மருதநில மங்கை/நீர்இதழ் புலராக்கண்
5
நவமணிகள் நாற்புறமும் சிதறிக் கிடப்பது போல், நிறங்களால் வேறுபட்ட மலர் வகைகள் நிறைந்த ஒரு பொய்கையில், சேவலும் பெடையுமாய் இரு அன்னங்கள் இணை பிரியாது வாழ்ந்திருந்தன. ஒரு நாள் அன்னங்கள் இரண்டும் அப்பொய்கை நீரில் உலாவந்தன. அப்பொழுது நீரளவிற்கு மேலும் நீண்டு வளர்ந்து நின்ற ஓர் இலை சேவலை மறைத்துக் கொண்டது. உடன் வந்த சேவல், திடுமென மறைந்து போகவே, கலங்கிற்றுப் பெடையன்னம். பொய்கை முற்றும் ஓடி அலைந்து தேடிப் பார்த்தது. எங்கும் அதைக் கண்டிலது. அதனால், உள்ளம் சோர்ந்து, உடல் தளர்ந்து ஒருபால் ஓய்ந்து நின்றது. அந்நிலையில், வானத்தே எழுந்த வெண்மதியின் நிழல், அப் பொய்கை நீரில் எதிரொளித்தது. அந் நிழலைத் திடுமெனக் கண்ட பெடையன்னம், அதைத் தன் காதற் சேவலாகவே கருதி விட்டது. அதனால், அந் நிழலை நோக்கி விரைந்தது. அந்நிலையில், இலைமறைவினின்றும் வெளிப்பட்ட சேவல், அதன் எதிரே வந்தது. தன் காதற் சேவல் தன்னை மறந்து விடாது, தன்னைத் தேடிவரக் காணவே, அதன் அறியாமை அதற்குப் பெருநாணைத் தந்தது. நாணிய அப்பேடு, நெருங்க மலர்ந்து நிற்கும் தாமரை மலர்களின் இடையே புகுந்து தன்னை மறைத்துக் கொண்டது. இத்தகைய அழகிய காட்சிகளுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் நிலைக்களமாய் வளம் மிக்க நாட்டில் காதலர் இருவர் கருத்தொருமித்து வாழ்ந்து வந்தனர்.
காதல் எனும் காற்று உந்த, இன்பத்திற்கு இருப்பிடமாய், அமைதியாகச் சென்று கொண்டிருந்த அவர் வாழ்க்கைப் படகு, பரத்தையர் ஒழுக்கம் எனும் புயலால் தாக்குண்டு தன்நெறி பிறழ்ந்தது. இளைஞன், பரத்தையர் ஒழுக்கம் மேற்கொண்டு, அப் பரத்தையர் சேரி புகுந்து, வாழத் தொடங்கினான்.
கணவன்மார் பிரிவு, பொதுவாக, மகளிர் அனைவர்க்கும் பெருந்துயர் தரும். அதிலும், கணவன் பொருள் கருதியோ, போர் குறித்தோ பிரிந்திலன். பரத்தையர் உறவு நாடிப் பிரிந்தான்் என அறிந்தால், அப் பிரிவை அவர் தாங்கிக் கொள்ளார். அப் பிரிவுத் துயரைத் தாங்கிக் கொண்டு வாழ்தல், அம் மகளிரால் இயலாது. அதனால், கணவன் பரத்தையர் மனை புகுந்து வாழ்கிறான் என்ற செய்தி கேட்டு அவன் மனைவி கலங்கினாள். கலக்க மிகுதியால், அவள் நலன் அவளை விட்டு மறைந்தது. அவள் கண்கள் உறக்கம் கொள்ள மறுத்தன. உறக்கம் இழந்து, உள்ளத் துயர் மிகுந்து வருந்திய நாட்கள் எண்ணற்றன கழிந்தன. சோர்வு மிகுதியால், உடல் ஒரோவழி படுக்கையிற் சாய, அதனால் அவள் கண்கள் அணையிற் படிந்து சிறிதே உறக்கம் கொள்ளும். ஆனால், அந் நிலையில், கணவன், புதியாளொரு பரத்தையை, அவளுக்கு உறவாய பரத்தையர் சூழ்ந்து நின்று பாராட்ட மனங்கொள்ள, அம்மண விழாக்குறித்து எழும் முரசொலி, அவள் காதுகளுள் வந்து பாய்ந்து, அவ்வுறக்கத்தைப் போக்கி விடும். கணவனை நினைந்து நினைந்து, ஓயாது அழுது, உறக்கம் மறந்த அவள் கண்கள், ஒரோவொருகால், அவள் மகன், அழுதுகொண்டிருப்பாள் முன்வந்து அணைத்துக் கொள்ள, அம் மகனைப் பற்றிய நினைவு மகிழ்ச்சி, கணவன் ஒழுக்கக் கேட்டினை ஒருவாறு மறக்கச் செய்ய, சிறிதே இமை மூடி உறக்கம் கொள்ளும். ஆனால், அந்நிலையில், அவள் கணவன், தாம் விரும்பும் பரத்தையர் பலரையும் ஒன்றுகூட்டி அழைத்துச் சென்று, ஊர் மன்றத்தே கூடியிருந்து, அவரோடு துணங்கைக் கூத்தாட, அவ் ஆட்டத்தின் இடையிடையே அவர் எழுப்பும் ஆரவாரப் பேரொலி, அவ்வுறக்கத்தைக் கலைத்துவிடும். இரவும், பகலும் கணவன் கொடுமையே கருத்தில் நிற்பதால், கண்கள் எக் காலமும் நீர் நிறைந்து வழியும். நீர் நிறைந்த கண்ணின் இமைகள், எக்காலமும் திறந்தே கிடத்தல் இயலாது. அதனால், அவள் இமைகள் சிறிதே மூடி உறக்கம் கொள்ளுமாயினும், அக்காலை, அவள் கணவன் அவன் விரும்பும் பரத்தையரை, அப் பரத்தையர் சேரியினின்றும் ஏற்றிக் கொணரும் தேர்க் குதிரைகளின் கழுத்து மணியினின்றும் எழும் ஒலி, தெளிவாக ஒலித்து, அவ்வுறக்கத்தை ஒழித்துவிடும்.
இந் நிகழ்ச்சிகளால், அவள் பெரிதும் கலங்கினாள். அவள் நிலை பெரிதும் கவலைக்கிடமாயிற்று. ஆற்றல் மிக்க பேரரசன் ஒருவன், தன் நாற்படையும் புடைசூழ வந்து, மதிலை வளைத்துக் கொள்ள, உள்ளே ஆற்றல் இழந்து அடைபட்டுக் கிடக்கும் அரசன், இரவெல்லாம் உறக்க மற்றுக் கிடந்து, விடியற்காலையில் சிறிதே உறக்கம் கொள் பொழுதில், மதிற்புறத்தே உள்ள பகையரசன் பாசறையில், பள்ளி எழுச்சி குறித்து எழுப்பும் முரசொலி கேட்டுக், கண்ணிமை விழித்துக் கலங்குவான் போல் கலங்கி வாழ்ந்தாள் அப் பெண்.
அத்தகைய நாட்கள் பல கழிந்தன. ஒரு நாள், இளைஞன் தன் வீட்டிற்கு வந்தான். மனைவியின் தோழியைக் கண்டு, “என் மனைவி என்மீது கொண்டிருக்கும் கோபத்தைப் போக்கி, என்னை அவள் ஏற்றுக் கொள்ளத் துணை புரிவாயாக!” என வேண்டிக் கொண்டான். அவனால், அவன் மனைவி படும் பெருந்துயரைப் பார்த்திருப்பவளாதலின், அத் தோழி அவன்பால் கடுஞ்சினம் கொண்டிருந்தாள். அவன் பிழைகளைப் பொறுத்து அவனை ஏற்றுக் கொள்ள அவன் மனைவி இசையினும், அவள் இசையாள். அவன்பால், அவளுக்கு அத்துணைக் கடுங்கோபம். அதனால், அவனை, ‘ஈங்கு வாரற்க!’ எனக் கூறி வழிமறிக்க விரும்பினாள். ஆனால், அது முறையாகாது என்றது, அவள் பண்பறியுள்ளம். மேலும், அவன் பரத்தையர் ஒழுக்கத்திற்குக் காரணமாயிருந்தவன், பண்டெல்லாம் தம் மனைக்கு வந்து பாடிப் பரிசில் பெற்றுப் பிழைத்த பாணனே யாதலின், அவன் மீதும், அவள் கடுங்கோபம் சென்றது. அதனால், முதற்கண், அவன் ஒழுக்கக் கேட்டினையும், அதனால் உறக்கமும் இல்லாமல், அவன் மனைவி வருந்திய வருத்த மிகுதியினையும் விளங்கக் கூறிய பின்னர், “அன்ப! உன் ஒழுக்கக் கேட்டால், நாங்கள் உறக்கம் ஒழிந்து அழியினும் அழிக. அது குறித்து இனி யாம் வருந்தேம். ஆனால், உனக்கு உற்ற துணைவனாய், நீ விரும்பும் பரத்தையர் மனைக்கண் இருந்து, யாழிசைத்துப் பிழைக்கும் அப் பாணன், இனி, ஈங்கு வாரானாகுக. அவனைக் காணப் பொறா எம் கண்கள். அவன் காட்சியே எம்மைக் கடுந்துயர்க்கு உள்ளாக்குகிறது!” எனக் கூறி அவனுக்குக் கதவடைத்தாள். <poem> “மணிநிற மலர்ப்பொய்கை மகிழ்ந்தாடும் அன்னம், தன் அணிமிகுசேவலை அகல்அடை மறைத்தெனக், கதுமெனக் காணாது கலங்கி, அம்மடப்பெடை மதிநீழல் நீருள்கண்டு, அதுஎன உவந்துஓடித், துன்னத் தன்எதிர்வரூஉம் துணைகண்டு, மிகநாணிப் 5 பன்மலர் இடைப்புகூஉம் பழனம்சேர் ஊரகேள்;
நலம்நீப்பத் துறந்து, எம்மைநல்காய் நீ விடுதலின், பலநாளும் படாதகண் பாயல்கொண்டு இயைபவால்; துணைமலர்க் கோதையார் வைகலும் பாராட்ட மணமனைத் ததும்பும் நின்மணமுழவந்து எடுப்புமே; 10
அகலநீதுறத்தலின், அழுதுஒவா. உண்கண் எம் புதல்வனை மெய்தீண்டப் பொருந்துதல் இயைபவால்; நினக்குஒத்த நல்லாரை நெடுநகர்த் தந்து,நின் தமர்பாடும் துங்கையுள் அரவம்வந்து எடுப்புமே;
வாராய்நீ துறத்தலின், வருந்திய எமக்கு ஆங்கே 15
நீர்இதழ் புலராக்கண் இமைகூம்ப இயைபவால்;நேரிழை நல்லாரை நெடுநகர்த் தந்துநின்,
தேர்பூண்ட நெடுநன்மான் தெண்மணி வந்து எடுப்புமே,
எனவாங்கு,
மெல்லியான் செவிமுதல், மேல்வந்தான் காலைபோல் 20
எல்லாம் துயிலோ எடுப்புக; நின்பெண்டிர்
இல்லின் எழீஇய யாழ் தழீஇக், கல்லாவாய்ப்
பாணன் புகுதராக் கால்.”
பரத்தையிற் பிரிந்துவந்த தலைவனுக்கு வாயில் மறுக்கும் தோழி கூறியது இது.
1. மணி–நவமணிகள்; 2. அடை–இலை; மறைத்தென–மறைத்துக் கொண்டதாக; 3. கதுமென–விரைவுப் பொருள் குறிக்கும் ஒரு குறிப்புச் சொல்; 4. மதி நீழல்–திங்களின் நிழலை; அதுவென்–சேவல் அன்னமாகக் கருதி; 5. துன்ன–நெருங்கிவர; 6. பழனம்–வயல்கள்; 8. படாத–உறங்காத; இயைய ஆல்–இமை பொருந்து தலும் கூடும்; 9. கோதையார்–பரதையர்; வைகலும்–நாள் தோறும்; 10. ததும்பும்–ஒலிக்கும்; எடுக்கும்–கலைக்கும்; 11. ஓவா–ஓயாத; 12. பொருந்துதல்–உறக்கம் கொள்ளுதல்; 14. தமர்–உறவினராய பரத்தையர்; துணங்கை –ஒருவகைக் கூத்து; அரவம்–ஒலி; 16. நீரிதழ்–நீர் நிறைந்த மலர்போலும்; புலராக்கண்–நீர் அறாத கண்கள்; கூம்பு–குவிய; 19. மான்–குதிரை; தெண்மணி–தெளிந்த மணி ஓசை; 20. மெல்லியான்–படையின்றி மெலிந்து அரணுள் அடங்கி இருப்பவன்; மேல்வந்தான்–படையொடு முற்றியிருப்பவன்; காலைபோல்–காலை முரசொலி போல்; 21. எல்லாம்–நின் திருவிளையாடல்களெல்லாம்; 22. கல்லா–யாழிசைத்தல் தவிர வேறு எதையும் அறியாத.