மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு/23. எண்ணத்தில் தூய்மை - சொற்களில் உண்மை
நபிப்பட்டம் வரப்பெற்ற பத்தாவது ஆண்டு நடைபெற்ற ஹஜ்ஜுக்கு அரபு நாட்டின் பல பகுதிகளிலிருந்து திரளான மக்கள் மக்காவுக்கு வருகை புரிந்தார்கள்.
பெருமானார் அவர்கள், ஒவ்வொரு கூட்டத்தாரிடமும் சென்று இஸ்லாத்தைப்பற்றி அறிவுறுத்தினார்கள்.
ஒரு பகுதியில் பன்னிரண்டுபேர் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் யத்ரிப் (மதீனா) நகரிலுள்ள கஸ்ரஜ் என்ற கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் அறுவர். அவர்களிடம் சென்று இஸ்லாத்தைப்பற்றி போதித்தார்கள். அவர்களும் மிகவும் கவனமாகக் கேட்டார்கள். பெருமானார் அவர்களின் பரிசுத்தமான எண்ணமும், சொற்களின் உண்மையும் அவர்கள் உள்ளத்தில் பசுமையாகப் பதிந்து அவர்களிடையே மனமாறுதலை உண்டாக்கியது. அவர்கள் அறுவரும் அங்கேயே இஸ்லாத்தைத் தழுவினார்கள்.
அவர்கள் மக்காவிலிருந்து யத்ரிபுக்குத் திரும்பியதும், "மக்காவில் ஒரு பெரிய நபி தோன்றியுள்ளார். பல நூறு ஆண்டுகளாக நிலவி வந்த பகைமையை, வெகுவிரைவில் அகற்றிவிடக்கூடியவர்; அவரிடம் உண்மை ஒளி திகழ்கிறது. அவர் இறைவனுடைய மார்க்கத்தை உலகில் பரப்புவார்” என்பதாகப் பிரபலப்படுத்தினார்கள்.
அடுத்த ஆண்டு, ஹஜ் சிறப்பு நாளில், முன்பு வந்தவர்களில் சிலரும் ஒளஸ் கோத்திரத்திலிருந்த சிலரும் ஆக மொத்தம் பன்னிருவர் வந்தனர். அவர்களில் புதிதாக வந்தவர்களும் உடனேயே இஸ்லாத்தில் சேர்ந்தனர்.
அவர்கள் அனைவரும் பெருமானார் அவர்களிடம் சில வாக்குறுதிகள் அளித்தனர். அவை பின்வருமாறு:
- 1. நாங்கள், இறைவனுடன் வேறு யாரையும் இணை வைப்பதில்லை.
- 2. விபசாரம், களவு செய்வதில்லை.
- 3. மக்களைக் கொல்வதில்லை.
- 4. நபி அவர்களை முழுமையாகப் பின்பற்றுவோம்.
- 5. சுக துக்கங்களில் அவர்களுடன் உண்மையாக இருப்போம்.
இவ்வுறுதி மொழி நிறைவேறியதும், இஸ்லாத்தின் கொள்கைகளை தங்கள் நாட்டில் பரப்புவதற்காகப் பெருமானார் அவர்களின் சீடர்களில் ஒருவரை தங்களோடு அனுப்பி வைக்குமாறும் வேண்டிக் கொண்டனர்.
அவ்வாறே முஸ்அப் இப்னு உஹைமர் என்பவரை அவர்களுடன் பெருமானார் அவர்கள் அனுப்பிவைத்தார்கள்.
முஸ்அப் யத்ரிபுக்குச் சென்று அஸ்அது என்பவரின் இல்லத்தில் தங்கி, தினந்தோறும் ஒவ்வொருவர் வீட்டிற்கும் சென்று, 'திருக்குர்ஆனை' ஓதிக்காட்டி, இஸ்லாத்துக்கு அழைப்பார்கள். தினமும் ஓரிருவர் என பலர் இஸ்லாத்தில் சேர்ந்தனர். சில நாட்களிலேயே யத்ரிபிலிருந்து குபா வரையிலும் இஸ்லாம் பரவிவிட்டது.