முக அழகைக் காப்பது எப்படி/அகமும் முகமும்

3. அகமும் முகமும்

உடல் என்றால் பொன், பொருள் என்று பொருள் கூறுவார்கள்.

உடம்பு என்றால் வருந்துதல் என்ற ஒரு பொருளும் உண்டு.

மக்கள் வாழ்கின்ற உலகிற்கு கவ்வை உலகம் என்ற ஒரு பெயர் உண்டு. கவ்வை என்றால் துன்பம் என்று அர்த்தம்.

துன்பம் சூழ்ந்த பூவுலகில், இன்பமாக வாழ்வது எப்படி? இன்பமாக வாழவே முடியாதா என்ற ஒரு கேள்வியும் எழுமே!

மக்களைப் பற்றி பக்குவமாகப் புரிந்து கொண்ட சித்தர் திருமூலர் இப்படி ஒரே ஒரு வரியில் உண்மையை உரைத்திருக்கிறார்.

“மண்ணில் கலங்கிய நீர்போல் மனிதர்கள்”

கலங்கிய நீர்போல, மக்கள் குழம்பித்தான் கிடப்பார்கள். குழப்பிக் கொண்டு திரிவார்கள். மற்றவர்களையும் குழப்புகின்ற காரியங்களையே புரிவார்கள்.

அதேசமயத்தில் அவர்கள் தாங்களும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள். மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வாழ விட மாட்டார்கள்.

எங்கள் சாதி சனம் என்று சவடால் விட்டுப் பேசிக் கொண்டே, மற்ற சாதிகளோடு சண்டை போடுகின்றார்களே! அது சரிதானா என்று நாம் சிந்தித்தால் துன்பம் தருவது, 'பிற சமுதாயத்தினர் அல்ல; அவரவர் சாதி சனம்தான், என்று சித்தர் ஒருவர் பாடுகிறார் என்றால் அது அவர் அனுபவித்தத் துன்பமா? கேட்டுத் தெரிந்த கொண்ட துன்பமா?

“நம் சனம் சூழ்ந்தக்கால் நாடும் பிணியாகும். நீடும் கலை, கல்வி, நீள்மேதை, கூர்ஞானம், பீடு எல்லாம் வாயா” என்கிறார் திருமூலர். வாயா என்றால் கிட்டாது என்பது பொருள்.

நம் சனம் என்றால், சொந்தக்காரர்கள் என்று அர்த்தம். சொந்தம் சேர்ந்தால் என்ன ஆகும்?

குற்றமே செய்யும் சுற்றம் என்பதால்தான். குற்றம் பார்க்கில் சுற்றமில்லை என்பார்கள்.

ஏன் சுற்றம் குற்றம் செய்கிறது என்றால், அவர்கள் கலங்கிய மனம் கொண்டவர்களாக இருப்பதால்தான்.

மனம் கலங்கி விட்டால், மார்க்கமும் கலங்கும். வாழ்க்கையும் கலங்கும்.

ஆகவே, அந்த மனத்தை அழகாக, தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே, அதைக் குறிக்கின்ற சொல்லை, அகம் என்று அருமையாகப் பெயரிட்டனர்.

மன் என்றால் சிந்தித்தல் என்றும்; அம் என்றால் அழகு என்றும் நீர் என்றும் அர்த்தம்.

சிந்திக்கின்ற செயலைக் கொண்டதுதான் மனம் அதற்காக கண்டதையெல்லாம் சிந்திக்கக் கூடாது மனதுக்குப் பலப்பல சிந்தனைகள். பலான சிந்தனைகள் நிறைய உண்டு. நிறையவே உண்டு.

கோபம், ஆசை, அசட்டைத்தனம், உலோபகுணம், மயக்கம், செறுக்கு, அகந்தை, பொறாமை போல பல கெடுமதிகள் உண்டு.

அப்படியெல்லாம்மாறாகச் சிந்தித்தால்,உடல்நலம் கெடும். மனவளம் என்ற ஒரு மகிமையான சொல்லால் குறித்தனர்.

அழகாகச் சிந்திப்பதற்குத்தான் மனம் என்று பெயர். அதிலும் நீரோட்டம் போல சிந்தனை வேண்டும் என்று அதற்குள்ளே குறிப்பும் தந்தார்கள்.

நீரோட்டம் என்றால், தங்கு தடையில்லாமல், தெளிவாக ஓடுகிற நீருக்குப் பெயர்.

நீரோட்டம் என்றால் மணியின் உள்ளொலி என்றும் ஒரு பொருள் உண்டு. மணியின் ஓசை காதுக்கு இன்பமாக இருக்கும். அதுவும், உள்ளேயிருந்து வருகிற மெல்லிய ஓசை, செவிக்குப் பதமாகவும் இருக்கும். மனதுக்கு இதமாகவும் இருக்கும்.

ஆகவேதான், மனம்போல வாழ்வு உண்டாகும் என்று மறைபோல, அதைக் குறித்துச் சென்றார்கள்.

அகம் என்ற இந்தச் சொல். இன்னும் கொஞ்சம் ஆழமான பொருளை உடையதாக அமைந்திருக்கிறது.

அ+கம் என்று பிரிக்கலாம் இந்தச் சொல்லை ‘அ’ என்றால் அகச்சுட்டு, புறச்சுட்டு.

‘கம்’ என்றால் சந்தோஷம், வீட்டின்பம், தேவலோகம் என்றெல்லாம் அர்த்தம் உண்டு.

ஆகவே, அகம் என்பது சந்தோஷத்தைத் தருவது. சொர்க்கலோகம் போன்ற உணர்வை உள்ளும் புறமும் தருவது என்பதே அதன் ரகசியப் பொருளாகும்.

சந்தோஷம். அதைத்தான் அகம் என்றனர்.

ஆக, அகம் சந்தோஷம் கொண்டதாக இருக்கிற பொழுது. அந்த இனிய உணர்வுகளை முகந்து கொண்டு, வெளியே தெளிவாகக் காட்டும் பண்பால்தான், அதை முகம் என்றனர்.

‘கம்’ என்றால் மூன்று என ஒரு பொருள் உண்டு. இப்போது முகம் என்றால் மூன்று வகையான சந்தோஷம் காட்டுகிற ஒரு அங்கம் என்பதாக நாம் அறிந்து கொள்கிறோம். அந்த மூன்று வகைகள் என்ன?

1. சந்தோஷம் 2. மகிழ்ச்சி 3. ஆனந்தம்.

இந்த மூன்றும் ஒன்றுதானே! ஒன்றைத் தானே குறிக்கிறது. இதில் எங்கே இருக்கிறது பிரிவு என்று உடனே எண்ணத் தோன்றுகின்றதல்லவா!

அப்படித் தோன்றினால் நீங்கள் இந்தப் பகுதியை ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்று புரிகிறது.

இந்த மூன்றும் ஒன்றுபோல் தெரிவது வெளிப் புறத்தில்தான். மேலோட்டமாக அப்படித்தான் தெரியும். ஆனால் உட்பொருளே ஒப்பற்ற பொருளாகும்.

உடல், மனம், ஆத்மா என்று மூன்று பிரிவாக உடலை பிரிக்கிறோம். அல்லவா! அந்த மூன்றுக்கும் ஏற்படுகிற நிலைதான். இந்தச் சந்தோஷம், மகிழ்ச்சி, ஆனந்தம் என்பதெல்லாம்.

1. சந்தோஷம்:

இதற்கு ஆங்கிலத்தில் Pleasure என்பார்கள். காரிலே போகும்போது உடலுக்குத் தொந்தரவு இல்லாமல், சங்கடம் இல்லாமல் இதமாக இருக்கின்ற நிலையைத்தான் சந்தோஷம் என்றனர். அதனால்தான் அந்தக் காருக்கு Pleasure Car என்று ஆரம்ப காலத்தில் பெயர் சூட்டினார்கள்.

சந்தோஷம் என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். சன் + தோஷம் என்று இந்தச் சொல்லைப் பிரிக்கலாம்.

சன் என்றால் ஒன்றுமில்லை. தோஷம் என்றால் குறை.

உடலுக்குக் குறை ஒன்றுமில்லை; நோய் நொடி எதுவுமில்லை என்பதைத் தான் நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று எல்லோரும் கூறுவார்கள்.

ஒருவரைப் பார்த்து எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டால், நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று பதில் வருவதை நீங்கள் கேட்டிருப்பீர்களே! எனவே, உடலுக்குக் குறை இல்லாத ஒரு இனிய நிலைக்கே சந்தோஷம் என்று பெயர். அவரே சந்தோஷக்காரர் ஆகிறார்.

2. மகிழ்ச்சி:

இதை ஆங்கிலத்தில் Joy என்றும் Delight என்றும் கூறுவார்கள்.

மனம் என்றால் கவலைப்படுவது, கலக்கப்படுவது, குழப்பிக் கொள்வது, உழப்பிக் கொள்வது, உருகித் தொலைப்பது என்று சிக்குண்ட நூல் கண்டாகிவிடும்.

அதைப்போல் மனதுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. நினைவுகளுக்கு எந்தச் சிணுங்கலும் இல்லை. மனம் தெளிவாகவே இருக்கிறது. கவலைகள் எதுவும் புகவில்லை என்ற இனிய நிலைதான் மகிழ்ச்சி ஆகிறது.

மகிழ மரம் தனது பூக்களால் பெருமை பெறுகிறது. மகிழம் பூ நிறைய பூத்துக் குலுங்கும் தன்மை உள்ளது.

மகிழ்வு ஆகிய மகிழ்ச்சிப் பூக்களை முகத்தில் பூத்துக் குலுங்குவதையே மகிழ்ச்சி (Gladness) என்கிறோம்.

குறையில்லாத மனதுக்கு உண்டாகும் இனிய நிலையே மகிழ்ச்சியாகும்.

3. ஆனந்தம்:

இதற்குப் பேரின்பம் என்ற பெயருண்டு. பரமானந்தம் என்பார்கள். இதை ஆங்கிலத்தில் Great Joy என்றும் Happiness என்றும் கூறுவார்கள்.

ஆனந்தம் என்பது ஆன்மாவிற்குக் குறையில்லாத நிலை. உடலால் குறையில்லை. மனதால் குறையில்லை என்ற மொத்தமான மறுமலர்ச்சி நிலைதான் ஆனந்தமாகும்.

ஆ = என்றால் ஆன்மா என்றும்; நந்தம் என்றால் குறையாத என்றும் பொருள் உண்டு.

ஆன்மாவுக்குக் குறைவில்லா நிலையைத் தான் ஆனந்தம் என்றனர்.

இது குடும்பவாசிகளுக்குக் கிட்டாத ஒன்று என்றும், துறவறம் பூண்டவர்களுக்கே தொடர்ந்து கிடைக்கும் என்றும் ஓர் ஐதீகம் உண்டு.

அதனால்தான், துறவறம் பூண்ட தூயவர்கள். தங்களை ஆனந்தம் பெறப்பெற்ற ஜீவிகள் என்று கூறி ஆனந்தர் என்று அழைத்துக் கொண்டனர்.

விவேகாநந்தர் இந்தப் பெயருக்குப் பெருமை சேர்த்தவர்.

இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற பிரேமானந்தா, இந்தப் பெயருக்குக் களங்கம் கற்பித்த கொடுமைக்காரர்.

இந்த மூன்று இனிய நிலைகளாகிய சந்தோஷம் மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகியவற்றை முகம்தான் உலகுக்குக் காட்டுவதால்தான் முகம் உடல் உறுப்புக்களிலேயே முதன் மை ஸ்தானம் பெற்று முக்கியத்துவம் அடைந்திருக்கிறது.

இதுவரை அகம், முகம் என்கிற சுகம் தரும் உறுப்புக்களின் தன்மைகளை அறிந்து கொண்டோம். இனி முகத்தின் அமைப்பைப் பற்றிய சிறப்புத் தன்மையை தெரிந்து கொள்வோம்.