மருதநில மங்கை/வேட்டது கண்டாய்

27


வேட்டது கண்டாய்

நான்மாடக் கூடல் எனும் பெயர் வாய்ந்த மதுரை மாநகரில் வாழ்ந்த ஓர் இளைஞன் ஒருநாள், சில பரத்தையரோடு, வையையாற்றைக் கடந்து திருப்பரங்குன்றத்திற்குச் சென்று, ஆங்கு அவரோடு ஆடிப்பாடி அகமகிழ்ந்திருந்தான். சில நாள் கழித்து வீட்டிற்கு வந்தான்். கணவன் செயல் கண்டு சினந்திருந்த மனைவி, வந்தவனை வரவேற்றிலள். அவனோடு வாய் திறந்து பேசவுமில்லை. அதனால், அவன் பெரிதும் வருந்தினான். அவள் ஊடலைப் போக்கிக் கூட்டுவிப்பார் எவரும் இல்லை. யாரேனும் வருவர் எனச் சிறிது நாழிகை காத்திருந்தான். எவரும் வந்திலர். மேலும் காத்திருக்க அவனால் இயலவில்லை. அதனால், அவள் ஊடலைத் தானே தணிக்கத் துணிந்தான். அவள் அண்மையில் சென்றான். “மனத்தில் வளரும் பூங்கொடி போன்றவளே!” என அவளைப் பாராட்டினான். பின்னர்ப், “பெண்ணே! நான் ஒரு கனவு கண்டேன். என்னை மறந்து உறங்கிய அவ்வாழ்ந்த உறக்கத்தினிடையே கண்ட அக்கனவு, மிகவும் அழகுவாய்ந்த ஓரின்பக் கனவாகும். உலகில் காதலனும் காதலியும் ஒருகால் கூடினால், ஒருகால் ஊடுவர். உயர்ந்த பொருளை விரும்புவார் ஓயாது உழைத்தல் வேண்டும். ஆன்றோர் உலக இன்ப வாழ்வை வேண்டுவார். அரிய பல தவம் ஆற்றியே அடைவர். பெண்ணே! இந்தக் கட்டுப்பாடும் தடையும் கனவிற்கு இல்லை. கனவில் காதலனும் காதலியும் பிரிவறியாது பேரின்பம் நுகர்கின்றனர். பொருள் தேடிப் போகாது ஊக்கம் குன்றி இருப்பவரும் பெரும் பொருள் பெற்றுச் சிறந்துவாழ்கின்றனர். ஆன்றோர் உலக வாழ்வு, அரிய முயற்சி இல்லாமல் அனைவர்க்கும் கிடைக்கிறது. உலகியல் நெறிக்கு மாறுபட்ட இந்நிகழ்ச்சிகளோடு, காதலனும் காதலியும் கூடுதலும் ஊடுதலுமாகிய உலகில் நிகழ்ச்சிகளும் அக்கனவில் உள. ஆகவே, பெண்ணே! அக்கனவு நனிமிக இன்பம் உடைத்து!” என்று கூறினான்.

கனவின் இயல்பை இவ்வாறு கூறி அவன் பாராட்ட, அவள் அதை அமைதியாக இருந்து கேட்டாள். அதனால் அவள் சினம் சிறிதே தணிந்திருப்பது கண்ட இளைஞன், நறுமணம் நாறும் அவள் நெற்றியின் அழகைப் பாராட்டிய பின்னர், “பெண்ணே அரசியல் அலுவற் சிறப்பாலும், வாணிப வளத்தாலும் இரவு பகல் எப்பொழுதும் ஒலி அடங்காத நம் நான்மாடக்கூடலின், வரைபோல் உயர்ந்த நீண்ட மதிலைச் சூழ்ந்து ஓடும் வையையாற்றின் கரைக்கண் இருந்த ஒரு பூஞ்சோலைக்கு நண்பகற் காலத்தில் நல்ல நினைவோடு செல்பவன் போல், நேற்று இரவு கண்ட கனவில் சென்றேன்!” எனத் தொடங்கி மேற்கொண்டு தோடர முற்பட்டான்.

கனவு நிகழ்ச்சியைக் கட்டுரைச் சுவைபட அவன் கூறத்தொடங்கவே, அவன் கூறும் அக்கனவைக் கேட்கும் ஆர்வ மிகுதியால், அவள் அவன்மீது கொண்ட சினத்தை மறந்து, சிறிதே அன்பு கொண்டாள். அந்நிலையில் கண்ட அவன் தோற்றம், அவள் கண்களுக்குக் குறையாப் பேரின்பம் தரும் பெருமை வாய்ந்ததாகத் தோன்றவே, அத் தோற்றத்தைக் கண்டு மகிழ்ந்தாள். கண்டு தனக் குள்ளே மகிழ்ந்ததோடு நில்லாது, அதை அவன் கேட்கப் பாராட்டிய பின்னர், “ஏடா! கனவில் புகுந்த அப்பூஞ் சோலையில் நீ என்னென்ன கண்டாய் ஆங்கு என்னென்ன நிகழ்ந்தது? அதைக் கூறுக!” என விரும்பி வேண்டிக் கொண்டாள்.

கனவு நிகழ்ச்சிகளைக் கேட்கும் ஆர்வம் மிகுதியால், மனைவி தன் தவறினை மறந்து விட்டாள் என மனச் செருக்குற்ற இளைஞன், தன் களவு நிகழ்ச்சிகளையே கனவு நிகழ்ச்சியாகக் கூறத்தொடங்கிப், “பெண்ணே! நான் அங்குக் கண்ட காட்சி அழகை என்னென்பேன்! அகன்ற அழகிய ஆகாயத்தில் பறந்து திரிந்த அழகிய அன்னப் பறவைகள், அந்திக்காலம் வந்ததும், தாம் பிரியாது வாழும் இமயமலைச் சாரலின் ஒருபால் கூட்டமாகத் தங்கியிருக்கும் காட்சிபோல், அழகிய மங்கையர் பலர், தம் ஆயத்தாரோடு கூடி, அப்பரங்குன்றிற்குச் சென்று, அம்மலையின் ஒரு பால், ஆற்று நீர் கொண்டு வந்து குவித்த மணல் மேட்டின் மீது அமர்ந்திருப்பதைக் கண்டேன்!” என்று கூறினான்.

கணவன் கனவு நிகழ்ச்சியைக் கூறுகிறான் எனும் நம்பிக்கையால், அதைக் கேட்க விரும்பிய அவள், அவன் ஆங்கு மங்கையர் கூட்டத்தைக் கண்டேன் எனக் கூறியவுடனே, கணவன், கனவைக் கூறவில்லை ; நினைவில் தான் கண்ட காட்சியையே கூறுகிறான் என்பதை உணர்ந்து கொண்டாள். உணர்ந்தாளாயினும், அவன் மேற்கொண்டு கூறுவனவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வ மிகுதியால் அவனோடு ஊடல் கொண்டிலள். ஆயினும், கூறுவது கனவன்றே, நினைவில் நிகழ்ந்த நிகழ்ச்சியே என்பதைத் தான் அறிந்து கொண்டதை அவனுக்கு அறிவிக்க விரும்பினாள். அதனால், “ஏடா! பறை தன்னை அடித்து முழக்குவோன், மனத்தில் என்ன இசையை எழுப்புகின்றானோ அந்த இசையே தானும் ஒலித்து எழுப்பும். அதை போல், உன் உள்ளம் எதை விரும்பிற்றோ, அதையே கனவிலும் கண்டாய் போலும்!” என்று கூறினாள்.

தான் கூறுவது கனவு நிகழ்ச்சியன்று. தன் நினைவில் நிகழ்ந்த நிகழ்ச்சியே என்பதை மனைவி கண்டு கொண்டாள் என்பதை அறிந்து கொண்ட இளைஞன், மேலும் அவளைப் பேசவிடின், அவள் தன் ஒழுக்கக் கேடினை ஒழுங்காகக் கூறி ஒறுத்து விடுவள் என் அஞ்சினான். அதனால் அவளைப் பேசவிடாது வாயடைத்துத் தான் கூறக் கருதியன அனைத்தையும் விரைந்து கூறி, அவளைச் சினம் அடங்கப் பண்ணுதல் வேண்டும் எனத் துணிந்தான். அதனால், “ஏடி! இடையிடையே எதையும் கூறாதே, நான் கூறுவனவற்றை மட்டும் கேள். நான் கூறுவனவற்றை, இடையே புகுந்து நீ விரைவில் முடித்து விடாதே!” என்று கூறி, வெகுள்வான் போல் நடித்தான்.

கணவன் கோபம் கண்ட அவள், “நன்று நன்று! உனக்குக் கோபம் வருகிறது. நான் இடையே எதையும் கூறவில்லை. நீ மேற்கொண்டு சொல்!” எனக்கூறி வாயடைத்து அமைதியாக இருந்து கேட்டாள். அவன் தொடர்ந்தான். “மலர்க்கொடி போன்ற அம் மங்கையர் மணல் மேட்டை விட்டு எழுந்தனர். சோலையுள் புகுந்து ஆங்குள்ளதொரு பூங்கொடியை அனைவரும் ஒருங்கே பற்றி, அக்கொடியில் உள்ள மலர்களைப் பறிக்கத் தொடங்கினர். மகளிர், மலர்களைப் பறிக்கத் தொடங்கினமையால், அம் மலர்களில் அமர்ந்து தேனைக் குடித்து அக மகிழ்ந்திருந்த வண்டுகள், அம்மகளிர்க்கு அஞ்சி, அம்மலர்க்கொடியை விடுத்துப் பறந்து ஓடின. பெண்ணே ! அஞ்சிய வண்டுகள் ஓடிய காட்சி எவ்வாறு இருந்தது தெரியுமா? வேப்பம் பூமாலை அணிந்த நம் வழுதி வரக்கண்ட பகைவர் படை பயந்தோடும் காட்சி போல் இருந்தது அக் காட்சி. நிற்க, மேலே கேள். பெண்ணே! மகளிர் திடுமெனப் புகுந்து பறிக்கவே, அவ்வண்டுகள், அம்மகளிர்க்கு அஞ்சிப் பறந்தோடினவேனும், பின்னர்ப் பறந்தோடிய வண்டுகள் பலவும் ஒன்று கூடிவந்து, அம் மகளிரை மொய்த்துத் துன்புறுத்தத் தொடங்கின.

“வண்டுகள் ஒன்றுகூடி வந்து வருத்தத் தொடங்கவே, அம்மகளிர் அஞ்சினர். அலறிப் புடைத்துக் கொண்டு ஓடி ஒளிந்தனர். அவ்வாறு மூலைக்கு ஒருவராய் ஓடவே, ஒருத்தி அணிந்த மலர் மாலையும் முத்து மாலையும், வேறொருத்தியின் தொடியில் மாட்டிக் கொண்டு, இருவரையும் மடக்கின. ஆராய்ந்த அழகிய முத்துகளை, வைத்துப் பண்ணிய ஒருத்தியின் நெற்றித் திலகத்தில் வேறு ஒருத்தியின் காதிற் கிடந்தசையும் மாண்பு மிக்க மகரக் குழை மாட்டிக் கொண்டது. ஒருத்தியின் ஆடையை வேறொருத்தியின் காற்சிலம்பில் சுறாமீன் வடிவுபோல் பண்ணிய மூட்டு வாய்கள் தொடக்கி ஈர்த்தன. இருவரும் விழ்ந்தனர். கணவனோடு ஊடிக் கூடாதிருந்த ஒருத்தி, வண்டுகளின் வருகை கண்டு வெருவி, விரைந்து ஓடிக், கணவனை அடைந்து அவன் மார்பை இறுக அணைத்துக் கொண்டு, ஊடல் மறந்து கூடினாள்.

“ஒருத்தி, இடையினின்றும் நழுவி அடியிலே தாழ்ந்த ஆடையை ஒரு கையாலும், முடி நெகிழ்ந்து குலைந்து வீழும் கூந்தலை ஒரு கையாலும் பற்றிக் கொண்டே ஓடி அச்சம் மிகுதியால் இடைவழியில் இருக்கும் குளத்தை அறியாது, அதில் வீழ்ந்து வருந்தினாள்.

“ஒருத்தி, வந்து மொய்க்கும் வண்டுகளைக் கைகளால் ஓட்டிப் பார்த்தாள். கைகள் ஓய்ந்தனவே யல்லாது, வண்டுகள் ஓடவில்லை. மார்பில் அணிந்த மாலையைப் பறித்து ஓட்டினாள். அப்போதும் அவை அகலவில்லை. அவற்றை ஓட்டும் வகையறியாது நாற்புறம் நோக்கினாள். அருகே, நீர்நிலையில் ஓடம் ஒன்று மிதந்து கிடப்பதைக் கண்டாள். உடனே அதில் பாய்ந்து, உந்தி ஓட்டினாள்.

“ஒருத்தி அளவிற்கு மீறிக் குடித்திருந்தாள். அதனால் கண் திறந்து நோக்குவதும் அவளால் இயலாது போயிற்று. ஆயினும் வண்டுகள் மொய்த்து வருத்துவதை உணர்ந்தாள். தன் இரு கைகளையும் ஓங்கி அவற்றை ஓட்ட முற்பட்டாள். ஆனால், கண் திறந்து பார்க்க மாட்டாமையால், வண்டுகள் உள்ள இடம் அறியாது, வெற்றிடத்தே வீசிவீசிக் கைகள் சோரக் கலங்கி நின்றாள்.

“ஒரு பூஞ்சோலையில், காற்றுப் புகுந்து அடிக்க, மலர்க் கொடிகள் அக்காற்றால் அலைப்புண்டு, ஒன்றன் மீது ஒன்று வீழ்ந்தும், ஒன்றோடொன்று பிணைந்தும் பாழாகும் காட்சி போல், அம்மகளிர், வண்டுகள் வருத்த வருந்தி, உணர்விழந்து ஓடி, ஒருவர்மீது ஒருவர் வீழ்ந்து வருந்தினர். பெண்ணே! நான் கனவில் கண்ட காட்சி இதுவே!” என்றான்.

கணவன் கூறுவது கனவுக் காட்சியன்று, நினைவில் அவன் நிகழ்த்திய நிகழ்ச்சியே என்பதைத் தொடக்கத்திலேயே அறிந்து கொண்ட அவள், அவன் இதுகாறும் கூறியவற்றைக் கேட்டமையால், தன்கருத்தே உண்மையாம் என்பதை உறுதி செய்து கொண்டாள். அதனால், அவனைப் பார்த்து, “ஏடா! பரத்தையர் உன்னோடு ஊட, அவர் ஊடல் தீர்த்துக் கூடக் கருதிய நீ, அவர் அடியில் வீழ்ந்து வணங்கி, அவர் ஊடல் தீர்த்துக் கூடி மகிழ்ந்தாய். அதை நான் அறிந்து கொண்டேன். அதை மறைக்க இக்கனாகக் கதையைக் கட்டிவிட்டாய். உன் இழிசெயல் கண்டு நான் சினவாது இருத்தல் வேண்டும் எனும் கருத்தால், நீயே கற்பித்துக் கூறிய கதைதானே இக்கனவு ? உண்மையைக் கூறு!” எனக் கூறி உறுத்து நோக்கினாள்.

மனைவியின் சினம் கண்டு, இளைஞன் மனம் நடுங்கினான். அவள் அருகிற் சென்று அடிபணிந்து, “பெண்னே! நான் கனவு கண்டது உண்மை. நான் கூறிய அனைத்தும் நான் கண்ட கனவுக் காட்சிகளே. நான் பொய் சொல்லி அறியேன். என்னை நம்பு. மேலும், நான் பிழையே புரிந்திருப்பினும், அது குறித்து என்னோடு ஊடுதற்கு இது ஏற்ற காலம் அன்று. பெண்ணே அதோ பார் அக் குயிலை. தன் பெடையை ஓயாது அழைக்கும் அதன் அன்பை என்னென்பேன்! அக்குயிலின் குரல் கூறும் பொருள் யாது தெரியுமா? மக்களைப் பார்த்து, ஏ, மக்காள்! மனம் மகிழப் புணர்ந்து கிடப்பீரேல், அப் புணர்ச்சியைக் கைவிடாதீர்கள்; பிரிந்து வாழ்விரேல், உடனே புணர்ச்சி மேற்கொள்ளுங்கள். இன்பம் நுகர்தற்கேற்ற இளவேனிற் பருவம் வந்துவிட்டது. ஆகவே இன்ப நுகர்விற்கு ஏற்பன மேற்கொள்ளுங்கள்! என்பதைக் கூறுவது போலன்றோ அவை கூவுகின்றன. அம்மட்டோ! அதோ பார், குயிலின் குரல் கேட்ட மதுரை மாமக்கள், மகளிரும், அவர் கணவரும், இளவேனிற்கால இன்பத்தை, ஆற்றை அடுத்த அழகிய சோலைகளில் இருந்து நுகரத், தம்மை ஆடை அணிகளால் அழகு செய்து கொள்ளும் காட்சியைக் காண். என் கனவு நனவாகும் காலம் வந்து விட்டது. அது உண்மையாகும் வண்ணம், ஊடல் தவிர்த்துக் கூடும் கருத்தை, உன் உள்ளத்தில் கொள்வாயாக!” எனக் கூறி வேண்டிக் கொண்டான்.

“புனவளர் பூங்கொடி அன்னாய்! கழியக்
கனவெனப் பட்டதோர் காரிகை நீர்த்தே;
முயங்கிய நல்லார் முலையிடை மூழ்கி
மயங்கி மற்று ஆண்டுச் சேறலும், செல்லாது

உயங்கி இருந்தார்க்கு உயர்ந்த பொருளும், 5
அரிதின் அறம்செய்யா ஆன்றோர் உலகும்,
உரிதின் ஒருதலை பெய்தலும், வீழ்வார்ப்

பிரிதலும், ஆங்கே புணர்தலும், தம்மின்
தருதல் தகையாதால் மற்று.

நனவினாற் போலும், நறுநுதால்! அல்கல் 10
கனவினாற் சென்றேன், கலிகெழு கூடல்
வரைஉறழ் நீள்மதில் வாய்சூழ்ந்த வையைக்
கரைஅணி காவின் அகத்து,
உரைஇனி, தண்டாத் தீம்சாயல் நெடுந்தகாய் ! அவ்வழிக்
கண்டது எவன் மற்று நீ? 15

கண்டது, உடன்அமர் ஆயமொடு, அவ்விசும்பாயும்
மடநடை மாயினம், அந்தி அமையத்து
இடன்விட்டியங்கா இமையத்து ஒருபால்,
இறைகொண்டிருந்தன்ன நல்லாரைக் கண்டேன்,
துறைகொண்டு உயர்மணல்மேல் ஒன்றி நிறைவதை, 20
ஓர்த்தது இசைக்கும் பறைபோல் நின்நெஞ்சத்து வேட்டதே கண்டாய் கனா, கேட்டை விரையல்நீ; மற்றுவெகுள்வாய், உரை யாண்டு இதுவாகும், இன்னகை நல்லாய்! பொதுவாகத்

தாங்கொடியன்ன தகையார் எழுந்ததோர் 25
பூங்கொடி வாங்கி, இணர்கொய்ய, ஆங்கே,
சினையலர் வேம்பின் பொருப்பன் பொருத
முனையரண்போல உடைந்தன்று, அக்காவின்
துணைவரி வண்டின் இனம்.

மற்றாங்கே, நேரிணர் மூசியவண்டெல்லாம், அவ்வழிக் 30
காரிகைநல்லார் நலங்கவர்ந்து உண்பபோல் ஒராங்குமூச;

அவருள்,
ஒருத்தி செயல்அமை கோதை, நகை,

ஒருத்தி இயலார் செருவில் தொடியொடு தட்ப;
ஒருத்தி தெரிமுத்தம் சேர்ந்த திலகம், 35
ஒருத்தி அரிமாண் அவிர்குழை ஆய்காது வாங்க;
ஒருத்தி வரியார் அகல்அல்குல் காழகம்
ஒருத்தி அரியார் நெகிழத்து அணிசுறாத் தட்ப;
ஒருத்தி புலவியால் புல்லாது இருந்தாள், அலவுற்று
வண்டினம் ஆர்ப்ப இடைவிட்டுக், காதலன் 40
தண்தார் அகலம் புகும்.

ஒருத்தி, அடிதாழ் கலிங்கம் தழிஇ, ஒருகை
முடிதாழ் இருங்கூந்தல் பற்றிப், பூவேய்ந்த
கடிகயம் பாயும், அலந்து.

ஒருத்தி, கணங்கொண்டு அவைமூசக், கையாற்றாள் பூண்ட 45

மணம்கமழ் கோதை பரிவு கொண்டோச்சி
வணங்குகாழ் வங்கம் புகும்.

ஒருத்தி, இறந்த களியான்இதழ் மறைந்த கண்ணள்
பறந்து அவைமூசக் கடிவாள், கடியும்
இடம்தேற்றாள்; சோர்ந்தனள்கை. 50
ஆங்க, கடிகாவில் கால்ஒற்ற ஒல்கி, ஒசியாக்
கொடிகொடி தம்மில் பிணங்கியவை போல்,
தெரிஇழை ஆர்ப்ப மயங்கி இரிவுற்றார், வண்டிற்கு
வண்டலவர் கண்டேன் யான்.

நின்னை நின்பெண்டிர் புலந்தனவும், நீ அவர் 55
முன்னடிஒல்கி உணர்த்தினவும் பன்மாண்
கனவின் தலையிட்டு உரையல், சினைஇ, யான்

செய்வது இல் என்பதோ கூறு.

பொய்கூறேன்; அன்னவகையால் யான்கண்ட கனவுதான்

நன்வாயாக் காண்டை; நறுநுதால்! பன்மாணும் 60 கூடிப்புணர்ந்தீர்! பிரியன்மின்! நீடிப் பிரிந்தீர்! புணர்தம்மின் என்பனபோல அரும்பு அவிழ் பூஞ்சினைதோறும் இருங்குயில் ஆனாது அகவும் பொழுதினான், மேவர

நான்மாடக்கூடல் மகளிரும், மைந்தரும் 65 தேன் இமிர் காவில் புணர்ந்திருந்து ஆடுமார் ஆனாவிருப்போடு அணி அயர்ப; காமற்கு வேனில் விருந்தெதிர் கொண்டு.”

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன், தலைவியின் ஊடல் தீர்வது குறித்து, தெய்வ மகளிர் ஆடி மகிழும் கனாக் கண்டு களித்தேன் எனக் கூறியது இது.

1. புனவளர்–பூஞ்சோலையில் வளரும். கழியக்கனவு–நல்ல கனவு; பெருங்கனவு 2. காரிகை நீர்த்து–அழகுடைத்து; 3. முயங்கிய புணர்ந்த; 5. உயங்கி- செயலற்று; 7, ஒருதலை–உறுதியாய்; வீழ்வார்–விரும்புவாரை; 9. தகையாது–விலக்காது; ஆல்–அசை; 10. அல்கல்–இரவு; 11. கலிகெழு–ஆரவாரம்மிக்க; 12. வரைஉறழ்–மலைபோன்ற; 14. தண்டா –குறையாத; தீம்–இனிய; 16. அவ்விசும்பு–அழகிய ஆகாயம்; 17, மாஇனம்–அன்னப்பறவையின் கூட்டம்; 19. இறைகொண்டு தங்கி; 20. ஒன்றி நிறைவதை–ஒன்று சேர்ந்து இருத்தலை; ஒன்றி நிறைவதைக் கண்டேன் என மாற்றுக; 21. ஓர்த்தது–மனம் எண்ணியதை; 22. வேட்டது. விரும்பியது; 23. கேட்டை–கேட்பாயாக; வரையல் – அவசரப்படாதே; 25. தகையார்–அழகுடையார்; 25. வாங்கி–வளைத்து; இணர்–மலர்க் கொத்துக்களை; 27. சினை அலர்–கிளைகளில் மலர்ந்த; பொருப்பான்–பொதிய மலைக்குரிய பாண்டியன்; 29. துனை–விரைந்து பறக்கும்; 30. மூசிய–மொய்ந்த; 31. காரிகை நல்லார்–அழகுடைய நல்ல மகளிர்; ஓராங்கு–ஒன்று சேர்ந்து; 33. செயல் அமை–வேலைப்பாடு மிக்க: கோதை– மலர் மாலை; நகை அணி, 34. தட்ப–மாட்டிக் கொள்ள 35, தெரி முத்தம்-ஆராய்ந்த முத்து, 35. அரி–அழகு; அவிர்–ஒளிவீசும்; ஆய்காது–அழகிய காது. வாங்க–மாட்டிக் கொள்ள 37. காழகம்–ஆடை; 38. அரிஆர்–பரல்கள் நிறைந்த; நெகிழம்–சிலம்பு; அணிசுறா– அழகிய சுறா போலும் வடிவம்; 39. அலவுற்று வருந்தி; 42. கலிங்கம்–ஆடை; 43. பூ வேட்ந்த – பூக்கள் நிறைந்த; 44. கடிகயம்–காவல் அமைந்த குளம்; அலந்து–அலவுற்று; 45. கணம் கொண்டு–கூட்டமாய் வந்து; கையாற்றாள்–கையால் ஓட்டமாட்டாள்; 46. பரிபு–அறுத்து; வங்கம்–ஓடம்; 48. இறந்த – அளவிற்கு மீறிய; களியாள்–கள்ளுண்ட வெறியால்; 49. கடிவாள் –ஓட்டுவாள்; 50. தேற்றாள் அறியாள்; 51. காவில்–சோலையில்; கால்ஒற்ற–காற்றுவீச; ஒல்கி– தளர்ந்து; ஒசியா–வளைந்து; 53. இரிவுற்றார் நாற்புறமும் சிதறி ஓடினார்; 54. வண்டலவர்–மகளிர். வண்டலவர்; வண்டிற்கு இரிவுற்றார் என மாற்றுக; 57. கனவின் தலையிட்டு – கனவின் மேலேற்றி; 60. வாயா – உண்மை ஆகுமாறு; காண்டை –வழிச்செய்வாய்; 64. ஆனாதுஓயாது; மேவர்–பொருத்தமாக; 66. தேன் இமிர்–தேனீக்கள் ஒலிக் கும்; ஆடுமார்–விளையாடற் பொருட்டு; 67. ஆனா – குறையாத; அணிஅயர்ப்–அணிகளை அணிவர்; 68. வேனில்விருந்து வேனில் விழா; எதிர் கொண்டு – எதிர் நோக்கி; விருந்து எதிர் கொண்டு அணி அயர்ப என மாற்றுக.