மலரும் உள்ளம்-1/மூன்றாம் பகுதி

அம்மா, அம்மா, வருவாயே,
அன்பாய் முத்தம் தருவாயே.
அம்மா உன்னைக் கண்டாலே,
அழுகை ஓடிப் போய்விடுமே.

பத்து மாதம் சுமந்தாயே
பாரில் என்னைப் பெற்றாயே.
பத்தி யங்கள் காத்தாயே.
பாடு பட்டு வளர்த்தாயே.

அழகு மிக்க சந்திரனை
ஆகா யத்தில் காண்பித்தே
பழமும், பாலும் ஊட்டிடுவாய்;
பாட்டும், கதையும் சொல்லிடுவாய்.

தமிழைக் கற்றுத் தந்திடுவாய்.
‘தத்துப் பித்’தெனப் பேசிடினும்
‘அமுதம், அமுதம்’ என்றிடுவாய்.
அணைத்து முத்தம் தந்திடுவாய்.


எனக்குச் சிறுநோய் வந்தாலும்
ஏனோ மிகவும் வருந்துகிறாய்?
உணவும் இன்றி உறங்காமல்,
உயிர்போல் என்னைக் காக்கின்றாய்.

உன்னைப் போலே வளர்த்திடுவோர்,
உலகில் உண்டோ வேறொருவர்?
என்னைக் காக்கும் அம்மாவே,
எனக்குத் தெய்வம் நீதானே.

பட்டு, இங்கே பாரடி.
பலவி தத்தில் மலர்களை.

சிட்டுப் போல மலரெலாம்
சிரித்த ழைக்கப் பாரடி.

பட்டுப் போல வர்ணமும்
பலவி தத்தில் காணுதே.

மொட்டுப் பூவும் காலையில்
தட்டுப் போல விரியுதே.

எட்டுத் திக்கும் வாசனை
எழுந்து வீசிச் செல்லுதே.

வட்ட மிட்டு வண்டினம்
வந்து தேனை உண்ணுதே.

தட்டில் கொய்து மலர்களைத்
தலையில் வைத்து மகிழுவோம்.

கட்டி நல்ல மாலையாய்க்
கடவு ளுக்குச் சாத்தவே.

கொட்டு மேளம் கேட்டதும்,
கோயி லுக்கு ஓடுவோம்.

ஆட்டுக் குட்டி, என்னைநீ
அழைப்ப தெங்கே, கூறுவாய்?
ஓட்டம் ஓட்ட மாகவே
ஓடி வரவா சொல்கிறாய்?

புல்லி ருக்கும் பக்கமே
போகத் தானே அழைக்கிறாய்?
புல்லால் எனது பசியினைப்
போக்கிக் கொள்ள முடியுமோ?

அம்மா தோசை தின்னவே
அழைக்கி றாள்;நான் போகிறேன்.
சும்மா இங்கு நிற்பதேன்?
சொன்னேன்; ஓடிச் செல்லுவாய்.

சின்னச் சின்னப் பொம்மை.
சிங்காரப் பொம்மை.
என்ன வேண்டும் சொல்லே?
ஏனோ பேச வில்லை?

பாட ஆட மாட்டாய்.
பரம சாதுப் பொம்மை.
தேட வைத்து விட்டே
தெருவில் ஓட மாட்டாய்!

வளர வில்லை; உன்றன்
வயதும் தெரிய வில்லை.
அழவே மாட்டாய். நல்ல
அழகுப் பொம்மை நீதான்.

கொஞ்ச மேனும் உண்பாய்.
கோபம் வேண்டாம், கண்ணே.
பஞ்சு மெத்தை தாரேன்.
படுத்துக் கொள்வாய், கண்ணே.


தூக்கம் கொள்வ தேனோ?
சொல்லக் கேட்பாய், கண்ணே.
சொக்காய் தைத்தேன்; பாராய்.
ஜோராய்ப் போட்டுக் கொள்வாய்.

அம்மா என்மேல் என்றும்
அன்பு காட்டக் காண்பாய்.
அம்மா வைப்போல் உன்மேல்
ஆசை கொண்டேன், நானே.

தோலை உரித்த பிறகுதான்
சுளையைத் தின்று பார்க்கலாம்.

ஓட்டை உடைத்த பிறகுதான்
உள்ளே பருப்பைக் காணலாம்.

உலையில் அரிசி வெந்துதான்
உண்டு பசியைப் போக்கலாம்.

துணியைத் தைத்த பிறகுதான்
சொக்காய் போட்டு மகிழலாம்.

எழுத்தைக் கற்ற பிறகுதான்
ஏட்டைப் படித்து அறியலாம்.

பாடு பட்ட பிறகுதான்
பலனைக் கண்டு மகிழலாம்.

பறந்து மேலே சென்றிடும்
பட்டம் பார்,பார் தம்பியே.
பருந்து கூட இதனைப்போல்
பறக்கு மோநீ சொல்லுவாய்.

வாலும் உள்ள பட்டமாம்;
வாலில் லாத பட்டமாம்;
மேலும், மேலும் செல்லுதே.
‘விர்வி’ ரென்று கத்துதே.

பச்சை, நீல வர்ணமும்
பட்டம் தன்னில் காணுதே.
உச்சி மீது வானத்தை
ஓட்டை செய்யப் பார்க்குதே!

காற்ற டிக்கும் திக்கிலே,
கையும் சேர்த்தி ழுக்குதே!
பார்ப்போம் என்றே மேகத்துள்
பார், பார், தம்பி ஒளியுதே!

காலை நேரம் ஆனதே.
கண்ணா, கண்ணை விழித்திடு!
வேலை செய்ய யாவரும்
விழித்தெ ழுந்தார், பார்த்திடு.

எழுவ தற்கே ‘கொக்கரோ’
என்று சேவல் கூவுதே.
உழுவ தற்கே மாடுகள்
ஓட்டி உழவர் செல்கிறார்.

மறைந்து இருளும் ஓடவே,
மலர்கள் யாவும் விரியவே,
விரைந்து வந்தான், சூரியன்.
விழித்தெ ழுந்து பார்த்திடு.

பசுமை யான புல்லிலே
பனிம றைந்து போனதே.
பசுவும் கன்று தடவியே
பாலை ஊட்டல் பார்த்திடு.


‘சலச’ லென்று பறவைகள்
சத்த மிட்டே வேகமாய்ப்
பலதி சைகள் ஓடுதல்
பார்க்க நீ யெழுந்திரு.

எழுந்து காலைக் கடனையே
இனிது நீயும் முடித்திடு.
தொழுது புத்த கத்தினைத்
திறந்து பாடம் கற்றிடு.

கன்றே, கன்றே, ஓடிவா.
காளைக் கன்றே ஓடிவா.
இன்றே கூடி இருவரும்
இன்ப மாகப் பேசலாம்.

‘அம்மா’ என்றே நாங்களும்
அழைக்கி றோமே அன்னையை.
‘அம்மா’ என்று நீயுமே
அழைப்ப தெங்கள் பாடமோ?

பாலைக் குடித்த பிறகுதான்
வேலை ஒன்றும் இல்லையே.
வாலைத் தூக்கி என்னிடம்
வளைந்து குதித்து ஓடிவா.

சொறிந்து கொடுத்து உனக்குநான்
சொன்னேன், ஏதோ வார்த்தைகள்
‘சரிதான், சரிதான்’ என்றுநீ
தலையை ஆட்டிக் காட்டுவாய்.

நாட்டுக்கு அழகு வளமை.
நாவிற்கு அழகு இன்சொல்.
வீட்டுக்கு அழகு வெளிச்சம்.
வீதிக்கு அழகு ஒழுங்கு.

காற்றுக்கு அழகு மென்மை
கடலுக்கு அழகு அலைகள்.
ஆற்றுக்கு அழகு ஓட்டம்.
ஆணுக்கு அழகு வீரம்.

பெண்ணுக்கு அழகு கற்பு.
பேச்சுக்கு அழகு உறுதி.
கண்ணுக்கு அழகு கருணை.
கல்விக்கு அழகு அடக்கம்.

ஜலத்திற்கு அழகு சுத்தம்.
சங்குக்கு அழகு வெண்மை.
நிலத்திற்கு அழகு விளைவு.
நெற்றிக்கு அழகு திலகம்.

குரங்குக் கூட்டம் பார்த்திடுவாய்.
குதித்து ஆடல் பார்த்திடுவாய்.
சிரங்கு வந்த பையனைப்போல்
தேகம் சொறிதல் பார்த்திடுவாய்.

குட்டி சுமக்குது, ஒருகுரங்கு.
‘குர்குர்’ என்குது, ஒருகுரங்கு.
தட்டிக் கொடுக்குது, ஒருகுரங்கு.
தாவிக் குதிக்குது, ஒருகுரங்கு.

கட்டிப் பிடிக்குது, ஒருகுரங்கு.
கர்ணம் போடுது, ஒருகுரங்கு.
எட்டிக் கிளையைப் பிடித்திடவே,
எழும்பிக் குதிக்குது, ஒருகுரங்கு.

கிளையில் வாலை மாட்டிவிட்டுக்
கீழே தொங்குது, ஒருகுரங்கு.
தழையும், பழமும் பறித்தெங்கள்
தலையில் போடுது, ஒருகுரங்கு.

துஷ்டத் தனங்கள் மிக்கதுவாம்.
சும்மா இருக்கத் தெரியாதாம்.
கஷ்டம் விளைப்பதே, ஆனாலும்,
கல்லால் அடித்திட லாமோசொல்?

அன்புடைய ஆசிரியர்
அவர்களுக்கு, என்வணக்கம்.

காலைமுதல் தலைவலியால்
கஷ்டமிகப் படுகின்றேன்.

பள்ளிக்கு வந்திடவோ,
பாடத்தைப் படித்திடவோ

இன்றைக்கு முடியாமல்
இருப்பதனால் அன்புடையீர்.

தயைகூர்ந்து இன்றுமட்டும்
தருவீர்கள், விடுமுறைதான்.

இப்படிக்குப் பணிவுள்ள,
இன்பவல்லி
2-ம் படிவம்.'இ' பிரிவு.

பாட்டி, பாட்டி, ஓடிவா.
பறவைக் கப்பல் மேலேபார்.
வீட்டு மேலே ‘விர்’ரென
வேக மாகப் போகுதே!

காட்டைத் தாண்டிச் செல்லுமாம்.
கடல் கடந்து போகுமாம்.
பாட்டி யைப்போல் அண்ணாந்து
பலரும் பார்க்கப் பண்ணுமாம்!

பாட்டி, பாட்டி இதனைப்போல்
பறவைக் கப்பல் முன்பெலாம்
பாட்டன், பாட்டி யாரேனும்
பார்த்த துண்டோ சொல்லுவாய்?

பாட்டி, நீயும், நானுமே
பறவைக் கப்பல் ஏறியே,
வீட்டை விட்டுச் செல்லுவோம்.
வெளியி டாதே, ரகசியம்!

நல்ல பண்டம் தின்னவே
நமக்கு மிக்க உதவிடும்
பல்லைப் பற்றி இன்றுநான்
பாட்டுக் கட்டப் போகிறேன்.

பாப்பா வாக இருக்கையில்
பல்லே இல்லை, அப்புறம்
கேட்பாய், அதுவும், அரிசிபோல்
கிளம்ப லாச்சு, முதலிலே.

வளர்ந்து, வளர்ந்து வரிசையாய்
வாயை நிரப்ப லாயின
தளர்ந்து போன கிழவரைத்
தனியே விட்டுப் பிரிந்தன.

முறுக்கு, சீடை யாவையும்
நொறுக்கி உள்ளே தள்ளிடும்.
சிரிக்கும் போது அழகுக்கே
சிறப்பு மெத்தக் கொடுத்திடும்.

முத்துப் பற்கள் போய்விடின்
முகத்தின் அழகும் போகுமே.
நித்தம் நித்தம் பற்களைச்
சுத்தம் செய்து காப்போமே!

அழுத பிள்ளை சிரிக்குமாம்.
அம்மா வந்தால் குதிக்குமாம்.
கழுத்தைக் கட்டிக் கொள்ளுமாம்.
‘கலக’லென்று பேசுமாம்.

அரும்பு மலர்ந்து விரியுமாம்.
அருணன் வரவே சிரிக்குமாம்.
விரும்பி அணியச் செய்யுமாம்.
வீசி மணத்தைப் பரப்புமாம்.

மடியும் செடிகள் நிமிருமாம்.
மழையைக் கண்டு தழைக்குமாம்.
அடியி லுள்ள வேர்களும்
ஆழ மாகச் செல்லுமாம்.

படுத்த கன்று எழும்புமாம்.
பசுவைக் கண்டு துள்ளுமாம்.
கொடுத்த பாலைச் சப்பியே,
குடித்துக் குதித்து ஓடுமாம்!

மிட்டாய் வாங்கிடுவாய்—தம்பி
மிட்டாய் வாங்கிடுவாய்.

வட்ட வடிவ மான மிட்டாய்;
வளைந்த நிலாப் போன்ற மிட்டாய்;
முட்டை வடிவ மான மிட்டாய்;
முழுக்க முழுக்கு இனிக்கும் மிட்டாய்.  (மிட்)

எண்ண எண்ண இனிக்கும் மிட்டாய்;
எச்சில் ஊறச் செய்யும் மிட்டாய்;
அண்ணன், தம்பி, தங்கை யோடு
அப்பா கூடத் தின்னும் மிட்டாய்.  (மிட்)

பல்லும், நாக்கும் வர்ணம் தீட்டிப்
பலவி தத்தில் காட்டும் மிட்டாய்;
பல்லில் லாத பாட்டி கூடப்
பையப் பையச் சப்பும் மிட்டாய்.  (மிட்)

குழந்தை யெல்லாம் வாங்கும் மிட்டாய்;
கூடித் கூடித் தின்னும் மிட்டாய்;
அழுத பிள்ளை வர்யை மூட
அம்மா வுக்கு உதவும் மிட்டாய்!  (மிட்)

பாட்டி எங்கள் பாட்டி—எல்லாப்
பல்லும் போன பாட்டி.
கேட்கக் கேட்கக் கதைகள்—இன்னும்
கேட்கச் செய்யும் பாட்டி.

கடின மான பண்டம்—அதைக்
கடிக்கத் தெரியாப் பாட்டி.
படிப்பே யில்லாப் பாட்டி—ஆனால்,
பலவும் தெரிந்த பாட்டி.

விடுக தைகள் போட்டே—என்னை
விழிக்க வைக்கும் பாட்டி.
குடுகு டுவய தாச்சு—கையில்
கோல்பி டிக்கும் பாட்டி.

அப்பா அடித்துப் போட்டால்—என்னை
அணைத்தே தேற்றும் பாட்டி.
தப்போ, தவறோ செய்தால்—என்னைத்
தடுத்துத் திருத்தும் பாட்டி.

சாய்ந்து மடியில் படுத்தால்—என்னைத்
தட்டிக் கொடுக்கும் பாட்டி.
நோய்கள் ஏதும் வந்தால்—அதை
நொடியில் போக்கும் பாட்டி.

யாருங் காட்டா அன்பை—என்றும்
எனக்குக் காட்டும் பாட்டி.
நூறு, நூறு ஆண்டு—இன்னும்
நூறு ஆண்டு வாழ்க!

பள்ளிக் கூடப் பந்தயம்
பார்க்க லாமே, தம்பிநீ
துள்ளி ஓடி வந்திடு.
தூரம் அதிகம் இல்லையே!

ரொட்டித் துண்டைக் கயிற்றிலே,
கட்டி விட்டுக் கையையும்
கட்டிப் போட்டால் வேகமாய்
எட்டி, எட்டித் தின்னுவோம்.

‘ஒன்று, இரண்டு, மூன்று,
ஓடு வீர்கள்,விரைவிலே’
என்று ஒருவர் சொல்லுவார்.
எடுத்து விடுவோம், ஓட்டமே.

வட்ட மான கோட்டினுள்
வளைந்து நாங்கள் ஓடுவோம்.
கட்டப் பட்ட கண்ணுடன்
கண்டு பிடிப்பான், ஒருவனே!

அங்கு கயிற்றை இழுத்திடல்
அகலம், உயரம் தாவுதல்
இங்கு கூறி முடியுமோ?
எழுந்து வாநீ, சீக்கிரம்!