மலரும் உள்ளம்-1/பூனைக் கல்யாணம்

பூனைக்கும் பூனைக்கும் கல்யாணம்.
பூலோக மெல்லாம் கொண்டாட்டம்.

ஆனை மீது ஊர்வலமாம்.
அற்புத மான சாப்பாடாம்.

ஒட்டைச் சிவிங்கி நாட்டியமாம்.
‘உர்,உர்’ குரங்கு பின்பாட்டாம்.

தடபுட லான ஏற்பாடாம்.
தாலி கட்டும் வேளையிலே,

மாப்பிள்ளைப் பூனையைக் காணோமாம் !
வந்தவ ரெல்லாம் தேடினராம்.

“பெண்ணைப் பார்த்ததும் மாப்பிள்ளை
பிடிக்கா மல்தான் போய்விட்டார்!

'எங்கே ஓடிப் போனாரோ?”
என்றே பலரும் பேசினராம்.


பெண்ணின் தாயார் இதுகேட்டுப்
பெரிதும் வருத்தம் கொண்டாளாம்.

‘ஐயோ, தலைவிதி’ என்றெண்ணி
அங்கும் இங்கும் நடந்தாளாம்.


வந்தவர் சாப்பிடப் பானையிலே
வாங்கி வைத்த பாலையெலாம்

சந்தடி யின்றி மாப்பிள்ளை
சமையல் கட்டில் தீர்த்தாராம்!

திருடித் திருடிப் பாலையெலாம்
தீர்த்துக் கட்டும் மாப்பிள்ளையைப்

பார்த்து விட்டாள், பெண்தாயார்;
பலத்த சத்தம் போட்டாளாம்.

உடனே அங்கே எல்லோரும்
ஒன்றாய்க் கூடி வந்தனராம்.

மாப்பிள்ளைப் பூனை வழியின்றி
மத்தியில் நின்று விழித்தாராம்.


“திருட்டுப் பிள்ளைக்கு என்பெண்ணைத்
திருமணம் செய்ய முடியாது!


வேண்டாம் இந்தச் சம்பந்தம்.
வெட்கக் கேடு! போய்வாரோம்”

என்றே பெண்ணின் தாயாரும்
ஏளன மாகக் கூறியபின்

அருமைப் பெண்ணைத் தன்னுடனே
அழைத்துக் கொண்டு போனாளாம்.


‘வகைவகை யான சாப்பாடு
வயிறு முட்டத் தின்றிடலாம்’

என்றே எண்ணி வந்தவரும்
ஏமாற் றத்துடன் திரும்பினராம்!