மலரும் உள்ளம்-1/இரண்டாம் பகுதி

சிட்டுக் குருவி, கிட்டவா.

எட்ட ஒடிப் போகாதே!
கட்டிப் போட்டு வைக்கமாட்டேன்.

கவலைப் பட்டு ஓடவேண்டாம்.
பட்டம் போல வானைநோக்கிப்
பறந்து, ஒடி அலையவேண்டாம்.

சிட்டுக் குருவி, கிட்டவா.

எட்ட ஓடிப் போகாதே!
வட்ட மிட்டுத் திரியவேண்டாம்.

மழையில் எல்லாம் நனையவேண்டாம்.
வெட்ட வெளியில் சுற்றவேண்டாம்.
வெய்யில் தாக்க அலையவேண்டாம்.

சிட்டுக் குருவி, கிட்டவா.

எட்ட ஓடிப் போகாதே!
பட்டு உடலைத் தொட்டிடுவேன்.

பையப் பைய நெருங்கிடுவாய்.
தட்டு நிறைய நெல்தருவேன்.
தயவு செய்து வந்திடுவாய்.

சிட்டுக் குருவி, கிட்டவா.

எட்ட ஒடிப் போகாதே!

டம்டம் டம்டம் டமாரமாம்.
டமாரப் பெருமை அபாரமாம்.
‘டம்டம்’ எனது குரலாகும்.
‘டமாரம்’ எனது பெயராகும். (டம்டம்)

ஜால வித்தை செய்யும்இடம்,
சர்க்கஸ் ஆட்டம் ஆடும்இடம்.
ஏலம் கூறி விற்கும்இடம்
எல்லா இடமும் நான்இருப்பேன். (டம்டம்)

அரசர் அடையும் வெற்றிகளை
அனைவரும் அறியச் செய்கின்ற
முரசோ எனது அண்ணாச்சி.
மிருதங் கம்என் தங்கச்சி. (டம்டம்)

பையன்—கிளியே, கிளியே, உன்னுடன்
கிளம்பி வரவா நானுமே?


கிளி—இறக்கை உனக்கு இல்லையே!
எப்ப டித்தான் பறப்பதோ?


பையன்—இறக்கை நீதான் கொண்டுவா;.
இன்றே சேர்ந்து பறக்கலாம்.


கிளி—பழங்கள் தாமே தின்னலாம்.
பட்ச ணங்கள் இல்லையே!


பையன்—பட்ச ணங்கள் வாங்கவே
பணமும் கொண்டு வருவேனே.


கிளி—பணத்தை எந்த இடத்திலே
பாது காத்து வைப்பதோ?


பையன்— பணத்தைச் சிறகி னுள்ளேயே
பாது காத்து வைப்பேனே.


கிளி—பறக்கும் போது, ஐயையோ,
பணம் விழுந்து போகுமே!

பட்டணம் பெரும் பட்டணம்.
பலரும் கூடும் பட்டணம்
கார், குதிரை வண்டிகள்
கணக்கில் லாத பட்டணம்.
தண்ட வாள மீது ‘ட்ராம்’
வண்டி ஓடும் பட்டணம்.
ஆளை வைத்து ரிக்ஷாவில்
ஆள் இழுக்கும் பட்டணம்.
மிருகக் காட்சி சாலையும்,
மெத்தப் பெரிய கோட்டையும்
உயர மான் ‘கோர்ட்டு’மே
உள்ள தந்தப் பட்டணம்.
கப்பல் தங்கத் துறைமுகம்,
காற்று வாங்கக் கடற்கரை,
வீதி தோறும் பள்ளிகள்
விளங்கு கின்ற பட்டணம்.
பொட்ட ணத்தைக் கட்டியே
போகப் போறேன் பட்டணம்.
என்ன பட்டணம் தெரியுமா?
சென்னப் பட்டணம் தெரிஞ்சுக்கோ!

அப்பா என்னை
அழைத்துச் சென்றார்.
அங்கு ஓரிடம்.

அங்கி ருந்த
குயிலும், மயிலும்
ஆடித் திரிந்தன.

பொல்லா நரியும்,
புனுகு பூனை
எல்லாம் நின்றன.

குட்டி மான்கள்,
ஒட்டைச் சிவிங்கி
கூட இருந்தன.

குரங்கு என்னைப்
பார்த்துப் பார்த்துக்
‘குறுகு’ றென்றது.

யானை ஒன்று
காதைக் காதை
ஆட்டி நின்றது.

முதலை தலையைத்
தூக்கிப் பார்த்து
மூச்சு விட்டது !


கரடி கூட -
உறுமிக் கொண்டே
காலைத் தூக்கிற்று!

சிறுத்தை ஒன்று
கோபத் தோடு
சீறிப் பார்த்தது!

அங்கு எங்கள்
அருகி லேயே
சிங்கம் நின்றது!

கரடி, சிங்கம்
புலியைக் கண்டேன்;
கண்டும் பயமில்லை.

சூர னைப்போல்
நின்றி ருந்தேன்;
துளியும் பயமில்லை!

சென்ற அந்த
இடம் உனக்குத்
தெரிய வில்லையா?

மிருகக் காட்சி
சாலை தானே;
வேறொன்றும் இல்லை!

மெத்தப் பெரிய கண்ணாடி
வீட்டில் என்னிடம் இருக்கிறது.

நித்தம் நித்தம் அதன்முன்னால்
நின்றே அழகு பார்த்திடுவேன்.

அதனைப் பார்த்துச் சிரித்தபடி
அப்படி இப்படி ஆடிடுவேன்.

அதனில் தெரியும் உருவமுமே
அதுபோல் ஆடிச் சிரித்திடுமே.

‘கொன்றிடு வேன்’என விரலைநான்
கோபமாய் எதிரே நீட்டிடுவேன்.

‘நானும் அப்படித் தான்’என்றே
நன்றாய்த் திருப்பிச் செய்திடுமே.

எப்படி எப்படிச் செய்தாலும்
என்போல் அதுவும் செய்திடுமே.

நன்மை செய்தால் நன்மைதான்
நம்மை நாடி வந்திடுமே.

தீமை செய்தால் தீமைதான்
திரும்பி வந்து சேர்ந்திடுமே!

சிங்கம் எங்கே பார்க்கிறாய்?
சீறிப் பாய எண்ணமோ?

கொண்டு வந்து உன்னைத்தான்
கூட்டில் போட்டு விட்டோமே!

வெள்ளி போலத் தலைமயிர்
விரித்து நிற்கும் சிங்கமே,

கொள்ளி போன்ற கண்களால்
‘குறுகு’றென்று பார்ப்பதேன்?

கத்தி போன்ற நகங்களால்
கம்பி யைத்தான் கீறலாம்.

உயிரைக் கொன்று கம்பியின்
உடலைக் கிழிக்க முடியுமோ?

மிருக ராஜ சிங்கமே,
மிரட்டி ஏனோ பார்க்கிறாய்?

கூட்டை விட்டு வரவேதான்
பூட்டுப் போட்டி ருக்குதே!

போகுது பார்,ரயில் போகுதுபார்.
புகையினைக் கக்கியே போகுதுபார்.
‘குபுகுபு’ சத்தம் போடுதுபார்.
‘கூக்கூக்’ என்றுமே கூவுதுபார்.
தூரமும், நேரமும் குறைவதுபார்.
துரிதமாய் எங்குமே ஓடுதுபார்.
அறையறை யான வண்டிகள்பார்.
அவற்றிலே மனிதர் செல்வதுபார்.
‘ஸ்டேஷ’னி லெல்லாம் நிற்குதுபார்.
சிகப்புக் கொடிக்கே அஞ்சுதுபார்.
மலையைக் குடைந்தே செல்லுதுபார்.
மையிருள் தன்னிலும் ஓடுதுபார்.
பாலம் கடந்துமே போகுதுபார்.
‘பட,பட கட, கட’ என்குதுபார்.
பட்டண மாமா கடிதமெலாம்
பையிலே தூக்கி வருகுதுபார்.
காசைக் கரியாய் ஆக்காமல்,
கரியைப் புகையாய் விடுவதுபார் !

‘பூம், பூம்’ என்ற சப்தமுடன்
போகுது மோட்டார் பார்,பார்,பார்.
‘ஜாம், ஜாம்’ என்றே அதிலேறிச்
சவாரி செய்வோம் வா,வா,வா.

அப்பா காசு தந்திடுவார்.
அதனில் மோட்டார் வாங்கிடலாம்.
சுப்பா, நீயும் தோழர்களும்
சொகுசாய் ஏறிச் சென்றிடலாம்.

நான்தான் காரை ஓட்டிடுவேன்.
நாலா பக்கமும் சுற்றிடலாம்.
‘டாண் டாண்’ பள்ளிக் கூடமணி
நம்மை அழைக்கச் சென்றிடலாம்.

‘பெட்ரோல்’ வேண்டாம்;கரி வேண்டாம்;
‘பெடலை’ அழுத்தியே ஓட்டிடுவேன்.
எட்டுத் திசையும் சுற்றிடவே
இஷ்டம் உள்ளவர் வாருங்கள்!

பட்டணத்தைப் பார்க்கப்போகும்
சின்னமாமா—இந்தப்
பையனைநீ மறந்திடாதே.
சின்னமாமா.

பாப்பாவுக்கு ஊதுகுழல்
சின்னமாமா—அந்தப்
பட்டணத்தில் வாங்கிவாராய்,
சின்னமாமா.

அக்காளுக்கு ரப்பர்வளை
சின்னமாமா—அங்கே
அழகழகாய் வாங்கிவாராய்,
சின்னமாமா.

பிரியமுள்ள அம்மாவுக்கு,
சின்னமாமா—நல்ல
பெங்களூருச் சேலைவேண்டும்,
சின்னமாமா.

அப்பாவுக்குச் சட்டைத்துணி
சின்னமாமா—ஓர்
ஆறுகெஜம் வாங்கிவாராய்,
சின்னமாமா.

தாத்தாவுக்கு ஊன்றிச்செல்ல
சின்னமாமா—நல்ல
தந்தப்பிடிக் கம்புவேண்டும்,
சின்னமாமா.

பல்லேயில்லாப் பாட்டிக்குநீ
சின்னமாமா—இரு
பல்வரிசை வாங்கி வாராய்,
சின்னமாம.

எனக்கும் ஒரு ‘சைக்கிள்’வண்டி
சின்னமாமா—நீ
இல்லையென்றால் விடவேமாட்டேன்,
சின்னமாமா.

சொன்னதெல்லாம் மறந்திடாமல்
சின்னமாமா—உனது
துணியைச்சுற்றி முடிச்சுப்போடு,
சின்னமாமா!

பள்ளிக் கூடம் திறக்கும் காலம்.
பாலர் பையைத் தூக்கும் காலம்.

மணியின் ஓசை கேட்கும் காலம்.
மாண வர்கள் கூடும் காலம்.

வாத்தி யாரைப் பார்க்கும் காலம்.
வகுப்பு மாறி இருக்கும் காலம்.

புத்த கங்கள் வாங்கும் காலம்.
புரட்டிப் புரட்டிப் பார்க்கும் காலம்.

பரீட்சை தன்னில் தேர்ச்சி பெற்ற
பாலு ஜோராய் நடக்கும் காலம்.

தோற்றுப் போன கோபு மூஞ்சி
தொங்கிப் போச்சு, ஐயோ, காலம்!

வெள்ளை யெல்லாம் அடித்துவைத்து,
வீட்டை நன்கு மெழுகிவைத்து,

விடியும் போதே குளித்துவிட்டு,
விளக்கு ஒன்றை ஏற்றிவைத்து,

கோல மிட்ட பானையதில்
கொத்து மஞ்சள் கட்டிவைத்து,

அந்தப் பானை தன்னைத்தூக்கி
அடுப்பில் வைத்துப் பாலைஊற்றிப்

பொங்கிப் பாலும் வருகையிலே
‘பொங்க லோபால் பொங்க’லென்போம்.

தேங்கா யோடு கரும்பும், சோறும்
தெய்வத் துக்குப் படைத்துவைத்து,

ஒன்று சேர்ந்து உண்டிடுவோம்;
ஓடி ஆடிப் பாடிடுவோம்.

திருவி ழாவாம் திருவிழா!
தேரி ழுக்கும் திருவிழா!
ஒருமு கமாய் மக்களெல்லாம்
ஒத்துக் கூடும் திருவிழா.

பட்டு ஆடை உடுத்தலாம்;
பாட்டி கையைப் பிடிக்கலாம்;
கொட்டு மேளம் கேட்டதும்
‘குடுகு’ டென்று ஓடலாம்.

ஆனை, குதிரை பார்க்கலாம்:
அதிர் வேட்டுக் கேட்கலாம்.
சேனை போல யாவரும்
திரண்டு கூடிச் செல்லலாம்.


தேரில் சாமி வந்ததும்
தேங்கா யொடு போகலாம்.
ஊரா ரோடு நாமுமே
உடைத்து வைத்து வணங்கலாம்.

பால் கோவா வாங்கலாம்.
பஞ்சு மிட்டாய் வாங்கலாம்.
நாலே கால் பணத்திலே
நடக்கும் பொம்மை வாங்கலாம்.

பாட்டி நானும் கேட்பதைப்
பட்ச மாக வாங்குவாள்.
பாட்டி யவளைக் கையுடன்
கூட்டிக் கொண்டே திரும்புவேன்.