மலரும் உள்ளம்-1/நமது கொடி

வண்ணங்கள் காட்டுது நமது கொடி.
வானத்தை முட்டுது, நமது கொடி
எண்ணங்கள் ஊட்டுது நமது கொடி.
என்னென்ன காட்டுது நமது கொடி?

தீரத்தைக் காட்டுது, சிகப்பு நிறம்.
தியாகத்தைக் காட்டுது. சிகப்பு நிறம்.
வீரத்தைக் காட்டுது, சிகப்பு நிறம்.
வெற்றியைக் காட்டுது, சிகப்பு நிறம்.

ஒளியினைக் காட்டுது, வெள்ளை நிறம்.
உண்மையைக் காட்டுது, வெள்ளை நிறம்.
தெளிவினைக் காட்டுது, வெள்ளை நிறம்.
சிறப்பையும் காட்டுது, வெள்ளை நிறம்.

வளமையைக் காட்டுது, பச்சை நிறம்.
வறுமையை ஓட்டுது, பச்சை நிறம்.
குளுமையைக் காட்டுது, பச்சை நிறம்.
குறைவெலாம் ஓட்டுது, பச்சை நிறம்.

சத்தியம் காட்டிடும், நடுவினிலே,
சர்க்காவின் முக்கிய சக்கரமாம்.
நித்தியம் சுற்றிடும் நில்லாமலே,
நீதியை நாட்டிடும் சக்கரமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=மலரும்_உள்ளம்-1/நமது_கொடி&oldid=1737263" இலிருந்து மீள்விக்கப்பட்டது