முடியரசன் தமிழ் வழிபாடு

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.


“பிள்ளைக் கலிதனைத் தீர்க்கவந்தாய் - அன்புப்
பெட்டக மேஇன்பம் சேர்க்க வந்தாய்
உள்ளக் கவலைகள் ஓட்டவந்தாய் - என்றன்
ஓவிய மேபுகழ்க் காவியமே”

“பெற்றெடுத்த தாய்தந்தை பேர்காக்கும் மைந்தர்களைப்
பெற்ற குடும்பந்தான் பேறுபெற்ற நற்குடும்பம்;
ஆதலினால் குடும்பமது சுவையால் நெஞ்சை
அள்ளுமொரு காவியமென் றறைதல் சாலும்;
காவியத்தைக் காத்திடுக வாழ்வீர் நன்றே”

“பூமருவு மணமாலை பூண்டு நெஞ்சுட்
புகுந்திருவர் ஒருவரென ஆகி நின்றார்
தாமரையும் மணமுமென இல்ல றத்தில்
தாமிணைத்தோர் அணிகலனாய் விளங்கி நின்றார்”

- கவியரசர் முடியரசனார்

நன்றிக்குவிப்பு


எங்கள் இனிய செல்வங்கள்

பா. ஓவியா , M.E - இ. விவேக், M.S. (London)

மணவிழாவிற்கு வந்து வாழ்த்திச் சிறப்பித்தமைக்கு எங்களின் மனங்கனிந்த நன்றி! நன்றி!!


அன்புடன் பா. பூங்கோதை - மு. பாரி


வள்ளுவராண்டு 2042 மடங்கல் (ஆவணி) 15

(01-09-2011)

காரைக்குடி.



முடியரசன்

தமிழ் வழிபாடு

தொகுப்பாசிரியர்

மு.பாரி


கவியரசர் முடியரசன் அவைக்களம்
17. பூங்கொடி வீதி,
569, சூடாமணிபுரம்,

காரைக்குடி - 630 003.

வண்ணலை அச்சகம், காரைக்குடி. ✆ 235315

முன்னுரை


கவியரசர் முடியரசனார் கவிதைகள் தாய்மொழியுணர்ச்சி, தமிழின எழுச்சி, தமிழகத்து வளர்ச்சி, சாதியொழிப்பு, சமூகப்புரட்சி, பகுத்தறிவுட்டல், பொது உடைமை நாட்டல், சமஉரிமை பேணல், மாந்தநேயம் காணல், மக்கள் நலம் நாடல் ஆகியவற்றையே பிரதிபலிக்கும். ஆனால் அவை அனைத்திலும் தமிழுணர்வே தலைதூக்கியிருக்கும், முடியரசனாரின் தமிழ் வாழ்த்துக் கவிதைகளை நோக்குங்கால், கவிஞர் நாத்திகரா? ஆத்திகரா? எனும் வினாக்கீற்று, மனத்துள் தோன்றி மறையும். ஏனெனில், அவர் தமிழை நேசித்த விதம் அப்படி !

கவிஞரின் மறைவின் பொழுது, தினமணி (5-12-98) நாளிதழில் ‘பாடிப் பறந்த பறவை’ எனும் முடியரசனார் பற்றிய கட்டுரையில், “தமிழ் அவரது உயிர். எமக்குத் தெரிந்தவரை தமிழை இத்துணை நேசித்த ஒருவரையாம் இதுவரை கண்டதில்லை” என்று முனைவர்.தமிழண்ணல் குறிப்பிட்டுள்ளதிலிருந்து கவியரசர் முடியரசனாரின் தமிழ்ப் பத்திமையை உணரலாம்.

தமிழைத் தாயாக, தந்தையாக, காதலியாக, மனைவியாக, மகனாக மட்டுமன்றித் தெய்வமாகவும் உருவகப் படுத்திக் கனிந்துருகிக் கவிஞர் பாடிய பாடல்களைத் தொகுத்து இத்தொகுப்பில் தந்துள்ளேன். கவிஞரின் பல்வேறு கவிதை நூல்களிலிருந்து எடுக்கப்பட்டவை இவை. நூலின் பெயரை, ஒவ்வொரு பாடலின் கீழும் அடைப்புக் குறிக்குள் குறிப்பிட்டுள்ளேன்.

எத்துணையோ இடர்ப்பாடுகள் இன்னல்கள், வறுமை நிலை - அவரைத் தாக்கிய பொழுதும், எக்கடவுளையும் அவர் வேண்டி யாசிக்கவில்லை.

இடர்பல சூழ்ந்த போதும்
என்னுடல் தளர்ந்த போதும்
மிடியெனைத் தின்ற போதும்
விழியொளி குறைந்த போதும்
கடமையில் தவறேன் அம்மா
கனிந்துனைப் பாடிப் பாடி
இடுபணி புரித லன்றி
இனியெனக் கென்ன வேலை?

என்று தமிழையே பாடிக் கசிந்துருகினார். வணங்கா முடியரசராக வாழ்ந்த அவர்,

         “வாளால் பிளப்பினும் வாழ்நாள் இழப்பினும் வஞ்சமனக்
        கேளார் குழுமிக் கெடுதிகள் சூழினும் பூமியில்வாழ்
        நாளெலாம் வாட்டும் நலிவே உறினும் நற்றமிழே
        ஆளாதல் திண்ணம் அடியேன் நினது மலரடிக்கே”

என்று அன்னைத் தமிழுக்கு மட்டுமே தலைவணங்கினார்.

“இறைவழிபாடு தமிழில்தான் வேண்டும்” எனத் தமிழர் குரல் ஓங்கி ஒலிக்கும் இக்காலகட்டத்தில், இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அதற்குத் தக்கவையாகும். தமிழியக்கத்தின் இன்னொரு படைக்கலனாக இந்நூலைத் தமிழன்பர்கள் கைக்கொள்வாராக.

தாய்த் தமிழைப் போற்றிப் புரப்பதன் வழி, தமிழை வழிபாட்டு மொழியாக மட்டுமன்றி, பல்துறைப் பயன்பாட்டு மொழியாக்கி, பயிற்றுமொழியாக்கி, அறிவியல் மொழியாக்கி, அறமன்ற, ஆட்சிமொழியாக்கி, அன்னைத் தமிழை அரியணை ஏற்றி நல்வாழ்வு பெறுவோமாக.

முடியரசன் குடில், அன்பன்.

காரைக்குடி. மு.பாரி


"கவியரசு முடியரசன் தமக்கெனத் தனிப்பாணி வகுத்துக் கொண்டு, கவிதையே மூச்சாக வாழ்ந்தவர். அவருக்கு அது ஒரு தொழிலாக மட்டுமன்று; உயிர் மூச்சாகவே இயங்கி வந்தது. தமிழ் அவரது உயிர். எமக்குத் தெரிந்தவரை தமிழை இத்துணை நேசித்த ஒருவரை யாம் இதுவரை கண்டதில்லை என்போம். அதனால் தமிழ் உள்ள அளவும் வாழ்வு பெறும் கவிதைகளை அவர் தந்து சென்றுள்ளார்."

- முனைவர் தமிழண்ணல்

(கவிஞரின் மறைவினையொட்டி, தினமணி (05.12.1998) நாளிதழில், முனைவர் தமிழண்ணல் எழுதிய 'பாடிப் பறந்த பறவை' எனும் கட்டுரையிலிருந்து.)

புகழ் மலர்கள்


கவிஞன் யார்? ..... என்பதற்கு எடுத்துக்காட்டுத்தானய்யா, பகுத்தறிவுக் கவிஞர் முடியரசன் -தந்தை பெரியார்


திராவிடநாட்டின் வானம்பாடி கவிஞர் முடியரசன் . -பேரறிஞர் அண்ணா


தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிக்கின்ற
மான் துள்ளும் வேகத்தைக் கவிதையினால்
வான்பெய்யும் கோடைமழைபோலப் பொழிகின்ற முடியரசர்
முன்னாள் தொட்டு இந்நாள்வரை இருக்கின்ற நம்கவியரசர்.

தன்மானக்குன்றம் - கொள்கை மாறாச் சிங்கம் - திராவிட இயக்கத்தின் முன்னோடிக் கவிஞர் - திராவிட இயக்கத்தின் ஈடு இணையற்ற தளகர்த்தர்களில் ஒருவர் - 1940க்குப் பின்னால் திராவிட இயக்கத்தின் சார்பில் நாற்பதுக்கும் மேற்பட்ட இதழ்களில் கொள்கை முழக்கம் செய்தவர் கவிஞர் முடியரசன். அதிலும் குறிப்பாக முரசொலியிலும், முத்தாரத்திலும் அவர் கவிதை இடம் பொறாத நாளே இருக்கமுடியாது. இன்று திராவிட இயக்கம் நிமிர்ந்து நின்று கோலோச்சுகிறதென்றால்... அன்று முடியரசனார் ஆற்றிய இலக்கியப் பணியும் காரணம்.

-தலைவர் கலைஞர்


கவிஞர் என்றால் இப்படித்தான் வாழவேண்டும் என்று முடியரசனார் அவர்களின் வாழ்கையைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

- மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.


பாரதியார் என்ற வித்திலிருந்து முளைத்தது பாரதிதாசன் என்ற செடி, அச்செடியில் தழைத்தது முடியரசன் என்ற கொடி.

புரட்சிக் கவிஞர் பரம்பரையில் புத்துலக உணர்வு படைக்கும் பகுத்தறிவுச் சிந்தனைகளை வடிப்பதில் தேர்ந்தவர் கவிஞர் முடியரசனார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா வழியில் தன்மானச் சுடராகத் திகழ்ந்தவர். அவர் இயற்றிய கவிதை நூல்கள் ஒவ்வொன்றும் தமிழுக்கு ஆக்கம் செய்யும் செம்மொழிச் செல்வமாகும். கவிஞர்களிடையே ஓர் முடிசூடா மன்னராகத்திகழ்த்தவர் கவியரசர் முடியரசனார்.

பேராசிரியர் க.அன்பழகன்

என் மூத்த வழித்தோன்றல் முடியரசனே...
எனக்குப்பிறகு கவிஞன் ..... முடியரசன் .....

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

இருபதாம் நூற்றாண்டின் இலக்கியவாதிகளுள் இணையற்றவர் கவியரசர் முடியரசனார்.

-முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்

சாதி ஒழிய வேண்டும் எனக் கவிதையிலும், மேடையிலும் முழங்கிய கவிஞர்களுள், அவற்றைத்தன் வாழ்வில் கடைப்பிடித்தவர் கவிஞர் முடியரசனார் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா? எனத் தெரியவில்லை .

-தவத்திரு குன்றக்குடி அடிகளார்

வேத்தவைப் பாவலரும் வேற்று மொழிகலக்குந்
தீத்திறக் காலை தெளி மருந்தே - மூத்த
முடியரச ரின்றி மொழிவனப்புச் செய்யும்
முடியரசன் செய்யுண் முறை.

- மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்

பாடப் பிறந்த பழஞ்சபை மாணவன்
மூடப் பழக்கஞ் சாடிய பாவலன்....
இலக்கியம் நிலமா இலக்கணம் அரணாக்
கவிதை கோலாக் கற்பனை கொடியா
வெல்க தமிழெனும் விறற்கொடி பொறியா
யாப்புப் படையா நல்லணி துணையாப்
புரட்சி முரசாப் புதுமை துடியாத்
தமிழை இகழ்வார் தன்னுயிர்ப் பகையா
அல்மொழி திணிப்பார் வல்வர வெதிர்த்துத்
தொடுமொழிப் போரில் தும்பை சூடியோன்
மொழியர சோச்சும் முதல்முடி யரசன்
குடியரசு போற்றுங் கொள்கை யோனே

-முனைவர் வ.சுப.மாணிக்கனார்

முடியரசர் இவரென்றால் மக்க ளெங்கே?
முன்னோடும் பரி எங்கே? படைக ளெங்கே?
முடிஎங்கே? அரசெங்கே? முரச மெங்கே?
முத்தமிழில் ஒரு தமிழ்தான் முடியோ மற்ற
இடைத்தமிழ்தான் அரசோ! மூன் றாவதான
எழிற்றமிழ்தான் முரசோ! ஓ சரிதான் இந்த
முடியரசர் பாவரசர் பாடுகின்றார் நாம்
முழங்காலை நிலந்தாழ்த்தி வணங்கிக் கேட்போம்!

மும்முடியை ஓர்தலையில் முடித்த முடியரசர்
எம்முடியும் தலைவணங்கும் இயற்கையிலே கவிஞர்
தம்மரிய கவிதையினால் கவியரசர் ஆனார்
தாய்த்தமிழே அவர்முடியை உனக்குத்தான் சாய்ப்பார்.

- கவிஞர் கண்ணதாசன்

வளையாத முடியரசன் வைரத் தூண்தான்!
வளமார்ந்த பெரியாரின் கொள்கை வாள்தான்!
தளையறுத்து தமிழ்ப்பகையின் தலை யறுக்கும்
தளைதட்டா வெண்பாக்கள் இவரின் தோட்டா
குலைஇளநீர் கொட்டியதாய் இனிமைப் பேச்சு
'குடி'யறியாச் சிந்தனைகள் தமிழே மூச்சு
அலைகடலாய் கருத்துமனம் பெரியார் அண்ணா
ஆழ்மனத்தில் வைத்திருந்த புதையல் காடு
எவரெவரோ எழுதுகின்றார் இவரைப் போன்றே
எழுந்தவர்யார் எழுத்தாலே? பாவேந் தர்தம்
தவப்புதல்வர் தமிழ்ப்புலவர் இவரின் பாட்டு
தன்மான இயக்கத்தின் தளர்தா லாட்டு
யுகப்புரட்சி எழுத்தாளா தமிழர் கைக்கு
உயிர்நூற்கள் படைப்பாளா உன்றன் தொண்டை -
அகங்குளிர நினைக்கின்றேன்! உருவம் கூட
அகலவில்லை ! அடடாநீ எங்கே போனாய்?

-உவமைக் கவிஞர் சுரதா


கொட்டிக் கொடுத்தாலும் கோமான்கள் அழைத்தாலும்
எட்டியே பார்க்காத இளம்போத்துச் சிங்கமாய்
அட்டியின்றி பணத்தாசை அணுவளவும் இல்லாமல்
சுட்டி உரைக்கும் சுடர்க்கவியாய் கவியுலகில்
பாடிப்பறந்த பறவையாம் கவியரசர் முடியரசர்

.

-தமிழாகரர் தெ. முருகசாமி

கவிஞரின் மறைவிற்காகத் 'தினமணி' (05-12-1998) நாளிதழ் 'புதுமை பூத்த மரபுக் கவிஞர்' எனும் தலைப்பில் தீட்டிய அஞ்சலித் தலையங்கம்.

இறைவனின் படைப்புகளில் சிகரம் போன்றவன் மனிதன். மனிதனின் படைப்புகளில் சிகரம் மொழி; மொழியின் சிகரம் கவிதை. அது மொழியின் பூரணப் பொலிவும் கூட. தமிழ் இலக்கியம் நீண்ட மரபுடையது. மரபு வழுவாமல், புதுமைகளைப் புகுத்தி, தற்காலத் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்திய பெருமை மகாகவி பாரதியார் - பாவேந்தர் பாரதிதாசன் கவிதா மண்டலத்துக்கே உண்டு. இக்கவிதா மண்டலத்தைச் சேர்ந்த புதிய தலைமுறைக் கவிஞர்களில் முதலாவது இடத்தைப் பெற்றவர் கவிஞர் முடியரசன். “எனது மூத்த வழித்தோன்றல் முடியரசனே” என்று பாவேந்தராலேயே பாராட்டப் பெற்ற பெருமையுடையவர். ஆழ்ந்த புலமைமிக்க இக் கவிஞர் அழுகும் இனிமையும் புதுமையும் கொஞ்சிக் குலவும் ஏராளமான கவிதைகளை எளிய நடையில் இயற்றித் தமிழுக்குப் புதிய அணிகலன்களைச் சூட்டியவர்.

பொதுவாக கவிஞர்களின் உள்ளம் தனித்தன்மை வாய்ந்தது. பார்வையும் தனி - கோணமும் தனி - உணர்வும் தனி - எல்லாமே தனி. அதனாலேயே, தனித்து நின்று இலக்கிய உலகுக்கு தனி முத்திரை பதிந்த கவிதைகளைக் கவிஞனால் வழங்க முடிகிறது. இலக்கியவாதிகளில் பத்தோடு பதினொன்றாகக் கவிஞனைக் கருதமுடியாது. இலக்கிய உலகில் சிங்கம் போல உலவக் கூடியவர்கள் உண்மையான கவிஞர்கள். அந்த அபூர்வ இனத்தைச் சேர்ந்த கவிஞர் முடியரசன் எந்தச் சபலத்துக்கும் முடிசாய்க்காத ஆண்மையாளர். தமது கவிதைகள் மூலம் சமூக அநீதிகளை மனிதரிடையே பேதாபேதங்களைக் கற்பிக்கும் ஏற்பாடுகளை-குருட்டுப் பழக்க வழக்கங்களைச் சாடியவர். மனிதநேயத்துக்கும் சமத்துவத்துக்கும் எதிரான கருத்துகளை எதிர்த்து கவிதைகள் மூலம் ஓயாத அறிவுப்போர் நடத்தியவர். ஒப்புரவும் மனிதநேயமுமே தமிழரின் பண்பாடு என்பதைக் கவிதைகளால் முரசறைந்தவர். ‘அரசவைக் கவிஞர்' என்ற பதவி மட்டும் இருந்திருக்குமானால் அதில் அமர்ந்து தமிழ் மொழிக்குப் பெருமை சேர்ப்பதற்கான தகுதிகள் அனைத்தும் உடையவர். அவருடைய மறைவின் மூலம் தமிழ் உலகம் ஓர் அபூர்வப் படைப்பாளியை இழந்து விட்டது. மரபு வழுவாமல், அதே சமயத்தில் புதுமை பூத்த இனிய கவிதைகளைச் சொரிந்து வந்த தமிழ்ப் பொழில் மறைந்துவிட்டது. அதிலும் உரைநடைக்கே கவிதைபோல வேடமிட்டுக் காட்டும் ‘நவீன கவிஞர்கள்' மலிந்துவரும் இக்காலத்தில் தரம்மிக்க மரபுக்கவிதைகளைக் காலத்தின் தேவைகளுக்கு ஈடுசெய்யக்கூடிய வகையில் சுரந்து அளித்துவந்த சந்தமிழ் ஊற்று முடியரசன். தமிழுக்கு வளம் சேர்த்த அறிஞர்களின் படைப்புகளை அரசுடைமை ஆக்கும் சீரிய திட்டம் ஒன்றைத் தமிழக அரசு செயற்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் கவிஞர் முடியரசனின் படைப்புகளையும் அரசுடைமையாக்கிச் சிறப்பிப்பதன் மூலம் இந்த அற்புதக் கவிஞனுக்குத் தமிழ் மக்களின் உணர்வுபூர்வமான அஞ்சலியைப் பிரதிபலிக்க முடியும்.

கவியரசர் முடியரசன்–வாழ்க்கைக் குறிப்பு
(1920–1998)
இயற்பெயர் : துரைராசு
பெற்றோர் : சுப்புராயலு-சீதாலெட்சுமி
பிறந்த ஊர் : பெரியகுளம்
வாழ்ந்த ஊர் : காரைக்குடி
தோற்றம் : 07.10.1920
இயற்கையடைவு : 03.12.1998
கல்வி : பிரவேச பண்டிதம், மதுரைத் தமிழ்ச் சங்கம்(1934-39) வித்துவான், கணேசர் செந்தமிழ்க் கல்லூரி. மேலைச்சிவபுரி (1939-43)
பணி : தமிழாசிரியர். முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளி, சென்னை (1947-49) மீ.சு.உயர்நிலைப்பள்ளி, காரைக்குடி (1949-78)
திருமணம் : 2.2.1949 (கொள்கை வழிச் சாதிமறுப்புத் திருமணம்)
துணைவியார் : கலைச்செல்வி


மக்கள் மருமக்கள் பெயரப்பிள்ளைகள்
குமுதம் + பாண்டியன் = திருப்பாவை
பாரி + பூங்கோதை = ஓவியம்
அன்னம் + சற்குணம் = செழியன், இனியன்
குமணன் + தேன்மொழி = அமுதன், யாழிசை
செல்வம் + சுசீலா = கலைக்கோ, வெண்ணிலா
அல்லி + பாண்டியன் = முகிலன்

இயற்றிய நூல்கள்:
1 முடியரசன் கவிதைகள் (கவிதைத் தொகுதி) …. 1954
2 காவியப் பாவை (கவிதைத் தொகுதி) …. 1955
3 கவியரங்கில் முடியரசன் (கவிதைத் தொகுதி) …. 1960
4 பாடுங்குயில் (கவிதைத் தொகுதி) …. 1983
5 நெஞ்சு பொறுக்கவில்லையே (கவிதைத் தொகுதி) …. 1985
6 மனிதனைத் தேடுகிறேன் (கவிதைத் தொகுதி) …. 1986
7 தமிழ் முழக்கம் (கவிதைத் தொகுதி) …. 1999
8 நெஞ்சிற் பூத்தவை (கவிதைத் தொகுதி) …. 1999
9 ஞாயிறும் திங்களும் (கவிதைத் தொகுதி) …. 1999
10 வள்ளுவர் கோட்டம் (கவிதைத் தொகுதி) …. 1999
11 புதியதொரு விதி செய்வோம் (கவிதைத் தொகுதி) …. 1999
12 தாய்மொழி காப்போம் (கவிதைத் தொகுதி) …. 2001
13 மனிதரைக் கண்டுகொண்டேன் (கவிதைத் தொகுதி) …. 2005
14 பூங்கொடி (காப்பியம்) …. 1964
15 வீரகாவியம் (காப்பியம்) …. 1970
16 ஊன்றுகோல் (காப்பியம்) …. 1983
17 இளம்பெருவழுதி (நாடகக் காப்பியம்) …. 2008
18 அன்புள்ள பாண்டியனுக்கு (கடித இலக்கியம்) …. 1999
19 இளவரசனுக்கு (கடித இலக்கியம்) …. 1999
20 எக்கோவின் காதல் (சிறு கதைகள்) …. 1999
21 முடியரசன் தமிழ் இலக்கணம் (இலக்கணம்) …. 1967
22 எப்படி வளரும் தமிழ் (கட்டுரைத் தொகுதி) …. 2001
23 பாடுங்குயில்கள் (கட்டுரைத் தொகுதி) …. 1975
24 சீர்திருத்தச் செம்மல் வை.சு. சண்முகனார் (கட்டுரைத் தொகுதி) …. 1990
25 பாட்டுப் பறவையின் வாழ்க்கைப்பயணம் (தன் வரலாறு) …. 2008

தேடிவந்த சிறப்புகள்
(விருது.பட்டம், பரிசு.-வழங்கியவர். இடம்-ஆண்டு)

❖ 'அழகின் சிரிப்பு' என்ற கவிதைக்கு முதல் பரிசு-பாவேந்தர் பாரதிதாசன், முத்தமிழ் மாநாடு, கோவை-1950

❖ ‘திராவிட நாட்டின் வானம்பாடி' பட்டம்-பேரறிஞர் அண்ணா -1957

❖ ‘கவியரசு' பட்டம், ‘பொற்பதக்கம்'-குன்றக்குடி அடிகளார், பாரி விழா, பறம்புமலை -1966

❖ ‘முடியரசன் கவிதைகள்' நூலுக்குப் பரிசு - தமிழ்நாடு அரசு - 1966

❖ 'வீரகாவியம்' நூலுக்குப் பரிசு-தமிழ்நாடு அரசு-1973

❖ 'நல்லாசிரியர் விருது' பதக்கம்-கே.கே.சா, ஆளுநர், தமிழ்நாடு அரசு - 1974

❖ ‘சங்கப் புலவர்' பட்டம் - குன்றக்குடி அடிகளார் - 1974

❖ ‘பாவரசர்' பட்டம், 'பொற்பேழை' - மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர், உலகத் தமிழ்க் கழகம், பெங்களூர்-1979

❖ ‘பொற்கிழி’-பாவாணர் தமிழ்க் குடும்பம். நெய்வேலி-1979

❖ 'பொற்குவை'-ரூ10,000-'மணிவிழா' எடுப்பு-கவிஞரின் மாணாக்கர்கள், காரைக்குடி-1979

❖ 'பொற்கிழி'-பாரதியார் நூற்றாண்டு விழாக் குழு. சிவகங்கை

❖ 'கவிப்பேரரசர்' பட்டம் ‘பொற்கிழி' ரூ.10.000-மணிவிழா எடுப்பு கலைஞர் மு.கருணாநிதி, தி.மு.க மாநில இலக்கிய அணி, சென்னை -1980

❖ ‘தமிழ்ச் சான்றோர்' விருது, பதக்கம் - தமிழகப் புலவர் குழு, சேலம் - 1983

❖ ‘கலைஞர் விருது'-என்.டி. இராமாராவ் (ஆந்திர முன்னாள் முதல்வர்) கலைஞர் மு. கருணாநிதி, தி.மு.க முப்பெரும் விழா. தேசிய முன்னணித் தொடக்கவிழா சென்னை -1988

❖'பாவேந்தர் விருது' (1987க்குரியது) பொற்பதக்கம்-கலைஞர் மு. கருணாநிதி, முதல்வர், தமிழ்நாடு அரசு, சென்னை -1989

❖‘பொற்கிழி'-விக்கிரமன். அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர். காரைக்குடி கவிஞர் இல்லம்-1993.

❖'பூங்கொடி' நூலுக்கு 'இந்திராணி இலக்கியப் பரிசு' ரூ.5,000- இந்திராணி அறக்கட்டளை, கரூர்-1993

❖ சிறந்த தமிழ்த் தொண்டிற்கான ‘அரசர் முத்தையவேள் நினைவுப் பரிசில்', வெள்ளிப்பேழை, பொற்குவை ரூ.50,000- அண்ணாமலை அரசர் நினைவு அறக்கட்டளை, சென்னை -1993 ❖'இரண்டாம் புரட்சிக் கவிஞர்' எனும் பட்டம் மற்றும் 'இராணா இலக்கிய விருது’ பொற்குவை ரூ.10,000-தமிழ் இலக்கியப் பேரவை, ஈரோடு-1984

❖ ‘கல்வி உலகக் கவியரசு' விருது-அகில இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம், அழகப்பா பல்கலைக் கழகம் காரைக்குடி-1996

❖ 'பொற்கிழி'-பழைய மாணவர் பாராட்டு விழா, கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி-1997

❖'கலைமாமணி விருது' 'பொற்பதக்கம்'-செல்வி பாத்திமா பீவி, ஆளுநர்- கலைஞர் மு.கருணாநதி, முதல்வர், தமிழ்நாடு அரசு, சென்னை -1998


பிற குறிப்புகள்

-> இளம் பருவத்தில் இலக்கிய உணர்வை ஊட்டியவர் தாய்மாமன் துரைசாமி அவர்கள்.

-> 20ஆம் அகவை வரைக் கடவுளைப் பற்றிய கவிதைகள் இயற்றினார். அவை கிடைத்தில.(1939)

-> 21ஆம் அகவை முதல் சமுதாயச் சூழல், மொழி, நாடு, இயற்கை இவற்றையே பாடினார். (1940)

-> 21ஆம் அகவையில் இயற்றிய 'சாதி என்பது நமக்கு ஏனோ?' என்ற கவிதையே முதல்முதலில் அச்சு வாகனம் ஏறியது. இது பேரறிஞர் அண்ணாவால் 'திராவிட நாடு' இதழில் வெளியிடப்பட்டது. (1940)

-> தந்தை பெரியாரின் தன்மான இயக்கத் தொடர்பு (1940)

-> தன்மான இயக்கத் தொடர்பால் ‘வித்துவான்' தேர்வில் தோல்வியுறுமாறு செய்யப்பட்டார். (1943)

-> நவாபு டி.எஸ்.இராசமாணிக்கம் நாடகக் குழுவில் பாடல், உரையாடல் எழுதும் பணி. அங்கிருந்த சிறை வாழ்க்கையும், மதவழிபாட்டு முறைகளும் பிடிக்காமல் வெளியேறினார். (1944)

-> பெரியார் தலைமையில் அண்ணா முன்னிலையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில், மாநாட்டுத் தீர்மானம் முன் மொழிந்தார். அன்பழகன் வழிமொழிந்தார். மாநாட்டில் அறிஞர் அண்ணாவுடன் முதல் நேரடிச் சந்திப்பு. (1945)

-> புதுவை மாநிலத்திற்கு அருகில் உள்ள மயிலத்தில் தலைமறைவாக இருந்து படித்து 'வித்துவான்' பட்டம் பெற்றார். (1947)

-> சென்னையில் தமிழாசிரியர் பணி-பல்வேறு இதழ்களில் இலக்கியப் பணி- 'பொன்னி' இதழில் 'பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக' அறிமுகம்- திராவிட இயக்கத்தலைவர்கள், தமிழறிஞர்களுடன் தொடர்பு (1947-49)

-> தான் கொண்ட கொள்கைக்காகக் கைம்பெண்-சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ள தாயாரிடம் வேண்டுதல், ஒரே மகன் என்பதால், இசைவு தரத் தாயார் மறுத்தல் (1948) -> 'சாதி மறுப்புத் திருமணம் செய்யவாவது இசைவு கொடுங்கள்' என அன்னையாரிடம் வேண்டுதல். பெற்றோர் இசைதல். பெற்றோர் ஏற்பாட்டில் ‘கலைச்செல்வி' எனும் நலத்தகையாரை பேராசிரியர் மயிலை சிவமுத்து தலைமையில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார். (1949)

-> திருமணமான ஆண்டே துணைவியாருடன் இந்தி எதிர்ப்புப் போரில் பங்கேற்றார் (1949)

-> சாதி மறுப்பு மணத்தின் தேவையைப் பற்றிக் கவிதை பல பாடியதோடு இருந்துவிடாமல் தாமும் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டு, தம் பிள்ளைகள் அனைவருக்கும் அவ்வாறே செய்துவித்துத் தம் கொள்கைக்கு வெற்றி தேடித்தந்ததன் மூலம் ‘அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் என்னும் வள்ளுவன் வாக்கைத் தோல்வியுறச் செய்தார்.

-> காரைக்குடியில் மீ.சு.உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் பணியேற்றார். (1949)

-> 'என் மூத்த வழித்தோன்றல் முடியரசனே' எனப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனால் பாராட்டப் பெற்றார். (1950)

-> குருதி உமிழும் கொடுநோய்க்கு இலக்காகி, புதுக்கோட்டைத் தமிழ்ப் புரவலர் அண்ணல் பு.அ. சுப்பிரமணியனார் அருட்கொடையால் உயிர்பிழைத்தார். (1955)

-> மூன்றவாது மகவான ஆண் மகவு பிறத்தல், செய்நன்றியின் பொருட்டு, தன்னுயிர் காத்த 'அண்ணல் சுப்பிரமணியனார்’ நினைவாக அம்மகனுக்கு ‘சுப்பிரமணியன்' எனப் பெயரிட்டார். (1955)

-> ‘சுப்பிரமணியன்' என்ற அம்மகன் மறைவு. கவிஞர் பெருந்துயரம் அடைதல். (1959)

-> சென்னை சென்று திரைப்படத்துறையில் ஈடுபட்டார். 'கண்ணாடி மாளிகை' என்ற திரைப்படத்திற்கு பாடல். உரையாடல் எழுதினார். திரைத்துறையில் சிறுமைகளைக்கண்டு வெறுப்புற்று தம் இயல்புக்கும். கொள்கைக்கும். அத்தொழில் சிறிதும் ஒத்து வராததால் திரைத்துறை யிலிருந்து வெளியேறினார் (1961)

-> மீண்டும் காரைக்குடியில் தமிழாசிரியர் பணி (1962)

-> இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டதாகக் காவல் துறையினர் வழக்கு (1965)

-> 'பூங்கொடி’ நூலுக்குத் தமிழ்நாடு அரசு தடைசெய்ய ஏற்பாடு (1966).

ஆட்சிமாற்றத்தால் 'பூங்கொடி' தடை ஏற்பாடு விலக்கம் (1967)
மகள் குமுதம் திருமணம் (1975),
தமிழாசிரியப் பணி ஓய்வு (1978).
மகள் அன்னம் திருமணம் (1979).
மகன் பாரி திருமணம் (1983)

-> மதுரைப் பல்கலைக் கழகம், தமிழியற் புலத்தில் நாடகக் காப்பியப் பணி (1985)

மகன் குமணன் திருமணம் (1991)
மகன் செல்வம் திருமணம் (1992)
மகள் அல்லி திருமணம் (1995)

-> திராவிட நாடு, முரசொலி, முத்தாரம், குடியரசு, விடுதலை. திராவிடன், திருநாடு, போர்வாள், முல்லை , எழில், தென்றல், மன்றம், அழகு, முருகு, பொன்னி, குயில், கதிரவன். நம்நாடு, வாரச்செய்தி, பிரசண்ட விகடன், தமிழ்ப்பாவை, காதல், தாமரை, புதுவாழ்வு, தனியரசு, சங்கொலி, வாழ்வு. தோழன், மாலைமணி, திராவிடமணி, தமிழ்ச்சுவை, தமிழ், போர்முரசு, பாசறை, இன முரசு, இன முழக்கம், நித்திலக் குவியல், செந்தமிழ்ச்செல்வி, கலைக்கதிர், அமுத சுரபி. கழகக் குரல், மறவன் மடல், சமநீதி, உரிமை வேட்கை, தென்னரசு, தென்னகம், தமிழ் முரசு, தமிழ்நாடு, அலை ஓசை, தமிழ்நேசன் (மலேசியா) கவிதை, முல்லைச்சரம், தமிழரசு. குங்குமம், தினமணி, தினமணி கதிர் உட்படப் பல்வேறு இதழ்களில் கவிஞர் எழுத்தோவியங்களைத் தீட்டியுள்ளார்.

-> கவிஞரின் பல கவிதைகள் 'சாகித்திய அகாதமி 'யால் இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. உருசிய மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

-> கவிஞரின் நூல்கள் பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகளில் பாடநூல்களாக வைக்கப்பட்டுள்ளன.

-> கவிஞரின் நூல்கள் குறித்துப்பலர், பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆய்வேடுகள் அளித்து, முனைவர் (பிஎச்.டி) மற்றும் இளமுனைவர் (எம்.பிஃல்) பட்டங்கள் பெற்றுள்ளனர்.

-> கவிஞரின் படைப்புகள் பற்றிப் பல ஆய்வு நூல்களும், கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. கவிஞர் பற்றி பல்வேறு இதழ்கள் சிறப்பிதழ்கள் வெளியிட்டுள்ளன.

-> கவிஞரின் படைப்புகள் தமிழ்நாட்டரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன (2000)

-> 'இந்திய இலக்கியச் சிற்பிகள்' எனும் வரிசையில் ‘முடியரசன்' வாழ்க்கை வரலாற்றை, சாகித்திய அகாடமி வெளியிட்டுள்ளது (2005)

-> 'கவியரசர் முடியரசன் அவைக்களம்.' 'கவியரசர் முடியரசனார் முத்தமிழ் மன்றம்' 'கவிஞர் முடியரசன் இலக்கிய மன்றம்' எனும் அமைப்புகள், முறையே காரைக்குடி, ஈரோடு, குடந்தை ஆகிய ஊர்களில் தமிழ்த் தொண்டு ஆற்றி வருகின்றன.

-> காரைக்குடியில் ஒரு பெரிய நெடுஞ்சாலைக்கு ‘கவியரசர் முடியரசன் சாலை' எனக் காரைக்குடி நகராட்சி மன்றம் பெயர் சூட்டிச் சிறப்பித்துள்ளது.

பெற்ற பாராட்டுகள்

பாவேந்தர் வழித்தோன்றல், புதுமைக் கவிஞர், கவி மாமன்னர், கவிச்சிங்கம், இருபதாம் நூற்றாண்டின் இமயக் கவிஞர். கவிதை இமயம். தமிழ்த்தவம் கொண்ட தலைமைக் கவிஞர், தமிழ்த் தேசியக் கவிஞர், தமிழ்க் குடியரசின் கவிமுடியரசர், கவியுலக முடியரசர். தன்மானக் கவிஞர், தமிழசைப் பாவலர், மரபின் மைந்தர்.

வள்ளுவர் நெறியில் வாழ்ந்தவர், வாய்மைச் சொல்லினர். சொல்லும் செயலும் ஒத்த வாழ்வினர், வறுமையிலும் செம்மை போற்றியவர், திமிர்ந்த ஞானச்செருக்குடைய சங்கப் புலவரனையர், சங்கத்தமிழனைய தூயவர், பீடுநடையினர், பெருமித வாழ்வினர், நிமிர்ந்த நன்னடையினர், நேர் கொண்ட பார்வையர், அண்டிப்பிழையார், ஆர்த்தவாழ்வினர். ஒட்டார் பின் செல்லாதவர். நல்லாசிரியர், ஆசான் போற்றுபவர், நன்றி மறவாதவர், நட்புப்பெரிதென வாழ்ந்தவர். பகுத்தறிவாளர், மனிதநேயர். பழகுதற்கினிய பண்பாளர், பிறர்க்குதவும் ஏந்தல், சாதி தொலைத்தவர், சமயம் கடந்தவர், பதவி வெறுத்தவர், சமத்துவம் விரும்பி, விளம்பரம் விரும்பார், எளிமை வாழ்வினர், புகழ்கண்டு கூசுவார், அன்பு நெஞ்சினர். குழந்தை உள்ளத்தினர். பூமனத்தினர், இனிமைப் பேச்சினர், இளமை விரும்பி, அமைதி வாழ்வினர், குறிக்கோள் வாழ்வினர்.

இடர்ப்பாடுகளும், இன்னல்களும் வந்தபோதும் கொண்ட கொள்கையிலிருந்து இறுதிவரை வழுவாமல், தடம்புரளாத் தங்கமாக, தன்மானச் சிங்கமாக, தமிழ் வேழமாக, கொள்கைக் குன்றமாக வாழ்ந்தவர். பணம், பதவி, பட்டம், பகட்டுக்குப் பணியாமலும், அரசவைப் பதவிகள் நாடி வந்தபோதும் அவற்றைப் புறக்கணித்தும் 'வளையா முடியரசர்' என்றும், வணங்கா முடியரசர் என்றும் புகழ்பெற்றவர். தன்மானக் கொள்கையால் மைய, மாநில அரசின் அரிய பல விருதுகளை இழந்தவர். பல்லாயிரம் இளைஞர்களைத் தமிழ் வீறும், வேட்கையும் பெறச் செய்தவர் கனவிலும் கவிதை பாடுபவர். பாட்டுலகில் பாரதியாரைப் பாட்டனாகவும், பாரதிதாசனைத் தந்தையாகவும் கருதிக் குலமுறை கிளத்தும் கொள்கையுடையவர்.

தம் வாழ்நாளில் இறுதியாக அவர் இயற்றிய கவிதை :–

வாளால் பிளப்பினும் வாழ்நாள் இழப்பினும் வஞ்சமனக்
கேளார் குழுமிக் கெடுதிகள் சூழினும் பூமியில்வாழ்
நாளெலாம் வாட்டும் நலிவே உறினும் நற்றமிழே
ஆளாதல் திண்ண ம் அடியேன் நினது மலரடிக்கே.

உள்ளுறை
1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
"https://ta.wikisource.org/w/index.php?title=முடியரசன்_தமிழ்_வழிபாடு&oldid=1711877" இலிருந்து மீள்விக்கப்பட்டது