மருதநில மங்கை/அன்பிலி பெற்ற மகன்!

21


அன்பிலி பெற்ற மகன்!

றிவன அறிந்த அறிவுடையவள் அவள். தவறு செய்பவன் தன் கணவனே ஆயினும், அதை அவனறியக் காட்டித் திருத்தும் அஞ்சாமையும் உடையவள் அவள். அத்தகையள் என்பதை அறியாத அவள் கணவன், அவளையும் மகனையும் மறந்து பரத்தை வீடு சென்று வாழத் தொடங்கினான். அவனோர் அரசிளங் குமரன். பகை கொண்டு பாய்ந்து வரும் பகைவர் எத்துணை ஆற்றலுடையரேனும், அவரை அறவே அழித்தொழிக்க வல்ல ஆண்மை; தன் குடைக்கீழ் வாழ்வாரின் குறைகளையும், முறையீடுகளையும் உள்ளவாறு உணர்ந்து அவற்றிற்கேற்ற அறம் வழங்கும் செங்கோற் சிறப்பு: தன்னைப் பாடி வரும் பாணர் பெறுநர் முதலாம் இரவலர்க்குக் குறைவறக் கொடுக்கும் கொடை முதலாம் அரிய பண்புகள் பலவும் அவன்பால் பொருந்தியிருந்தன வேனும், அவன் மனைவி, அவன்பால் பரத்தையர் ஒழுக்கம் எனும் குறை கண்டு மனம் பொறாளாயினள். அவன்பால் காணலாம் அவ்வரும் பெரும் பண்புகள் கண்டு பாராட்டி மகிழும் அவள் உள்ளம், அவன் ஒழுக்கக் கேடறிந்து உறுதுயர் கொண்டது. அதை அவனறியக் கூறிக் கண்டிக்கும் காலத்தை எதிர்நோக்கிக் காத்துக் கிடந்தாள்.

அவளுக்கு ஒரு மகன். அழகின் திருவுருவாம் அவனைத் தன் அரச நிலைக்கேற்ற ஆடை அணிகள் அழகு செய்து மகிழ்ந்தாள். அவனும், தான் பிறந்த அரச குடிக்கு ஏற்ற ஆடற் பொருள்களை வைத்து ஆடி மகிழ்ந்தான். பெற்ற மகனைச் சான்றோனாக்கும் கடமை மேற்கொண்ட அவன் தந்தை, அதைச் செய்ய மறந்து பரத்தை வீட்டில் வாழ்வதால், அம்மகனை ஈன்று புறம் தந்ததோடு, சான்றோனாக்கும் பணியையும் அவளே மேற்கொண்டாள். இவ்வாறு, மகனை அழகுசெய்து, ஆடற் பொருள்களோடு புறத்தே அனுப்பி, அவனை ஆடவிடுத்து, அவ்வழகிய காட்சியைக் கண்டும், ஆடி வீடு திரும்பும் அவனுக்கு, அரிய பல அறிவுரைகளை உரைத்தும், வாழ்ந்திருந்தாள் அவள்.

ஒருநாள் மகன் தெருவில் ஆடிக் கொண்டிருந்தான். பவழப் பலகைமீது பொன்னால் செய்து அமைத்த அழகிய யானையை வைத்து ஆடிக் கொண்டிருந்தான். வேறோர் யானையைத் தன் கோடுகளால் குத்திக் கொல்வது போன்ற தோற்றம் அமையவிருந்தது அந்த யானை. வளர்ந்து பேரரசனாய் வாழும் தான் பிற்காலத்தே, காவல் மிகுந்த பெரிய கோட்டைகளைத் தன் வேழப் படையால் பாழ்படுத்தப் போகும் அவன் இன்று, தன்னோடு உடன் ஆடும் இளைய மகளிர் ஆக்கிய மணல் வீடு அழியுமாறு, தன் யானையை ஈர்த்து ஆடிக் கொண்டிருந்தான். தேரையின் வாய் போலும் வடிவுடையவாய்ப் பண்ணிய பொற் சதங்கைகள் ஒலிக்க ஆடும் அவன், அவள் கண்ணிற்கு யானை போன்றே காட்சி தந்தான். மென்மை வாய்ந்த அவன் தலையில் கிடந்து அலையும் முக்காழ் வடம் இளைய களிற்றின் மத்தகத்தில் கிடந்து அசையும் ஓடைபோல் காட்சியளிக்கக் கண்டுகளித்தாள். “இளம் சிறுவர்களை இன்னல் இன்றிக் காக்க!” என வேண்டிச் செவிலித் தாயர் அவ்விறைவன் படைக்கலங்களாய வாள், மழுப்போலும் வடிவங்களாக ஆக்கி அணிந்த அணிகளை, அவன் வாயினின்றும் ஒழுகும் எச்சில் நனைக்கும் காட்சியை நின்று நோக்கிக் களித்தாள்.

மனத்தைக் கவரும் மகனின் அழகிய கோலத்தைக் கண்டு, அவள் மகிழ்ந்திருப்புழி, பரத்தை வீடு சென்றிருந்த அவள் கணவன் வந்து மனை புகுந்தான். அவன் வரவைக் கண்ட அவள், அவன் ஒழுக்கக் கேட்டை உணர்த்தி, அவனைத் திருத்த எண்ணங்கொண்டாள். அதற்கு உற்ற துணையாய்த் தன் மகனைக் கொள்ள விரும்பினாள். உடனே, வந்த கணவனைக் காணாதாள் போல் எழுந்து சென்று, தெருவில் ஆடி மகிழும் மகனை அழைத்து வந்தாள். வந்து கணவன் கேட்கும் அண்மையில் ஓரிடத்தே அமர்ந்தாள். மகனை மடிமீது இருத்தி அணைத்துக் கொண்டவாறே, “மகனே! நீ உன் தந்தையின் வடிவே உன் வடிவாய், அவன் வனப்பே உன் வனப்பாய்க் கொண்டு விளங்குகின்றனை. அழகிய அவ்வடிவும் வனப்பும் கண்டு நான் மகிழ்கிறேன். ஆனால் உன் தந்தையின் குணங்கள் அனைத்தையும் அவ்வாறே பெற்று விடுதல் கூடாது. உன் தந்தைபால் காணலாம் பண்புகளில் கொள்ளலாம் பண்புகள் எவை, தள்ளலாம் பண்புகள் எவை என்பதை என்பால் அறிந்து மேற்கொள்வாயாக. மகனே! தன்னோடு பகைத்த பகைவர்களைப் பாய்ந்து அழித்து, வென்று களம் கொள்ளும் வெற்றிச் சிறப்பு உன் தந்தைபால் உளது. அதை நீ பெற்றுக்கொள். இவர் நமக்கு வேண்டியவர்; ஆகவே பிழைபுரியினும் போக விடுக; இவர் நம் பகைவர்; ஆகவே இவர்பால் பிழையில்லை எனினும் பிடித்து ஒறுக்க எனக் கருதும் முறை கேடறியாது, வேண்டுவார்க்கும், வேண்டார்க்கும் ஒரே நீதி வழங்கும் செங்கோல் நெறி நிற்பவன் உன் தந்தை. அச்செங்கோற் சிறப்பினைச் சிறிதும் நழுவவிடாது அவ்வாறே பெற்றுக்கொள். தன்பால் வந்து, தம் வறுமை நிலை நாட்டி இரந்து நிற்பார்க்குப், பொருள்களை வாரி வாரி வழங்கி, அவர் வாட்டத்தைப் போக்கும் வள்ளல் உன் தந்தை. அவ்வண்மைக் குணத்தை வழுவாது பெறுதல் உன் விழுமிய கடனாம். உன் தந்தை பால் காணலாம் கொள்ளலாம் குணங்களைக் கேட்டறிந்து கொண்ட நீ, அவன்பால் காணலாம் தள்ளலாம் குணங்கள் இன்னின்ன என்பதையும் கூறுகிறேன், கேள். மகனே! உன் தந்தையின் செங்கோற் சிறப்பை அறிந்து, செந்நெறி நிற்கும் இவன் நம்மைச் சீரழிய விடான்’ என நம்பி, மனம் ஒன்றிய காதல் கொண்ட மகளிர், காற்றால் அலைப்புண்ட மலர்போல், மென்தோள் தளர்ந்து, மனநோய் மிகுந்து வருந்துமாறு விடுத்து மறந்து வாழும் கொடுமையில் குன்றென நிற்பன் உன் தந்தை. அந்த ஒரு கொடுமை உன்னைக் குறுகாதொழிக!” எனக் கூறத் தொடங்கினாள்.

தாய் கூறும் அறவுரைகளை அமைதியாக இருந்து கேட்டுவந்த அவன், தாயின் பின்வந்து நிற்கும் தந்தையைப் பார்த்து விட்டான். பலநாள் பாராதிருந்த தந்தையைப் பார்த்து விட்டமையாலோ, அல்லது தந்தையை வைத்துக் கொண்டே அவனைத் தாய் குறை கூறியதாலோ, அவன் தந்தையைக் கண்டு நகைக்கத் தொடங்கினான். மகனின் நகைமுகம் கண்ட அவள், “தக்க இன்ன, தகாதன இன்ன என நான் அறிவுரை கூறிக் கொண்டிருக்க, மகன் எனப் பாராட்டற்குரிய மாண்பு சிறிதும் இல்லாதான் பெற்ற இம்மகன், யாரைப் பார்த்து நகைக்கிறான்?” என்று கடிந்து கொண்டே, பின்புறம் நோக்கினாள். நோக்கினவள் ஆங்குக் கணவன் நிற்கக் கண்டு, “இதுகாறும் எங்கோ சென்று மறைந்து வாழ்ந்த இவர்தாமோ, இப்போது ஈங்கு வந்திருப்பவர்!” எனக் கூறி எள்ளினாள்.

மனைவியின் மனநிலையும் சினநிலையும் கண்டு நடுங்கிய இளைஞன், “பெண்ணே உனக்கு நான் அறியச் செய்த தவறு எதுவும் இல்லையே! அவ்வாறாகவும் என்னைக் கொடுமை கூறுவது ஏனோ? மகனைக் கட்டிப் பிடித்துக் கொள்ளாது என் கையில் கொடுப்பாயாக!” எனக் கேட்டுத் தன் இரு கைகளையும் ஏந்தி நீட்டினான். தந்தை கை நீட்டக் கண்ட அம்மகன், மலைமீது பாயும் சிங்கம் போல், அவன் மார்பில் பாய்ந்து பற்றி ஏறிக்கொண்டான். அணைத்து அடக்கவும் அடங்காது, மகன் கணவன் மார்பைப் பாய்ந்து பற்றிக் கொண்டானாகவே, செயலற்ற அவள், “மனைவியையும், மகனையும் கைவிட்டு வாழும் கடையன் இவன்! மனைவியாலும் மகன்பாலும் அன்பு காட்ட மறந்த கொடியன் இவன்! ஆகவே இவன்பால் செல்லற்க என நான் விலக்கவும், அதை ஏற்றுக் கொண்டு அச்சொல் வரையில் நிற்காது, அவன்பால் சென்று விட்டான் இவன். அவன் பெற்ற இவன்பாலும், அவனுக்குரிய பண்பே பொருந்திவிட்டது போலும். நான் என் செய்வேன்?” என்று கூறி அப்பாற் சென்றாள்.

“மைபடு சென்னி மழகளிற்று ஓடைபோல்
கைபுனை முக்காழ் கயந்தலைத் தாழப்,
பொலஞ்செய் மழுவொடு வாள் அணி கொண்ட
நலங்கிளர் ஒண்பூண் நனைதரும் அவ்வாய்
கலந்துகண் நோக்குஆரக், காண்பின் துகிர்மேல் 5
பொலம்புனை செம்பாகம் போர்கொண் டிமைப்பக்
கடிஅரணம் பாயா நின்கைபுனை வேழம்
தொடியோர் மணலின் உழக்கி அடியார்ந்த
தேரைவாய்க் கிண்கிணி ஆர்ப்ப இயலும் என்
போர் யானை வந்தீக ஈங்கு. 10
செம்மால்! வனப்பெலாம் நுந்தையை ஒப்பினும், நுந்தை
நிலைப்பாலுள் ஒத்தகுறி என்வாய்க் கேட்டு ஒத்தி;
கன்றிய தெவ்வர்க் கடந்து களம் கொள்ளும்
வென்றி மாட்டு ஒத்தி; பெரும! மற்று ஒவ்வாதி,
ஒன்றினேம் யாம் என்று உணர்ந்தாரை, நுந்தைபோல் 15
மென்தோள் நெகிழ விடல்.
பால்கொளல் இன்றிப் பகல்போல் முறைக்கு ஒல்கா
கோல் செம்மை ஒத்தி; பெரும! மற்று ஒவ்வாதி,
கால்பொரு பூவின் கவின்வாட நுந்தைபோல்
சால்பு ஆய்ந்தார் சாய விடல். 20
வீதல்அறியா விழுப்பொருள் நச்சியார்க்கு
ஈதல் மாட்டு ஒத்தி; பெரும! மற்று ஒவ்வாதி,
மாதர்மென் நோக்கின் மகளிரை நுந்தைபோல்
நோய்கூர நோக்காய் விடல்.
ஆங்க, திறன் அல்ல யாம் கழற, யாரை நகும் இம் 25
மகன் அல்லான் பெற்ற மகன்?
மறைநின்று, தாம் மன்ற வந்தித்தனர்.
ஆயிழாய்! தாவாத எற்குத் தவறுண்டோ? காவாது ஈங்கு
ஈத்தை இவனை யாம் கோடற்குச், சீத்தை! யாம் கன்றி, அதனைக் கடியவும் கைநீவிக் 30

குன்ற இறுவரைக் கோண்மா இவர்ந்தாங்குத்
தந்தைவியன் மார்பில் பாய்ந்தான், அறன் இல்லா
அன்பிலி பெற்ற மகன்.

தலைவி, தன் மகனுக்கு அவள் தந்தைக் குணங்களுள் கொள்ளலாம் குணம் இவை, தள்ளலாம் குணம் இவை எனக் கூறிக்கொண்டிருப்புழிப் பரத்தையிற் பிரிந்து சென்ற தலைவன் வந்து நின்றானாக, மகன் அவனை அடைந்தமை கண்டு, தலைவி வருந்திக் கூறி ஊடல் தீர்ந்தது இது.

1. மைபடு– கருநிறம் பொருந்திய; மழகளிறு–இளைய யானை; ஓடை–முகபடாம்; 2. கயந்தலை–மெத்தென்ற தலை; 3. பொலம்செய்–பொன்னாற் செய்த; 4. நலம் கிளர்–அழகுமிக்க; ஒண்பூண்–ஒளிவீசும் அணி; 5. ஆர்–நிறையுமாறு; காண்பின்–காண்டற்கு இனிய; துகிர்மேல்–பவழப்பலகைமீது; 6. செம்பாகம்–சரிபாதி; 7. கடிஅரணம்–காவல்மிக்க கோட்டை; 8. தொடியோர்– தொடி அணிந்த மகளிர்; உழக்கி– அழித்து, அடிஆர்ந்த–காலில் கட்டிய; 10. போர்யானை காதல் மிகுதியால் மகனை யானை என்றாள்; வந்தீக–வருக; 12. நிலைப்பாலுள் – நிலைபெற்ற குணங்களுள்; ஒத்தி– ஒப்பாயாக; 13, கன்றியகோபித்த; தெவ்வர்–பகைவரை; கடந்து வென்று; களம் கொள்ளும்–போர்க்களத்தைத் தனதாக்கிக் கொள்ளும்; 15. ஒன்றினேம்–மனம் ஒன்றுபட்டோம்; 17. பால்–ஒருபால்; ஒருவர் பக்கத்தில்; பகல்–எவருக்கும் ஒப்பக் காயும் ஞாயிறு; ஒல்கா–தளராத; 19. கால்பொரு–காற்றால் அலைப்புண்ட; 21. வீதல்–கெடுதல்; நச்சியார் – விரும்பினவர்; 24. நோய்கூர–நோய் மிகுமாறு; 25. கழற–இடித்துரைக்க; 27. வந்தித்தனர்–வந்தனர்; 28. தாவாதவருத்தம் செய்யாத; காவாது–வரவிடாது தடை செய்யாது; 29. ஈந்தை–கொடுப்பாயாக; சீத்தை–இகழ்ச்சிக் குறிப்புடையதோர் இடைச்சொல்; 30. கன்றி–வெறுத்து, அதனை–மகள் தந்தையால்’ அணைவதை; கைநீவி–கைகடந்து; 31. கோண்மா–சிங்கம்; இவர்ந்தாங்கு பாய்ந்ததுபோல்.