மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4/017
16. சிறுபாணன் சென்ற பெருவழி[1]
சிறுபாணாற்றுப் படை என்பது பத்துப்பாட்டில் ஒரு பாட்டு. நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர், நல்லியக்கோடன் என்னும் வள்ளலைப் பாடியது சிறுபாணாற்றறுப் படை. இதில் நல்லியக்கோடனிடம் சென்று பரிசு பெறும்படி நத்தத்தனார் ஒரு பாணனை ஆற்றுப்படுத்துகிறார். (ஆறு = வழி. ஆற்றுப்படுத்தல் = வழிகூறுதல்.)
சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவனாகிய நல்லியக் கோடன், ஓய்மா நாட்டின் அரசன். எயிற்பட்டினம், மாவிலங்கை, கிடங்கில் முதலிய ஊர்கள், இவனுக்கு உரியன. ஆகவே, எயிற்பட்டின நாடன், மாவிலங்கை மன்னன், கிடங்கிற்கோமான் என்று போற்றப்படுகிறான். ஓவியர் குலத்தில் பிறந்தவனாகலின் ஓவியர் பெருமகன் என்றும் கூறப்படுகிறான்.
“தொன்மா விலங்கைக் கருவொடு பெயரிய
நன்மா விலங்கை மன்னருள்ளும்
மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வாள்
உறுபுலித் துப்பின் ஓவியர் பெருமகன்”
என்றும் (சிறுபாண். 120-122)
“இழுமென ஒலிக்கும் புனலம் புதவிற்
பெருமா விலங்கைத் தலைவன் சீறியாழ்
இல்லோர் சொன்மலை நல்லியக் கோடன்”
என்றும் (புறம். 176) புகழப்படுகிறான்.
நல்லூர் நத்தத்தனார், நல்லியக்கோடனுடைய தலைநகரமான கிடங்கில் என்னும் ஊருக்குச் சிறுபாணனை ஆற்றுப்படுத்திய வழியை ஆராய்ந்து படம் வரைந்து காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம். சிறுபாணன், கிடங்கிலை நோக்கிச் சென்ற பெருவழியின் இடையிலே எயிற்பட்டினம், வேலூர், ஆமூர் என்னும் ஊர்கள் இருந்தன.
எயிற்பட்டினம் என்பது கிழக்குக் கடற்கரை ஓரமாக இருந்த ஓர் துறைமுகப்பட்டினம். எயிற்பட்டினத்தைச் சூழ்ந்து மதிற்சுவர் கோட்டையாக அமைந்திருந்தது. ஆகவே, இது எயில் பட்டினம் என்றும் சோ பட்டினம் என்றும் பெயர் பெற்றிருந்தது. (எயில் என்றாலும் சோ என்றாலும் மதில் என்பது பொருள்)
“பாடல் சான்ற நெய்தல் நெடுவழி
மணிநீர் வைப்பு மதிலொடு பெயரிய
பனினீர் படுவிற் பட்டினம்”
என்று இப்பட்டினம் (சிறுபாண். 151-153) கூறப்படுகிறது.
கடல் ஓரமாக நெய்தல் நிலத்திலே இருந்த எயிற் பட்டினத்துக்கு மேற்கே குறிஞ்சி நிலத்திலே, நல்லியக்கோடனுடைய தலைநகரமான கிடங்கில் என்னும் ஊர் இருந்தது. இதனை,
“குறிஞ்சிக் கோமான் கொய்தளிர்க் கண்ணிச்
செல்லிசை நிலைஇய பண்பின்
நல்லியக் கோடன்”
என்று (சிறுபாண். 267-269) ஆற்றுப்படை கூறுகிறது.
நெய்தல் நிலத்து எயிற் பட்டினத்துக்கும் குறிஞ்சி நிலத்துக் கிடங்கிலுக்கும் இடையிலே வேலூர், ஆமூர் என்னும் ஊர்கள் இருந்தன. இவ்வூர்கள் எல்லாம் ஓய்மா நாட்டில் அடங்கியிருந்தன. ஓய்மா நாடு என்பது இப்போதைய தென் ஆர்க்காடு மாவட்டத்தில் திண்டிவனம் தாலுகாவில் இருந்தது.
சிறுபாணன் சென்ற பெரு வழியைப் பார்ப்பதற்கு முன்னர் நத்தத்தனார் இருந்த ஊரை அறியவேண்டும். இவர் நல்லூர் நத்தத்தனார் என்று கூறப்படுகிறார். தமிழ் நாட்டிலே நல்லூர் என்னும் பெயருள்ள ஊர்கள் பல உள்ளன. நத்தத்தனார் இருந்த நல்லூர் எது என்று இடர்ப்படாதபடி, இடைகழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் என்று கூறப்படுகிறார்.
இடைகழி நாடு என்பது எது? இடைகழி நாடு இப்போது எடக்குநாடு என்று வழங்கப்படுகிறது. எடக்குநாடு என்பது இடைகழி நாடு என்பதன் திரிபு. இடைகழி நாடாகிய எடக்கு நாடு, செங்கற்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் தாலுகாவில் இருக்கிறது. இந்த எடக்கு (இடைகழி) நாட்டிலே இப்போதும் ஒரு நல்லூர் என்னும் சிற்றூர் இருக்கிறது. இந்த இடைகழி நாட்டு நல்லூரிலே நத்தத்தனார் என்னும் புலவர் வாழ்ந்தவராதல் வேண்டும். இடைகழி நாட்டுக்கு அண்மையிலே, தெற்குப் பக்கத்திலே நல்லியக் கோடனுடைய ஓய்மா நாடு இருந்தது.
இனி, நத்தத்தனார் சிறுபாணனை ஆற்றுப்படுத்திய பெருவழியைக் காண்போம். இடைகழி நாட்டு நல்லூரிலிருந்து தெற்கே சென்றால், ஓய்மா நாட்டின் கிழக்குப் பகுதியாகிய பட்டின நாட்டை அடையலாம். பட்டின நாடு கடற்கரையைச் சார்ந்த நாடு. பட்டின நாட்டிலே கடற்கரை ஓரமாக எயில் (சோ) பட்டினமும் துறைமுகமும் இருந்தன. ஓய்மா நாட்டின் கடற்கரைப் பகுதியாகிய பட்டின நாடு, பெரும்பான்மையும் நீரும் நிலமுமாக அமைந்திருந்தபடியினாலே, அது மாவிலங்கை என்று பெயர் பெற்றது.
கடற்கரை ஓரமாக நீரும் நிலமும் ஆக அமைந்த இடம் இலங்கை என்று பெயர் பெறும். ஆறுகள் கடலில் கலக்கிற இடத்தில் கிளைகளாகப் பிரிந்து இடையிடையே நீரும் திடலுமாக அமைவது உண்டு. அன்றியும் காயல் என்னும் பெயருள்ள நீர்த்தேக்கமும் கடற்கரை ஓரமாக அமைவதும் உண்டு. இவ்வாறு நீரும் திடலுமாக அமைந்த இடத்தை லங்கா (இலங்கை) என்று ஆந்திர நாட்டவர் இன்றும் வழங்குவர். நீரும், திடலுமாக அமைந்திருந்த பட்டின நாடு மாவிலங்கை என்றும் பெயர் பெற்றிருந்தது. (லங்கா அல்லது இலங்கை என்பது பழைய திராவிட மொழிச் சொல் என்று தோன்றுகிறது.) இப்போதும் ஓய்மா நாட்டு மாவிலங்கைப் பகுதியில் ஏரிகளும் ஓடைகளும் உப்பளங்களும் காணப்படுகின்றன.
ஓய்மா நாட்டின் கடற்கரைப் பகுதியாகிய பட்டின நாட்டிலே, (மாவிலங்கையிலே), கடற்கரை ஓரத்தில் எயில் (சோ) பட்டினம் இருந்ததென்று கூறினோம். பண்டைக் காலத்தில் இருந்த எயிற் பட்டினம் இப்போது மறைந்துவிட்டது. அந்த இடத்தில் இப்போது மரக்காணம் என்னும் ஊர் இருக்கிறது. இவ்வூரில் பிற்காலச் சோழர்களின் சாசன எழுத்துக்கள் காணப்படுகின்றன. இந்தச் சாசனங்களிலே, ‘ஓய்மா நாட்டுப் பட்டின நாட்டு மரக்காணம்’ என்றும் ‘ஓய்மா நாட்டுப் பட்டின நாட்டுப் பட்டினம்’ என்றும் ‘பட்டின நாட்டு எயிற் பட்டினம்’ என்றும் இவ்வூர் கூறப்படுகிறது. எனவே, பழைய எயிற்பட்டினந்தான் பிற்காலத்தில் மரக்காணம் என்று பெயர் பெற்றது என்று கருதலாம். இலக்கண விளக்கப் பரம்பரை சோமசுந்தர தேசிகர் அவர்கள் இப்போதைய கூடலூர்தான் பழைய எயிற்பட்டினம் என்று கருதுகிறார். (Idenfication of Sopatama by S.S. Desikar. pp. 129 - 140. Quarterly Journal of Mythic Society, Vol. XXI.) அது தவறு. கூடலூர் துறைமுகம் பிற்காலத்திலே, ஐரோப்பிய வர்த்தகர்களால் அமைக்கப்பட்ட துறைமுகமாகும். ஆகவே, கூடலூரைப் பழைய எயிற்பட்டினம் என்று கூறுவது தவறாகும்.
இடைகழி நாட்டு நல்லூரிலிருந்து புறப்பட்டுச் சென்ற சிறுபாணன், ஓய்மா நாட்டுத் துறைமுகப்பட்டினமாகிய எயிற்பட்டினத்துக்குச் சென்றான். சென்றவன் அங்குத் தங்கினான். பிறகு அங்கிருந்து புறப்பட்டுத் தென்மேற்கே நெடுவழியே நடந்தான். நெடுந்தூரம் நடந்து வேலூர் என்னும் ஊரையடைந்தான். இது முல்லை நிலத்தில் இருந்த ஊர்.
“திறல்வேல் நுதியில் பூத்த கேணி
விறல்வேல் வென்றி வேலூர் எய்தின்
உறுவெயிற் குலைஇய வுருப்பவிர் குரம்பை
எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு
தேமா மேனிச் சில்வளை ஆயமொடு
ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவிர்.”
என்று (சிறுபாண். 172-179) நத்தத்தனார் இந்த வேலூரைப் பாணனுக்கு அறிமுகப்படுத்துகிறார்.
இந்த வேலூரை, வட ஆர்க்காடு மாவட்டத்தில், காட்பாடி ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள வேலூர் என்று இலக்கணவிளக்கப் பரம்பரை சோமசுந்தர தேசிகர் அவர்கள் கருதுகிறார். (Idenfication of Sopatama by S.S. Desikar. pp.129 - 140. Quarterly Journal of Mythic Society, Vol. XXI.) இது தவறு. நத்தத்தனார் கூறுகிற வேலூர், தென் ஆர்க்காடு மாவட்டத்தில் ஓய்மா நாட்டில் இருக்கிறது. தேசிகர் கூறும் வேலூர், வட ஆர்க்காடு மாவட்டத்தில் வேறோர் இடத்தில் இருக்கிறது. இரண்டு ஊர்களும் வெவ்வேறிடங்களில் உள்ள வெவ்வேறு ஊர்கள். நத்தத்தனார் கூறும் வேலூர் அக்காலத்தில் சிறப்புற்றிருந்து, இப்போது குக்கிராமமாக இருக்கிறது. இப்போது வட ஆர்க்காடு மாவட்டத்தில் புகழ் பெற்று விளங்கும் வேலூர் அக்காலத்தில் இருந்ததா என்பது ஐயத்துக்கிடமாக இருக்கிறது. சிறுபாணன் சென்ற வேலூர், தென் ஆர்க்காடு மாவட்டத்தில் திண்டிவனம் தாலுகாவில், கிடங்கிலுக்கும் எயிற்பட்டினத்திற்கும் இடைவழியில் இப்போது குக்கிராமமாக இருக்கிற வேலூரே என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. இந்த வேலூர் ஓய்மா நாட்டு வேலூர் என்று பெயர் பெற்றிருந்தது. இந்த வேலூரின் தலைவன் ‘ஓய்மா நாட்டு வேலூருடையான்’ என்று ஒரு சாசனத்தில் கூறப்படுகிறான். (No.25.S.I.I. Vol. XIII)
வேலூரில் தங்கிய சிறுபாணன், அவ்வூரிலிருந்து புறப்பட்டு வடமேற்காகச் செல்லும் பெருவழியே சென்றான். சென்று மருத நிலத்தில் உள்ள ஆமூர் என்னும் ஊரையடைந்தான்.
“மருதஞ் சான்ற மருதத் தண்பணை
அந்தணர் அருகா அருங்கடி வியநகர்
அந்தண் கிடங்கின் அவனாமூ ரெய்தின்
வலம்பட நடக்கும் வலிபுணர் எருத்தின்
உரன்கெழு நோன்பகட் டுழவர் தங்கை
பிடிக்கை யன்ன பின்னுவீழ் சிறுபுறத்துத்
தொடிக்கை மகடூஉ மகமுறை தடுப்ப
விழுங்கா லுலக்கை யிருப்புமுகந் தேய்த்த
வவைப்பு மாணரிசி யமலைவெண் சோறு
கவைத்தாள் அலவன் கலவையோடு பெருகுவிர்.”
என்று (186–195) சிறுபாணனுக்கு ஆமூரில் கிடைக்கக்கூடிய உணவைக் கூறுகிறார் நத்தத்தனார்.
இந்த ஆமூர் எது என்பது தெரியவில்லை. நல்லாமூர் என்று பெயருள்ள ஊர் ஒன்று இருக்கிறது. இந்த நல்லாமூர் சிறுபாணாற்றுப்படை கூறுகிற ஆமூராக இருக்கக்கூடும். பழைய ஆமூரும் இப்போதைய நல்லாமூரும் ஒரே ஊராக இருக்கக்கூடும். ஏனென்றால் இந்த நல்லாமூர் கிடங்கிலுக்கு அருகில் இருக்கிறது.
ஆமூரிலிருந்து புறப்பட்டு மேற்கே நெடுவழியே சென்றால், கடைசியில் நல்லியக்கோடனுடைய கிடங்கில் என்னும் ஊரையடையலாம் என்று சிறுபாணாற்றுப்படை கூறுகிறது.
எனவே, கிடங்கிலுக்குச் சிறுபாணன் சென்ற பெருவழி, அல்லது நத்தத்தனார் சென்ற பெருவழி இது: இடைகழிநாட்டு நல்லூரிலிருந்து புறப்பட்டு, இப்போதைய மரக்காணமாகிய எயிற்பட்டினத்துக்குப் போய் அங்கிருந்து வேலூருக்குச் சென்று, அங்கிருந்து புறப்பட்டு ஆமூரை அடைந்து, ஆமூரிலிருந்து கிடங்கிலையடைந்தார் என்பது தெரிகிறது. (படம் காண்க)
கிரேக்க ஆசிரியரின் குறிப்புகள்: யவனராகிய கிரேக்கர் கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வரையில் தமிழகத்துடன் வாணிபம் செய்தனர். கிரேக்க நூலாசிரியர்கள், தமிழ் நாட்டிலிருந்த அக்காலத்துத் துறைமுகப்பட்டினங்களைப் பற்றியும் எழுதி இருக்கிறார்கள். அவற்றுள் சோபட்டினமாகிய எயிற்பட்டினமும் குறிக்கப்பட்டிருக்கிறது.
பெரிப்ளஸ் என்னும் நூலாசிரியர், தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் கமரா, பொடுகா, சோபட்மா (Camara, poduca, sopatma) என்னும் துறைமுகப்பட்டினங்களைக் குறிப்பிடுகிறார். டாலமி என்னும் கிரேக்க நூலாசிரியரும் காமரா, போடுகே, மேலங்கே (Kamara, Poduke, melenge) என்னும் துறைமுகப்பட்டினங்களைக் கூறுகிறார்.
பெரிப்ளசும், டாலமியும் கூறுகிற கமரா என்னும் பட்டினம் சோழநாட்டில் பேர் பெற்றிருந்த காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்ப் பட்டினம்) ஆகும்.
பொடுகா என்றும் பொடுகே என்றும் அவர்கள் குறிப்பிடுகிற துறைமுகத்தைச் சிலர், இப்போதுள்ள புதுச்சேரி என்று கருதுகிறார்கள். இது தவறு எனத் தோன்றுகிறது. புதுச்சேரி பழைய துறைமுகப்பட்டினம் அல்ல. கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுக்காரரால் புதுச்சேரி துறைமுகப்பட்டினமாக்கப்பட்டது. எனவே, புதுச்சேரி பழைய துறைமுகம் அல்ல. பொடுகா அல்லது பொடுகே என்று கிரேக்க நூலாசிரியர் குறிப்பிட்ட இடம், புதுச்சேரிக்கு அருகிலே, தெற்குப் பக்கத்தில் கடற்கரை ஓரமாக உள்ள அரிக்கமேடு என்னும் இடமாக இருக்க வேண்டும். அரிக்கமேட்டை அண்மைக் காலத்தில் அகழ்ந்து பார்த்தபோது, அது கி.பி. முதல் நூற்றாண்டில் இருந்த துறைமுகப்பட்டினம் என்பது தெரிந்தது. அங்கிருந்து கண்டெடுக்கப்பட்ட பொருள்கள், அங்கு யவன வாணிகர் தங்கியிருந்ததையும் அது துறைமுகப்பட்டினமாக இருந்தது என்பதையும் தெளிவாகக் காட்டுகின்றன. இது பற்றி ‘பண்டைய இந்தியா’ என்னும் ஆங்கில வெளியீட்டில் விபரமாக அறியலாம். (Arikamedu : An Indo-Roman Trading Station on the East Coast of India. By R.E.M. Wheeler, A. Ghosh and Krishna Deva. Pp. 17-124. "Ancient India". No. 2. 1946)
இதற்கு வடக்கே இருந்தது சோபட்மா என்னும் துறைமுகப்பட்டினம் என்று பெரிப்ளஸ் நூலாசிரியர் குறிப்பிடுகிறார். சோபட்மா என்பது சோபட்னா என்பதன் திரிபு. சோபட்னா என்பது சோபட்டினம் ஆகும். அதாவது எயிற்பட்டினம். சோ என்றாலும் எயில் என்றாலும் மதில் என்பது பொருள். மதில் சூழ்ந்த கோட்டைக்குள் அமைந்திருந்தபடியால் எயில் பட்டினம் என்றும் சோபட்டினம் என்றும் பெயர் பெற்றிருந்தது.
எயிற் பட்டினமாகிய சோபட்டினத்தை டாலமி என்பவர் மேலங்கே என்று கூறுகிறார். மேலங்கே என்பது சிறுபாணாற்றுப்படை கூறுகிற மாவிலங்கை ஆகும். ஓய்மா நாட்டின் கடற்கரைப் பகுதிக்குப் பட்டினநாடு என்பது பெயர். பட்டின நாட்டில் நீரும் திடலும் அதிகமாகக் காணப்பட்டபடியால் அப்பகுதி மாவிலங்கை என்று பெயர் பெற்றிருந்தது என்று மேலே கூறினோம். டாலமி ஆசிரியர் மேலங்கே என்று கூறுகின்ற மாவிலங்கை, மாவிலங்கையில் இருந்த எயில் (சோ) பட்டினந்தான் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டுக்கு வந்த யுவாங் சுவாங் என்னும் சீன நாட்டு யாத்திரிகர், பல்லவ அரசர்களின் துறைமுகப்பட்டினமாகிய மாமல்லபுரத்தைக் கூறும்போது, அது காஞ்சிபுரத்தைச் சேர்ந்திருந்தபடியால், காஞ்சிபுரத் துறைமுகம் என்று கூறியிருப்பது இங்கு கருதத்தக்கது. அதுபோலவே மாவிலங்கையிலிருந்து எயிற்பட்டினம் என்னும் துறைமுகத்தை டாலமி, மேலங்கே என்று குறிப்பிட்டுள்ளார்.
பெரிப்ளஸ் கூறுகிற சோபட்மா என்பதும், டாலமி கூறுகிற மேலங்கே என்பதும் ஐயமில்லாமல் சோபட்டினமாகிய எயில்பட்டினம் என்பது தெளிவாகிறது. எயில் பட்டினம் இப்போது மரக்காணம் என்று பெயர் பெற்றிருக்கிறது என்பதை மேலே கூறியுள்ளேன்.
குறிப்பு : கிடங்கில் என்னும் ஊரிலிருந்து மரக்காணத்திற்கு (எயில் பட்டினத்துக்குச் செல்லும் நேர் வழி ஒன்று இப்போது இருக்கிறது. இப்பெருவழியைப் புள்ளிக் கோட்டினால் படத்தில் காட்டியுள்ளேன். இந்தப் பெருவழி சிறுபாணாற்றுப் படை காலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. இது பிற்காலத்தில் அமைந்த வழியாக இருக்கலாம். பழைய சாலைகள் மறைந்து போவதும் புதிய காலைகள் புதிதாகத் தோன்றுவதும் இயற்கையே. உதாரணமாக மாமல்லபுரத்திலிருந்து நேரே காஞ்சிபுரத்திற்குச் சென்ற பழைய பல்லவர் காலத்துப் பெருவழி, இக்காலத்தில் முழுவதும் மறைந்து போய், புதிய சாலைகள் தோன்றியிருப்பதைக் காண்கிறோம்.
சிறுபாணாற்றுப்படையில் கூறப்படுகிற ஊர்களைக் கொண்டும் நாட்டுப் படத்தில் காணப்படுகிற அவ்வூர்களின் அமைப்பைக் கொண்டும், இந்தப்படமும் கட்டுரையும் எழுதப்பட்டன. இதனை ஆராய்ந்து பார்த்து இது சரியா தவறா என்பதை முடிவு செய்வது வாசகர் கடமையாகும்.
✽✽✽
- ↑ Tamil Culture. Vol. IX, 1961. Jan- March.