முக அழகைக் காப்பது எப்படி/மனித இனம்

1. மனித இனம்

உலகில் பிறந்த உயிரினங்களில், திலகமாகத் திகழ்வது மனித இனம்.

உடலால் உணர்வதன் மூலம், உலக இயற்கையை அறிந்து கொள்வது உயிரினங்களின் பண்பாகும். (Sense)

உலகை ஆள்கின்ற இயற்கையை எப்படி உணர முடியும் என்றால் புலன்களால்தான். புலன்கள் இயற்கையை உணருகின்ற ஆற்றலைப் பெற்றிருக்கின்றன.

இயற்கையின் வெளிப்பாடு எப்படி வருகிறது? ஒளியால், உயிர்ப்பூட்டும் காற்றின் ஒலியால், ஓசையால், நாற்றத்தால், தொடு உணர்வால், இவற்றையே சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பார்கள்.

இப்படி உணர்கின்ற தன்மையில், இயற்கையை அறிந்து கொண்டும் புரிந்து கொண்டும் அதன் இனிமையால் வளர்ந்து கொண்டும் இடர்ப்பாடு ஏற்படுகிறபோது நழுவிக் கொண்டும் வாழ்கின்ற உயிரினங்களை, அவற்றின் தன்மைக்கேற்ப அறிஞர்கள் ஆறு வகையாகப் பிரித்தனர்.

1. ஓரறிவுயிர், 2. ஈரறிவுயிர், 3. மூவறிவுயிர், 4.நான்கறிவுயிர், 5. ஐயறிவுயிர், 6. ஆறறிவுயிர், எனத் தொகுத்து வகைப்படுத்தி விளக்கினர் நம் முன்னோர்கள்.

1. ஓரறிவுயிர்:

ஓரறிவுயிர் என்பது ஒரு அறிவு உடையது. அறிவு என்பது உள்ளும் புறமும் ஒன்றைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வது.

உடலால் மட்டுமே உணர்வுடைய உயிர். அதை உற்றறி உயிர் என்கிறார்கள். உற்று என்பது தன்மேல் இயற்கைபடுகிறபோது ஏற்படுகின்ற உணர்வுத் தன்மையை வைத்து. அது அறிந்து கொண்டு வாழ்வது. வளர்வது.

அதற்கு உதாரணம் புல், மரம்.

உடலால் மட்டுமே உணர்வு கொண்ட ஒருவனுக்கு, அறிவுத் தெளிவு இல்லாமல், இருப்பதை, மரம்போல நிற்கிறான் என்கிறோம். அந்த வகை அறிவுக்குப் பெயர் புல்லறிவு ஆகும்.

“குறிப்பறிய மாட்டாதவன் நன்மரம்” என்று அவ்வைப் பிராட்டிப் பாடி, மர அறிவு என்ற ஒரு புதிய மரபையே வெளிப்படுத்துகிறாள். உடலின் மேற்பகுதியாக விளங்கும் தோல் ஐம்புலன்களில் ஒன்றாகும். இதை நாம் தோலறிவு என்றும் கூறலாம்.

2. ஈரறிவுயிர்:

இரண்டு புலன்களால், இயற்கையை, சுற்றுப்புறச் சூழ்நிலைகளின் சூட்சுமத்தை உணர்ந்து கொள்ளும் அறிவு. ஒன்று தோல் அறிவு இரண்டு நாவறிவு. அதாவது சுவை அறிவு.

அட்டை, சங்கு, நத்தை போன்ற உயிரினங்கள், உடலால் உணர்ந்தும், நாவால் சுவைத்தும், புரிந்து கொள்கின்றன.

அட்டை ஒன்று ஊர்ந்து போகிறது. ஓரிடத்தில் நாம் மெல்லத் தட்டுகிறோம். தெளிவாக ஊர்ந்த அட்டை சட்டென்று சுருண்டு கொண்டு, தன்னைத் தற்காத்துக் கொள்ள முயற்சிக்கிறது. ஆகவே, அட்டையறிவே ஈரறிவாக நாம் அறியலாம்.

3. மூவறிவுயிர்:

மூன்று புலன்களின் மூலம், இயற்கையுடன் வாழ்கின்ற வித்தையைக் கற்றிருக்கும் விந் தைமிகு உயிரினங்கள் இவை. இதற்கு உதாரணம். கரையான், எறும்பு போன்றவை.

தோல், நாக்கு, மூக்கு போன்ற மூன்று புலன்கள். உற்றறிதல், சுவையறிதல், நாற்றம் அறிதல் ஆகும்.

4. நாலறிவுயிர்:

மேலே கூறிய மூன்று புலன்களுடன், இரண்டு உணர்வுகளும் சேர்ந்து கொண்டு நான் காகின்றன. ஏறக்குறைய, பார்த்து, ரசித்து, ரசித்துப் புசித்து, ரசித்து சுவைத்து உற்றறியும் உயிராக இவை உலகில் உலாவருகின்றன.

இவற்றிற்கு உதாரணம் வண்டும். நெண்டும். வண்டு என்பது உங்களுக்குத் தெரியும். நெண்டு என்பது நண்டு. நெண்டுதல் என்பதற்குக் கிண்டுதல், தோண்டுதல் என்று அர்த்தம். நண்டு என்றாலே, நோண்டும் ஜீவன்தானே!

5. ஐயறிவுயிர்:

இவைகள் ஐம்புலன்களையும் அநேகமாகப் பயன்படுத்தி, ஆச்சரியமான வாழ்க்கையை வாழ்கின்ற உயிர்கள். தோல், நாக்கு, மூக்கு, கண், இவற்றோடு காதும் சேர்ந்து கொள்கிறது. உலகில் எழும் ஒலிகளை எல்லாம் கேட்டு மகிழ்ந்து, கிளர்ந்து எழுகின்ற இன்பத்தைத் துய்க்கும் பேறு பெற்ற பிறவிகள் இவைகள்.

ஐந்து அறிவுள்ள உயிர்களுக்கு உதாரணம் தருகிற பிங்கல நிகண்டு எழுதிய பிங்கல முனிவர். விலங்குகள் என்கிறார். பிறகு மக்கள் என்கிறார்.

உற்றறி புலனாம் மூக்கொடு கண்செவி
மக்களும் மாவும் ஐயறிவினரே!
(1096)

மிருகங்கள் ஐந்தறிவு உடையன என்பதில் ஏதும் சிறப்பு இல்லை. உண்மைதான். ஆனால் மனிதர்களையும் மிருகங்களுடன் சேர்த்து. ஐந்தறிவுக்குச் சான்றாகச் சொல்லி இருக்கின்றார் என்றால், அன்று சொன்னது இன்றும் உண்மையாக இருப்பதால் தானோ என்னவோ, அவரை மகான் என்று எண்ணத்தோன்றுகிறது. வணங்கத் தூண்டுகிறது.

மக்கள் ஒரு சாரார் விலங்கு போன்றவர்கள். மற்றொரு சாரார் கடவுளரையும் அவர்களை வழிபட்டோரையும் உணர்ந்து வழிபடும் விலங்கு என்று விளக்கமும் அளித்துள்ளார்.

இயற்கையை அப்படியே ஏற்றுக் கொண்டு, அவற்றைத் தேவையானபோது பயன்படுத்திக் கொண்டு, தீமை பயக்கும் என்கிறபோது தொலைதூரம் ஓடி தப்பித்துக் கொள்கின்ற தன்மை, ஐந்தறிவு உயிர்களுக்கு உண்டு.

ஆனால், பிங்கலர் ஆறறிவுயிர் என்று மேலும் ஒரு பிரிவைப் பெருமையாகப் பேசுகின்றார்.

மனனோடு, ஆறறிவினரே மக்கள்
ஒருசார் விலங்கு அதுபெறு குறித்தே!
!

உணர்தல், நாக்கு, மூக்கு, கண், செவி எனும் ஐம்புலன்களுடன், ஆறாவது புலனாக மனம் என்பதை இங்கே இணைத்துள்ளார்.

மனம் என்ற சொல்லுக்கு இத்தனை பொருட்களா? இந்தப் பொருளுக்குள்ளே நிறைந்து கிடக்கும் உட்பொருளை அறிகிறபோதுதான் மனதின் மகிமையும் மாண்பும் மகத்தான பெருமையும் நமக்குப் புரிகின்றது.

மன்+அம் தான் மனம் ஆயிற்று.

அம் என்றால் அழகு. மன் என்றால் சிந்தித்தல், பொருந்துதல் என்று அர்த்தம். அழகாக, சிந்திப்பதற்கு மனம் என்று பெயர் வாழ்வில் நிகழ்வதற்கேற்ப பொருத்தமாக சிந்திக்கத் தெரிந்ததுதான் மனம்.

சிந்திக்கின்ற சக்தியைப் படைத்தவனைத் தான் மனிதன் என்றனர். மனசு உள்ளவன் மனுஷன் என்றும், மனசு உள்ளவள் மனுஷி என்றும் அழைக்கப்பட்டார்கள்.

சிந்திக்கிறவன்தான் மனிதன் என்பதற்காக, மனிதன் என்ற சொல்லுக்குள்ளேயே மன் என்ற சொல்லையும் இணைத்து வைத்திருக்கின்றார்கள் பாருங்கள்.

விலங்குகளுக்கு இல்லாத, ஒரு விலை மதிப்பற்ற உறுப்பாக, எந்தச் சக்திக்கும் எட்டாத ஒரு சக்தியாகவே மனது படைக்கப்பட்டிருக்கிறது.

மனது என்றால் என்ன? மனது எதற்காக இருக்கிறது? என்ற ஒரு கேள்வியை எழுப்புவோர், மாநிலத்தில் நிறைய பேர் உண்டு.

உடல், மனம், ஆத்மா என்ற மூன்றும் சேர்ந்ததுதான் நமது மெய்.

உடல் என்பது, இயற்கையின் அன்றாட இயல்புக்கேற்ப தன்னை அனுசரித்தவாறு உலக வாழ்க்கையை நடத்திச் செல்ல உழைக்கும் வல்லமை உடையது.

மனம் என்பது, உடல் இப்படி இயங்க வேண்டும். இப்படி ஒதுங்க வேண்டும் என்று கட்டளை இடுவது. பத்திரமாகப் பணியாற்ற உதவுவது.

ஆத்மா என்றால் காற்று என்று அர்த்தம். இங்கே உடல் முழுவதும் உள்ள உயிர்க்காற்றே ஆத்மா என்று அழைக்கப்படுகிறது.

உயிர்ப்பை உண்டாக்குகிற உயிர்க் காற்று, உடலுக்கு வலிமையையும், மூளைக்கு வல்லமையையும் அளித்து ஆற்றுப்படுத்துவதால், அதற்கு ஆற்றுமா என்று பெயர் தந்தனர். அதுவே கால வழக்கில் ஆற்றுமா ஆகி, பிறகு ஆத்மாவாக மாறி வந்து விட்டது.