முடியரசன் தமிழ் வழிபாடு/005-049

5. அன்னாய் நன்றே


மலரனைய திருவடியில் சிலம்ப ணிந்து
மணியொளிரும் மேகலையை இடைக்க ணிந்து
பலர்புகழ்சிந் தாமணியை மார்பிற் பூண்டு
பார்புரக்கும் திருக்குறளே செங்கோ லாகக்
குலவுபுகழ்த் தூதுமுதல் தொண்ணூற் றாறு
குறுநூல்கள் பணிந்துநின தேவல் செய்ய
நலமுயர்நற் றொகைநூல்கள் ஆயம் ஆக
நன்கமைதொல் காப்பியமாம் கட்டில் ஏறி

பாவலர்தம் நெஞ்செமெலாம் ஆட்சி செய்யும்
பைந்தமிழே நின்வாயிற் புறத்தே நிற்கும்
காவலன்யான்; ஆண்டறியேன் எனினும் நின்றன்
காவலன்யான்; எனையாளும் அம்மே உன்றன்
கோவிலுறும் வாயிலன்யான்; பெருமை முற்றும்
குறித்துரைக்கும் வாயிலன்யான்; அதனால் என்றன்
பாவிலுறும் சொல்லிலெலாம் எழுத்தி லெல்லாம்
பாட்டுவெறி யூட்டியருள் அன்னாய் நன்றே.

(வீரகாவியம்)