மருதநில மங்கை/கனவினான் எய்திய செல்வம்

3



கனவினான் எய்திய செல்வம்


ங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த பெருமையுடையது மதுரை. கடுஞ்சொல் கடிதலும், பயனில் சொல் பாராட்டாமையுமாய சொல்லியல்பறிந்த பெரியோர்கள் வழி வந்தமையால், பொல்லாங்கு தரும் சொற்கள் புகுந்தறியாத காதுகளையுடையராய்த் தமக்கு முன்னே வாழ்ந்து, தம் வாழ்வில் தாம் பெற்ற உணர்வுகளை ஒன்று கூட்டி அளித்த உயர்ந்த பாக்களின் உறுதுணை கொண்டு, புலவர்கள் புதிது புதிதாக ஆக்கித் தரும் அரிய பாக்களின் அழகை நுகர்ந்து அகமகிழும் மதுரை மக்களுக்கு மன்னனாய்த் திகழ்ந்தான் ஓர் இளைஞன். ஆண்மையும் ஆற்றலும் ஒருங்கே அமைந்தவன் அவன். “இந்நாடு எல்லோர்க்கும் பொது. இதை ஆளும் உரிமை அனைவர்க்கும் உண்டு!” என்ற சொல்லைக் கேட்கப் பொறாது அவன் உள்ளம். உலகம் அனைத்தையும் தன் ஒரு குடைக்கீழ் வைத்து ஆள வேண்டும் எனும் ஆசைக்கு அடிமைப்பட்டுக் கிடந்தான் அவன். நல்ல காலம், அவன் அமைச்சர் அறிவுடைப் பெருமக்களாய் அமையவே, அவன் அவ்வாசையால் அழிந்திலன். அவ்வாசையால் அவனுக்கும், அவன் நாட்டு மக்களுக்கும் உளதாகும் கேட்டினை எடுத்துக் காட்டி, அரிய அறிவுரை வழங்கி, அவனை அவ்வழிவுப் பாதையினின்றும் காத்தனர் அமைச்சர். அவர் துணையால், இளைஞன் அழியாப் பெருவாழ்வு பெற்று வாழ்ந்தான்.

ஒருவர் இருந்து ஆளுதற்கு வேண்டுமளவு, அவன் நாடு பரந்து கிடந்தது. அவன் நாட்டை அடுத்துள்ள நாடுகளை அழிக்கும் ஆற்றல் அவன் நாட்டிற்கு இருந்ததேயல்லது, அவன் நாட்டை அழிக்கும் ஆற்றல் அந்நாடுகளுக்கு இல்லை. அதனால், நாட்டைக் காக்க வேண்டுமே என்ற கவலை அவனுக்கு இல்லை. மேலும் நாட்டு மக்கள், புலவர் கூறும் பொருளுரை கேட்டுப் பண்பட்டவராதலின், நாட்டில் அமைதிக்கு ஊறு இல்லையாதலின், நாட்டாட்சியில் கருத்தைச் செலுத்த வேண்டிய நிலையும் அவனுக்கு இல்லையாயிற்று. அதனால், அவன் உள்ளம் ஆடல் பாடல்களில் சென்றது. அவ்வேட்கை மிகுதியால் மனைவியையும் ஒரு சிறிது மறந்தான். ஊரில் உள்ள பரத்தையர் வீடுதோறும் புகுந்து, அவர் ஆடலும் பாடலும் அழகும் கண்டு களித்து வாழத் தொடங்கினான். இன்று ஒரு பரத்தை வீடு, நாளைக்கு ஒரு பரத்தை வீடு என, நாள்தோறும் புதுப்புதுப் பரத்தையரைப் பெற்றுச் சிற்றின்ப வாழ்வில் அறிவைப் பறிகொடுத்து அகமகிழ்ந்து கிடந்தான். இளைஞன் பரத்தையர் ஒழுக்கத்திற்கு உற்ற துணை புரிந்தனர் அவன்பால் பரிசில் பெற்றுப் பிழைக்கும் பாணனும், தேர்ப்பாகனும், ஆடல் பாடலில் வல்லளாய் அழகிற் சிறந்து விளங்குவாள் வாழும் மனையறிந்து வருவான் பாணன். அவள் மனைக்கு, இளைஞனை அழைத்துச் சென்று விடுவான் தேர்ப்பாகன்.

ஒரு நாள் கூடி மகிழ்ந்த பரத்தையை, மறுநாள் மறந்து விடுத்துப் புதியாள் ஒருத்தியின் பின்சென்று வாழ்வதில் பேரின்பம் கண்டான் இளைஞன். அதனால், நேற்று அவனைப் பெற்று மகிழ்ந்தவள். இன்று அவன், வேறு ஒருத்தியைத் தேடிப் போய்விட்டான் என்பது அறிந்து, “நாடாளும் இவ்விளைஞன் நம்புதற்குரிய நல்லனல்லன்!” எனக் கூறிப் பழிப்பள். அவன், வேறு ஒரு பரத்தை வீடு சென்று வாழ்கிறான் என்பதை அறியாத பரத்தை, அவன் அரண்மனை சென்று வாழ்கின்றனனோ எனும் நினைவால், ஆங்குச் சென்று, அவனை வினாவுதலும் உண்டு. இவ்வாறு வருந்தினர் அப்பரத்தையர். ஆடுகள் தழை உண்ணுமாறு, இடையன் வெட்டிச் சாய்த்த மரக்கிளை, முழுதும் வெட்டி வேறாக்கப் பெறாமையால் அறவே அழிந்து போகாமலும், வெட்டுண்டமையால் புதிய தளிர் விட்டுத் தழைக்காமலும் கிடந்து அழிவது போல், இளைஞனை முழுதும் தமக்கே உரியனாய்ப் பெற்று மகிழ்வதோ, அறவே மறப்பதோ செய்யமாட்டாது, பரத்தையர் வருந்திக் கிடந்தனர். இவ்வாறு, அவனோடு தொடர்புற்று வாழ்ந்த பரத்தையர் மிகப் பலராவர். அவரை எண்ணிக் கணக்கிடல் இயலாது. இவ்வூர் முழுவதும் அவர்களே எனக் கூறுமாறு, ஒர் ஊரில் அவர்களை மட்டுமே குடியேற்றி வாழ வைக்கலாம். அவன் உறவாடிய பரத்தையர் கூட்டம் அத்துணைப் பெரிது.

இளைஞன் பேராண்மை கண்டு பாராட்டிய ஊரார், அவன் ஆட்சி நலம் கண்டு நாவாரப் புகழ்ந்த அந்நாட்டு மக்கள், அவன் மேற்கொண்ட பரத்தையர் ஒழுக்கம் அறிந்து பழிக்கத் தலைப்பட்டனர். கணவன் ஒழுக்கக் கேட்டினையும், அக் கேடறிந்து ஊரார் உரைக்கும் பழி யுரைகளையும் அறிந்து வருந்தினாள் அவன் மனைவி. அவனைப் பிரியாதிருந்து பேரின்பம் நுகர்தற்கில்லையே என்ற ஏக்கத்திலும், அவன் ஒழுக்கக் கேட்டால் உண்டாம் இழிவு பெரிதாயிற்று. அக் கவலையால், அழகும் நலமும் அவளை விட்டு அகன்றன. மகிழ்ச்சி இழந்து மனங்குன்றிக் கிடந்தாள்.

அந்நிலையில் அரண்மனையில் ஒரு விழாக் கொண்டாடப் பெற்றது. விழாக் கருதியும் அரசன் அரண்மனைக்கு மீண்டானல்லன். அவன் இல்லாமலே விழாக் கொண்டாடப் பெற்றது. அவ் விழாப் பற்றிய நினைவு மிகுதியால், அரசமாதேவி தன் கவலையை ஒரு சிறிது மறந்திருந்தாள். ஆனால், அவ்வமைதி நெடிது நிற்கவில்லை. விழா நிகழுங்கால், அரச வீதி வழியே சென்று கொண்டிருத்த பாணன், அரண்மனை விழாவைக் கண்டான். விழா நிகழ் காலமாதலின் அரசன் அரண்மனைக்கண் இருப்பன் என எண்ணினான். உடனே உள்ளே புகுந்து நோக்கினான். ஆனால், ஆங்கு அரசனைக் கண்டிலன். அதனால் அரசியாரை அணுகி, “அரசர் எங்கே?” என்றுவினாவினான். பாணன் வினா, அரசியார் மறந்திருந்த, அரசன் ஒழுக்கக் கேட்டினை நினைப்பூட்டி விட்டது. அந்நினைவு மிகுதியால் வருத்தம் மிக்கு வாடிக் கிடந்தாள்.

அந் நிலையில் அரசனும் வந்து சேர்ந்தான். அவனைக் காணவே, அதுகாறும் அடங்கியிருந்த அவள் காதல் உணர்வு துளிர்க்கத் தலைப்பட்டது. ஆயினும், அவன் ஒழுக்கக் கேடு அவள் உள்ளத்தை வாட்டிற்று. மனைவி, கணவன் தரும் இன்பத்தால், மகிழ மட்டும் வந்தவளல்லள். அவன் தவறியவிடத்து, அத் தவறினை எடுத்துக் காட்டித் திருத்தவும் கடமைப்பட்டவள் என்பதை உணர்ந்தவளாதலின், அவனுக்கு அறிவுரைக்க விரும்பினாள். விரும்பியவள், தான் அறிவுரைக்க முற்படுவதால் கணவன் மனத்தை நோகச் செய்து விடுதல் கூடாதே என்றும் எண்ணினாள். அதனால், “தனக்குரிய நாடு சிறிதேயாயினும், அதை ஊறு நேராவாறு காக்கும் கடமையை மறந்து, பிற நாடுகள் மீது ஆசை கொண்டு போவது அறநெறியாகாது. அஃது அழிவுப் பாதையாம் என்பதை ஆன்றோர் உணர்த்த உணர்ந்த உரவோன் நீ!” என வெளிப்படக் கூறிப் பாராட்டி வரவேற்பாள் போல் வரவேற்று, “அத்தகைய பேரறிவு வாய்ந்த நீ, மணங் கொண்ட மனைவியை மறந்து, பரத்தையர் நலம் நாடிச் செல்லுதல் பழியாம். உள்ள மனைவியை விடுத்து, ஊர்ப் பெண்களோடு திரிதல் உயர்ந்தோர்க்குரிய ஒழுக்கமன்று என்பதை உணராதது ஏனோ?” என்பதைக் குறிப்பால் கூறி அறிவுறுத்தினாள்.

அவ்வாறு கூறி வரவேற்றவள், அவள் பாராட்டுரை கேட்டு, அதன் வழியே அவள் உள்ளம் உணர்த்தும் உயர்ந்த அறிவுரை உணர்ந்து உணர்விழந்து நிற்பானை உள்ளே அழைத்துச் சென்றாள். அவனை அணுகி நின்று, “ஐய! நீ என்னை மறந்து வாழ்ந்தாய். பரத்தையர் தொடர்பு கொண்டு திரிந்தாய். அவர் மார்பு அணைக்க அழிந்த உன் மாலை என்னை நோக்கி இகழ்கிறது. சூடுவார் இல்லாமையால், வட்டிலில் வறிதே கிடக்கும் மலர்போல் வாடிக் கிடக்கின்றேன் நான். ஆயினும், நான் உன்னைப் பழிக்கேன். பரத்தையர் பண்பு என்பால் இல்லை. அவர்கள் உன் நலன் ஒன்றே நயந்து வாழ்பவர். அதனால் அந்நலத்தை ஒருநாள் இழப்பினும், உன்னைப் பழிப்பர். நான் அங்ஙணம் செய்யேன். உன் நலம் பெறும் உரிமை உடைய நான், அந்நலத்தை இழந்து ஒரு நாள் அல்ல, பல நாளாக வருந்துகிறேன். எனினும், உன்னைக் காணாது வருந்தும் பரத்தையர், என் வாயிற்கண் வந்து நின்று, தம் கைவளை ஒலிக்கக் கதவைத் தட்டித் திறந்து உள்புகுந்து உன்னை என்பால் வினவும் நிலை கண்டும் நான் வருந்தேன். ‘அரசன் அறிவுடையனல்லன்; அன்புடையனல்லன்!’ எனப் பழிக்கும் அவர்களைப் போல், ‘அவன் எமக்கு உறவல்லன்!’ எனக் கூறி, உன்னை அவர் முன் பழித்துரைக்கேன். உனக்கு ஏற்ற இளையவள் வாழும் இல் எது எனத் தேர்ந்து திரியும் பாணனையும் பார்த்துள்ளேன். அப் பரத்தையர் வீட்டிற்கு உன்னைத் தேரேற்றிக் கொண்டு விடுக்கும் உன் பாகன் கொடுமையையும் அறிவேன். ஆயினும், அவர்களை நான் பழிக்கேன். ஐய! இவ்வாறு, ஒரோவொருகால் ஈங்கு வரும் உன் வரவால் மகிழும் நான், நீ பிரியப் பெரிதும் வாடுகிறேன். அது காணும் இவ்வூரார் உன்னைப் பழிக்கின்றனர். ‘ஒருத்தி வருந்த, ஒருத்தியிடத்தே மகிழ்ந்து வாழ்கிறான்!’ என ஊரார் உரைக்கும் அவ்வலர் உரை ஒன்றிற்கே வருந்துகிறது என் உள்ளம், அன்ப! இவ்வாறு வரும் வருகையின் போதும், உன் உடல் ஈங்கு இருப்பினும், உன் நினைவெல்லாம் பரத்தையர் சேரிக்கண் சென்று திரிகிறது. இவ்வாறு என்பால் உள்ளன்பின்றி வாழும் உன் உறவால் நான் பெறலாகும் இன்பம், கனவில் கண்ட செல்வம் போல் கைகூடப் பெறாது. பயன் நிறைந்ததும் ஆகாது. ஆகவே, அன்ப! உன்னை ஏற்றுக் கொள்வதில் மகிழ்ச்சி கொண்டிலது என் மனம்!” எனக் கூறி ஏற்றுக் கொண்டாள். அவ்வாறு ஏற்றுக் கொள்ளுமுகத்தான், அவன் ஒழுக்கக் கேட்டினையும், அதனால் ஊரார் கூறும் அலரையும், அதனால் அவனுக்குண்டாம் புகழ்க் கேட்டினையும் அவளுக்கு உண்டாம் இன்பக் கேட்டினையும் எடுத்துக்காட்டித் திருத்திய திறம் அறிந்து மகிழ்தற்குரியதாம்.

“பொதுமொழி பிறர்க்குஇன்றி முழுதாளும் செல்வர்க்கு
மதிமொழி இடன்மாலை வினைவர்போல் வல்லவர்
செதுமொழி சீத்த செவி செறுவாக
முதுமொழி நீராப், புலன்நா உழவர்,
புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் புனல்ஊர! 5

ஊரன்மன் உரன்அல்லன் நமக்கு என்ன உடன்வாளாது,
ஓருர்தொக்கிருந்த நின்பெண்டிருள் நேராகிக்,
களையா நின்குறிவந்து, எம்கதவம் சேர்ந்து அசைத்தகை
வளையின்வாய் விடன்மாலை மகளிரை நோவேமோ?
கேளலன் நமக்கு அவன் குறுகன்மின் எனமற்றெம் 10
தோளொடு பகைபட்டு நினைவாடு நெஞ்சத்தேம்;

ஊடியார் நலம்தேம்ப ஒடியெறிந்தவர் வயின்
மால்தீர்க்கும் அவன்மார்புஎன்று எழுந்தசொல் நோவேமோ?
முகைவாய்த்த முலைபாயக் குழைந்தநின் தார்எள்ள
வகைவரிச் செப்பினுள் வைகிய கோதையேம்; 15

சேரிபால் சென்று நீசேர்ந்த இல் வினாயினன்
தேரொடு திரிதரும் பாகனைப்பழிப் பேமோ?
ஒலிகொண்ட சும்மையான் மணமனை குறித்து எம்இல்
பொலிக எனப்புகுந்த நின்புலையனைக் கண்டயாம்,

என வாங்கு, 20
நனவினான் வேறாகும் வேளா முயக்கம்
மனைவரின் பெற்றுஉவந்து, மற்று எம்தோள்வாட,
இனையர்என உணர்ந்தார் என்று ஏக்கற் றாங்குக்
கனவினான் எய்திய செல்வத்து அனையதே,
ஐய! எமக்கு நின்மார்பு.” 25

பரத்தையர் சேரியினின்றும் வந்த தலைவனுக்கு, ஊடல் தீர்ந்து வாயில் நேரும் தலைவி கூறியது இது.

1. பொதுமொழி-உலகம் அனைவர்க்கும் பொது என்ற சொல்; மதிமொழி-அறிவுரை, இடன்மாலை-உரைக்கும் இயல்புடைய; வினைவர்-அமைச்சர்; 3. செதுமொழி-பொல்லாத சொற்கள்; சீத்த-களையப்பட்ட; செறு-வயல்; 4. புலன்நா உழவர்-அறிவு நிறைந்த நாக்கை ஏராகக் கொண்டு உழும் புலவர்; 5. கூட்டுண்ணும்-பெரும் அளவில் பெற்று மகிழும்;6. உரன் அல்லன்-உறுதியுடையானல்லன்; வாளாது-ஒவ்வொருவரும் ஒவ்வொரு குறை கூறி; 7. நேராகி-ஒப்பாகி; 8. களையா-கூறிய குறைகளைக் களைந்து; கதவம்-கதவு; 9. வளையின் வாய் விடல்மாலை-வளை யொலியால் தம் வரவு அறிவிக்கும் இயல்புடைய; 11. வாடு-கெடு கின்ற;12. ஒடிஎறிந்து-இடையன் வெட்டிய மரம் போலாகி; 13. மால்-துன்பம்; சொல்-பழி; 14. குழைந்த-அழிந்த; தார்-மாலை; எள்ள-நகைக்க; 15. வகைவரிச் செப்பு-அழகிய வரிகள் அமைந்த செப்புக் கலம்; 16. சேரியால்-சேரிதோறும்; 18. ஒலி கொண்ட சும்மையான்-ஆரவாரப் பேரொலியால்; 19. பொலிக-பொலிக என வாழ்த்தல்; புலையன்-பாணன்ர; 21. வேளா முயக்கம்-விருப்பமில்லாத புணர்ச்சி; 23. இணைய-இத்தன்மையர்;ஏக்கற்று-மனம் நொந்து.