மாவீரர் மருதுபாண்டியர்/கும்பெனியாரது கொடுமைகள்
12
கும்பெனியாரது கொடுமைகள்
ஆயிரத்து எண்ணுாற்று ஒன்றாவது ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் நாள் உதயம்.
வைகறை இருளில் நீராடிய காளையார்கோவில் கோட்டைப் பகுதி இன்னும் செம்மையாகப் புலப்படவில்லை. மறவர் சீமை வழக்கில் சொல்ல வேண்டும் என்றால் “நிலம் தெளிய” இன்னும் ஒரு நாழிகை நேரம் இருக்கும். கதிரவனின் காலைக் கதிர், கோட்டையைச் சூழ்ந்து நின்ற மரங்களையும் நெருக்கமான செடி கொடிகளையும் தொட்டுத் தொடரவில்லை. என்றாலும், கோட்டையின் கிழக்கு, மேற்கு, தெற்கு பகுதிகளை நோக்கி பரங்கியரும் அவரது கூலிப்படைகளும் அணிவகுத்து வருவது, அவர்களது நடமாட்ட ஆரவாரத்தில் இருந்து தெரிந்தது. தெற்குப் பகுதி அணிக்கு மக்காலே, மேற்குப் பகுதியில் இன்னிங்ஸ், அக்கினியூ கிழக்குப்பகுதியில் பிளாக்பர்ன் தலைமையில் அந்த அணிகள், சிறிதுநேரத்தில் வடக்கே இருந்து துரோகி வழிகாட்டிய இரகசிய காட்டுப்பாதை வழியாக ஷெப்பர்டும், ஸ்பிரேயும் தங்கள் அணியுடன் வந்து சேர்ந்தனர்.
புதுக்கோட்டைத் தொண்டமானும், அக்கினியூவும், ஒய்யாத் தேவரும் தயாரித்த கூட்டுத் திட்டம், கிளர்ச்சிக்காரர்கள் வியப்படையும் வகையில் கோட்டையை நான்கு புறமும் சூழ்ந்து மடக்குவதுடன், அவர்கள் கிழக்கு வடக்குப்பகுதி காடுகளில் ஒளித்து வைத்துள்ள இரகசிய ஆயுதச் சேமிப்புகளில் இருந்து மேலுதவி கிடைக்காமல் தடுப்பது என்பதுதான்.
சுமார் ஒருமைல் சுற்றளவு உள்ள காளையார்கோவில் மதில்களைச்சுற்றி வளைத்து அணி வகுத்து நின்றனர். பரங்கியரும் அவர்களது எடுபிடிகளும், கிழக்கே அமைந்து இருந்த கோட்டை வாசலிலும். கோட்டையின் பத்து கொத்தளங்களிலும் போருக்கு ஆயத்தமாக நின்ற போர்மறவர்கள் பரங்கிகளைப் பார்த்தவுடன் வெஞ்சினம் கொண்டு ஆர்ப்பரித்தனர். போர் முழக்கங்களை எழுப்பினர். சரமாரியாக அவர்கள் விட்டெறிந்த ஈட்டிகளையும் வெடித்த துப்பாக்கி குண்டுகளையும் புறக்கணித்துவிட்டு, கோட்டையைத் தாக்குவதற்கான கட்டளைக்கு கும்பெனிப்படைகள் காத்து நின்றன. அவர்களது அணிவகுப்பில் முதன்மையாக குதிரையில் அமர்ந்து இருந்த தளபதி, அக்கினியூ சிவப்புக்கொடியை அசைத்து சைகை செய்தவுடன் பீரங்கி அணியின் பேய்வாய்கள் அக்கினியை உமிழ்ந்தன. குதிரைப்படைகள் தாவிச் சென்று தாக்கின. அவர்களைத் தொடர்ந்து தூசுப்படைகள், கார்கால மேகங்களில் இடி மின்னலைப் போன்று பீரங்கிகள் கக்கிய அக்கினி மழையில் காளையார்கோவில் கோட்டை நனைந்து கொண்டு இருந்தது. அதுவரை அத்தகைய கடுமையான தாக்குதலை சந்திக்காத கோட்டையின் மதில்கள் சிறிது சிறிதாக சிதைந்து கொண்டிருந்தன.
கோட்டை கொத்தளங்களில் இருந்த கிளர்ச்சிக்காரர்களும் ஆக்கிரோசத்துடன் பதிலுக்கு துப்பாக்கிகளினால் சுட்டனர். பீரங்கிகளை சுட்டு வெடித்தனர். வளரித் தண்டுகளை குறி பார்த்து வீசினர். கவண்களில் கற்களை வைத்து எறிந்தனர். குத்து ஈட்டிகளைத் தொடர்ச்சியாக எறிந்தனர். சூரியனது வெப்பத்தை விட பலமடங்கு சூட்டுடன் கொதித்துக் கொண்டிருந்த கொதிகலன்களில் இருந்து ஈயத்தண்ணீரை வாரி இறைத்து பரங்கிப் படையினரை நாசமடையச் செய்தனர். ஆனால் இவையனைத்தும் அவர்களது முன்னேற்றத்தினை கணிசமான நேரத்திற்கு தடுத்து நிறுத்தின. என்றாலும், பரங்கிகள் தங்களது தாக்குதலைக் கைவிடவில்லை. அவர்களில் பலர், தங்களது முதுகில் இணைத்துப் பிணைத்து இருந்த நூலேணிகளைக் கொண்டு கோட்டை மதிலில் உடும்புப் போல ஊர்ந்து ஏற முயன்றனர். அவர்களது முயற்சிக்குப் பாதுகாப்பாக துப்பாக்கிகள் படபடத்தன. மதில் மேல் இருந்து மறவர்கள் கீழ்நோக்கி எதிரிகளைச் சுட்டு வீழ்த்தினர், கருமருந்து கொட்டான்களிலும் சட்டிகளிலும் தீயிட்டு அவர்கள் மீது விட்டெறிந்தனர். பதினெட்டு அடி உயரமுள்ள கோட்டை மதில் பரங்கியரின் பீரங்கி தாக்குதலால் திணறியது. சிவகங்கைச் சீமைப் போராளிகளும் அந்த அசுரத்தாக்குதலினால் தளர்ந்தனர்.கோட்டை வாசலை நெருங்கி அங்குள்ள காவல் அரணை அழித்து, கோட்டைக்குள் புகுவதற்கு முயன்ற பரங்கியர் அணிகளுடன், சிவகங்கை போராளிகள் நேருக்கு நேர் பொருதினர். அவர்கள் பற்றி இருந்த நெடுவேலும், கொடுவாளும், வளரிகளும் அந்த மண்ணுக்கே உரிய வீரத்துடன் விளையாடின. எதிரிகளின் தலைகளை வரிந்து கொய்தும் அவர்களது கொடிய இதயங்களைக் குத்தி பிளந்தும் மகிழ்ந்தனர். புற்றீசலைப் போன்று அணி அணியாக, அலை அலையாகப் பொருத வரும் பாங்கிகள் - உருவும் நெருப்புக் கோளங்களை உமிழ்கின்ற பீரங்கிகளின் உறுதியான தாக்குதல் - இவைகளுக்கிடையே நின்று போராடும் இரும்பு நெஞ்சங்கள் இறுதியில் மறவர்களது விலை மதிக்க முடியாத வீரம் அங்கு விலைபோகவில்லை. போராளிகள் அனைவரும் புகழைப் புகலிடமாகப் பெற்றுள்ள வீர மரணத்தை தழுவினர். “நின்று புகழொழிய நில்லா உயிரோம்பி இன்று நாம் வைகல் இழிவாகும்” என அவர்கள் எண்ணி இருத்தல் வேண்டும். உலையா உள்ளமொரு உயிர்க்கடன் இருத்தோராகத் தங்கள் விழுப்புண்பட்ட உடல்களை மண்ணில் சாய்த்துப் புகழால் உயர்ந்தனர். தந்தையும் தாயும் குலவி மகிழ்ந்த மண், அவர் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்த மண் அல்லவா அந்த மண். அந்தப் புனித மண்ணின் மாண்பைக் காக்கப் போராடி வீழ்ந்த அவர்களது ஏமாற்றத்திற்கு இணையான எடுத்துக்காட்டு எங்கும் காண இயலாத ஒன்று. புறநானூற்றுப் போர்க்களங்களை நினை ஆட்டும் அவர்களது போர்ப்பரணி மெதுவாக ஓய்ந்தது. அம்பு பட்டு அடியோடு சாய்ந்த யானைகள் தோற்றத்திலும் ஏற்றத்திலும் சிறந்த வகைக் குதிரைகளும் மாய்ந்தன. அவைகளில் ஏறி வந்து போரிட்ட மறவர்களும் மடிந்தனர். அத்துடன் அனைத்து வீரர்களும் மாண்டனர். போர் முரசைத் தொடர்ந்து முழக்குவதற்குக் கூட ஆள் இல்லை......... பெரும் புலவர் பாணர் வடித்துள்ள புறப்பாடலின்[1] மறு காட்சியாக அமைந்திருந்தது. காளையார் கோட்டை போர்க்களம், கிளர்ச்சிக்காரர்களது இலட்சிய அரணாக, ஏகாதிபத்தியவாதிகளின் இலக்காக விளங்கிய, அந்தக் கோட்டை கண்ட இறுதிப்போர் அது. இந்த உலகத்திலேயே மிகவும் உயர்ந்ததாகவும். அருமையானதாகவும் கருதப்படும் ஆருயிரை பிறந்த மண்ணின் பெருமையைக் காப்பதற்கு காணிக்கையாகக் கொடுத்த போர் மறவர்களது பிணக் கூறுகளைக் கடந்து பரங்கியர் கோட்டைக்குள் நுழைந்தனர்.
மானத்தின்பேராக, வீரத்தின் பேராக விளங்கிய கானப்பேர் தாழ்ந்தது. வீழ்ந்தது. நீலநிறப் பிண்ணணியில் குறுக்கும் நெருக்குமாக சிவப்பு வெள்ளைக் கோடுகளைக் கொண்ட வெள்ளையரது வெற்றிக் கொடி, அந்தக் கோட்டை வாசலின் முகப்பில் தொங்கவிடப்பட்டது. மற்றுமொரு கொடி, மருது சேர்வைக்காரர்கள் மிகுந்த பக்திப்பெருக்குடன் நிர்மாணித்த காளை நாதர் கோவிலின் உயர்ந்த கோபுர மாடத்தில் இருந்து பறக்கவிடப்பட்டது. அந்நியரது ஆதிக்க வெறிக்கு முட்டுக்கட்டையாக விளங்கிய அந்தக் கோட்டை, அப்பொழுது மிகப் பெரிய இடுநாடாக விளங்கியது. கோயிலைச் சுற்றியுள்ள விசாலமான வெளியில், சிவகங்கைச்சீமையின் சிறப்பையும் பெருமையும் சிந்தித்து செயல்பட்ட வீரர்களில் சடலங்கள் குவியல், குவியலாகக் கிடந்தன. பரங்கியரைப்பிடித்துக் கொன்று தங்களது விடுதலை உணர்வை தணித்துக் கொள்ளத் துடிதுடித்த நூற்றுக்கணக்கான போராளிகளது கால்களும் கரங்களும் துண்டிக்கப்பட்டு சிதறிக்கிடந்தன. எங்கு பார்த்தாலும் பின்னம்பட்ட விக்கிரங்களைப் போன்று வீரர்கனது சடலங்கள்; வேதனைக் குரல்கள் கோவிலின் தென்புரத்தில் மருதுசேர்வைக்காரர்கள் ஆழமாக அமைத்த ஆனைமடு குளத்தின் தெள்ளிய நீர் மறவர்கள் சிந்திய செங்குருதி கலந்து செந்நீராகக் காட்சியளித்தது. இத்தகைய சஞ்சலமான சூழ்நிலைக்கு நடுவில், இன்னும் மறைந்து விடாது எஞ்சி இருக்கும் மான உணர்வினுக்கு மவுன சாட்சியாக கோயிலின் முகப்பு கோபுரங்கள் கம்பீரமாக நின்று காட்சியளித்தன.
கோட்டையின் மேற்குப்பகுதியில் எஞ்சி இருந்த வீரர்களும் அவர்களது தலைவர்களான மருது சேர்வைக்காரர்களும் சுரங்க வழியைத் தொடர்ந்து சென்று கோட்டைக்கு தெற்கே வெளியே போய் வடக்கே திரும்பி மேப்பலபனங்குடி காட்டுப்பகுதிக்குள் நுழைந்து விட்டனர். கோட்டை முழுவதும் அவர்களைத் தேடிக் களைத்துப்போன கும்பெனி சிப்பாய்கள், அயர்வு தீருவதற்காக பல நூறு சாராயக்குப்பிகளை குடித்துக் கும்மாளமிட்டனர்.[2] இந்தப் போரின் பிரதிபலிப்புகள் - பக்கத்து நாடுகளில், ஒருவேளை மோசமான - கும்பெனியாருக்கு விரோதமான-விளைவுகளை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தினால் அவைகளைச் சமாளிப்பதற்கு கர்னல் மில்லர் பரமக்குடிக்கும், கர்னல் ஷெப்பர்டு மங்கலத்திற்கும், கர்னல் இன்னிங்ஸ் பள்ளி மடத்திற்கும், தற்காப்பு அணிகளுடன் விரைவாக அனுப்பப்பட்டனர்.
மேலும் காளையார் கோவில் கோட்டைக்கு உள்ளும், வெளியிலும் கிளர்ச்சிக்காரர்கள் சேர்த்து வைத்து இருந்த ஆயுத இருப்புக்களைத் தேடிப்பிடித்து அழித்தனர். கோட்டை முகப்பில் பதினான்கு ஆயிரம் துப்பாக்கி தோட்டாக்களும், என்பது பீரங்கி வண்டிகளும், இருபத்து மூன்று பீரங்கிகளும் (இரும்பு வெங்கலக் கலவையில் உருவாக்கப்பட்டவை) அறுநூறு பவுண்டு நாட்டு வெடி குண்டுகளும், ஐநூறு பவுண்டு கருமருந்தும், இன்னும் பல விதமான சிறுசிறு போர்க்கருவிகளும் கைப்பற்றப்பட்டதாக அக்கினியூவின் அறிக்கையில் இருந்து தெரிகிறது.[3] இன்னொரு அறிக்கையில் போருக்குப் பின்னர் ஏற்பட்டு உள்ள நிலைமையினையும் கும்பெனி கவர்னருக்கு அக்கினியூ தெரிவித்தான். அதில் சிவகங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள குடிமக்கள் கும்பெனியாரின் அதிகாரத்தை ஏற்று கட்டுப்பட்டுள்ளனர் என்றும் அதுவரை சிவகங்கை சேர்வைக்காரர்களை ஆதரித்து வந்த பெரும்பாலான மக்கள் பகுதியினர் அவர்களது தலைமையிலான நம்பிக்கையை இழந்து சிதறி ஓடிவிட்டனர் என்றும் தெரிவித்து இருந்தான். அத்துடன் தமது துருப்புக்கள் பின் தொடருவதைத் தவிர்ப்பதற்காக பத்திரமான மறைவிடங்களில் பதுங்கி இருப்பதுதான் அவர்களது தற்பொழுதைய திட்டம் என்பதையும் குறிப்பிட்டு இருந்தான்.
இராமநாதபுரம் பகுதிக்கு தப்பிச் சென்ற மயிலப்பன் சேர்வைக்காரரையும், இராமநாதபுரம் சீமை மன்னராக அறிவிக்கப்பட்ட மீனங்குடி முத்துக்கருப்பத்தேவரையும் பிடிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.[4] அவர்கள் இருவரையும், உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டு வருவதற்கான சன்மானங்களும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தன.[5] மறவர் சீமைக்கிளர்ச்சிகளில் எஞ்சியிருந்த மாபெரும் தலைவர்கள் இவர்கள் இருவரும் தான்.
காளையார்கோவில் கோட்டைப் போரில் கிளர்ச்சிக்காரர்களை படுதோல்வியடையச் செய்ததுடன் அக்கினியூ திருப்தி அடையவில்லை. கிளர்ச்சித்தலைவர்களைப் பிடிப்பதிலும், கிளர்ச்சிக்கு ஆதரவு அளித்தவர்களை ஒடுக்குவதிலும் நடவடிக்கை மேற்கொண்டான். உடனே, உரளிக்கோட்டை வழியாக சருகணிக்கு விரைந்து செல்லுமாறும் அந்தப்பகுதிக்கான பாதை முட்செடிகள் சூழ்ந்து இருப்பதால் அதனை சுற்றுப்பாதையில் சென்று அடைய வேண்டும் என்றும் அந்தப்பகுதியில் உள்ள கிளர்ச்சிக்காரர்களையும் அவர்களது சொத்துக்களையும் தயக்கமின்றி அழித்து ஒழிக்குமாறும் தளபதி இன்னிங்ஸிக்கு உத்தரவிட்டான். காட்டுச்சண்டையில் நன்கு பழக்கப்படட மலாய் நாட்டுத் துருப்புகளும் இன்னிங்ஸுடன் அங்கு சென்றன. ஏற்கனவே சருகணிப் பகுதியில் இராமநாதபுரத்தில் இருந்த கேப்டன் பிளாக், அங்கு முகாம் செய்து கிராம மணியக்காரர்களையும் மற்றவர்களையும் துருவித்துருவி விசாரித்துக் கொண்டு இருந்தான், அந்தப்பகுதியில் உள்ள கிளர்ச்சிக்காரர்கள் யார், எத்தனைபேர், அவர்களது நிலைமை ஆகிய விவரங்களைத் தெரிந்து கொள்வதற்காக.[6]
மேஜர் ஷா என்ற இன்னொரு தளபதி தெற்குப்பகுதியில் மங்கலத்திற்கு அருகாமையில் கிளர்ச்சிக்காரர்களைத் தேடிப் பிடிப்பதில் முனைந்து இருந்தான். இந்த, வெள்ளைத்தளபதிகள் மூவரும் அவர்களது அணிகளும், அந்தந்தப் பகுதியில் உள்ள கிளர்ச்சிக்காரர்கள் அவர்களது ஆயுதங்கள், சொத்துக்கள் ஆகியவைகளை அழித்து அமைதியை நிலைநாட்ட வேண்டும்; அந்தப் பகுதிகளில் தொடர்ந்து முனைப்பாக இயங்கி வந்த நன்னி சேர்வைக்காரர் என்ற கிளர்ச்சித் தலைவரை உயிருடன் பிடிக்க வேண்டும்; இந்த இருவிதமான பணிகளை முடித்துக் கொண்டு இந்த அணிகள் வடக்கு நோக்கிச்சென்று சங்கரப்பதி, கண்டிர மாணிக்கம் காடுகளையும் திருப்பத்துார் - பிரான்மலைப்பகுதிகளை யும் கிளர்ச்சிக்காரர்களது கட்டுப்பாட்டினின்று நீக்க வேண்டும் என்பது அக்கினியூவின் ஆக்ஞை.
அத்துடன், மேஜர் ஷெப்பர்டை காளையார் கோவில் காடு முடிவடையும் மங்கலம் பகுதிக்கும். லெப்டி, மில்லர் இராமநாதபுரத்திற்கும், கேப்டன் லாவக்கோர்டும், லெப்டி. லாங்பர்டும் பிரான்மலைக்கும், கேப்டன் சுமித் திருப்பத்துாருக்கு வடக்கே உள்ள காட்டிற்கும், மேஜர் மக்காலே பார்த்திபனூர் முடுக்கங்குளம் பகுதிக்கும் விரைவாக அனுப்பப்பட்டனர்.[7] ஏனெனில் கும்பெனியாருக்குக் கிடைத்த துப்புக்களின்படி மீனங்குடி முத்துக் கருப்பத்தேவர் நயினார்கோவில் பகுதியிலும், பாஞ்சாலங்குறிச்சி ஊமைத்துரை குழுவினர் திருப்பத்துார் காட்டிலும், மருதுசேர்வைக் காரர்கள் வெட்டுர் பெருங்குடி பகுதியிலும் சிவத்த தம்பி, குப்பம் ஊரணிப் பகுதியிலும் அப்பொழுது நடமாடுவதாக தகவல்கள் கிடைத்த மறு வினாடியே கும்பெனி அணிகளும் கூலிப்பட்டாளங்களும் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்றன. மருது சேர்வைக்காரர்கள் சருகணியில் இருப்பதாகக் கிடைத்த தகவலின்படி கேப்டன் காட்பிரே சருகணிக்கு விரைந்து சென்றான்; தனது அணியுடன், அந்தக்கிராமம் அமைதியாக இருந்தது. ஆனால் அங்குதானே சின்ன மருது சேர்வைக்காரர் இருந்தார். வீடு வீடாக சோதனை செய்தனர். அப்பொழுது சின்னமருது அங்குள்ள மாதா கோயிலுக்குள் புகுந்து தஞ்சம் தேடினார். கோயிலை அடுத்த வீட்டில் கோவில் பாதிரியார் ஒரு பெரிய பெட்டியின்மீது அமர்ந்தவாறு "பைபிள்" படித்துக் கொண்டு இருந்தார். பதட்டத்துடன் ஓடிவந்த சின்னமருது சேர்வைக் காரரை அவர் இனங்கண்டு கொண்டார். ஏனெனில் சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் அந்த தேவாலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் "பாஸ்கல்" திருவிழாவின் பொழுது புனித மேரி மாதா ஆரோகணித்துச் செல்ல அலங்காரத்தேர் ஒன்றினை அன்பளிப்பாக சின்னமருது வழங்கி இருந்தார்.
அப்பொழுது அவரது நிலைமையை பாதிரியார் புரிந்து கொண்டார். ஒரு கணம் யோசித்தார். அவர் "உங்களை ஏற்றுக் கொள்ளுகிறவன், என்னையும் ஏற்றுக் கொள்கிறான்.[8]என்ற வேதவாக்கினை நினைத்தார். உடனே அவர் அமர்ந்து இருந்த பெட்டிக்குள் ஒளிந்து கொள்ளுமாறு சைகை செய்தார். மருது சேர்வைக்காரரும் அவ்விதமே ஒளிந்து கொண்டார். தொடர்ந்து வந்த கும்பெனித்தளபதி அந்தப்பக்கம் ஓடி வந்த மருது சேர்வைக் காரரைப் பற்றிப் பாதிரியாரிடம் விசாரித்தார். தம்முடைய அமைதியான படிப்பைக் குலைத்தற்கு ஆத்திரப்பட்டவர் போல பாதிரியார் "நன்கு உற்றுப் பார்த்துக் கொள்" என்று சினந்து பதிலளித்த பாதிரியாரது வெறுப்பை உணர்ந்தவனாக வெள்ளைத் தளபதி அங்கிருந்து அகன்று விட்டான். சின்னமருது அப்பொழுது தப்புவிக்கப்பட்டார். தமது இக்கட்டான நிலையில் அடைக்கலம் அளித்த பாதிரியாருக்கு நன்றியைத் தெரிவித்ததுடன் அமையாமல், அந்த மாதா கோயிலின் பராமரிப்பிற்காக கிராமம் ஒன்றை அறக்கொடையாக வழங்கியும் செப்பு பட்டயம் ஒன்றினையும் எழுதிக் கொடுத்துச் சென்றார் சின்னமருது.[9]
கும்பெனித்தளபதி, அடுத்து சருகணி கிராமத்தில் சிவகங்கை சேர்வைக்காரரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டு இருந்த சவரி முத்துப்பிள்ளை என்ற முதியவரையும் அவரது ஆண்மக்களையும் கண்டுபிடித்து கைது செய்து அழைத்துச் சென்றான். இந்த முதியவரை எப்படியும் பிடித்து தண்டிக்க வேண்டும் என்றும் அவர்பால் எவ்வித அனுதாபமும் கொள்ளக்கூடாது என்பதும் அக்கினியூவின் கண்டிப்பான உத்திரவு.[10] இந்தக்குடும்பத்தினரை உரளிக்கோட்டை அருகில் தூக்கிலிடப்பட்டு இருக்க வேண்டும் என ஊகிக்கப்படுகிறது.
வெள்ளைத்தளபதி அக்கினியூ எழுதியபடி அப்பொழுது, சற்று அமைதியாக இருந்து எஞ்சியுள்ள போராளிகளது எண்ணிக்கை, ஆயுத இருப்பு ஆகியவைகளைத் தெரிந்து கொண்ட பிறகு, மேலும் பரங்கிகள் எதிர்ப்புப்போரைத் தொடருவது என்பது அப்பொழுதைக்கு சிவகங்கைச் சேர்வைக்காரர்கள் மேற்கொண்டிருந்த முடிவு. ஆனால் அவர்கள் நினைத்தபடி சிறிது நேரம் கூட காட்டில் அமைதியாக இருந்து சிந்திப்பதற்கு பரங்கிகள் அவகாசம் கொடுக்கவில்லை. போதாக்குறைக்கு படபடவென கொட்டும் ஐப்பசி மாத அடைமழை. அவர்களை உயிருடன் பிடித்து விடுவதற்காக, அவர்கள் சென்ற பாதைகளின் வழியே. பரங்கிகளும் சென்றனர், வழக்கம்போல சுயநலமிகளான துரோகிகள் அவர்களுக்கு வழிகாட்டி முன் சென்றனர். காடுகளை ஊடுருவி "தேடுதல்" பணியை நடத்தினர். இரத்தவெறி கொண்ட அக்கினியூ இந்தத் திட்டத்தை விரைவாக முடிப்பதற்காக விளம்பரம் ஒன்றை காளையார் கோவிலிலும் சுற்றுப்புறங்களிலும் பொதுமக்களிடம் பரப்பினான், கைக்கூலி பெறும் ஆசையில் கண்னைப் பொத்திக் கொண்டு மக்கள் தலைவர்களைக் காட்டிக் கொடுக்கும் கழிசடைகளுக்குக் கண்ணி வைத்து காத்து இருந்தான்.
வெள்ளைமருது, சின்னமருது, சிவத்தையா ஆகிய தலைவர்களைப் பிடித்துக் கொடுப்பவருக்கு தலைக்கு ஆயிரத்து ஐநூறு குளிச்சக்கரம், என்றும் ஏனைய முன்னணி வீரர்களான சிவஞானம், துரைச்சாமி, முத்துச்சாமி, கறுத்தத்தம்பி - உடையணன், மோலிக் குட்டித்தம்பி, வேங்கன் பெரிய உடையாத்தேவர், ஊமை குமாரசாமி ஆகியவர்களைப் பிடித்து வருபவர்களுக்கு தலைக்கு ஆயிரம் குளிச்சக்கரம் பணம் வழங்கப்படும் என அந்த விளம்பரத்தில் கண்டிருந்தது.[11]கும்பெனியாரது ராணுவபலத்திலும் வெற்றியிலும் நம்பிக்கை கொண்டு இருந்த கைக்கூலிகளுக்கு இந்த அறிவிப்பு நல்லதொரு ஊக்குவிப்பாக அமைந்து இருந்தது. ஓடுபவர்களைக் கண்டால் துரத்துகிறவர்களுக்கு எளிதுதானே!
வாழ்வில் மட்டுமல்லாமல், தாழ்விலும் பங்குகொண்டு பின் தொடர்ந்த தோழர்கள், உறவினர்கள் ஆகியோருடன் மருது சகோதரர்கள் காட்டில் தங்கி இருந்த மறைவிடத்தை மோப்பம் பிடித்துத் திரிந்தன. அந்தமனித ஓநாய்கள், தோல்வியால் தளர்ந்து துயரத்தில் துவண்ட அவர்களை, ஒருவர் பின் ஒருவராகக் கைப் பற்றினர். ஆங்காங்கு, அவர்களைத் தூக்கில் தொங்கவிட்டு மகிழ்ச்சியடைந்ததை அக்கினியூவின் பல அறிக்கைகளில் காணப்படுகின்றன. இறுதியில் மருது சேர்வைக்காரர்களது மறைவிடத்தையும் அக்கினியூவின் அடிமைகள் கண்டுபிடித்தனர். காட்டின் ஒரு இடத்தில் படிந்து இருந்த ஒட்டகை, குதிரைகளது கால்குளம்புச் சுவடுகளை கவனித்து, அவைகளைத் தொடர்ந்து சென்றனர். கிளர்ச்சிக்காரர்களது பாசறை கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு நடந்த கைகலப்பில் வெள்ளைமருது சேர்வைக்காரரது இரு மக்களையும் இன்னும் சிலரையும் மேஜர். ஷெப்பர்டின் அணி மடக்கிப் பிடித்தது. அந்த இடத்திற்கு அருகிலேயே தங்கி இருந்த மருது சேர்வைக்காரர்கள் கைகலப்பின் பொழுது நழுவிச் சென்றனர்.[12] தங்களது பெற்றோர்களைத் தப்புவிக்கும் நோக்கத்தில் வேண்டுமென்றே அகப்பட்டுக் கொண்ட இளம் வீரர்களான வெள்ளைமருது மக்கள் கறுத்த தம்பியும் மோலிக்குட்டித்தம்பியும் அன்றே அங்கேயே தூக்கில் இடப்பட்டனர்.[13]
அடுத்து இரண்டு நாட்களில் சிவகங்கை மன்னர் வேங்கன் பெரிய உடையாத்தேவரையும், குதிரைகள் பல்லக்குகள், சிலவற்றையும் அந்தக்காட்டில் கைப்பற்றினர். [14] அக்கினியூ அவரை விசாரித்தான். அவருக்கும் மருது சேர்வைக்காரர்களுக்கு உள்ள அரசியல் தொடர்புகளை அறிந்து கொள்வதற்காக, மருது சேர்வைக்காரர்களது அரசியலில் தமக்கென எவ்வித அதிகாரமும் இல்லாமல் பெயரளவில் தான், சிவகங்கைச்சீமை மன்னராக இருந்து வந்ததாக அவர் தெரிவித்தார். தற்சமயம் தாமே சரணடைய முன் வந்தபொழுது, பிடிக்கப் பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மருது சேர்வைக்காரரது அமைச்சர் போல விளங்கிய கோட்டை சேர்வைக்காரனும் சின்னணண் சேர்வைக்காரனும் ஏற்கனவே கும்பெனியாரிடம் சரணடைந்து இருந்தனர். கும்பெனி யாருக்கு எதிரான நடவடிக்கைகளில் தாங்கள் ஈடுபடவில்லை என்பதை உறுதியாகத் தெரிவித்து தங்களது உயிர்களுக்கு அவர்கள் உத்திரவாதம் பெற்றனர்.[15]
மருது சேர்வைக்காரர்களைத் தேடும் பணி தொடர்ந்தது. கர்னல் வில்லியம் பிளாக்பர்ன், தமது கூலிப்பட்டாளத்துடன் காளையார்கோவிலுக்கு வடகிழக்கே இருந்த காட்டுப்பகுதியை அலசினான். காடுகளுக்கு நடுவே அமைந்துள்ள கருணை என்ற கிராமத்திற்குப் போய்ச் சேர்ந்தான், சங்கரப்பதி, செங்கோட்டை காடுகளைப் பிரிக்கும் மையப்பகுதியில் உள்ளது அந்த ஊர். அங்கிருந்து ஒரு கல் தொலைவிற்கு மேற்குத்திக்கில் நெருக்கமாக நீண்டு சென்றது அந்தக்காடு. அந்தப்பகுதியில் - அரண்மனை சிறுவயலுக்கும் காருகுடிக்கும் இடைப்பட்ட பகுதியில், பல இடங்களில் கிளர்ச்சிக்காரர்கள் பதுக்கி வைத்து இருந்த கருமருந்து மற்றும் ஆயுத இருப்புகளைக் கைப்பற்றினர். இன்னும் அந்தப் பகுதியில் ஊடுருவி வருகின்ற கும்பெனியாரைப்பற்றி நோட்டமிட்டு அவர்களது நடமாட்டத்தை அறிந்து தெரிவிப்பதற்காக சிவகங்கை சேர்வைக்காரர் நியமித்து இருத்த மணவாள நாயக்கர் என்ற ஒற்றரையும் அவரது மகன் உள்ளிட்ட எட்டுப் பேரையும் 5-10-1801யன்று கைது செய்து காவலில் இட்டனர். இதனால் மருது சேர்வைக்காரர்களுக்கும் சங்கரப்பதி காட்டின் வடகிழக்குப் பகுதிக்கும் இருந்து தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.[16]
அடுத்த இரு நாட்களில், அந்தக் காட்டுப்பகுதியில் தங்கி இருந்த வெள்ளைமருது சேர்வைக்காரரது பெண்டுகள் பிள்ளைகள் சிலரையும் கூலிப்பட்டாளம் வளைத்துப் பிடித்தது. சங்கரப்பதி, செங்கோட்டை, சிறுகுடிப்பகுதிகளைச் சுற்றிப் பார்த்து வந்த தளபதி பிளாக்பர்ன், வடக்கே கீரனுர் சென்று கர்னல் அக்கினியூவைச் சந்தித்து மேல் நடவடிக்கை பற்றி ஆலோசனை நடத்தினான். [17] திருப்பத்துர் பகுதியில் பாஞ்சாலங்குறிச்சி ஆட்கள் விருப்பாட்சி பாளையக்காரர் தலைமையில் நடமாடுவதை நோட்டமிட்டனர். அப்பொழுது சின்னமருதுவின் மகன் சிவத்த தம்பியும் அவரது மகன் முத்துச்சாமியையும், காடல்குடி பாளையக்காரர் கிர்த்தி வீரகுஞ்சு நாயக்கரையும் அவர்களது பெண்டு பிள்ளைகளையும் பிடித்தனர். இந்த முன்னணித் தலைவர்கள் மூவரையும் கண்டிராமாணிக்கம் என்ற சிற்றுாரில் பொது இடத்தில் தூக்கில் தொங்கவிட்டனர்.[18]அவர்களைப் பிடிப்பதற்காகக் கும்பெனியாரது கைக்கூலியைப் பெற்ற துரோகிகள் மகிழ்ச்சியினால் கும்மாளம் போட்டனர்.
நாட்டுக்குழைத்த நல்லவர்களது தியாகப்பட்டியல் தொடர்ந்தது. கிளர்ச்சித் தலைவர்களில் ஒருவரான சிவகங்கை திருக்கண்ணத் தேவரையும் அவரது கூட்டாளிகளையும் மிகவும் சிரமப்பட்டு பிடித்துக் கொன்றனர்.[19]பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான சாமி நாயக்கரும், ஊமை குமாரசாமி நாயக்கரும் இன்னும் அவர்களது அறுபத்து ஐந்து தோழர்களும் திண்டுக்கல் சீமையிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்குத் திரும்பும் வழியில் வத்தலக்குண்டில் பரங்கியர் கைகளில் அகப்பட்டனர்.[20]பரங்கிகள் தடயனிலும் அவர்களை பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வெளியில் வைத்து 16-11-1801 யன்று சிரச்சேதம் செய்து கொன்றனர். இராமநாதபுரம் சீமைப் பட்டத்திற்கு உரிமை கொண்டாடிய மீனங்குடி முத்துக்கருப்பத் தேவரது தம்பி கனகசபாபதி தேவரை அவரது போராட்டக்களமான அபிராமத்தில் தூக்கில் ஏற்றினர்.[21]அடுத்தடுத்து. இத்தகைய முக்கியத்தலைவர்களைப் பிடித்துக் கொன்றவுடன், பரங்கிகளது மகிழ்ச்சி பன்மடங்காகியது. ஏனைய கிளர்ச்சிக்காரர்களையும் அவர்கள் ஒப்பற்ற தலைவரான மருது சேர்வைக்காரர்களையும் விரைவில் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு அதிகரித்தது. துரோகிகள் பலவாறு துப்புகள் சேகரித்தனர். கைக் கூலிகள் புதிய ஜமீன்தாரது ஆதரவையும் பரங்கிகளது பரிசுத் தொகையும் பெறுவதற்காக, தங்கள் முயற்சியில் இரவு பகலாக அலைந்தனர். அவர்களுடைய முயற்சி வெற்றியும் பெற்றது.
சிவகங்கைச் சீமையை ஒட்டி இருந்த மேலுர் நத்தம் நாடு கும்பெனியாரின் கொலைவெறி தலைவிரித்து ஆடியது. மதுரையில் இருந்த கேப்டன் பெரும் ராணுவ தளவாடங்களுடன் திண்டுக்கல்லுக்கு செல்லுமாறு உத்திரவிடப்பட்டது.[22] காரணம், திருப்பத்துார் பகுதியில் இருந்த பாஞ்சாலங்குறிச்சி, விருபாட்சி பாளையக்காரர்களும் அவர்களுடைய ஆதரவாளர்களுமாக ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் துவரங்குறிச்சி, வலம்பட்டி வழியாக நத்தத்தை ஊடுருவிச் சென்றனர்.[23] இதனையடுத்து கிளர்ச்சிக்காரர்களும் கும்பெனிப்படைகளும் நத்தம் குன்றுப் பகுதியில் கைகலந்ததில் கிளர்ச்சிக்காரர் தரப்பில் ஏராளமான இழப்பு ஏற்பட்டது. எஞ்சியவர்கள் காமாச்சிநாயக்கன் பாளையம் வழியாகப் பின் வாங்கினர்.[24] கும்பெனிப்படைகள் நத்தம், சேடபட்டி, கீழவளவு, சும்மணப்பட்டி, தட்டப்பட்டி ஆகிய ஊர்களில் போராட்டம் நடத்தினர். கள்ளர் தலைவர்கள் நால்வரையும் கீழவளவு சும்மணப்பட்டி அம்பலக்காரர்களது நெருங்கிய உறவினர்கள் சிலரையும் கைது செய்து மதுரைக்கோட்டையில் சிறையிலிட தளபதி காரோனிடம் அனுப்பி வைத்தனர்.[25] குடிமக்களை இழிவு படுத்தினர். அவர்களது சொத்துக்களை நாசம் செய்தனர். கிளர்ச்சிக் காரர்களைப் பற்றிய விபரங்களைப் பெறுவதற்காகப் போராட்டம் நடத்தினர். கிராம மக்கள் அனைவரையும் பாகுபாடு இன்றி படாதபாடு படுத்தினர்.
ஒருவகையாக நத்தம் தாசில்தாரைக் கொலை செய்து கும்பெனியாருக்குப் பல வழிகளிலும் இடைஞ்சல் செய்த நத்தம் கோபால மணியக்காரரையும், வெங்கிடாசலத்தையும் பிடித்து நத்தத்தில் தூக்கில் போட்டனர்.[26] சேடபட்டி அம்பலக்காரருக்கும் அவரது வீரப்புதல்வருக்கும் 1 - 11 - 1801ம் தேதி அதே "பரிசு" கொடுக்கப்பட்டது. அவைகளை வழங்கியவன் கேப்டன் காட்பிரே. இன்னொரு வெள்ளைத் தளபதியான வெர்னான், கள்ளர் தலைவர் சேதுபதியை சும்மணப்பட்டியில் தூக்கிலிட்டான். [27]அந்த வீரத்தலைவரது சடலத்தை நல்அடக்கம் செய்வதற்கு கூட அனுமதி அளிக்கவில்லை.[28] எதிரிகளுக்குத் தங்கள் எத்தகைய அரக்கமனம் படைத்தவர்கள் என்பதை நினைவுபடுத்த அவன் எண்ணினான். காற்றிலே மெதுவாக ஆடி அலைந்து கொண்டிருந்த அந்தச் சடலம் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கும் ஒருநாள் அந்த நிலை வருமென்பதை நினைவூட்டிக் கொண்டு இருந்தது. அதே அரக்கன், கிளர்ச்சிகளில் ஒத்துழைப்பு நல்கியதற்காக ஆண்டன் என்ற குடிமகனை கீழவளவில், கிராம மக்கள் முன்னிலையில் நிறுத்தி வைத்து ஆயிரம் கசையடிகள் கொடுத்தான். அப்பொழுது ஆண்டன் இறந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதும் அவனுக்கு மேலிடம் வழங்கிய உத்திரவு[29] ஆண்டன் மீது அனுதாபம் காரணமாக அல்ல இந்த உத்திரவு. அந்த வீரமறவன் சாவதற்குள்ளாக அவர்களது ஆணையை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற அரக்கத்தனமான எண்ணம்.
அக்டோபர் 19ம் தேதி 1801. சோழபுரத்திற்கும் ஒக்கூருக்கும் இடைப்பட்ட காட்டில் பெரியமருது தனியாக தங்கி இருப்பதை கும்பெனி கைக்கூலிகள் கண்டுபிடித்தனர். உடனே, அங்கே சென்ற பரங்கி அணி, நிராயுதபாணியாக இருந்த அவரை எதிர்பாராத விதமாகத் தாக்கிக்கைது செய்தது.[30] அதே பகுதியில் மற்றோர் இடத்தில் தங்கி இருந்த சின்னமருது சேர்வைக்காரரையும் கண்டுபிடித்தனர். அவரிடம் ஆயுதம் எதுவும் இல்லாத பொழுதும் அவரை நெருங்குவதற்கு அஞ்சினர். ஆதலால் தொலைவில் இருந்து துப்பாக்கியால் சுட்டனர். அந்தச் சிறிய அணியினருடன் மோதினாலும் அவரால் தொடர்ந்து சண்டை இட முடியவில்லை. காரணம் அவரது தொடையில் குண்டு பாய்ந்து வேதனையால் துடித்தார். அந்தச்சமயத்தில் கும்பெனிக் கூலிகள் அவரைச் சங்கிலியால் பிணைத்து சோழபுரம் பாசறைக்கு இழுத்துச் சென்றனர். அங்கு இரண்டு தலைவர்களையும் பலத்த பாதுகாப்பில் நான்கு நாட்கள் வைத்து இருந்தனர். அவர்களது பெண்டுகளையும் கைப்பற்றி, புதிய ஜமீன்தாரது பொறுப்பில் வைத்தனர்.[31]
அதே நேரத்தில், மருது சேர்வைக்காரர்களது கிளர்ச்சியில் முக்கிய பணியாற்றிய வாராப்பூர் பாளையக்காரர் பொம்மையா நாயக்கரையும் பிடித்து அடைத்தனர். அவரது பாளையம், சிவகங்கைச் சீமையின் வடகிழக்கே, பிரான்மலையை ஒட்டி மதுரை, திண்டுக்கல் சீமைகளைத் தொட்டவாறு அமைந்து இருந்தது. இந்தப் பாளையம் முன்னர் இராமநாதபுரம் ரகுநாத சேதுபதி மன்னர் காலத்தில் மறவர் சீமையில் சோக்கப்பட்டு சேதுபதியின் பாளையமாக இருந்தது. சிவகங்கைச்சிமை பிரிந்த பிறகு, யாருக்கும் கட்டுப்படாத பாளையமாக இருந்தது.
ஆனால் சின்னமருது சேர்வைக்காரரது நெருங்கிய நண்பராக விளங்கிய அவர், எல்லா வழிகளிலும், சிவகங்கைசீமைக் கிளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார். மருது சேர்வைக்காரர்களது மற்றொரு நண்பரான மீனங்குடி முத்துக்கருப்பத்தேவரையும் சாயல்குடி காட்டில் கர்னல் மில்லரது அடியாட்கள் கைது செய்தனர்.[32]இராமநாதபுரம் சேதுபதி மன்னரை கி. பி. 1795 ல் பதவி நீக்கி சிறையில் அடைத்த பிறகு, இராமநாதபுரம் சீமைக்கு இவர் உரிமை கொண்டாடி, பரங்கிகளுக்கு எதிராக பாண்டிக்குடியில், 'இராமநாதபுர அரசு' நடத்திய அவரை இராமநாதபுரம் சீமைக்கிளர்ச்சிகளில் தலைமை தாங்கிய அந்தத் தளபதியைப் பலமான இரும்புச் சங்கிலியால் இணைத்துப் பிணைத்து இராமநாதபுரம் கோட்டையில் சிறைவைத்தனர். அவருடன் அவரது மனைவியார் (2), அவரது தம்பி கனகசபாபதியின் விதவை (1) அவரது தாயார் (1), அத்தை (1), குழந்தைகள் (4), தங்கையும் ஆக குடும்பத்தினர் (5), மற்றும் பணியாட்கள் (10), ஆக மொத்தம் இருபத்தாறுபேர் அவருடன் சிறை வைக்கப் பட்டனர்.[33]
மற்றும், சின்னமருது சேர்வைக்காரரது கடைசி மகனான பதினைந்தே வயதே நிரம்பப்பெற்ற துரைச்சாமியை மேலுரை அடுத்த கிராமத்தில் கைதுசெய்து துத்துக்குடி ராணுவ முகாமிற்கு அனுப்பி வைத்தனர்.[34] இத்துடன் மறவர் சீமையின் கிளர்ச்சிகளைத் தங்கள் வாழ்க்கையின் இலட்சியமாகக் கருதி, இரவு பகல் என்றும் பாராது துன்பம் துயரம் ஆகியவைகளைப் புறக்கணித்து போராட்ட உணர்வுடன் திகழ்ந்த முன்னணி வீரர்கள் அனைவரும் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர். அல்லது ஆங்காங்கு தூக்கு மரங்களில் தொங்கவிடப்பட்டனர். இப்பொழுது மறவர் சீமையில் பகல் கொள்ளை நடத்த பரங்கிகளுக்கு எவ்வித தடை இடை இல்லை. மறவர் சீமை, திண்டுக்கல் சீமைகளிலும், சோழ சீமையின் தென்பகுதிகளிலும் காட்டுத் தீ போல வளர்ந்து பரவிய மக்களது ஏகாதிபத்திய எதிர்ப்புக் கிளர்ச்சி, வரலாற்றில் மூன்றாவது முறையாக. ஏன் முற்றாகவே தோல்வி அடைந்தது. வேதனையையும் பேரழிவையும் எய்திய மக்கள், இருளடைந்த எதிர்காலத்தை எதிர்நோக்கி ஏக்கத்துடன் இருந்தனர். அவர்களது தளர்ந்த கண்களில் நம்பிக்கை ஒளி தட்டுப்படவில்லை.
- ↑ 1 பாணர்- புறப்பாட்டு எண். 63
- ↑ 2 .Military Consultations, vo1. 288 A. (4-10-1801) pp.6868-70
- ↑ 3. Ibid (5-10-1801) p. 6889.
- ↑ 4. Military Consultations vol. 288 (6-10-1801), p. 6883-84.
- ↑ 5. Revenue Sundries vol. 26, (17–10. 1801)
- ↑ 6.Secret Consultations, vol. 26, (2-10-1801) pp. 313-14.
- ↑ 7.Revenue Sundries, vol. 26 (11-10-1801)(7-10-1801) pp. 333-45
- ↑ 8. புதிய ஏற்பாடு மத்தேயு சுவிஷேசம் 10:40
- ↑ 9 மாறணி செப்பேடு (எருகனி தேவாலயத்தில் உள்ளது)
- ↑ 10 Revenue Sundries vol. 26 (11-10-1801) pp. 357-58
- ↑ 11. Revenue Sundries, vol. 26, (17-10-18-1). Proclamations
- ↑ 12. Military Consultations, vol. 288 (A) (6-10-1801) p. 6877-80.
- ↑ 13. Renvenue Sundries, vol. 26 (6-10-1801) p. 76.
- ↑ 14. Military Consultations, vol. 288 (A) (6-10-1801) p, 6881.
- ↑ 15. Ibid pp. 6882-85.
- ↑ 16 Military Consultations vol. 288, (A) (7-10-1801) p. 6971-72.
- ↑ 17. Ibid p. 6892-95.
- ↑ 18 . Ibid p. 6895.
- ↑ 19 . Madurai District Records vol. 1219.
- ↑ 20.Military Consultations, vol. 288. (27-10-1801), p. 7108.
- ↑ 21 . Ibid. 289, (16-11-1801) p. 7741.
- ↑ 22 Revenue Sundries, vol. 26, (12-10-1801) p. 361.
- ↑ 23 Ibid (9-10-1801 ) p. 351-53.
- ↑ 24 Public Sundries vol. 136 (B) (19-10-1801) pp. 98-99.
- ↑ 25 Revenue Sundries vol. 26, (17-10-1801) p. 94-95.
- ↑ 26 Ibid, (2-11–1801) p. 946.
- ↑ 27. Public Sundrics, vol. 136 (B) (2-11-1801) p 119.
- ↑ 28 Revenue Sundries, vol. 26. (6 - 11 - 1801) p. 961
- ↑ 29. Ibid. p. 962.
- ↑ 30 Military Consultations vol. 289 (21-10-1801,)pp. 7671-75.
- ↑ 31.Ibid (27-10-1801) p. 7680.
- ↑ 32. Madurai Disrict Records vol. 1133 (29-10-1801) p. 284,
- ↑ 33 .Ibid. 1146 (24-10-1801) p. 23.
- ↑ 34.Military Consultations, vol, 289 (27-10-1801) р. 7080.