மிஸஸ் ராதா/ராதா ஒரு புதிர்


ராதா ஒரு புதிர்

தேன்துளி தின்னத் தின்னச்
சிறிதுமே திகட்டாது.
தேவர் தந்த பூமாலை
சூடவும் திகட்டாது.
மனைவி தந்த வெற்றிலையின்
மகிழ்ச்சியும் திகட்டாது.
தாய் ஊட்டும் பால்சோறு
சாப்பிடத் திகட்டாது.
தந்தை தந்த பொன்னாடை
தரிக்கத் திகட்டாது
காவிரி தேவி புகழ்
பாடப் பாடத் திகட்டாது.
                    —குடகர் பாட்டு மொழிபெயர்ப்பு


ரித்த பாம்புச்சட்டையைப் போல் உலர்ந்து தோட்டங்களை ஊடுருவிக்கொண்டு செல்லும் அந்தச் சாலை, குடகு நாட்டின் தலைநகரான மெர்க்காராவிலிருந்து காப்பித் தோட்டங்களுக்குப் போவதற்காகத் தோட்ட முதலாளிகளால் அவர்கள் செலவில் அமைக்கப்பட்டது. ஜீப்புகளும், டிராக்டர்களுமாக அடிக்கடி அந்தப் பாதையில் ஓடி அதைக் கந்தைத் துணிபோல் ஆக்கி வைத்திருந்தது. வாகனங்கள் இல்லாத எஸ்டேட் முதலாளிகள் அங்கு இல்லை. எது வேண்டுமானலும் அவர்கள் மெர்க்காராவுக்குத்தான் வந்து வாங்க வேண்டும். எப்படியும் ஒரு முறையாவது ஒவ்வொரு தோட்டக்காரரும் மெர்க்காராவுக்கு வந்துதான் திரும்புவார்கள். அதனால் மெர்க்காரா, மெர்க்காரா என்று நொடிக்கு ஒரு முறையாவது அதன் பெயரைச் சொல்ல, வேண்டி வந்துவிடும். பெட்ரோல் போட வேண்டுமானலும், டீசல் போட வேண்டுமானலும் மெர்க்காராவுக்குத்தான் போக வேண்டும். கறி வாங்க, காய், கனிகள் வாங்க, ரொட்டி வாங்க மற்ற சமையல் சாமான்கள் வாங்க — அனைத்துக்குமே மெர்க்காராதான் மத்திய கேந்திரம் ! அதனால் கடலை நோக்கி ஒடும் நதிகளைப்போல கார்கள் மெர்க்காரா நோக்கி ஓடிய வண்ணமே இருக்கும்.

மெர்க்காரா!

தென் இந்தியாவில் ஒரு உயரமான மலை வாசஸ்தலம். குடகு நாட்டுக்கு அதுதான் தலைநகரம். தலைநகரம் என்றவுடன் அது சென்னையைப்போல், பெங்களுரைப்போல் விஸ்தாரமாக இருக்கும் என்று நினைத்து விடவேண்டாம். தமிழ் நாட்டிலுள்ள ஒரு நகரியத்திற்கு இணையாகத்தான் சொல்லலாம். இருந்தாலும் அது ஒரு தலைநகரம்; குடகுப் பகுதியின் கலாச்சாரத்திற்கு அது தான் ஒரு அழியாத முத்திரையாக விளங்கும் பட்டணம்.

நகரம் சமதளமாக இருக்காது. சில வீதிகள் ஏற்றமாகவும், சில வீதிகள் இறக்கமாகவும்தான் இருக்கும். சுமார் பதினையாயிரம் பேர் கொண்ட அந்தச் சிறிய நகரம்தான் குடகிற்கே பெரிய வியாபார ஸ்தலமாக விளங்குகிறது. அதைவிட்டால் அறுபது மைல் கீழே இறங்கி மைசூருக்குத்தான் வரவேண்டும். மைசூருக்கு மேற்கே அவ்வளவு தூரத்தில் உயரமான குன்றின் மீது அந்த நகரம் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறது.

மெர்க்காரா — வெள்ளிக்கிழமைகளில் திருமண வீட்டைப் போல மளமளப்பாக இருக்கும். கடைகளில் வியாபாரம் பொங்கி வழியும்; கார்களும் ஸ்கூட்டர்களும், மோட்டார் சைக்கிள்களும் இங்கும் அங்கும் இழைந்து கொண்டிருக்கும். சினிமாக் கொட்டகைகளில்கூட அன்றுதான் படங்களை மாற்றிப் போடுவார்கள். ஏனெனில் அன்றுதான் மெர்க்காராவில் வாரச்சந்தை கூடுகிறது. இதை அனுசரித்தே சுற்றியுள்ள தேயிலை, ஏலம், காப்பித் தோட்டங்களுக்கும் விடுமுறை விடப்பட்டிருக்கிறது. தொழிலாளிகளானாலும் சரி, முதலாளிகளானலும் சரி வெள் ளிக்கிழமை தான் மெர்க்காராவுக்கு வரமுடியும். மற்ற நாட்களில் எல்லோரும் அவரவர் தோட்டங்களில்தான் இருப்பார்கள்.

மற்ற முதலாளிகளைப்போலத்தான் சில்வர் ஸ்டார் எஸ்டேட் முதலாளி சடையப்பரும் வெள்ளிக்கிழமை தோறும் மெர்க்காராவுக்குப் போவார். ஒரு வாரத்திற்கு வேண்டிய சாமான்களை வாங்கிக் கொண்டு வருவார். அவரிடம் ஒரு அம்பாசிடர்கார், ஒரு ஜீப், ஒரு டிராக்டர், இரண்டு வண்டிகள் இருந்தன. சுவையாகச் சமைப்பதற்காக செட்டி நாட்டிலிருந்து ஒரு சமையல்காரனைக் கொண்டுபோய் வைத்திருந்தார்.

மூன்று கணக்குப் பிள்ளைகள், நான்கு மேஸ்திரிகள்-இன்னும் சில நபர்கள் - இவர்களுக்கு மத்தியில் 'ராதா அம்மா' என்று அன்போடும் பரிவோடும் அழைக்கப்படும் ஒரு இளம் பெண்--இவர்கள்தான் சில்வர் ஸ்டார் எஸ்டேட்டில் பிரஜைகள்.

"ராதா!"
"சார்!"

"விடிந்தால் வெள்ளிக்கிழமை. சாமான் சிட்டைகளெல்லாம் தயாராகிவிட்டதா?" சடையப்பர் இராமனாதபுரம் ஜில்லாவைச் சேர்ந்தவராதலால் செட்டி நாட்டு பாணியிலேயே பேசுவார்.

"காய் கறிச்சிட்டை, சமையல் சாமான்கள் சிட்டை எல்லாம் தயாராகிவிட்டது. பெட்ரோல் விஷயம் டிரைவரைத் தான் கேட்கணும். அவன் சித்தாப்பூருக்குப் போயிருக்கிறான் வந்ததும்கேட்டுக் கொள்கிறேன்".

ராதாவின் பதிலிலிருந்து யாரும் அவளைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியாது. அவள் யார்? அந்த எஸ்டேட்டில் அவளுக்கு என்ன பொறுப்பு? அவளுக்கும் சடையப்பருக்கும் என்ன சம்பந்தம்? விருந்தாளிகளுக்கும், வேற்று மனிதர்களுக்கும் இது ஒரு புதிர்தான். சரி; அங்கே வேலை பார்ப்பவர்களுக்குத் தான் ஏதாவது தெளிவாகத் தெரியுமா? சாமான்கள் வாங்குவதற்குத் தோட்டக்காரர்கள் எப்படி மெர்க்காராவுக்குப் போய்த்தான் தீரவேண்டுமோ அதைப்போலத்தான் சில்வர் ஸ்டார் எஸ்டேட்டில் எதுவேண்டுமானலும் ராதாவைத்தான் கேட்க வேண்டும்.

ஆம்; ராதா, சில்வர்ஸ்டார் எஸ்டேட்டில் ஒரு நடமாடும் மெர்க்காரா! சமையல்காரன் அரிசிக்காக ராதாவிடம் போய் நிற்பான்; கணக்குப்பிள்ளை வாரச் செலவுக்காக ராதாவிடம் ரொக்கப்பணத்தை எதிர்பார்த்திருப்பார். சிப்பந்திகளின் சம்பளப்பட்டு வாடாவிலிருந்து, கூலிகளின் அன்றாடச் சம்பளம் வரை—எல்லாமே ராதாவின் முன்னிலையில், மேற்பார்வையில் தான் நடந்தன.

ராதா ஒரு யுவதி! ஆனால் அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டதா, திருமணம் ஆகவில்லையா என்பது ஒருவருக்கும் விளங்காத கேள்விக் குறியாக இருந்தது.

அவளுக்கு அந்த எஸ்டேட்டின் மூலைமுடுக்கெல்லாம் தெரியும். அந்தப் பங்களாவின் எல்லா விவரங்களேயும் அவள் அறிவாள். ஆனல் அவள் உள்ளத்தில் உள்ளதை எவரும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் மனம் மட்டும் — பூமியில் உள்ள புழுதிகளையும், ஆகாயத்திலுள்ள நட்சத்திரங்களையும், மேகத் தின் மழைத்துளிகளையும் சுமந்து கொண்டிருப்பதைப் போல் கனத்துப்போயிருந்தது. இதை மட்டும் அங்குள்ள சிப்பந்திகளால் எப்படியோ புரிந்து கொள்ள முடிந்தது!

மனிதன் — தனிமையில் இருக்கும் போதுதான் தன்னைப் பற்றி நினைக்கிறான். அதுவும், கவலைகளால் சூழப்பட்ட மனிதன், அந்தக் கவலைகளைப் பற்றி மறுபரிசீலனை செய்வதற்கே அடிக்கடி தனிமையை விரும்புவான். ராதா இந்த வகையைச் சேர்ந்தவள். ஒவ்வொரு கட்டத்திலும் அவள் தனியாத சிந்தனையிலிருந்து தான் வெடுக்கென்று தூங்கி விழித்தவளைப்போல் துள்ளிக் குதித்து வருவாள்.

அவள் அழகு எல்லோரும் அறிந்தது. அவள் குரல் எல்லோரும் கேட்டது; அவள் நடை உடை எல்லோரும் பார்த்தது. ஆனல் அவள் உள்ளம் மட்டும் எவரும் அறியாதது.

ஆறுமாத காலத்திற்குள் அந்தப் பங்களா முழுவதும் நீக்கமற நிறைந்துவிட்ட ராதாவைப்பற்றி அதே பங்களாவில் யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு ஆணின் குணம் நெருங்கிப் பழகினல் சில நாட்களில் தெரிந்து விடுகிறது; ஆனால் ஒரு பெண்ணின் குணம் அப்படியல்ல! அது கடலில் தவற விட்ட கணையாழி மாதிரி! கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமான காரியம்.

ராதா பாடத் தெரிந்தவள். அவள் குரல் இனிமையானது. இரவு நேரங்களில் நிலவொளியில் வாசலில் உட்கார்ந்து கொண்டு மெல்லிய குரலில் பாடுவாள், அது சோகமான பாட்டாக இருந்தாலும் இனிமையாக இருக்கும்.

ராதா அந்த எஸ்டேட்டுக்கு வந்த மறுமாதமே, சடையப்பர் அவளுக்கு உதவிக்காக தமிழ்நாட்டிலிருந்து ஒரு வேலைக்காரியையும் கொண்டு வந்து சேர்த்து வைத்தார். ஏனெனில் பத்துப்பெண்கள் மத்தியில் ஒரு ஆண் வாழமுடியும்; ஆனால் பத்து ஆண்கள் மத்தியில் ஒரு பெண் எப்படி வாழமுடியும்?--என்பதைச் சடையப்பர் உணர்ந்திருந்தார். -

சடையப்பர், தான் மட்டும் வெளியில் போவதாக இருந் தால் ஜீப்பில் போவார். ராதாவையும் அழைத்துக் கொண்டு போவதாக இருந்தால் அம்பாசிடர் காரில் போவார். காரின் முன் சீட்டில் அவர் உட்கார்ந்து கொள்வார். பின் சீ ட்டில் ராதா உட்கார்ந்து கொள்வாள்.

"ராதா!"
"சார்"

"வந்து ஆறுமாத காலம் ஆகப்போகிறதே! நீ ஒருநாள் கூட சினிமாப் பார்க்கவில்லையே?’’

'அதெல்லாம் மறந்து போச்சு சார்! டிரான்சிஸ்டர் வச்சுப் பாட்டை மட்டும் கேட்கிறேன்!'

“ராதா, வாழ்க்கையில் கவலைகள் தோன்றலாம்; ஆனால் வாழ்க்கையே விரக்தியாகி விடக்கூடாது. கறியிலே உப்பு கூடிப் போயிட்டா அதைத்தூக்கியா எறிஞ்சிடுகிறோம் அதிலே கொஞ்சம் புளியைச் சேத்தா அது சரியாப் போகுதுல்ல! அது மாதிரித் தான் வாழ்க்கையும்!”

“மனப்புண், வெட்டுக்காயங்களைவிடக் கொடியது சார். மருந்தோ, மந்திரமோ அதுக்குப் பிரயோசனமில்லே சார்! அதே மனம்தான் சார் அதுக்கு மருந்து! நான் கொஞ்சம் கொஞ்சமா அதை ஆற்றிக்கிட்டு வர்றேன்! வேறே ஒண்ணுமில்லே சார்!”

"எல்லாம் சரியாப்போயிடும். காலம்தான் எல்லாத்துக்கும் மாமருந்து. எனக்கு இவ்வளவு சொத்து இருந்தாலும், எனக்கென்று சில கவலைகள் இருக்கே! அதுக்காக நான் சாப்பிடாமல் இருக்கேனா? சிரிக்காமல் இருக்கேனா? கணக்கு வழக்கைப் பார்க்காமல் இருக்கேனா? விசிறி இல்லாத போது வியர்க்கிற மாதிரி கொஞ்ச நேரம் கவலைப்படுவேன். நீயும் அப்படித்தான் இருக் கணும்! என்ன நான் சொல்றது?’’

'நீங்க சொல்றது எதையும் நான் தட்றது இல்லை சார்!’

சடையப்பர் ராதாவைக் கூட்டிக் கொண்டு போகும் போதெல்லாம் இப்படிப்பேசுவதுண்டு. ராதா எதையும்தட்டிப் பேசமாட்டாள். பெரிய அதிகாரியிடம் பேசும்போது சார் என்று மட்டும் பதில் கூறும் சின்ன அதிகாரியைப்போல் மறு வார்த்தைக்கு எதிர் வார்த்தை பேசமாட்டாள்.

"ராதா!'
“சார்!”,

“உன்னைப்பற்றி நமது எஸ்டேட்டில் என்ன நினைக்கிறார்கள்?”

“நான் அதைப்பற்றி யோசிக்கவே இல்லை சார்!”

"நான் கேட்பது வேறு! நீ நினத்துக்கொண்டு பதில் சொல்லுவது வேறு! உன்னை வேலைக்காரி என்று நினைக்கிறார்களா அல்லது உறவுக்காரப்பெண் என்று நினைக்கிறாகளா என்று கேட்கிறேன்’’.

“ராதா அம்மா என்று தான் நினைக்கிறார்கள். சில நேரங்களில் மரியாதையாக "அம்மா"! என்று அழைக்கிறார்கள். இதில் நான் யோசிப்பதற்கு என்ன இருக்கிறது சார்!"

"நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். இனிமேல் யாராவது உன்னைப்பற்றிக் கேட்டால் நீ தான் என் செக்ரட்ரி என்று சொல்லி விடுவது என்று தீர்மானித்து விட்டேன்.”

“ரொம்ப மகிழ்ச்சி சார்! சில்வர் ஸ்டார் எஸ்டேட்டுக்கு செக்ரட்ரியாக வருவதென்றால் நான் பாக்கியசாலிதான்!”

"பின்னே என்னம்மா ஒன்றும் படிக்காதவனெல்லாம் பழக்கத்துனாலே மானேஜர், காஷியர்னு இங்கு சொல்லிக் கொண்டு திரியும் போது, பி. ஏ. படிச்ச ஒரு பொண்ணு எனக்கு செக்ரெட்ரியா வர்றது என்ன தப்பு?”

"நான் பி. ஏ. படிச்சவங்கிறதை நீங்கதான் அங்கீகரிச்சிருக்கீங்க சார்! எனக்கு, என் படிப்பு, நான் படிச்ச அந்தக் கல்லூரி வாழ்க்கை — இதையெல்லாம் நெனச்சா ஒரு கெட்ட சொப்பனம் மாதிரித் தெரியுது சார்!"

"சொப்பனம்கிறது தூங்கும் போது நடக்கிற உலகம். அது சிலருக்குப் படிப்பினையாகக்கூட அமைஞ்சுடலாம். ஆனல் உனக்கு நெஜ உலகமே சொப்பனமாக இருக்குதுங்றியே! அது தப்பம்மா!"

"கரெக்ட் சார்! பழைய நினைவுகள் என்னை அப்படி நெனைக்க வைக்கிறதே! தவறு என்கிற காரியங்களையும் மனிதர்கள் சில வேலைகளில் திரும்பத் திரும்பச் செய்கிறார்களே! அது மாதிரி தான் நானும்!”

"அதுனாலேதான் நான் சொல்றேன்—அடிக்கடி பழைய விஷயத்துக்குப் போகக் கூடாது; அதுவும் கெட்ட விஷயங்களை நெனச்சே பார்க்கக் கூடாது!"

ராதாவுக்கும், சடையப்பருக்கும் இப்படி அடிக்கடி உரையாடல் ஏற்படுவதுண்டு.

அன்று சடையப்பருக்கு அவருடைய மருமகனிடமிருந்து ஒரு தந்தி வந்திருந்தது. சடையப்பர் தந்தியைப் பிரித்துப் பார்த்தார். அவர் எதிர் பார்க்கவில்லை—அவரது மருமகன் ஆனந்தன் மனைவியோடு எஸ்டேட்டுக்குப் புறப்பட்டு வருவதாக அதில் கண்டிருந்தது. ஆனந்தன் குடகிற்கு வந்ததே இல்லை. இப்போதுதான் முதன் முறையாக வரப்போகிறான். திருமணத்திற்குப் பிறகு சடையப்பர் மகள் கீதாவும் தோட்டத்திற்கு வரப்போவது இதுதான் முதல் தடவை.

சடையப்பர் தந்தியைப் படித்ததும் மகளும், மருமகனும் மறுநாளே வரப்போவதை அறிந்து பரபரப்படைந்தார் கணக்குப்பிள்ளையைக் கூப்பிட்டார்; சமையல்காரனைக் கூவி அழைத்தார். மேஸ்திரி ஓடிவந்தான். எல்லோரிடமும் சடையப்பர் நாளைக்கு மாப்பிள்ளை குடும்பத்தோடு வருகிறாராம் என்று திரும்பத் திரும்பச் சொன்னார். மகள் மீதும், மருமகன் மீதும் அவ்வளவு பிரியம் சடையப்பருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில் அன்று இரவு அவர் சரியாகத் தூங்கவே இல்லை.

"ராதா!"
"சார்!"

"என் மகளும், என் மருமகனும் வரப்போகிருர்கள்"

"ரொம்ப மகிழ்ச்சி சார்! கீதாவை இப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கப்போகிறேன் சார்!"

“ஏன், அவள் படத்தைப் பார்த்திருப்பியே! நம்முடைய ஹாலில் இருக்கிறதல்லவா!”

“ஆமாம் சார்! ஆனல் தம்பதிகளாகப் பார்ப்பது மகிழ்ச்சியில்லையா சார்!”

“ராதா, உனக்கும் நன்றாகப் பொழுதுபோகும்!” கீதா மிக வும் நல்லவள். மாப்பிள்ளையும் அப்படித்தான். அவரும் பி. ஏ. படித்திருக்கிறார்; பெரிய பணக்காரர் வீட்டுக்கு ஒரே பிள்ளை! கீதாவும் ஒரே பெண். இரண்டு பேரும் தான் வீட்டிலே ! அதனுலே குடும்பத்திலே குறைச்சல் இல்லை; சொத்தோடு சொத்துச் சேந்தாச்சு! இல்லையா ராதா!”

“கரெக்ட் சார்! வில்லன் இல்லாத நாவல் மாதிரி நிம்மதியாகப் போயிடும்”

"என்ன ராதா சொல்றே!” மாப்பிள்ளைக்குத் தம்பி அல்லது அண்ணன், பெண்ணுக்கு நாத்தனர்--இவர்களெல்லாம் இருந்தால் தானே சார் பிரச்சினையே வருகிறது என்கிறேன்!”

"உண்மைதான் ராதா! எனக்கு அதில் அதிகமான அனுபவம் உண்டு!”

“உங்களுக்கு என்ன சார் அப்படி அனுபவம்!”

வாழ்க்கை என்பது கல்யாணத்தோட முடிஞ்சு போற சினிமா இல்லை ராதா. காதல் கல்யாணம் ஆனாலும் சரி, சம்பிரதாயக் கல்யாணம் ஆனாலும் சரி, தாலி கட்டியதற்குப் பிறகு தானே யுத்தமே தொடங்குது மண மாலைகளெல்லாம் வெற்றி மாலைகளாகி விடுமா என்ன? இன்னம் சிலருக்கு கல்யாணமான மறுநாளே குருக்ஷேத்திரம் தொடங்கி விடுகிறதே!”

“சார்!”
“என்ன ராதா!”
“ஒண்ணுமில்லே சார். உங்க முன்னுரை குடும்ப வாழ்க்கைக்கே ஒரு அபாய அறிவிப்பு மாதிரி இருக்கே சார்!”

“உனக்குத் தெரியணும்கிறத்துக்காகத் தான் இதெல்லாம் சொல்கிறேன். நீ இனிமேல் தான் வாழப்போறே அதுனாலே சொல்றேன்”.

“வேண்டாம் சார்! எனக்குப் பயமா இருக்கு சார்!”

“பயம் அவசியம் தான்! அதுக்காக எல்லாத்துக்கும் பயப்படக்கூடாது ராதா! சில பெண்கள் பயத்துக்கும் மரியாதைக்கும் வித்தியாசம் தெரியாமல் அழிஞ்சுபோயிருக்காங்க; பயம்கிறது கோழைத்தனம். மரியாதைங்கிறது பெருந்தன்மை!”

“சார் மெர்க்காராவுக்குப் போயி சாமான்கள் வாங்கவேண்டாமா?” என்று குறுக்கிட்டுப் பேச்சை நிறுத்த முற்பட்டாள் ராதா.

போகத்தான் வேணும் ஆனால் இன்னக்கி என் மனம் சரியில்லேம்மா! எங்கோ போய்ட்டேன். கீதா வர்றாள்னு தெரிஞ்ச உடனே என்மனம் பழைய காலத்துக்குப்போயிருச்சு”.

'நீங்க தானே சார் சொன்னீங்க பழைய விஷயங்களுக்குப் போகக் கூடாதுன்னு!”

"சொன்னேன்; சொன்னபடியா மனிதன் நடக்கிறான்?”

“எதையோ நினைக்கிறீங்க. ஆனால் சொல்லமுடியாமெ முழிக்கிறீங்க சார்!”.

"என்னைப் பெற்றவள் இருந்தாளே. என் தாய், அப்ப நான் இப்படியா வாழ்ந்தேன். தினசரி வீட்டில் போராட்டம்தான். குப்பைக் கூளங்கள் நிறைந்த வீடு; கூந்தலுக்குக்கூட எண்ணையில்லாநிலை; சாக்குப் பைகளைவிட கறுத்துப்போன எ ங் க ள் உடைகள்; கரிப்பிடித்த பாத்திரங்கள்; மண் வெடித்த அடுப்பு; சாம்பல் பூத்த தரை—இப்படித்தான் அந்தக் காலத்தில் எங்கள் வீடு இருக்கும்.

"என்னைப் பிடித்த அதிர்ஷ்டம் நான் இந்த எஸ்டேட் முதலாளிக்குச் சுவீகார புத்திரனாக வந்தேன். இவருக்கு புத்திரபாக்கியம் இல்லாதிருந்தது. தத்தாக வந்ததும் குலமுறைப்படி என் பெயர் என் சொந்தப்பெயர் எல்லாம் மாறின. என் பெற்றோர்களின் பெயர்களும் மாறின. என் வீடு, வாசல், ஊர் எல்லாமே மாறிவிட்டன, நான் புதுப் பிறவியாகிவிட்டேன்.

“சுவிகாரம் வந்த மறுமாதமே எனக்குத் திருமணம் நடந்தது. நல்ல சம்பந்தம்தான். எனக்கு வாய்த்த மனைவியும் நல்லவள் தான்; பெயர் மரகதவல்லி — தமிழ் நாட்டிலுள்ள செட்டி நாட்டில் அழகாபுரி எங்கள் ஊர். நான் பிறந்தது பிள்ளையார் பட்டி என்றாலும் சுவீகாரம் போன ஊர்தான் இப்போது எனது சொந்த ஊர்.

“திருமணமான மறு வருஷமே கீதா பிறந்து விட்டாள். கீதாவின் மேல் நாங்கள் உயிரையே வைத்திருந்தோம். ஆனல் கீதாவின் தாயார்...?”

“அவுங்களுக்கு என்ன ஆச்சு சார்?”

"இருமலில் தொடங்கி காசமாக முற்றி மரணத்தில் கொண்டு போய் விட்டுவிட்டது ராதா!'

“அப்பறம் சார்?”

“எனக்கு இருபது வயதிலே கல்யாணம். இருபத்தோராவது வயதிலே கீதா பிறந்தாள். இருபத்திநான்காவது வயதில் நான் என் மனைவியைப் பறிகொடுத்தேன். எனக்கு இப்போது வயது நாற்பத்திரெண்டாகிறது!’ என்றார் சடையப்பர். அவர் குரலில் ஏக்கம் ததும்பி நின்றது.

"ஏன் சார் இரண்டாவது மணம் புரிந்து கொள்ளவில்லை?”

சரியான கேள்விதான்! எத்தனையோ சந்தர்ப்பங்கள் வந்தன கீதாவின் மீது உள்ள தணியாத பாசத்தினால் எல்லாமே தள்ளிக்கொண்டு போய் விட்டன.

“ராதா, என் மனத்தில் ஒரு ஆழமான கருத்து தழும்பாகிக் கிடக்கிறது. ஒரே நேரத்தில் இரண்டு மனைவிகளை வைத்திருப்பவனைக்கூட இந்த உலகம் மதிக்கிறது; ஆனல் முதல் மனைவியை இழந்து இரண்டாம் கல்யாணம் செய்து கொண்டவனை இந்த உலகம் முக்கால் மனிதனாகத்தான் மதிக்கிறது. இப்படி ஒரு தாழ்வான எண்ணம் எனக்கு!’

'நீங்க நினைக்கிறது தப்பு சார்! நீங்க அப்பவே இரண்டாவது கல்யாணம் செய்துக்கிட்டிருக்கணும் சார்!’

“சரி; ராதா, எந்த ஒரு காரியத்துக்கும் ஆசை மட்டும் முக்கியமல்ல; சூழ்நிலைகளும் ஒத்து வரணுமில்லையா கீதா கைப்பிள்ளை. அந்த நேரத்தில் திருமணம் செய்துக்கிட்டா கீதாவின் தாய் வீட்டுச் சொந்தமே அறுந்து போயிடுமே!”

இன்னொரு காரணம் — இரண்டாவது கல்யாணம்னா, நல்ல பெண் அமையிறது. ரொம்பவும் கஷ்டம். காலையில் தயாரித்த வியாபாரமாகாத பொருள் அந்திக் கடைக்கு வருகிற மாதிரி கூன், குருடுகள் வந்து வாய்க்கும்- இப்படிப் பல பிரச்சினைகள்!”

“..........”

“ராதா, இன்னக்கி நான் ரொம்ப நேரம் உன்கிட்டே பேசிட்டேன். அதுவும் பல விஷயங்களைப் பேசிட்டேன் இல்லையா!”

"அதுனாலே ஒண்ணும் தப்பில்லே சார், உங்க செக்ரெட்ரி கிட்டேதானே பேசியிருக்கீங்க! ஏன் சார், கீதாவுக்கு என்ன வயசு?’’

"இருபதுக்குள்ளேதான் இருக்கும். எங்க ஜாதியிலே இருபதுக்குள்ளே பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணாட்டா பலவித மாகப் பேச ஆரம்பிச்சிடுவாங்களே?”

"என்னைக்காட்டிலும் இரண்டு வயது இளமை அப்ப நான் கீதான்னு கூப்பிட்டா தப்பில்லையே!”

"இதிலென்ன தப்பு! தாராளமாகக்கூப்பிடு! மாப்பிள்ளைக்கு கீதாவைவிட இரண்டு வயது கூட. உத்தியோகம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை; பெரிய பணக்காரர். கீதாவைப் பொறுத்தவரை இனிக் கவலைஇல்லை’.

“ஏன் சார் நீங்க ஏன் இப்படிச் செய்திருக்கக் கூடாது?”

"எப்படி?”

“மருமகனையே இங்கே கொண்டுவந்து வச்சிக்கிட்டா எப்படி இருக்கும்? கீதாவையும் அடிக்கடி பார்த்துக் கிட்டமாதிரி இருக்கும்; உங்களுக்கும் ஒரு மனச்சாந்தி. மாப்பிள்ளையும் எஸ்டேட் வேலையைப் பழகிக் கொள்வாரே?”

“எனக்கு அப்படி ஒரு திட்டமும் உண்டு ராதா! எதற்கும் நேரம், காலம் என்று இருக்கே!”

“இந்த முறை அதை ‘டிசைட்’ பண்ணிட்டாப் போகுது!”

“மாப்பிள்ளையின் நோக்கம் அறிந்துதான் அதைப்பேசனும். எடுத்த எடுப்பிலே பேசிட்டா காரியம் கெட்டுப் போனலும் போயிடுமே!”

“எல்லாவற்றையும் கீதா மூலமே பேசிட்டாப் போகுது! கீதா சொல்றதை அவர் தட்ட மாட்டார் அல்லவா?”

"தட்டவே மாட்டார். கீதாவின் தாயாரிடத்தில் நான் எப்படியோ, அப்படித்தான் என் மாப்பிள்ளையும். குடும்பத்துக்கு அது அவசியம் ராதா! புருஷனுக்குள் மனைவி அடக்கமானவள் என்கிறார்கள். மனைவி சொல்றதையும் புருஷன் கேட்டால் தான் அது உண்மையாகும்! மனைவியை வெறும் சமையல் காரியின்னு நெனச்சாச்சுன்னா மனைவி மனத்திலே ஏதாவது புகுந்து கொள்ளும். நம் கோட்டைக்குள்ளே எதிரியின் ஆள் ஒருவன் நுழைந்து விட்டாலே போச்சு! படிப்படியாக நாம் கோட்டையை இழந்து விடவேண்டியது தான். அது மாதிரிதான் மனைவியின் உள்ளமும்!”

“சார், நீங்க ரொம்பவும் உயர்ந்தவங்க சார்! கொஞ்சநாள் தான் நீங்க மனைவியோடு வாழ்ந்தீங்க! அந்தக் காலத்திற்குள்ளே ஒரு பெண்ணின் மனத்தை நல்லா அறிஞ்சு வச்சிருக்கீங்களே சார்!”

"நல்ல மனைவி கிடைச்சா, புருஷன் எல்லாத்தையும் தெரிஞ்சுக்குவான். மனைவியே எதிரியானவளா அமஞ்சிட்டா வாழ்க்கையே சூன்யமாப் போயிடும்!”

"அமைறதுன்னு என்ன சார்! கடவுளாப்பார்த்து ஏற்பாடு செய்யிறதா?”

"அப்படியில்லை! முன்பின் தெரியாத பொண்ணைத்தான் கல்யாணம் பண்றாங்க. மனப்பொருத்தம் சரியாகப்போனால் அமஞ்ச மாதிரிதான்!”

“சரி, பார்த்து, விரும்பி, கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க கூடப் பாதியிலே பிரிஞ்சிடுராங்களே!”

“அது அதுங்க தலையெழுத்து! உதாரணத்துக்கு எடுத்துக்க? ஜாதகப் பொருத்தம் பார்த்துத்தான் கல்யாணம் பண்றாங்க! எனக்கும் அப்படித்தான் பண்ணுனாங்க! நான் எப்படி அவளைப் பறி கொடுத்தேன். இதுதாம்மா விதி!”

“விதியை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் சார். முடிவுகளையெல்லாம் விதியின்னு சொல்றதை நான் ஏத்துக்கிட மாட்டேன். இப்ப நீங்க இருக்கிறதை உங்க விதிங்கிறீங்க! நீங்களே இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டா அதுவும் விதியா?”

"ஆமாம், என் விதிதான்!”

"அப்படின்ன முதலில் சொன்ன விதி என்ன ஆச்சு? ஒரு மனிதனுக்கு இரண்டு விதிகள் இருக்க முடியுமா?”

“அடேயப்பா ராதா, நீ இப்படிப் பேசுவாய்ன்னு நான் நெனைக்கவே இல்லை!”

“நான், பி. ஏ. யிலே தத்துவம் படிச்சவள் சார்!”

"உன்னை ஈரோடு ஜங்ஷனிலே பார்த்ததுக்கும் இன்னக்கிப் பார்க்கிறதுக்கும் சம்பந்தமே இல்லாதது மாதிரி இருக்கு!”

“அது கவலை சார்! மருந்து சாப்பிட்டால் கூட மெலிய முடியாதவர்கள் கவலைப்பட்டால் மெலிந்து விடுவார்கள் என்பதற்கு நானே ஒரு உதாரணம் சார்.”

இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது மேஸ்திரி ஓடிவந்து கீதா அம்மாவும், மாப்பிள்ளை ஆனந்தும் வந்து விட்டதாக'ச் சொன்னான். சடையப்பர் வேகமாக எழுந்து வாசலுக்குப் போனார். ராதா மனதில் ஏதோ தீர்மானித்தவளாய் உள்வாசலிலேயே நின்று கொண்டு வரவேற்கத் தயாரானாள்.

பெரிய காரில் ஆனந்தும், கீதாவும் வந்து இறங்கினர்கள். சடையப்பர் மகளை அணைத்து வரவேற்றார். கீதாவும் ஆனந்தும் உள்ளே வந்தார்கள்.

“வணக்கம்" இருகரம்கூப்பி ராதா அவர்களை வரவேற்றாள்.

ராதாவைக் கூர்ந்து கவனித்த ஆனந்தன் திடுக்கிட்டுப் போனன்!

“என் பெயர் ராதா! சில்வர் ஸ்டார் எஸ்டேட்டின் செக்ரெட்ரி!” என்றாள்!

ஆனந்தின் முகத்தில் இருள் படர்ந்தது. அவன் நடையின் கம்பீரம் குன்றிப்போனது.

“இவள் வேறு பெண்ணாக இருப்பாளோ? இல்லே, கீதாதான் பெயரை மாற்றிக்கொண்டு ராதா என்கிறாளா?” — இந்தக் குழப்பத்திலே ஆனந்தன் உள்ளே நுழைந்தான்.