மாவீரர் மருதுபாண்டியர்/புயல் ஓய்கிறது

13

புயல் ஓய்கிறது

றவர் சீமையின் மகோன்னத வரலாற்றின் இறுதிப்பகுதி. வீரமும் மானமும் உயிரினும் உயர்ந்ததாக மதிக்கப்பட்ட நாட்கள் மறைந்துவிட்டன. சங்ககாலம் தொட்டு மங்கலத் தமிழ் முழக்கிய மறவர், மாற்றானின் சூழ்ச்சியால் சீரழிவை நோக்கிச் சரிந்தனர். ஆர்க்காடு நவாபினால் அடிமையாக்கப்பட்ட சிவகங்கைச் சீமை மக்களை விடுவித்து மீண்டும் மன்னராட்சியை நிலைநிறுத்தப் போராடிய மருது சகோதரர்களின் தன்னேரிலாத் தலைமையை வரலாறு மறக்கவில்லை. மறுக்கவில்லை. ஆனால் அவர்களால் விடுதலைபெற்ற சிவகங்கைச்சீமை மக்கள்தான் மறந்து விட்டனர். மதம், சாதி, இனம் என்ற மயக்கத்தை ஏற்படுத்திய மாற்றாரின் சதியில் அவர்கள் சிக்கிக் கொண்டனர்.

பாண்டியப் பேரரசர்கள், சேதுபதி மன்னர்கள் ஆகியோர் வழி நின்று, சிவகங்கைப் பிரதானிகள் பொது மக்களது நிறுவனங்களை சாதி, சமய பாகுபாடு இல்லாமல் போற்றிப் பரந்ததைச் சிந்தித்துப் பார்க்கக்கூட இந்த வாதிகளுக்குப் பொறுமை இல்லை. பொது வாழ்க்கையில் குடிமக்களிடையே கள்ளர், மறவர், அகம் படியர் என்ற வேற்றுமை உணர்வுகளை அவர்கள் ஆட்சி ஊக்குவிக்கவில்லை. அதற்குமாறாக, மறத்தமிழினமான இந்த மூன்று கொடிவழிகளையும்,உணர்வுப்பூர்வமாக ஒற்றுமைப்படுத்தும் உருப்படியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வரலாறு காணாத வகையில் மருதுசகோதரர்களும் அவர்கள் வழியினரும் சிவகங்கைச் சீமையின் பல ஊர்களில் உள்ள ஏனைய இரு பிரிவினருடன் மணஉறவுகளைக் கொண்டு இணைந்து மகிழ்ந்தனர். காரனம் சமுதாயமும் நாடும் முன்னேற வேண்டுமானால் வாழ்க்கையின் நேரடியான உண்மைகளை உணர்தல் வேண்டும். அத்துடன் அவை உண்மையாக மட்டும் இல்லாமல் நடைமுறையில் கடைப்பிடிக்கப்படல் வேண்டும். அப்பொழுது தான் அந்தவழியில் வளர முடியும் என்ற நியதிகளை அவர்கள் நம்பினர்.

காளையார் கோவில் முந்தைய போரில் பரங்கியர் சிவகங்கை மன்னர் முத்து ரெகுநாத பெரிய உடையாத் தேவரைக் கொன்றனர். இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி முடியாட்சியைப் பறித்து இருபத்து மூன்று ஆண்டுகள் வெங்கொடுமைச் சிறையில் வாழ்நாளையெல்லாம் வீணாகக் கழிக்கும் படி செய்து அவரைச் சாகடித்தனர்.

சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைக்காரர், சேதுபதி மன்னரை சிறையில் இருந்து மீட்பதற்காக கி.பி. 1799-1800-1801 ஆகிய ஆண்டுகளில், மறவர் சீமையைக் குலுக்கிய மக்கள் கிளர்ச்சிகளை முடுக்கிவிட்டுப் பல போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி, தோல்வியுற்று, கும்பெனியரது கண்களில் படாமல் தலைமறைவு வாழ்க்கையில் தலைகுனிந்து வாழும்படி செய்தனர்.

நாட்டு விடுதலை யொன்றையே நினைவும் கனவுமாகக் கொண்டிருந்த சிங்கன் செட்டி, பொட்டூர், முத்துக்கருப்ப பிள்ளை, திருக்கண்ணத்தேவர், கனக சபாபதித் தேவர், ஜகன்னாத அய்யன், குமாரதேவன் போன்ற மறவர் சீமை மாணிக்கங்களை, சித்திரவதை செய்து, கொதிக்கும் நீரில் கோழிக்குஞ்சுகளை அமுக்கிக் கொல்வது போல, பரங்கிகள், மரணக்குழிக்குள் தள்ளிவிட்டு மூடினர்.

அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் எதற்காக நிகழ்ந்தன? ஏன் நிகழ்த்தப் பட்டன? பரங்கிகளின் இந்த பாதகச் செயல்களின் பின்னணி என்ன?

தருமம் தழைக்க, தங்களது மண்ணில் அதருமர்களான ஏகாதிபத்திய நாய்கள் அட்டகாசம் செய்யக் கூடாது மக்களது நலன்களைப் பாதுகாக்கும் மன்னர்களது தன்னரசுகள் தழைத்து ஓங்கவேண்டும்; மக்களது வயிற்றுப் பசி தணிக்கப்படுவது போல, அவர்களது அறிவுப்பணியினால் பரிமளிக்கின்ற சிந்தனைகள் சமய, சமுதாய மரபுகளை வளர்க்கப் பயன் படவேண்டும் என்பது தான் அன்றைய குடிமக்கள் கொண்டு இருந்த எண்ணங்கள். ஆனால், இத்தகைய இயல்பான எண்ணங்களுக்கு இடையூறுகள் எழுந்தன. அவைகளை அன்னிய சக்திகள் உருவாக்கி ஊக்குவித்தன. அவைகளின் பின்னே ஏகாதிபத்திய வெறியும் அடிமை உணர்வும் அடங்கி விழுந்தன. அப்பொழுது குடிமக்கள் ஆவேசங்கொண்டு கிளர்ந்து எழுந்தனர். புதிய ஆட்சி என்ற முகமூடிக்குள் பதுங்கிக் கொண்டு இருந்த கும்பெனியரின் ஏகாதிபத்திய கனவை கலைத்தனர். கோழைகள் வாழ்வதில்லை; வீரர்கள் வாழ்கின்றனர், முடிவின் தன்மையைப் பற்றிச் சிந்திக்காமல் செயல்பட்டனர். வலு இழந்த நிலையில் தியாகிகள் ஆயினர். அந்தத் தியாகிகளை சாதி, சமய வேறுபாட்டு வேலிகள் சூழ்ந்து இருக்கவில்லை. மாறாக, அவர்களின் உருக்குபோல இறுக்கமாக அணைக்கும் ஒற்றுமை, உயிர்மூச்சாக இயங்கியது. நாட்டுப்பற்று, அவர்களது நெடிய கண்ணோட்டமாகக் காட்சி அளித்தது. காலம் காலமாக, உயர்ந்து நின்ற மறவர் சீமையின் மாண்பை, விழுப்புண் கொண்ட வீரத்தை வீறு கொண்டு, காத்து வளர்க்க வேண்டும் என்ற கவலையும் அக்கரையும் அவர்களிடம் மிகுந்து இருந்தன.

இவைகளுக்குக் குந்தகம் விளைவித்து வந்த அன்னிய ஆதிக்கத்துடன் அலைகடல் போல ஆயுதப் போராட்டங்களில் மோதினர். பதவி மட்டும் போதும் என்ற மனநிறைவில், கொள்ளையராக வெள்ளையரின் கால்நிழலில், காலமெல்லாம் காத்து நிற்கத் தயார் என ஓடிவந்த படைமாத்துார் ஒய்யாத்தேவரைப் போன்று இந்த வீரர்களும், தியாகிகளும் விரும்பி இருந்தால், இந்தப் பரந்த பாரத நாட்டில் வெள்ளையரின் ஆதிக்கம் எப்பொழுதோ எளிதாக முழுதுமாக ஏற்பட்டு இருக்கும். விலை மதிக்க முடியாத காலமும், ஈடு செய்ய முடியாத மக்களது உயிரும் உடமைகளும் விணாகி இருக்காது. ஆனால் மக்களது நலனையே எண்ணிவந்த அந்தத் தலைவர்களின் சிந்தனை அந்தத் திக்கிலே செயல்பட வில்லை அவ்விதம் அவர்கள்.செய்திருந்தால் வரலாறு அவர்களைக் கோழைகள், குறுமதி கொண்ட கொடியவர் என்றல்லவா குறித்து வைத்து இருக்கும். அத்தகைய இழிவு ஏற்படாத வண்ணம், வாழ வேண்டும், மக்கள் புகழ ஆளவேண்டும் என்ற அவாவினால் சிவகங்கைச் சேர்வைக்காரர்கள், அன்றைய தென்னகத்து புரட்சித் தலைவர்களுடன் தோள் சேர்த்து நின்றனர். அன்னிய ஆதிக்கத்தை நாட்டை விட்டு அகற்ற வேண்டும் என்ற அவர்களது குறிக்கோளின் வெற்றிக்காக அனைத்து உதவிகளையும் வழங்கி வந்தனர்.

அந்தப் புதிய பாதையில், நண்பர்களாக நடித்த நயவஞ்சகப் பரங்கியரின் ஆதிக்க வெறியை, போராடிக் களைய வேண்டும் வன்ற மன உறுதிக்கு மகாராஷ்டிர மாநிலத்து தூந்தியாவின் துணையும், இராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி மன்னரது தியாகமும், ஒளிவிளக்காக உதவின. அதனால் மக்களது ஒன்றுபட்ட ஆதரவுடன், மகத்தான மாபாரதப் போரைத் தொடுத்தனர். அதுவரை விசுவாசமாக நடந்து கொண்ட பணியாளர்கள், போராடிய வீரர்கள், நலிவுதீர உதவிய நண்பர்கள், உறவினர்கள் - ஆகிய பல திறத்தவர்களின் பெரும்பகுதியினர் செஞ்சோற்றுக் கடனையாவது கழிக்க வேண்டும் என்ற நெஞ்சுறுதி இல்லாமல் கட்சி மாறி ஓட்டம் பிடித்தனர்; காட்டிக் கொடுத்தனர். காலைவாரி விட்டனர். விடுதலைப் போரின் வேகத்தை திசை திருப்பினர். மறவர்சீமையின் மானங்காத்த தியாகிகளது புனிதப் பதாகையில் மாசு சேர்த்தனர். முடிவு யாரும் எளிதில் ஊகித்து அறியும் ஒன்று தான.

மாற்றானுக்கு எதிராக மகாமேரு போல திரண்டு நின்ற கிளர்ச்சிக்காரர் அணி சிற்றெறும்புக் கூட்டமாக சிறுத்துக் குறுகியது. அதனால், பல நாட்கள் தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட காளையார்கோவில் கோட்டைப்போர் ஒரே நாளில் முடிந்தது. மங்கலம், சங்கரப்பதி, செங்கோட்டை, சிறுவயல், காடுகளில் எத்தனை நாட்களுக்கு அலைந்து வாழ முடியும். காளையார் கோவில் கோட்டை வீழ்ந்த இருபது நாட்களுக்குள் கிளர்ச்சிக்காரர்களது அணி முழுமையாகப் பிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டது. பிறந்த மண்ணைக் காக்கப் போராடிய அவர்களுக்கு பரங்கியர் அளித்த பரிசு - மரண தண்டனை. கொள்ளைக்காரர்களையும் கொடியவர்களையும் கொல்வது போல போராளிகள் அனைவரையும் ஆங்காங்கு தூக்கில் தொங்கவிட்டுக் கொன்றனர். ஆனால் அந்த தண்டனை வழங்கியதில் பரங்கியர் யாருக்கும் பாரபட்சமாக நடந்து கொள்ளவில்லை!

குளத்துர் பாளையக்காரர் கீர்த்த வீர குஞ்சுநாயக்கருக்கும் மரணதண்டனை. மீனங்குடி கனக சபாபதி தேவருக்கும் மரண தண்டனை. ஏன்? மருது சேர்வைக்காரர்களுக்கும் மரண தண்டனை சீறி வரும் சினவேங்கையின் வாலைப்பிடித்துத் தூக்கி, தரையில் அடித்துக்கொல்லும் துணிவும் ஆற்றலுமிக்க வெள்ளைமருது சேர்வைக்காரருக்கும் மரணதண்டனை.

உள்ளங்கை அளவு கனமான ஆர்க்காட்டு நவாப் வெள்ளிப் பணத்தை தனது விரல் இடுக்கில் வைத்து நொடித்து ஒடித்து விடும்[1] பேராண்மை படைத்த சின்னமருது, சேர்வைக்காரருக்கும் மரணதண்டனை.

மருது சேர்வைக்காரர்கள் என்றாலே வெள்ளைப்பரங்கிகள் மனம் ஒடுங்கி, திகில் அடைந்து, வெகுண்டு ஓடியது ஒருகாலம். அப்பொழுது பரங்கிகள் மக்களுக்கு எதிராகத் தனித்து நின்றனர். ஆனால் இப்பொழுது நிலைமை மாறிவிட்டது. அணியிலும் இந்த மண்ணில் தோன்றிய துரோகிகளும் அவர்களது தொங்கு சதைகளான மக்களது ஒரு பகுதியும், அவர்களுடன் சேர்ந்து நின்றனர். மாபாரதப் போரில் அநீதியின் உருவான துரியோதனது அணியில் தானே துரோணரும், பீஷ்மரும், கர்ணனும் இருந்தனர். நியாயம் அவர்கள் கண்ணைக் குருடாக்கிவிட்டு இருந்ததல்லவா!

சிவகங்கை அரண்மனைச் சேவகத்தில் சிறிய சில்லரைப் பணிகளில் தங்களது வாழ்க்கையைத் துவக்கிய மருதுசகோதரர்கள். சிவகங்கை மன்னரது அந்தரங்கப் பணியாளர் பதவிக்கு உயர்ந்தனர். ஆர்க்காடு நவாப்பின் படைகளை சிவகங்கை மண்ணில் இருந்து விரட்டியடித்த வீரப்பணிக்காக அவர்கள் பிரதானிகள் என்ற பெரும் பணிக்கு நியமிக்கப்பட்டனர். சிவகங்கை அரசுத் தலைவர். அப்பொழுது பெண்ணாக விதவையாக இருந்த காரணத்தினால், ஆட்சிப்பொறுப்பையும் அதிகாரத்தையும் சற்று அதிகமாகவே பகிர்ந்துகொண்டனர். அதனால் அண்டை நாடான இராமநாதபுரம் சீமையின் சேதுபதி மன்னரது வெறுப்பிற்கும் விரோதத்திற்கும் ஆளாகி, வீண்தொல்லைகள் வளருவதற்கு வழி கோலினர். அவர்களது தந்தை மொக்கைப்பழனி சேர்வைக்காரரை இராமநாதபுரம் அரசுப்பணியில் அமர்த்திக் காத்து வந்தவர் இராமநாதபுரம் மன்னர் என்பது மட்டுமல்லாமல், இராமநாதபுரம் சிவகங்கைச் சீமைகளில் உள்ள கள்ளர், மறவர், அகம்படியர் என்ற முக்குலத்து மக்களின் முதல் குடிமகன் முத்துராமலிங்க சேதுபதி மன்னர் என்ற பெரும் உண்மையைப் புறக்கணித்து, அவரைத் தங்களது ஜென்மப் பகைவராக ஆக்கிக் கொண்டனர். ஆதலால் மறவர் சீமை மக்களது ஆதரவையும் அனுதாபத்தையும் அவர்களால் முழுமையாகப் பெறமுடியவில்லை. இந்த மிகப்பெருந் தவறுகளுக்கு ஈடாக, இராமநாதபுரம் மன்னருக்கு எதிராக மாற்றானாகிய கும்பெனியாரின் பாசத்தையும் பிணைப்பையும் பெரிதாக மதித்து வந்தனர். இந்தநிலை சிவகங்கைச்சீமை அரசியலுக்கு முற்றிலும் வேறுபட்டதும் மக்கள் நலனுக்கு முரண்பட்டதுமாகும் என்பதை அவர்கள் உணரத் தவறி விட்டனர். இதனை அவர்களுக்கு உணர்த்தும் திறன் படைத்த பெரியவர்களும் அப்பொழுது அவரது பணியில் இல்லை.

அவர்களுக்கு முன்னால், சிவகங்கைச்சீமை பிரதானியாக தாண்வடராய பிள்ளை, சிவகங்கை, இராமநாதபுரத்தின் சீதனச் சொத்து என்ற தொன்மை உறவுடன், இராமநாதபுரம் பிரதானிகள் தாமோதரன்பிள்ளை, பிச்சைப்பிள்ளை, ஆகியோரின் கருத்துக்களை அனுசரித்து அரசியல் பணிகளை அன்னியோன்னிய பிடிப்புகளுடன் ஆற்றிவந்தார். அதே வழித்தடத்தில் மருது சகோதரர்களும் தங்கள் பிரதானி பணியினைத் தொடர்ந்து இருந்தால், மறவர் சீமையிலும் அவர்களுக்கு மதிப்பும் செல்வாக்கும் ஏற்பட்டு இருக்கும். இன அடிப்படையிலும், மறக்குடி மக்களது ஒன்று பட்ட வலிமையை - ஒற்றுமையை - உருவாக்கி வரலாறு படைத்து இருக்க முடியும். அத்தகையதொரு மகத்தான மக்கள் சக்தி முன்னர் எந்த ஆதிக்கவாதியும் ஆதாயம் பெற முடியாது. ஆக்கிரமிப்பாளர் யாரும் எப்பொழுதும் இந்தச்சீமைகளுக்குள் ஊடுருவி இருக்க முடியாது.

வரலாற்று வரிகளைச் சற்று பின்னோக்கிப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். பாண்டியப் பேரரசு வீழ்ச்சிக்குப் பிறகு மதுரைப் பேரரசர்களாக இருந்த சொக்கநாத நாயக்கரும், திருமலை நாயக்கரும்.ராணி மங்கம்மாளும் மறவர் சீமை மீது பல படையெடுப்புகளை நடத்தியும் பேரிழப்புகளைத் தான் பெற்றனர். மகத்தான படைவலிமை பெற்று இருந்த மறவர்சீமை மண்ணில் ஒரு அடி நிலத்தைக்கூட தங்கள் காலடிக்குள் கொண்டுவர முடியவில்லை. ஆனால் அதற்குமாறாக நாயக்க அரசிற்கு ஏற்படவிருந்த அவமானம், பேரழிவு ஆகியவைகளில் இருந்து இராமநாதபுரம் திருமலை ரகுநாத சேதுபதியும், ரகுநாத கிழவன் சேதுபதியும் மதுரை நாயக்க மன்னர்களைக் காப்பாற்றி பேரும், புகழும் பெற்றனர். தமிழகத்தின் தலைநகரான மதுரையின் வாழ்வுகுலைந்து மாநகர் மாற்றானின் சொத்தாக மாறிவிட்டால், மறவர் சீமையின் மாண்பும் மறைந்துவிடும் என சேதுபதிகளது சிந்தனையில் பட்டது. மறவர் சீமைக்கு திருமலைநாயக்கரும் ராணி மங்கம்மாளும் இழைத்த தீமைகளை மறந்து, மன்னித்து, மதுரையை மீட்டனர். மீண்டும் மற்றுமொரு மைசூர்படைகளின் ஆக்கிரமிப்பில் இருந்து கி.பி.1752ல் மதுரையைக்காத்து எங்கோ முடங்கிக் கிடந்த மதுரை நாயக்க மன்னரின் வாரிசான விஜய குமார பங்காரு திருமலையை மதுரை மன்னராக முடிசூட்டி மகிழ்ந்தனர்.

அடுத்து, மதுரைச்சீமையில் குறுகிய கால அதிபதிகளாக இருந்த சந்தாசாகிபும், கம்மந்தான் கான்சாகிபும், முராரிராவும் இராமநாதபுரம், சிவகங்கை மன்னர்களை மதித்து நடக்கும் அரசியலைத் தெரிந்து இருந்தனர். கருநாடாகப் பகுதி முழுவதற்கும் நவாப்பாக இருந்த வாலாஜா முகம்மது அலிகான் இந்த இரண்டு சீமைகளின் மீது இருபத்து ஒரு ஆண்டு கழித்தே ஆக்கிரமிப்பைத் துவக்கினார். இந்த ஆதார நிலையினை, அனுபவமும் துணுக்கமான அரசியல் நோக்கும் இல்லாத மருது சேர்வைக்காரர்கள் புரிந்து கொள்ளத் தவறியதால் கடந்த பத்து ஆண்டுகளாக, இந்த இரு சிமைகளுக்கும் இடர்ப்பாடும் தாழ்வும் தொடர்ந்து வந்தன.

மறவர் சீமை நிலை இப்படியென்றால், இதைவிட மோசமான அரசியல் சூழ்நிலை தமிழகமெங்கும் அப்பொழுது வியாபித்து இருந்தது. பரங்கியரின் வெடி மருந்து ஆற்றல், மன்னர் பரம்பரையினரையும் அவர்களது ஆட்சி வரம்பிற்குட்பட்டு அவர்களது பாதுகாப்பு வளையமாக விளங்கிய பாளையக்காரர்களையும் அழித்து ஒழித்ததால், பரங்கியருக்கு எதிரான அரசு அமைப்பு எதுவும் இல்லாத நிலை. அரசியல் ரீதியாக கடந்த ஒரு நூற்றாண்டுக் காலமாக தமிழகத்தில் அரசியல் ஆதிபத்தியம் கோரி வந்தவரும், பரங்கியரின் பேராசைக்கு - ஆதிக்க வளர்ச்சிக்கு ஆணிவேராக அமைந்து இருந்தவருமான ஆர்க்காட்டு நவாப்பும் அரசியல் சன்னியாசம் பெற்றுவிட்டார். இத்தகைய நிராதரவான சூழ்நிலையில் அவர்களை எதிர்த்து நின்ற சிவகங்கை சேர்வைக்காரர்களையும் அவரது தலைமையிலான கிளர்ச்சிக்காரர்களையும் பரங்கிகள் ஒரே இலக்காகக் கொண்டு, தங்களது அரசியல் சாகசங்கள், ஆற்றல் அனைத்தையும் ஈடுபடுத்தி அழித்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

வாரணம் பொருதும் மார்பும், வரை நிகர்த்த தோளும், வாய்க்கப்பெற்று இலங்கேசுவரனைப் போல, வீரத்திருவாக, மறப், பண்புகளுக்கு விளக்கமாக, மான உணர்வுகளுக்கு இலக்கணமாக, விளங்கிய மருது சேர்வைக்காரர்களுக்கு மரணச் சீட்டுயெழுத அக்கினியூ முடிவு செய்தான். ஆம்! எத்தனை நாட்களுக்குத்தான் இரும்புச் சங்கிலியில் பிணைத்து இரவு பகலாக எச்சரிக்கையுடன் அவர்களை ஒக்கூர் ராணுவ முகாமில் பாதுகாத்து வைத்திருப்பது? அதுவரை பிடிபட்ட கிளர்ச்சிக்காரர்கள் அனைவரையும் அவர்கள் போராட்டம் நடத்திய அல்லது பிடிக்கப்பட்ட ஊர். பொது இடம், அல்லது கோட்டை வாசலில் தூக்கிலிட்டு வேடிக்கை பார்ப்பதும் அத்துடன் குடிமக்களை அந்தக்கொடூரக் காட்சியைக் கண்டு குலை நடுக்கம் கொள்ளச்செய்வதும் அக்கினியூவின் பொழுது போக்காக இருந்தது. ஆனால் சிவகங்கை சேர்வைக்காரர்களை அவர்கள் வாழ்ந்த அரண்மனை சிறுவயலிலோ, ஆட்சி செய்த சிவகங்கையிலோ அல்லது அவர்கள் இறுதியாகப்போரிட்ட காளையார்கோவில் கோட்டையிலோ அல்லது சிறைபடுத்தப்பட்டுள்ள ஒக்கூர் பாசறையிலோ வைத்து தூக்கி விடாமல், திருப்பத்துார் கோட்டையில் தூக்கிலிட முடிவு செய்தான் அக்கியூ. இந்தக் கோட்டையைத் தேர்வு செய்வதற்காக சிறப்பான காரணம் எதுவும் அவர்களது ஆவணங்களில் இருந்து புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் சிவகங்கைச் சீமையின் செல்வாக்கு மிகுந்த இந்தத் தலைவர்களைத் தூக்கில் இடுவதை அவர்களது ஆதரவாளர்களும் உற்றார் உறவினர்களும் காணப்பெறும் வாய்ப்பு அந்த இடங்களில் ஏற்பட்டால் சினமும் சிற்றமும் கொண்டு, நனவெல்லாம் உணர்வாகி நரம்பெல்லாம் இரும்பாகி எழுச்சி கொண்டால்."அந்த இழிவினை இடறுவேன் என்னுடல் மேல் உருள்கின்ற பகைக்குன்றை நான் ஒருவனே உதிர்ப்பேன்" - எனப்புறப்பட்டு விட்டால் - இத்தகைய அச்சமும் குழப்பமும் அக்கினியூவிற்கு இருந்து இருக்க வேண்டும். இந்த ஒரே காரணத்தினால்தான். போரினால் பாழ்பட்டு, பொதுமக்கள் குடியிருப்பும், நடமாட்டமும் இல்லாத சிவகங்கைச்சீமையின் வடகோடியில் உள்ள திருப்பத்துார் கோட்டையின் மேற்கு அலங்கத்தை மருது சேர்வைக்காரர்களை மரணத்தலமாக அவன் தேர்வு செய்து இருக்கவேண்டும்!

இதில் வேடிக்கையான பகுதி என்னவென்றால், சென்னையில் உள்ள கும்பெனி கவர்னர், சிவகங்கைச்சீமை கிளர்ச்சிக்காரர்களை அடக்குவதற்குப் பணிக்கப்பட்ட கர்னல் அக்கினியூவிற்கு கிளர்சிக்காரர்களைப் பற்றிய அறிவுரை அடங்கிய கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்2. அதில் "... ... இதுவரை பிடிக்கப்பட்டுள்ள முக்கியமான கிளர்ச்சிக்காரர்களான வெள்ளைமருது. சின்னமருது, ஊமைத்துரை ஆகியவர்களையும், இன்னும் பிடிக்கப்பட வேண்டியவர்களையும், உடனே விசாரணைக்கு கொண்டு வந்து அவர்களுக்கு கிளர்ச்சியில் உள்ள பங்கு பெற்ற உதவிகள் ஆகியவைகளை இனங்கண்டபிறகு, தக்க தண்டனை வழங்க வேண்டும் ... ... ... எனத்தெளிவாகக் கவர்னர் குறிப்பிட்டு இருந்தார்.

கெட்டிபொம்மு நாயக்கரை. 16-10-1799 ல் கயத்தாறில் தூக்கிலிடுவதற்கு முன்னர் கூட இத்தகைய விசாரணை நாடகம் நடத்தப்பட்டது. 3ஆனால் சில சிவகங்கைச் சேர்வைக்காரர்களையும் அவர்களைச் சார்ந்து நின்ற போராளிகளையும் பொறுத்த வரையில் அந்த கண் துடைப்பு நாடகம் நடத்துவது கூட காலத்தை வீணாக்குவதாகும் என கர்னல் அக்கினியூ முடிவு செய்து இருக்க வேண்டும். மேலும், போராளிகளைத் தண்டிப்பதற்குரிய சர்வவல்லமை படைத்த நீதிதேவன் அவன் ஒருவன்தான் என அவன் நம்பி இருக்க வேண்டும். அத்துடன் மருதுசேர்வைக்காரர் கும்பெனியாரின் பலத்த பாதுகாவலுக்குட்பட்ட கைதிகளாக இருந்தாலும் அவர்கள் இந்தப் பூவுலகில் பெருமூச்சு விட்டுக்கொண்டு இருக்கின்ற ஒவ்வொரு வினாடியும் பரங்கியருக்கு ஆபத்து என்பதை அக்கினியூ உணர்ந்து இருக்க வேண்டும். அதற்காக நியாயங்கள் சூழ்நிலைகளை முற்றுமாக அவன் புரிந்தும் இருக்கவேண்டும் இல்லையெனில் தலைமை இடத்து உத்திரவையும் புறக்கணித்துத் தன்னிச்சையாகச் செயல்பட்டிருக்க வேண்டியது இல்லையல்லவா? கும்பெனியாரது நலன்களுக்கு ஏற்றதான தனது எந்த முடிவையும் செயலையும் கும்பெனி மேலிடம் ஒருபொழுதும் எதிர்க்காது என்ற இறுமாப்பும் அவனுக்கு இருந்திருக்கவேண்டும்! கும்பெனியாரின் பேராற்றலையும் நிருவாக அரசியல் அமைப்பையும், கடந்த ஓராண்டுக்காலமாக மறவர் சீமையின் பல பகுதிகளில் பொருதி நடுநடுங்கச் செய்த மருது சேர்வைக்காரர்களைத் தூக்கில் தொங்கவிட்டு, அவர்களது உயிரற்ற உடல்கள் ஆடி, அசைவதைப் பார்க்க வேண்டும் என்ற அற்பத்தனமான மிருக ஆசையும் அவனுக்கு இருந்து இருக்கவேண்டும்.

ஆதலால் திருப்பத்தூர் கோட்டையின் மேற்குப்பகுதியில் தூக்கு மரங்கள் நாட்டப்பட்டு கொலைக்களம் அமைக்கப்பட்டது. "திசைவிளங்கும் திருப்பத்துர்" என தேவாரம் மூலம் தமிழ் உலகம் மட்டும் அறிந்து இருந்த அந்த ஊரை, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர்ப்படையாக விளங்கிய மருது சேர்வைக்காரர்களது இறுதிக்களமாக, இந்தியத் துணைக்கண்டம் முழுமைக்கும் அறிமுகப்படுத்தும் அரிய பணியை அக்கினியூ செய்தான்.

ஆயிரத்து எண்ணுற்று ஒன்றாவது ஆண்டு, அக்டோபர் மாதம் இருபத்து நான்காவது நாள் ஆங்கில நாட்காட்டியில் அதுவும் ஒரு சாதாரண நாள். இதனைப் போன்ற எத்தனையோ நாட்கள், புலரும் பொழுதுடன் புலர்ந்து மறைந்து விட்டன. ஆனால் நம்மைப் பொறுத்த வரையில் அன்றையப் பொழுது அப்படிப்பட்டதல்ல. வளையாத வரலாற்றில் என்றென்றும் வாழ்ந்து கொண்டு இருக்கும் நாளாக அந்தநாள் வந்தது. தொன்மையை நினைவுபடுத்தி தொல்லைகளைக் களைய முனைபவர்களுக்குத் துணையாகத் துணிவையும் தியாக உணர்வையும் வழங்கும் திருநாளாக வந்தது. அன்று, கர்னல் அக்கினியூ கும்பெனியாரின் தலைவரான சென்னைக்கோட்டையில் உள்ள கவர்னருக்கு ஓலை ஒன்றை அவசரமாக அனுப்பி வைத்தான்.4."... ... ... ...இன்று காலையில் திருப்பத்துர் கோட்டை இடிபாடுகளுக்கு இடையில், வெள்ளைமருதுவும் அவரது சகோதரர் சின்னமருதுவும் தங்கள் புரட்சி நடவடிக்கைக்காக மரண தண்டனை பெற்றனர். அவர்களது மக்கள் சிவஞானத்தை கமுதிக் கோட்டையிலும், உடையணனை திருச்சுழிக் கோட்டையிலும் தூக்கிலிடுமாறு செய்தேன். ஏனெனில், அந்தக் கோட்டைகளுக்கு அவர்கள் புரட்சித்தலைவர்களாக நியமிக்கப்பட்டு இருந்தனர் ... ... ..." மேலும் இன்னொரு அறிக்கையில் "... ... ... மருது சேர்வைக்காரர்களால் (தஞ்சைத் தரணிக்கு) தலைவராக நியமிக்கப்பட்டு இருந்த நிலக்கிழார் சோனமுத்து, தஞ்சை சீமைப்பகுதியைக் கைப்பற்றி கொள்ளையிட்டவன். தஞ்சையிலும் சிவகங்கைச்சீமையிலும் இருந்த இவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவனை அறந்தாங்கி கச்சேரிமுன்பாக நிறுத்தி ஐநூறு கசையடி தண்டனை பெறுமாறும், அடுத்து இரண்டு ஆண்டுகள் இரும்புச் சங்கிலியால் பிணைத்து சிறையில் அடைத்து வைக்குமாறும் உத்தரவிட்டு இருக்கிறேன். மற்றும் தஞ்சைச் சீமையில் கிளர்ச்சிகளை முடுக்கிவிட்டு கொள்ளைகள் நடத்தி, கிராமங்களைத் தீயிட்டு அழித்து குறையாடிய சாக்கோட்டை வீரப்பன் மரணதண்டனை பெறுவதற்கு ஏற்றவன். ஆனால் 2-10-1801ம் தேதிய பொது விளம்பரத்தில் அறிவித்தவாறு, பதினைந்து நாட்களுக்குள் சரணடைந்து விட்டதால், அவனை சாக்கோட்டையிலும், அறந்தாங்கி கச்சேரி முன்பும். நிறுத்தி வைத்து ஐநூறு கசையடி கொடுக்குமாறு உத்தரவிட்டு இருக்கிறேன். அவனது சொத்துக்களையும் பறிமுதல் செய்தும், சிவகங்கை ஜமீன்தாரது உபயோகத்திற்கு உட்படுத்தி இருக்கிறேன் எனத் தெரிவித்து இருந்தான்.5

இவ்வளவு கொடுந்தண்டனைகளை விடுதலைப்போராளிகளுக்குப் பரிசாக வழங்கிய அக்கினியூ இந்த அறிக்கைகளில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட்டு இருந்தான். இராமநாதபுரம், சிவகங்கை, நெல்லைச்சீமையில் உள்ள அனைத்து மக்களையும் நிராயுதபாணிகளாகச் செய்வது எவ்வித - ஆயுதமும் அவர்களிடம் இல்லாமல் பார்த்துக் கொள்வது - அதாவது கிளர்ச்சிக்காரர்கள் முழுமையாக அடக்கப்பட்டுவிட்டதால் காலதாமதம் செய்யாமல் குடிகளிடம் எஞ்சியுள்ள அனைத்து ஆயுதங்களையும் பறித்துவிடுதல் வேண்டும் என்றும் இதற்காக ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள் இராணுவத்தைப் பயன்படுத்துவதும் தேவையான தொன்று எனவும் தெளிவாகக் குறிப்பிட்டு இருந்தான்.6

இந்தக்கடிதத்தை, கொலைகாரன் அக்கினியூ எழுதி முடித்த நேரத்தில் சிவகங்கைச்சீமை சிங்கங்களான வெள்ளைமருது, சின்னமருதுவின் உயிரற்ற உடல்கள் தூக்குமரங்களில் தன்னந் தனியாக தொங்கிக் கொண்டு இருந்தன. ஏகாதிபத்திய வெறி பிடித்த வெள்ளையர்களை சிவகங்கை மண்ணில் இருந்து, ஏன் தமிழ்நாட்டில் இருந்தே அழித்து ஒழிக்க வேண்டும் என்ற அறைகூவலை குடிமக்களிடமும் திருநெல்வேலி, மதுரை திண்டுக்கல் சீமை பாளையக்காரர்களிடமும் முழங்கி வந்த அவர்களது விடுதலை முழக்கம் கேட்கக் கூடாது என்பதற்காக, கொலைகாரர்கள் இட்ட இறுக்கமான சுருக்குக் கயிறு அவர்களது குரல்வளையை அழுத்தி நெருக்கிக் கொண்டு இருந்தது. இனியும் அவர்களது சிம்மக்குரல் கேட்காது. ஆனால், ஏற்கனவே அவர்கள் எழுப்பிய ஆவேசக்குரல் எங்கெல்லாமோ கேட்டுக் கொண்டு இருந்தது. வெள்ளைப் பரங்கிகளை எதிர்க்கும் போராட்டக் குளவையாகி ஒலித்தது.

திண்டுக்கல், பழனி, விருபாட்சி. சத்திரப்பட்டி ஆகிய ஊர்களில் தொடர்ந்து கிளர்ச்சிகள் வெடித்தன. தங்களது ஆயுத வலிமை, குள்ள நரித்தந்திரம், துரோகம் ஆகியவைகளைத் துணைக் கொண்டு கும்பெனியார் நூற்றுக்கணக்கான வீரர்களைத் தியாகிகளாக்கினர். அவர்களுக்கு மருது சேர்வைக்காரர்கள் ஊட்டிய போதம் - ஏகாதிபத்திய எதிர்ப்பு, தன்மானம், தன்னரசு நிலை என்ற இலக்குகளை நோக்கி மக்கள் மேலும் மேலும் வீறு கொண்டனர். வெள்ளையரின் ஆயுதவலிமை வெல்ல முடியாதது அல்ல என்ற வீர உணர்வை ஊட்டிய சிவகங்கைச் சேர்வைக்காரர்களது போராட்டப் பாதையைப் பின்பற்றி, வெற்றி தோல்வியை நினையாமல் ஏகாதிபத்திய எதிர்ப்பை இலக்காக கொண்டு அந்த வீரர்கள் நடைபோட்டனர்.

தெற்கே தமிழகத்தில் இவ்விதம் தொடங்கிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர்தான் காலம் செல்லச் செல்ல இந்திய விடுதலைப் போராக வடக்கிலும், தெற்கிலும், மேற்கிலும், இந்திய துணைக் கண்டத்தின் பெரும்பகுதிகளில் பரவியது. அவை தொடங்கப் பெற்ற காலமும் இடமும் கருவும் வேறுபடலாம். அவை அனைத்தின் பின்னணி ஒன்றே ஒன்றுதான். ஆதவன் அஸ்தமிக்காத வெள்ளை ஏகாதிபத்தியப் பேரரசு நிழல் இந்தப் புனித மண்ணில் படரக்கூடாது என்பது. அதற்கான துவந்த யுத்தத்தில், வெள்ளை அசுரர்களை அழிக்க ஆயுதங்தாங்கி போரிட்டுக் களபலியான முதன்மைத் தளபதிகள் சிவகங்கைச் சேர்வைக்காரர்கள், அந்த முன்னோடி மறவர்களை முண்டியடித்துக் கொண்டு தியாகிகள் ஆன வீரர்கள் பட்டியல் ஏட்டில் அடங்காதது. "எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும், மக்கள் இனம் ஈன்ற தமிழ்நாடு தனக்கும், தினையளவு நலமேலும் கிட்டுமானால், செத்தொழியும் நாள் திரு நாளாகும்" என்ற சிந்தனை வயப்பட்டவர்கள் அவர்கள் அனைவரும்.

  1. Col Welsh: Military Reminiscenes vol II (1848).