மாவீரர் மருதுபாண்டியர்/கும்பெனியாருக்கு கடைசிகடிதம்



6

கும்பெனியாருக்கு கடைசிக்கடிதம்

சிவகங்கைச் சேர்வைக்காரர்களது சீற்றமான மன உறுதியைப் போல கும்பெனியாரும், அவர்களை அழிப்பதில் முனைந்து நின்றனர். கூடுதலாக எவ்வளவு வீரர்களைத் தங்கள் அணியில் சேர்க்க வேண்டும் என்பதற்கான ஆயத்தத் திட்டங்களை இராமநாதபுரம் கலெக்டர் தயாரித்து வந்தார். அத்துடன் சிவகங்கைச் சேர்வைக்காரர்களது இறுதிப் போர்க்களமாக விளங்கப்போகும் காளையார் கோவில் கோட்டையை அரண்மனை சிறுவயலில் இருந்து அணுகுவதற்கு ஏற்றவகையில் அரண்மனை சிறுவயலில் இருந்து காளையார்கோவில் கோட்டைத் திக்கில் ஒன்பது மைல் தொலைவில் காட்டை வெட்டி, அழித்து பாதை உண்டாக்குவ தற்கு எவ்வளவு பேர்கள் தேவைப்படும். எவ்வளவு பணம் செல வாகும் என்பதற்கான மதிப்பீடுகளையும் தயாரித்து சென்னைக்கு ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார்.[1]

சிவகங்கைக் கிளர்ச்சிக்காரர்களும் சிவகங்கைச் சீமையின் வடமேற்கு எல்லையில் நத்தம் பகுதியில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிவந்தார்கள். காரணம், அங்கு கும்பெனியாரது பணியில் இருந்த தாசில்தார் ஒருவர் மறைந்து வாழ்ந்து, பரங்கியருக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்ட தேவதானப்பட்டி கோபால நாயக்கரையும் அவரது ஆட்களையும் தீவிரமாக வேட்டையாடிப் பிடித்தார். அதனால் அங்குள்ள மக்கள் கொதிப்படைந்தனர். சிவ கங்கைக் கிளர்ச்சிக்காரர்கள் அவர்களது துணை கொண்டு அந்தக் கும்பெனியாது கைக்கூலி தாசில்தாரைக் கொலை புரியச் செய்தது தன் அங்கு இருந்து பயந்து ஒடிய பாளையக்காரரை வர வழைத்து அவரையும் கிளர்ச்சியில் இணைத்து நத்தம் பகுதி முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.[2] மருது சகோதரரர்களது இந்தக் கிளர்ச்சியினால் நவாப்பின் முகவர்களும் பரங்கிகளும் பயந்து மிரண்டனர்.

இந்தக் குழப்பமான சூழ்நிலையில், சிவகங்கை சேர்வைக்காரர் சென்னையில் கும்பெனியாரது கவர்னராக இருந்த கிளைவ்விற்கு நீண்ட கடிதம் ஒன்றை வரைந்தார். அந்தக் கடிதத்தில்[3],

".. ... ... இதுவரை கும்பெனியாருக்குச் செலுத்த வேண்டிய கிஸ்திப்பணத்தைத் தவறாமல் செலுத்தி வந்து இருக்கிறேன். கும்பெனியாரது கட்டளைகளையும் பின்பற்றி வந்து இருக்கிறேன். மக்லாயிட்டுடனும், அவருக்கு அடுத்து வந்த கும்பெனி அலுவலர்களிடமும் எனது தொடர்புகள் சுமுகமாக இருந்து வந்தன. ஆனால் லூவிங்டன் பணியை ஏற்றுக் கொண்டதில் இருந்து அவரது நடவடிக்கைகளால் என்னைக் கொடு மைப்படுத்தி வந்துள்ளார். அதன் காரணமாக இப்பொழுது தங்களை அணுகி இருக்கிறேன்.

"கடந்த ஆண்டு லூஷிங்டன், இரண்டு அரிக்காரர்களை[4] என்னிடம் அனுப்பி வைத்து, காதில் குட்டி நாயக்கரைப் பல வந்தமாக நான் சிறைப்படுத்தி வைத்து இருப்பதாகவும் அவரை உடனே விடுதலை செய்து விடுமாறும் கோரிக்கை அனுப்பிவைத்தார். நான், அந்த ஆசாமியின் முகத்தைக்கூட பார்த்தது கிடையாது என்றும், அவர் இந்தச்சீமையில் எந்த இடத்திலும் இல்லை யென்றும் தெரிவித்தேன். எனது பதிலில் அவர்களுக்கு மனநி றைவு ஏற்படவில்லையென்றால் இந்தச்சீமையில் அவரை எந்த இடத்திற்கும் சென்றும் தேடிபிடித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தேன். மீண்டும் புதிய அரிக்காரர்களை அனுப்பி வைத்து, அவர்களும் எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்துவிட்டு அவரிடம் சென்று தகவல் சொன்னதற்கு அவரே வந்து தேடிக் கண்டுபிடிப்பதாகச் சொன்னாராம்.

இந்த ஆண்டில் மட்டும் பத்து அரிக்காரர்கள் இங்கு அனுப்பப்பட்டு உள்ளனர். அவர்களில் ரங்கராயர் என்பவர் ஒருவர். அவர் ஒரு தனிப்பிறவி. அவர் தமது விசாரணையில் கண்ட தகவல்களுடன் பொய்யைக் கலந்து புனைந்து உரைப்பதில் வல்லவர். ... ... ... சுருக்கமாகச் சொன்னால் அவர் எனது விஷயங்களில் தலையிட்டு பலவகைகளிலும் எனக்கு இடைஞ்சலை ஏற்படுத்தி வந்தார். இவை அனைத்தையும் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் மிகவும் பொறுமையாக சகித்துக் கொண்டேன். நான் ஒளித்து வைத்து இருப்பதாகப் புனைந்து உரைக்கப்பட்ட ஆசாமியைப்பற்றி எல்லாவிதமான விசாரணைகளையும் மேற்கொண்டார்.

'கும்பெனியார் தங்களது ஆதிக்கத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் அங்கங்கே உள்ள வளமையான மரபுகளை நேர்மையான முறையில் கடைப்பிடிப்பது தான் முறையானதாகும். இவை களுக்கு முரணாக இராமநாதபுரம் கலெக்டர் அபிராமத்தில் உள்ள சிலரது போதனைகளின்படி, எனது சீமை எல்லைக்குள் உள்ள நீர்ப்பாசன வரத்துக்கால்களை நீக்கிவிட்டார். அவரது நடத்தையைப் பற்றி அந்த மக்கள் புகழ்ச்சியாகப் பேச வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக.

'முன்னாள் கவர்னர் ஹோபர்ட், எனது மகனுக்கு சென்னையில் பேட்டியளித்து பெருமைப்படுத்தினார். அந்த அனுகூலமான வரவேற்புக்கும் புகழ்ச்சிக்கும் பிறகு கலெக்டரைச் சந்தித்து அவரது ஆலோசனைகளையும் பெறுதல் நல்லது எனக் கருதப்பட்டது.

கலெக்டர் தம்மைச் சந்திக்குமாறு எனக்கு கட்டளை இட்டார். சிவகங்கை அரசுக்குரிய வம்சாவளி அட்டவணையை, எனக்கு உடல் நலமில்லாததால் அரசரது பங்காளி மூலம் அனுப்பி வைத்தேன். எனது எஜமானரது இளைய சகோதரரைத் தகுந்த அலுவலர்களுடன் அனுப்பி வைப்பதாக எழுதி இருந்தேன். அதற்குக் கலெக்டர் எனது பதிலைக்கோரி அனுப்பிய கடிதத்தைத் தங்கள் பார்வைக்கு அனுப்பி இருக்கிறேன்.

"பாஞசாலங்குறிச்சிப் பாளையக்காரர், தமது சுயபுத்தியுடன் கும்பெனியாருக்கு எதிராக மற்றவர்களது ராஜவிசுவாசத்தைக் குலைப்பதற்கு, பல கிராமங்களில் கொள்ளையை மேற்கொண்டுள்ளார். அதற்கு எனது பெயரையும் பயன்படுத்தி உள்ளார். இது சம்பந்தமாக கலெக்டர் தங்களுக்கு எத்தகைய முறையீடுகள் அனுப்பி இருந்தாலும் சரி, அவைகளில் கும்பெனியாரது நலனுக்கு எதிராக எவ்விதப் பங்கும் எனக்கு இல்லையென்பதை வலியுறுத்தி சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எந்த மனிதனும் தனது அழிவைத்தானே தேடிக்கொள்ள மாட்டான். இது சம்பந்தமாக முழு விசாரணையொன்றைத் தாங்கள் மேற்கொண்டால், கும்பெனியாருக்கு முழுவதும் கட்டுப்பட்டவனாக, கும்பெனியாரது நியாயத் தீர்ப்பில் நம்பிக்கை கொண்டவனாக, சாட்சியம் வழங்கச் சித்தமாக இருக்கிறேன்.

"இதுவரை இங்குப் பணியாற்றிய கலெக்டர்கள் இங்குள்ள நிலைமைகளைப் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப அவர்கள் நடந்து கொண்டனர். அப்பொழுதைக்கப் பொழுது வசூலிக்க வேண்டிய தொகைகளை வசூலிப்பதும், குடிமக்களைப் பாதுகாப்பதும் அவர்களது பணியாக இருந்தது. அவர்களது நடவடிக்கை களினால் குடிமக்களுடைய வளமையான வாழ்க்கை நிலைகள் பாதிக்கப்படவில்லை. அவர்களும் கும்பெனியாரது முன்னேற்றத் தில் அக்கரையுடையவர்களாக இருந்தனர். ஆனால் கலெக்டர் லூஷிங்டனது நிர்வாகம் துவங்கியதிலிருந்து நிலைமை மாறி விட்டது. எங்கு பார்த்தாலும் தொடர்ந்து அமைதியின்மை; முறையான தேதி வழங்கலும் இல்லை. இந்த நாட்டு மரபுகளைப் பேணுவதற்கும் அவர் தவறிவிட்டார். பலவிதமான அக்கிரமங்களைக் கையாண்டு, குடிகளுக்கு குத்தகை வழங்குவதில் பல கொடுமையான முறைகளைப் பின்பற்றினார்.

"இத்தகைய நிலைமைகளை இந்த முறையீடு போன்று அல்லாமல், விருப்பு, வெறுப்பு அற்ற ஒருவரது விசாரணை மூலம் தான் தங்களது கவனத்திற்கு கொண்டுவர முடியும். குடிகளும் அவர்களது பங்கினை,வளமையான முறையில் அடைந்தால்தான், அவர்களுக்கு நிலையான மகிழ்ச்சி ஏற்படமுடியும். கும்பெனி யாரது நலன்களிலும் நாட்டங்கொள்ள இயலும், லூவிங்டன் இவைகளைப் புரிந்து கொள்ளாமல் இவைகளுக்கு மாற்றமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தாங்களும் இந்த நாட்டின் மரபுகளை வெறுத்து ஒதுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்.

"முன்பெல்லாம், இந்தச்சீமை வக்கில்கள் கவர்னரது சமூகத்

தில் இருந்து வந்தனர். அதனால் எங்களது குறைபாடுகளை தங்களிடம் உடனுக்குடன் தெரிவிக்க முடிந்தது. தீர்வு காண உதவியது. இந்த முறை இப்பொழுது இல்லாததால் எங்களது குறைபாடுகளை முறையீடு செய்வதில் மிகுதியான சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் கும்பெனியாருக்கு பாரபட்சமற்ற நீதி வழங்கும் பெருமை உண்டு. ஆனால் கும்பெனியாரது ஊழியர்களின் தவறான நடத்தையினால் அந்த நல்ல பெயருக்குக் களங்கம் ஏற்பட்டு இருக்கிறது. தங்களிடம் சமர்ப்பிக்கப்படும் இந்த முறையீடு பற்றி முழு விசாரணை நடத்த வேண்டும் என்ற காரணத்திற்காகத்தான் இவைகளை இங்குக் குறிப்பிடுகிறேன். இதன்மூலம் என்மீது பழி ஏற்படுமானால் எனக்கு தாங்கள் எத்தகைய தண்டனை வழங்கினாலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். எனினும், எனது கடமையிலும் கும்பெனியார்பால் கொண்டுள்ள தோழமையிலும் நான் தவறிவிட்டதாக எனது செயல்பாடுகள், எனது நடத்தைப்பற்றி பழி ஏற்படுத்துவதற்கு உதவினால் எனது துரதிர்ஷ்டத்தைத்தான் நொந்து கொள்ள வேண்டியதாக இருக்கும்.

எனது சீமை காடுகள் நிறைந்தது. நாடோடிகள், தெற்கிலிருந்து வடக்கிலும், மேற்கே கர்நாடகத்திற்கும், தஞ்சாவூர் சிமைக்கும், செல்வதற்கு சாலை வசதிகள் கிடையாது. அவர்கள் அனைவரையும் நோட்டமிட்டு வருவதும் இயலாத காரியம். அவர்களுக்கு எப்பொழுதும் நான் புகலிடம் அளிக்கவில்லை. வாய்ப்புகள் எற்படும் பொழுது நானே அவர்களைப் பிடித்துக் கொடுத்து இருக்கிறேன். இதனால் தங்களது பாராட்டுதலைப் பெற்று, நிரந்தரமான மகிழ்ச்சியை அடைவது என்பது எனது ஆசை. தாங்கள் அனுமதி அளித்தால் தங்களை நேரில் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்.

பாஞ்சைப்பாளையக்காரர். தமது தவறான நடத்தைமூலம் மற்றவர்களையும், ராஜவிசுவாசமற்ற நிலையில் ஈடுபடுத்துவதற்காக சில கடிதங்களை எழுதியுள்ளார். எனக்குத் தெரிந்தவரை யில், சில பாளையக்காரர்கள், அந்தக் கடிதங்களுக்கு ஒப்புதல் அளித்து. அவருக்கு சில ஆட்களையும் வெடிமருந்துப் பொதிகளையும் கொடுப்பதாக வாக்களித்து உள்ளனர். ஆனால் இவை பாளையக்காரர்கள் மீது பொதுவாக சந்தேகங் கொள்வதற்குரிய கண்டுபிடிப்பு என்பதை எளிதில் கண்டு கொள்ளலாம். கலெக்டரது கடுமையான நடவடிக்கை எதுவாக இருந்தாலும், இன்னும் பாளையக்காரர்கள் அவருக்கு கட்டுப்பட்டவராக இருந்து வருகின்றனர். இதனை உறுதிப்படுத்துவதற்கு உதாரணம் எதையும் இங்குக் குறிப்பிடவேண்டியதில்லை. ஆனால் தாங்கள் இது சம்பந்தமாக விசாரணை ஒன்றைத் துவக்கினால், அது தங்களுக்கு மனநிறைவை அளிக்கும் என்பது உறுதி".

சிவகங்கைச்சேர்வைக்காரர்களது இந்தக் கடிதம் அன்றைய பாங்கியர் எதிர்ப்பு சூழ்நிலையில் எந்த நோக்கத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது என்பதைப் புரிந்து கொள்வது சிரமமாக உள்ளது. தொடர்ந்து, பரங்கியரது நிழல் கூட தமது மண்ணில் படுவதற்கு அனுமதிக்க கூடாது என்ற வகையில் செயல் பட்டு வந்த சிவகங்கைச் சேர்வைக்காரர்கள் இத்தகைய இயல்பான நடையில் இந்தக் கடிதத்தினைக் கும்பெனியாருக்கு ஏன் எழுதினார் ... ... ... ...? ஒரு வேளை அவர்கள் மீது துவக்கியுள்ள போர் ஆயத்தங்களை அவர்கள் சரியாக புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவோ, அல்லது அவர்களது கவனத்தைத் திசை திருப்பி, கடிதப்போக்குவரத்திலும் விசாரணையிலும் சிறிது காலத்தை நீட்டிப்பு செய்யலாம் என்ற கருத்தில் அந்த கடிதம் எழுதப்பட்டு இருக்க வேண்டும் என ஊகிக்கப்படுகிறது.

ஆனால் கும்பெனி கவர்னர் அந்தக் கடிதத்தை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. [5]ஏனெனில் சிவகங்கைச் சீமைக் கிளர்ச்சியினை அடக்கி அழித்து ஒடுக்குவதற்கான அனைத்து ஆயத்தங்களிலும் கும்பெனியார் முனைந்து நின்றனர். சென்னை கவர்னர் அப்பொழுது உள்ள கவர்னர் ஜெனரலுக்கு அனுப்பி வைத்த அறிக்கை இதனைத் தெளிவுபடுத்துகிறது.[6]

... ... ... ... ...இராமநாதபுரம் பாளையத்திற்குப் பக்கத்தில் உள்ள சிவகங்கை ஜமீந்தார் பகுதிக்கு புரட்சியின் போக்கு பரவி உள்ளது. அந்த ஜமீந்தாரின் அமைச்சர்கள் இந்த மனப்பான்மையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். கும்பெனியாரின் நிர்வாகத்திற்கு எதிராக திருநெல்வேலிச் சீமையில் புரட்சியைத் தூண்டி தங்களது அதிகாரத்திற்குட்பட்ட அனைத்தையும் செய்துவிட்டு பாஞ்சாலங்குறிச்சிப் போரில் தறிபட்டு ஒடிவந்த அகதிகளுக்கு அடைக்கலம் தந்து கும்பெனித்தளபதி அக்கினியூவின் தலைமையில் உள்ள அணிகளுடன் பகிரங்கமாகப் பொருதுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

"மருது சேர்வைக்காரரது நிலைகளைச் சென்று அடைவதற்குள்ள இடையூறுகள் அனேகம், அவை நமது அணிகளின் முன்னேற்றத்தைப் பாதிக்கும். அந்தச் சீமையின் இயற்கையான அமைப்பு. காட்டு அரண்களில் உள்ள தளவாடங்களைப் பாதுகாப்பது, கர்னல் அக்கினியூவின் உத்திகளை நிலைகுலையச் செய்ய உறுதிபூண்டு ஆயுதம் தாங்கியுள்ள பதினைந்தாயிரம் புரட்சிக்காரர்கள் ஆகிய இணக்கமற்ற சூழ்நிலைகள் ... ... "

கும்பெனியாரது நடவடிக்கைகள் பரவலாகத் தீவிரமடைந்தன. போராளிகளது தினவு எடுத்தத் தோள்களும் சும்மா இருக்கவில்லை. என்றாலும், அன்றைய அரசியல் சூழ்நிலையில் பரங்கியரைத் தனியாகவோ அல்லது கூட்டாகவோ எதிர்த்துப் போராடக்கூடிய வலிமை வாய்ந்த தலைமை தென்னகத்தில் ளங்குமே இல்லை. விடுதலை வீரன் திப்பு சுல்த்தானது வீழ்ச்சிக் எழுந்த அரசியல் சூனியம் இதுவாகும். தமிழக அரசியல் கும்பெனியார் நேரடியாகத் தலையிடும் வரை, மிகப்பெரும் அரசியல் சக்தியாக விளங்கிய ஆர்க்காடு நவாப் என்ற அரசியல் பீடமும் இப்பொழுது இல்லாது போயிற்று.

  1. 1. Madurai District Records, vol. 1133, (14-12-1801)p. 288.
  2. 2 Ibid, vol., 1134, (8-6-1801), p.p. 133-5.
  3. 3. Revenue Consultations, vol. 1 10, (24-7-1801), p. 1861-69.
  4. * அரிக்காரர்-ஒற்றர்கள், பெரும்பாலும் பிராமணர்கள் இந்தப்பணியில் கியமிக்கப் பட்டு இருந்தனர்.
  5. 4 Revenue Consultations vol. 110- (31-7-1801) p. 1470
  6. 5 Political Consultations, vol. 5 - (1801) 1643.-44