மருதநில மங்கை/அடிசேர்தல் உண்டு

24


அடி சேர்தல் உண்டு

ராவிற்கு இருகோடு தோன்றினாற் போல், உயிரும் உள்ளமும் ஒன்றாய், உடல் இரண்டாய் ஒன்றி வாழும் இளங் காதலர் இருவர் ஓர் ஊரில் வாழ்ந்திருந்தனர். இடையீடு எதுவும் பெறாமல், அவர்கள் வாழ்க்கை சில காலம் இனிது நடைபெற்று வந்தது. ஆண்டு சில கழிந்தன. இளைஞன் உள்ளத்தில், பரத்தையராசை எவ்வாறோ குடிகொண்டு விட்டது. ஊரில் அழகு மிக்க ஒரு பரத்தை பால் அன்பு கொண்டான் அவன். அவள் மனை புகுந்து, சிலநாள் அங்கு வாழ்ந்து மகிழ்ந்தான். மனம் தெளிந்தான். மீண்டு தன் மனைக்கு வந்தான். வந்து அவன் வருகையை எதிர்நோக்கி, அவன் ஒழுக்கக் கேட்டை எண்ணிக் கண்ணீர் விட்டுக் கலங்கி நிற்கும் மனைவியின் அருகிற் சென்று, அவள் கூந்தலை மெல்லத் தடவிக்கொடுத்தான்.

தன்னை மறந்து, தன்போலும் ஒரு பெண்ணின்பால் ஆசைகொண்டு, அவள் பின் திரிந்த அவன் செயல் கண்டு வெறுப்புற்றுக் கிடந்த அவள், அவன் இப்போது வந்து தன் கூந்தலைத் தடவிக் கொடுப்பதை கண்டு, “இவன் யார்? என் கூந்தலைத் தொட இவனுக்கு என்ன உரிமை? என்னைப் பிரியாது, என்பால் பேரன்பு காட்டி வாழக் கடமைப் பட்டவன் இவன். இவன் அக் கடமையில் தவறிவிட்டான். கடமையில் தவறிய இவன், அதை மறந்து, கடமை யுணர்ச்சி யுடையான் போல் வந்து அன்பு காட்டுகிறான். இவன் செயல், தன் ஆட்சிக் கீழ் வாழும் மக்களை, அவர்க்கு வேண்டுவன அளித்துக் காக்க வேண்டிய கடமையில் தவறிய ஒருவன், தன்னை அக் குடி மக்கட்குக் கோன் எனக் கூறிக் கொள்வது போலும் கொடுமை யுடைத்து!” என்று கூறிப், பின்னர் அவனை நேர்முகமாக நோக்கி, “ஏடா! நீ என் வீட்டிற்கு வாராதே. வந்த வழியைப் பார்த்து நீ சென்ற இடத்திற்கே சென்று சேர்வாயாக!” என்று கூறி வழிமறித்தாள்.

இளைஞன், மனைவி வழிமறித்து நிற்பதைக் கண்டு, சிறிதும் மனம் கலங்காதே அவளைப் பார்த்துப், “பெண்ணே ! நீயும் நானும் ஒருயிரும் ஈருடலுமாய் இயைந்து வாழக் கடமைப்பட்டவராவோம். அத்தகைய நாம், ஒருவரோ டொருவர் ஊடி நிற்பது முறையோ? பெண்ணே! எட்டுக் கால்களும், இரண்டு தலைகளும் கொண்ட சிம்புள் எனும் பறவை யொன்று இருப்பதாகச் சிலர் கூறுவதை நீயும் அறிவாய். அப் பறவையின் ஒரு தலை மற்றொரு தலையோடு போரிடுவதுண்டோ? என்னோடு ஊடிப் புலந்து நிற்கும் உன் செயல், அப் பறவையின் தலைகள் ஒன்றோடொன்று போரிடுவது போலப் பொருத்தமற்றதாம். என்னை வெறுத்து ஒதுக்காதே. நீயே ஆராய்ந்து கூறு!” என அன்பு தோன்றக் கூறி, அவள் முகம் நோக்கி நின்றான்.

அது கேட்ட அவள், “ஏடா! காட்டில் கோயில் கொண்டிருக்கும் வெற்றிக் கடவுளாம் கொற்றவை, எல்லாம் அறிந்தவள். அவ்வாறாகவும், அவள் ஏதும் அறியாதாள் என எண்ணி, அவளை அடுத்து வாழும் சில பேய்கள், அவளுக்கு நிகழ இருக்கும் சில நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறத் துணிந்ததாக ஒரு கதை உண்டு. ஏடா! உன் செயலும் அது போன்றுளது. வஞ்சம் கலந்த உன் பொய்யுரைகளை என்பால் உரைத்து என்னை ஏமாற்ற எண்ணாதே. உன் கொடுமைகளை நான் நன்கு அறிவேன்!” என்று கூறி அவனை மடக்கினாள்.

மனைவியின் மனத்தை மாற்றி மகிழ்விப்பது ஏலாது என்பதை அறிந்து கொண்டான் இளைஞன். ஆயினும், தன்பால் தவறில்லை எனக் கூறுவதையோ, அவள் மனத்தை மாற்ற முயற்சிப்பதையோ அவன் கை விட்டிலன். அதனால் அவளை அணுகியிருந்து, “பெண்ணே! அரசன் ஒருவன், தன் ஆட்சிக்கீழ் வாழ்வான் ஒருவனைச் சினந்து சீரழிக்கிறான் என்றால், அக்குடிமகன் குற்றம் உடையவன் என்பது பொருளன்று. குடிமகன் மீது குற்றம் இல்லாத போதும், கோமகன் அவனைக் கோபிப்பான். அதுவே நம் நிலையும். நீ என்னைச் சினக்கின்றாய். அதனால் என்பால் தவறு உளது என்பது கருத்தன்று. என்பால் தவறு இல்லை யாகவும் நீ சினக்கின்றாய். இனியவளே! நான் தவறுடையேனல்லேன்!” எனக் கூறி அவள் கோபத்தைத் தணிக்க முயன்றான்.

கணவன் நிலையைக் கண்டாள் மனைவி, எவ்வகையிலாவது அவன் தன்னைத் தெளிவித்து அடையத் துணியும் அவன் உறுதிப்பாட்டை உணர்ந்தாள். அதனால் அவனை ஏற்றுக்கொள்ள இசைந்தாள். இசைந்தவள் தன் நெஞ்சை நோக்கி, “நெஞ்சே! இவன் நம்மை அறவே மறந்தவன். பரத்தையர் பின் திரிந்து பழியொடு பட்ட வாழ்வு வாழ நாணாதவன் என்பதெல்லாம் உண்மை. ஆனால், அக் குற்றம் கண்டு, அவன் கூறும் பொய்யை ஏற்றுக்கொள்ளாது வெறுத்தால், இவன் பொய் கூறுவதை விடுத்து, “நான் பிழை செய்து விட்டேன். என் பிழை பொறுத்து ஏற்றுக் கொள்வாயாக!’ என வேண்டி நம் காலில் வீழ்ந்து பணியவும் துணிவன். அது நம் நிலைக்கு ஏலாது. ஆகவே ஊடற்போரில் தோற்று, இவனை ஏற்றுக் கொள்ளும் வழிகளைக் காண்பாயாக!” எனக் கூறி, ஊடல் தீர்ந்து உவந்தாள்.

“யார் இவன் எம் கூந்தல் கொள்வான்? இதுவும் ஓர்
ஊராண்மைக்கு ஒத்த படிறுடைத்து, எம்மனை
வாரல்நீ; வந்தாங்கே மாறு.

என்இவை? ஒருயிர்ப்புள்ளியின் இருதலையுள் ஒன்று போரெதிர்ந்தற்றாப் புலவல் நீ; கூறினென் 5
ஆருயிர் நிற்குமாறு யாது?

ஏஎ; தெளிந்தேம் யாம்; காயாதி, எல்லாம்வல் எல்லா!
பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய்நொடித்தாங்கு,
வருந்தல் நின்வஞ்சம் உரைத்து.

மருந்தின்று; மன்னவன் சீறில் தவறுண்டோ? நீ நயந்த 10
இன்னகை தீதோ இலேன்.

மாணமறந்து உள்ளா, நாணிலிக்கு இப்போர்
புறம்சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே! உறழ்ந்து இவனைப்
பொய்ப்ப விடேஎம் எனநெருங்கின், தப்பினேன்
என்று அடி சேர்தலும் உண்டு.” 15

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனோடு, தலைவி ஊடல் தீர்ந்து கூறியது.

2. படிறு–கொடுமை; 3. வாரல்–வாராதே; வந்தாங்கேமாறு–வந்ததுபோல் மீண்டு செல்; 5, போர் எதிர்ந்தற்றா–போர் புரிந்தது போல; புலவல்–வெறுக்காதே; கூறின்என்–புலந்து கூறுவதால் யாது பயன்; 7. காயாதி–வருந்தாதே; எல்லாம்வல்–வஞ்சனை பலவும் வல்ல; 8. கொற்றி–கொற்றவை; நொடித்தல்–வருவது உரைத்தல் 11. இன்நகை–இனிய நகையினை உடையாய்; 12. மாண மறந்து–அடியோடு மறந்து; உள்ளா –நினைத்துப் பாராத; 13. புறம் சாய்ந்து–தோற்று; காண்டைப்பாய்–காண்பாய்; 14. நெருக்கின்– விடாது கோபித்தல்.