முக அழகைக் காப்பது எப்படி/ஜீவாத்மாவும் பரமாத்மாவும்

2. ஜீவாத்மாவும் பரமாத்மாவும்

உடல், மனம், ஆத்மா எனும் முக்கோண அமைப்பிலே, நமது தேகம் உருவாகியிருக்கிறது.

தண்ணிர், காற்று, வெப்பம் மூன்றும்தான் தேகத்திற்குத் தெளிவையும், வலிவையும், பொலிவையும், வழங்கிக் கொண்டிருக்கின்றன.

ஓயாமல் எப்போதும் தகனமாய் தகித்துக் கொண்டிருக்கின்ற காரணத்தால் தான், நமது உடலுக்குத் தேகம் என்று பெயர்.

தீ அகமாய் உடல் இருப்பதால், தீ அகம் என்று குறிப்பிட்டு, ஒவ்வொருவர் உடலிலும், வெப்பம் 98.4 டிகிரி இருக்க வேண்டும் என்பது கட்டாயம் என்பர். அது குறைந்தால் ஜன்னி ஏற்படும். மிகுதியானால் காய்ச்சல் வந்து விடும்.

இந்தத் தீயின் அளவு, ஒரு 60 வால்ட் பல்பு எரிகிறபோது ஏற்படுகிற வெப்பத்தின் அளவு. நமது தேகத்தில், சதாகாலமும் இருந்து கொண்டே இருக்கிறது. எரிந்து கொண்டே இருக்கிறது.

இதனால் இதை தீ அகம் என்றனர். தீ என்றால் நெருப்பு என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் தீ என்றால் அறிவு. இனிமை என்று பல அர்த்தங்கள் உண்டு என்பதையும் அறிந்து மகிழுங்கள்.

தீயானது, உடலில் கட்டுக்கு அடங்கி இருந்தால் அது தீ+அகம். அப்போது அது அறிவு பயக்கும். சுகமாக இனிமை கொடுக்கும். அகமாகவும் இருக்கும். அதை ஒழுங்காகப் பராமரிக்காமல், பாதுகாக்காமல் போனால், அதுவே தீயகமாக மாறிப் போகிறது. தீயகம் என்றால் நரகம் என்று அர்த்தம்.

தீ அகத்தை ஒழுங்காகக் காத்தால், அதுவே தே அகமாக மாறிப் போகிறது. தே என்றால் இனிமை என்று அர்த்தம். தெய்வம் என்று அர்த்தம்.

நலமாகக் காக்கப்படும் நமது உடல், தெய்வம் வாழுகிற ஆலயமாகி விடுகிறது. சுகமான இனிமை தருகிற சொர்க்கமாக மாறிவிடுகிறது.

தேகத்தை ஆட்டிப் படைத்து, ஆதார சுருதியாக விளங்குகிற ஜீவன் இருக்கிறதே! அதைத்தானே நாம் ஆத்மா என்கிறோம். அந்த ஆத்மாவுக்கு இன்னொரு பெயர் தேகி என்பதாகும்.

நமது உடலுக்குச் சரீரம் என்பது மற்றொரு பெயர்.

சரீரம் என்றால், இடைவிடாமல், ஜீரணமாகிக் கொண்டிருக்கிறது என்பது பொருள்.

நாம் சாப்பிடுகிற உணவுப் பொருட்களையெல்லாம் ஜீரணம் செய்வது சரீரம் தான்.

இந்த சரீரத்தின் சக்தியை வளர்த்து. சாரமாகப் பணியாற்றும் மனதின் வல்லமையையும் வளர்த்து விடுகிற ஜீவனான, ஆத்மாவான தேகியான ஆன்மா இருக்கிறதே. அதற்கு சரீரீ என்ற மற்றொரு பெயரும் உண்டு.

உடலுக்கு மேலும் ஒரு பெயர் ஆக்கை. அதாவது யாக்கை என்றும் சொல்வார்கள்.

ஆக்குதலுக்கு ஆக்கை என்றும்; கட்டுதலுக்கு யாக்கை என்றும் பொருட்கள் உண்டு.

எதைக் கட்டுகிறது? எதை ஆக்குகிறது? உடம்புக்கு இப்படி ஒரு பெயர் ஏற்பட்டது என்றால், நமது உடம்பு பஞ்ச பூதங்களைக் கொண்டு ஆக்கப்பட்டது. உருவாக்கப்பட்டது என்று அர்த்தம்.

பஞ்சபூதங்கள் என்கிற இயற்கையின் கூறுகள் யாவை? பஞ்ச பூதங்களுக்கும் நமது உடல் உறுப்புக்களுக்கும் என்ன சம்பந்தம்? எப்படிப் பொருந்துகிறது என்ற வினாக்கள், நம்மை வெடுக்கென்று கேட்கத் தூண்டுகின்றன!

நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்கிற ஐந்து பூதங்கள்தான் இயற்கையின் அம்சங்கள்.

இவை ஐந்திற்கும் என்னென்ன பண்புகள் இருக்கின்றன என்று, இயற்கையில் வாழ்ந்த, இயற்கையால் வாழ்ந்த சித்தர் பெருமக்கள், சிறப்பாக ஆய்ந்தறிந்து தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள்.

1. ஆதார நிலமாக பூமி அமைந்து இருக்கிறது. அதற்கு சக்தி இன்பம் என்று பெயர்.

2. பூமிக்கும் மேலே நீர் பரவியிருக்கிறது. அதை சுனை இன்பம் என்று கூறுவர்.

3. நீருக்கும் மேலே நெருப்பு எரிகிறது. அதை ஒளி இன்பம் என்று கூறுவர்.

4. நெருப்புக்கும் மேலே காற்று ஊடாடிக் கொண்டிருக்கிறது. அதை உயிர்ப்பு இன்பம் என்று கூறுவர்.

5. காற்றுக்கும் மேலே விளங்குவது ஆகாயம். அதை ஒலி இன்பம் என்று கூறுவர்.

இதைத் திருமூலர் மிக அழகாகப் பாடிக்காட்டுவார்.

“உரம் அடிமேதினி உந்தியில் அப்பாம்
விரவிய தன்முலை மேவிக் கீழ் அங்கி
கருமுலை மீமிசை கைக்கீழிற் காலாம்
விரவிய சுந்தர மேல்வெளியாமே”
(1937)

இன்னும் கொஞ்சம் விளக்கமாகப் பார்க்கலாம். உரம் அடிமேதினி என்பது மண் தத்துவம்.

உந்தியில் அப்பு என்பது நீர் தத்துவம்

மார்பகம் வரை என்பது தீ தத்துவம்

மார்பிலிருந்து தோள் வரை என்பது காற்றுத் தத்துவம்.

சுந்தரமேல் வெளி என்பது வானத்தத்துவம்.

இனி, இயற்கைத் தத்துவ அமைப்பு, உடலுக்கு எவ்வாறு இயையப்பட்டிருக்கிறது என்ற ஞானத்தை தெரிந்து கொள்ளலாம்.

1. இடுப்பிலிருந்து பாதம் வரை பூமியாகும். பூமி அனைத்தையும் தாங்குவது போல, காலிரண்டும். தூணாக இருந்து தாங்குகின்றன.

2. இடுப்பிற்கும் மார்புக்கும் இடைப்பட்ட வயிற்றுப் பகுதி நீர்த்தத்துவம். சுவைதரும் நீராக, சுகிக்கும் நீர்ச்சுரப்பிகள் எல்லாம். இந்தப் பரப்பிலேதான் பெருமைக்குரிய இடம் பெற்றுக் கொண்டு விளங்குகிறது.

3. வயிற்றுக்கும் மேலே மார்புப் பகுதி அளவானது தீ தத்துவமாக விளங்குகிறது. தீ எரிவதுபோல. நெஞ்சுக்குள் இருந்து நெருப்பு ஜூவாலைகளாக நினைவுகள் பொறி தட்டிக் கிளம்புகின்றனவே? அதனால்தான் நெஞ்சுப் பகுதியைத் தீயாகவும் ஒளி இன்பமாகவும் உருவகித்துக் காட்டுகின்றார்கள்.

4. மார்புக்கு மேற் பகுதியிலிருந்து கழுத்துப் பகுதி வரை உயிர்ப்புச் சக்தியாக சுவாசம் விளங்குகிறது. இதுவே உயிர்ப்பின்பம் என்று காட்டப்படுகிறது.

5. கழுத்துக்கு மேலே அழகு வெளியாக ஆகாயம் இருக்கிறது. அந்த வானம்தான் ஞானத்திற்குரிய பீடமாக விளங்குகிறது. ஒலி இன்பம் நிறைந்திருக்கிறது.

இப்படி இயற்கை அமைப்பின் எழில் போலவே, உடல் அமைப்பின் அழகும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதை மக்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காகவே, அவர்கள் அற்புதமாகப் பயன்படுத்துகிற கையின் விரல்களில் விதந்தேற்றி வைத்தார்கள்.

விரல்களைப் பார்க்கும் போதெல்லாம் வியப்பூட்டும் இயற்கை அம்சங்களை நினைக்க வேண்டும். அவற்றைப் போல ஒழுக வேண்டும். திகழ வேண்டும். பசுமையும் வலிமையும் மிக்கதாக வாழ வேண்டும்.

கட்டை விரல் - தீ
ஆட்காட்டி விரல் - காற்று
நடுவிரல் - ஆகாயம்
மோதிர விரல் - பூமி
சுண்டு விரல் - நீர்

இப்படி அமையப் பெற்றதெல்லாம். இனிமையாக, ஏற்றமிகு மனிதர்களாக வாழ வேண்டும். எல்லோரும் என்பதற்காகவே.

நம் உடலை மெய் என்றனர். பொய்யென்று அமங்கலமாகப் பேசக்கூடாது என்பதற்காக மெய் என்று கூறவில்லை. உலகின் உண்மையானது உடம்பு என்பதை உறுதிப்படுத்தவே!

உடலின் அமைப்பு இயற்கை போல, இயற்கையாக அமையப் பெற்றிருக்கிறது.

பூமியாய் சுமக்கும் பாதங்கள். நீராய் சுரக்கும் வயிற்றுப் பகுதி, நெருப்பாய் தகிக்கும் நெஞ்சுப் பகுதி, காற்றாய் நடக்கும் தொண்டைக் குழி, வானமாய் நிற்கும் தலைப்பரப்பு.

இப்படி இயற்கையோடு தொடர்புடைய நமது தேகத்தை இயக்குவது. மயக்குவது, நிரப்புவது, நடமாட வைப்பது எல்லாம் காற்றுதான்.

காற்றுதான் அனைத்துக்கும் காரணமாக, காரியமாக விளங்குகிறது.

காற்று (Air) என்பது பலவகைப் பிரிவுக் காற்றுகளால் கலந்து கிடக்கிறது. இந்த உலகச் சுற்றுப்புற சூழ்நிலையில் 5000 மில்லியன் டன்கள் இருக்கிறது காற்று என்று கணக்கிட்டிருக்கின்றனர் வல்லுநர்கள்.

நைட்ரஜன், ஆர்கான், கார்பன் டை ஆக்சைடு, ஹீலியம், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன், சீனன் எனப் பலவகை காற்றுகளுடன், 20.95 சதவிகித அளவு பிராணவாயு அதாவது ஆக்சிஜன் இருக்கிறது என்பதையும் விஞ்ஞானிகள் விவரமாகக் கணித்திருக்கின்றார்கள்.

காற்றுதான் எல்லாமே என்று கூறினோம் அல்லவா! ஹைட்ரஜன், ஆக்சிஜன் என்ற இரண்டு காற்றும் இணைந்ததால் தான் தண்ணீர் உண்டாயிற்று என்பார்கள்.

காற்றும் அனலாகிய வெப்பமும் சேர்ந்துதான் தீயாகிறது என்பார்கள்.

பூமிக்குள்ளும், வான வெளி முழுவதும் காற்றுதான் சூழ்ந்து இருக்கிறது; ஆண்டு கொண்டிருக்கிறது.

ஆக, காற்றுதான் எல்லாமும் எங்கேயும் என்பதால், காற்றே வாழ்க்கையின் ஊற்று என்று பிரமிப்புடன் புகழப்படுகிறது.

காற்றின் நிறம் கருமை என்பார்கள்.

நீரின் நிறம் வெண்மை என்பார்கள்.

நெருப்பின் நிறம் செம்மை என்பார்கள். (செந்நிறம்)

வானத்தின் நிறம் புகைமை என்பார்கள்.

இந்த நிறக் குணங்கள் எல்லாம். நம் உடலோடு ஒத்துப் போகின்ற அற்புதத்தையும் நாம் அறிந்து மகிழ்வோமாக.

காற்றிற்கு என்று எண்ணிலடங்காப் பெயர்கள் உண்டு. அதற்குள்ள அத்தனைப் பெயர்களிலும், அனைவராலும் மரியாதையுடனும், பயபக்தியுடனும் பேசப்படுகின்ற ஒரு பெயர் ஆத்மா என்பது.

இந்த ஆத்மா என்ற சொல்லை வைத்துக் கொண்டு தான், மதவாதிகள் எல்லாம் மக்களை மயக்கிக் கொண்டிருக்கின்றார்கள் தொழுது மண்டியிட வைத்திருக்கின்றார்கள். மரண பயத்திலிருந்து மாறாமல், மீளாமல், வாழ வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

நம் உடலை மூன்று கூறுகளாகப் பிரிக்கலாம். உடல், மனம், ஆத்மா என்பதுதான். இந்த மூன்று கூறுகளின் சீர்மையைக் கொஞ்சம் பகுத்துப் பார்க்கலாம்.

இந்த உலக வாழ்க்கைக்கு, உகந்தாற் போல், செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு சிறப்பான அமைப்புக்கு உடல் என்று பெயர்.

எப்படி எப்படியெல்லாம் உடல் இயங்க வேண்டும் என்று ஆணையிட்டு, காரிய மாற்ற வைக்கிற ஒரு பொறுப்பான அமைப்புக்கு மனம் என்று பெயர். அதாவது அழகாக சிந்திக்கிற அமைப்புக்கே மனம் என்று பெயர்.

இளைக்காமல் களைக்காமல் எப்போதும் உடல் இருக்க வேண்டும். தவிக்காமல், தகிக்காமல் யூகத்தோடு வியூகம் அமைத்து இயக்க வேண்டும் என்று இந்த இரண்டு அமைப்புகளையும் ஆற்றுப்படுத்துவதற்குரிய ஒரு அமைப்புக்குப் பெயர்தான் ஆத்மா.

ஆத்மா என்பது வேறொன்றுமில்லை. காற்று என்பதுதான் அதற்கு அர்த்தம்.

ஆற்றுமா என்பதுதான் ஆத்மாவாக மாறிவிட்டது என்பது என்னுடைய கருத்தாகும்.

ஆற்றுப்படுத்துதல் என்றால், வழிப்படுத்துதல் என்றும், வழி நடத்துதல் என்றும் பொருளாகும்.

உழைக்கின்ற உடலையும், உறுதியுடன் கட்டளை இடுகிற மனதையும், உவப்புடன் உற்சாகப்படுத்தி வழி நடத்துகிற ஆற்றுமாதான் நாளடைவில் ஆத்துமா என்று அழைக்கப்பட்டு விட்டது.

காற்று என்பதை காத்து என்றும், சோற்று என்பதை சோத்து என்றும் பேச்சுவழக்கு ஆனதுபோல, ஆற்றுமாவும் ஆத்துமாவாக புதுப்பெயர் பெற்றுக் கொண்டது.

ஆத்மா எனும் காற்றுதான் உடலுக்குள் உயிர்ப்பு சக்தியை அளிக்கும் ஆற்றலுடன் விளங்குகிறது. அதுவே ஜீவ சக்தியாகவும் திகழ்கிறது.

உடம்புக்குள்ளே ஜீவசக்தியாக விளங்குகின்ற காரணத்தால். அதை ஜீவாத்துமா என்றனர்.

உள்ளே சுவாசிக்கப்படுகின்ற உயிர்க் காற்றானது. உள்ளே பத்து பிரிவுகளாகப் பிரிந்து கொண்டு உறுப்புக்களை வளமாக நலம்படச் செயல்பட வைக்கிறது.

பிராணவாயுவான உயிர்க்காற்று உடம்பின் உள்ளே பெற்றிருக்கும் பத்து வகைப் பிரிவுகளின் பெயர்கள் பின்வருமாறு.

1. பிராணன் , 2. அபானன் , 3. சமானன், 4. உதானன், 5. வியானன், 6. நாகன், 7. கூர்மன், 8. கிரிகரன், 9. தேவதத்தன், 10. தனஞ்செயன்.

இந்தக் காற்றுகள் செய்யும். காரியங்களைப் பாருங்கள்.

1. பிராணன் என்கிற காற்று, இதய ஓட்டத்தையும், சுவாசத்தையும் கட்டுப்படுத்துகிறது. இதை உயிர்க் காற்று என்பார்கள்.

2. அபானன்: சிறு நீர், மலம் மற்றும் உடலில் உண்டாகும் கழிவுப் பொருட்களை வெளியேற்ற வைக்கிறது. இதை மலக்காற்று என்பார்கள்.

3. சமானன்: உண்ணும் உணவை நன்கு ஜீரணம் செய்ய உற்சாகப்படுத்தி உதவுகிறது. இதை நிரவுக் காற்று என்பார்கள்.

4. உதானன்: உள்ளே காற்றைச் சுவாசிக்கும் போதும், உணவை உண்ணுகிறபோதும், ஒன்றுக் கொன்று தடுமாறி விடாமல், ஒழுங்குபடுத்தி உள்ளே அனுப்பும் பணியைச் செய்கிறது. இதை ஒலிக்காற்று என்பார்கள்.

5. வியானன்: சுவாசித்த காற்றையும் சாப்பிட்ட உணவின் சக்தியையும் சகல உறுப்புகளுக்கும் கொண்டு செல்ல உதவுகிறது. இதை தொழிற் காற்று என்பார்கள்.

6. நாகன்: இதை ஏப்பக் காற்று என்பர்.

7. கூர்மன்: இமைகளை இயக்கி, விழிகளைக் காப்பாற்றும் கடமை கொண்டது. இதை விழிக் காற்று என்பர்.

8. கிரிகரன்: சுவாசப் பகுதியில் நுழைந்த நுண் பொருட்களை வெளியேற்ற உதவுகிற தும்மற் காற்று.

9. தேவதத்தன்: உடம்பில் உயிர்க்காற்று குறைகிறபோது கொட்டாவியை உண்டுபண்ணி அதிகக் காற்றைச் சுவாசிக்கச் செய்ய வைக்கும் கொட்டாவிக் காற்று.

10. தனஞ்செயன்: உடலிலிருந்து கடைசியாக இந்தக் காற்று வெளியேறுகிற போது, உடல் வீங்கியும் நாற்றமெடுத்தும் போகும். ஆகவே, இதை வீங்கற்காற்று என்பார்கள்.

ஆக, புறத்திலிருக்கும் அதாவது பரத்திலிருக்கும் காற்றான பரம் ஆத்மா, உடலில் புகுந்து ஜீவனைத் தருகிறபோது, அது ஜீவாத்மா ஆகி விடுகிறது.

ஜீவனானது, சத்திழந்த உடலிலிருந்து வெளியேறி விடுகிறபோது. அது வெளி உலகக்காற்றோடு கலந்து விடுகிறது.

இதுதான் ஜீவாத்மா பரமாத்மாவோடு கலந்து விடுகிறது என்று பேசப்படுகிற விஷயமாகும்.

இந்த விஞ்ஞான் பூர்வமான விஷயத்தைத் தான் ஆத்மாவாக்கி, மதத்தை ஏற்படுத்தி விட்டனர். அதிலே த்வைதம் , அத்வைதம், வசிஷ டாத்வைதம் என்று பலவிதம் உண்டு.

அத்வைதம் என்பது பரமாத்மாவும், ஜீவாத்மாவும் ஒன்றெனும் கொள்கையுடைய மதம் என்பர். இதை ஏகாத்மவாதம் என்று கூறுவார்கள். இதை இரண்டன்மை என்றும் சொல்லுவார்கள்.

த்வைதம் என்பது பரமாத்மாவும் ஜீவாத்மாவும் தனித்தனி எனும் கொள்கை உடையது.

நாம் மதங்களுக்குள் மடங்கி விடாமல், நாம் நன்றாக வாழ வேண்டி, ஆத்மா என்பதை அறிவியல் பூர்வமாக அறிந்து கொள்வோம். அற்புதமான ஆத்மாவாகிய உயிர்க்காற்றை, ஆண்டு அனுபவித்து மகிழ்வோம்.

முக அழகைக் காப்பது எப்படி என்பதற்கும் ஆத்மாவுக்கும் என்ன சம்பந்தம் உண்டு என்ற சந்தேகம், இந்நேரம் உங்களுக்கு வந்திருக்குமே!

உடல் முழுவதும் உயிர்ப்புச் சக்தியுடன் உலாவருகிற உயிர்க்காற்றுதான், உடலுக்கு அழகைத் தருகிறது. உள்ளத்திற்கு எழிலைத் தருகிறது. முகத்திற்குத் தெளிவையும், பொலிவையும் தருகிறது.