முடியரசன் தமிழ் வழிபாடு/028-049
(56ஆம் பிறந்த நாளன்று பாடியது - O7.10.1975)
சுற்றிவளைத்திடு மெத்துய ரத்தையும்
சுட்டுமு டித்ததை - எறிவேனே
சொத்துந லத்தினை முற்றஇ ழப்பினும்
சொற்றமி ழுக்கெனைத் - தருவேனே.
தொற்றிய ணைத்தவ ளைப்பெறு மக்களைத்
தொட்டிடர் பற்றினும் - மருள்வேனோ?
சொக்கிட வைத்திடும் எப்பொருள் கொட்டினும்
தொட்டுளம் விற்றிட - வருவேனோ?
கற்றம னத்தினிற் குற்றம் கற்றிடும்
கட்டழ குத்தமிழ் - மொழிமாதே
கத்துக டற்புவி மெத்தம டத்தனம்
கற்றடி மைப்படத் - தரியேனே.
பெற்றநி லத்தினர் உற்றஇ டுக்கணைப்
பிய்த்தெறி யத்திறம் - அருள்வாயே
பித்தம னத்தினர் நற்றெளி வுத்திறன்
பெற்றிட நற்கவி - பொழிவேனே.
[பாடுங்குயில்]