மலரும் உள்ளம்-1/சீனவெடி
“சீன வெடிகள் எங்குமே
தேடிப் பார்த்தும் இல்லையே.
காண வில்லை, கண்ணிலே,
கடைகள் தோறும் சென்றுமே.
கம்பி வாணப் பெட்டிதான்
கடைசி யாக வாங்கினேன்.
வம்பு இன்றி இதனைநீ
மகிழ்ச்சி யோடு கொளுத்துவாய்”
என்று தத்தை தந்தனர்.
இதனைக் கேட்ட சீனுவோ,
‘ஒன்றும் வேண்டாம்’ என்றனன்;
உதறி அதனைத் தள்ளினன்,
‘பட்ச ணங்கள் தின்னவோ,
பட்டு ஆடை உடுத்தவோ
இஷ்ட மில்லை’ என்றனன்.
யார்உ ரைத்தும் கேட்டிலன்.
‘டப்டப்’ சத்தம் பக்கத்து
ராமு வீட்டில் கேட்கவே,
அப்பா அருகில் வந்தனன்.
“அடுத்த வீட்டில் பாரப்பா.
வேட்டு வாங்கி ராமுதான்
விடுகின் றானே, சத்தமும்
கேட்கு தப்பா. எனக்குநீ
கிடையா தென்றே கூறினாய்”
என்று கூறித் தந்தையை
இழுத்து வந்தான். இருவரும்,
சென்று ராமு வீட்டிலே
கண்ட தென்ன தெரியுமோ?
வெடிக்கும் சீன வெடியைப்போல்,
வீம்பு செய்த ராமுவை
அடித்துக் கொண்டு தந்தையார்
அங்கி ருந்தார்; வெடியில்லை!