மாவீரர் மருதுபாண்டியர்/இறுதிப்போருக்கு

10

இறுதிப் போருக்கு

சிவகங்கைச் சீமையின் சீர்மிகு ஊர்களில் சிறந்தது காளையார்கோவில். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு பல பேரரசர்களை அமைத்து ஆட்சி செய்து வந்தான் வேங்கை மார்பன் என்ற வீரன். பாண்டியன் மீது பெரும்படை நடத்தி வந்த சோழன் பெருநற்கிழியை நெடுஞ்செழியன் வெற்றி வாகை சூடிய காரணத்தினால், “தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்” என அவன் போற்றப்பட்டான்.[1] இவனைப் போன்று அக நானூறு தொகுப்பித்த பாண்டியன் உக்கிரப்பெருவழுதி கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதி என போற்றப்பட்டான்.[2] இந்த இரண்டு செய்திகளில் இருந்து சங்க காலத்தில் இந்த ஊருக்கு “தலையாலங்கானம்” “கானப்பேர்” என்ற பெயர்கள் இருந்தமை தெரியவருகின்றன. ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளில் இங்குள்ள இறைவனை வழிபட்ட திருஞான சம்பந்தரும், சுந்தரமூர்த்தி நாயனாரும், தங்களது தேவாரங்களில் இந்த ஊரை கானப்பேர் என்றே குறித்துள்ளனர். பாண்டி நாட்டுப் பழம்பதி பதினான்கில் ஒன்றாக வரிசையிட்டுள்ள பழம் பாடல் ஒன்று “கானப்பேர்” என்பதனை “கானை” எனப்பாடுகிறது.[3]

மேலும் பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பாண்டிய மன்னனது வாரிசுப்போரில் தலையிட்டு பல போர்களில் குலசேகர பாண்டியனைத் தோல்வியுறச் செய்த இலங்கை நாட்டு ஜகத்விஜயதண்டநாயகனது ஆக்கிரமிப்பில் இந்த ஊர் சில காலம் இருந்ததை வரலாறு குறித்துள்ளது.[4] அடுத்து பதினான்காம் நூற்றாண்டில் எழுந்த மற்றொரு வாரிசுப் போரில் சுந்தரபாண்டியனுக்கு உதவ வந்த தில்லி தளபதி மாலிக் காபூரின் கொள்ளைக்குப் பயந்து, திருவரங்கத்து ஸ்ரீரங்கநாதரது திருமேனியுடன் புறப்பட்டு வந்த பிள்ளை லோகாச்சார்யருக்கு அங்கு புகலிடம் தந்ததாக மற்றுமொரு வரலாற்றுச் செய்தி உள்ளது.[5] இந்த நிகழ்ச்சிக்கு முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர், தென்னகம் வந்த அரபு நாட்டுப்பயணி திமிஸ்கி, இந்த ஊரை “காய்ன்” என்றும். தென்னகத்தின் சிறந்த ஊர்களில் ஒன்று என்றும் தமது பயணக் குறிப்புகளில் வரைந்துள்ளார்.[6]

கி. பி. 1451 ல், மதுரை அரசு கட்டிலுக்குரிய பாண்டிய இளவல் யார் என்பதை முடிவு செய்ய முயன்ற மதுரை ஆளுநர் களான விஜயநகர பேரரசின் பிரதிநிதிகள், காளையார்கோவிலில் இருந்த அரண்மனை நடனமாது அபிராமி என்பவரது மகன் பற்றியும் பரிசீலித்ததாகத் தெரிய வருகின்றது.[7] பின்னர் பதினாறு பதினேழாவது நூற்றாண்டில், இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களது சிறந்த அரண்களில் ஒன்றாகத் திகழ்ந்ததுடன், இங்குள்ள திருக்கோவிலும் அந்த மன்னர்களது திருப்பணியினால் வளர்ச்சி பெற்றது.[8] கி. பி. 1730 ல் இராமநாதபுரம் சீமை பிரிக்கப்பட்டபொழுது இந்த ஊர் சிவகங்கைச் சீமைக்குள் வந்தது.

இத்தகைய வரலாற்றுப் பின்னணியுடன் விளங்கிய இந்த ஊருக்கு, இயற்கையான காடு அரணாக பல நூற்றாண்டுக் காலமாக இருந்து வந்தது. ஆதலால் இந்த ஊரை சிவகங்கைச் சீமையின் உயிர்நிலை என்று கொள்ளுதல் பொருத்தமானது. ஆதலால் இந்த ஊரின் கோட்டையைப் பரங்கியரது ஆக்கிரமிப்பில் இருந்து காத்து நிற்பதைப் போராளிகள் தங்களது தலையாய கடமை என்றும் அதனைக் கைப்பற்றி சிவகங்கைச் சேர்வைக்காரர்களது செல்வாக்கையும் மூலபலத்தை அழிப்பதை அவர்களது இலட்சியமாகப் பரங்கிகளும் கருதினர். இந்தச் சூழ்நிலையில் மிகப் பெரிய போருக்கு காளையார்கோவில் கோட்டையின் களம் தயாராகி வந்தது.

இந்தப் போரின் முதல் தாக்குதல் காளையர்கோவில் கோட்டையின் மேற்குத்திக்கில் இருந்து துவக்கப்படலாம் என மருது சேர்வைக்காரர்கள் நம்பினர். எதிர்பார்த்தனர்.[9] அதற்குரிய ஆயத்தங்களை வெடிமருந்துப்பொதிகள், தானியங்கள் சேமிப்பு மற்றும் அவர்களது குடும்பங்கள் ஆகியவைகளை காளையார்கோவிலுக்குக் கிழக்கிலும் வடகிழக்கிலும் கொண்டு போய் ஆங்காங்கு பத்திரப்படுத்தி வைத்தனர். கிளர்ச்சிக்காரர் அணிகளும் ஆங்காங்கு நிலைகொண்டு இருந்தன. இந்தப்பகுதி அவர்களுக்குப் பத்திரமான நம்பிக்கையான இடமாக அமைந்து இருந்தது. வெளிநாட்டாரது உதவிகளைக் கடல்வழியாகப் பெறுவதற்கும், அந்தப் போரில் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் இராமநாதபுரம் சீமையிலிருந்து உதவிகள் பெறுவதற்கும் ஏற்றதாக இருந்தது. ஆனால் எதிரி தரப்பு பலம், வசதிகள், பற்றி புதுக்கோட்டைத் தொண்டமானுடன் இரகசிய ஆலோசனையில் ஈடுபட்ட கும்பெனியாருக்கு போராளிகளின் இந்தக் கடல்வழித் தொடர்புகளைத் துண்டித்து விடுவது அவர்களது போருக்கு மிகவும் இன்றியமையாத முன்ஏற்பாடு என்பதையும் இந்த நிலையில் அவர்களை மேற்குத் திக்கில் இருந்து நெருக்குதல் செய்தால் அவர்களது குடும்பத்தினர் ஆபத்திற்கு உள்ளாக்கப்படுவர் என்றும், போரை பதினைந்து நாட்களில் முடித்துவிடலாம் என்றும் தொண்டமான் கர்னல் அக்னியூவிற்கு யோசனை வழங்கினார்.[10] இந்த இருவித இடுக்கித் தாக்குதல் அவர்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தும் அல்லது அவர்கள் பயந்து போர் செய்வதை விடுத்து தப்பி ஓடச் செய்யலாம் என்பது அவரது கணிப்பு.

இந்த யோசனையை ஏற்றுக் கொண்ட பரங்கிகள், காளையார் கோவில் கோட்டையைத் தாக்க மூன்று திசைகளில் இருந்து தங்களது அணிகளை ஈடுபடுத்தினர். கிழக்கில் கர்னல் பிளாக்பர்ன் தலைமையிலும், மேற்கில் இருந்து அக்னியூ, இன்னிங்ஸ் கூட்டுத் தலைமையிலும் தெற்கில் இருந்து மக்காலே தலைமையிலும் அணிகள் முன்னேறி வந்தனர். கிளர்ச்சிக்காரர்களும் தற்காப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் இராமநாதபுரம் சீமையில் கிளர்ச்சியில் ஈடுபட்ட நாட்டுப்பற்று மிக்க நல்லவர்களை அவர்கள் காட்டு மிராண்டித்தனமாக அடக்கியொடுக்கினர். அன்றைய கால கட்டத்தில் எந்த நாட்டிலும், எந்த ஆக்கிரமிப்பாளரும் மேற்கொள்ளாத மிக மோசமான நடவடிக்கைகளை பரங்கிகள் மேற்கொண்டனர். தங்களுக்கு எதிரான நடவடிக்கையில் முனைந்தவர்களை இரு வழிகளில் சமாளித்தனர். முதலாவது சம்பந்தப் பட்ட கிளர்ச்சிக்காரரது உள்ளூர் உறவினர்களை சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்துவது மற்றது கிளர்ச்சிக்காரர்களைச் சித்திரவதை செய்வது, கசையடிகள், தூக்குத்தண்டனை, அல்லது கடலுக்கு அப்பால் கிளர்ச்சிக்காரரை நாடு கடத்துதல், அவர்களது சொத்துக்களைப் பறித்து கும்பெனி உடமையாக்கிக் கொள்ளுதல்.

இந்தக் கோரமான கொடுமைகளைக் கண்டு பயந்து, கும்பெனியாருக்கு விசுவாசிகளாக மாறிய கெடுபிடிகளை ஊக்கு விக்கும் வகையில் அவர்களுக்கு “கவுல்” காணிகள் வழங்கி ஆதரித்து அவர்களது கோழைத்தனத்தை மறைக்க பாதுகாப்புப் பட்டயங்கள் வழங்கினர். இவைகளை யெல்லாம் அறிந்த சிவகங்கைச்சீமை மக்கள் இயல்பான மனிதாபிமான உணர்வுகளில் மனம் நொந்தனர். அவர்களது இந்தக் குழப்பமான மன நிலையை கும்பெனியாரது இன்னொரு நடவடிக்கையும் பாதித்தது.

சிவகங்கைச்சீமை ஆட்சியில் ராணிவேலுநாச்சியார் இருந்த பொழுதும், அவரது மறைவிற்குப்பின்னரும், சிவகங்கை சீமை மக்களிடம் மிகுந்த செல்வாக்கு பெற்ற பிரதானியும், தளகர்த்தராகவும் இருந்தவர்கள் மருது சகோதரர்கள். குறிப்பாகச் சொன்னால், சிவகங்கை அரசியலில், ஏறத்தாழ கி.பி. 1781 முதல் இருபது வரு டங்களாக உண்மையான ஆட்சியாளராக இருந்தவர்கள் அவர்கள். ராணி வேலுநாச்சியாரிடம் பெரிய மருது சேர்வைக்காரர் கொண்டிருந்த நெருங்கிய உறவு காரணமாக அதிகாரத்தைத் தாங்களாகவே அரசியாரது ஒப்புதல் இல்லாமல், அந்தச் சீமையின் அரசுப் பரம்பரையின் வழித்தோன்றல் போல “ராஜமான்யராக”[11] அந்தச் சீமை அரசை இயக்கி வந்தவர்கள் அந்தப் பிரதானிகள். அவர்கள் தங்களுக்கு இணக்கமாக, விசுவாசிகளாக இருந்தவரையில், கும்பெனியாரது கண்களுக்கு இந்தப்பிரதானிகள் சிவகங்கை சீமையின் சரியான அரசியல் வாரிசாகத் தோன்றினர். ராணி வேலுநாச்சியாருக்குப் பிறகு வேங்கன் பெரிய உடையாத் தேவர். என்பவர் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக சிவகங்கைச் சீமையின் அரசபரம் பரையின் சின்னமாக – சிவகங்கை மன்னராக இருந்ததைக்கூட அவர்கள் மறந்து இருந்தனர். தங்களது அரசியல் கொள்கைக்கு ஆதரவாக, ஏன் முழுவதும் இணக்கமாக, இருந்த சிவகங்கைச் சீமை பிரதானிகளான மருது சேர்வைக்காரர்களிடம் மட்டும் அரசியல் தொடர்பு கொண்டு இருந்தனர். “மதுரை நாயக்கர்” “தஞ்சை மராத்தியர்” “மைசூர் சுல்தான்” “சேதுபதி மன்னர்” என அந்தந்த அரசர்களை அவர்தம் இனவழியாக குறிப்பிடுவது போல கும்பெனியார், “சிவகங்கை அரசர்” என அந்த ஆட்சியாளரை அழைப்பதை விடுத்தும், அவர்தம் ஆவணங்கள், கடிதங் களில் மருது சகோதரர்களை “சிவகங்கைச்சீமை சேர்வைக்காரர்” என அன்புடனும் மரியாதையுடனும் குறிப்பிட்டு வந்தனர்.[12]

இப்பொழுது, அதே பிரதானிகள், கும்பெனியாரது ஏகாதி பத்திய கொள்கைக்கு எதிராக, மக்கள் விரோதச் செயல்களுக்கு முரணாக, ஏனைய தென்னிந்திய கிளர்ச்சிக்காரர்களுடன் கூட்டு சேர்ந்தும், அத்தகையவர்களுக்குத் தங்கள் சீமையில் புகலிடம் அளித்தும், அவர்களைத் தங்களுடன் இணைத்தும், ஏகாதிபத்திய வெறியை முற்றாக அழிக்க ஆயுத பலத்துடன் எதிர்க்க முனைந்த பொழுது, கும்பெனியாருக்கு “ஞானோதயம்” ஏற்பட்டது. அவர்களை எதிர்க்க பகையாண் அமைக்கும் போர் மறவர்களான பிரதானிகள் சிவகங்கைச் சீமையின் அரசியலுக்கு சம்பந்த மற்றவர்கள் என்ற உண்மை ஏற்கனவே தஞ்சாவூர் மராத்திய அரசைத் தங்களது ஆதிக்கத்திற்குள் கொண்டுவர ஆசைப்பட்ட பொழுதும், கும்பெனியாருக்கு இத்தகைய ஞானோதயம் தான் ஏற்பட்டது. அந்தச்சீமையின் அரசராக அமீர்சிங்கை அந்தச்சீமை, அரசியல் வாரிசு அல்ல என முடிவு செய்து, இரண்டாவது சரபோசியை அக்டோபர் 1798 ல் மன்னராக்கினர்.[13] இதில், உள்ள வேடிக்கையான அம்சம் என்னவென்றால், அதே அமீர் சிங்தான் உண்மையான வாரிசு என கும்பெனியாரது தலைமை, எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் முடிவு செய்தது.[14]

அந்தப் பாடத்தைத்தான் அவர்கள் இப்பொழுது சிவகங்கைச் சீமையிலும் படித்தனர். இந்தச்சீமை மக்களுக்கு ஏற்படாத கவலை வேற்று நாட்டாரான வெள்ளைப் பரங்கிகளுக்கு ஏற்பட்டது. இங்கிலாந்து நாட்டில் இருந்து வியாபாரத்திற்காக இங்கு வந்து, மிகுதியாகக் கிடைக்கும் கைத்தறித்துணி, மிளகு, ஏலக்காய், கிராம்பு ஆகியவைகளை வாங்கிச் சென்று வியாபாரம் செய்ய வந்த அந்த கூட்டத்தாருக்கு ஏற்பட்டது. சிவகங்கைச் சீமை மக்களது அல்ல பரங்கிகளது - கவலையைப் போக்க சிவகங்கை அரசுக் கட்டிலுக்கு பரம்பரைத் தகுதி வாய்ந்த ஒருவரைத் தேடிக் கொண்டு இருந்தனர். தங்களது ஆதிக்கப் பேராசைக்கு அடிபணிந்து இணங்கிச் செல்லும் தலையாட்டி பொம்மையைத் தேடினர். கண்டுபிடித்தும் விட்டனர். அவர், சிவகங்கைச்சீமையைத் தோற்றுவித்த நாலுகோட்டை பெரிய உடையாத் தேவரது மகனான சசிவர்ணப் பெரிய உடையாத் தேவருக்கு ஒருவகையில் பேரன் முறையிலான படைமாத்துர் ஒய்யாத்தேவர் என்ற கெளரி வல்லபத்தேவர் என்பவராகும்.[15] சிவகங்கை அரசுக்கு படை மாத்துார் ஒய்யாத்தேவரைத் தவிர, அந்த அரசபரம்பரையினருக்கு நெருங்கிய உறவினர்களாக கட்டனூர் திருக்கத்தேவர், அரளிக்கோட்டை நல்லனத்தேவர், சேவற்கோட்டை பெரிய உடையாத்தேவர், செம்பனுர் ராசத்தேவர். ஒளிக்குடி முத்துக் கருப்பத்தேவர், சக்கந்தி முத்துக்குமாரத்தேவர் ஆகியோர்களும் இருந்தனர்.[16] அவர்களின் வழியினரைப்பற்றி எல்லாம் கும்பெனியார் விசாரித்து முடிவு எடுக்கவில்லை. ஆனால் அவர்களது பேராசைக்குப் பணிந்து நடந்து கொள்ளக் கூடியவர், படை மாத்தூர் கெளரிவல்லப ஒய்யாத்தேவர். ஒருவர்தான் என்பது அவர்கள் கண்ட முடிவு.

ஆதலால், அவரை சிவகங்கைச் சீமையின் சரியான, உண்மையான வாரிக என்பதை சீமை மக்களிடத்தில் பகிரங்கப்படுத்த முயன்றனர்.[17] சாதாரண மக்களின் சிந்தனையில் குழப்பத்தை ஏற்படுத்தி, கும்பெனியாரை அழிக்க கச்சையை வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் சிவகங்கை சேர்வைக்காரர்களது அணியில் பிளவையும், பலவீனத்தையும் உண்டாக்க வேண்டும் என்பது அவர்கள் திட்டம். சிவகங்கைச் சீமையின் “ஜமீந்தார்” கெளரி வல்லப ஒய்யாத்தேவர்தான் என்ற விளம்பர பட்டோலையைப் படிப்பதற்காக அலங்கரிக்கப்பட்ட யானை ஒன்றில் கன்னையன் என்ற கைக்கூலியை அமர்த்தி முதலில் சோழபுரம் கிராமத்தில் படித்து விளம்பரம் செய்யுமாறு ஏற்பாடு செய்யப்பட்டது. அவனும் அந்த பட்டோலையை மிகவும் பயபக்தியுடன் தெருமுனைகளில் நின்று உரக்கப்படித்தான். அந்த விளம்பரத்தைப் படிப்பதற்கு முன்னும் பின்னும் முரசு முழக்கப்பட்டது. தொடர்ந்து சோழ புரத்தை அடுத்துள்ள நாலுகோட்டை, ஒக்கூர், பாகனேரி, பட்ட மங்கலம் ஆகிய ஊர்களிலும் அந்த விளம்பரம் படிக்கப்பட்டது.[18] இந்த ஊர்கள் ஒய்யாத்தேவருக்கு இணக்கமான அல்லது கும்பெனிப்படையணிகள் நிலைகொண்டுள்ள பகுதிகளை ஒட்டி அமைந்து இருந்தவைகளாகும்.

சிவகங்கையில் இருந்து புதுக்கோட்டை செல்லும் பெருவழியில் ஆறாவது கல்லில் அமைந்திருக்கும் சிற்றூர் சோழபுரமாகும். இந்தப் பெயரில் தெற்கே பாண்டியநாட்டில் மதுரை - நெல்லைப் பெருவழியில் ராஜபாளையத்தையடுத்தும், சோழநாட்டில் தஞ்சாவூரையடுத்தும், தொண்டை நாட்டில் சென்னையடுத்தும் இதே பெயரில் ஊர்கள் அமைந்து உள்ளன. இவை அனைத்தும் பத்து பதினோராவது நூற்றாண்டில் சோழர்கள் தென்னகத்தை கையகப்படுத்திக் கொண்டதைக் குறிக்கும் முகமாக பெயரிடப்பட்ட ஊர்களாகும். சோழர்களை வெற்றி கொண்டு அழித்த பாண்டியமன்னரின் விருதாவளியான சோழகுலாந்தகன் (சோழர் குலத்திற்கு யமன்) என்ற பொருளில் அடிப்படையில் அமைக்கப்பட்ட சோழ குலாந்தகபுரம் என்ற பெயரின் சுருக்கம் எனக் கொள்வோரும் உண்டு. அந்த ஊரில் பெரும்பாலும் வணிகத்தில் ஈடுபட்டுள்ள நகரத்தார் வசித்து வந்தனர். அடக்கத்திற்கும், பணிவிற்கும் பெயர் பெற்ற குடிமக்கள் கும்பெனியாரின் இத்தகைய ஆர்ப்பாட்டமான நடவடிக்கைகளில் அக்கரை எதுவும் இல்லாது இருந்தனர்.

சோழபுரம் சிவன் கோயிலில் முன்னர் அலங்காரப்பந்தல் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. பரங்கியரும் அவர்களது விசுவாசிகளான கைக்கூலிகளும் அங்கு குழுமி நின்றனர் சிறப் பான அர்ச்சனைகளை முடித்துவிட்டு படைமாத்துார் கெளரிவல்லப ஒய்யாத்தேவரும் அவரது உறவினர் சிலரும், அந்த அலங்காரப் பந்தலுக்குள் நுழைந்தனர். அங்கு அமர்ந்திருந்த கர்னல் அக்கினியூவும், கர்னல் இன்னிங்ஸாம் எழுந்து வந்து வரவேற்று அவர்களை அங்கிருந்த அலங்கார நாற்காலிகளில் நடுநாயகமாக அமரச் செய்தனர். ராணுவ வாத்தியங்களது முழக்கம் நின்றவுடன், கர்னல் அக்கினியூ, ஒய்யாத்தேவரிடம், சென்னையில் இருந்து கும்பெனி கவர்னர் கிளைவ், அனுப்பி இருந்த “மில்க்கியத் இஸ்திமிரார்” சன்னதை கையளித்து, சிறந்த பட்டாடை ஒன்றையும் அழகான வாள் ஒன்றையும் கும்பெனியாரின் பரிசுகளாக வழங்கி, வாழ்த்துத் தெரிவித்துவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தான். குழுமி இருந்தவர்கள், “சிவகங்கை ஜமீந்தார் வாழ்க” என ஆரவாரம் செய்தனர். படைமாத்துர் தேவர்மகன் இப்பொழுது மகிழ்ச்சிப்பெருக்கில் மூழ்கிப்போனார். அவரது கண்களில் துளிர்த்துநின்ற ஆனந்தக் கண்ணீர், கடந்த காலத்தின் சில கசப்பான நிகழ்ச்சிகளைப் பிரதிபலித்தன. சிவகங்கைச் சீமையின் அரசியல் வாரிசான அவரை, ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர், பிரதானிகளான மருது சேர்வைக்காரர்கள் புறக்கணித்து அவமதித்து வந்ததுடன் அல்லாமல் காளையார்கோவில் கோட்டையில் சிறைப்படுத்தி வைத்திருந்தது.[19]

அவரது மணப்பெண்ணாக நிச்சயித்து இருந்த சிவகங்கை ராணிவேலுநாச்சியாரது மகள் வெள்ளச்சியை அரசு உறவினரல்லாத சக்கந்தி வேங்கன் பெரிய உடையாத்தேவருக்குத் திருமணம் செய்து வைத்து அவரை சிவகங்கை அரசின் புதிய வாரிசாக ஏற்படுத்தியது.

காளையார் கோவிலில் இருந்து உயிர்தப்பியோடி இராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி மன்னரிடம் புகலிடம் பெற்று இருந்ததை அறிந்து கும்பெனியார் மூலமாக, இராமநாதபுரம் சீமையை விட்டு வெளியேறுமாறு செய்தது.

அங்கிருந்து அறந்தாங்கியில் குடியேறிய பொழுது, அவரிடம் கொண்டிருந்த அன்பின் மிகுதியால் சிவகங்கையில் இருந்து அறந்தாங்கிக்கு ஓடி வந்த அந்தணர் ஒருவரது பெண் மக்கள் இருவரையும் இழிவுபடுத்தி கொடுமை செய்தது.[20]

அறந்தாங்கி காட்டிலும், உண்ண உணவும், உடுக்க உடையுமின்றி அவதிப்பட்டு தலைமறைவு வாழ்க்கை நடத்தியது,

ஆகிய இந்தக்கொடிய காட்சிகள் சில வினாடிகளில், அவரது நினைவில் நிழலாடியதை அவரது கண்களில் இருந்து வழிந்து விழுந்த நீர்த்துளிகள் மறைத்தன. மருது சேர்வைக்காரர்களைப் பழிவாங்கிவிட்டது போன்ற பெருமிதம் அவரது கண்களில் பளிச்சிட்டது. அளவிட முடியாத மகிழ்ச்சிப் பெருக்கினால் அவர் மெய்சிலிர்த்துப் போனார். நினைத்துப் பாராத வகையில் அவருக்கு அரச பதவி கிடைத்ததினால் அவரது சிந்தனையிலும் கூட தடுமாற்றம் ஏற்பட்டது. இத்தகைய ஆடம்பர வாழ்வை, அரசயோகத்தை வழங்கிய பரங்கிகளது பெருந்தன்மை விசுவ ரூபமாக அவருக்குப்பட்டது. நன்றி மறப்பது நன்று அல்லவே! தமது இருக்கையில் இருந்து எழுந்த ஒய்யாத்தேவர், அக்கினியூவின் முன் சாஷ்டாங்கமாக விழுந்தார். வெள்ளையனின் கால்களை முத்தமிட்டு எழுந்தார். அவரைப் போன்றே அவரது சகோதரரும் கர்னல் இன்னிங்ஸ் கால்களில் விழுந்து அஞ்சலி செலுத்தி எழுந்தார்.[21] இந்த நாட்டில் ஆண்டானுக்கு அடிமை செலுத்தும் வணக்கமுறை அதுதானே !

ஆனால் முடிமன்னர் களாஞ்சி ஏந்தும் சமயத்தில் தான் சேதுபதி மன்னர் முடி சற்று தாழும் எனப் பாடிய புலவரது[22] பொய்யாமொழிக்கு இலக்கணமாக வாழ்ந்த இராமநாதபுரம் சேதுபதி மன்னரது மகளை மணந்து, மருகராகும் பெருமைபெற்ற நாலுகோட்டை பாளையக்காரரது வழித் தோன்றலான ஒய்யாத் தேவர், இத்தகைய இழிவான முறையில் பரங்கியின் பாதங்களுக்கு தலையினால் அருச்சனை செய்ததை யாரும் எதிர்ப்பார்த்து இருக்கமாட்டார்கள். என்றாலும் இந்த இழிந்த விபரீதமான, ஆனால் உண்மையான, நிகழ்ச்சியை நேரில் கண்ணுறும் வாய்ப்பு பெற்ற பரங்கித்தளபதி வெல்ஷ் தமது நாட்குறிப்புகளில் தெளிவாக வரைந்து வைத்துள்ளார். சுயநலத்திற்காக சொந்த பதவிகளுக்கு எதையும் துணிந்து செய்யும் ஈனப்பிறவிகளில் இத்தகைய மானமற்ற செய்கையினால் மறவர் சீமை மக்கள். தன்மானத்தைத் துறந்து தொன்மையான மறப்பண்புகளை மறந்து, அவமானத்தால் கூனிக்குறுகி கொத்தடிமைகளாக, என்றும் பரங்கியரிடம் மண்டியிட்டு வாழவேண்டும் என்பதை நினைவூட்டுவதற்காகவே அந்த உண்மை நிகழ்ச்சியை அந்த தளபதி குறித்து வைத்து இருக்க வேண்டும்.

சிவகங்கை ஜமீந்தாரது நடவடிக்கை, தொடர்ந்து கும் பெனியாரது கட்டளைகளை தலைமேல் கொண்டு நிறைவேற்றும் “தனிப்பண்பு” கொண்டதாக இருந்ததை படைமாத்தூர் கெளரி வல்லப ஒய்யாத்தேவர். தமது கண்கண்ட தெய்வமாகிய கும்பெனியாருக்கு எழுதிய கடிதம் ஒன்று, உறுதிப்படுத்துகிறது. அந்தக் கடிதத்தில், “.....கும்பெனியார் சம்பந்தப்பட்ட கடிதப் போக்குவரத்தில் சிறப்பான அக்கரை செலுத்தி, ஒரு வினாடி கூட தாமதம் இல்லாமல், தங்களது ஆணைகளை நிறைவேற்றி வைப்பேன். தங்களுடைய பிள்ளை என்ற முறையில், தாங்கள் என்மீது பரிவும் பாசமும் கொண்டவர்களாக நடந்து கொள்ளும்படியும். தங்களது ஆணைகளை அப்பொழுதைக்கப்பொழுது எனக்கு அருள் கூர்ந்து தெரிவிக்கும்படியும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்” என அவர் எழுதியிருந்தார்.[23]

படைமாத்துார் ஒய்யாத்தேவர், ஆங்கிலக் கும்பெனியரது பிள்ளை! ஆம், ஏற்கனவே வங்காளத்திற்கு மீர்காஸிம், கள்ளர் சீமைக்கு புதுக்கோட்டை தொண்டமான், நெல்லைச் சீமைக்கு எட்டப்பன், இப்பொழுது மறவர் சீமைக்கு ஒய்யாத்தேவர். பொருத்தமான பிறவிகள்! அன்னிய ஏகாதிபத்தியத்திற்கு தொண்டு ஊழியம் செய்வதையே இலட்சியமாக, பிறவிப்பெரும் கடமையாக கொண்ட தொங்கு சதைகள், பிறந்த பொன்னாட்டின் பெருமையை மறந்து, சிறுமைத்தனமாகிய சுயநலத்தையே ஜீவியமாகக் கொண்டிருந்த இந்தசமுதாய விரோதிகளை ஊக்குவித்து, வளர்த்து, உருவாக்கும் உத்தியை கும்பெனியார் மட்டும்தான் தெரிந்து வைத்து இருந்தனர். இது அவர்களுக்கு கைவந்த கலையாகும்.

  1. சதாசிவ பண்டாரத்தார்: பாண்டியர் வரலாறு (1950) பக், 23-24
  2. சிங்காரவேலு முதலியார் அபிதான சிங் தாமணி (1932), பக் 432
  3. ராகவ ஐயங்கார்: மு.பெருந்தொகை (1935) பாடல் எண் 86
  4. Krishnasamy Ayyangar. S: South India and her Mohamedan Invaders. (1924)
  5. Harirao. V: Koil Olugu (1961) p. 129
  6. Hussain Nainar Dr: Arab Geographers knowledge of South India (1942) p. 64.
  7. Nelson: Manual of Madurai Country (1868) part III
  8. பலபட்டடைச் சொக்கநாதப்புலவர் பக். 36 - பணவிடுதூது (1930
  9. Military Consultations. vol 288,(A)(29-8-1801) pp. 6041-42
  10. Ibid.
  11. தொண்டிங்கர் கைக்கோளர் குளத்து கல்வெட்டு வாசகம், மடப்புரம் காவேரி ஐயனார் கோயில் ஓலைச்சாசனம்
  12. Military Consultations vol. 185 (B) (3-6-1794) p. 219
  13. Political Despatches to England vol. 4 p. 200-208. (15-1-1798)
  14. Militaty Country Correspondence vol 41, (25-2-1791), pp. 204-219
  15. Rajayyan Dr. K: History of Madura (1974) p. 371.
  16. மறவர்சாதிவிளக்கம் சுவடிஎண் 370 (கீழைநாட்டுச் சுவடி நூலகம் சென்னை)
  17. Revenue Consultations, vol. 116, (24-7-1801), p. 1361-69
  18. Revenue Sundries, vol. 26, (13-9-1801), pp. 33–34
  19. Military Consultations vol. 285 (A) (28-6-1801) – p. 5039
  20. Military Consultations vol. 285, (28-6-1801) p. 5038-43
  21. Col. Welsh: Military Reminiscences. (1881) vol. II.
  22. மீர் ஜவ்வாது புலவர்:பெருந்தொகை (1932) பாடல் எண் 952
  23. Madurai District Records vol. No 1178 - (30-12-1801) p. 100.