மருதநில மங்கை/ஊடுதல் என்னோ ?

22


ஊடுதல் என்னோ?

ணவன் பரத்தையர் உறவு கொள்ளத் தொடங்கினான். மனைவி அதனால் அவனை வெறுத்தாள். அவனைக் காணவும் நாணினாள். அக்கவலை வருத்த வருந்தித் தன் தோழியோடு வாழ்ந்திருந்தாள். ஒருநாள் பரத்தை வீடு சென்றிருந்த அவள் கணவன், அவள் வீட்டிற்கு வந்தான். வந்தானை வரவேற்க விரும்பாது, தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவள் சினம் கண்டு செய்வதறியாது சிறிது நேரம் சிந்தித்தவாறே நின்றிருந்தான் கணவன். பின்னர் மெல்ல மெல்ல அவள் அருகிற் சென்றான். சென்று அவள் கூந்தலைக் கையாற் பற்றி, அவள் தலையைச் சிறிதே தடவிக் கொடுத்தான்.

கணவனைக் காணவும் விரும்பாது வாழும் அவள், அவன் தன் கூந்தலைக் கையாற் பற்றியதை உணர்ந்தவுடனே, அதை அவன் கையினின்றும் விரைந்து ஈர்த்துக் கொண்டாள். அவ்விடம் விட்டுப் பெயர்ந்து ஒதுங்கினாள். “ஏடா! உன்னைக் காணவும் வெறுக்கின்றேன் நான். ஆதலால் என்னை அணுகி என் கூந்தலைத் தீண்டாதே. என் முன் நிற்கவும் நிற்காது நீங்கி அப்பாற் செல்!” எனக் கூறிக் கடிந்தாள்.

பரத்தையர் சேரி சென்று வாழும் தன் பழியோடு பட்ட வாழ்வை மனைவி அறியாள் என மனப்பால் குடித்தவன் அவன். அதனால் மனைவியின் கோபம் காணத் தொடக்கத்தில் சிறிதே கலங்கினானேனும், தன்பால் தவறு இல்லை என்றே இறுதிவரை உரைத்தல் வேண்டும், அதுவே அவள் உள்ளத்திற்கு ஆறுதலாம் என உணர்ந்த உணர்வால் உள்ள உரம் பெற்றான். அதனால், தன்னை வெறுத்து நோக்கும் அவள் முன் பணிந்தான் போல் நின்று, “பெண்ணே! நீ கூறும் அப்பரத்தையர்பால் நான் எவ்விதத் தொடர்பும் கொண்டிலேன். இது உண்மை. அவ்வாறாகவும், செய்த தவறு எதுவும் இல்லாத என்னைச் சினந்து ஒதுக்குகின்றாய். இது நினக்கு முறையோ?” என்று கூறி இறைஞ்சினான்.

“என்பால் தவறு இல்லை. தவறு இல்லாத என்னை இடித்துரைக்கின்றனை” எனக் கணவன் கூறக் கேட்ட அவளுக்குக் கடுஞ்சினம் பிறந்தது. காலையில் தன் மனையில் இருப்பான்போல் தோன்றுகிறான். நண்பகலில் பரத்தையர் சேரியில் திரிகிறான். பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே மறைந்து, மனம் விரும்பும் மகளிர்பால் சென்று விடுகிறான். அத்தகையான் தன்பால் தவறு இல்லை.எனக் கூறுவதா என எண்ணி வருந்தினாள். வருத்த மிகுதியால், “ஏடா! கண் மூடிக் கண் திறப்பதற்குள் காணாது மறைந்து போகும் இயல்புடையவன் நீ. நீ அத்தகைய இயல்புடையவன் என்பதை அறிந்தும், உன்னைக் காதலித்து, அக்காதற் பயனை முற்றவும் பெற மாட்டாமையால் கலங்கி, உன்னோடு ஊடி நிற்பவரே, உண்மையில் தவறுடையவராவர். உன்மீது தவறு இல்லை. தவறு நீங்கிய தறுகணாளன் நீ விரும்பிய இடத்திற்குச் செல்லும் உரிமை உடையாய் நீ!” என வெறுத்துக் கூறி வாயடைத்து நின்றாள்.

அவள் தன்னைக் கண்டவுடனே கடிந்து கூறிய சொற்களினும், இப்போது வெறுத்துக் கூறிய இச்சுடு சொற்கள் தன்னைப் பெரிதும் வருத்துவதை உணர்ந்தான்் இளைஞன். வருந்தினானேனும், அந்நிலையிலும் உண்மையை ஒப்புக் கொள்ள இசைந்திலன். அதனால், மனைவியை நோக்கிப், “பெண்ணே ! அணைபோலும் உன் தோளைத் தந்து எனக்கு இன்பம் ஊட்ட வேண்டிய நீ, என்பால் தீய ஒழுக்கம் எதுவும் இல்லையாகவும், தீயோரைத் துன்புறுத்துமாறு, என்னைத் துன்புறுத்துகின்றாய். பெண்னே! என்னைக் கடிந்து ஒதுக்கத்தக்க குற்றம் எதையும் நான் செய்திலேன். இதை நீ நம்பு!” என்று கூறிப் பணிந்து நின்றான்.

மனைவி விரட்டக், கணவன் பணியும் இக் காட்சியைத் தோழி, மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். ஊடலின் இயல்பை உணர்ந்தவள் அவள். உணவிற்கு உப்புப் போல், கூடலுக்கு இன்றியமையாதது ஊடல். ஆனால் அது சிறிது நீண்டால், உப்பு மிகுந்த உணவுபோல், அக்கூடல் பயனற்றுப் போகும் என்பதை அறிந்தவளாதலின், அவள் ஊடல் அந்த அளவோடு முற்றுப் பெறுதல் வேண்டும் என விரும்பினாள். மேலும் கணவன், பரத்தையர் தொடர்பு கொண்டிருப்பது உண்மையே எனினும், மனைவிபால் கொண்ட அச்ச மிகுதியால், அவன் அதை மறுக்கிறான். தவறு செய்த ஒருவர், அதைப் பிறர் அறிந்து கண்டித்தவழி, அத்தவறினைத் தாம் செய்யவில்லை என மறுப்பராயின், அவரை மன்னித்து விடுதல் மக்கட் பண்பாகும். ஆகவே, தவறு செய்திலேன் எனக் கூறும் கணவனை மன்னித்து ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும் என்றும் அறிந்தாள். அதனால் விரைந்து தன் தோழிபால் சென்றாள். “தோழி! இதோ நிற்கும் உன் கணவன், மான்விழி போலும் நின் அழகிய கண்கள், கண்ணீர் வடித்துக் கலங்கி அழ அழ, உன்னைப் பிரிந்தவன்தான். பிரிந்து அப்பிரிவுத் துயரால் உன்னை வருத்தியவள்தான். ஆயினும், செய்த அத்தவறிலேயே ஆழ்ந்து விடாது ஈண்டு மீண்டு வந்துளன். அம்மட்டோ! மானத்தை விட்டு உன்னை வணங்கி நிற்கின்றான். இவனோடு இனியும் ஊடிநிற்பது உன் பெருமைக்கு ஏற்குமோ?” என்று ஏற்பக் கூறினாள்.

தோழி கூறியன கேட்டாள் அப் பெண். தோழி அறிவுடையவள், தன் நலத்தில் கருத்துடையவள் என்பதை அவள் அறிவாள். அதனால் ஊடுதல் இனிக்கூடாது எனத் தோழி உரைத்ததற்கு உடன்பட்டாள். ஆயினும் அதை அவ்வாறே ஏற்றுக் கொள்ள நாணம் மிக்க அவள் நல்லுள்ளம் தயங்கிற்று. அதனால், “நெஞ்சே! நம்மை உயர்வாகக் கருதி, நம் நலம் ஒன்றே குறித்துக் கூறும் எதையும் இனியும் கூறுதல் ஏலாது எனத் தோழி கூறி விட்டாள். தகுதி மிக்க தோழியின் அவ் அறிவுரையினை நீ ஏற்றுக் கொள்வாயாக. இதுகாறும் நீர் அறாது, நித்திரை கொள்ளாது வருந்திய கண்கள், இனியேனும் உறக்கம் கொண்டு உய்யுமாக!” எனத் தன் நெஞ்சை நோக்கிக் கூறுவாள் போல் கூறி, ஊடல் தணிந்து அவனை ஏற்றுக் கொண்டாள்.

“ஒரூஉநீ; எம்கூந்தல் கொள்ளல்; யாம் நின்னை வெரூஉதும் காணும் கடை தெரிஇழாய்! செய்தவறு இல்வழி யாங்குச் சினவுவாய், மெய் பிரிந்து அன்னவர் மாட்டு? ஏடா! நினக்குத் தவறுண்டோ ? நீ வீடு பெற்றாய்; 5 இமைப்பின் இதழ் மறைபாங்கே கெடுதி; நிலைப்பால் அறியினும் நின்நொந்து நின்னைப் புலப்பார் உடையர் தவறு. அணைத்தோளாய்! தீயாரைப்போலத் திறன் இன்று உடற்றுதி, காயும் தவறிலேன் யான், 10 மான் நோக்கி! நீ அழ நீத்தவன் ஆனாது நாண் இலனாயின் நலிதந்து அவன்வயின் ஊடுதல் என்னோ இனி? இனி, யாதும் மீக்கூற்றம் யாம் இலம் என்னும் தகையது காண்டைப்பாய்; நெஞ்சே! பனிஆனாப் 15 பாடில்கண் பாயல் கொள்.”

பரத்தையர் உறவு கொண்டு மீண்ட தலைவனோடு ஊடிய தலைவி, தோழி வாயிலாக ஊடல் தீர்வுழிக் கூறியது இது.

1. ஒரூஉ–நீங்கிநில்; கொள்ளல்–தொடாதே 2. வெரூஉதும்–வெறுக்கிறோம்; காணும்கடை–காணும்பொழுது; 4. அன்னவர் மாட்டு மெய் பிரிந்து செய்தவறு இவ்வழி என மாற்றுக. அன்னவர்–அப்பரத்தையர்; 5. வீடு–விடுதலை; 6. கெடுதி–மறைந்து விடுகிறாய்; 7. நிலைப்பால்–உன் நிலையின் இயல்புகளை; 9. இன்று–இல்லையாகவும்; உடற்றுதி. – வருத்துகிறாய்; 12. நலிதந்து–வருத்தி; 14. யாதும்–சிறிதும்; மீக்கூற்றம்– தம்மை மேம்படுத்திக் கூறும் புகழ் உரை; யாம் இலம்–நமக்கு இல்லை ; 15. காண்டைப்பாய்–காண்பாயாக; பனி ஆனா–கண்ணீர் வற்றாத; 16. பாடுஇல்–உறக்கம் இல்லாத.