மருதநில மங்கை/தோலாமோ யாமெனின்!

8


தோலாமோ யாமெனின் !

ணவன் பரத்தை வீடு சென்று வாழக் கலங்கிய ஒரு பெண், ஒரு நாள், தன் ஊர் நடுவே உள்ள ஊருணித் துறைக்கண் நின்று, அதன் அழகைக் கண்டு, அக் காட்சியால், தன் கவலை மறந்து களித்திருந்தாள். நீர் நிலையின் கரையில், நீரை ஒட்டி வளர்ந்திருந்த பகன்றைக் கொடிகள், வெள்ளியாலாய வெண்ணிறத் தட்டுக்களை வரிசை வரிசையாக வைத்திருத்தல் போல், வெண்ணிற மலர்களால் நிறைந்திருந்தன. அம்மலர்களில் படுமாறு நீண்டு வளர்ந்திருந்தது ஒரு தாமரை அரும்பு. சிறிது பொழுதிற்கெல்லாம் அது மலர்ந்தது. அக்காட்சி வெள்ளித் தட்டில் வாய் வைத்து, அதில் வார்த்துள்ள கள்ளை உண்டு மகிழ்பவள் முகம் மலர்ந்து தோன்றுவது போல் தோன்றக் கண்டு, துயர் மறந்து மகிழ்ந்தாள்.

அக் காட்சியால், சிறிதே கவலை மறந்து மகிழ்ந்த அவள், அக் காட்சி அவள் கணவன் ஒழுக்கக் கேட்டை நினைப்பூட்ட நின்று வருந்தினாள். நீர்த்துறை பரத்தையர் சேரியாகவும், அத்துறை அழகு பெற மலர்ந்த பகன்றைப் பூக்கள், அச்சேரிக்கு அழகு தரும் இளம் பரத்தையராகவும், அம் மலரை அடுத்து இருந்த தாமரை அரும்பு, அப் பரத்தையரோடு தொடர்பு கொண்டு வாழும் தன் கணவனாகவும் காட்சி அளித்தன. அம்மட்டோ! தாமரை மலர், கள்ளுண்ணல் தீதென அறிந்தும், அதை உண்டு களிப்பவள் முகம்போல் மலர்வது, பரத்தையர் ஒழுக்கம் பழியுடைத்து என அறிந்தும், அவர்பால் இன்பம் நுகர்ந்து மகிழும் கணவன் செயலை நினைவூட்டிற்று. அதனால் கலங்கி, அங்கு நில்லாது வீடடைந்தாள்.

அந்நிலையில், பரத்தை வீடு சென்றிருந்த கணவனும் வந்து சேர்ந்தான். வந்தவன் உள்ளே வாராவாறு வழியடைத்துக் கொண்டாள். சினந்து நிற்கும் அவள் நிலை கண்டு அவன் நடுங்கினான். அவளைத் தேற்றும் வழியறியாது விழித்தான். இறுதியில், அவளைப் பணிந்து நின்று, “பெண்ணே ! நீ கருதுமாறு, நான் பழியுடையேன் அல்லேன்! நீ சினக்குமாறு செய்த குற்றம் எதையும் நான் அறியேன்!” எனக் கூறி நின்றான்.

கணவன் ஒழுக்கக் கேட்டால் உள்ளம் நொந்து இருப்பவள், அவன் பொய்யுரைக்கக் கேட்டுப் பெரிதும் சினம் கொண்டாள். கண்கள் சிவப்பேற, அவனை நோக்கினாள். அவன் அணிந்துள்ள தலைமாலை, அவன் விரும்பிப் புணர்ந்த இளம்பரத்தையரின் மாலை விளங்கும் மார்பை ஆரத் தழுவிக் கொண்டமையாற் கசங்கி, நிறங் கெட்டுத் தோன்றுவதைக் கண்டாள். மேலும், அவனை நோக்கினாள். அவன் மார்பில் பூசிய சந்தனம், அப் பரத்தையர் அணிந்த மாலையாற் கலைந்து கவின் இழந்து தோன்றுவதைக் கண்டாள். அவன் ஆடையை நோக்கினாள். அது, பரத்தையரோடு அவன் ஆடிய துணங்கைக் கூத்தில் அவர் காற்சிலம்பில் சிக்குண்டு கரை கிழிந்து போயிருக்கக் கண்டாள். தான் செய்த தவறுகளைத் தன் தலைமாலையும், மார்பில் சந்தனமும், ஆடையின் கரையும் காட்டிக் கொடுப்பவும், ‘நான் தீதிலேன், மனத்தால் குற்றம் இலேன் !’ எனப் பொய் கூறி அடிபணிந்து நிற்கும் அவன் நெஞ்சத் துணிவைக் கண்டாள். கடுஞ் சினம் கொண்டாள்.

“அன்ப! நீ எதைச் செய்யினும், ‘உன் செயல் தவறுடைத்து! துயர் விளைவிக்கும் கொடுமை உடைத்து!’ எனக் கூறி உன் ஒழுக்கக் கேட்டினை உணர்த்துவார் இல்லாத இடத்தில், உன் இன்ப விளையாட்டால் தன் நிறம் இழந்து கெட்ட உன் கண்ணி, பரத்தையர் மலர் மாலை பட்டு அழிந்து பாழான உன் மார்புச் சந்தனம், அவளோடு ஆடிய துணங்கைக் கூத்தில் கிழிந்து கந்தலான உன் ஆடை ஆகிய இவை, உனக்குப் பகையாய், உன் திருவிளையாடல்களை அம்பலப் படுத்தாத போது வேண்டுமானால், ‘நான் ஒழுக்கத்தால் தீதுடையேனல்லன்!’ என உரைத்தும், பணிந்தும் எம்மை மயக்குதல் பொருந்தும். ஆனால், அன்ப! அது இப்போது இயலாது. அவை உன் ஒழுக்கக் கேட்டினை உணர்த்த வல்ல நல்ல சான்றுகளாயின. அவை, அதை உள்ளது உள்ளவாறே, உணர்த்தி விட்டன. இதற்கு மேலும் பொய் கூறி எம்மை ஏமாற்றுதல் இயலாது.

"அன்ப! ஆற்றில் பெருகி ஓடும் வெள்ள நீர் அனைத்தும் புகுந்தாலும் நிறைவுறாத கடல்போல், உன் நலத்தை, ஒரு நாளும் இழக்காமல், ஓயாது பெறினும், தம் ஆசை அடங்காது, அதனால் உன்னை இடைவிடாது பெற விரும்பி, அந் நிலையில் வாய்க்காது போகும் காலத்தில், உன்னோடு ஊடித் துயர் கொள்ளும், அப் பரத்தையர் ஊடல் தீர்க்க, எதை வேண்டுமாயினும் கூற, அவர்பால் செல்வாயாக. நான், நீ கூறும் எத்தகைய பெரிய பொய்யையும் எளிதில் நம்பி, உன்னை ஏற்றுக் கொள்ளும் உள்ள உறுதி இழந்தவள். ஆகவே, என்னை எப்பொழுது வேண்டுமாயினும் தேற்றித் தெளிவிக்கலாம். அதற்காக ஈங்குக் காத்திராது, அவரைத் தேற்ற ஆங்கு விரைந்து செல்க!” எனக் கூறி, வாயில் அடைத்து வழி மறித்தாள். <poem> “அகன்துறை அணிபெறப் புதலொடு தாழ்ந்த பகன்றைப்பூ உறநீண்ட பாசடைத் தாமரை, கண்பொர ஒளிவிட்ட வெள்ளிய வள்ளத்தால் தண்கமழ் நறும்தேறல் உண்பவள் முகம்போல வண்பிணி தளைவிடுஉம் வயல்அணி நல்ஊர! 5

நோதக்காய் எனநின்னை நொந்தீவார் இல்வழித், தீதிலேன் யான் எனத் தேற்றிய வருதிமன்; ஞெகிழ்தொடி இளையவர் இடைமுலைத் தாதுசோர்ந்து இதழ்வனப்பிழந்த நின்கண்ணி வந்து உரையாக்கால்

கனற்றிநீ செய்வது கடிந்தீவார் இல்வழி; 10 மனத்தில் தீதிலன் என மயக்கிய வருதிமன், அலமரல் உண்கண்ணார் ஆய்கோதை குழைத்தநின் மலர்மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து உரையாக்கால், என்னைநீ செய்யினும் உரைத்திவார் இல்வழி முன்அடிப் பணிந்து எம்மை உணர்த்திய வருதிமன்; 15 நிரைதொடி நல்லவர் துணங்கையுள் தலைக்கொள்ளக் கரையிடைக் கிழிந்தநின் காழகம் வந்துரையாக்கால்

என வாங்கு, மண்டுநீர் ஆரா மலிகடல் போலும்நின்

தண்டாப் பரத்தை தலைக்கொள்ள நாளும் 20 புலத்தகைப் பெண்டிரைத் தேற்றி, மற்றுயாம் எனின், தோலாமோ நின்பொய் மருண்டு?” </poem> பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுக்கு வாயில் மறுக்கும் தலைவி கூறியது இது.

1. பாசடை–பசிய இலையோடு கூடிய; 3. கண்பொர–கண் கூசுமாறு; 5. நொந்தீவார்–வெறுப்பவர்; 8. ஞெகிழ்தொடி–கழலும் தொடி; 10. கனற்றி–உள்ளத்தை வருத்தி; கடிந்தீவார்–கடிவார் 14. என்னை–எத்தகைய பெரிய கொடுமையை; 17. காழகம்–ஆடை, 19. மண்டுநீர்–பெருவெள்ளம்; ஆரா–நிறையாத, 20. தண்டா–ஆசை அடங்காத; 21. புலத்தகை–புலக்கும் இயல்புடைய; தேற்றி–தெளிவிப்பாயாக.