மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு/24. மக்காவை விட்டுப் பிரிதல்
பகைவர்கள் உருவிய வாள்களோடு பெருமானார் அவர்களை எதிர்பார்த்துச் சூழ்ந்திருக்கின்றனர்.
அத்தகைய வேளையிலுங் கூட, பெருமானார் அவர்கள் உயிரைக் காட்டிலும் நம்பிக்கையைக் காப்பாற்றுவதையே பெரிதாகக் கருதினார்கள்.
அலி அவர்களை அழைத்து வரச்செய்து, "மக்காவை விட்டுப் புறப்பட்டுச் செல்லும்படி எனக்கு உத்தரவு கிடைத்திருக்கிறது. என்னுடைய கட்டிலில் என்னுடைய போர்வையைப் போர்த்துக்கொண்டு நீர் படுத்துக்கொள்ளும். காலையில் எழுந்து என்னிடம் நம்பிக்கையாகக் கொடுக்கப்பட்டிருந்த பொருள்களை, அவற்றிற்கு உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, நீர் மதீனாவுக்கு வந்து சேரும்" என்று கூறினார்கள்.
அதன்பின் பெருமானார் அவர்கள் வெளியே வந்து, கஃபாவைப் பார்த்து, "மக்காவே! உலகிலுள்ள அனைத்திலும் நீ எனக்கு மேன்மையாக இருக்கிறாய். ஆனால் உன்னுடைய மக்களோ, என்னை இங்கே இருக்கவிடவில்லை" என்று கூறிவிட்டு, அபூபக்கர் அவர்கள் வீட்டுக்குச் சென்று, அங்கிருந்து இருவரும் புறப்பட்டுச் சென்று மூன்று மைல் தொலைவிலுள்ள தெளர் என்னும் குகையில் தங்கினார்கள்.