மருதநில மங்கை/யாம் யாரே?

30


யாம் யாரே?

ணந்து மனையறம் மேற்கொண்டு, மனம் நிறைந்த வாழ்வு வாழும் ஓர் இளைஞன், மனைவி தரும் இன்பத்தைப் பெருக நுகர்ந்தமையால், அவ்வின்பத்தில் வெறுப்புற்றுச் சிறிது காலம், பரத்தையர் தொடர்பு கொண்டு திரிந்தான். அவன் அவ்வாறு வாழ்க்கையில் தவற, அவனுக்கு வழிகாட்ட வந்து சேர்ந்தான் பாணன். இளைஞன் அளிக்கும் புதுப்புதுப் பொருள்களைப் பெற்றுப் புகழ்ந்து பாடி, அவனை இமைப் பொழுதும் பிரியாது வாழும் பாணன் இளைஞன் பரத்தையர் ஒழுக்கத்திற்கு உற்ற துணையாய் அமைந்தான். அவன் துணையால், நாள்தோறும் புதுப்புதுப் பரத்தையரைப் பெற்றுப் பேரின்பம் நுகர்ந்தான். நாள் சில கழிந்தன. மனைவியோடு கூடி நடாத்தும் மனையற மாண்பினை நினைந்து, மீண்டு, தன் மனை புகுந்தான்.

கணவன் ஒழுக்கக் கேட்டை உணர்ந்து, அவனை வெறுத்து, வருந்திக் கிடந்த மனைவி, வாழ்க்கையில் வழுக்கி வீழ்ந்த அவனை வரவேற்க விரும்பவில்லை. மேலும், “இத்தனைநாள் என்னை மறந்து திரிந்தவனுக்கு, இன்று, என்மீது அன்பு சுரந்திருக்கும் என்பதற்கு என்ன உறுதி? தான் விரும்பும் பரத்தையின் வீடு நோக்கிக் செல்வான், என் வீடு வழியில் இருந்தமையால், ஈங்கு வந்துளான்!” என இவ்வாறு எண்ணிற்று அவள் உள்ளம். அதனால், அவனைத் தான் காண்பதையும், அவன் தன்னை அணுகுவதையும் வெறுத்தாள். அவன் தன்னை அணுக வருவதைக் கண்டு, “ஏடா! அணுக வாராதே. அங்கேயே நில். அங்கேயே நில். உன்னைப் புணரும் மகிழ்ச்சிப் பெருக்கால், மணம் நாறும் எண்ணெய் பூசி, மலர்சூடி வாழும் மங்கையர் மனைநோக்கிச் செல்லும் நீ, வழி மயங்கி, இங்கு வந்துள்ளாய் என்பதை அறிவேன். நீ வந்தவாறே திரும்பிச் செல். உன் உள்ளம் கவர்ந்த அப்பரத்தையின் மனைநோக்கி உன் கால்கள் சிவக்கக் கடுகி நட!” என்று கூறி வெகுண்டாள்.

இளைஞன், மனைவியின் சினம் கண்டு, சிறிதே மருண்டான். பின்னர் ஒருவாறு தெளிந்து, “பெண்ணே ! ஊர்ப் புறத்தே, ஒருவன் புதியதாகப் பிடித்து வந்த காடைகளைப் போர் செய்யவிட்டு, வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தான். அதைக் கண்டு நின்றமையால் காலம் கடந்து விட்டது. அதுவல்லது, நீ கூறும் குறை எதையும் நான் அறியேன். இது உண்மை!” எனத் துணிந்து ஒரு பொய் கூறினான். .

கணவன், காடைப் போர் கண்டு வந்தேன் எனக் கூறுவது பொய்யென்பதை அவள் அறிவாளாதலின், “ஏடா! நீ காடைப்போர் கண்டுகளித்து நின்றாய் என்பதை நானும் கேட்டறிந்தேன். அம்மட்டோ! நீ கண்ட காடைப் போர் எத்தகைத்து? அக் காடையின் இயல்பு யாது? அக் காடைக்குரியோன் யாவன் என்பனவும் அறிவேன். அன்ப! புதிய புதிய காடைகளைக் கைப்பற்றிக் கொணர்ந்து போரிட்டுக் காட்டுவதால் உண்டாம் வளத்தை வாயாரப் பாராட்டி, அக்காடைகள் அகப்படும் இடத்தை விட்டுப் பிரியாது காத்திருந்து, அகப்பட்ட காடைகளை அன்பாகத் தடவிக் கொடுக்கும் புலையன், இனிய இசை எழுப்ப, அவ்விசை கேட்டு மயங்கி அகப்பட்ட புதிய காடையின் போரைக் கண்டு வந்தாய் என்றும், அப்போரில் பட்ட புண் புலராது பெருந்துயர் தந்தது என்றும் பிறர் கூறக் கேட்டேன்.

“அன்ப! எப்பொழுதும் நீ அக் காடையோடு திரிவதைக் காணும் ஊரார் கூறும் பழிச்சொற்களைப் பொருட்படுத்தாது, நீ அக் காடையை மார்பிலே அனைத்துக் கிடக்க, நீ அவ்வாறு கைவிடாது கைக் கொண்டு வாழ்வதால், செருக்குற்ற அக்காடை, தனக்கு மாறுபாட்டைத் தருமாறு தன்னோடு போர் செய்யவல்ல பிறிதொரு காடையைக் கண்டவிடத்தும் அஞ்சாது அதனோடு போர்செய்யும் போரையும் கண்டு மகிழ்ந்தாய் என்றும் சிலர் வந்து கூறினர்.

“அன்ப! அக்காடை போரில் பெற்ற புண்ணிற்கு மருந்திடும் நீ, அம்மருந்து புண்ணில் நன்கு படுதற் பொருட்டு, அப் புண்ணை மூடிய மயிர்களைப் பறிக்குங்கால், நோவப் பறிக்காது, பையப் பறித்து அன்பு காட்ட, அக்காடை தன்னை எதிர்த்த காடையை, விரைந்து போரிட்டு வென்று முடிவு காணாது, அக்காடையோடு தொடர்ந்து செய்த போரைக் கண்டு நின்றாய் என்றும் வேறு சிலர் வந்து கூறினர்,” என்று கூறி, அவன் கூறிய காடைப் போர்க் காட்சிகளைக் காட்டுவாள் போல், “அன்ப! நாள்தோறும் நீ புதிய புதிய பொருள்களைக் கொடுக்கப், பெற்ற அக்கொடையைப் பாராட்டித் தன் கையாழ் இசைத்து உன்னை மகிழ்வித்து, உன்னைவிட்டு நீங்கா உன் நிழல் போல் உன் பின் திரியும் பாணன், தன் யாழோசை கேட்டுத் தன் வயப்பட்ட பரத்தையரை, மேலும் இனியன பல கூறி அகப்படுத்திக் கொண்டுவந்து கொடுக்க, அப்புதிய பரத்தையரோடு கலவிப்போர் கண்டு களித்தாய். அப்போரில் நீ பட்ட புண்கள் இன்னமும் ஆறிற்றில.

“அன்ப! உன் ஒழுக்கக் கேட்டினை உணர்ந்த ஊரார் பழிப்பதையும் பொருட்படுத்தாது, அப்பரத்தையை உன் மார்பு மாலை மயங்குமாறு அணைத்துக் கொண்டு அன்பு காட்டிய நீ, அப்பரத்தையை அனுப்பி, வேறு சில பரத்தையரை அகப்படுத்தக் கருதினாயாக, அது கண்டு அவள் ஊட, அதைப் பொருட்படுத்தாதே, புதிய பரத்தையரைப் பெற்று மகிழ்ந்தனை. அதனால் உண்டான உன் உடற்புண்கள் இன்னும் ஆறவில்லை.

“மேலும், அன்ப! கலவிக் காலத்தில், பல்லாலும், நகத்தாலும், கன்னங்களில் பண்ணும் புண்கள், ஆழமாய்ப் பதியின் இவள் வருந்துவாள் என்று, அன்பால் அஞ்சும் நீ, புண் பண்ணாது, அவள் மேனியை மெல்லத் தடவிக் கொடுக்க, அதனால் ஆராமை கொண்ட அவள், ‘இவன் என்னை வருத்தி இன்பங் கொண்டிலனே!’ என எண்ணி ஏங்கி, உன்னோடு ஊட, அவள் உடல் தணித்துப் புணர்ந்து வந்துளாய். அன்ப! நீ மறைவாக நிகழ்த்திய அக் காதல் விளையாட்டை உன் முகமே உணர்த்தி விட்டது!” என்று அவன் மேற்கொண்ட பரத்தையர் ஒழுக்கத்தினைத் தான் உணர்ந்திருப்பதை உரைத்து ஊடிச் சினந்தாள்.

“இவள் என் ஒழுக்கக் கேட்டினை உணர்ந்து கொண்டாள். ஆனால், அதை ஒப்புக் கொண்டால், இவள் உளம் வருந்துவாள். ஆகவே, அதை அறவே மறுத்தல் வேண்டும்!” எனத் துணிந்தான் இளைஞன். அதனால், “பெண்ணே! நீ கூறிய எதையும் நான் அறியேன். இஃது உண்மை. இதை உறுதி செய்ய உன்னைத் தொட்டுச் சூளுரைக்கவும் தயங்கேன்!” என்று கூறினான்.

தவறும் செய்துவிட்டு, அதை மறைக்கத் தன்னைத் தொட்டுச் சூளுரைக்கவும் துணிந்த கணவன் செயல் கண்டு கலங்கிய அவள், “ஐயே!” என இசைத்து அவனை இகழ்ந்தாள்.

தான் சூளுரைக்கத் துணிந்தமை கண்டும், மனைவி, தன்னைத் தெளியாமை கண்ட இளைஞன், “பெண்ணே! நான் நடந்ததைக் கூற, அதைப் பொய்யென்று தள்ளும் நீ, உலகியலறியாப் பேதை போலும்!” எனக் கூறிச் சிறிதே சினந்தான். ஆனால், அவளோ, அவன் சினம் கண்டும் சிந்தை கலங்கினாளல்லள். மனைவியின் மனவுறுதியைக் கண்டான். பொய்யுரைப்பதில் இனிப் பயனில்லை, உண்மையை ஒப்புக்கொண்டு மன்னிப்பை வேண்டுவதே வழி எனக் கருதினான். உடனே, “நல்லவளே! நான் செய்த தவறுகளை நீ கண்டு கொண்டாய். நான் கூறியன பொய் என்பதையும் புரிந்து கொண்டாய். என் களவொழுக்கத்தைக் கையோடு பிடித்து விட்டாய். நான் உனக்குத் தவறு செய்து விட்டேன். என்னை மன்னித்து ஏற்றுக் கொள்வாயாக!” என்று இரந்து கூறி வேண்டிக் கொண்டான்.

கணவன், தவறினை ஒப்புக்கொண்டு, மன்னிக்க வேண்டியும், அவள் சினம் தணிந்திலது. அதனால், அவள், “அன்ப! நீ வேண்டியவாறு, உன்னை மன்னித்து ஏற்றுக் கொள்ள நான் யார்? அதற்கு எனக்கு என்ன உரிமை உளது? மேலும், உன் அன்பைப் பெற்ற அப்பரத்தையர், நீ கைவிடின் பெரிதும் கலங்குவர். அவர் வருந்தாவாறு, அவரைப் பாணன் துணையால் பெற்று, அவர்க்குப் பேரின்பம் தந்து மகிழ்ந்து வாழ்வாயாக!” எனக் கூறி வெறுத்து விரட்ட விரும்பினாள். ஆனால் அதை அவ்வாறு விளங்கக் கூற அவள் பெண்ணுள்ளம் நாணிற்று. அதனால், “அன்ப! அக்காடைகள், முன்னர் உன்னால் அளிக்கப் பெற்றுப் பின்னர்க் கைவிடப்படின் வருந்தும். அவை வருந்தாவாறு, அவற்றைப் புலையன் துணையால் பெற்றுப், போர் செய்யவிட்டு மகிழ்வாயாக!” என்று கூறி, அவண் நில்லாது, அவ்விடம் விட்டு அகன்றாள்.

“நில்,ஆங்கு! நில் ஆங்கு இவர்தரல் எல்லா! நீ,
நாறுஇருங் கூந்தலார் இல்செல்வாய், இவ்வழி,
யாறு மயங்கினை போறி, நீ வந்தாங்கே
மாறுஇனி நின்னாங்கே நின் சேவடி சிவப்பச்!

செறிந்து ஒளிர் வெண்பல்லாய் ! யாம் வேறு இயைந்த 5
குறும்பூழ்ப் போர்கண்டேம், அனைத்தல்லது, யாதும்
அறிந்ததோ இல்லை, நீ வேறு ஓர்ப்பது,

குறும்பூழ்ப் போர் கண்டமை கேட்டேன்; நீ என்றும்
புதுவன ஈகை வளம்பாடிக், காலிற்
பிரியாக், கவிகைப் புலையன் தன் யாழின் 10
இகுத்த செவிசாய்த்து இனிஇனிப் பட்டன
ஈகைப் போர் கண்டாயும் போறி, மெய்எண்ணில்
தபுத்த புலர்வில புண்.

ஊரவர் கவ்வை உளைந்தீயாய், அல்கல் நின்
தாரின்வாய்க் கொண்டு முயங்கிப் பிடிமாண்டு 15
போர் வாய்ப்பக் காணினும் போகாது கொண்டாடும்
பார்வைப்போர் கண்டாயும் போறி, நின்தோள் மேலாம்
ஈரமாய்விட்டன. புண்.

கொடிற்றுப் புண் செய்யாது, மெய்ம்முழுதும் கையின்
துடைத்து நீ வேண்டினும், வெல்லாது கொண்டாடும் 20
ஒட்டியபோர் கண்டாயும் போறி, முகந்தானே
கொட்டிக் கொடுக்கும் குறிப்பு.

ஆயின், ஆயிழாய்! அன்னவை யான் ஆங்கு அறியாமை
போற்றிய நின்மெய் தொடுகு,
அன்னையோ! மெய்யைப் பொய்என்று மயங்கிய கைஒன்று 25

25 அறிகல்லாய் போறி, காண் நீ.
நல்லாய்! பொய்யெல்லாம் ஏற்றித் தவறு தலைப்பெய்து
கையொடு கண்டாய்; பிழைத்தேன்; அருள் இனி,

அருளுகம்! யாம் யாரேம்? எல்லா! தெருள
அளித்து நீ பண்ணிய பூழெல்லாம் இன்னும்
விளித்து, நின் பாணனோ டாடி அளித்தி;

விடலை! நீ நீத்தலின் நோய்பெரிது ஏய்க்கும்
நடலைப்பட்டு, எல்லா! நின்பூழ்."

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன், அது மறைத்துக் குறும்பூழ்ப்போர் கண்டு வந்தேன் எனத், தலைவி உறழ்ந்து கூறி ஊடியது.

1. இவர்தரல் – அணுகவாராதே; 2. நாறு இருங்கூந்தல் – மணம் நாறும் கரிய கூந்தல்; 3. யாறு – வழி; போறி- போன்று உள்ளாய்; வந்தாங்கே – வந்தது போலவே; 4. மாறு – திரும்பிச் செல்; நின்னாங்கே – உனக்குரிய அப்பரத்தையர் மனைக்கே; நின்னாங்கே, சேவடி சிவப்பமாறு எனக் கூட்டுக. 5. செறிந்து – நெருங்கி; ஒளிர் – ஒளிவீசும்; வேறு இயைந்த– புதிதாக வந்த; 6. குறும்பூழ் – காடை; 7, ஓர்ப்பது – எண்ணுவது; 9. ஈகை–கொடை, காடை; இருபொருளும் கொள்க; காலிற் பிரியா–உன்னிடத்தினின்றும் பிரியாத; 10. கவிகையாழ் வாசிக்கக் கவிந்த கை; காடையைத் தழுவக் கவிந்தகை; புலையன் – பாணன்; காடை பிடிப்போன்; 11. இகுத்த–தாழ்ந்த; இனிஇனி–புதிதாக; 13. தபுத்த – கொன்றன; 14. கவ்வை அலர்; உளைந்தியாய் வருந்தாய்; அல்கல் – தங்குகின்ற; 15. தாரின்வாய் – மாலையிடத்து; 19. கொடிற்றுப்புண் – கன்னத்தில் செய்யும்புண்; 21. ஒட்டிய – உன்னை விடாது பற்றிய; 22. கொட்டிக் கொடுக்கும் – தெளிவாக அறிவிக்கும்; 24. போற்றிய–உனக்கு உறுதியாக உணர்த்தற் பொருட்டு; தொடுகு–தொட்டுச் சூள் உரைப்பேன்; 25, கை ஒன்று – உலகியல் ஒழுக்கம் எதையும்; 26. அறிகல்லாய் – அறியாய்; 27. தலைப்பெய்து தலை மேல் ஏற்றி; 28. பிழைத்தேன் – பிழைசெய்து விட்டேன்; 81. அளித்தி – அருள் பண்ணுவாயாக; 32. விடலை – ஒரு ஆண்பாற் சிறப்புப் பெயர்; 32. ஏய்க்கும் –அடையும்; 33. நடலைப்பட்டு – வஞ்சிக்கப் பட்டு.