மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4/013

12. வஞ்சிக் கருவூர் சங்க காலச் சேரநாட்டின் தலைநகரம்[1]

சங்க காலத்துச் சேரநாடு தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அந்தச் சேரநாட்டின் தலைநகரம் வஞ்சிமாநகர் என்று பெயர் பெற்றிருந்தது. வஞ்சி நகரத்துக்குக் கருவூர் என்று இன்னொரு பெயரும் வழங்கியது. வஞ்சிக் கருவூர் சேரநாட்டிலே மேற்குக் கடற்கரை ஓரத்தில் சுள்ளியாற்றின் கரைமேல் இருந்தது. அந்தக் காலத்திலேயே கொங்கு நாட்டின் தலைநகரமும் வஞ்சி என்றும் கருவூர் என்றும் பெயர் பெற்றிருந்தது. பிளைனி என்னும் கிரேக்க வரலாற்றாசிரியர் ஒரு கருவூரைக் குறிப்பிடுகிறார். அந்தக் கருவூரை அவர் கரவ்ரா என்று கூறுகிறார். அந்தக் கருவூர் கடற்கரைக்கு அப்பால் உள்நாட்டிலே இருந்தது என்று அவர் கூறியுள்ளார். அவர் கூறுகிற கருவூர், கொங்கு நாட்டுக் கருவூராகும். கொங்கு நாட்டுக் கருவூர் இப்போது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கரூர் என்று பெயர் பெற்றிருக்கிறது. பிளைனி கூறுகிற கருவூர் ஒருவேளை சேர நாட்டுக் கருவூராகவும் இருக்கக் கூடும். எப்படியென்றால், சேரநாட்டுக் கருவூர் முசிறித் துறைமுகத்துக்குக் கிழக்கே சிறிது தூரத்தில் உள்நாட்டில் இருந்தது. ஆகையால், பிளைனி கூறுகிற கரவ்ரா என்னும் கருவூர் சேரநாட்டுக் கருவூரா அல்லது கொங்கு நாட்டுக் கருவூரா என்பதை அறுதியிட்டுக் கூற முடிய வில்லை. கருவூர் என்னும் பெயரோடு இரண்டு ஊர்கள், சேர நாட்டில் ஒன்றும், கொங்கு நாட்டில் ஒன்றும் இருந்தன. இரண்டு கருவூர்கள் இருந்தன என்பதையறியாமல், சில ஆண்டுகளுக்கு முன்பு சில அறிஞர்கள் இதுபற்றி ஆராய்ந்தார்கள். அவர்களில் சிலர், கொங்கு நாட்டில் உள்ள கரூரே, சேர நாட்டின் தலைநகரம் என்று கூறினார்கள். வேறு சிலர், சேரநாட்டுத் தலைநகரமான கருவூர் சேர நாட்டிலே மேற்குக் கடற்கரையையடுத்து இருந்தது என்று கூறினார்கள்.

'ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்' என்னும் நூலை ஆங்கிலத்தில் எழுதின திரு. கனகசபைப்பிள்ளை, வஞ்சிக் கருவூர் சேரநாட்டில் இருந்தது என்று அந்நூலில் எழுதினார். வேறு சில அறிஞர்களும் அவ்வாறே கருதினார்கள். கொங்கு நாட்டுக் கருவூரே சேரர்களின் தலைநகரம் என்பதை நிலைநாட்டுவதற்காகத் திரு. ரா. இராகவையங்கார் ‘வஞ்சிமாநகர்’ என்னும் நூலை எழுதினார். இந்த நூல் தெளிவு இல்லாமல் படிப்பவருக்குக் குழப்பத்தையும் ஐயத்தையும் மேன்மேலும் கிளப்பிவிட்டது. இவரை ஆதரித்துத் திரு.மு. இராகவையங்கார் தாம் எழுதிய ‘சேரன் செங்குட்டுவன்’ என்னும் நூலில் எழுதினார்கள்.1

சேரநாட்டை அரசாண்ட சேரமன்னர்களின் தலைநகரம், சேர நாட்டிலே முசிறி துறைமுகத்துக்குக் கிழக்கே இருந்தது. அதற்கு வஞ்சி நகரம் என்றும் கருவூர் என்றும் பெயர்கள் வழங்கின. சேர மன்னர், தங்களுடைய சேரநாட்டுக்குக் கிழக்கேயுள்ள கொங்கு நாட்டைக் கைப்பற்றி அந்நாட்டையும் அரசாண்டார்கள். அப்போது அவர்கள் கொங்கு நாட்டின் தலைநகரத்துக்குத் தங்களுடைய தலைநகரமான வஞ்சிக் கருவூரின் பெயரையே சூட்டினார்கள். ஆகவே, சங்க காலத்திலேயே சேரநாட்டிலும் கொங்கு நாட்டிலும் வஞ்சி (கருவூர்) என்னும் பெயருள்ள இரண்டு ஊர்கள் இருந்தன.2 இந்த வரலாற்று உண்மையை அறியாதபடியால், சில ஆண்டுகளுக்கு முன்பு சில அறிஞர்கள், கருவூர் (வஞ்சி) பற்றி இருவேறு கருத்துக்களைக் கூறி விவாதம் செய்தார்கள்.

இரண்டு வஞ்சிமா நகரங்களையும் (கருவூர்களையும்) சங்க நூல்கள் கூறுகின்றன. இடைக்காலத்தில் சேரநாட்டு வஞ்சிக் கருவூர் என்னும் பெயர் மறைந்து, அஞ்சைக்களம் என்றும் கொடுங்கோளூர் என்றும் பெயர் பெற்றது. பிற்காலத்தில், அஞ்சைக்களமும் (கொடுங்கோளூரும்) மறைந்து போயிற்று.

சங்க காலத்தில் சேரநாட்டின் தலைநகரமாக இருந்த வஞ்சிக் கருவூரின் அமைப்பு, எப்படி இருந்தது என்பதை இங்கு ஆராய்வோம். இந்த ஆய்வுக்குப் பேருதவியாக இருப்பவை சங்க நூல்களே. வஞ்சிமா நகரத்தின் அமைப்பைக் கூறுவதற்கு முன்பு சேரநாட்டின் அமைப்பைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும். அக்காலத்தில் குடகடல் என்று குறிப்பிடப்பட்ட இப்போதைய அரபிக்கடல், சேரநாட்டின் மேற்கு எல்லையாக இருந்தது. சேரநாட்டின் கிழக்கு எல்லை சையமலைத் தொடர்களாகும். சையமலைத் தொடர் இக்காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் என்னும் பெயர் பெற்றுள்ளன. அரபிக்கடலுக்கும் சையமலைக்கும் இடையேயுள்ள சேரநாடு, அகலம் குறைந்தும் வடக்குத்தெற்காக நீண்டும் உள்ளது. கடலுக்கும் மலைக்கும் இடையேயுள்ள அகலம், ஐம்பது மைலுக்குள்ளாகவே உள்ளது.

அயிரிமலையும் பெரியாறும்

சேரநாட்டின் கிழக்கு எல்லையாக இருந்தது சையமலைத் தொடர் என்று கூறினோம். சையமலைத் தொடரில் உள்ள ஒரு மலைக்கு அயிரிமலை என்பது பெயர். அயிரிமலை மேல் பேரியாறு (பெரியாறு) தோன்றிப் பாய்ந்தது. அந்த இடத்தில், அந்த ஆற்றுக்கு அயிரியாறு என்பது பெயர். அயிரிமலைமேல் அயிரியாறு தோன்றிய இடத்துக்கு அருகில் கொற்றவை கோயில் இருந்தது. அந்த கொற்றவைக்கு அயிரிக் கொற்றவை என்பது பெயர். அயிரிக் கொற்றவை சேர அரசர்களின்..... அகநானூறு 177-ம் பாடலிலும் (அகம். 177. 11), 253-ம் பாடலிலும் (அகம். 253. 20) கூறப்படுகிற அயிரை ஆறு வேறு. அந்த அயிரையாறு எருமை நாட்டில் (மைசூர் நாட்டில்) இருந்தது. பதிற்றுப்பத்தில் கூறப்படுகிற அயிரை ஆறு, சேரநாட்டு அயிரிமலைமேல் தோன்றி சேரநாட்டில் பாய்ந்த பெரியாற்றின் வேறு பெயர்.4

அயிரிமலைமேல் தோன்றி, அம்மலைமேல் அயிரியாறு என்று பெயர் பெற்ற ஆறு, தரையில் இழிந்து மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக் கடலில் விழுந்தது. தரையில் பாய்ந்தபோது அந்த ஆற்றுக்குப் பேரியாறு என்று பெயர். இதைப் பெரியாறு என்றும் வழங்குவர். பெரியாற்றுக்குச் சுள்ளி ஆறு என்னும் பெயர் உண்டு.4 பெரியாறு வரலாற்றுச் சிறப்புடையது. பெரியாறு மலைமேலிருந்து தரையில் இழிந்து சம நிலத்தில் பாய்கிற இடத்தில், சேரன் செங்குட்டுவன் ஆண்டுதோறும் வேனிற்காலத்தில் பாசறை அமைத்து, சுற்றத்தோடு, அங்குத் தங்கியிருந்து வேனிற் காலத்தைக் கழித்தான். இந்தச் செய்தியைச் செங்குட்டுவனைப் பாடிய பரணர் கூறுகிறார்:

பல்பொறிமார்ப! நின்பெயர் வாழியரோ
நின்மலைப் பிறந்து நின்கடல் மண்டும்
மலிபுனல் நிகழ்தரும் தீநீர் விழவில்
பொழில்வதி வேனில் பேரெழில் வாழ்க்கை
மேவரு சுற்றமோடு உண்டினிது நுகரும்
தீம்புனல் ஆயம் ஆடும்
காஞ்சியம் பெருந்துறை மணலினும் பலவே5

வேனிற்காலத்தில் பெரியாற்றங்கரையில் செங்குட்டுவன் தங்கியிருந்த காலத்தில், அவனுடைய இளவலான இளங்கோவடிகளும் சீத்தலைச் சாத்தனாரும் அந்த இடத்துக்குச் சென்று செங்குட்டுவனைக் கண்டு வருவது வழக்கம். ஓராண்டு செங்குட்டுவன் மலையடி வாரத்துக்குச் சென்று தங்கியிருந்தபோது குன்றக் குறவரும் சீத்தலைச் சாத்தனாரும் செங்குட்டுவனுக்குக் கண்ணகியின் செய்தியைக் கூறினார்கள்.6 இந்தச் செய்தியை யறிந்த செங்குட்டுவன் கண்ணகிக்கு பத்தினிக் கோட்டம் அமைக்க எண்ணினான்.7

பெரியாறு சேரநாட்டில் மேற்கு நோக்கிப் பாய்ந்து, அரபிக் கடலில் விழந்தது. பெரியாறு கடலில் கலந்த இடத்தில் முத்துச்சிப்பிகள் உண்டாயின. முத்துச் சிப்பியிலிருந்து முத்துக்கள் கிடைத்தன. இங்கு உண்டான முத்துக்களைக் கௌர்ணேயம் என்று கௌடல்லியரின் அர்த்த சாத்திரம் கூறுகிறது.8 வடமொழி அர்த்த சாத்திரத்துக்குப் பழைய தமிழ் மலையாள உரை ஒன்று உண்டு. அந்த உரை இந்த முத்தைப்பற்றி இவ்வாறு கூறுகிறது. அதன் வாசகம் இது. "கௌர்ணேய மாவிது மல (மலை) நாட்டில் முரசி ஆகின்ற பட்டினத்தினரிகே சூர்ண்ணியாற்றிலுள வாமவு." இதில் முரசி என்பது முசிறிப்பட்டினம். இதைத் தமிழ் நூல்கள் கூறுகின்றன. ஆனால், சேரநாட்டு முத்தைப் பற்றிச் சங்க நூல்களில் காணப்படவில்லை. கௌடல்லியரின் அர்த்த சாத்திரம் இதைக் கூறுகிறது. பெரியாற்றுக்குச் சுள்ளியாறு என்று தமிழில் வேறு பெயர் இருந்ததையறிவோம். சூர்ண்ணி ஆறு என்னும் வடமொழிப் பெயர், சுள்ளி என்னும் சொல்லிலிருந்து உண்டானது போலும்.

சுள்ளி என்னும் பேரியாறு கடலில் கலந்த புகர் முகத்தில் ஆற்றின் வடகரைமேல் கடற்கரைப் பக்கத்தில் முசிறி என்னும் பேர்போன துறை முகப்பட்டினம் இருந்தது. கிரேக்க யவனர் இந்தத் துறைமுகப் பட்டினத்தை முசிரிஸ் என்றும், வடமொழிக்காரர் மரீசிபட்டணம் என்றும் கூறினார்கள்.

வஞ்சிமாநகரம்

இப்போது நமது ஆராய்ச்சிக்குரிய வஞ்சி நகரத்துக்கு வருவோம். வஞ்சி மாநகரம் கரூவூர் என்றும் பெயர் பெற்றிருந்ததை முன்னமே அறிந்தோம். சேர மன்னர்களின் தலைநகரமாக இருந்த இந்த வஞ்சி மாநகரம் முசிறித் துறைமுகத்துக்குக் கிழக்கே பேரியாற்றின் வடகரை மேல் இருந்தது. வஞ்சி நகரத்தின் அமைப்பைப் பெரிதும் மணிமேகலை காவியத்திலிருந்தும் சிலப்பதிகாரக் காவியத்திலிருந்தும் அறிகிறோம். சுள்ளியாற்றின் வடகரைமேல் கிழக்கு மேற்காக, நீண்ட சதுரமாக அமைந்திருந்த வஞ்சிமாநகரம் பெரிய நகரமாகப் பரந்திருந்தது. இந்த நகரத்திலே வழக்குரை மன்றம், பொதியில் சதுக்கம், செய்குன்று, பூங்கா, அறச்சாலை, நீர் நிலைகள், சிவபெருமான் கோயில், திருமால் கோயில், பௌத்த சமணப்பள்ளிகள் முதலானவை இருந்தன.9

தெருக்கள் கிழக்கு மேற்காகவும் வடக்குத் தெற்காகவும் அமைந்திருந்தன. நகரத்தின் மையத்தில் அகலமும் நீளமும் உள்ள பெரிய நெடுஞ்சாலை கிழக்கு மேற்காக அமைந்திருந்தது. அந்த நெடுஞ்சாலை இந்த நகரத்திலிருந்து முசிறித் துறைமுகப் பட்டினத்திற்குச் சென்றது. நகரத்துத் தெருக்களில் பலவகையான தொழிலாளர்களும் வசித்திருந்தனர். பலவகைப் பொருள்கள் விற்கப்பட்ட கடைத்தெருக்கள் இருந்தன. நகரத்தைச் சூழ்ந்து கோட்டை மதில்கள் இருந்தன. மதிலைச் சார்ந்திருந்த தெருக்களில் மீன், உப்பு, கள், இறைச்சி, அப்பம், பிட்டு முதலான பொருள்களை விற்கும் வாணிகர் இருந்தார்கள்.10 இந்தத் தெருக்களை அடுத்து, மட்பாண்டம் செய்வோர், செம்பு பித்தளை வெண்கலப் பாத்திரம் செய்வோர், இரும்புக் கருவிகளைச் செய்வோர், பொன் வெள்ளி நகை செய்வோர், மரத் தொழில் செய்வோர், கட்டட வேலை செய்வோர், தோல் கருவிகள் செய்வோர், துணி தைப்போர் முதலான தொழிலாளிகள் குடியிருந்த தெருக்கள் இருந்தன.11 மாலைகட்டுவோர் இசைவாணர் சங்குவளை அறுப்போர் நடன ..... பொன்வாணிகர் முதலானோர் இருந்த வீதிகளும் இருந்தன.13 அமைச்சர், அரச ஊழியர், அரண்மனை ஊழியர் முதலானோர் வீதிகளும் குதிரைப் பந்தி, யானைப்பந்தி முதலான இடங்களும் இருந்தன.14 வீடுகளில் இருந்து வெளிப்படும் கழிவுநீர் சாக்கடைகள் வழியாகச் சுருங்கைகளில் ஓடி நகரத்துக்கு அப்பால் நகரத்தைச் சூழ்ந்திருந்த அகழிகளில் விழுந்தன.15

அரண்மனைகள்

சேரமன்னர்களின் அரண்மனைகள் வஞ்சிமா நகரத்தின் நடுவிலே அமைந்திருந்தன. ஒன்று, ‘பொன் மாளிகை' என்று பெயர் பெற்றிருந்தது. 'கொடிமதில் மூதூர்நடுநின்றோங்கிய தமனிய மாளிகை' 16 (தமனியமாளிகை-பொன்மாளிகை) இந்தப் பொன் மாளிகையின் நிலா முற்றத்தில் இருந்து, பறையூர்க் கூத்தச் சாக்கையன் ஆடிய கொட்டிச் சேதம் என்னும் கூத்தைச் செங்குட்டுவனும் அவனுடைய அரசியும் கண்டு மகிழ்ந்தார்கள்.17 இந்தப் பொன்மாளிகையிலேதான், சேர அரசர் அரசியல் நடத்திய 'வேத்தியல் மண்டபம்' இருந்தது.18 அரண்மனைக்கு அருகிலேயே சிவபெருமான் கோயிலும் அறிதுயில் அமர்ந்தோன் (திருமால்) கோயிலும் இருந்தன.19

பொன்மாளிகைக்குத் தெற்கே பேரியாற்றின் கரைமேல் இன்னோரு மாளிகை இருந்தது. அதற்கு 'வெள்ளிமாடம்' என்பது பெயர்.20 இந்த வெள்ளி மாளிகை இலவந்திகைச் சோலையில் அமைந்திருந்தது.21 'விளக்கு இலவந்தி வெள்ளிமாடம்'. இலவந்திகைச் சோலைக்கு நீராவிச் சோலை என்றும் பெயருண்டு. இலவந்திகை அல்லது நீராவிச் சோலை அரச குடும்பத்துக்குரிய சோலை. அதில், அவர்களைத் தவிர ஊர்ப் பொதுமக்கள் நுழையக் கூடாது. வெள்ளி மாடத்தில் சேர அரசரின் குடும்பம் வாழ்ந்து வந்தது. செங்குட்டுவன், இளவேனிற் காலத்தில், மலையிலிருந்து பெரியாறு இழிந்த இடத்திற்குச் சென்றபோது, வெள்ளி மாடத்திலிருந்து புறப்பட்டுப் போனான்.22

இதுகாறும் நகரத்தின் அமைப்பைப் பற்றிக் கூறினோம். இனி நகரத்தைச் சூழ்ந்திருந்த கோட்டை மதில்களை பற்றிப் பார்ப்போம்.

கோட்டை மதில்கள்

வஞ்சிமா நகரத்தைச் சூழ்ந்து கோட்டை மதில்களும் அகழியும் காவற்காடும் இருந்தன. கோட்டை மதில் காவல் உடையதாக இருந்தபடியால் 'கடிமதில்' என்று கூறப்பட்டது.23 மதிலைச் சூழ்ந்து, மதிலுக்கு வெளியே அகழி இருந்தது. அகழியில் மீன்களும் முதலைகளும் இருந்தன; தாமரை அல்லி முதலான நீர்ப்பூக்களும் இருந்தன.24 நகரத்தில் இருந்து தூம்புகளின் வழியாகவும் சுருங்கைகளின் வழியாகவும் வந்த கழிவுநீர் அகழியில் வந்து விழுந்தது.25 (சங்க காலத்து மதுரை நகரத்தில், கழிவு ..... சுகாதார அமைப்போடு இருந்ததை அறிகிறோம். வஞ்சிமா நகரத்தின் தெற்கே சுள்ளியாறு (பேரியாறு) பாய்ந்தபடியால் அந்த ஆறே அகழியாக அமைந்திருந்தது. மற்றக் கிழக்கு மேற்கு வடக்குப் பக்கங்களில் கோட்டைச் சுவரைச் சூழ்ந்து அகழிகள் அமைக்கப்பட்டிருந்தன. (தரைப்படம் காண்க). அகழிக்கு உள்பக்கத்தில் நகரத்தைச் சூழ்ந்து மதிற் சுவர்கள் இருந்தன. இந்தச் சுவர்கள் புற மதில்களாகும். இந்தப் புறமதில்களின் மேலே போர்க் கருவிகளும் இயந்திரப் பொறிகளும் வைக்கப்பட்டு காவலுடையதாக இருந்தன.26 அகழி சூழ்ந்த கோட்டைமதிலின்மேல் போருக்குரிய எந்திரக் கருவிகள் வைக்கப்பட்டிருப்பதைப் பதிற்றுப்பத்து ஆறாம் பத்தும் கூறுகிறது.

எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில்
கோள்வன் முதலைய குண்டுகண் அகழி
வானுறவோங்கிய வளைந்துசெய் புரிசை

27

இந்தக் கோட்டைச் சுவரின் வாயிலின் மேல் சிலம்பும் தழையும் தொங்க விடப்பட்டிருந்தன. 'செம்பொறிச் சிலம்பொடு அணி தழை தூங்கும்.28 இதற்குப் பழைய உரையாசிரியர் இவ்வாறு விளக்கங் கூறுகிறார்: 'சிலம்பும் தழையும் புரிசைக் கண்தங்கினவென்றது ஈண்டுப் பொருவீருளரேல் நும்காலிற் கழலினையும் அரையிற் போர்க்குரிய உடையினையும் ஒழித்து இச்சிலம்பினையும் தழையினையும் அணிமின் என அவரைப் பெண்பாலாக இகழ்ந்தவாறென்க. இனி அவற்றை அம்மதிலில் வாழும் வெற்றி மடந்தைக்கு அணியென்பாருமுளர். சங்க காலத்து மதுரைக் கோட்டை வாயிலின் மேலே பந்தும் பாவையும் கட்டித் தொங்விடப் பட்டிருந்தன29 என்பது இங்கு நினைவுகூரத்தகக்து.

வஞ்சிமாநகரத்தின் புறமதிலுக்கு உள்ளே மிளைக்காடு (காவற் காடு) இருந்தது. புறமதில்களைச் சூழ்ந்திருந்த மிளைக்காட்டுக்கு அப்பால் உள்மதில்கள் இருந்தன. உள்மதில்கள் வெண்சுதை பூசப் பெற்று வெள்ளிக்குன்று போலக் காணப்பட்டன.30 இதனால் வஞ்சி மாநகரத்தின் கோட்டைச் சுவர்கள் அகமதில் என்றும் புறமதில் என்றும் இரண்டு மதிற்சுவர்களைக் கொண்டிருந்ததை யறிகிறோம். கோட்டைச் சுவர்களின் மேலே வாயிலுக்குமேல் கொடிகள் பறந்தன. நகரத்துக்குள்ளே போவதற்கு வாயில்கள் இருந்தன.

குணவாயிலும் குடவாயிலும்

நகரத்துக்கு மத்தியில் அகலமான நெடுஞ்சாலையொன்று கிழக்கிலிருந்து மேற்குப் பக்கமாகச் சென்றது. அந்த நெடுஞ்சாலை கோட்டையின் கிழக்கு வாயிலிருந்து மேற்கே நகரத்தின் மத்தியில் அரண்மனைப் பக்கமாகச் சென்று குடவாயிலைக் கடந்து மேற்கே கடற்கரைப் பக்கத்தில் ..... கோட்டையின் மேற்கு வாயிலுக்குக் குடவாயில் என்று பெயர். நகரத்தின் நடுமையத்தில் அரண்மனைக்கு எதிராக ஓர் அகன்றசாலை வடக்குப் பக்கமாகச் சென்று வடக்கு வாயிலைக் கடந்து சென்றது. கோட்டையின் குணவாயிலுக்கு அருகில், கோட்டைச் சுவருக்கு வெளியே ஒரு சோலை இருந்தது. அங்குப் பலசமயத்துத் துறவிகள் தங்கியிருந்தனர். சைவ வைணவக் கோயில்களும் பௌத்த சமணப் பள்ளிகளும் ‘நற்றவ முனிவரும் கற்றடங்கினவரும்' மதிலுக்கு வெளியேயிருந்த சோலையில் இருந்தனர்.31 இந்த இடத்துக்குக் குணவாயிற் கோட்டம் என்பது பெயர். இந்தக் குணவாயிற் கோட்டத்தில் செங்குட்டுவனின் தம்பியாகிய இளங்கோ அடிகள், துறவு பூண்டுத் தங்கியிருந்தார்.32 குணவாயில் கோட்டத்தைப் 'பகல் செல்வாயில்' என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.33 (பகல் செல் வாயில்-சூரியன் போகிற வழி; கிழக்குத்திசை. குணவாயில் - கிழக்கு வாயில்-குணக்கு-கிழக்கு) சங்க காலத்துக்குப் பிறகு, முசிறித் துறைமுகப்பபட்டினமும் வஞ்சி மாநகரமும் மறைந்துபோன பின்னரும் குணவாயிலும், குணவாயிற் கோட்டமும் அழியாமல் இருந்தன. பிற்காலத்தில் மலையாளிகள் குணவாயிற் கோட்டத்தை ‘த்ருக்கணா மதிலகம்' என்று கூறினார்கள். இது, திருக்குண மதிலகம் என்பதன் சிதைவு. ‘த்ரு' என்பது திரு என்னும் சொல்லின் சிதைவு. 'கணா' என்பது குண என்பதன் சிதைவு. மதிலகம் என்பது கோட்டை மதில் உள்ள இடம் என்னும் பொருளுள்ளது. வஞ்சி நகரம் அழிந்துபோன பிறகு, அதன் பகுதியாக எஞ்சியிருந்த குணவாயிலும் அதன் அருகில் இருந்த கோட்டமும் 'த்ருக்கணா மதிலகம்' என்று மலையாளிகளால் கூறப்பட்டன. இந்த இடத்தைப் பற்றி இக்காலத்தில் சில அறிஞர்கள் ஆராய்ந்து கட்டுரை எழுதியுள்ளனர்.34

குணவாயில் கோட்டத்தில் பலசமயக் கோயில்களும் பல சமயத்துத் துறவிகளும் சமயத் தத்துவங்களைக் கற்ற சமயச் சான்றோர்களும் இருந்தனர். இங்கிருந்த சமயவாதிகளிடத்தில் மணிமேகலை சமயக் கணக்குகளை (சமயத் தத்துவங்களைக்) கேட்டறிந்தாள் என்பதை மணிமேகலை காவியத்திலிருந்து அறிகிறோம். மணிமேகலை 27- ஆம் காதையின் தலைப்புக்கு விளக்கம் கூறுகிற கொளு, 'வஞ்சிமா நகர்ப்புறத்துச் சமயக் கணக்கர் தந்திறங்கேட்ட பாட்டு' என்று கூறுகிறது. இதனாலே, குணவாயிற் கோட்டத்தில் இருந்த பல சமயவாதிகளிடத்தில், அவள் பல்வேறு சமயக் கொள்கைகளைத் தெரிந்து கொண்டாள் என்பது விளங்குகிறது.

குணவாயிற் கோட்டத்துக்கு அருகிலேயே, சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக்கோட்டம் அமைத்தான் என்பதை மணி மேகலையிலிருந்து குறிப்பாக அறிகிறோம். காவிரிப்பூம்பட்டினம் வெள்ளத்தில் முழுகிப் போனதை மணிபல்லவதீவில் கேள்விப்பட்ட மணிமேகலை, காவிரிப்பூம்பட்டினத்துக்குப் போகாமல் நேரே வஞ்சிமா நகரத்துக்கு ..... சேரன் செங்குட்டுவன் எடுத்திருந்த பத்தினிக் கோட்டஞ் சென்று வணங்கவேண்டும் என்பது அவளுக்குத் தோன்றிய ஆர்வமாகும். அவள் நேரே பத்தினிக் கோட்டஞ் சென்று கண்ணகியின் படிவத்தை வணங்கினாள் என்று மணிமேகலை காவியங் கூறுகிறது. கண்ணகி யின் படிவத்தை வணங்கின பிறகு, மணிமேகலை நகரத்துக்குள் சென்றாள் என்றும், சென்றவள் தற்செயலாக நகரத்தின் குடவாயி லண்டைத் தன்னுடைய பாட்டனான மாசாத்துவானைக் கண்டனள் என்றும் மணிமேகலை காவியம் கூறுகிறது. இவளுடைய பாட்டனான மாசாத்துவான், கோவலனும் கண்ணகியும் இறந்தபிறகு வாழ்க்கையை வெறுத்துத் துறவுபூண்டு வஞ்சிமாநகரத்தில் இருந்த பௌத்த விகாரையில் தங்கியிருந்தான். இந்த பௌத்தவிகாரை வஞ்சி நகரத்தின் மேற்கு வாயிலருகில் இருந்தது. மணிமேகலை, குணவாயிலில் (கிழக்கு வாயிலில்) நுழைந்து நகரத்துக்குள் சென்று, மேற்கு வாயிலண்டை தன்னுடைய பாட்டனைக் கண்டாள் என்று தெரிகிறது. மணிமேகலை காவியம் 26-வது காதையின் தலைப்புக்கு விளக்கங் கூறுகிற அதன் கொளு, 'மணிமேகலை கண்ணகி கோட்டமடைந்து வஞ்சிமாநகர் புக்க பாட்டு' என்று கூறுகிறது. இதிலிருந்து, கண்ணகி கோட்டம் நகரத்துக்கு வெளியே (கோட்டை மதிலுக்கு வெளியே) இருந்ததென்பது திட்டமாகத் தெரிகிறது.

குணவாயிற் கோட்டத்துக்கு அருகிலே, அமைக்கப்பட்டிருந்த பத்தினிக் கோட்டத்துக்குப் பக்கத்தில் வைதிக மதத்தவரின் வேள்விச் சாலை இருந்தது. பத்தினித் தெய்வம் மன்னர்களுக்கு வரங்கொடுத்த பிறகு, செங்குட்டுவன் மன்னர்களுடன் மாடலமறையவனுடனும் வேள்விச் சாலைக்குச் சென்றனன் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.35 செங்குட்டுவன் பத்தினிக் கோட்டத்தைவிட்டு வேள்விச் சாலைக்குப் போன பிறகு, குணவாயிற் கோட்டத்திலிருந்த இளங்கோ அடிகள் பத்தினிக் கோட்டஞ் சென்றார்.36 இவற்றிலிருந்து குணவாயில் கோட்டத்துக்கு அருகிலேயே பத்தினிக் கோட்டமும் வேள்விச் சாலையும் இருந்தன என்பது தெரிகின்றன.

குணவாயில் கோட்டத்துக்கு அருகில், கோட்டை வாயிலுக்கு வெளியே, அரசாங்க மாளிகையொன்று இருந்தது. இது வேள் ஆவிக்கோ மாளிகை என்று பெயர் பெற்று இருந்தது. வேளாவிக்கோ மாளிகை, நீர் சூழ்ந்த பொழிலின் நடுவிலே அமைந்திருந்தது.

பேரிசைவஞ்சி மூதூர்ப் புறத்துத்
தாழ்நீர் வேலித் தண்மலர்ப் பூம்பொழில்
வேளாவிக் கோ மாளிகை
என்று இதைச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

37

வேளாவிக்கோ மாளிகை, அரசாங்கத்து விருந்தினர் வந்தால் அவர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டது போலும்.

......கோட்டத்தை வணங்கின பிறகு, அங்கே குணவாயிற் கோட்டத்திலிருந்த சமயவாதிகளின் சமயக் கணக்குகளைக் கேட்ட மணிமேகலை, கிழக்கு வாயிலின்வழியே நகரத்துக்குள் சென்று மேற்கு வாயிலருகிற் சென்றபோது தன்னுடைய பாட்டனைக் கண்டாள். அவனுடைய முன்னோர்களில் ஒருவன் அந்த இடத்தில் பௌத்தச் சயித்தியம் ஒன்றைக் கட்டியிருந்தான். அந்தச் சயித்தியம் வானளாவி உயர்ந்து வெண்சுதை பூசப்பெற்றிருந்தது. அந்தப் புத்த சயித்தியத்தைக் கட்டினவன், கோவலனுக்கு முன்பு (ஒன்பது தலைமுறைக்கு முன்னர்) இருந்தவன். அவனும் கோவலன் என்று பெயர் பெற்றிருந்தான். கோவலனுடைய தந்தையான மாசாத்துவான் பௌத்த பிக்குவாகத் துறவு பூண்டு இந்தச் சயித்தியத்துக்கு வந்திருந்தான். இவனை மணிமேகலை கண்டு வணங்கினபோது இச் செய்திகளையெல்லாம் அவன் அவளுக்குக் கூறினான்.38 பிறகு, மணிமேகலை வஞ்சி மாநகரத்தின் மேற்கு வாயில் பக்கத்திலிருந்து ஆகாயவழியே பறந்து காஞ்சிபுரத்துக்குச் சென்றாள் என்று மணிமேகலை காவியம் கூறுகிறது. இது ஏற்கத்தக்கது அன்று. காவியப் புலவர் ஏன் இப்படி கற்பனை செய்தார் என்பதை இக்கட்டுரையாளர் எழுதிய ‘மணிமேகலையின் விண்வழிச் செலவு' என்னும் கட்டுரையில் காண்க.39

வஞ்சிமா நகரத்தின் மத்தியில் அமைந்திருந்த அரண்மனை வாயிலில் இருந்து, வடக்கே ஒரு பெருஞ்சோலை இருந்தது. அது கோட்டையின் வடக்கு வாயிலைக் கடந்து சென்றது. கோட்டையின் வடக்கு வாயிலுக்கு வெளியே புறநிலைக் கோட்டம் என்னும் கோயில் இருந்தது. செங்குட்டுவன் இமய யாத்திரைக்குப் புறப்பட்டபோது நல்ல முழுத்தத்தில் கொற்றவாளையும் கொற்றக்குடையையும் வடக்கே எடுத்துச் செல்லும்படி கட்டளையிட்டான். அவ்வாறே நல்ல முழுத்தத்தில், கொற்றவாளையும் கொற்றக் குடையையும் கொற்றயானையின் மேல் ஏற்றிக் கொண்டுபோய் புறநிலைக் கோட்டத்தில் வைத்தார்கள்.40 கோட்டை மதிலுக்கு வெளியேயும் மக்கள் வாழ்ந்தனர். அவர்கள் நகரத்துக்குப் புறத்திலே (வெளியிலே) குடியிருந்தபடியால் புறக்குடி மக்கள் என்று கூறப்பட்டனர். அவர்கள் கோட்டை மதில்களுக்கு வெளியே குடியிருந்தபடியால், கோட்டையைச் சூழ்ந்து கொண்டு முற்றுகையிடுபவர் போலக் காணப்பட்டார்கள்.

வாங்குவில் தானை வானவன் வஞ்சியின்
வேற்று மன்னரும் உழிஞைவெம் படையும்
போல் புறஞ்சுற்றிய புறக்குடி

41

இதுகாறும் சேரநாட்டுத் தலைநகரமான வஞ்சிமா நகரத்தின் அமைப்பைப் பற்றிக் கூறினோம். இனி, அதனோடு தொடர்புடைய முசிறித் துறைமுகப்பட்டினத்தைப் பற்றிக் காண்போம்.

......வஞ்சிமாநகரத்துக்கு மேற்கே சுள்ளிப்பேரியாறு கடலில் கலந்த இடத்தில், அதன் வடகரைமேல் கடற்கரையையொட்டி முசிறித்துறை முகமும் முசிறிப்பட்டினமும் இருந்தன. அக்காலத்தில் அது பெரிய நகர மாகவும் இருந்தது. அக்காலத்தில், முசிறி உலகப் புகழ் பெற்ற பேர் போன நகரமாக இருந்தது. கிரேக்க யவனர் இந்தப் பட்டினத்தை முசிறிஸ் என்று கூறினார்கள். வடஇந்தியர் இந்தப் பட்டினத்தை மிரிசி பதனம் என்று குறிப்பிட்டனர். முசிறி என்பதைத் தான், அவர்கள் மிரிசி என்று திரித்துக் கூறினார்கள். அந்தக் காலத்தில் சேரநாட்டிலிருந்து மிளகு பெருவாரியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாயிற்று. ஆகவே, சமஸ்கிருத மொழியில் மிளகுக்கு, மிரிசி என்று பெயர் கூறப்பட்டது. முசிறிப் பட்டினமாகிய மிரிசி பட்டினத்திலிருந்து வந்தமையால் வட மொழியாளர் அந்த நகரத்தின் பெயரையே மிளகுக்கு மிரிசி என்று கூறினார்கள்.

சுள்ளிப்பேரியாறு கடலில் கலந்த புகர்முகத்தில் முத்துச் சிப்பிகள் விளைந்தன. அந்த சிப்பிகளிலிருந்து முத்துக்கள் எடுக்கப்பட்டன. இந்தச் சேரநாட்டு முத்தினைக் கௌர்ணெயம் என்று கௌடல்லியரின் அர்த்தசாத்திரம் கூறுவதை முன்னமே குறிப்பிட்டோம். முசிறியை மிரிசி என்று கூறியதுபோலவே வடமொழியாளர் சுள்ளி (பேரியாறு) யாற்றைச் சூர்ணி என்று கூறினார்கள். சூர்ணி ஆற்றில் உண்டான முத்து சௌர்ணெயம் என்று பெயர் பெற்று, பிறகு அந்தச் சொல் கெளர்ணெயம் என்றாயிற்று. முசிறிப் பட்டினத்தை சங்கப்புலவர் நக்கீரர் 'முன்னுறை முதுநீர் முசிறி' என்று கூறுகிறார்.42 இன்னொரு சங்கப்புலவரான நக்கீரர் 'முழங்கு கடல் முழவின் முசிறி' என்று கூறுகிறார்.43 அராபியரும் கிரேக்க யவனரும் மேற்கக் கரைத் துறைமுகங்களுக்கு வந்து வாணிகஞ் செய்தார்கள். அவர்களின் முக்கியமான குறிக்கோள் முசிறித் துறைமுகமாக இருந்தது. யவன வாணிகர் தங்களுடைய அழகான பெரிய நாவாய்களை எகிப்து நாட்டு அலெக்சாந்திரிய துறைமுகப் பட்டினத்திலிருந்து செங்கடல் வழியாகச் செலுத்திக் கொண்டு, அரபிக் கடலுக்கு வந்து முசிறி, தொண்டி முதலான துறைமுகப் பட்டினங்களுக்குச் சென்று கடல் வாணிகஞ் செய்தார்கள். கி.பி. முதல் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் ரோமப் பேரரசை ஆட்சியெத் பேர்போன அகுஸ்தஸ் சக்கரவர்த்தி இந்தக் கப்பல் வாணிகத்தை நிலைநிறுவினார். அவர் செங்கடல் பகுதியில் இருந்த அராபியரை அடக்கி, யவனக் கப்பல்கள், செங்கடல் பட்டினங்களிலும் அரபிக் கடல் பட்டினங்களிலும் சென்று வாணிகஞ் செய்ய வழிசெய்தார். அக்காலத்தில், கப்பல்கள் நடுக்கடலில் செல்லாமல் கரையோரமாகவே சென்று வந்தன. அதனால், மாதக் கணக்கில், ஆண்டுக் கணக்கில் காலதாமதம் ஏற்பட்டது. பருவக் காற்றின் துணைகொண்டு செங்கடலிலிருந்து நடுக் கடலில் கப்பல் ஓட்டி, முசிறித் துறைமுகத்துக்கு விரைவில் வந்து போகும் ...... அராபிய வாணிகரும் அறிந்திருந்தார்கள். இவர்கள் அறிந்திருந்ததை கிரேக்க மாலுமியாகிய ஹிப்பலஸ் என்பவன் எப்படியோ அறிந்து கொண்டு, யவனக் கப்பல்களை நடுக்கடல் வழியே செலுத்திக்கொண்டு முசிறித் துறைமுகத்துக்கு வந்தான். அதுமுதல் யவனக் கப்பல்கள் விரைவாக நடுக்கடல் வழியே முசிறித் துறைமுகத்துக்கு வந்து போகத் தொடங்கின. பருவக் காற்றுக்கு ஹிப்பலஸ் என்பவன் பெயரையே யவனர் சூட்டினார்கள். ஹிப்பலஸ் கி.பி. 40-ல் இந்தப் பருவக் காற்றைப் பயன்படுத்தினான் என்பர்.

கி.பி. முதல் நூற்றாண்டிலும் இரண்டாம் நூற்றாண்டிலும் சேரநாட்டுத் துறைமுகங்களோடு யவனர் செய்த கப்பல் வாணிகம் உச்ச நிலையில் இருந்தது. இந்த யவன-தமிழ் வாணிகத்தைச் செம்மையாக வளர்த்த அகுஸ்தஸ் சக்கரவர்த்திக்கு கிரேக்க வாணிகர் முசிறிப் பட்டினத்தில் ஒரு கோயிலைக் கட்டிப் பாராட்டினார்கள்.44 சங்க காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்திலும் அரிக்கமேடு துறைமுகத்திலும் யவன மாலுமிகள் தங்கியிருந்தது போலவே, முசிறி பட்டினத்திலும் யவன மாலுமிகள் தங்கியிருந்தார்கள். சங்க காலத்திலே அரபு வாணிகர்கள் முசிறித் துறைமுகப்பட்டினத்தில் ஒரு பகுதியில் தங்கி வாணிகஞ் செய்தனர். அவர்கள் தங்கியிருந்து வாணிகஞ் செய்த இடம் ‘பந்தர்' என்று பெயர்பெற்றிருந்தது. பந்தர் என்னும் அரபுச் சொல்லின் பொருள், அங்காடி அல்லது கடைத்தெரு என்பது. முசிறி நகரத்து பந்தரில் அரபு வாணிகர் முக்கியமாக முத்துக்களை விற்றார்கள். பந்தருக்கு அருகில் இருந்த கொடுமணம் என்னும் ஊர், பொன் நகைகளுக்கு பேர் பெற்றிருந்தது. முசிறிப் பட்டினத்துப் பந்தர் கொடுமணம் என்னும் ஊர்களில் நகை வாணிகம் சிறப்பாக இருந்தது.

கொடுமணம் பட்ட நெடுமொழி யொக்கலொடு
பந்தர்ப் பெயரிய பேரிசை முதூர்க்
கடனறி மரபிற் கைவல் பாண
தெண்கடல் முத்தமொடு நன்கலம் பெறுகுவை45
கொடுமணம் பட்ட வினைமாண் நன்கலம்
பந்தர்ப் பயந்த பலர்புகழ் மூத்தம்46

முசிறித் துறைமுகத்திலிருந்து கிரேக்க யவனர் பல பொருள்களை ஏற்றுமதி செய்துகொண்டு போனார்கள். அப்பொருள்களில் முக்கியமான ஏற்றுமதிப் பொருள் மிளகு. அதிக அளவான மிளகை ஏற்றிக் கொண்டு போவதற்காக யவனக் கப்பல்கள் பெரிதாக இருந்தன. மத்திய தரைக் கடல் நாடுகளில் மிளகு அக்காலத்தில் அதிகமாகச் செலவாயிற்று. யவனர் மிளகை அதிகமாக வாங்கிக் கொண்டுபோனபடியால் மிளகுக்கு 'யவனப் பிரியா' என்று வடமொழியாளர் பெயரிட்டனர்.

யவனக் கப்பல் வாணிகர் முசிறித் துறைமுகத்துக்கு வந்து மிளகை வாங்கிச் சென்றதை சங்கப்புலவர் தங்கள் செய்யுட்களில் கூறியுள்ளனர்.

யவனர் மரக்கலங்களில் முசிறித் துறைமுகத்துக்கு வந்து பொன்னைக் கொடுத்து கறியை (கறி - மிளகு) ஏற்றிக் கொண்டு போனதைப் புலவர் தாயங்கண்ணனார் கூறுகிறார்.

சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி

47

முசிறித் துறைமுகத்தில் நடந்த மிளகு வாணிகத்தைப் புலவர் பரணரும் கூறுகிறார். உள்நாடுகளில் விளைந்த மிளகைப் பறித்துச் சேர்த்து மூட்டைகளாகக் கட்டி முசிறித் துறைமுகத்துக்கு அனுப்பினார்கள். யவனக் கப்பல்கள் வந்தபோது மிளகு மூட்டைகளைப் படகுகளில் ஏற்றிக்கொண்டு போய்ப் பெரிய யவன நாவாய்களில் ஏற்றினார்கள். ஏற்றின மிளகுக்கு ஈடாக யவனர் தந்த பொற்காசுகளை வாங்கிக் கொண்டு வந்தார்கள் என்று பரணர் கூறுகிறார்.

மனைக் குவைஇய கறிமூடையால்
கலிச்சும்மைய கரை கலக்குறுத்து
கலந் தந்த பொற்பரிசம்
கழித் தோணியாற் கரைசேர்க்குந்து48

(மனைக்குவை இய - வீடுகளில் குவித்துவைத்த, கறிமூடை - மிளகு மூட்டை, கலம்தந்த - யவனரின் மரக்கலம் கொண்டுவந்த, பொற்பரிசும் - பொன்விலை) இச்செய்யுளில் 'கழித்தோணி' கூறப்படுகிறது. கழிகள் (உப்பங்கழிகள்) முசிறித் துறைமுகப்பட்டினத்தில் இருந்தன என்பது இதனால் தெரிகிறது. உப்பங்கழிகள் இக்காலத்தில் 'காயல்' என்று கூறப்படுகின்றன.

முசிறித் துறைமுகம், முசிறிப் பட்டினத்தில் சுள்ளியாறு கடலில் கலக்கிற இடத்தில் ஆற்றின் வடக்குக் கரையில் இருந்தது. அந்தத் துறை முகத்தில் அரபுநாடு முதலான நாடுகளிலிருந்து வந்த படகுகள் வந்து தங்கின. ஆனால், யவனரின் பெரிய கப்பல்கள் துறைமுகத்தில் வந்து நிற்கவில்லை. ஏனென்றால், பெரியாறு அடித்துக் கொண்டுவந்த மணல் நெடுங்காலமாக துறைமுகத்தில் தூர்ந்து கொண்டு, அந்த இடத்தை ஆழம் இல்லாமல் செய்துவிட்டது. யவனக் கப்பல்கள் பெரிதாகவும் உயரமாகவும் இருந்தபடியால் அவை துறைமுகத்தில் வந்து நிற்காமல், தூரத்தில் கடலிலேயே நின்றன. ஆகையால் சரக்குகளைத் தோணிகளில் ஏற்றிக் கொண்டுபோய் யவனக் கப்பல்களில் இறக்கினார்கள். இந்தச் செய்தியை யவனர்கள் எழுதிய குறிப்பிலிருந்து அறிகிறோம்.

துறைமுகத்தைச் சார்ந்து முசிறிப்பட்டினம் பெரிதாக இருந்தது. வடக்குத் தெற்காகவும் கிழக்கு மேற்காகவும் வீதிகள் அமைந்திருந்தன. அங்குக் கரையோரங்களில் நெய்தல் நிலமக்களின் குப்பங்கள் இருந்தன. அவர்கள் கடலில் சென்று மீன்பிடித்து, விற்று வாழ்ந்தனர். அயல்நாடுகளிலிருந்து வாணிகத்துக்காக வந்த அராபியர், யவனர் முதலானவர் தங்கியிருந்த இடங்களும் இருந்தன. தொழிலாளிகளும் பல பொருள்களை ஏற்றுமதி இறக்குமதிசெய்த வாணிகர்களும் அந்நகரத்தில் வாழ்ந்தனர். வஞ்சிமா நகரத்தில் கிழக்கு மேற்காக அமைந்திருந்த நெடுஞ்சாலை தொடர்ந்து கடற்கரை வரையில் சென்றது. கடற்கரைப் பக்கமாக, உரோம நாட்டு சக்கரவர்த்தி அகுஸ்தஸ் ஸீசரின் கோயில் கடற்கரையோரத்தில் இருந்ததை முன்னமே கூறினோம்.

முசிறிப்பட்டினத்தின் நடுவில் ஒரு கோவில் இஐந்தது. அந்தக் கோயில் எந்தத் தெய்வத்துக்குரியது என்பது தெரியவில்லை. அந்தக் கோயிலில் இருந்த படிமத்தை (தெய்வ உருவத்தை)ப் பாண்டியன் ஒருவன் கவர்ந்துகொண்டு போனான். பாண்டியன் முசிறிப் பட்டினத்தை முற்றுகையிட்டு நகரத்தை வென்று அங்கிருந்த படிமத்தை கொண்டு போனான் என்று தாயங்கண்ணனார் கூறுகிறார்.

வளங்கெழு முசிறி யார்ப்பெழவளைஇ
அருஞ்சமங்கடந்து படிமம் வவ்விய
நெடுநல் யானை யடுபோர்ச் செழியன்49

முசிறிப் பட்டினத்தை முற்றுகையிட்டுப் போர் செய்த செழியன் (பாண்டியன்) அந்தப் போரை வென்று, சேரனுடைய யானைப் படையில் இருந்த யானைகளைக் கவர்ந்தான் என்று நக்கீரர் கூறுகிறார்.

கொய் சுவற்புரவிக் கொடித்தேர்ச் செழியன்
முதுநீர் முன்றுறை முசிறி முற்றிக்
களிறுபட பெருக்கிய கல்லென் ஞாட்பு50

முசிறிப் பட்டினத்தில் போர்செய்த பாண்டியன், தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியனாகத் தோன்றுகிறான். இவனுடைய போர் செய்து தோற்ற சேரன், குட்வன் சேரல் என்று தோன்றுகிறது. குட்டுவன் சேரலுக்குக் கோக்கோதை மார்பன் என்னும் பெயரும் வழங்கியது. குட்டுவன் சேரலாகிய கோக்கோதை மார்பன், சேரன் செங்குட்டுவனுடைய மகன். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் கோக்கோதை மார்பனும் சமகாலத்தவர்.

நகரங்களின் அழிவு

சங்க காலத் தமிழகம் கிழக்கு மேற்கு தெற்கு ஆகிய மூன்று பக்கங்களில் மிக நீண்ட கடற்கரையைக் கொண்டிருந்தது. கடற்கரை யோரங்களிலிருந்த பல ஊர்களைக் கடல் அழித்துவிட்டது. கடற்கோள் களினால் பல ஊர்கள் அழிந்துபோனதைத், தமிழ் இலக்கியங்களும் செவிவழிச் செய்திகளும் கூறுகின்றன. முன் ஒரு காலத்தில்... ... இலங்கைத் தீவாக மாறிவிட்டது என்பதை நில நூல் வல்லவர் கூறுகின்றனர். பழைய இலங்கையிலும் இரண்டு கடல் கோள்கள் நிகழ்ந்ததை மகாவம்சம் கூறுகிறது. பழங்காலத்தில் பாண்டி நாட்டுக் குள்ளே (ஐந்து மைல் உள்ளே) வந்திருந்த கொற்கைக்குடாக்கடல், தாமிரபரணியாற்றினாலும் கடல் அலைகளினாலும் மணல் தூர்ந்து பையப் பையப் பிற்காலத்தில் மறைந்து, அந்தக்கடல் பகுதி நிலமாக மாறிவிட்டதையறிகிறோம். தொண்டை நாட்டில் கடற்கரையோரத்தில் இருந்த பவத்திரிக்கோட்டம் பிற்காலத்தில் கடலில் முழுகி மறைந்து போய், இப்போது பழவேற்காடு ஏரி என்று பெயர் பெற்றிருந்தது. இவ்வாறு ஒரு பெரிய கோட்டம் ஒன்று முழுகிப் போயிற்று. இராமநாதபுரத்தோடு இணைந்து கடலுக்குள் இருந்த நிலப் பகுதி, பிற்காலத்தில் உடையுண்டு, இப்போது இராமேசு வரத் தீவாக மாறிப் போயிற்று. இவ்வாறு தமிழகத்தின் கரையோரங் களில் பல அழிவுகள் ஏற்பட்டுள்ளன. மேற்கு கரையிலிருந்த பழைய சேரநாட்டிலும் பல கடற்கோள்களினால் கடற்கரைப் பட்டினங்களும் ஊர்களும் மறைந்து போயின. சேரநாட்டின் கடற்கரையோரத்தில் இருந்த பேர்போன மூலவாசம் என்னும் ஊர், புத்தக் கோவிலுக்குப் பெயர் பெற்றிருந்தது. அந்த ஊர் ஸ்ரீ மூலவாசம் என்று உலகப்புகழ் படைத்திருந்தது. பிற்காலத்தில் (கி.பி. 11-ம் நூற்றாண்டில்) அந்த ஊர் கடலினால் அழிக்கப்பட்டு மறைந்து போயிற்று.

இவற்றைப் போலவே, சேரநாட்டில் உலகப் புகழ் பெற்றிருந்த வஞ்சி மாநகரமும் முசிறிப் பட்டினமும் பிற்காலத்தில் கடலில் முழுகி, மறைந்து போயின. முதலில் கடற்கரைக்கு அருகில் இருந்த முசிறித் துறைமுகமும் பட்டினமும் அழிந்து போயின. பிறகு, பிற்காலத்தில் வஞ்சிமா நகரத்தின் பெரும்பகுதி ஊர்கள் மறைந்து போயின. இந்த நகரங்களின் அழிவுக்கு காரணமாக இருந்தது சுள்ளி ஆறாகிய பேரியாறுதான். மேற்குத் தொடர்ச்சிமலையில் அயிரிமலைமேல் தோன்றி, தரையில் இழிந்து நாட்டில் பாய்ந்து, கடலில் புகுந்த பேரியாறு, பல நூற்றாண்டுகளாக மணலை அடித்துக் கொண்டுபோய் கடலுக்கு அருகில் இருந்த துறைமுகத்தைத் தூர்த்துக் கொண்டு வந்தது. துறைமுகத்தைத் தூர்த்துக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், இந்த ஆறே தூர்ந்துகொண்டு ஆழமில்லாமற் போயிற்று. முசிறித் துறைமுகம் மணல் தூர்ந்து ஆழமில்லாமற் போனபடியால், யவனரின் பெரிய கப்பல்கள் துறைமுகத்துக்குள் வரமுடியாமற் போனதை முன்னமே கண்டோம்.

பெரியாற்றில் எப்போதும் வெள்ளம் இருந்தது என்பதைச் சங்கச் செய்யுட்களிலிருந்து அறிகிறோம்.

கோடை நீடக் குன்றம் புல்லென
அருவியற்ற பெருவறற் காலையும்
நிவந்து கரையிழிதரு நனந்தலைப் பேரியாறு

என்று பாலைக் கவுதமனார் பாடினார்.51 ‘புனல் பேரியாறு' என்று பெருங்குன்றூர் கிழார் பாடினார்.52 வறண்ட காலத்திலும் பேரியாற்றில் வெள்ளம் பாய்ந்தோடியது என்றும் அந்த வெள்ளம் கரைகளை உடைத்துப் பக்கங்களில் பரவிற்று என்றும் பரணர் பாடினார்.

குன்று வறங்கூரச் சுடர்சினந்திகழ
அருவியற்ற பெருவறற் காலையும்
அருஞ்செயற் பேராறு இருங்கரையுடைத்து53

ஆற்று வெள்ளம் இரு கரைகளிலும் வழிந்து பாய்ந்தது என்று கூறுகிற படியால், ஆறே காலப்போக்கில் மணல் தூர்ந்து ஆழமில்லாமற் போயிற்று என்று தெரிகிறது. இவ்வாறு மணல் தூர்ந்து ஆழமில்லமற் போன பேரியாறு, கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் ஓராண்டில் பெரும் மழை பெய்து வெள்ளப் பெருக்கெடுத்தது. அப்போது கடலும் கொந்தளித்து அலைபொங்கியது. அதனால், முசிறிப் பட்டினமும் அதனைச் சார்ந்த கடற்கரை ஊர்களும் கடலில் மூழ்கி, மறைந்து போயின.

சேரநாட்டு வஞ்சிநகரமும் முசிறிப்பட்டினமும் பிற்காலத்தில் மறைந்துபோயின. மறைந்துபோன அந்த நகரங்களைப் பற்றின செய்திகளைச் சங்க காலத்து நூல்களும் சங்கச் செய்யுட்களும் நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன. இந்நூல்களின் உதவியினால் மறைந்துபோன அந்த நகரங்களின் அமைப்புகளை ஒருவாறு படம் எழுதிப் பார்க்கிறோம்.

✽✽✽

அடிக்குறிப்புகள்

1. Vancimanagar or the Great city calledVancii C.S. Cheluva Aiyar. PP. 113-134. Journal of Oriental Research Madras. Vol. IIIï The Karora of Ptolemy. K.V. Krishna Ayyar. PP. 119-120. Indian Historical quarterly. Vol. V; Vanchi or Karuvur - the ancient Chera Caital K. G. Sesha Ayyar PP. 249-259, Kerala Society Pers Trivandrum Series. 9-10. Vanci Mutur K.G. Sesha Ayyar Rama Varma Reswearch Institute Bulletin No. 3 PP. 1-9. Ganganur - A' Study K.R. Pisharoti. PP. 33-36. Rama Varma Research Institute Bulletin Volo. I., Ganganur A Reply. Raja K. Rama Varma. Rama Varma Research Institute Bulletin. NO. 2 PP. 64-071., Karuvur or Vanjimanagar C.M. Ramachandran Chettiar. Quar- terly Journal of the Mythic Society Vol. XXVI. PP. 144- 46.

2. கொங்கு நாட்டு வரலாறு. மயிலை. சீனி வேங்கடசாமி, 1974. பக்கம். 18.

3. பதிற்றுப்பத்து, மூன்றாம் பத்து 1.29., பதிகம். 'அயிரை மரைஇ' இதன் பழைய உரை காண்க. ஏழாம் பத்து, 10.26., 'உரு கெழுமரபின் அயிரைபரைஇ' 9-ம் பத்து 8.12. இதன் பழைய உரை காண்க. 10.19.

4. 'சுள்ளியம் பேரியாறு' என்று அகம் 149. கூறுகிறது.

5. பதிற்றுப்பத்து. ஐந்தாம் பத்து. 8. 12-18.

6. .............

7. ௸ அடி. 107-15.

8. கௌடல்லியர், அர்த்த சாத்திரம். 3-ம் பகுதி, 11ஆம் அதிகாரம். மயிலை. சீனி. வேங்கடசாமி எழுதிய 'சேரநாட்டு முத்து' என்னும் கட்டுரை காண்க. தெ.பொ.மீ. மணிவிழா மலர். பக்கம். 493-498.

9. மணிமேகலை 28ஆம் காதை அடி. 59-66

10. ௸ 31-34.

11. ௸ 34 - 43.

12. ௸ 43-47

13. ௸ 49-54

14. ௸ 56 - 58.

15. ௸ 5-22

16. சிலப்பதிகாரம், 28-ம் காதை. 49 - 50

17. ௸ 50-77

18. ௸ 78-79

19. ௸ 26ம் காதை. 54 - 57, 62 - 63.

20. ௸ 25 ம் காதை. 4.

21. ௸

22. ௸ 3-9,21-23.

23. மணிமேகலை, 28ம் காதை. அடி. 24.

24. ௸ 18-22.

25. ௸ 5-17.

26. மணிமேகலை 28-ம் காதை. அடி. 23 - 24.

27. பதிற்றுப்பத்து, ஆறாம்பத்து. 3: 7-9.

28. ௸ 3.6.

29. திருமுருகாற்றுப்படை. 67 -71.

30. மணிமேகலை. 28-ஆம் காதை. அடி. 24 - 28.

31. ௸ 26ம் காதை. அடி. 72-76.

32. சிலப்பதிகாரம், பதிகம். அடி. 1-2.

33. ௸ 30-ம் காதை. அடி. 179.

34. A Note on Gunavayil Kottam. A Govinda Wariar. P. 232 ff. Quarterly Journal of Mythic Society Bangalore. Vol. XIX, Kunavayirkkottam and Vanci. Rao Sahib Sahityabushana. S. pramesvera Aiyar PP. 241 - 254. Professor K. V. Rengaswami Aiyengar Comjemmoration Volume 1940. 'விஞ்ஞான தீபிகா' மூன்றாம் தொகுதி பக்கம். 21. தொகுதி 4. (மலையாள மொழி)

35. சிலப்பதிகாரம் 30-ம் காதை. அடி. 168 170.

36. சிலப்பதிகாரம் 30-ம் காதை அடி. 170-171.

37. சிலப்பதிகாரம் 28-ம் காதை அடி. 196-198.

38. மணிமேகலை 28-காதை. அடி. 123 - 132.

39. 'மணிமேகலையின் விண்வழிச் செலவு' மயிலை. சீனி. வேங்கடசாமி. பக்கம். 176.-182 கரந்தைத் தமிழ்ச் சங்கம் மணிவிழா மலர். 1973.

40. .............

41. மணிமேகலை, 28-ம் காதை அடி. 2-4.

42. அகநானூறு, 57:15.

43. புறநானூறு, 343 : 10.

44. Sir Mortimer Wheeler., Rome Beyond the Imperial Frontiers. P. 209.

45. பதிற்றுப்பத்து, ஏழாம்பத்து. 7.1-4.

46. ௸ 8: 4.5-6 'நன்கல வெறுக்கை துஞ்சும்பந்தர்' 5 : 5.4.

47. அகநானூறு. 149.7-11.

48. புறநானூறு, 343.3-6.

49. அகநானூறு, 149. 11-13.

50. ௸ 57.14-16.

51. பதிற்றுப்பத்து, 3: 8.8-10.

52. ௸ 9: 8.25.

53. ௸ 5: 3.13-15.

  1. தமிழியல் - Journal of Tamil Studies. 9 : 1976.