மருதநில மங்கை/நின்வயின் நெகிழும் என் நெஞ்சு

26


நின்வயின் நெகிழும் என் நெஞ்சு

ளகிய நெஞ்சுடையாள் அவள். கணவன் சிறிது அதிகமாக அன்பு காட்டினால், அவன் செய்த தவறுகளை மறந்து மன்னிக்கும் மாண்பு மிக்க மனம் உடையாள். அவள் அத்தகையாள் என்பதை அறிந்தமையால், அவள் கணவன், பரத்தையர் உறவுபோலும் தவறுகளைத் துணிந்து செய்து வந்தான்.

ஒரு நாள், அவன் பரத்தையர் சேரி சென்று. அங்கு பலரோடு தொடர்புகொண்டு, மகிழ்ந்திருந்துவிட்டுத், தன் மனை புகுந்தான். வந்த கணவன் தோற்றத்தைக் கண்டாள் அவன் மனைவி. அல்லி, முல்லை, அனிச்சம், நீலம் முதலாம் மலர்களை நறாம் பூவோடு கலந்து கட்டிய கண்ணியும், கழுத்து மாலையும், அப் பரத்தையரோடு புணர்ந்தமையாலும், அப் பரத்தையர் அவனோடு புலந்து, பற்றி அலைக்கழித்தமையாலும், வண்ணம் இழந்து வாடித் தோன்றின. அத் தோற்றம், அவன் பரத்தையர் மனையினின்றும் வருகிறான் என்பதை உணர்த்திற்று. அதனால் உள்ளம் வருந்திய அவள், அவன் அண்மையில் வந்ததும், “என் தலைவன் அழகு, நேற்றினும், இன்று நனி மிக நன்று!” எனக் கூறி எள்ளி நகைத்து, வெறுத்து, வேறிடம் சென்றாள்.

வெறுத்துச் செல்லும் மனைவியைக் கண்டான். அணைபோல் சேர்ந்தார்க்கு மென்மையும், இனிமையும் தரும் அவள் தோளழகைக் கண்டு உள்ளுக்குள்ளே மகிழ்ந்தான். பின்னர் அவளைத் தொடர்ந்து பின் சென்று, “பெண்ணே புறத்தே செல்லும் எனக்குப் பரத்தை வீடல்லது வேறு போக்கிடம் உண்டோ என்ற ஐயம், உன் உள்ளத்தில் எவ்வாறோ இடம் பெற்று விட்டது. அதனால், நான் செய்யாத குற்றத்தைச் செய்ததாகக் கூறி என்னைச் சினக்கின்றாய். அது வேண்டாம். ‘நான் பிழையேதும் புரிந்திலேன்!’ எனத் தெய்வத்தின் முன் நின்று ஆணையிட்டு உரைக்கவும் நான் அஞ்சேன். நீ கூறும் தவறு என்பால் இல்லை. இதை நீ நின் கருத்தால் உணர்தல் வேண்டும்!” என அவள் உள்ளம் உருகும் வகையில் விளங்க எடுத்துரைத்தான்.

கணவன் கூறியன கேட்டாள். அவன் ஒழுக்கம் கெட்டவன் என்பதை அவள் ஐயமற அறிந்திருந்தாளாதலின், அன்று, ‘சூளுரைக்கவும் அஞ்சேன் !’ என அவன் உரைத்ததை ஒப்புக் கொள்ள மறுத்தது அவள் உள்ளம். அதனால் பலப்பல கூறிப் பின்தொடர்ந்து வரும் அவனை நோக்கி, “ஏடா! ஈங்கிருந்து சென்றநீ, ஆங்குச் செய்த செயல் யாது என்பதை அறிவேன். உன் சூள் பொய்ச் சூள் என்பதையும் அறிவேன். பரத்தையர் சேரியுள் ஒருத்தி உன்னைப் பெற்றுத் தழுவ, அக்காலை அவள் தொடி அழுத்திப் பண்ணிய தழும்பையும், நீ செய்த குறியிடத்தே வந்து நோக்க, அக்காலை, நீ மற்றொருத்தியின் மனை சென்று மகிழ்ந்திருந்தமையால், ஆண்டுக் காணாது கலங்கிய ஒரு பரத்தை, உன்னைப் பிறிதோரிடத்தில் கண்டு, உன்னோடு ஊடிப் புலந்தக்கால், அவள் கூரிய உகிர்பட்டு உன் மார்பில் உண்டான வடுவையும், அவள் பற்றிப் பாழாக்கப் பாழான உன் மாலையையும், அவள் கலைக்கக் கலைந்த மார்புச் சந்தனத்தையும், மற்றும் சேரியில் வாழும் செவ்வரி பரந்த செருக்கோடு மை தீட்டிய மாண்பும் வாய்ந்த கண்களையுடைய பரத்தையர் பலரும், உன்னைப் பலகாலும் புணர்ந்தமையால் பாழான உன் மேனியையும் கண்டேன். இத்தகையான் நமக்கு இன்பம் தருவதற்கு ஏற்றவனாகான் என உணர்ந்தது என் உள்ளம். ஆகவே, உன்னோடு ஊடுவதைக் கைவிட்டேன். ஆகவே, இனி என்னைக் கண்டு அஞ்சாது, நீ விரும்பும் இடத்திற்குச் சென்று மகிழ்ந்து வாழ்வாயாக!” எனக் கூறி வெறுத்து அப்பால் சென்றாள்.

மனைவி தான் செய்த தவறுகளை வரிசையாக எடுத்துக் காட்டி இடித்துரைப்பதைக் கண்ட இளைஞன், எதையும் கூறுவதற்கு இயலாது சிறிது நேரம் விழித்தான். பின்னர்ப், “பிழை புரிந்திலேன்” என்ற தன் பொய்யை நிலை நாட்டுவதே வழியாம் எனத் துணிந்தான். அதனால் மீண்டும் அவளை அணுகிப், “பெண்னே! பிழையற்றவன் நான் எனப் பலகால் கூறவும், அதை ஏற்றுக் கொள்ளாது மேலும் மேலும் என்னைச் சினந்து வெறுக்கின்றாய். இனி, உன்னைப் பணிந்து, உன் உள்ளம் ஏற்கும் சொற்களால், என் தவறின்மையைக் காட்டத் துணிந்தேன். அதை இனிக் காண்பாயாக!” எனத் தோற்றுவாய் அமைத்துக் கொண்டு, தொடரத் தொடங்கினான்.

கணவன் உறுதிப்பாட்டைக் கண்டாள் மனைவி, அதற்கு மேலும் அவனை வெறுக்க அஞ்சிற்று அவள் உள்ளம். ஊடல் தணிந்தது. ஏற்றுக்கொள்ள இசைந்தாள். கணவனை நோக்கினாள். “உனக்கு நான் எளியளாய், உன்னோடு புணர்தற்கு இசைந்தால் அவ்வெளிமையால் என்னை விடுத்துப் பரத்தையர்பால் செல்லும் நீ, நான் உன் பழிகண்டு, உன்னை வெறுத்துப் புலக்கத் தொடங்கியவுடனே, பெரிதும் வருந்துகின்றாய். பரத்தைய ரொழுக்கம் என்ற இப்பழியே யன்றி, வேறுபல பெரும் பழிகளைப் புரியினும், உன்னை வெறுக்காது விரும்பும் என் உள்ளம், இன்று நான் ஊடிநிற்பதால், வருந்தும் உன் நிலை கண்டு மிகவும் கலங்கி விட்டது. என் உள்ளத்தின் உறுதிப்பாடற்ற இந்நிலையை அறிந்துகொள்ள மாட்டாது. நீ நான் விரும்புமாறு காரணம் பல காட்டி, உன் பிழையின்மையை நிலைநாட்ட நீ ஏன் பெரிதும் முயல்கின்றனை? உன்செயல் வேண்டாத வீண் செயலாம். என் நெஞ்சம், உன்னை ஏற்றுக் கொண்ட பின்னர், என்னைத் தெளிவிக்க நீ மேற்கொள்ளும் முயற்சிகள் தேவையற்றன.!” எனக் கூறி, ஊடல் தவிர்ந்து உவந்தாள்.

“அரிநீர் அவிழ்நீலம், அல்லி, அனிச்சம்,
புரிநெகிழ்முல்லை, நறவோடு அமைந்த
தெரிமலர்க் கண்ணியும், தாரும், நயந்தார்
பொருமுரண் சீறச் சிதைந்து, நெருநையின்,
இன்று நன்று என்னை அணி. 5

அணை மென்தோளாய்! செய்யாத சொல்லிச் சினவுவது ஈங்குஎவன்?
ஐயத்தால் என்னைக் கதியாதி, தீதின்மை
தெய்வத்தால், கண்டி, தெளிக்கு.

மற்றது, அறிவல்யான் நின்சூள், அனைத்தாக, நல்லார்
செறிதொடி உற்ற வடுவும், குறிபொய்த்தார் 10
கூர்உகிர் சாடிய மார்பும், குழைந்தநின்
தாரும், ததர்பட்ட சாந்தமும் சேரி
அரிமதர் உண்கண்ணார், ஆராக் கவவின்
பரிசழிந்து யாழநின் மேனிகண்டு, யானும்
செரு ஒழிந்தேன்; சென்றி இனி 15
தெரியிழாய்! தேற்றாய்; சிவந்தனை, காண்பாய்நீ; தீதின்மை
ஆற்றின் நிறுப்பல் பணிந்து.
அன்னதேல், ஆற்றல்காண்!
வேறுபட்டாங்கே கலுழ்தி, அகப்படின்,
மாறுபட்டு ஆங்கே மயங்குதி; யாதொன்றும் 20
கூறி உணர்த்தலும் வேண்டாது, மற்றுநீ
மாணாசெயினும் மறுத்து ஆங்கே, நின்வயின்
காணின் நெகிழும் என்நெஞ்சாயின், என்உற்றாய்
பேணாய்நீ பெட்பச் செயல்.”

தலைவன் பரத்தையர் ஒழுக்கம் கண்டு ஊடிய தலைவி, அவன் ஆற்றாமை கண்டு ஊடல் தீர்ந்தது.

1. அரி–அழகிய; 2. நெகிழ்–மலர்ந்த; 3. கண்ணி –தலை மாலை; தார்–மார்புமாலை; நயந்தார்–விரும்பிய பரத்தையர்; 4. நெருகையின்–நேற்றைக் காட்டிலும்; 5. என்னை–என் தலைவன். 7. கதியாதி–கோபிக்காதே; 8. தெய்வத்தால் தெளிக்கு கண்டீ என மாற்றுக; தெளிக்கு–தெளிவிப்பேன்; கண்டீ–காண். 12. ததர்பட்ட–கலைந்த; 13. ஆரா–மனநிறைவு தாராத; கவவு–புணர்ச்சி. 14. பரிசு–பெருமை; 15. செரு–ஊடல்; 17. ஆற்றின்–முறைப்படி; நிறுப்பல்–நிலைநாட்டுவேன்; 18. அன்னதேல்–அவன் கருத்து அதுவானால், ஆற்றல் காண்–நெஞ்சே! அவன் ஆற்றலைப் பாராய். 19. வேறுபட்டாங்கே–புலந்து வேறுபட்ட அப்போழுதே; கலுழ்தி–வருந்துகிறாய்: 22. மாணா–மாண்பற்ற செயல்கள். 24. பெட்ட–நான் விரும்பும் செயல்களை.