மலரும் உள்ளம்-1/என் பெயர்
பச்சைக் குழந்தை என்றனுக்குப்
பக்குவ மாகப் பெயர்வைக்க
இச்சை கொண்டனர் பெரியோர்கள்.
என்னைச் சுற்றிக் கூடினரே.
அம்மா உடனே அவளுடைய
அப்பா பெயரைக் குறிப்பிட்டு,
“சம்பந் தம்என அழைத்தாலே
சரிப்படும்” என்று கூறினளே.
“இல்லை, இல்லை, என்அப்பா
பெயரைத் தான்நாம் இடவேண்டும்.
செல்லப் பன்என வைப்பதுதான்
சிறந்தது” என்றார், என்அப்பா.
“இரண்டும் வேண்டாம். பிள்ளைக்கு
ஏற்றது சாமிப் பெயரேதான்.
பரமசிவன்தான் நல்ல” தெனப்
பாட்டி உரக்கக் கூறினளே.
மூவரும் சண்டை போட்டார்கள்.
முடிவே இல்லை. ஆதலினால்
மூவரும் சேர்ந்து என்றனுக்கு
முப்பெயர் இட்டு அழைத்தார்கள்.
அம்மா வுக்கு, சம்பந்தம்.
அப்பா வுக்குச் செல்லப்பன்.
பாட்டிக் கோநான் பரமசிவன்.
பள்ளியில் இனிமேல் எப்பெயரோ?