மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5/002
முன்னுரை
என் ஆசான் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களைக் குறித்துத் தமிழ் ஆராய்ச்சியுலகுக்கு அறிமுகம் செய்யவேண்டிய அவசியமில்லை. தம் 80 ஆண்டு வாழ்க்கையில் அவர் 60 ஆண்டுகளுக்குக் குறையாமல் ஆராய்ச்சித் துறைக்கே தம்மை ஒப்படைத்துக்கொண்டார். ஒழுங்கான கல்வி கேள்வியோடு ஓர் உள்ளுணர்வும் (Insight) அவருக்கு இருந்தது; அது தமிழக வரலாற்றுச் சிக்கல்கள் பலவற்றைச் சுலபமாகத் துலங்க வைத்தது. கடுமையான உழைப்பும், உண்மை காணும் வேட்கையும், அவற்றைக் குழப்பாமல் வெளியிடும் பெற்றியும் அவருக்கேயுரிய சிறப்புகளாகும்.
அவர் புரிந்த பல ஆராய்ச்சிகளில் கடைசிக் காலத்தில் புரிந்த ஒன்று, சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துகள் பற்றியது. இது தமிழக வரலாற்றின் சில முக்கியமான பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க உதவுகிறது; கிறிஸ்துவுக்கு முந்திய நூற்றாண்டுகளின் தமிழக வரலாற்றை வரையறுக்கத் துணைபுரிகிறது; கடைச்சங்க காலத்தை அறுதியிட மெத்தவும் கைகொடுக்கிறது.
தமிழகத்து மலைக்குகைகளில் கிடைத்த இப்பிராமிக் கல்வெட்டுகளைச் சில தேர்ந்த அறிஞர்கள் கண்டுபிடித்தார்கள் என்றாலும், அவற்றைச் சரியாகப் படித்தறியத் தமிழ் மொழி, இலக்கியம், இலக்கணம்,பண்பாடு, வரன்முறை முதலியவற்றில் ஊன்றிய அறிவு தேவை; கிடைத்த கல்வெட்டுகள் யாவும் ஜைன முனிவர்களுக்கு வழங்கப்பட்ட மலைக்குகைகளிலேயே காணப்படுவதால், ஜைனசமய ஞானமும் ஓரளவு வேண்டும்; இவற்றோடு தமிழக வரலாற்றைப் பொறுப்போடும் கண்ணியாகவும் துல்லியத்துடனும் கணிக்க வேண்டும் என்கிற நல்வெண்ணமும் அவசியம். இவை யாவும் அமைந்தவராக மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் விளங்குவதனால், அவருடைய வாசிப்பை Reading நாம் கணிசமாக நம்ப முடியும்.
எதனையும் தம்மால் இயன்ற அளவு ஒழுங்காகத் தொகுத்து, கூர்ந்து ஆராய்ந்து, உத்தமமாகத் தமிழ் மக்களுக்கும் உலக மக்களுக்கும் படைப்பது மயிலை சீனி. அவர்களின் வழக்கம். அதன்படி, அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுகளையும் மிகுந்த உழைப்புடன் உழைப்புடன் சேகரித்து சேகரித்து வகைப்படுத்தி வாசகங்களைப் படித்துக் காட்டுகின்றார்; ஏறத்தாழ 18 ஊர்களில் கிடைத்த பிராமிக் கல்வெட்டுகளை இதில் சேர்த்திருக்கிறார். கடைசியில், தற்போது பத்திரிகைகளில் அதிகமாகப் பேசப்படும் அதிகமான் நெடுமான் அஞ்சியின் கல்வெட்டும் ஆராயப்படுகிறது. இவ்வாராய்ச்சிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால், தமிழகத்தின் கடைச்சங்ககாலம் கி.மு. 3லிருந்து கி.பி. 3வரை என்பதும் உறுதியாகும்; இஃது இந்திய வரலாற்றுக்கும் ஒளி சேர்க்கும்.
தமிழகத்தில் கடைச் சங்க காலத்தில் வழங்கிய எழுத்து முறை (Script) பற்றி அறிவதற்குக்கூடப் பிராமிக் கல்வெட்டுகள் துணைநிற்கின்றன. இந்திய தேசத்தில் அசோகன் காலத்திலிருந்து கி.பி. 3ஆம் நூற்றாண்டுவரை பிராமி (Brahmi) எழுத்து முறையே வழக்கில் இருந்தது என்கிற கொள்கையை ஆய்வதற்கும் இவை ஒத்தாசை புரிகின்றன. ஆனால், மலைக் குகை ஜைனக் கல்வெட்டுகளில் கையாளப்பட்ட வரிவடிவத்தை வைத்துக்கொண்டே, தமிழ் மக்கள் தங்கள் மொழியைப் பிராமி எழுத்திலேயே எழுதினர் என்று சொல்ல முடியுமா என்கிற கேள்வி இங்கு எழுகிறது. இதற்கு மயிலை சீனி. அவர்கள் ஒரு பதில் கூறினார்.
'தற்போது, தமிழகத்துக் குகைக் கல்வெட்டுகளில் பிராமி எழுத்துத் தான் கிடைக்கிறது என்பது உண்மைதான்; ஆனால், அப் பிராமியில் வடபிராமிக்கும் தென்பிராமிக்கும் வேறுபாடு இருக்கிறது; வட பிராமியில் ந,ழ,ள,ற, ஃபோன்ற எழுத்துகள் காணப்படவில்லை; தென் பிராமியில் இவற்றில் சில காணப்படுகின்றன. அப்படியானால், அவ் வெழுத்துக்கள் வேறு ஏதோ உள்நாட்டு வரிவடிவில் (Local Script) இருந்த எழுத்துகளாக இருக்கலாம் அல்லவா? அந்த வரிவடிவு ஏட்டுச்சுவடிகள் மூலம் நமக்குக் கிடைக்க முடியாதே? ஆனால், அக்காலத்திய அஃதாவது, கடைச் சங்க காலத்திய நடுகற்கள் அல்லது வீரக்கற்கள் கிடைத்தால், அவற்றில் உள்ள எழுத்தைக் கொண்டு பண்டைக் காலத்தமிழ் வரிவடிவைப் பற்றி நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியுமே, என்று அவர் கூறினார். ஆனால், சங்க கால நடுகல் நமக்குக் கிட்ட வேண்டுமே? இதுபோன்ற பல சிந்தனைகள் இந்நூலைப் படிப்பதன் மூலம் நமக்குக் கிடைக்கும்.
என் ஆசான் மறைந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்நூல் வெளிவந்தாலும், இஃது இன்று மிகவும் பயன்படுவதாக உள்ளது. இதனைத் தனிப்பட்ட ஊக்கம் மேற்கொண்டு தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் அழகாக வெளியிட்டிருக்கிறது. கழகப் பொது மேலாளர் (General Manager) அறிஞர் இரா.முத்துக்குமாரசாமி அவர்கள் இதற்காகப்பட்ட துன்பங்கள் அதிகம்; அவருக்கு நான் மிகுதியும் கடமைப் பட்டவன். இப்படி மயிலை சீனி. அவர்கள் வெளியிடாது விடுத்துச் சென்ற நூல்கள் ஒவ்வொன்றாக வெளிவரும். தமிழ்மக்கள் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டு பாரில் ஓங்கியுயர வேண்டும் என்கிற விருப்பத்தைத் தெரிவித்துக் கொண்டு முடிக்கிறேன். வணக்கம்.
சென்னை -1 ஊ. ஜயராமன்
23-11-81 (கொற்றன்காரி)