மலரும் உள்ளம்-1/தாலாட்டு
ஆராரோ, ஆராரோ,
ஆரிவரோ ஆராரோ.
சூடா மணியே!
துலக்கமாய் நின்றொளிரும்
வாடா மலரே, என்
மரகதமே கண்வளராய்.
கற்கண்டு சீனி
கனிவகைகள் எல்லாம்உன்
சொற்களால் நானடையும்
சுகத்தினுக்கே ஈடாமோ?
கால்களை நீட்டிநன்கு
கையைத் தலைக்குவைத்துப்
பாற்கடலிற் பள்ளிகொண்ட
பத்மநாபன் நீதானோ?
தர்மம் குறைகையிலே
தாரணியில் நானுதித்தல்
கர்மம் எனஉரைத்த
கண்ணபிரான் நீதானோ?
காசினியில் கொல்லாமை
கருணைமிக்க செய்கையென்ற
ஆசியத்துச் சோதி
அருமைப் புத்தர் நீதானோ?
சத்தியத்தைக் காப்பாற்றும்
தருமவான் காந்தியேபோல்
உத்தமனே நியுதித்தாய்.
உலகில் உயர்வடைவாய்.
யான்பெற்ற நற்குமரா,
இனிமை மழலையினால்
தேனான செந்தமிழில்
தினைமாவும் சேர்த்தனையோ?
அப்பா பெயரோங்க
அம்மா உளங்குளிர
இப்பாரில் நீநடந்து
இன்பமுடன் வாழ்வாயே.