மிஸஸ் ராதா/சிறிய முன்னுரை
ஒரு சிறிய முன்னுரை
குடகு சிறிய பெயர்; அழகான பெயர். அதைப்போலவே குடகு சிறிய நாடு; அழகான நாடு.
அழகிற்கு அழகு செய்கிறது தமிழ். குடகு என்பதை வலமிருந்து படித்தாலும், இடமிருந்து படித்தாலும் குடகு தான்.
குடகு மலைநாடு. அதன் வடக்கிலும், கிழக்கிலும் மைசூர் மாநிலம். தெற்கே மலையாளம். மேற்கே தென்கன்னடம்.
குடகின் மொத்த நிலப்பரப்பு சுமார் 1,590 சதுர மைல்கள் தான். மக்கள் தொகை மூன்றரை இலட்சம்.
குடகின்மீது விமானங்கள் பறக்கலாமே தவிர, விமானங்கள் இறங்குவதற்குத் திடல்கள் இல்லை. குடகிற்கு ரெயில் பாதைகளோ ஆற்று வழிகளோ கிடையாது. சாலை வழி ஒன்றுதான் உண்டு.
சென்னையிலிருந்து குடகிற்கு பெங்களுர், மைசூர் வழியாகத் தான் செல்ல வேண்டும்.
இந்தியாவின் மற்ற எந்தப்பகுதிகளைக் காட்டிலும் தமிழ் நாட்டுக்கும், குடகு நாட்டுக்கும்தான் நெருக்கமான பிணைப்பு உண்டு. ஆம்; தமிழ் நாட்டின் உயிர்நாடி காவிரி. காவிரியின் கர்ப்பக் கிரகம் குடகு!
மலையாளமும், தென்கன்னடமும் 1956 வரை சென்னை மாநிலத்தோடு சேர்ந்திருந்தன. இப்போது குடகு கர்நாடகத் துடன் இணைந்திருக்கிறது. .
இந்தக் கதையின் முக்கிய நிகழ்ச்சிகள் குடகு நாட்டில் ஒரு காப்பித் தோட்டத்தில் நடைபெறுகின்றன. "சில்வர் ஸ்டார்" என்ற அந்தக் காப்பித் தோட்டம் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு செல்வந்தருடையது. கணிசமான அளவுக்கு, குடகு நாட்டில் தமிழர்களுக்குக் காப்பித் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள், ஏலக்காய்த் தோட்டங்கள் உண்டு. அவைகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய பிரதானமான தோட்டங்களில் சில்வர் ஸ்டார் தோட்டமும் ஒன்று. அந்த அழகு மிகு தோட்டம்தான் நாவலின் நிலைக்களன்.
பூக்களில் சிறந்ததை ஜாதிப்பூ என்கிறர்கள் உயர்ந்த பசுக்களை ஜாதி மாடுகள் என்று அழைக்கிறார்கள்! அந்த வரிசையில். இந்த ஜாதிப் பெண்ணையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
—தென்னரசு