நீர் கொணர்ந்தார்; அந்த ஆற்றிற்குக் ‘கருட தீர்த்தம்’ அல்லது 'கருட நதி' என்பது பெயர்: அதுதான் கெடிலம் ஆறு-இது புராணங்களை ஒட்டிய கதை.

ஆதிசேடன் வாலால் அடித்துத் தோன்றியதாகச் சொல்லப்படும் சேஷதிர்த்தம் என்னும் கிணறு திருவயிந்திர புரம் கீழ்க்கோயிலில் உள்ளது. அந்த கிணற்றின் கைப்பிடிச் சுவரில் ஆதிசேடன் (பாம்பு) உரு அமைக்கப்பட்டுள்ளது. கிணற்றுத் தண்ணிரின் நிறமும் வாடையும் இயற்கைக்கு மாறாய் உள்ளன - அதாவது, நன்றாயில்லை. காரணம், வேண்டி நேர்ந்து கொண்ட (பிரார்த்தித்துக் கொண்ட) அன்பர்கள் பால், மிளகு, வெல்லம், சூடம் முதலியவற்றை அக் கிணற்றில் கொட்டுகின்றனர்; காணிக்கையாகக் காசும் போடுகின்றனர்; இதனால் தண்ணீரின் தன்மை மாறுதலா யுள்ளது. ஆனால் இந்தக் கிணற்றுத் தண்ணீரைக் கொண்டுதான் கோயிலில் உணவுப் பொருட்கள் ஆக்கப்படு கின்றன; இந்தத் தண்ணீரில் ஆக்கப்படுவதால், உணவுப் பொருட்கள் மிகவும் சுவை உடையனவாகவும் நெடுநேரம் கெடாதனவாகவும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

வைணவர்களால் 'நடுநாட்டுத் திருப்பதி' எனச் சிறப்பித்துத் கூறப்படும் திருவயிந்திரபுரம் திருக்கோயில், திருமங்கையாழ்வாரின் மங்களாசாசனப் பாடல் பெற்று உள்ளது இவ்வூரில் பல்லாண்டுகள் வாழ்ந்த மிகச் சிறந்த வைணவ ஆசாரியரான வேதாந்த தேசிகர் இவ்வூர் இறைவன் மேல் தமிழிலும் வடமொழியிலும் பல பாடல்கள் பாடியுள் ளார். இவ்வூரைப் பற்றி வடமொழியில் பிரம்மாண்ட புராணம், கந்தபுராணம் (சைவக் கந்தபுராணம் வேறு), பிருகந் நாரதிய புராண்ம் முதலிய நூல்கள் உள்ளன. கருட நதியாகிய கெடிலம் கங்கைக்கு ஒப்பானது எனத் திருமாலால் பாராட்டிப் புகழப்பட்டிருப்பதாகக் கந்த புராணம் (வைணவ புராணம்) முதல் பகுதியில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தமிழிலே, மும்மணிக் கோவை, நவரத்தின மாலை முதலிய சிற்றிலக்கியங்களும் இவ்வூரின் மேல் இயற் றப்பட்டுள்ளன. “வெற்புடன் ஒன்றி அபிந்தையில் வெவ்வினை தீர் மருந்தொன்று அற்புதமாக அமர்ந்தமை” என மும்மணிக் கோவையில் அயிந்தை (அயிந்திரபுரம்) பாராட்டப் பெற்றுள்ளது.

திருவயிந்திர புரத்தில் சித்திரைத் திங்களில் பத்துநாள் பெருவிழா நடைபெறும் ஒன்பதாம் திருவிழா நாளான சித்திரைப் பருவத்தன்று தேர்த்திருவிழா நடைபெறும். அன்று மிகப் பெருந்திரளான மக்கள் இங்கே கூடுவர். எட்டாம் திருவிழா அன்று இரவே ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கூடி ஆற்று மணலில் படுத்து உறங்கியும் உரையாடியும் இரவுப் பொழுதை மகிழ்ச்சியுடன் கழிப்பர். வைகறையில் எழுந்து ஆற்றில் நீராடித் தேர்த்திருவிழாவைக் கண்டு களிப்பர். இவ்வூரில் பல்லாண்டுகள் வாழ்ந்து நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை இயற்றிய வேதாந்த தேசிகரின் நினைவாக ஒரு மண்டபம் உள்ளது. அம்மண்டபத்திற்கு விழாநாளில் இறையுருவம் கொண்டு செல்லப்படும். இது தேசிகரின் சிறப்பிற்குச் சான்று. தேசிகருக்குக் கருடாழ்வார் அருளுரை வழங்கிய விழா புரட்டாசித் திருவோணத்தில் நடைபெறும். கார்த்திகைத் திங்களில் தாலாட்டுவிழா என்னும் ஒருவகை விழா இனிது நடைபெறும். மாசிமகத்தன்று தேவநாத்ப்பெருமாள் கடலூர்க் கடற்கரைக்கு எழுந்தருளி நீராடுவார்; அன்றிரவு வண்டிப்பாளையத்திலுள்ள மண்டபத்தில் தங்கி விழா வயர்ந்து செல்வார்.

மக்கள் பலர் திருவயிந்திரபுரம் வந்து முடியெடுத்துக் கொள்வர். குடும்பப் பழக்கமாகக் குழந்தைகட்கு முடியெடுப்பதல்லாமல், நேர்ந்து வேண்டிக்கொண்ட பெரியவர்களும் வந்து முடியெடுத்துக் கொள்வதுண்டு. திருவயிந்திரபுரம் தெற்குத் திருப்பதி எனப் புராணங் களாலும் மக்களாலும் போற்றப்படும் பெருமையுடைய தாதலால், திருப்பதிக்குப் போகமுடியாதவர்கள் அங்கே செலுத்துவதாய் நேர்ந்துகொண்ட கடனை இங்கே வந்து செலுத்துவதும் உண்டு. திருப்பதி வேங்கடத்தாள் கோயில் முன் காலத்தில் முருகன் கோயிலா யிருந்தது என்று சிலர் சொல்வதுபோல், திருவயிந்திரபுரம் கோயிலும் முன் காலத்தில் சைவக் கோயிலாயிருந்தது எனச்சிலர் சொல்வ துண்டு; அவர்கள் தம் கூற்றுக்குச் சான்றாக, இக்கோயி லுக்குள் விநாயகர் உருவமும் சிவனது தட்சணாமூர்த்தி உருவமும் இருப்பதைச் சுட்டிக் காட்டுகின்றனர். சில ஊர்ச் சிவன் கோயில்களுக்குள்ளே கூடத்தான் திருமால் கோயில் இருக்கிறது. சிதம்பரத்தில் இரண்டும் அருகருகே இல்லையா? எனவே, இது சார்பாக எதையும் திட்டவட்ட மாகக் கூறமுடியாது. பழமுதிர்சோலை என்னும் கள்ளழகர் கோயில் பற்றியும் இது போன்ற கருத்து வேறுபாடு காணப்படுவது ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது.

நீராடு செலவு (தீர்த்த யாத்திரை) மேற்கொண்ட அர்ச்சுனன் திருவயிந்திரபுரத்திற்கும் வந்து நீராடி வழிபாடு நடத்தினானாம். இதனை வில்லிபாரதம் - ஆதிபருவம் அர்ச்சுனன் தீர்த்த யாத்திரைச் சருக்கத்திலுள்ள,

“மெய்யாகம வதிகைத்திரு வீரட்டமு கேமிக்
கையாளான் அகீந்திரபுரமும் கண்டு கைதொழுதான்”

என்னும் பாடல் (17) பகுதியால் அறியலாம். வெளியூரார் சிலர் திருவயிந்திரபுரம் கோயிலில் வந்து திருமணம் செய்து கொண்டு போவதும் உண்டு.

திருவயிந்திரபுரத்தில் சோழர், பாண்டியர் முதலியோர் காலத்தைச் சேர்ந்தனவாய் ஐம்பதிற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. இவற்றுள் மூன்றாம் இராசராசச் சோழனது கல்வெட்டொன்று மிகவும் குறிப்பிடத்தக்கது. பாண்டியர்க்குத் தோற் றோ டி ய அச்சோழனைக் கோப்பெருஞ்சிங்கன் சேந்தமங்கலத்தில் சிலை வைத்த செய்தியும், சோழனுக்கு நண்பனான போசள மைசூர் மன்னன் வீரநரசிம்ம தேவன் கோப்பெருஞ்சிங்கனை முறியடித்துச் சோழனைச் சிறைமீட்ட செய்தியும் வரலாற்றில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியை விவரிக்கும் மூன்றாம் இராசராசனது கல்வெட்டு திருவயிந்திரபுரம் தேவநாயகப் பெருமாள் கோயிலில் உள்ளது; அது வருமாறு:-

"ஸ்வஸ்தி பூ திரிபுவனச் சக்கரவத்திகள் பூரீ ராஜ ராஜ தேவர்க்கு யாண்டு பதினைந்தாவதில் எதிரா மாண்டு, ப்ரதாபச் சக்கரவர்த்தி ஹொய்சன ரீவீர நரசிம்ம தேவன் சோழ சக்கரவர்த்தியைக் கோப் பெருஞ்சிங்கன் சேந்த மங்கலத்தே பிடித்து கொடு வந்து தன் படையை இட்டு ராஜ்யத்தை அழித்து தேவாலையங்களும் விஷ்ணஸ்தானங்களும் அழிகையாலே இப்படி தேவன் கேட்டருளி, சோழ மண்டல ப்ரதிஷ்டாசாரியன் என்னும் கீர்த்தி நிலைநிறுத்தி அல்லது இக்காளம் ஊதுவதில்லை என்று தோர சமுத்திரத்தினின்றும் எடுத்து வந்து மகத ராஜ்ய நிர்ம்மூலமாடி, இவனையும் இவன்பெண்டு பண்டாரமும் கைக்கொடு பாச்சூரிலே விட்டு கோப்பெருஞ் சிங்கன் தேசமும் அழித்து சோழ சக்கரவர்த்தியையும் எழுந் தருளிவித்துக் கொடு என்று தேவன் திருவுள்ளமாய் ஏவ, விடை கொண்டு எழுந்த ஸ்வஸ்தி ரீமனு மஹாப்ரதானி பரம விச்வாளி தண்டிந கோபன் ஜகதொப்ப கண்டன் அப்பண தண்ணாக்கனும் சமுத்திர கோப்பய தண்ணாக்கனும் கோப்பெருஞ் சிங்கன் இருந்த எள்ளேரியும் கல்லியூர் மூலையும் சோழர்கோன் இருந்த தொழுதகையூரும் அழித்து, வேந்தன் முதலிகளில் வீரகங்க நாடாழ்வான் சீனத் தரையன், ஈழத்து ராஜா பராக்கிரம பாஹா உள்ளிட்ட முதலி நான்கு பேரை யும்...... கொன்று இவர்கள் குதிரையும் கைகொண்டு, கொள்ளிச் சோழ கோன் குதிரைகளையும் கைக் கொண்டு, பொன்னம்பல தேவனையும் கும்பிட்டு எடுத்து வந்து தொண்டை மானல்லூர் உள்ளிட தமுக்குர்களும் அழித்து அழி...... க்காடும் வெட்டிவித்து, திருப்பாதிரிப்புலியூரிலே விட்டு இருந்து, திருவதிகைத் திருவெக்கரை உள்ளிட்ட ஊர்களும் அழித்து, வாரண வாசி ஆற்றுக்குத் தெற்கு சேந்த மங்கலத்துக்கும் கிழக்கு கடலிலே அழி ஊர்களும் குடிக்கால்களும் சுட்டும் அழித்தும் பெண்டுகளை பிடித்தும் கொள்ளை கொண்டும் சேந்த மங்கலத்திலே எடுத்துவிடப் போகிற அளவிலே, கோப்பெருஞ் சிங்கன் குலைந்து சோழச் சக்கரவர்த்தியை எழுத்தருளிவிக்கக் கடவதாக தேவனுக்கு விண்ணப்பம் செய, இவர் விட்டு நமக்கும் ஆள் வரக் காட்டு கையாலே சோழச் சக்கரவர்த்தியை எழுந்தருளிவித்துக் கொடு போந்து ராஜ்யத்தே புக விட்டது.”

இந்தக் கல்வெட்டு வாயிலாக, போசள மன்னன் வீர நரசிம்மன் சோழனுக்குப் பரிந்து கொண்டு, கோப்பெருஞ் சிங்கனது ஆட்சியின்கீழ் இருந்த பல பகுதிகளைக் கண்டபடி தாக்கித் தீயிட்டு அழித்திருக்கிறான் என அறியலாம். இந்தக் கல்வெட்டின் இடையே ‘மகத ராஜ்ய நிர்ம்மூலமாடி’ என்றிருக்கும் பகுதியைக் கொண்டு, திருமுனைப்பாடி நாட்டின் ஒரு பகுதிக்கு ‘மகத நாடு’ என்னும் பெயர் அன்றிருந்தமை புலனாகும்.

தொண்டையர் கோமான் அடையவளைந்தான் என்னும் குறுநில மன்னனுடைய படை மறவரின் பெருமையை அறிவிக்கும் கல்வெட்டுச் செய்யுள் ஒன்று, தேவநாயகப் பெருமாள் கோவில் மேலைக் கோபுர வாயிலின் இடப்புறச் சுவரில் உள்ளது. இந்தச் செய்திகளையெல்லாம் அடிப் படையாகக் கொண்டு பார்க்குங்கால் அந்தக் காலத்தில் திருவயிந்திரபுரம் அரசியல் அரங்கில் பெற்றிருந்த சிறப்பிடம் புலப்படும். கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் இராசராசச் சோழனைச் சேந்தமங்கலத்தில் சிறை வைத்திருந்ததன்றித் திருவயிந்திரபுரத்திலும் சில நாள் சிறை வைத்திருந்ததாகச் சிலர் கூறுவதும் ஈண்டு கருதத் தக்கது. வேதாந்த தேசிகர் தம் பாடல்களில்,

“மகிழ்ந்து வாழும் போதிவை நாம் பொன்னயிங்தை
நகரில் முன்னாள்”
“அயிங்தை மாநகரில் அமர்ந்தனை எமக்காய்”

எனத் திருவயிந்திரபுரத்தை நகர் - மாநகர் எனச் சிறப்பித்துக் கூறியிருப்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. இதைக் கொண்டு, அந்தக் காலத்தில் திருவயிந்திரபுரம் ஒரு சிறந்த நகராய் விளங்கியதென அறியலாம்.

திருவயிந்திரபுரச் சீமையை ஆங்கிலேயர்கள் 1749 ஆம் ஆண்டு ஆர்க்காடு நவாப்பிடமிருந்து 28,000 உரூபாய்க்கு வாங்கினர். வடமொழியும் தென்மொழியும் பயின்று வந்த திருவயிந்திரபுரம் வைணவ அந்தணர்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலமும் பயிலத் தொடங்கினர். அதன் பயனாய்ப் பல குடும்பத்தினர் ஊரை விட்டு வெளியேறி நாட்டின் பல்வேறிடங்களில் இன்று அரசு அலுவலகங்களில் வேலை பார்க்கின்றனர். ஊருக்கு அன்று இருந்த பொலிவு இன்று இல்லையென்றே சொல்லலாம்; இந்த ஊரில் வடகலை வைணவர்களும் தென்கலை வைணவர்களும் பிணங்கி நீதிமன்றம் வரையும் சென்று வழக்கிட்டுக் கொண்டதுண்டு. இவ்வூரில், கிழக்கே 5 கி. மீ. தொலைவி லுள்ள கடலூர்ப் பகுதியைக் கிழக்கு என்னும் திசைப் பெயரால் சுட்டும் வழக்கம் உள்ளது; அதாவது, கிழக்கே போகிறேன்', 'கிழக்கே போயிருக்கிறார் என்னும் வழக்கை இவ்வூரில் காணலாம். இவ்வூர் கடலூர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தைச் சேர்ந்துள்ளது.

இவ்வூரில் கெடிலம் ஆற்றில் அணை கட்டப்பட்டிருப்ப தால், இதன் சுற்று வட்டாரத்தில் வளத்திற்குக் குறை வில்லை. இவ்வூர் மலையிலும் மலையடிவாரத்திலும் வெள்ளைக் களிமண் படிவம் இரண்டறக் கலந்துள்ளது. வெள்ளைக் களிமண் வெட்டி எடுக்கப்பட்டு, உரம் உண்டாக்குவதற்காகக் கூடலூரிலுள்ள தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகிறது. இவ்வாறு பல்வேறு துறைகளிலும் திருவயிந்திரபுரம் புகழ் பெற்றுத் திகழ்கிறது.