மருதநில மங்கை/அறிந்தேன் உன் குதிரையை
31
ஓர் அரசிளங் குமரன், தன் ஆருயிரனைய மனைவியோடு, மனையற வாழ்வு மேற்கொண்டு மகிழ்ந்து வாழ்ந்திருந்தான். ஒரு நாள் வீட்டை விட்டு வெளியே சென்றவன், ஆங்கே ஓர் இளம் பரத்தையைக் கண்டு, அவள் அழகிற்கு அடிமையாகி அறிவிழந்தான். அவள் பின் சென்று, அவளோடு ஆடிப்பாடி அக மகிழ்ந்தான். அவன் மனைவி, நாள் சில கழியவும், கணவன் வாராமையால் கலங்கி, அவன் வருகையை எதிர்நோக்கிக் காத்துக் கிடந்தாள். அந் நிலையில் அவனும் வந்து சேர்ந்தான். அவன் வருகையைத் தொலைவிலேயே கண்டு களிமகிழ் கொண்டாள். அவனை எதிர் கொண்டழைக்க விரைந்து வாயிலை அடைந்தாள். ஆனால், அந்தோ! அவள் கண்ட அவன் காட்சி, அவளை அழப்பண்ணிற்று. அவன் மார்பின் அழகைக் கண்டு, அவன் மொழியின் இனிமை கேட்டு, மகிழத்துடித்தவள், அவனை அணுகவும் அஞ்சினாள். அவன் ஆடைகள் மடிப்புக்குலைய, கரைகள் கிழிய நலங்கியிருந்தன. அவன் மார்பிற் பூசிய சந்தனச் சாந்து கரைந்து கலையுமாறு வேர்வை வழிய வழிய வந்திருந்தான். அவன் தலைமாலை, தோளிலே வீழ்ந்து, தன் நிறம் கெட்டுக் கசங்கிக் கிடந்தது. இக்காட்சிகளைக் கண்டாள். கணவன் எங்கோ சென்று இவ்வாறு தன் நிலை குலையுமாறு யாதோ ஒரு பெருஞ்செயல் புரிந்து வருகிறான் என எண்ணினாள். அவன் செய்த செயல் எவ்வளவு சிறந்ததேயாயினும், அவன் தன்னைத் தனியே விடுத்து, இத்தனை நாளும் பிரிந்திருந்த வருத்தம் அவளை வாட்டியதால், அவள் அவனை நோக்கி, “ஐய! இத்தனை நாட்களாக நீ எங்கே போயிருந்தாய் அங்கே நீ இவ்வாறு நிலை குலையுமாறு, நீ பண்ணிய பெருஞ்செயல் யாது? இப்பொழுது, இங்கு எங்கே வந்தாய்?” என வினவிச் சினந்தாள்.
பரத்தையர் தொடர்பால் தன் மெய் பெற்ற வேறுபாடுகளை, அவள் சிறிதும் பிழையின்றிக் கண்டு கொண்டது, அவனை நடுங்கச் செய்தது. அதை அவள் அறிந்து கொள்ள அவளுக்குத் துணை புரிந்த அவள் கண்களைக் கண்டு அஞ்சினான். அவை, தம் நுண்ணுணர்வால், எதையும் ஊன்றி நோக்கும் நோக்கால், தன்பால் உள்ள பிற குறைகளையும் கண்டு விடுமோ எனக் கலங்கினான். அதனால் அவற்றை அவற்றின் தொழிலை மறக்கச் செய்யும் கருத்தோடு, “இரு நீல மலர்களை எதிர் எதிராக ஏந்திப் பிடித்துப் பிணைத்து வைத்தாற்போல் பேரழகு காட்டும் அழகிய கண்களே! அத்தகைய கண்களைப் பெற்ற அழகிய நல்லாளே!” என அவற்றையும், அவளையும் பாராட்டினான். தன் பாராட்டால் அவையும், அவளும் குறை காணும் தம் செயல் மறந்திருப்பர் எனும் துணிவால், “பெண்ணே ! போன இடத்தில் குதிரை ஏற்றம் பழகினேன். அதனாலேயே என் வருகை தடைப்பட்டது!” என்றான்.
அவன் அவ்வாறு கூறிக் கொண்டிருக்கும் பொழுதே, அவள் அவனை உற்று நோக்கினாள். ஆடையும் அணிந்த மாலையும் நிலைகுலைந்திருப்பதோடு, அவன் மேனியும் தன் நிலை திரிந்திருப்பதைக் கண்டாள். அவன் உடம்பெல்லாம், நகம் கொண்டு கீறியதாலும் பற்கள் அழுந்தியதாலும் உண்டான புண்கள் நிறைந்திருப்பதைப் பார்த்தாள். இவ்வாறு அவனைப் புண் செய்யும் ஆற்றல் வாய்ந்த பகைவர் ஒருவரும் இல்லை என்பதை அவள் அறிந்தவள். அதனால், அப்புண்கள் அவன்பால் விருப்பங் கொண்ட யாரோ ஒரு பெண், அவனோடு கூடிப் புணர்ந்த காலத்தில் பண்ணிய புண்களே என்பதை உணர்ந்து கொண்டாள். அவன் ஆடை நலங்கியதும், சந்தனம் சிதைந்ததும், மாலை கசங்கியதும் அதன் விளைவே என அறிந்தாள். இவற்றால், கணவன் பரத்தையர் தொடர்பு கொண்டுளான், இதுகாறும் அவன் அவளிடத்திலேயே சென்றிருந்தான் என்பதை உறுதி செய்து கொண்டாள். அதனால், அவன், “குதிரை ஏறி உலா வந்தேன்!” எனக் கூறக் கேட்டதும், அவள் அவனை நோக்கி, “அன்ப! நீ ஊர்ந்த குதிரை எது என்பதை நான் அறிந்து கொண்டேன். அது, வனப்பு மிகுமாறு வாரி முடித்த அழகிய கூந்தலாகிய, அழகாகக் கத்தரித்துவிடப் பெற்ற பிடரி மயிரையும், கூந்தல் முடிமீது விரித்துப் பிணித்த துஞ்சு எனும் அணியாகிய சிவந்த தலையாட்டத்தையும், இடையிடையே நீலமணி வைத்துத் தைத்துக் கழுத்தைச் சுற்றி அணியும் கட்டுவடமாகிய வல்லிகை எனும் கழுத்தாரத்தையும், காதிற் கிடந்து தொங்கும் புல்லிகை காதணியாகிய கன்னசாமரையினையும், தெய்வ உத்தி எனும் தலையணியில் பிணித்துக், கண்களில் படுமாறு தொங்கவிடப் பெற்ற சுட்டி எனும் அணியாகிய சம்மட்டி எனும் சாட்டையும், நூலால் ஆய மெல்லிய மேலாடை ஆகிய கடிவாளத்தையும், பன்னிற மணிகளைக் கொண்டு மூன்று கோவையாகப் பண்ணிய முக்கண்டன் எனும் கழுத்து வடமாகிய கண்டிகை எனும் கழுத்தணியையும் அணிந்து, மேகலையாகிய தண்டையும் சிலம்பாகிய கெச்சையும் கலீர் கலீர் என ஒலிக்க வந்து, உன்னால் காதலிக்கப் பெற்று, நீ ஊர்ந்து திரியும் காமக் கிழத்தியாகிய அக் குதிரையைச் செண்டு வெளியில் கொண்டு சென்று ஊராது, வண்ணம் தீட்டி வனப்புற்று விளங்கும் அவள் மாடத்தில், அழகிய நிலா முற்றத்தில், ஆதி எனும் விரைவு தோன்ற ஊர்ந்து இளைத்தாய். அன்ப! நீ நல்ல குதிரைச் சேவகன் ஆகுவை, நீ வாழ்க!
“அன்ப! நம் மதுரை மாநகரில், வீதிகளில் வீழ்ந்து கிடக்கும் குப்பை கூளங்களை, விடியற்காலத்தே சென்று பெருக்கி எடுத்து, வாரிக் கொண்டுபோக, அவ்விடங்களில், பெருக்கிய துடப்பம் இழுத்த கோடுகள் வரி வரியாகத் தோன்றுவது போல், உன் மேனியில் வரிவரியாகப் புண் படுமாறு கீறியதும் அக்குதிரை தானோ? கூரிய நகம் பொருந்திய குளம்பினைக் கொண்ட அக்குதிரை மிகவும் கொடிது போலும். அக் குதிரையை அடக்கி ஆளும் அன்ப! அதனால் அழிவுறாது நீ நெடிது வாழ்க! அன்ப! மூங்கிலால் பண்ணிய நாழி உழக்கு போன்ற அளவு கருவிகளின் அடியை வண்ணத்தில் தோய்த்துத் தோய்த்து அழுத்தி அழகு செய்யப் பெற்ற குதிரையின் முதுகுபோல், உன் மேனியைக் கவ்விக் கவ்விப் புண்ணாக்கியதும் அக்குதிரைதானோ? சிறிதும் அச்சம் அற்று, அவ்வாறு கடித்து வடுப்படுத்திய அக்குதிரை பெரிதும் விஷம் போலும். அக் குதிரையை அடக்கி ஆளும் அன்ப! அதனால் அழிவுறாது நீ நெடிது வாழ்க!” என வாழ்த்துவாள்போல் பழித்தாள்.
அவள் ஆத்திரம் அம்மட்டோடு அடங்கவில்லை. மேலும் அவனைப் பார்த்து, “அன்ப! நீ ஏறித் திரிந்த குதிரை இது என்பதை அறிந்து கொண்டேன். அது ஓர் அழகிய நல்ல குதிரை என்பதையும் அறிந்தேன். ஆனால், அக்குதிரை உற்றாரும், பெற்றாரும், ஊராரும் கூடி மணம் செய்து தர, அறவழி நின்று பெற்ற பெருமையுடையதன்று. தன்னலம் நாடி உன் பின் திரியும் பாணன் தூதாகச் சென்று, சேரிப் பரத்தையர் சினந்து நோக்க, காற்றெனக் கடுகிக் கொணர்ந்தது அக்குதிரை. உன் உருவு நலத்தை அழிக்கும் கொடுமை மிக்க அக்குதிரை மீது ஏறித்திரிய எண்ணாதே. என் சொல் கேளாது, அக் குதிரையை அடக்கி ஆளும் சேவகனாய் வாழ்வதையே விரும்புவையாயின், ஈண்டு வாராது, யாண்டேனும் சென்று திரிக, அதன் மீது ஏறித்திரிய இன்றே செல்க. இமைப்பொழுதும் ஈண்டு நில்லற்க!” எனக் கூறிக் கடிந்தாள்.
"ஏந்து எழில் மார்ப! எதிர் அல்ல நின்வாய்ச்சொல்;
பாய்ந்து ஆய்ந்த தானைப் பரிந்து ஆனா மைந்தினை;
சாந்தழி வேரை; சுவல் தாழ்ந்த கண்ணியை;
யாங்குச்சென்று ஈங்கு வந்தித்தாய் கேள் இனி,
ஏந்தி, எதிர்இதழ் நீலம் பிணைந்தன்ன கண்ணாய்! 5
குதிரை வழங்கி வருவல்.
அறிந்தேன்; குதிரைதான்,
பால் பிரியா ஐங்கூந்தல் பன்மயிர்க் கொய்சுவல்,
மேல்விரித்து யாத்த சிகழிகைச் செவ்வுளை,
நீல மணிக்கடிகை வல்லிகை, யாப்பின்கீழ் 10
ஞால் இயல் மென்காதின் புல்லிகைச் சாமரை,
மத்திகைக் கண்ணுறையாகக் கவின்பெற்ற
உத்தி ஒருகாழ், நூல் உத்தரியத் திண்பிடி,
நேர்மணி நேர்முக்காழ்ப் பல்பல கண்டிகைத்,
தார்மணி பூண்ட தமனிய மேகலை, 15
நூபுரப் புட்டில், அடியொடு அமைத்து யாத்த
வார் பொலம் கிண்கிணி ஆர்ப்ப, இயற்றி, நீ
காதலித்து ஊர்ந்த நின் காமக்குதிரையை
ஆய்சுதை மாடத்து, அணிநிலா முற்றத்துள்,
ஆதிக் கொளீஇய அகையினை ஆடுவை 20
வாதுவள்; வாழிய! நீ
சேகா! கதிர்விரி வைகலின் கைவாரூஉக் கொண்ட
மதுரைப் பெருமுற்றம்போல நின் மெய்க்கண்
குதிரையோ வீறியது?
கூர்உகிர் மாண்ட குளம்பின் அது நன்றே, 25
கோரமே! வாழி! குதிரை.
வெதிர் உழக்கு நாழியால் சேதிகைக் குத்திக்
குதிரை உடல் அணிபோல நின் மெய்க்கண்
குதிரையோ கவ்வியது?
சீத்தை பயம் இன்றி ஈங்குக் கடித்தது நன்றே; 30
வியமமே; வாழி! குதிரை.
மிகநன்று; இனி அறிந்தேன் இன்று நீ ஊர்ந்த குதிரை,
பெருமணம் பண்ணி அறத்தினிற்கொண்ட
பருமக் குதிரையோ அன்று; பெரும! நின்
ஏதில் பெரும்பாணன் தூது ஆட, ஆங்கேயோர் 35
வாதத்தான்வந்த வளிக்குதிரை; ஆதி
உருவழிக்கும் அக்குதிரை ஊரல்; நீ ஊரில் பரத்தை
பரியாக, வாதுவனாய் என்றும் மற்று அச்சார்த்
திரி; குதிரை ஏறிய செல்.”
பரத்தையிற் பிரிந்துவந்த தலைவனைத், தலைவி தாழ்த்த காரணம் என். எனக், குதிரை ஊர்ந்தேன் என அவன் கூற, “நீ ஊர்ந்த குதிரை பரத்தையே!” எனப் புலந்து கூறி, அவனை அவள் நெருக்கியது இது.
1. எதிர் அல்ல – செயலுக்கு மாறுபட்டதன்று; இரண்டும் ஒரு தன்மையவே; 2. பாய்ந்தாய்ந்த தானை – நலங்கிய ஆடை; மைந்தினை–வலியினை உடைய; 3. வேரை–வேர்வை உடையை; சுவல்–தோள்; கண்ணி – தலை மாலை; 8. சுவல்–பிடரி மயிர்; 9. சிகழிகை–தலையின் முடி; உணை – தலையாட்டம் எனும் குதிரை அணி; 10. வல்லிகை–குதிரையின் கழுத்தாரம்; 11. ஞால் இயல் – தொங்கும் இயல்புடைய; புல்லிகை – மகளிர் அணியும் ஒரு காதணி; சாமரை – கன்னசாமரை எனும் குதிரை அணி; 13. உத்தி – சுட்டி எனும் மகளிர் அணி; மத்திகை–குதிரைச் சாட்டை; உத்தரியம்–மேலாடை; பிடி–கடிவாளம்; 14. முக்காழ்–முக்கண்டன் எனும் கழுத்து மாலை; கண்டிகை–குதிரையின் கழுத்து மாலை; 15. தமனியம்–பொன்; 16. நூபுரம்–சிலம்பு; புட்டில்–கெச்சை ; 19. சுசை–சுண்ணாம்பு; 20. ஆதி–ஆதி எனும் ஒருவகை வேகம்; 21. வாதுவன்–குதிரைச் சேவகன்; 22. சேகா–சேவகா என்பதன் குறை! கைவாரூஉக் கொண்ட–கையால் பெருக்கி எடுத்த; 23. முற்றம்–தெருவு; 24. வீறியது – கீறியது; 26. கோரம் – கொடியது; 27. வெதிர்–மூங்கிலால் பண்ணிய; சேதிகை–உழக்காலும், நாழியாலும் வண்ணம் தீட்டும் தொழில்; 30. சீத்தை –சீ! கெட்டது! எனும் பொருள் தரும் குறிப்புச் சொல்; 31. வியமம்–விஷம்; பருமம்–மேகலையணிந்த; சேணம் இடாத; 36. வாதத்தால் மாறுபாட்டால்; வளிக்குதிரை–காற்றெனக் கடுகிவரும் குதிரை; ஆதிஉரு–பண்டைய வடிவம்; 37. ஊரல்–ஊராதே; ஊரில்–ஊர்ந்தால்; 39. பரி–குதிரை.