மாவீரர் மருதுபாண்டியர்/அழிந்து வந்த ஆற்காடு ஆட்சி



7

அழிந்து வந்த ஆர்க்காடு ஆட்சி

யர்விற்கு உதவும் உத்தமர்களை எத்திவிடும் எத்தர்களாக விளங்கினர் வெள்ளைப்பாங்கிகள். வியாபாரத்திற்காகத் தமிழ்நாட்டிற்கு வந்து, சென்னைக் கடற்கரையில் கிட்டங்கியும் கோட்டையும் அமைத்து, ஆர்க்காட்டு நவாப்பின் தோழமையையும் தாராள மனப்பான்மையையும் சாதகமாக்கிக் கொண்டனர். நவாப்பின் எதிரிகளை அடக்குவதற்கு முன் வந்த அவர்கள், நாளடைவில் தங்களது நயவஞ்சகச் சூழ்ச்சிகளிலும், சதிகளிலும் நவாப் முகம்மது அலியைச் சிக்கவைத்து, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, அவரைத் தங்களுக்குப் பயன் அளிக்கும் பகடையாக அரசியல் களத்தில் பயன்படுத்தினர். தமது வலையில் சிக்கிய இரையை சிறுகச் சிறுகச் சிதைத்து உண்ணும் சிலந்திப் பூச்சியைப் போன்று, அவரை ஈடுசெய்யாத பெருங்கடனாளியாக்கி, அவரது உரிமைகளையும் உடமைகளையும் கொள்ளை கொண்டனர். ஆதாயத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, செலவு அனைத்தையும் நவாப் முகம்மது அலியின் தலையில் கட்டி, வசூலித்தனர். இந்தப் பகற் கொள்ளையைத் தடுக்க முடியாத நவாப் முகம்மது அலி, கடனாலும், எதிர்நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாத கவலையினா லும், இயலாத்தன்மையினாலும் நைந்து நலிந்து கி.பி. 1795ல் இறந்தார்.[1]

அடுத்து நவாப் பதவிக்கு வந்த நவாப் உம்தத்துல் உம் ராவைப் பயமுறுத்தி காலாவதியாக விருக்கும் 1792ம் வருட உடன் பாட்டைத் திருத்தி நீடித்துக் கொள்ள முயன்றனர். இதற்கு ஆயுதமாக இறந்துபோன நவாப் முகம்மதுஅலி மீது ஒரு பெரிய பழியையும், சுமத்தினர். அவர்களுடன் நண்பராக இருந்த நவாப் முகம்மது அலி. அவர்களது பொது எதிரியான மைசூர் மன்னர் திப்புசுல்தானிடம் ரகசிய கடித தொடர்பு கொண்டு இருந்தார் என்பது,[2] ஆதாரமற்ற இந்தப் புகார் பற்றி நடுவர் விசாரணை நடத்துமாறு நவாப் உம்தத்துல் உம்ரா கோரினார். ஆனால் பரங்கிகள் அதற்கு ஆயத்தமாக இல்லை. கும்பெனியாரது தலைமை இரண்டு நடுவர்களைக் கொண்ட குழு சென்னையிலும், பரீரங்கப்பட்டினத்திலும் உள்ள முக்கியமான பரங்கிகளை விசாரிக்கச் செய்தது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி நவாப்பினதும் மைசூர் மன்னருடையதுமான கடித வாசகங்களில் இரசிய செய்திகள் எதுவும் இல்லை என்பதைத் தெரிந்து குழு அறிக்கை கொடுத்தது. ஆனால் கும்பெனி தலைமை இந்த நடுவர் அறிக்கையை எற்றுக் கொள்ளவில்லை. ஆனால் நவாப்பின் ஆட்சேபனைகளுக்கு மாற்றமாக கி.பி 1792ம் ஆண்டு உடன்படிக்கைப்படி நெல்லை, மதுரை-மறவர்-திருச்சி-வடஆற்காடு, நெல்லூர், பழனி ஒங்கோல் சீமைகளை நவாப்பிடம் ஒப்படைக்காமல் அவர்களே தொடர்ந்து அங்கு தங்கள் நிர்வாகத்தை நடத்தி வந்தனர். [3]நவாப்பினது ஒப்புதல் இல்லாமலேயே, மறவர் சீமையின் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்ட மன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதிக்கு அவரது பெண்மகள் வாரிசு இருக்கும் பொழுதே கையூட்டுப் பெற்றுக் கொண்டு, அந்த மன்னரது தமக்கை மங்களேசுவரி நாச்சியாரை சேது மன்னரது வாரிசாக ஏற்றுக் கொண்டனர். [4]நோயினால் நலிவுற்று இருந்த நவாப்பினது தந்தை பலவீனமான நிலையைப் புரிந்து கொண்டு கும்பெனியார் நவாப்பினது தந்தை வாலாஜா முகமது அலி காலத்தில் இருந்து குதிரைப்படை செலவு கணக்கில் 11, 62, 770 பக்கோடா பணம் பற்றாக இருப்பதாகவும் அதனை நேர் செய்வதற்கு ஏற்பாடு செய்தால் திப்பு சுல்தான்மீது தொடுக்கவிருக்கும் நான்காவது மைசூர் போரினால் நவாப்பும் ஆதாயம் பெறலாம் என வற்புறுத்தினர்.[5] பரங்கியரது இந்த பேராசைக் கோரிக்கை நவாப்பிற்கு அதிர்ச்சியை அளித்தது. ஏனெனில், இத்தகையதொரு கடன்பாக்கி பற்றி இதுவரை எந்தவித குறிப்பும் கிடையாது. கி.பி. 1749 முதல் கி. பி. 1792 வரை ஆர்க்காடு நவாப்பிற்காக பரங்கி கள் ராணுவ உதவி புரிந்ததற்காக அப்பொழுதைக்கப் பொழுது உரிய வெகுமதியை ரொக்கப்பணமாகவோ அதற்கு ஈடான நடவடிக்கைகள் மூலமாகவோ பெற்றள்ளனர். நவாப் வாலாஜா முகம்மது அலியும் கும்பெனியாரும் கடைசியாக கி. பி. 1792 ல் செய்து கொண்ட கர்நாடக உடன்படிக்கையில் இத்தகையதொரு கடன் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. மேலும் நவாப் கும்பெனியாருக்குக் கொடுக்க வேண்டிய அனைத்துப் பாக்கிகள் பற்றியும் இந்த உடன்படிக்கையின் பாரா 4,5,6,7,9ல் தெளிவாக வரையறுக்கப்பெற்று இருந்தது. [6]இன்னும் சுருக்கமாகக் குறிப்பிட வேண்டுமானால், கி. பி. 1758-59ல் சென்னை கும்பெனியாரது கோட்டையைக் பிரஞ்சுக்காரர்களை விரட்டியடிப்பதற்கான கும்பெனியாரது ராணுவச் செலவு முழுவதையும் நவாப் வாலாஜா முகம்மது அலி ஏற்றுக் கொண்டார். ஏனெனில் அந்தக் கோட்டை அவரது நண்பர்களது இருக்கையல்லவா? அதேபோல் கி .பி. 1761 ல் கும்பெனியார் பிரஞ்சுக்காரர்களின் பாண்டிச்சேரிக் கோட்டையைப் பிடிப்பதற்கான ராணுவச் செலவையும் நவாப்பே ஏற்றுக்கொண்டார். என்ன காரணம் தெரியுமா? பாண்டிச்சேரி அவரது எதிரியின் கோட்டை.[7] அத்துடன் மைசூர் திப்புசுல்தானுடனான போர் கும்பெனியாரது சுயநலத்திற்காக மேற்கொள்ளப்பட்ட தனிப்பட்ட நடவடிக்கையாகும். அந்த அளவுக்குக் கும்பெனியாரைத் தமது நெருக்கமான நண்பர்களாகக் கொண்டிருந்த நவாப் முகம்மது அலிக்கு அந்தப் பரங்கிகள் செய்த கைம்மாறு இதுதான். இத்துடன் அவர்கள் தங்கள் துரோக நடவடிக்கையை நிறுத்திக் கொண்டு இருந்தால் கூட அவர்களைப் பழிக்காமல் இருந்திருக்கலாம். பேராசையும் அதிகார வெறியும் பித்தாக மாறி பேயாட்டம் ஆடிய அவர்களது சுய உருவம் அறிந்து தவித்த நவாப் உம்-தத்துல்-உம்ரா, தாங்க முடியாத கவலை, கடன் தொல்லை. குடிமக்களையும் நவாப்பின் ஊழியர்களையும் தங்களது ஆயுத பலத்தினால் பயமுறுத்தி, நவாப்பிற்கு வருமானம் எதுவும் கிடைக்காமல் செய்யும் கொடுமை. வேதனையும் விரக்தியும் சேர்ந்த நோயாளியாக 15-8-1801 ல் பரங்கியரது அவமானத்தினின்றும் தப்பித்துக் கொள்ள கண்ணை மூடிவிட்டார்.[8] அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் இவர் கும்பெனியாரது தலைமைக் கொள்ளைக்காரரான கிளைவுக்கு எழுதிய கடிதம்.

".... பீதியடைந்த மான் அபாயத்தை அறிந்தவுடன் தனது வலுவையெல்லாம் சேர்த்து பாய்ந்து பறந்து யாருபுக முடியாத புதர் நிறைந்த காட்டிற்குள் மறைந்து விடுகிறது. ஆனல் எனக்கு அத்தகைய புகலிடம் எதுவும் இல்லை. எதிரிக்கு முன்னால், என்னைத் தற்காத்துக் கொள்ள முடியும் அல்லது அவ னது தாக்குதலில் இருந்து தப்பித்து விடமுடியும். ஆனால், நீண்ட கால நட்பின் படைபலம் எனக்கு முன்னே நெருங்கி நிற்கிறது. என்மீது அழிவு அம்புகளைச் சொரிகிறது ... ... எனது நம்பிக்கைகள் நசிந்து விட்டன. மகிழ்ச்சிக்கான அறிகுறி கண்ணுக்கெட்டிய தூரத்தில் தென்படவில்லை. ரோஜா மலரின் இதழ்கள் அனைத்தும் உதிர்ந்து விழுந்துவிட்டன. எனது கையில் அந்த மலரின் முட்கள் மிகுந்த காம்பு மட்டும் உள்ளது. ... ...[9]

பச்சைத் தூரோகிகளான பரங்கிகளது பயங்கரமான சதித் திட்டத்தினால் பாந்தள் வாய்ப்பட்ட தவளை போலத் துடித்துக் கொண்டிருந்த நவாப்பின் நெஞ்சத்தில் இருந்து கசிந்த இரத்தக் கண்ணீரில் எழுதப்பட்டு இருந்தது இந்தக்கடிதம்.

ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி கர்நாடக அரசியல் அதிகாரங்களை முழுமையாகப் அவரிடமிருந்து பறிப்பதற்கு பரங்கிகள் முயன்றனர். நவாப்பின் முத்த மகன் அலிஹாலைன், தங்களுக்கு இணக்கமாக அல்லாமல் எதிரிடையாக இருக்கிறார் என்பதை அறிந்தவுடன் அவரை நவாப்பாக ஏற்றுக் கொள்ளாமல் அவரது ஒன்றிவிட்ட சகோதரர் ஆஜிம்-உத்-தெளலாவை எவ்வித அதிகாரமோ அரசோ இல்லாத 'பொம்மை நவாப்பாக அங்கீகரித்து 31-7-1801ல் அவரை கர்நாடக நவாப்பாக்கி நாடகமாடினர். அத்துடன் அந்த ஆரவாரம் அடங்குவதற்குள்ளாக யாரும் சந்தேகப் படாதநிலையில் உண்மையான நவாப்பான அலி ஹாபஸ்னை விஷமிட்டுக் கொன்று போட்டனர்."[10] கும்பெனியார் எப்பொழுதும் கையாளும் கோரமான தந்திரம் அது.

பொம்மை நவாப் அஜிம் உத்தெளலாவுடன் கும்பெனியார் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி[11] நவாப் அவரது பொது ராணுவ அலுவலர்கள் அனைவரும் அவர்களது நிர்வாகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் உடனே கும்பெனியாருக்கு நிரந்தரமாக கையளித்து விடவேண்டும். அத்துடன் அந்த அலுவலர்கள் பொறுப்பில் உள்ள அனைத்து ஆவணங்கள், கணக்குகள் ஆகியவற்றையும் கும்பெனியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும். கர்நாடகப் பகுதி முழுவதில் இருந்தும் வரக்கூடிய வருடத்தீர்வையில் ஐந்தில் ஒரு பகுதியை மட்டும் பெறுவதற்கு நவாப் அருகதை உள்ளவர் ஆகிறார். அதாவது ஆண்டு ஒன்றுக்குக் கிடைக்கும் வருமானம் சுமார் முப்பத்து இரண்டு லட்சம் ஸ்டார் பக்கோடா பணம் வருவாயில், மாதம் 12,000/- ஸ்டார் பக்கோடா பணம் நவாப்பின் பராமரிப்பு செலவிற்கு ஒதுக்கப்படும். வடக்கே விஜய நகரத்தில் இருந்து தெற்கே களக்காடு வரை நீண்டு பரந்த கர்நாடகத்திற்கு அரசுரிமை கொண்டாடி வந்த ஆற்காட்டு நவாப்பிற்கு இப்பொழுது அரசுரிமையும் கிடையாது. நல்லவேளை வாழ் வதற்காவது உரிமை வழங்கியிருக்கிறார்களே. திருச்சிராப்பள்ளியில் இருந்த மாளிகையை மட்டும் அவரது சொந்த சொத்தாக” விட்டுக் கொடுத்தனர். 'தர்மத்திற்கும் நியாயத்திற்கும்" பெயர் போன ஆங்கிலேயர், நவாப் உயிர் வாழ்வதற்கு மாதம் ஊதியம் கொடுத்து வருவதே பெரிய காரியம் அல்லவா? ஆயிரக்கணக்கான படைவீரர்களைக் கொண்ட ராணுவ அணிகளைப் பராமரித்து வந்த நவாப் இனிமேல் ஆங்கிலேயரது ஒப்புதலின் பேரில் தான் தனது சொந்த கெளரவத்திற்கு ஏற்ற எண்ணிக்கையில் பணியாட்களை அமர்த்திக் கொள்ள வேண்டும். மேலும், கும்பெனியாருக்குத் தகவல் இல்லாமல் உள்நாட்டிலோ வேறு நாட்டிலோ உள்ள அரசுடன் நவாப் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொள்ளக் கூடாது.

இவை அஜீம் உத்தெளலா," ஆற்காட்டு நவாப்பாக" குறிக்கப்படுவதற்கு ஒப்புக் கொண்ட நிபந்தனைகள் அல்ல, கும்பெனியாரது அடிமையாக வாழ்வதற்கு அாசியலில் ஆட்சி முறையில் இருந்து துறவு கொள்வதற்கு அவர் அணிந்து கொண்ட புத்தாடைகள், அத்துடன் வியாபாரிகளாக இந்த நாட்டிற்கு வந்த பரங்கிகளது ஏகாதிபத்திய ஆட்சிமுறை, தமிழ் மண்ணில் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் நடைபெறுவதற்கு காண்பிக்கப்பட்ட பச்சைக் கொடி, அந்த உடன்பாடு.

ஆர்க்காட்டு நவாப்பின் கடைசி வாரிசுதாரருக்கும், கும்பெனியாருக்கும் 31-7-1801 ல் ஏற்பட்ட உடன்பாடு தமிழக அரசியலில் கும்பெனியாரது தங்கு தடையற்ற அதிகார நிலையை வலுப்படுத்தியது. என்றாலும் அவர்களது எகாதிபத்திய உரி அதர்மமான முறையில் தமிழகத்தை ஆக்கிரமித்துள்ள - அக்கிரமத்தைத் துணிந்து கேட்பதற்கு அப்பொழுது தமிழகத்தில் யாருமே இல்லாத நிலையில், சிறிதும் அஞ்சாமல், அவர்களது ஆதிபத்திய ஆசைகளுக்கு ஆயுதப்பலத்திற்கு சவால்விடும் வகை யில், இராமநாதபுரம் - சிவகங்கை மண்ணில் மட்டும் தான் கிளாச்சிகள் சிறிதும் தயக்கமில்லாமல், தொடர்ந்து நடந்தன. 21-8-1799 ல் அன்னிய ஆதிக்கவாசிகளுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய மக்கள் கிளர்ந்து எழுந்த முதுகுளத்தூர் பகுதியில், மயிலப்பர் சேர்வைக்காரரது தலைமையிலான கிளர்ச்சிக்கு மீண்டும் பேராதரவு தவிர்த்தது. முத்து இருளப்ப சேர்வைக்காரரும் அவரது குழுவினரும் அங்குள்ள கும்பெனியாரது சொத்துக்களைக் கொள்ளையடிக்க முயன்றனர். பீதியடைந்த முதுகுளத்து கலெக்டருக்கு இராணுவ உதவி கோரி அபாய அறிவிப்பு செய்தார்.[12]

மயிலப்பன் சேர்வைக்காார் முதுகுளத்துர் வந்து சேர்ந்தவுடன் கொச்சிக்காயர்களது மகிழ்ச்சி எல்லையற்று பொங்கியது. முன் விலையில் முதுகுளத்துர் கச்சேரிக்குத் தீயிட்டனர் . கும்பெனியாருக்கு இந்தத் தீயினால் பெருஞ்சேதம் ஏற்பட்டது.[13] கிளாச்சிக்காரர்களது ஒரு பிரிவினருடன் மயிலப்பன் சேர்வைக் கார் ஆப்பனுருக்கு புறப்பட்டுச் சென்றார். மேலும் அதே நோத்தில் மறவர் சீமையின் ஏனைய பகுதிகளான பரமக்குடி, பார்த்திபனூர், உளக்குடி, நயினார்கோவில் ஆகிய ஊர்களில் அறுவடைக்கு நின்று கொண்டிருந்த பயிர்களை கிளர்ச்சிக்காரர்கள் அழித்து, கும்பெனியாருக்கு அவைகளில் இருந்து கிடைக்க வேண்டிய 'கிஸ்தி' கிடைக்காதவாறு செய்தனர்.[14] மயிலப்பன் சேர்வைக்காரரும் அவர் சென்ற ஊர்களில் உள்ள குடிமக்கள் அனைவரையும் கும்பெனியாரது அக்கிரமமான ஆக்கிரமிப்பையும் ஆயுதபலத்தையும் எதிர்த்துப் போராடி பிறந்த மண்னின் மானத்தைக் காப்பதற்காகக் கிளர்ந்து எழும்படி தூண்டி வந்தார்.[15] பல்வேறு வகையான மக்களும் கிளர்ந்து எழுந்து போராடினால் பரங்கிகளை அழித்து ஒழித்துவிட முடியும், இவ்விதம் செய்யாதவரை அவர்களுக்குப் பணிந்து செல்லும் வகையில், அவர்கள் எதையும் செய்வார்கள் என்ற கருத்து மக்களிடம் பரவலாகப் பரவியது.[16]

  1. 1 Rajayyan Dr. K. History of Madurai (1974) p. 324
  2. 2.Secret Consultations, vol. 12, (25-7-1801) p. 377-78.
  3. Military Consultations vol 279- (10.2.1801) - p.p.730-32
  4. Political Despatches to England, vol.2, p.p. 335-42.
  5. Military Country Correspondence, vol. 49, (10 - 8 - 1798) р.р. ЗО2
  6. 6 Aitehisum, Collection of Treaties, vol.5
  7. 7 Secret Consultations, vol. 13. (31-7-1801), p. p.654–68.
  8. 8 Srinivasachari C. S : The Inwardness of British Annexation in India (1951) p. 71.
  9. 9 Military Consultations vol 268 (10-5-1800) pp. 2996-3025
  10. 10 Secret Despatches to England vol. 2, (3-8-1801), pp. 9290
  11. 11 Secret Consultations vo1, 13. (31-7-1801) pp. 786-801
  12. 12 Madurai District Records vol. 1182, (14-6-1801) p. 182.
  13. 13 Ibid, (4-7-1801) p. 227.
  14. 14 Madurai District Records, vol. 1182 (3-7-1801) p. 223.
  15. 15 Ibid, (12-7-1801) p. 241.
  16. 16 Revenue Sundries, vol. 26, pp. 447-55.