மலரும் உள்ளம்-1/காந்தித் தாத்தா

காந்தித் தாத்தா நம்தாத்தா.
கருணை மிக்க பெருந்தாத்தா.
சாந்த மூர்த்தி, என்றென்றும்
சத்திய மூர்த்தி நம்தாத்தா.

ராட்டை சுற்றி நூற்பதிலே
நாளும் சிலமணி போக்கிடுவார்.
நாட்டு மக்கள் நலமெண்ணி
நமது தாத்தா சிறைவாழ்ந்தார்.

உச்சிக் குடுமித் தலையுடனே,
உடுப்பது நாலு முழந்தானே.
பச்சைக் குழந்தை போலெண்ணம்
படைத்தவர் காந்திப் பெருந்தாத்தா.

வளரும் குழந்தைக் கிருபற்கள்
வாயின் நடுவே கண்டிடலாம்.
வளர்ந்த நமது தாத்தாவின்
வாயில் அவ்விடம் பல்லில்லை!

ஆட்டுப் பாலுடன் கடலையினை
அவரும் உண்டு அன்பாக
நாட்டின் விடுதலை எண்ணமொடு
நல்ல தொண்டு பலசெய்தார்.

மாலைப் பொழுது நடப்பாராம்.
மகிழ்ந்து திரும்பி வருவாராம்.
வேலை இன்றிச் சிறுபொழுதும்
வீணாய்ப் போக்க மாட்டாராம்.

கண்ணிற் சிறந்த விடுதலையைக்
கருதி வாழ்ந்தார் நம்தாத்தா.
மண்ணில் யாவர் வாழ்விற்கும்
வழிகாட் டிடுவார் நம்தாத்தா.

சத்தியம் பேசுதல் அவர்கொள்கை.
தருமம் காத்தல் அவர்கொள்கை.
இத்தல மக்கள் யாவர்க்கும்
இன்ப சுதந்திரம் அவர்கொள்கை.