மருதநில மங்கை/நிறையாற்றா நெஞ்சு

25


நிறையாற்றா நெஞ்சு

ளைஞன் ஒருவன் பரத்தை யொருத்திபால் ஆசை கொண்டான். ஒரு சில நாட்கள், அவன் அப் பரத்தை மனைக்குச் சென்று மகிழ்ந்து வரவும் தலைப்பட்டான். அவன் களவுக் காதலை அவன் மனைவி அறியாள். அதில் அவன் பெரிதும் விழிப்பாயிருந்தான். ஆனால், அது தவறி விட்டது. அவன் பரத்தை யுறவை அவள் அறிந்து கொண்டாள்.

ஒருநாள் இரவு நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. நள்ளிருட்டுப் பொழுது. நடு யாமம். இளைஞன், மனைவியோடு, தன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தான். திடுமெனத் தெருக் கதவைத் தட்டும் ஒலி கேட்டு இருவரும் விழித்துக் கொண்டனர். கதவைத் திறக்க, இளைஞன் விரைந்து சென்றான். கதவைப் புடைத்ததால் எழுந்த ஒலியைத் தொடர்ந்து, காற்சிலம்பு ஒலிக்கும் ஒலியும் கேட்கவே, அவன் மனைவி, அவனைப் பின் தொடர்ந்து, மெல்லச் சென்று, திறந்த கதவு வழியே தெருவை நோக்கினாள். ஆங்கு அவள் கண்ட காட்சி, அவளைப் பெரிதும் கலக்கி விட்டது. ஒரு பெண் தோளில் தொடியும், கூந்தலில் மலரும், காதில் மகரக்குழையும், வேறுபிற அணிகளும் அணிந்து ஆங்கு நிற்பதைக் கண்டாள். அணிவகைகளாலும், கூந்தல் மலர்க் குவியலாலும் உண்டான பாரத்தைத் தாங்க மாட்டாது ஒடிந்துவிடுமோ என அஞ்சுமாறு சிறுத்திருந்தது அவள் இடை. அவள் காலில் சிலம்பு ஒலித்தது. அவள் கண்கள் சிவந்திருந்தன. அதனால், அவள் யார் மீதோ சினங் கொண்டுள்ளாள் என்பதை அறிந்தாள். இளைஞன் காதலிக்கும் பரத்தை அவளே. இளைஞன் அன்று தன் மனைக்கு வாராமையால் வருந்தி, மழையையும், மையிருளையும் பொருட்படுத்தாது, அவனைத் தேடி வந்தாள். தன் காதல் நோயை அடக்கி, ஊரார் கூறும் அலர் உரைக்கு அஞ்சித் தன் உருவை மறைத்துக் காதலனைக் காணப் போகிறோம் என்ற மகிழ்ச்சி தந்த செருக்கோடு வந்திருந்தாள். ஆங்கு அவளைக் கண்ட இளைஞன் மனைவி, அங்கு என்ன நிகழ்கிறது என்பதை, அவ்விருவர் கண்ணிலும் படாவாறு கரந்து நின்று காணத் தொடங்கினாள்.

கதவைப் புடைத்தும், காற்சிலம்பை இயக்கியும் ஒலியெழுப்பி நின்ற பரத்தை, அவ்வொலி கேட்டு எழுந்து வந்து, கதவைத் திறந்து வாயிற்கண் நிற்கும் இளைஞனைக் கண்டதும், கடுங்கோபம் கொண்டாள். அவன் மார்பில் கிடந்து மணம் நாறும் மலர் மாலையைப் பற்றி ஈர்த்துப் பிய்த்து எறிந்தாள். இளைஞன் அவள் சினம் கண்டு அஞ்சினான். அவள் காலில் வீழ்ந்து பணிந்தான். “தீமை ஏதும் செய்திலேன். உன்னை நான் மறப்பதும் செய்யேன். இது உண்மை. இன்று வாராமைக்கு, இம்மழையே காரணமாம். என்னை ஏற்றுக் கொள்!” என்று கூறி இறைஞ்சினான்.

அக் காட்சியைக் கண்டாள் இளைஞன் மனைவி. அதற்கு மேல் காண அவள் விரும்பவில்லை. காண நாணிற்று அவள் கற்பு. விம்மலை அடக்கி விரைந்து சென்று படுக்கையில் வீழ்ந்தாள். நாழிகை சில கழிந்து, இளைஞன் ஏதும் நிகழாதது போல் வந்து, மனைவியின் அருகில் படுத்து உறங்கிவிட்டான்.

பொழுது புலர்ந்தது. மனைவி முகத்தில் மகிழ்ச்சியில்லை. அது வாடி வனப்பிழந்து கிடந்தது. கண்கள் சிவந்தும், நீர் நிறைந்தும் தோன்றின. அவள் நிலை, இளைஞனைப் பெரிதும் துன்புறுத்திற்று. அவள் அருகிற் சென்றான். அவள் மேனியை மெல்லத் தடவிக் கொடுத்தான். அவள் மனம் மகிழுமாறு, அவளைப் பாராட்டினான். “பெண்ணே ! உன்டால் இன்று காணலாம் இம் மாற்றத்திற்குக் காரணம் என்ன?” என அன்போடு கேட்டான். அவன் கேள்வி, அவள் சினத்தை அதிகப்படுத்திற்று, ! “ஏடா இதுகாறும், உன்னை ஒழுக்க நெறி நிற்கும் உரவோன் என எண்ணி ஏமாந்தேன். நீ வஞ்சகன் என்பதை இன்று அறிந்தேன். உன் களவுக்காதல் எனக்குத் தெரிந்துவிட்டது. உன் நகை பொய்நகை என்பதை அறிந்து கொண்டேன். இனி என் முன் பல்லைக் காட்டாதே. நீ கறுவது எதையும் நான் கேளேன். என்னைத் தொடுவதும் செய்யாதே. தழுவி மகிழ உனக்குப் பெண்டிர் பலர் உளர். ஆண்டுச் சென்று அவர்களைத் தழுவு” எனக் கூறி, அவனை விரட்டினாள்.

தான் பரத்தையர் தொடர்பு கொண்டதையோ, அப் பரத்தை வந்து சென்றதையோ மனைவி அறியாள் என நம்பி யிருப்பவனாதலின், அவள் சினத்திற்காம் காரணத்தை அறியாது கலங்கினான். அதனால் சினக்கும் அவள் முன் சென்று, “பெண்ணே ! நீ இவ்வாறு சினந்து வெறுக்க, என்பால் நீ கண்ட தவறு யாது?” என்று கேட்டான்.

“என்பால் நீ கண்ட தவறு யாது?” என்று கேட்ட கணவனை விழித்து நோக்கியவாறே, “ஏடா! நேற்று இரவு, மழையையும் கருதாது, மங்கை ஒருத்தி, தன்னைக் கண்டவர் மனம் மகிழும்வண்ணம் அணி செய்து கொண்டு வந்து, நம் கதவைத் தட்டிய அச்செயல், உன் தவறினைக் காட்டப் போதாவோ? அவள் கதவைத் தட்டிய ஒலிகேட்ட நீ, விரைந்தோடிச் சென்று கதவைத் திறந்தது உன் தவறினைக் காட்டப் போதாவோ? வந்தவள் சினம் மிகக் கொண்டு, உன் மாலையைப்பற்றி ஈர்த்துப் பாழ்செய்த அந்தச்செயல் உன் தவற்றினைக் காட்டப் போதாவோ சினம்கொண்டு நிற்பாளின் காலில் வீழ்ந்து பணிந்து, ‘பிழை பொறுத்தருள்க!’ என வேண்டிக் கொண்ட உன் செயல், உன் தவறினைக் காட்டப் போதாவோ? ஏடா! இப்போது சொல், நான் உன்னைச் சினப்பது பொருந்தாதோ?” என்று, அன்று இரவு, தன் கண்ணால் கண்ட நிகழ்ச்சிகளை நிரலே எடுத்துக் கூறி அவனைக் கண்டித்தாள்.

மனைவி, தன் களவு வாழ்க்கையைக் கண்டு கொண்டாள் என்பதை அறிந்து இளைஞன் நடுங்கினான். ஆனால், அந் நடுக்கத்தை அவளறியாவாறு மறைத்துக் கொண்டு, “பெண்ணே! நன்கு சிந்தித்துப் பார்த்தால், நான் தவறற்றவன் என்பது தெளிவாம். நீ கூறிய இரவு நிகழ்ச்சிகள், இரவில் நீ கண்ட கனவு நிகழ்ச்சி போலும்!” என்று கூறி, அவளை மறுவலும் ஏமாற்ற எண்ணினான்.

ஆனால், அது அன்று பயனற்றுப் போயிற்று. பண்டெல்லாம், அவள், அவன் ஒழுக்கக் கேட்டை அறியாமையால், அவன் ஆணையிட்டுக் கூறுவனவற்றை நம்பி, அவனை ஏற்றுக் கொள்வாள். ஆனால் இன்று அவன் வஞ்சத்தை நேர் நின்று கண்டு விட்டமையால், அவன் கூறுவனவற்றை ஏற்றுக் கொள்ளாது, “ஏடா! ‘கருத்துத் திரண்ட மேகம், பெருமழை பெய்யும் இரவின் நடு யாமத்தில், காதலன் வரக் குறித்த இடத்திற்கு வந்து நின்ற காதலி ஒருத்தியை நீ கண்ட நினைவின் விளைவால் வந்த கனவாகும், நீ கூறும் அந் நிகழ்ச்சி!’ எனக்கூறி, உன் ஒழுக்கக் கேட்டை ஒப்புக் கொள்ளாது நிற்கின்றாய். உன்நிலையை உள்ளவாறு உணர்ந்து கொண்டேனாதலின் நீ இன்று உரைக்கும் ஆணை, பண்டைய ஆணைகள் போல், என் அறிவை மயக்கி உனக்குப் பயனளிக்காது. ஆகவே, ஏற்காதன கூறி ஈண்டு நிற்காதே. நீ விரும்பிப் புகும் வீடுகள் பல உள. ஆண்டுச் செல்” எனக்கூறி, அவன் கூற்றை மறுத்தாள்.

இளைஞன், மனைவியைப் பொய்கூறி ஏமாற்றுதல். இயலாது, என்பதைக் கண்டு கொண்டான். அதனால், அவள் அழகைப் பாராட்டி, அவ்வழகு நுகரப் பெறாது பாழாவதை எடுத்துக் காட்டிப், பணிவும், அன்பும் பொருந்திய சொற்களால், “பெண்ணே! என்னை ஆட்கொண்டு, உன் அழகை நான் பருக எனக்கு அருள், புரிவாயாக. அதை நுகரத் துடிக்கிறது என் நெஞ்சம்!” எனக் கூறி, அவள் முகம் நோக்கி நின்றான்.

பணிந்த அவன் நிலை கண்ட அவள் நெஞ்சம், அவன்பால் பரிவு கொண்டது. அவனை வெறுத்து வாழ்தல், அவள் பெண்மையின் மென்மைக்கு இயலாது போயிற்று. அதனால், “ஏடா! உறுதிப்பாடற்ற உள்ளம் என் உள்ளம். அவ்வுள்ளத்தை உறுதுணையாகக் கொண்ட என்னால், நீ செய்யும் இழிசெயல்களால் ஆகும் துன்பச் சுமையைத் தாங்கிக் கொள்ள இயலாது. ஆகவே, அகன்று செல் எனக் கூறி, உன்னை விரட்ட முடியுமோ? முடியாது. ஆகவே உன்னை ஏற்றுக்கொண்டேன். உன் குறைகளைக் கூறிப் பணிந்து நிற்க வேண்டுவது இனித் தேவையில்லை!” என்று கூறி, ஊடல் தீர்ந்து, அவனைக் கூடி மகிழ்ந்தாள்.

"கண்டேன் நின்மாயம் களவாதல்; பொய்ந்நகர்,
மண்டாத சொல்லித் தொடாஅல்; தொடீஇய, நின்
பெண்டிர் உளர்மன்னோ ஈங்கு,
ஒண்தொடி! நீகண்டது எவனோ தவறு?

கண்டது நோயும், வடுவும் கரந்து, மகிழ்செருக்கிப், 5
பாடுபெயல் நின்ற பானாள் இரவில்,
தொடிபொலி தோளும், முலையும், கதுப்பும்,
வடிவார் குழையும், இழையும் பொறையா
ஒடிவது போலும் நுசுப்போடு அடிதளரா

வாராக் கவவின் ஒருத்தி வந்து, அல்கல் தன் 10
சீரார் ஞெகிழம் சிலம்பச் சிவந்துநின்
போரார் கதவம் மிதித்தது அமையுமோ?
ஆயிழை யார்க்கும் ஒலிகேளா, அவ்வெதிர்
தாழாது எழுந்து நீசென்றது அமையுமோ?

மாறாள் சினைஇ, அவள் ஆங்கே நின்மார்பின் 15

நாறிணர்ப் பைந்தார் பரிந்தது அமையுமோ? தேறிநீ, தீயேன் அலேன், என்று மற்றுஅவள் சீறடி தோயா இறுத்தது அமையுமோ? கூறு; இனிக் காயேமோ யாம்?

தேறின், பிறவும் தவறிலேன் யான், 20 அல்கல், கனவுகொல் நீகண்டது?

‘கணைபெயல், தண்துளி வீசும்பொழுதில் குறிவந்தாள் கண்டகனவு’ எனக், காணாது, மாறுற்றுப் பண்டைய அல்ல நின்பொய்ச்சூள் நினக்கு, எல்லா! நின்றாய்; நின்புக்கில் பல. 25

மென்தோளாய்? நல்குநின் நல்எழில்; உண்டு, ஏடா! குறையுற்று நீஎம் உரையல்; நின்தீமை பொறை ஆற்றேம் என்றல் பெறுதுமோ? யாழ நிறையாற்றா நெஞ்சுடையேம்.

தலைவன் பரத்தையர் ஒழுக்கம் கண்டு ஊடிய தலைவி, அவன் ஆற்றாமை கண்டு ஊடல் தீர்ந்தது.

1. மாயம்–ஈண்டு பரத்தையர் ஒழுக்கம்; 2. மண்டாத–விரும்பாதன; தொடீஇய–தொட; 5. வடு–உரு; கரந்து–மறைத்து; 6. பாடுபெயல்–பெரு மழை; பானாள் இரவு–இரவின் நடுயாமம்; 7. பொலி–அழகு செய்யும்; 9. நுசுப்பு–இடை; 10. அல்கல்–இரவு; 11. ஞெகிழம்–சிலம்பு; சிலம்ப–ஒலிக்க; சிவந்து–கோபித்து; 12. போரார் – பொருந்திய; 15. மாறாள்–தன் நிலையில் மாறுபடாது; 16. தார்–மலை; பரிந்தது–அறுத்தது; 17. தேறி–தெளிவாய்; 18. சீறடி–சிறிய அடி; தோயா–தொட்டு; பணிந்து; இறுத்தது–தங்கியது; 22. கணை பெயல்–பெருமழை; 23, காணாது–உன் பிழையைப் பாராது; காணாது மாறுற்று நின்றாய்; சூள் நினக்குப் பண்டைய அல்ல என மாற்றுக, 24. பண்டைய அல்ல–பண்டைய சூள்போலப் பயன்தாரா: 25 புக்கில்–நுழையும் வீடு. 26. உண்டு நுகர்வேன்; 28. யாழ–அசை,