மருதநில மங்கை/ஊடுவேன் நான்; கூடும் என் நெஞ்சு

2



ஊடுவேன் நான்!
கூடும் என் நெஞ்சு!

புலவர் பாராட்டும் பெருமை வாய்ந்தது வையை. நாட்டில் ஓடும் ஆறுகள் அனைத்தையும் புலவர்கள் பாராட்டுவதில்லை. தம் பாராட்டைப் பெறுதற்கேற்ற பெருமை வாய்த ஆறுகளையே அவர்கள் பாராட்டுவர். அத்தகைய பெருமை வையை ஆற்றிற்கு உண்டு. வையை யாற்றைக் காணும் வாய்ப்புடையார்க்கு அது விளங்கும். கார் காலத்து மழை பெற்று வையை யாற்றில் வெள்ளம் பெருகும். அதன் இரு கரைக்கண் கண்ணும் உள்ள மரங்கள் மலர்களால் நிறைந்து மணம் வீசும். காம்பற்று உதிரும் அம் மலர்களெல்லாம் வையை ஆற்றில் வீழ்ந்து, வெள்ள நீர் தோன்றாவாறு மூடி மறைக்கும். அதனால், “இது புனல் யாறு அன்று; பூ வாறு!” எனும் பெருமை அவ்வாற்றிற்குச் சூட்டுவர் புலவர். மலர்கள் நிறைய, மணமகள் மார்பில் கிடக்கும் மலர் மாலையோ என மருளுமாறு வளைந்து ஓடி வரும். அவ்வாறு, பாய்ந்தோடி வரும் வையை, தன் மதிலைச் சூழ்ந்து ஓடுவதால் பெருமையுற்றது மதுரை மாநகரம்.

மதுரை மாநகரில் இருந்து பாண்டி நாடாண்ட அரசருள், ஆற்றல் மிக்க பேரரசன் ஒருவன், பகைவரைத் தான் பாழ்செய்து மகிழ்வதல்லது, அப்பகைவரால் தான் அழிவுறாத் தறுகணாளனாய் வாழ்ந்திருந்தான். அவன் படை, “பகைவர் படையினை முற்றி அழிக்குமே யல்லது அவன் அரசிருக்கையாம் மதுரை, பகைவர் படையின் முற்றுகையைப் பார்த்திலது. அதனால், மதுரை, வையை யாற்றின் நீரால் முற்றப்படுவதல்லது, பகைவர் படையால் முற்றப்படுவதில்லை!” என அவன் பெருமையை அவன் தலைநகர்மீது ஏற்றிப் பாராட்டிப் பெருமை செய்தனர் மக்கள்.

புலவர் பாராட்டப் பேராற்றல் வாய்ந்த பேரரசாய் வாழ்ந்த அவன், தன் அரசமாதேவி வருந்தி வாடுமாறு, அவளை மனையகத்தே விடுத்து மறந்து, பரத்தையொருத்தியைக் காதலித்து அவள் மனை சென்று ஆங்கு வாழத் தொடங்கினான்.

அரசன் செயல் கண்டு வருந்தினாள் அரசமாதேவி. தம் மனைவியர்பால் உண்மை அன்புடையார்க்குப் பரத்தையர்பால் ஆசை பிறத்தல் நிகழாது. ஆதலின், பரத்தையர் ஒழுக்கம் மேற்கொண்ட அரசன் உள்ளத்தில் அன்பில்லை. ‘என்பால் அன்புடையனல்லன் அரசன். நற்பண்பும் நல்லொழுக்கமும் உடையார், பரத்தையர் உறவு போலும் தீயொழுக்கத்தை நெஞ்சால் நினைக்கவும் நடுங்குவர். ஆதலின், பரத்தையர் பின் திரியும் மன்னவன், மக்கட் பண்பற்றவனாவன். அறமல்லாச் செயல் செய்ய நானும் நல்உள்ளம் உடையார், பெரியோர் பழிக்கும் பரத்தையர் ஒழுக்கம் மேற்கொள்ளார். ஆதலின், அத்தீயொழுக்க நெறி நிற்கும் அரசன், நாணம் அழிய நயமற்ற வனாவன்!” எனப் பலப்பல எண்ணி வருந்தினாள்.

பலரும் பழிக்கும் பரத்தையர் தொடர்பு மேற் கொண்ட அரசன், அதைப் பிறர் அறியாவாறு மறைத்து மேற்கொள்ளவும் கருதினானல்லன். பரத்தையொடு கூடி, ஆடியும் பாடியும் மகிழுங்கால், அப்பரத்தை பொய்க் கோபங் கொண்டு, மலர் மாலையால் அவனை அடிக்க, அதனால், அவன் மேனியில் உண்டான புண்ணின் வடுவைப் பிறர் பார்த்துப் பழிக்க வாழ்ந்தான். பரத்தையை அன்பால் அணைத்துக் கொண்ட பொழுது, தன் மார்பிற் பூசிய சந்தனம், அவள் ஆகம்பட்டு அழியப் பிறர்முன் அழிந்த அக்காட்சியோடே நாணாது போவன். பரத்தையின் வாயில் முத்தம் கொண்டவழி, அவள் இளம் பற்கள் அழுந்தியதால் சிவந்து உண்டான வடு விளங்க வருதல் நாணற்ற செயலாம் என அவன் நினைப்பதிலன். பழிக்கத் தகும் அச் சின்னங்கள் சிதையாமல் வாழும் அவன், ஒரோவொருகால், தன் மனைக்கு வரும் பொழுதும், அத் தோற்றத்தோடே வருவன். மணம் கொண்ட மனைவியின் முன் அவ் வடிவோடு வருதல் மானம் இழந்தார்க்கும் ஒவ்வாது என்பதை அவன் உணர்ந்திலன்.

கடையரும் செய்ய அஞ்சும் அச் செயலைக் கணவன் மேற்கொள்வது கண்டு கலங்கினாள் மனைவி. ‘அவன் என் மனை வரின், அவனை ஏற்றுக் கொள்ளேன். அவனொடு பேசேன். அவனைக் காண்பது செய்யேன். அவனொடு புலப்பேன். அவனொடு ஊடுவேன்!’ என்றெல்லாம் உறுதி பூண்டு வாழ்ந்தாள்.

சின்னாள் கழித்து, ஒரு நாள், அரசன் அரண்மனைக்கு வந்தான். அவனைக் கண்டாள் அரசமாதேவி. கண்டவுடனே அவன்பால் கொண்ட சினம் அகன்றது. அவள் நெஞ்சு, அவன் அன்பிற்கு அடிமையாகி விட்டது. வாயிற்கண் சென்று வரவேற்றாள். உள்ளழைத்துச் சென்று உணவளித்து மகிழ்ந்தாள். இரவு கழிந்தது. காலையில் அவளைக் கண்டாள் அவள் தோழி. அரசன் பரத்தை யொழுக்கத்தையும், அரசியாரின் ஊடல் உணர்வையும் அவள் அறிவாள். அதனால் அரண்மனை புகும் அரசனைத் தேவி ஏற்றுக் கொள்ளாள், அவள் ஊடலைத் தணிக்க மாட்டாது, வாயிற்கண் கிடந்து வருந்துவன் வேந்தன் என எதிர் நோக்கியிருந்தாள் அவள். ஆனால், அன்றிரவு அத்தகைய நிகழ்ச்சி எதுவும் நிகழாமை அவளுக்கு வியப்பளித்தது. விடிந்ததும் அரசியை அடுத்துத், “தேவி! நேற்றுவரை நீ கொண்டிருந்த சினமும் உறுதிப் பாடும் இப்போது யாண்டு உளது? ‘புலப்பேன், ஊடுவேன்’ என உரைத்த உரையெல்லாம் என்னாயின? சிறுபூசலும் தலைகாட்டவில்லையே! எவ்வாறு தீர்ந்தது நின் ஊடல்? இதுவோ நின் உறுதி?” என்றெல்லாம் கேட்டு எள்ளி நகைத்தாள்.

அது கேட்ட அரசி, “தோழி! யான் என் செய்வேன்? என் நெஞ்சு என்னை ஏமாற்றி விட்டது. செய்யத் தகும் நற்செயல் இது என்பதை அறியும் அறிவற்றது அது. தனக்கென ஓர்’ ஒழுக்க நெறி உணராதது அது. தனித்தியங்கும் தன்மை அற்றது அது. இவையெல்லாவற்றிற்கும் மேலாக, என் உடன் இருந்தே, எனக்கு உற்ற துணையாய் வாழ்வது போல் ஊறுதேடும் இயல்புடையது அந்நெஞ்சு. யான் அவன் வரின், புலப்பேன் என்றால், அது கலப்பேன் என்னும். நான் ஊடுவேன் என்றால், அது கூடுவேன் என்னும், இவ்வாறு, நான் ஒன்று கருதின், அதற்கு மாறாகக் கருதத் தொடங்கி விட்டது. அவ்வியல்புடைய இந் நெஞ்சைத் துணையாகப் பெற்ற எனக்கு, எண்ணியதை எண்ணியவாறே பெறும் திண்மை, சொல்லியதைச் சொல்லியவாறே முடிக்கும் உறுதிப்பாடு எங்கே உண்டாகும்? என் நெஞ்சு என்னைக் கைவிட்டது மட்டுமன்று. எனக்கு எதிராக அவரோடு சேர்ந்தும் விட்டது. அந் நிலையில், அவரை ஏற்றுக் கொள்ளாது மறுத்தல் எவ்வாறு இயலும்? அதனால் அவரை ஏற்றுக் கொண்டேன். என் செய்வது?” என்று கூறிப் பெண்மையின் மென்மையை, மேன்மையினை விளக்கினாள்.

“கார்முற்றி இணர்ஊழ்த்த கமழ்தோட்ட மலர்வேய்ந்து
சீர்முற்றிப் புலவர்வாய்ச் சிறப்புஎய்தி, இருநிலம்
தார்முற்றியது போலத் தகைபூத்த வையைதன்
நீர்முற்றி மதிப்பொரூஉம் பகைஅல்லால், நேராதார்
போர்முற்றொன்று அறியாத புரிசைசூழ் புனல்ஊரன். 5

நலத்தை எழில்உண்கண் நல்லார் தம்கோதையால்
அலைத்த புண்வடுக்காட்டி, அன்புஇன்றிவரின், எல்லா!
புலப்பேன்யான் என்பேன்மன்; அந்நிலையே அவன்காணின்
கலப்பேன் என்னும் இக்கையறு நெஞ்சே.

கோடுஎழில் அகழ்அல்குல் கொடியன்னார் முலைமூழ்கிப் 10
பாடுஅழி சாந்தினன் பண்பின்றிவரின், எல்லா!
ஊடுவேன் என்பேன்மன்; அந்நிலையே அவற்காணின்
கூடுவேன் என்னும் இக்கொள்கைஇல் நெஞ்சே.

இனிப்புணர்ந்த எழில்நல்லார் இலங்கு எயிறு உறாஅலின்,15
நனிச்சிவந்த வடுக்காட்டி நாண் இன்றிவரின், எல்லா!
துணிப்பேன்யான் என்பேன்மன்; அந்நிலையே அவன் காணின்
தனித்தேதாழும் இத்தனியில் நெஞ்சே.

என வாங்கு,
பிறைபுரை ஏர்நுதால்! தாம் எண்ணியவை எல்லாம்
துறைபோதல் ஒல்லுமோ, தூவாகாது ஆங்கே
அறைபோகு நெஞ்சு உடையார்க்கு?” 20

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனை ஏற்றுக் கொண்ட தலைவி, பிற்றை நாள் தோழிக்குச் சொல்லியது.

1. இணர்-பூங்கொத்துக்கள்; ஊழ்த்து-அலர்ந்து; தோட்ட-இதழ்களைஉடைய; 2. சீர்-சிறப்பு; இரு நிலம்- பெரிய நிலம்; 3. தார்-மாலை; முற்றியது-அணிந்தது, தகைபூத்த-அழகுமிக்க; 4. நேராதார்-பகைவர்; 5. புரிசை-மதில்; 6. நலத்தகை-நல்ல அழகு; நல்லார்-பரத்தையர்; கோதை-மாலை;7. எல்லா-ஏடிஎனும் பொருள்படும் விளிப் பெயர்; 9. கையறு-செய்யும் செயல் அற்ற; 10. கொடியன்னார்-பூங்கொடி போன்ற பரத்தையர்; 11. பாடு-பெருமை; 14. இனி-இப்பொழுது; இலங்கு- விளங்கும்; எயிறு-பற்கள்; உறாஅலின்-அழுந்துதலால்; 16. துனிப்பேன்-வெறுப்பேன்; 17. தனித்து-என்னைக் கைவிட்டுத் தான் மட்டும்; 19. ஏர்-அழகு; 20. துறைபோதல்-முற்ற முடித்தல்; ஒல்லுமோ-இயலுமோ; தூஆகாது-துணை ஆகாது; 21. அறைபோதல்-துணை புரிவார்போல் உடன் இருந்தே துன்பம் செய்தல்.