மருதநில மங்கை/நெஞ்சமும் ஏமுற்றாய்
9
கணவன் பரத்தையர் தொடர்பு கொண்டு வாழ்ந்தான். மனைவியை மறந்து பரத்தையர் சேரி சென்று வாழும் அவன், அங்கும் தன் உள்ளம் விரும்பும் ஒருத்தியைத் தேர்ந்து, அவள் ஒருத்தியோடு மட்டும் உறவு கொண்டு வாழ்ந்தானல்லன். காலையில் ஒருத்தி, நண்பகலில் வேறு ஒருத்தி, மாலையில் மற்றொருத்தி என வேளைக்கு ஒருத்தியாக உறவு கொண்டு வாழ்ந்தான். இன்று தன்பால் உறவு கொண்டு, தன் மனையில் வாழும் அவன், நாளை தன்னைக் கைவிடுவன், தன் மனையையும் மறந்து விடுவன், அவன் அன்பு நிலையற்றது, உண்மையற்றது என்பதை உணர்ந்தும், அப் பரத்தையர் அவன் உறவை விரும்பினர். அவன் விரும்பும் பரத்தையரை அவன் வேண்டும் காலத்தில், அவன் விரும்பும் இடத்திற்கு ஏற்றிக் கொணரும் அவன் தேரைக் காணும் அவ்வூரார், “பரத்தையரை அகப்படுத்தும் பெரிய வலை அவன் தேர்!’ எனக் கூறிப் பழிப்பதை அறிந்தும், அதற்கு நாணாது, பரத்தையரைக் கொணரும் அப் பணியை விடாது மேற்கொண்டான் அவன் தேர்ப்பாகன். தன்பால் உண்மை அன்பு காட்டும் மகளிர்பால் அன்பு காட்டான். மணந்த மனைவியையும் மறக்கும் அன்பிலி, அது மட்டுமன்று. தன் சொல்லை நம்பித், தன்னோடு உறவு கொள்ளும் மகளிரை மறந்து கைவிடும் கொடியோன், அஃது அறநெறியாகாது என எண்ணும் அறிவும் அவன்பால் இல்லை. இவ்வாறு அன்பை மறந்த, அறத்தைக் கைவிட்ட கொடியோன் அவன் என்பதை அறிந்தும், அவன்பால் பொருள் பெற்றுப் பிழைக்கும் பாணன் அவனைப் பாராட்டினான். பாணன் பாராட்ட, அவன் பரத்தையர் சேரியில் வாழ்ந்திருந்தான்.
கணவன்பால் தான் பெற வேண்டிய நலத்தைப் பரத்தையர் பெறுவது கண்டு கலங்கினாள் அவன் மனைவி. அவன்பால் பெறலாம் இன்பத்தை இழந்ததால் உண்டாம் வருத்தத்தினும், அவன் ஒழுக்கக் கேடு உணர்ந்து, ஊரார் உரைக்கும் பழியுரை கேட்டு அவள் உள்ளம் உற்ற துயர் பெரிதாம். அது பொறாது பெரிதும் வருந்தி வாழ்ந்திருந்தாள். வருந்தியிருப்பாள் முன் வந்து நின்றான் அவள் கணவன். அவனைக் கண்டவுடனே, அவள் கலக்கம் கொடிய கோபமாய் மாறிற்று.
“ஐய! நீ மிகவும் கொடியை, உன் தேர்ப்பாகன் தேர் ஏற்றிக் கொணரும் புதிய பரத்தையை நாட்காலையில் கூடிப், பகற்காலத்தே பரத்தையர் சேரி சென்று, அங்குப் பல பரத்தையரைக் கூடி, மாலைக் காலத்தில் உன் காதற் பரத்தையின் மனை சென்று வாழும் மாண்பிலான் நீ!” எனப் பழிக்கத் துணிந்தது அவள் உள்ளம். ஆனால் அவ்வாறு பழித்தல், பண்புடையார்க்குப் பெருமை தராது என உணர்த்திற்று அவள் அறிவு. அதனால், “அன்ப காலையில் எழுந்த வண்டு, முதற்கண் பொய்கையுள் புகுந்து, ஆங்குப் புதிதாக மலர்ந்திருக்கும் மலர்களில் உள்ள தேனைக் குடித்து, நண்பகற் காலம் வந்ததும், அதை மறந்து கழியை யடைந்து ஆங்கு மலர்ந்து, மணக்கும் நெய்தலிற் படிந்து, அவற்றின் தேனை உண்டு, இரவு வந்துற்றதும், தாமரை மலரைத் தேடி அடைந்து, அதன் பொகுட்டினுள் அடங்கும் வளம் மிகுந்தது உன் நாடு!” என அவன் நாட்டையும் அவன் நாட்டு வண்டையும் வாயாரப் புகழ்வாள் போல், அவன் ஒழுக்கக் கேட்டை, அவ்வண்டின் மீது ஏற்றிப் பழித்தாள்.
மனைவி, தன் நாட்டு வளத்தைப் பாராட்டியது, தன்னைப் பழிப்பதற்கே என்பதை அவன் உணர்ந்து கொண்டனாயினும், அதை உணராதான்போல், அவளை நோக்கிப், “பெண்ணே! நான் வந்து உன் வாயிற்கண் நிற்கின்றேன். என்னை வரவேற்பதை விடுத்து, இக்காலத்திற்கும், இவ்விடத்திற்கும் பொருந்தாத எதை எதையோ கூறகின்றனையே, நீ என்ன பித்தேறினையோ!” என்று வினவினான்.
பிழை புரிந்தவன் அவனாகவும், அதை மறைத்து விட்டு, அவள் பிழையை நாகரிகமாக எடுத்துக் காட்டும் நம்மைப் பழிக்கின்றனனே என எண்ணிச் சினந்தாள் அவன் மனைவி. சினம் மிகவே, அவன் பிழைகளை, இனி நாகரிகமாக எடுத்துக் கூறிப் பயன் இல்லை என உணர்ந்தாள். அதனால், “ஐய! பித்தேறினவள் நான் மிட்டும் அல்லேன். அன்பு நெறியையும், அறநெறியையும் மறந்து, மாண் பிலனான உன்னையும் பாராட்டிப் புகழ்கின்றனனே’ உன் பாணன்! அவனும் பித்தேறியவன். நஞ்சு, உண்டார் உயிரை அழிக்கும் என்பதை அறிந்தும், அதை உண்ணும் அறிவிலி போல், உன்பால் உண்மை அன்பு இல்லை, உன் சொல்லில் உறுதி இல்லை என்பதை உணர்ந்தும், உன்னை அடையத் துடித்து நிற்கின்றார்களே, பரத்தையர் ! அவர்களும் பித்தேறியவர். ஒருவன் ஒருத்தியோடு வாழ்வதே ஒழுக்க நெறியாகவும், முற்பகல் ஒருத்தி, நண்பகல் ஒருத்தி, பிற்பகல் ஒருத்தி எனத் திரிகின்ற நீயும் பித்தேறியவன். உன் தேரைக் காணும் ஊரார், ‘அதோ போகிறது பார், பரத்தையரை அகப்படுத்தும் பெரிய வலை!’ எனக் கூறி நகைக்கவும் நானாது, பரத்தையரைத் தேரேற்றிக் கொணரும் தன் தொழிலை விடாது செய்கின்றனனே, உன் தேர்ப்பாகன்! அவனும் பித்தேறியவன்!” எனப் படபடக்கும் சொற்களால் அவன் ஒழுக்கக் கேட்டை எடுத்துக் காட்டி இடித்து உரைத்தாள். <poem> “பொய்கைப்பூப் புதிதுஉண்ட வரிவண்டு, கழிப்பூத்த நெய்தல்தாது அமர்ந்துஆடிப், பாசடைச் சேப்பினுள் செய்துஇயற்றியதுபோல வயல்பூத்த தாமரை மைதபு கிளர் கொட்டை மாண்மதிப் படர்தரூஉம், கொய்குழை அகைகாஞ்சித் துறைஅணி நல்ஊர! 5
அன்பிலன்; அறனிலன் எனப்படான் எனஏத்தி நின்புகழ் பலபாடும் பாணனும் ஏமுற்றான்;
நஞ்சு உயிர்செகுத்தலும் அறிந்து உண்டாங்கு, அளிஇன்மை கண்டும் நின்மொழிதேறும் பெண்டிரும் ஏமுற்றார்; முன்பகல் தலைக்கூடி, நண்பகல் அவள்நீத்துப், 10 பின்பகல் பிறர்த்தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய்;
என வாங்கு, கிண்கிணி மணித்தாரோடு ஒலித்துஆர்ப்ப, ஒண்தொடிப், பேரமர்க் கண்ணார்க்கும் படுவலை.இது, என ஊரவர் உடன்நகத் திரிதரும் 15 தேர் ஏமுற்றன்று நின்னினும் பெரிதே.” </poem> பரத்தையிற் பிரிந்துவந்த தலைவனுக்கு வாயில் மறுக்கும் தலைவி கூறியது இது.
2. தாது–தேன்; அமர்ந்து–விரும்பி; ஆடி–உண்டு; பாசடைச் சேப்பு–பசிய இலைகளைக் கொண்ட தான்தோன்றி எனும் கிழங்குவகை; 4 மைதபு–குற்றம் அற்ற; கிளர்–விளங்கும்; கொட்டை–தாமரைப் பொகுட்டு; 5. கொய்குழை–கொய்த தளிர்கள்; அகை–துளிர்க்கும்; 7. ஏமுற்றான்–பித்தேறினான்; 8. செகுத்தல்–அழித்தல்; உண்டாங்கு–உண்டது போல்; 11. நெஞ்சமும்–நெஞ்சை உடைய நீயும்; 15. தேர்–ஈண்டுத் தேர்ப்பாகன்.