முடியரசன் தமிழ் வழிபாடு/007-049

7. நந்தா விளக்கே!
(நிலை மண்டில ஆசிரியப்பா)


செந்தமிழ் மொழியே சீர்சால் விளக்கே!
முந்திய மொழியே முழுமையின் ஒளியே!
கற்றோர் நெஞ்சங் களிக்கும் வகையில்
ஞான ஒளியினை நல்கிடும் விளக்கே!
வறுமையும் இடரும் வட்கார்[1] பகையும்
உறுமிடி புயலென உருத்தெழு நிலையிலும்
என்னுள் நின்றொளி எழிலுற விளங்கிட
நண்ணும் என்னுயிர் நந்தா விளக்கே!
ஆய்தொறும் ஆய்தொறும் அரும்பொருள் நல்கலில்
ஓய்தல் இல்லா உயர்கொடை விளக்கே!
பலபல மொழிகள் பரந்திவண் தோன்றினும்
உலகில் நிகரிலா தோங்குவான் விளக்கே!
நையும் நிலையிலும் நான்களி கொள்ள
உய்யும் வழிதரும் பொய்யா விளக்கே!
காற்றும் மழையும் கடுகிய போதும்
ஏற்றிய உனக்கோர் இடையூ றின்றிப்
போற்றுதல் கடனெனப் பூண்டுளேன் நோன்பு;
தணியா உழைப்புந், தக்கோர் உறவும்,
துணிவுடன் என்னுள் தோன்றுநல் லார்வமும்
முப்புரித் திரியென மொய்ம்புடன் ஏற்றி
எப்பொழு தும்நினை ஏத்துதல் உடையேன்;
உணர்வெனும் நெய்யில் ஊறிய யாப்பில்
புணரணி ஏற்றிப் பொருள்தெரி வகையால்
உலகம் அனைத்துநின் ஒளியினைப் பரப்பக்
குலவும் நினைவே கொண்டுளேன் அதனால்
செய்யும் பணிகள் செவ்விதின் இலங்கிடக்
கைகுவித் தேத்தினேன் காத்தருள் தாயே!

[மனிதனைத் தேடுகிறேன்]

  1. வட்கார்-பகைவர்