மாவீரர் மருதுபாண்டியர்/காளையார் கோவில் நோக்கி



9

காளையார் கோவில் நோக்கி

ஜீலை மாதம் 30, 1801ம் ஆண்டு காளையார் கோவிலை அடுத்து இருந்த அரண்மனை சிறுவயல் கிராமம் ஆங்கிலக்கும் பெனியார் கைவசமாகியது. மருது சேர்வைக்காரர்களது மாளிகைகள் அமைந்து இருந்த அழகிய ஊர். அங்கு வீதிகள் விசாலமாகவும் அழகாகவும் அமைக்கப்பட்டு இருந்ததாகவும், இன்னும் அழகை விட தூய்மை மிகுந்த இத்தகைய ஊரை இந்தியாவில் வேறு எங்குமே பார்க்கவில்லை என கர்னல் வெல்ஷ் தமது குறிப்புகளில் வரைந்துள்ளார்.[1] ஒப்புவமை இல்லாத இந்த ஊரை, கும்பெனியார் கைப்பற்றிய பிறகு அது சுடுகாடாக காட்சி அளித்தது. என்றாலும், காளையார் கோவில் கோட்டைக்கான போர் முயற்சிகள் முடுக்கப்பட்டன. அந்த ஊரின் வடபகுதியில் பாசறை அமைக்கப்பட்டு, காளையார் கோவிலுக்கு அரண்மனை சிறுவயலில் இருந்து காடுகள் வழியாக சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பரங்கியரது பொறிஇயலார் அணியுடன் புதுக்கோட்டைத் தொண்டமான் அனுப்பிவைத்த காடுவெட்டி[2] கூலியாட்களும் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களது பாதுகாப்பிற்காக இருநூறு பரங்கிகளும், மலேயா நாட்டு வீரர் அணியும், ஆறு பவுண்டர் பீரங்கிகளும் சென்றன. மறவர் சீமை விடுதலை வீரர்கள் அவர்களைத் தாக்குவதும் மறைந்து விடுவதுமாக இருந்தனர்.

மிக நெருக்கமாகவும், இணைப்பாகவும் வளர்ந்துள்ள காட்டு மரங்களை அழித்து பாதை ஏற்படுத்தும் பணி தொடர்ந்தது. ஒரே நேரத்தில் பல இடங்களில் இருந்தும் தொடர்ச்சியாக வெடிக்கும் மறவர்களது துப்பாக்கிச் சூடுகள் அந்தப்பணிக்கு இடர்ப்பாடுகள் ஏற்படுத்தி வந்தன. இந்தத் தாக்குதலைத் தடுத்து நிறுத்தி, காட்டை அழிக்கும் பணியை மேலும் தொடர்வது என்பது மிகவும் சிரமமான செயலாக இருந்தது. மேலும், அதிகமான எண்ணிக்கையில் உள்ள விடுதலை வீரர்கள் மிக நெருக்கமான மரப் புதர்களுக்கிடையில் மறைந்து இருப்பதைக் கண்டு பிடித்து தாக்குவதும் இயலாததாக இருந்தது. இந்த விவரங்கள் 15-8-1801 ஆம் தேதி கர்னல், அக்கினியூ எழுதிய கடிதத்தில் காணப்படுகின்றன.[3] என்றாலும், கூடுதலாக காடுவெட்டிகளை பணிக்கு அமர்த்தினர். அப்பொழுதும் முன்னேற்றம் இல்லை. காடு அடர்த்தியாக இருப்பதால், ஊடுருவிச் செல்வது மிகவும் சிரமமாக இருப்பதாகவும், தமது பணியில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு இல்லை என்பதை கும்பெனி தலைமைக்கு எழுதிய இன்னொரு அறிக்கையில் அவன் குறிப்பிட்டு இருந்தான்.[4]

இந்தப்பணியில் ஈடுபட்டு இருந்த கும்பெனித் தளபதி கர்னல் வெல்ஷின் குறிப்புக்களில் பரங்கிகளது முயற்சியும் அதற்கு விடுதலை வீரர்கள் ஏற்படுத்திய இடைஞ்சல் பற்றியும் கூடுதலான விவரங்கள் காணப்படுகின்றன. அந்தக் குறிப்புக்களில் இருந்து;[5]

1801 ஆகஸ்டு முதல் நாள்

“மேஜர் ஷெப்பர்டு குதிரைப்படை அணியுடன் சென்று இருகல் தொலைவு தூரம் சென்று ஒரு சிற்றுரை அடைந்தார். அங்கே தங்கி இருந்த இருநூறு கிளர்ச்சிக்காரர்கள் மீது தாக்குதல் தொடுத்தார். அவர்களும் நமது அணியின் மீது பதில் தாக்குதல் தொடுத்து சுட்டுவிட்டு மறைந்து விட்டனர். மேஜர் மக்லாயிட் தலைமையில் காட்டை அழிக்கும் பணி தொடர்ந்தது. மாலை வரை முக்கால்மைல் தூரம் வரை பாதை ஏற்படுத்தித் திரும்பினர். அப்பொழுது தொடுக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் மட்டும் கொல்லப்பட்டனர்.

ஆகஸ்டு - இரண்டாம் நாள்

அதே அணி இன்று நூற்று ஐம்பது வீரர்களுடன் காட்டிற்குள் நுழைந்தவுடன், கிளர்ச்சிக்காரர்கள் அவர்களை துப்பாக்கியால் பயங்கரமாகச் சுட்டனர். மிகவும் பீதியடைந்தவர்களாக, மலாயா நாட்டு வீரர்கள், அணியின் தலைமையில் இருந்து நழுவி, அணியின் மத்தியில் உள்ள பரங்கிகளிடம் ஓடி வந்தனர். அவர்களினாலும் கிளர்ச்சிக்காரர்களது தாக்குதலைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இரண்டு மலேயா வீரர்கள் அப்பொழுது மடிந்தனர். அணியின் இன்னொரு பகுதியில் இருந்த பிரெஞ்சு நாட்டு அலுவலரான என்சைன் கெளபில் அப்பொழுது கிளர்ச்சிக்காரர்களால் தாக்கப்பட்டார். அவரது அணியினர் கிளர்ச்சிக்காரர்களை மிகுந்த தீரத்துடன் சமாளித்தும் கூட அவர்கள் கிளர்ச்சிக்காரர்களால், விரட்டி அடிக்கப்பட்டனர். என்சைன், இரு வேல்கள் தாக்கிய காயத்துடன், உடைகள் கிழிந்தவராக உயிர் தப்பி ஓடி வந்தார். அவருடன் இருந்த மலேயா தளபதி ஒருவரும் மற்ற இரு வீரர்களும் கிளர்ச்சிக்காரர்களிடமிருந்து ஆச்சரியப்படத்தக்க வகையில் உயிர் தப்பினர்... ... ... நாள் முழுவதும் அவர்களது தாக்குதலைச் சமாளிக்க வேண்டியதாக இருந்தது, எதிரிகளில் மூவர் கொல்லப்பட்டனர். உற்சாகத்துடன் முன்னேறிய சிலர் கொல்லப்பட்டனர். மலேயா வீரர்கள் மூவர் படுகாயமடைந்து பிற்பகல் மூன்று மணிக்கு பாசறை திரும்பினர். அறு நூறு கெஜதூரம் வரை அன்று காடு அழிக்கப்பட்டது.

ஆகஸ்டு - மூன்றாவது நாள்

ஆறுபவுண்டர் பீரங்கிகள் நான்குடன் கர்னல் டால்ரிம்பிள் தலைமையில் அணி புறப்பட்டது. வழியில் கிளர்ச்சிக்காரர்கள் தடுப்புக்கள் ஏற்படுத்தி வைத்து, சிறிய பீரங்கி ஒன்றினை நிறுத்தி வைத்து இருந்தனர். நமது பீரங்கிகள் படபடத்தவுடன் எதிரிகள் தங்களது பீரங்கியுடன் காட்டிற்குள் மறைந்து விட்டனர். தடுப்புகள் அகற்றப்பட்டன. என்றாலும் அவர்கள் நாள் முழுவதும் நம்மை நோக்கி சுட்டவாறு இருந்தனர். நமது அணியில் இருவர் மட்டும் பலத்த காயமடைந்தனர். நானூற்று முப்பது கஜ தூரம் பாதையை வெட்டிய பிறகு, நான்குமணிக்கு நமது அணி திரும்பியது. இன்றைய மோதலில் நெருக்கமாக காட்டை ஊடுருவுதலுக்கு துப்பாக்கியைவிட பீரங்கியை பயன்படுத்துவது சிறப்பாகத் தெரிந்தது. என்றாலும், எதிரிகள் நமது அணியைத் தொடர்ந்து வந்து சில கால்நடைகளையும் குடிகளையும் வெட்டி வீழ்த்தினர்.

எதிரிகள் அணியில் மிகவும் நம்பிக்கையான பணியில் ஈடுபட்டு இருந்தவர் உடையாத் தேவரது மாமனாரும் ஒருவர். இன்று மாலையில், அவர் நமது அணிக்கு தப்பித்து வந்தார். நமது பாசறையின் பக்கத்தில் பணியில் ஈடுபட்டிருந்த காரணத்தினால் நமது தரப்பிற்கு அவர் ஓடி வருவது இலகுவாக அமைந்தது. தமது தலைவர்களது திட்டங்களையும் நடவடிக்கைகளையும் நன்கு அறிந்து இருந்த அவர், கர்னல் அக்கினியூனிடம் சீமையின் நிலைமை பற்றியும் நடக்க விருக்கும் போர்கள் பற்றியும் மிகவும் பயனுள்ள தகவல்களைத் தெரிவித்தார். கர்னல் இன்னிங்ஸ் தலைமையில் சென்ற அணி பயன் ஏதும் இல்லாமல் பாசறை திரும்பியது.

ஆகஸ்டு - நான்காவது நாள்

இயல்பான அணியுடன் சென்ற கர்னல் அக்கினியூ வெட்டப்பட்ட குழி ஒன்றுக்குள் இருந்து கொண்டு எதிரிகள் மீது பயங்கரமான தாக்குதலைத் தொடுத்தார். அந்த அணியில் இருந்த பதினெட்டுப் பேர்கள், அந்த இடத்திலேயே பலியாயினர். அப்பொழுது அங்கே வெள்ளை மருதுவைத்தவிர மற்றுமுள்ள அனைத்து தலைவர்களும் இருந்தனர். எதிர்பாராத இந்த கடுமையான சூட்டினால் விடுதலை வீரர்கள் பல பகுதிகளிலும் சிதறி ஓடினர். மாலை ஐந்து மணிக்கு இந்த அணி பாசறைக்குத் திரும்பியது. ஐநூற்று என்பது கஜம் தொலைவு வரை பாதை அமைக்கப்பட்டது. இன்றைய தாக்குதலில் நமது தரப்பில் நான்கு வெள்ளையரும் ஒன்பது சுதேசிகளும் கொல்லப்பட்டனர். காயமுற்றனர். மேஜர் கிரகாம், ஏராளமான தேவையான பொருட்களுடன் வந்து சேர்ந்தார்.

ஆகஸ்டு மாதம் - ஐந்தாம் நாள்

இன்று மேஜர் ஷெப்பர்டின் தலைமையில் சென்ற அணிக்கு அசாதாரண எதிர்ப்பு எதுவும் இல்லை, நானூற்று ஐம்பது கஜ தொலைவு பாதையை அமைத்துத் திரும்பினர். இனிமேல் அமைக்கப்பட வேண்டிய பாதையில் மிகவும் அடர்த்தியான காடு அமைந்து இருந்தது. இன்றைய தாக்குதலில் ஒரே ஒருவர் மட்டும் காயமடைந்தார்.

ஆகஸ்டு ஆறாவது நாள்

இன்று மேஜர் கிரகாம் தலைமையில் சென்ற அணி, பாதையின் இறுதியில் பெரிய தடுப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு இருப்பதைக் கண்டது. எதிரிகள் அங்கு மூன்று பகுதியாக அணி வகுத்து இருந்தனர். அவர்களிடம் நான்கு பீரங்கிகளும் இருந்தன. எதிரிகள் தங்கள் நிலைகளில் மிகுந்த உறுதியுடன் நின்று போராடினர். நமது அணிக்கு மிகுந்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியதுடன் பல வீரர்களையும் காயப்படுத்தினர். அவர்களது உக்கிரமான தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் நமது அணியினர் தப்பித்து ஓடினர். அவர்களது தரப்பில் மிகுந்த சேதம் ஏற்பட்டு இருக்க வேண்டும். காட்டில் பல இடங்களில் அவர்கள் சிந்திய இரத்தம் தோய்ந்து கிடந்தது. நமது அணிகளுக்கு மிகவும் அதிகமான சேதம். மாலை நேரத்திற்குள் இருநூற்று முப்பத்து ஏழு கஜம் வரை பாதை வெட்டப்பட்டது.

ஆகஸ்டு - ஏழாவது நாள்

நேற்றைய போரின் பொழுது வைத்து இருந்த தற்காப்பு நிலையை இருத்தி வைத்துக் கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மீண்டும் அந்த நிலை கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. எதிரிகள் அவர்களது பீரங்கிகளையும், அவர்கள் தரப்பில் இருந்தவர்களையும், காயமடைந்தவர்களையும் எடுத்துச் சென்று விட்டனர். லெப்டினன்ட் கீல் தலைமையிலும், மேஜர் பெர்ஷன் தலைமையிலும் இரண்டு அணிகள் எதிர் எதிர் திசையில் அனுப்பப்பட்டன. மேலும் எதிர்ப்பு தென்படவில்லை. முன்னூற்று ஐம்பது கஜ தொலைவிற்கு காடு வெட்டி அழிக்கப்பட்டு பாதை ஏற்படுத்தப்பட்டது.

ஆகஸ்டு - எட்டாவது நாள்

கர்னல் தால்ரிம்பிள் தலைமையில் பாதுகாப்பு அணி அனுப்பப்பட்டது. மீண்டும் அந்தப்பாதை முன்னால் தடுக்கப்பட்டு இருந்தது. லெப்டினண்ட் பிளச்சர் தலைமையிலான அணி எதிரிகளைத்துரத்தி அடித்தது. நம்மை நோக்கி அவர்கள் சரமாரியாக குண்டு மழை பொழிந்தனர். அவர்களுடன் ஒப்பிடுகையில் நமக்கு சேதம் மிகவும் குறைவு. இந்த இடத்தில் இருந்து பார்த்தால் காளையார்கோவில் கோபுரம் நன்கு தெரிந்தது. ஐநூறு கஜம் தொலைவு வரை காடு வெட்டப்பட்டு பாதை அமைத்துத் திரும்பப்பட்டது.

ஆகஸ்டு - ஒன்பதாவது நாள்

இன்று மேஜர் ஷெப்பர்டு தலைமையில் அணி புறப்பட்டது. தனது போர் உத்திகளை மாற்றியவராக வேலை செய்ய வேண்டிய பகுதியில். ஒரே சமயத்தில் தமது பீரங்கிகளும் துப்பாக்கிகளும் வெடிக்குமாறு செய்தார். இதனால் ஆள் சேதம் இல்லாமல் அந்தப்பகுதியைக் கைப்பற்ற முடிந்தது. நமது முனைப்பான முன்னேற்றத்திற்குத் தடங்கலாக இருந்த அதே கண்மாய்க்கரையைக் கைப்பற்றி, ஒரு இராணுவ நிலையாக மாற்றப்பட்டது. மூன்று பீரங்கிகளும் முன்னூறு வீரர்களும் அங்கு நிறுத்தப்பட்டனர் இந்தப்பணி முடிந்த நிலையில் கர்னல் இன்னிங்ஸ் தலைமையில் இன்னொரு அணி அங்கு வந்து சேர்ந்தது. தெற்கே முப்பது கஜ தூரத்தில் காளையார் கோவிலை நோக்கியவாறு அந்த நிலை இருந்தது. வெட்டிச் சாய்க்க முடியாத மிகப் பெரிய புளிய மரம் ஒன்று நின்றுகொண்டிருந்தது. ஒருபுறம் காளையார் கோவிலும், மறுபுறம் அரண்மனை சிறுவயலும் அங்கிருந்து துலக்கமாகத் தெரிந்தன.

ஆகஸ்டு - பத்தாவது நாள்

கர்னல் இன்னிஸ் தலைமையில் பாதுகாப்பு அணி புறப்பட்டுச் சென்றது. எதிர்ப்பு எதுவும் இல்லாததால் ஐநூறு கெஜ தூரம் வரை காடு வெட்டப்பட்டது. அறந்தாங்கியைக் கைப்பற்ற அனுப்பப்பட்ட கேப்டன் பிளாக்பர்ன் வசதிக்குறைவு காரணமாக இங்கு திரும்பி வருவதாக தகவல் வந்தது. மேஜர் பெர்ஸனும் நூறு பரங்கி சிப்பாய்களும் இருநூறு சுதேசி சிப்பாய்களும் அங்கு பணியில் இருந்தனர்.

ஆகஸ்டு - பதினொன்றாம் நாள்

மேஜர் பெர்லன் தலைமையிலான அணி மிகவும் குறைவான எதிர்ப்பைச் சமாளித்துக் கொண்டு நானூற்று ஐம்பது கஜம் தொலைவு காட்டை வெட்டி பாதை அமைத்தது. பாதையின் முடிவில் இருந்து காளையார்கோவில் கோபுரம் சுமார் ஒன்றரை மைல் தொலைவில் இருப்பது தெரிந்தது.

ஆகஸ்டு - பன்னிரண்டாம் நாள்

லெப்டி. கர்னல் தாலரிம்பிள் தலைமையில் சென்ற பாதுகாப்பு அணிக்கு பலமான எதிர்ப்பு இல்லை. எதிரிகளிடமிருந்து தொடர்ச்சியாக துப்பாக்கிகள் வெடித்ததாலும், நமது அணியின ருக்கு காயம் எதுவும் இல்லை. அத்துடன் தென்கிழக்கில் இருந்து வந்த பெருமழையும் இடியும் சூறாவளிக் காற்றும் அவர்களது தாக்குதலைத் தடுத்து நிறுத்தின. நானூற்று ஐம்பது கஜ தொலைவு காடு வெட்டப்பட்டு நமது அணியினர் திரும்பினர்.

ஆகஸ்டு - பதின்மூன்றாம் நாள்

மேஜர் வெடிப்பர்டு தலைமையில் சென்ற எட்டையாபுரம் வீரர்கள் அணி, வடமேற்காக பதினொரு மைல்கள் சென்ற பொழுது எதிரிகள் அவர்களைத் தாக்கினர். அவர்களில் சிலரைப் பிடித்துச் செல்லவும் முயற்சித்தனர். அன்மையில் உள்ள கண்மாய்க்கரை, முட்புதர்கள் மறைவில் இருந்து கொண்டு நம்மை நோக்கி சுட்டுக் கொண்டு இருந்தனர். குதிரை அணிகளின் பாதுகாப்பில் பரங்கி வீரர்கள் உதவியினால் மேஜர் அவர்களை விரட்டி அடித்தார். அங்கு குதிரைப்படையணி இயங்க இயலாமல் போய்விட்டது. எதிரிகள் நம்மை மட்டும் குறிவைத்து தாக்கினர். அவர்கள் அதிகமான எண்ணிக்கையில் இருந்தாலும், நமதுவீரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஒவ்வொரு தாக்குதலையும் முறியடித்து சமாளித்தனர். நம்மிடமிருந்த சிறப்பான வகையிலான வெடிமருந்தும் இதற்குக் காரணமாகும். எதிரிகளில் குறைந்த அளவு இருநூறு பேர்களாவது கொல்லப்பட்டு அல்லது காயமுற்று இருக்க வேண்டும். வெடித்துக் கொண்டிருந்த நமது பீரங்கிகள் அருகில் வந்து சிறிதும் அச்சமில்லாமல் அவர்கள் போரிட்டனர். ..... மேஜர் மக்லாயிட் தலைமையிலான அணி இருநூற்று ஐம்பது கஜ தொலைவு வரை காட்டை வெட்டி பாதை ஏற்படுத்தியது. அங்கே காடு மிகவும் அடர்த்தியாகவும் மரங்கள் மிகவும் வைரம் பாய்ந்தவையாகவும் இருந்தன.

ஆகஸ்டு - பதினான்காவது நாள்

கர்னல் இன்னிங்ஸ் தலைமையில் சென்ற அணி, இன்று முந்நூற்றி ஐம்பது கஜ தொலைவு வரை காட்டை அழித்து பாதை அமைத்தது. இப்பொழுது காளையார் கோவில் கோபுரம் ஒரு மைல் தொலைவில் தெரிந்தது. இரவு நேரத்தில் எதிரிகளது துப்பாக்கிச்சூடு இருந்தது. ஆனால் நமது தரப்பினருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

ஆகஸ்டு - பதினைந்தாவது நாள்

பாதையின் முடிவிற்கு இன்று மேஜர் ஷெப்பர்டு தலைமையில் நமது அணியினர் போய்ச் சேர்ந்தவுடன் எதிரிகளது மூன்று பீரங்கிகள் நம்மை நோக்கிச் சுட்டன. அவைகள் இருந்த இடம் தெரியவில்லை. அதே நேரத்தில் அவர்களது துப்பாக்கி வெடி, ஜிங்காலி, குண்டுகள் நம்மை இரு புறங்களிலும் பின்புறத்திலும் தாக்கின. அவைகள் குறி தவறி நமது தலைகளுக்கு மேல் சென்றன. சிறிது நேர இடைவெளிக்குப்பிறகு எதிரிகள் நம்மை தாக்குவதற்க்கு ஏற்ற இடத்தைத் தேர்வு செய்தனர், அதனால் காடு வெட்டும் பணியை மேற்கொள்ள முடியவில்லை. அந்தப் பணி தொடருவதற்கு பாதுகாப்பு அளிக்கப் போதுமான வீரர்களும் நமது அணியில் இல்லை. ஆதலால் நமது அணியினரது உயிரைக் காப்பதற்கு எதுவாக, நமது அணியினர் நமது நிலைக்குக் திரும்பிவிட மேஜர் முடிவு செய்தார். நமக்கு வலது புறமாக இருநூறு கஜ தொலைவில் இருந்து அவர்களது பீரங்கிகள் நம்மை நோக்கி குண்டுகளைப் பொழிந்து கொண்டிருந்தன. ஆதலால், உடனே திரும்ப இயலாமல் அவர்களது சுடுதல் ஒய்ந்த பிறகு பிற்பகலில் நமது நிலைக்குத் திரும்பினோம்.

ஆகஸ்டு - பதினாறாவது நாள்

மேஜர் மக்லாயிடு தலைமையில் இரண்டு அணிகளாக பீரங்கி, இல்லாமல், மிகுந்த சிரமத்துடன் முதல் நாள் போர் நடைபெற்ற கண்மாய்க் கரைக்குப் போய்ச் சேர்ந்தோம். அந்த இடம் இயற்கையாகவும் செயற்கையாகவும் நன்கு பலப்படுத்தப்பட்டு இருந்தது. நீண்ட போருக்குப்பிறகு, நமது அணியைச் சேர்ந்த மிகக் குறைவான வீரர்கள் மட்டும் அங்கு முன்னேறிச் செல்ல முடிந்தது. அதுவும் எதிரிகளது மிகக் கடுமையான துப்பாக்கிச் சூட்டிற்கு இடையில், ஆனால் எதிரிகள் இருப்பிடத்தை கண்டு கொள்ள முடியவில்லை.

ஆகஸ்டு - பதினேழாவது நாள்

இன்று இரண்டு அணிகளாகப் புறப்பட்டோம். இரண்டாவது அணியைச்சேர்ந்த நூற்று அறுபது பரங்கிகளும் நானூறு சுதேசி சிப்பாய்களும் சேர்ந்து ஆயிரத்து இருநூறு கஜ தொலைவில் பாதையை வெட்டி அமைத்துவிட்டுத் திரும்பினர். மற்ற அணி சாலையில் இருந்து கொண்டு பீரங்கிக் குண்டுகளை வெடித்துக் கொண்டு இருந்தனர். நம்மிடம் இருந்த குடிநீர் முழுவதும் தீர்ந்து விட்டது என்று தெரிந்தவுடன் அணியை பாசறைக்குத் திரும்புவதற்கு மேஜர் பெர்லன் முடிவு செய்தார். அப்பொழுது பெருமழையும் பெய்யத் துவங்கியது.

ஆகஸ்டு - பதினெட்டாவது நாள்

கர்னல் இன்னிங்ஸ் தலைமையில் சென்ற அணி, நேற்றைய பாதையில் மேலும் ஜந்நூறு கஜ தொலைவுவரை காட்டை வெட்டி பாதை அமைத்தது. எதிர்பாராத வகையில், எதிரிகள் பலமாகத் தாக்கினர். பலர் கொல்லப்பட்டனர். இன்னும் பலர் காயமுற்றனர், கர்னல் இன்னிங்ஸ் உயிர் தப்பி ஓடிவந்தார்.

ஆகஸ்டு - பத்தொன்பதாவது நாள்

எதிரிகளது பீரங்கிகளை இன்று எப்படியும் கைப்பற்றி விட வேண்டும் என்ற முடிவில், தேர்தெடுத்த வீரர்களைக் கொண்டு அணியினை கர்னல் இன்னிங்ஸ் அமைத்தார். பரங்கிகளும் சுதேசிகளுமான எண்ணுாறு போர் வீரர்களைக் கொண்ட அந்த அணி, இரண்டு ஆறு பவுடர் பீரங்கிகளுடன் புறப்பட்டது. கேப்டன் பாக்ஷல், லெப்டினன்ட் கோர்டன் ஆகியோர்களுடன் நேற்று சென்ற வழியில் சென்றோம். அந்த கண்மாய்க்கரையை ஒதுக்கி தென்கிழக்காக இருநூறு கஜம் விலகிச் சென்று இன்னொரு கரைக்கு அறுபது கஜம் முன்பாகப் போய்ச் சேர்ந்தோம். அப்பொழுது எதிரிகள் தாக்கத் தொடங்கினர். கேப்டன் வெங்டன் அங்கு ஒரு பீரங்கியை நிறுத்தி வைத்தார். மிகவும் வேகமாக முன்னேறி காடு வெட்டும் பணியைத் தொடருமாறு உத்திரவிட்டார். அதிக நேரமும் உழைப்பும் தேவைப்படும் அந்தப்பணியைத் துவக்கும் பொழுது எதிரிகளது துப்பாக்கி வேட்டுச் சத்தம் இடைவிடாது கேட்டது. அங்கிருந்து சற்று தொலைவில் அவர்கள் தாக்குதலுக்கு தங்கள் அணியினை ஆயத்தம் செய்கிறார்கள் என்பதற்கான அறிகுறி என உணர்ந்தோம். கால்மணி நேரம் அமைதி நிலவியது. முற்பகல் 10 - 30 மணிக்கு எங்களைச் சுற்றி நாலாபுறமும் பயங்கரமான துப்பாக்கிக் குண்டுகள் வெடித்தன. எதிரிகள் எங்களுக்கு மிக அண்மையில் இருப்பதாகத் தெரிந்தது. ஆனால் அவர்களைக் கண்டு கொள்ள இயலவில்லை. அவர்கள் எங்களை நெருங்கி வருவதாகத் தோன்றியதால், நாங்கள் அனைவரும் நான்கு வரிசைகளாக அணிவகுத்து நின்றோம். ஒவ்வொரு அணியிலும் ஒரு பீரங்கி இருந்தது. எங்களை நோக்கி பத்துக்கஐ தொலைவில் அவர்கள் வந்தவுடன் நாங்கள் அப்படியே அமர்ந்து கொண்டு அவர்களைச் சுடத் தொடங்கினோம். இவ்விதம் செய்ததினால் எங்களது அணியில் உள்ளவர்கள் பலரது உயிரைக் காப்பாற்ற முடிந்தது. அத்துடன் எதிரிகளுக்கும் ஏராளமான சேதத்தை ஏற்படுத்த முடிந்தது. ஒரே கூச்சலும் முனகலும் கேட்டன. என்றாலும் அவர்களது சுடுதல் ஓயவில்லை. இருபது நிமிடங்கள் கழித்து அமைதி ஏற்பட்டது. நாங்கள் முன்னேறி இன்னொரு உயரமான விசாலமான கண்மாய்க்கரையைப் பிடித்தோம். அங்கிருந்து மேலும் முன்னேறிச் செல்வது பற்றி தமது கூட்டாளிகளுடன் கேப்டன் வெங்டன் ஆலோசனை செய்தார். கைப்பற்றப்படவேண்டிய எதிரிகளது பீரங்கிகள் எங்கு இருக்கின்றன என்பது தெரியவில்லை. அந்தப் பாதையை எதிரிகள் கைப்பற்றிக் கொள்ள சிறிது அவகாசம் கொடுத்து பின்னர் மீண்டும் அங்கு திரும்புவது என முடிவு செய்யப்பட்டது. முற்பகல் முழுவதும் நூற்று ஐம்பது கஜ தொலைவிற்குக் காடு வெட்டப்பட்டது. சற்று நேரத்தில் எங்களது எதிர்பார்த்தலுக்கு மாற்றமாக எதிரிகளது பீரங்கிகள் எங்களுக்கு முன்னால் அறுநூறு கஜ தொலைவில் இருப்பது தெரியவந்தது. ஆனால் பிற்பகல் எங்களது நிலைக்கு திரும்பினோம். எப்படியும் பீரங்கிகளைக் கைப்பற்றவேண்டும் எனத் திட்டமிட்டு இருந்த கர்னல் இன்னிங்க்ஸூக்கு எங்களது வருகை பிடிக்கவில்லை. பதினைந்தாயிரத்திலிருந்து பதினாறாயிரம் வீரர்கள் கொண்ட எதிரிகள் அணியில் பெருத்த சேதம் ஏற்பட்டு இருக்க வேண்டும். நமது அணியில் ஒருவர் கொல்லப்பட்டு நால்வர் படுகாயமடைந்தனர். பாதையில் காத்திருந்த கர்னல் தால்ரிம்பிள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி வந்தார். அடுத்து பெருமழையும் பெய்தது.

ஆகஸ்டு - இருபதாவது நாள்

காலையில் இருந்து அஸ்தமனம் வரை மேஜர் ஷெப்பர்டும் அவரது தலைமையின் கீழ் நூறு பரங்கிகளும் ஐநூறு சுதேசி வீரர்களும் தங்களது ராணுவ நிலையில் நின்று மிகுந்த விழிப்புடன் பாதுகாத்து வந்தனர். எதிரிகளது துப்பாக்கி சுடுதல் சிறிது நேரம் நீடித்தது.

ஆகஸ்டு - இருபத்து ஒன்றாவது நாள்

இன்று முழுவதும் எதிரிகள் எங்களைச் சுட்டவாறு இருந்தனர். ஆனால் இழப்பு அதிகமாக இல்லை. மேஜர் ஷெப்பர்டும் அவரது அணியினரும் ஏற்கனவே வெட்டப்பட்டிருந்த பாதைக்கு எதிரில் வலது புறத்தில் முப்பது அடி அகலமும் இருருாறு அடி நீளமுங்கொண்ட பாதையை வெட்டி அமைத்தனர். மாலையில் பலத்த மழை பெய்தது.

ஆகஸ்டு - இருபத்து இரண்டாவது நாள்

இன்னும் எதிரிகள் எங்களைத் தொடர்ந்து வந்து சுட்டனர் இழப்பு அதிகம் இல்லை. மேஜர் பெர்ஷனது அணி சிறிது துரம் பாதை அமைத்தது. மாலையில் மீண்டும் பலத்த மழை.

ஆகஸ்டு - இருபத்து மூன்றாவது நாள்

பாசறையில் ஏற்பட்டுள்ள ஆயுதப் பற்றாக்குறையைப் போக்குவதற்கும் தேவையான பொருட்களைப் பெற்று வருவதற்கும் கர்னல் இன்னிங்ஸ் குதிரைப்படை அணியுடன் திருமெய்யம் சென்றார். அவர்களுடன் ஏராளமான தபால்களும் அனுப்பி வைக்கப்பட்டன. கடந்த இருபத்து ஐந்து நாட்களாக, எதிரிகள் நம்மைச் சூழ்ந்து கொண்டு செய்திப் போக்குவரத்தைத் துண்டித்து விட்டதால், இந்தத் தேக்கநிலை ஏற்பட்டது. மேலும் உடல் நலிவுற்ற கர்னல் தாலரிம்பிள், மேஜர் கிராண்ட், டாக்டர் ஒயிட், லெப்டினண்ட் காம்ப்பெல் ஆகியோர் அனுமதி பெற்று பாசறையில் இருந்து சென்றனர். என்.எம்.சுமித், தலைமையில் பாதுகாப்பு அணி நமது நிலையைச் சுற்றிய நிலப்பகுதியைச் செம்மை செய்தனர். காட்டிற்குச் செல்லும் பாதையின் முகப்பில் இன்னொரு ராணுவ நிலையையும் அமைத்தனர். முன்னேறிச் செல்லும் அணியினருடன் தொடர்பு வைத்துக் கொள்வதற்காக முற்பகல் 10.30 மணிக்கு மூன்று பீரங்கிகளைக் கொண்டு எதிரிகள் எங்களைச் சுட்டனர். நமது அணியினர் சென்று பீரங்கிகளைக் கைப்பற்று வதற்குள் அவர்கள் சுடுதலை நிறுத்தி மறைந்துவிட்டனர்.

ஆகஸ்டு - இருபத்து நான்காவது நாள்

மேஜர் ஷெப்பர்டு அணி நிலப்பரப்பை செம்மை செய்யும் பணியை முடித்து மாலையில் திரும்பியது. பாதையின் இருபுறத்திலும் இருந்தும் எதிரிகள் தாக்குதல். நமது அணியில் ஒருவர் கொல்லப்பட்டார்.

ஆகஸ்டு .இருபத்து ஐந்தாவது நாள்

மேஜர் பெர்ஷன் தலைமையிலான அணியை மாலையில் எதிரிகள் தாக்கினர். அவர்கள், இப்பொழுது நமக்கு நேராக எதிரே வந்து குண்டுமாரி பொழிந்தனர். வேலை செய்ய இயலாத நிலையில் பாசறை திரும்பிய அணி சுட்டபொழுது ஒருவர் மாண்டார். அவரது சடலத்தை எதிரிகள் எடுத்துச் சென்று விட்டனர்.

ஆகஸ்டு - இருபத்து ஏழாவது நாள்

மேஜர் ஷெப்பர்டின் அணி, கர்னல் இன்னிங்ஸ் அணியின் பாதுகாப்பிற்குச் சென்றது. பதினான்கு மைல் தொலைவில் உள்ள திருப்பத்தூருக்கு அந்த அணியுடன் நானும் சென்றேன். இரவு முழுவதும் ஆயுதங்களைக் கையில் பிடித்தவாறு உறங்கினோம்.

ஆகஸ்டு - இருபத்து எட்டாவது நாள்

திருமெய்யம் திக்கில் இருந்து கேட்ட வெடிச்சத்தம் கர்னல் இன்னிங்ஸ் அணியினர் வந்து கொண்டிருப்பதை உணர்த்தியது. நாங்களும் அவர்களுடன் இணைந்து கொள்ளச் சென்றோம். ஆனால் உடனே திரும்பிச் சென்று திருப்பத்தூர் கோட்டையை, எதிரிகள் வந்து வளைத்துக் கொள்வதற்குள், கைப்பற்றி வைத்துக் கொள்ளுமாறு எங்களுக்கு உத்திரவு. கட்டளைப்படி நாங்களும் அந்தப் பழைய கோட்டைக்குச் சென்று உள்ளும் வெளியிலும் ஆயத்த நிலையில் இருந்தோம். மாலையில் பலத்த மழை பெய்தது. என்றாலும் நாங்கள் மிகுந்த விழிப்புடன் காத்து இருந்தோம்.

ஆகஸ்டு - இருபத்து ஒன்பதாவது நாள்

பொழுது புலர்ந்ததும் நமது அணி புறப்பட்டது வழியில் சில மோதல்கள்; எதிரிகளது தாக்குதல் இருந்தன. திருப்பத்தூரில் இருந்து ஏழுகல் தொலைவில் உள்ள பட்டமங்கலம் ஊர்போய்ச் சேர்ந்தோம். பக்கத்தில் உள்ள கண்மாய்க்கரை வழியாகச் சென்று அந்த ஊரைச் சுற்றி வளைத்துக் கொண்டோம். எதிரிகளது தாக்குதல் தொடர்ந்தது. நமது “சப்ளை” அணியைத் தடுப்பதற்காக அவர்கள் மேற்கொண்ட கடைசி நிலை இது.

ஆகஸ்டு - முப்பதாவது நாள்

காலையில் நமது முன்னேற்றத்தைத் தடுக்க எதிரிகள் சாலைக்கு வந்துவிட்டனர். கட்டுப்பாடு இல்லாத அந்தக்காட்டு மிராண்டிகள்! அவர்களால் எதைச் செய்ய இயலுமோ அதைச் செய்தனர். கண்மாய்க்கரையில் கூடிநின்று எங்களது போக்கினைத் தடுத்தனர். ஒரு அணியினரை அடித்து துரத்தியவுடன் இன்னொரு அணியினர் வருவர். அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட தாக்குதலுக்குக் குறைவாகவே அவர்களது வேகம் இருந்தது. இப்பொழுது எங்களுக்கு நமது முந்தைய எதிரிகளான கட்டபொம்மு நாயக்கரும் அவரது ஊமைத்தம்பியைப் பற்றிய நினைவு தான் வந்தது.

அவர்களது எண்ணிக்கையும் அந்தப் பகுதியைப்பற்றிய அவர்களது துல்லியமான அனுபவமும் நம்மைவிட அவர்களுக்கு மிகவும் அனுகூலமானவையாகும். புதிய தளவாடங்களைக் கொண்டு நமது அணிக்கு மருது சேர்வைக்காரர்களுக்குப் பதிலாக நியமனம் செய்யப்படவிருக்கும் புதிய தலைவரான உடையாத் தேவரையும் பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு இருந்தது. ஸ்காட்லாந்து நாட்டு அணி முன்னோடி அணியாகச் சென்றது. பிரதான பொறுப்பு அவர்களுக்குத்தான். அடுத்து பின்னால் நமது பிரிவு சென்றது. விடிகாலையில் இருந்து, சிறுவயல் போய்ச் சேர்ந்த பிற்பகல் பன்னிரண்டரை மணிவரை, அவர்கள் தொடர்ந்துபோரிட்டுக் கொண்டு சென்றனர். நமது அணியினர் எதிரியைக் கண்ணுற்ற பொழுது அவர்கள் எண்ணிக்கையில் கூடுதலாக இருந்தாலும் அவர்களைத் தாக்குவதும் அவர்கள் ஓடிவிடுவதும் இயல்பாக இருந்தது. தங்களது பீரங்கிகளை, நாம் கைப்பற்ற இயலாதவாறு மிகுந்த அக்கரையுடன், பாதுகாத்துக் கொண்டனர். மோதல்கள் தவிர மற்ற சமயங்களில் அவர்களது சுடுதல் கடுமையாக இல்லை. அவர்களால் கொல்லப்பட்டும் காயமுற்றவர்களும் நாற்பது அல்லது ஐம்பது பேர்களுக்கு மேல் இராது. அவர்களது ஆயுதம் பீயூட்டர் கம்பியினால் செய்யப்பட்டு இருந்ததால், அதிகமான காயம் ஏற்படுத்தவில்லை.

மாலையில், இந்தச் சீமையின் புதிய அரசரான உடையாத் தேவர், மரியாதை நிமித்தமாக கர்னல் அக்கினியூவைச் சந்தித் தார். அப்பொழுது அவருடன், அவரது தமையனாரும் ஒரு வயதான பார்ப்பனரும் வந்தனர். இந்த மனிதர் சின்னமருது சேர்வைக்காரரது பழி வாங்கும் நடவடிக்கைகளுக்குத் தப்பி அறந்தாங்கியில் இருந்த ஒய்யாத்தேவருடன் சேர்ந்து கொண்டவர் சிவகங்கையில் இருந்து தப்பி வந்தபிறகு தனது குடும்பத்தினரை மிகவும் அவமானப்படுத்தி விட்டதாக இவர் சின்னமருது சேர்வைக்காரரைப்பற்றி கும்பெனியாரிடம் புகார் செய்தார்.[6] வளமையான பாராட்டுக்களைப் பரிமாறிக் கொண்டவுடன், அவர் தமது கூடாரத்திற்குத் திரும்பினார். பார்ப்பதற்கு அவர் அழகாக இருந்தார். ஆனால் பிரிட்டிஷ் அரசு அவரை எதிர்பாராத வகையில் உயர்த்தியுள்ள அந்தஸ்துக்கு, அவர் பழக்கப்பட்டவராகத் தெரியவில்லை. அத்துடன் அவருக்கு அளிக்கப்பட்டுள்ள ஆதரவிற்கு நன்றியுடையவராகவும் காணப்பட்டார். அவரது அந்தஸ்தை உயர்த்தியதற்கு மற்றவர்கள் எத்தகைய காரணங்களைக் கற்பித்தாலும் சரி, ஆனால் அவரது விசுவாசத்திற்கு நாம் மதிப்பளித்தோம். வறுமையிலும் நலிவிலும் இருந்த அவரை, ஒரு அரசின் இளவரசர் நிலைக்கு உயர்த்தி, அவரது பாராட்டுதலுக்கு உரியவராகி விட்டோம் என்பது உறுதி.

சிறுவயலில் இருந்து காளையார்கோவிலை புதியபாதை அமைத்து அடைவது என்ற தமது முடிவில் மேலும், முனைந்து செல்லாமல் அங்குள்ள பாசறையில் இருந்து நீங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதனால் நமது அணியினர் அனைவருமே மகிழ்ச்சி அடைந்தனர். நமது தோழர்கள் பலரை பலிகொண்டு கல்லறையாக மாறிய இடமல்லவா அந்தப்பாசறை. அங்கு நமது மானத்திற்கு இழிவு ஏற்பட்டதை எண்ணி, நமது ஒரு மாத கடுமையான உழைப்பு வீணானதைப் பற்றி, அவர்கள் கவலை கொள்ளவில்லை. வேறு இடங்களில் உள்ள வசதிகளை எண்ணிப் பார்க்கும் பொழுது, நமது இந்த முகாம் நோயாளிகளது கூடாரமாக வல்லவா மாறி இருந்தது! பலர் வயிற்றுக் கடுப்பினாலும், வயிற்றுப் போக்கினாலும் வருந்தி வந்தனர். பல அலுவலர்களும் வீரர்களும் இந்தக் கொடுமைகளினால் இறந்து விட்டனர். இவைகளில் இருந்து தப்பித்து, நல்ல உடல் வலிவுடன் இருந்த சிலர், மன நோயினால் கஷ்டப்பட்டு வந்தனர். கொஞ்சங்கூட செடிகொடி இல்லாத கட்டாந்தரை இந்தப்பாசறை. எப்பொழுதும் தமது கண்களில் துாரத்தில் படுவது மனிதர் புகமுடியாத நெருக்கமான காடு. அதற்குள் இருந்து கொண்டுதான் கோழைகள் நம்மைக் கொடு

5 மைப்படுத்தி வந்தனர். இத்தகையதொரு இயற்கைச் சூழ்நிலையில் அவர்களை ஒவ்வொரு மணி நேரத்திலும் தாக்கிக் கொண்டு இருந்தாலும், அவர்கள் நம்மை முழுவதுமாக சூழ்ந்து கொண்டு வந்தனர். ஒரு கடிதத்தைக் கூட வெளியில் அனுப்பவோ, அல்லது பெறுவதோ இயலாததாக இருந்தது. தொடர்ந்து ஒரு மாதமாக பாளையங்கோட்டையுடன் தொடர்பே இல்லை. அவர்களது விழிப்பான நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்கு பலமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒன்றுகூட பயனளிக்கவில்லை. எனக்கு பழக்கமான பாளையக்காரர் ஒருவர் – இந்தப்பகுதியின் மூலை முடுக்குகளையெல்லாம் அறிந்து இருந்தவர் – ஒவ்வொரு மனிதரையும் புரிந்து இருந்தவர் – நமக்கு உதவுவதற்கு முன்வந்தார். ஐந்து பணத்தையும் ஒரு கடிதத்தையும் பெற்றுக்கொண்டு காட்டிற்குள் சென்ற அவரை எதிரிகள் பிடித்து கொன்று போட்டனர்... ...”

இவ்விதமாக சிறுவயல் பாசறையில் இருந்த கர்னல் வெல்ஷ் தமது கைப்பட வரைந்துள்ள நாட்குறிப்புகள் பரங்கிகளை எதிர்த்து போரிட்ட போராளிகளது தாக்குதல்களைப் பற்றி ஓரளவு தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு சிறந்த சாதனமாக உள்ளது. அரண்மனை சிறுவயலுக்கும் காளையார்கோவிலுக்கும் இடைப்பட்ட எட்டுக்கல் தொலைவு காட்டைக் கடப்பதற்கான பாதையை அமைக்க நூற்றுக்கணக்கான பரங்கியரும் ஆயிரக்கணக்கான காடு வெட்டிகளும் முப்பத்திரண்டு நாட்கள் முனைந்தும் தங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சிவகங்கை சீமைப் போராளிகளைச் சமாளித்ததே ஒரு பெரிய சாதனையாகும். ஆனால் இந்தச் சாதனையையும் விஞ்சும் வகையில் விடுதலை வேட்கையும், ஏகாதி பத்திய எதிர்ப்பு உணர்வும் இதய நாதமாகக் கொண்ட போராளி கள் பயிற்சியும் வெடி மருந்து வசதியும் கொண்ட பரங்கிகளை பயமின்றிச் சாடியது ஆகும். மரணத்தைப்பற்றி சிறிதும் சிந்தியாமல் அந்த மண்ணிற்குரிய மகத்தான மறப்பண்புகளுடன், பயங்கரமாக வெடிக்கும் துப்பாக்கி, பீரங்கி குண்டுகளுக்கிடையில் போரிட்டு மடிந்த போர் மறவர்களின் புனித இடம் அந்த காட்டுப் பாதையைத் தவிர தமிழகத்தில், ஏன் பாரதத்தில் வேறு எங்கும் கிடையாது! சிவகங்கைச் சீமை மண்ணை அன்னிய ஆக்கிரமிப்பில் இருந்து காப்பாற்ற ஒவ்வொரு அடி நிலத்திற்கும் அவர்கள் கொட்டிய குருதியையும் உடலில் தாங்கிய குண்டுகளையும், இறுதியில் தங்களையே தடுப்புச் சுவர் ஆக்கி ஆங்காங்கு விழுந்து இறந்த தியாகத்தையும் வேறு எந்த வரலாற்றிலும் காண முடியாது! எத்துணையோ போர்களை வெற்றி கொள்ளத் திட்டம் தீட்டி பரங்கியருக்கு வெற்றியைத் தவறாது கிட்டச் செய்த மிகச்சிறந்த கும்பெனித் தளபதியான அக்கினியூவின் எதிர்பார்ப்புகள் முதலும் இறுதியுமாக தோல்வியுற்றது இந்த அரண்மனை சிறுவயல் காட்டுப் போரில்தான். போரைத் துவக்கிய அவன் முப்பத்து இரண்டு நாட்களுக்குப் பிறகு வேறு வழி இல்லாமல், தலையைக் கவிழ்ந்து கொண்ட தனது போர் வீரர்களது அணியை ஒக்கூர் பாசறைக்குப் பின்னடையுமாறு கட்டளை இட்டான்.[7] அவனது இராணுவப் பணியில் இதைவிட இழிவான நடவடிக்கையை அவன் மேற்கொண்டது கிடையாது.

  1. Col. Welsh : Military Reminiscenes vol. I p. 92.
  2. இந்த கூலியாட்களின் வழித் தோன்றல்கள் இன்னும் புதுக்கோட்டைப் பகுதியில் இருப்பதுடன் தங்களது இயற்பெயருடன் “காடுவெட்டி” என்ற பகுதியையும் பெருமையுடன் இணைத்து வழங்கி வருகின்றனர்.
  3. Military Consultations, vol 288 (A). (15-8-1801) p. 6838.
  4. Ibid, (21-8-1801) p. 6840
  5. Col. Welsh: Military Reminiscances (1831)vol. I, pp.92-122.
  6. Military consultations, vol. 295 (A) (28-6-1801)p. 5034
  7. Military Consulations vol. 288, (20-10-1801) pp. 6837-39 and Revenue Consulations vol. (1801) p. 1401-08.