மருதநில மங்கை/எம்மையும் உள்ளுவாய்!



4


எம்மையும் உள்ளுவாய்!


நீர் வளம் நிறைந்தது அந்நாடு. நகர்ப்புறங்களின் இயற்கைத் தோற்றம், அந்நகர் மக்களின் பண்பட்ட வாழ்க்கையின் வனப்பினை விளக்கிக் காட்டும் வளம் நிறைந்தது. புறநகரில் இருக்கும் பொய்கையில், அல்லியும், தாமரையும் மலர்ந்து மணம் வீசும், கரையில் நிழல்தரு மரங்கள் வளர்ந்துள்ளமையால், பொய்கை நீர் தண்ணெனக் குளிர்ந்திருக்கும். அழகிய மெல்லிய வெண்ணிற இறகுகள் வாய்ந்த அன்னங்கள் வாழும் வனப்புடையது அப் பொய்கை அன்னங்கள் ஆணும் பெண்ணுமாய் இணைந்து இணைந்து, ஆங்கு மலர்ந்து கிடக்கும் தாமரை மலர்களைச் சுற்றிச் சுற்றித் திரியும் காட்சி, காண்பார் கண்ணிற்குப் பெருவிருந்தாம். அக் காட்சி மனம்நிறை மகிழ்ச்சி தரும் மணநாளன்று, நாண் மிகுதியால், தாம் அணிந்துள்ள புதுமண ஆடையால் தம் முகத்தை மறைத்துக் கொண்டு நோக்கும், அழகிய மான்விழி போலும் மருண்ட நோக்கினை உடைய உயர்குல மகளிரைத் தம் வாழ்க்கைத் துணையாக வரைந்து கொள்ளும் அக்குல ஆடவர், அம்மகளிர் கையைப் பற்றிக்கொண்டு, அந்தணர் ஓம்பும் செந்தழலை வலம் வந்து, மணங் கொண்டு வாழும் மண வாழ்க்கையினை-மாண்புமிக்க அந்நகரின் நல்வாழ்வை நன்கெடுத்துக் காட்டும்.

அவ்வளமார் நகரில், இளங்காதலர் இருவர் வாழ்ந்திருந்தனர். அவர்கள் இல்லற வாழ்க்கை இனிதே நடைபெற்று வந்தது. அந்நிலையில் ஒருநாள், தெருவழியே தேர் ஏறிச் சென்ற அவன் எதிரில், எழில்மிக்க ஓர் இளம் பரத்தை, காலில் சிலம்பொலிக்கச் செம்மாந்து வரக்கண்டான். அவள் அழகு அவன் உள்ளத்தை அலைக்கழித்து விட்டது. அவன் அறிவு திரிந்தது. அவள் அவன் உள்ளத்தைக் கவர்ந்து கொண்டாள். அவளை எப்படியாவது அடைதல் வேண்டும்; எதைக் கூறியாவது அவள் அன்பைப் பெறுதல் வேண்டும் எனத் துடிதுடித்தது அவன் உள்ளம். ஆனால், அவள் இன்னள், இன்ன இடத்தள் என்பதை அறியாது கலங்கினான். அவளைத் தேடிக் கொணருமாறு தேர்ப்பாகனை விடுத்து, அவள் வரவிற்காக ஒரு மலர்ச்சோலையில் காத்துக் கிடந்தான். சென்ற தேர்ப்பாகன் அவளைத் தேடிப்பிடித்து, இளைஞன் இயல்பும் தகுதியும் எடுத்துக்கூறி, அழைத்துச் சென்று, பூஞ்சோலையில் அவள் வருகையை எதிர்நோக்கியிருந்த இளைஞன்பால் கொண்டுபோய் விடுத்தான். இளைஞனை அடைந்த அவள், ஆடியும் பாடியும் அவனை மகிழ்வித்தாள். இளைஞன் அவளோடு கூடிப் பூக்கொய்தும், புதுப்புனல் ஆடியும் இன்புற்றுக் கிடந்தான்.

காலையில் தேர் ஏறிச் சென்ற கணவன், நெடிது கழியவும் வாராமை கண்டு வருந்தினாள் அவன் மனைவி, அவள் கலங்கிய நிலை கண்டு தோழியரும் வருந்தினர். அவருட் சிலர் இளைஞனைத் தேடிச் சென்றனர். மலர்ச் சோலையில் மகிழ்ந்திருக்கும் அவன் நிலையறிந்து வந்து அவளுக்கு அறிவித்தனர். கணவனைக் காணாது கலங்கியிருப்பாளைக் கணவன் பரத்தையர் தொடர்பு கொண்ட பழியுடையனாயினன் என்ற செய்தி பெரிதும் வருத்திற்று. அப்பரத்தை உறவால் தன் இன்ப வாழ்க்கைக்கு இடுக்கண் நேர்ந்து விட்டதே என எண்ணிக் கலங்கினாள். அவ்வாறு கலங்கியிருப்பாள் முன்வந்து நின்றான் இளைஞன்.

ஒழுக்கம் கெட்டு ஊர் திரிந்து வரும் கணவனைக் காணவும் நாணின அவள் கண்கள். அதனால், வந்தவனை ‘வருக’ என வரவேற்காது, வாயடைத்து வருந்திக் கிடந்தாள். மனைவி நம் ஒழுக்கக் கேட்டினை உணர்ந்து கொண்டாள், நம்பால் அவ்வொழுக்கக் கேடு இல்லை என உணர்ந்தாலன்றி, நம்மை ஏற்றுக் கொள்ளாள் என உணர்ந்தான் இளைஞன். அதனால், மனைவியின் அருகில் சென்று, பணிந்து நின்று, “மாண்புடையாய்! இன்று நான் ஒரு பரத்தையைக் கண்டது உண்மை. ஆனால், என் உள்ளத்தை அவள்பால் பறிகொடுப்பதன் முன்னர் அவள் இயல்பினை அறிந்து கொண்டேனாதலின், அப்பழி பெறாது மீண்டேன். இது உண்மை. அவள் ஒரு பெண்ணேயாயினும், அவள்பால் அப் பெண்மைக்குரிய இயல்பு சிறிதும் காணப்படவில்லை. ஒருத்தி ஒருவனோடே வாழ வேண்டும் எனும் வரையறையுள்ளம் அவள்பால் இல்லை. பெண்களுக்குப் பேரணிகலனாய்ப் பெருமை தரும் நிறை எனும் குணம், அவள்பால் நில்லாது நீங்கி விட்டது. மேலும், அவள் தனக்கென ஓர் உள்ளம் பெற்று, அது உணர்த்தும் வழியில் வாழக் கருதாது, தன்னை விரும்புவார் உள்ளங்கள் உணர்த்தும் வழிகளிலெல்லாம் சென்று திரியும் செந்நெறி இழந்தவள். அவள்பால் இக் குறைபாடுகள் இருக்கக் கண்டேனாதலின், அவளை அப்பொழுதே மறந்து விட்டேன். ஆகவே, பழியுடையன் என என்னை வெறுத்துத் தள்ளாது, ஏற்றுக் கொள்வாயாக!” எனக் கூறி இரந்து வேண்டினான்.

கணவன் வாய் அவ்வாறு கூறினும், அவன் உள்ளம், தன் உள்ளத்தைக் கவர்ந்து கொண்டோடி மறைந்துவிட்ட அப் பரத்தையை அடைதல் வேண்டும் என்ற ஆசையால் நிறைந்து அழிகிறது என்பதை அவன் முகக் குறிப்பால் அறிந்து கொண்டாள் அவன் மனைவி. அதனால், அவன் ஒழுக்கக் கேட்டினை எடுத்துக் காட்டி இடித்துரைக்கத் துணிந்தாள். “இளைஞ! நீ என்னை அந்தணர் ஓம்பிய செந்தழல் முன் கைப்பிடித்து மணங் கொண்டாய் எனினும், உன் மணவினைக்கு அவ்வழலைச் சான்றாகக் கொண்டிலை போலும். அதனால் மணந்து கொண்ட மனைவியாம் என்னை மறக்காது காக்கும் கடமையை நீ கருதுகின்றிலை!” என எடுத்துரைக்க விரும்பினாள். விரும்பிய கருத்தை விளங்க உரைக்காது, ‘ஐய! உன் புறநகர்ப் பொய்கைவாழ் அன்னச் சேவலுக்குத் தாமரை மலரைத் தன் காதல் சான்றாகக் கொள்ளும் கருத்தில்லையாகவும், அது மணமகன் மணமகளைக் கைப்பிடித்து, மணச் சான்றாகத் தன்முன் கிடக்கும் செந்தழலை வலம் வருதல் போல், தன் பேட்டினைக் கூட்டிக் கொண்டு, தாமரை மலரைச் சுற்றித் திரிகிறது. அவ்வழகிய வளம்மிக்க ஊரின் தலைவன் நீ!” என அவன் ஊர் வளத்தில், அவன் ஒழுக்கக் கேட்டினை உட்புகுத்தி உரைத்தாள்.

இவ்வாறு மறைத்து மொழி கிளவியால் அவனைப் பழித்தவள், அவனை நோக்கி, “ஐய! உன் உள்ளம் பரத்தை பின் ஓடுகிறது. அவளைக் காணாது கலங்குகிறது. அவளோடு ஆடிப்பாடி மகிழ விரைகிறது. உண்மை இதுவாகவும், 'பண்பற்றவள் அப் பரத்தை. ஆகவே, அவள்பால் பற்றுக் கொண்டிலேன்!’ எனக் கூறிப் பொய்யுரைத்தல் ஏனோ உன் செல்வச் செருக்கால், உன் ஆட்சி ஆணவத்தால் இவ்வாறு பயனற்ற சொற்களைச் சொல்லிப் பிழை மறைக்கப் பார்த்தல் பண்பாமோ? என் அன்பிற்குப் பணிந்தாய் போல் பொய் நடிப்புக் கொள்ளுதல் பொருந்துமோ? அன்ப! நீ காட்டும் இவ் அன்பு, பொய்யானது என்பதை அறிவேன். ஆதலின், அதுகண்டு என் மனம் மகிழாது. இவ்வாறு என்பால் அன்பு கொண்டாய் போல் வந்து, பணிந்து நின்று, நின் தகுதிக்கு மாறாகப் பொய்யுரைத்து வாழ்தலைக் கைவிடுக. நான் நின்பால் வேண்டுவது ஒன்றே. அதை மட்டும் மறவாது செய்க. உன் மனம் விரும்பும் மகளிரைப் பெற்று மகிழ்ந்து வாழ்க. அவ்வாறு வாழ்ந்து அவர்பால் கொண்ட பற்று அற்றவிடத்து, மனங்கொண்ட மனைவியொருத்தி உளள் என என்னை மறவாது நினைத்துக் கொள்வாயாக அஃது ஒன்றே எனக்கு ஆறுதலாம்!” எனக் கூறி வருந்தினாள்.

“போதுஅவிழ் பனிப்பொய்கைப் புதுவது தளைவிட்ட
தாதுசூழ் தாமரைத் தனிமலர்ப் புறம்சேர்பு,
காதல்கொள் வதுவைநாள் கலிங்கத்துள் ஒடுங்கிய
மாதர்கொள் மான்நோக்கின் மடந்தை தன்துணையாக

ஓதுடை அந்தணன் எரிவலம் செய்வான்போல் 5
ஆய்துவி அன்னம், தன் அணிநடைப் பெடையொடு,
மேதகத் திரிதரூஉம் மிகுபுனல் நல்ஊர!

தெள்அரிச் சிலம்புஆர்ப்பத் தெருவின்கண் தாக்கி, நின்
உள்ளம்கொண்டு ஒழித்தாளைக் குறைகூறிக் கொளநின்றாய்,
துணிந்தது பிறிதாகத், துணிவிலள் இவள் எனப் 10
பணிந்தாய் போல்வந்து, ஈண்டுப், பயனில மொழிவாயோ?

பட்டுழி அறியாது பாகனைத் தேரொடும்
விட்டு, அவள் வரல்நோக்கி, விருந்தேற்றுக்கொள நின்றாய்.
நெஞ்சத்த பிறவாக, நியிைலள் இவள் என
வஞ்சத்தான்்வந்து, ஈங்கு வலியலைத்து ஈவாயோ? 15

இணர்தகை தண்காவின் இயன்ற நின்குறிவந்தாள்
புணர்வினில் புகன்று, ஆங்கே புனல்ஆடப் பண்ணினாய்;
தருக்கிய பிறவாகத் தன்னிலள்இவள், எனச்
செருக்கினால் வந்து, ஈங்குச்சொல் உகுத்துஈவாயோ?

என வாங்கு, 20
தருக்கேம் பெரும! நின் அல்கல் விருப்புற்றுத்
தாழ்ந்தாய் போல்வந்து தகவில செய்யாது,
சூழ்ந்தவைசெய்து, மற்று எமையும் உள்ளுவாய்,
வீழ்ந்தார் விருப்பு அற்றக்கால்.”

பரத்தையர் சேரியினின்றும் வந்த தலைவனொடு ஊடித் தலைவி கூறியது.

1. போது–அரும்புகள்; அவிழ்–மலர்கின்ற; புதுவது– புதிதாக; தளைவிட்ட–மலர்ந்த; 3. வதுவை–திருமணம், கலிங்கம்– ஆடை; 5. ஒது–வேதம்; 6.ஆய்–அழகிய; தூவி– இறகு; 7. மேதக–பெருமையாக; 8. தெள்–தெளிந்த; அரி– உள்ளிடுபரல்கள்; தாக்கி–எதிர்ப்பட்டு; 9. குறைகூறி– உன்குறையைக் கூறி; 10. துணிந்தது– கருதியது, துணிவு– தனக்கே உரித்தாக வரைந்து கொண்ட ஒழுக்கம்; 12. பட்டுழி– சென்றவிடம்; 13. விருந்து–விருந்தாக; 15. வலி – ஆட்சி ஆணவத்தால்; அலைத்தீவாயோ–வருத்துவாயோ; 16. இணர்–மலர்க்கொத்து; தகை–மிக்க; கா–சோலை, இயன்ற–குறித்த; 17. புகன்று–பாராட்டி; 18. தருக்கிய– நெஞ்சுமகிழ்ந்து கருதியது; தன்னிலள் – தனக்கென ஓர் இயல்புடையளல்லள்; 19. உகுத்து–வீணேகொட்டி: 23. சூழ்ந்தவை–உள்ளம் விரும்பியதை 24. வீழ்ந்தார்– உன்னால் விரும்பப்பட்டவர்.