மழலை அமுதம்/சிட்டுக்குருவி


சிட்டுக்குருவி


      குழந்தை:"சிட்டுக் குருவி சிட்டுக் குருவி
                  சேதி சொல்லுவாய்
              எட்டுத் திசையிலும் என்னென்ன சேதி              
                  எனக்குச்சொல்லுவாய்"
             
       குருவி: "பட்டுக் குழந்தை பட்டுக் குழந்தை
                 பாட்டுப் பாடுவோம்
               கெட்ட கவலைகள் கிட்ட வராது
                  பாட்டுப் பாடுவோம்"  
 
     குழந்தை:"பாட்டு வேண்டாம் கதையைச் சொல்லு
                 கேட்டுப் பார்க்கலாம்"
       குருவி :"அங்கொரு வீட்டில் கூடு கட்டினேன்
                 அதனைச் சொல்லுவேன்
               தங்கமாய்ப் போற்றி என்னைக் காத்தனர் 
                 தாயன்புடன் வளர்த்தார் 
               கூடு கட்டியே முட்டையும் வைத்தேன்
                 குஞ்சுகள் தோன்றின 
               தேடி உணவை ஒடிக் கொணர்ந்தேன்
திக்கெட்டும் போய்ப் பறந்தேன்"

        இறக்கை முளைத்து வளர வளர
            இன்ப முற்றேனே
        பறப்பதற்கே குஞ்சுகள் ரண்டும்
            பர பரத்தன
        இன்னும் சிலநாள் பொறுங்கள் பொறுங்கள்
            இன்பமாய்ப் பறக்கலாம்
        என்ன சொல்லியும் கேட்கவில்லே
             என்ன நான் செய்வேனே!
        இரையைத் தேடிப் போயிருக்கையில்
             இருப்புக் கொள்ளவில்லை
        இரண்டு குஞ்சும் எட்டியே பார்த்து
            பறக்க முயன்றன
        என்ன செய்வேன் என்ன சொல்வேன்
            சொன்னதைக் கேளாமல்
        கூட்டுக் கடியில் தொப்பென்று வீழ்ந்து
            துடியாய்த் துடித்தன
        வீட்டுப் பூனை காத்திருந்தது
          வீனாய் ஆசையெலாம்
        வெறுங் கனவாய் போயிற்றென்றே
          கண்ணிர் விட்டதுவே."